search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில்- திருவாரூர்
    X

    சதுரங்கவல்லபநாதர், ராஜராஜேஸ்வரி

    சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில்- திருவாரூர்

    • பூவனூர் கிராமம் குறித்து பிரதமர் பேசியது நீடாமங்கலம் பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
    • கடந்த 2 நாட்களாக இக்கோவிலுக்கு செஸ் வீரர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூர் கிராமத்தில் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற சிவன் கோவில்களுள் ஒன்றான இக்கோவிலில் அருள்பாலிக்கும் இறைவனுக்கும், இன்று பிரபலமாக விளையாடப்படும் சதுரங்க விளையாட்டுக்கும் (செஸ்) நெருங்கிய தொடர்பு உண்டு.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    முன்பு ஒரு காலத்தில் நெல்லையில் வசுசேனன் என்ற மன்னன் காந்திமதி எனும் மனைவியுடன் வாழ்ந்தான். இருவரும் சிவபக்தர்கள். நீண்ட காலம் குழந்தை பேறு இன்றி வருந்திய இவர்கள், நெல்லையில் அருள்பாலிக்கும் நெல்லையப்பர், காந்திமதியை குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்தனர். இறைவன் அவர்களின் வேண்டுதலை ஏற்று உமையம்மையே குழந்தையாகவும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியம்மையை செவிலி தாயாகவும் தோன்றுமாறு அருள்பாலித்தார்.

    குழந்தையாக தோன்றிய உமையம்மை

    மன்னன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடியபோது இறைவனின் அருளால் அங்கு உமையம்மை ஒரு தாமரை மலரில் சங்குருவாய் தோன்றினார். அதைக்கண்டு மன்னன் கையில் எடுத்தார். உடனே அந்த சங்கு குழந்தையாக காட்சி அளித்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார்.

    சப்தமாதாக்களில் ஒருவராகிய சாமுண்டியம்மை வளர்ப்பு தாயாக இருந்து குழந்தையை வளர்க்க, குழந்தை ராஜராஜேஸ்வரி சகல கலைகளையும் கற்றுணர்ந்து சதுரங்க ஆட்டத்திலும் தலைசிறந்து விளங்கினார். இதனால் மன்னர் வசுசேனன், சதுரங்கத்தில் தன் மகளை வெல்பவர்க்கே மணம் முடித்து வைப்பேன் என்று அறிவித்தார். ஆனால் சதுரங்கம் ஆடி வெற்றிகொள்ள யாரும் முன்வரவில்லை.

    சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்

    சித்தர் வேடம் பூண்டு சிவபெருமான், ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்க விளையாட்டு விளையாடிய புராணம் தொடர்பான ஓவியம்.


    இந்த நிலையில் முனிவர் ஒருவர் அறிவுரைப்படி மன்னர் தன் மகள், வளர்ப்பு தாய் சாமுண்டியம்மை, மனைவி மற்றும் பரிவாரங்களுடன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களையும் வணங்கி வழிபட்ட பின் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் வந்து இறைவனை பூஜிப்பதற்காக தங்கியிருந்தார்.

    அப்போது சிவபெருமான், சித்தர் வேடத்தில் அங்கு வந்து மன்னனை சந்தித்து, தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்று தெரிவித்தார். இதையடுத்து மன்னர் தன் மகளுடன் சதுரங்கம் விளையாடுமாறு வேண்ட சித்தர் வேடத்தில் இருந்த சிவபெருமானும் அதற்கு சம்மதித்து, ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கம் விளையாடி வெற்றி பெற்றார்.

    போட்டியில் வென்றவுடன் சிவபெருமான் தனது சுய உருவத்தை காட்டினார். அதை கண்டு மன்னர் மனம் மகிழ்ந்து ராஜராஜேஸ்வரியை இறைவனுக்கு மணமுடித்து மகிழ்ச்சி அடைந்தான். சதுரங்க ஆட்டத்தில் வென்று அம்பிகை ராஜராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டதால் சதுரங்கவல்லபநாதர் என்ற பெயருடன் பூவனூரில் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார்.

    பிரதமரின் பேச்சால் மகிழ்ச்சி

    இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், இறைவனே சதுரங்கமாடிய வரலாற்றை திருப்பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில் மூலம் அறியமுடிகிறது என்றும், இதன் மூலம் பண்டைக்காலம் தொட்டே சதுரங்க விளையாட்டு தமிழகத்தில் விளையாடப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

    பிரதமரின் இந்த பேச்சு சமூகவலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. பூவனூர் கிராமம் குறித்து பிரதமர் பேசியது அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, நீடாமங்கலம் பகுதி மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    பிரதமரின் பேச்சு செஸ் விளையாட்டு வீரர்களிடைய பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் வழிபடும் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களாக இக்கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் செஸ் வீரர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    Next Story
    ×