என் மலர்
கோவில்கள்
- முந்தி விநாயகர் 19 அடி 10 அங்குலம் உயரமும், 11 அடி 10 அங்குலம் அகலமும் கொண்டவர்.
- ராகு-கேது தோஷம், நவக்கிரக தோஷம் விலக இந்த விநாயகரை வணங்கலாம்.
கோயம்புத்தூர் புலியகுளத்தில் அமைந்துள்ளது முந்தி விநாயகர் திருக்கோவில். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட, பிரமாண்டமான விநாயகரை இங்கே தரிசிக்கலாம்.
இங்கு அருளும் விநாயகப் பெருமானின் தும்பிக்கை, வலம் சுழிந்து காணப்படுகிறது. நான்கு கரங்களுடன் அருளும் இந்த விநாயகர் தன்னுடைய வலது முன் கரத்தில் தந்தமும், வலது பின் கரத்தில் அங்குசமும், இடது முன் கரத்தில் பலாப்பழமும், இடது பின் கரத்தில் பாசக் கயிறும் தாங்கி காட்சி தருகிறார். தும்பிக்கையில் லட்சுமியின் அம்சமான அமிர்தகலசத்தை வைத்திருக்கிறார்.
தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இந்த முந்தி விநாயகர், தன்னுடைய வயிற்றில் வாசுகி பாம்பை கட்டியிருக்கிறார். இதனால் நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வணங்கினால், அந்த தோஷங்கள் விலகி ஓடும். இந்த விநாயகரின் வலது பகுதி ஆண்களைப் போலவும், இடது பகுதி பெண்களின் வடிவிலும் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இந்த விநாயகர் அரச மரத்தடியின் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் அருள் கடாட்சம் அதிகம். மேலும் இவரது இடது திருவடியில் சித்த லட்சுமியின் அம்சமான பத்ம சக்கரம் இருப்பதால், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குபவராக இருக்கிறார்.
இந்த முந்தி விநாயகரின் பிரமாண்டமான உருவம், 21 சிற்பிகளைக் கொண்டு, 6 ஆண்டுகால உழைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தேடி அலைந்து, முடிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்ற இடத்தில் இந்த விநாயகரின் உருவம் செய்வதற்காக மிகப்பெரிய பாறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அங்கேயே வைத்து இந்த சிலை செய்யப்பட்டு, புலியகுளம் கொண்டுவரப்பட்டது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்ட முந்தி விநாயகர், சுமார் 19 அடி 10 அங்குலம் உயரமும், 11 அடி 10 அங்குலம் அகலமும் கொண்டவர். சுமார் 190 டன் எடை கொண்டவர்.
இந்த விநாயகர் சிலையை நிலைக்கு கொண்டுவர எந்த இயந்திரத்தின் துணையும் பயன்படுத்தப்படவில்லையாம். முழுக்க முழுக்க மனித சக்தியை பயன்படுத்தியே, இதை அதன் மூலஸ்தானத்தில் நிலை நிறுத்தியிருக்கிறார்கள். எனவேதான் இந்த பிரமாண்ட முந்தி விநாயகரை நிலை நிறுத்துவதற்கு 18 நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக சாய்வு தளம் ஒன்றை உருவாக்கி, இரும்பு சங்கிலி மற்றும் உருளைகளின் உதவியோடு, கொஞ்சம் கொஞ்சமாக மூலஸ்தானத்தில் நிலைநிறுத்தி உள்ளனர்.
இந்த ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு விமரிசையாக நடைபெறும். சித்திரை முதல் நாள் அன்று, பல்வேறு வகையான சுமார் 3 டன் பழங்களைக் கொண்டு விநாயகருக்கு அலங்காரம் செய்கிறார்கள். அதே போல் விநாயகர் சதுர்த்தி அன்று, மூன்று டன் எடை கொண்ட பல்வகை பூக்களும், மலர் மாலைகளும் கொண்டு விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படும். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்பான முறையில் நடக்கிறது.
சரஸ்வதி பூஜை அன்று, குழந்தைகளுக்கு நாக்கில் பிரணவ வடிவமான விநாயகரின் மூல மந்திரத்தை எழுதி, கல்விப் பயணத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. ராகு-கேது தோஷம், நவக்கிரக தோஷம் விலகஇந்த விநாயகரை வணங்கலாம். மேலும் திருமண வரம் கைகூட, குழந்தை பாக்கியம் கிடைக்க, குடும்பம் ஒற்றுமையாக நடைபெறவும் இந்த விநாயகரை வணங்கிச் செல்கிறார்கள்.
சித்திரை முதல் நாள், தை முதல் நாள், ஆடி வெள்ளி, வளர்பிறை சதுர்த்தி தினங்களில் இந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம் செய்கிறார்கள்.
கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோவில்.
- தென்கரை தலங்களில் 125-வது தலமாக உள்ளது.
- வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது பழமொழி.
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது பழமொழி.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்ற இந்த கோவில் சோழநாட்டு காவிரி, தென்கரை தலங்களில் 125-வது தலமாக உள்ளது.
ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய வேதங்களால் பூஜிக்கப்பட்ட இந்த கோவிலில், வேதம் செடியாகி, கொடியாகி, மரமாகி வழிபட்டதால் இந்த கோவில் உள்ள பகுதி வேதாரண்யம் என்ற பெயரை பெற்றது. 64 சக்தி பீடங்களில் சுந்தரி பீடமாக உள்ள இந்த கோவிலில் இறைவனாக வேதாரண்யேஸ்வரரும், வேதநாயகி அம்பாளாகவும் உள்ளனா்.
சிவபெருமானின் திருமணம் கைலாயத்தில் நடந்தபோது அனைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்களும் அங்கு கூடியதால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதனால் நிலைகுலைந்த தேவர்கள், உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினர்.
சிவபெருமான், அகத்திய முனிவரை அழைத்து தாங்கள், தென்திசைக்கு சென்று உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே அகத்தியர் சிவபெருமானை பணிந்து வணங்கி ஈஸ்வரா, தங்கள் திருமணக்கோலத்தை தரிசிக்க எனக்கு பாக்கியம் கிடையாதா? என்று மன வேதனையுடன் கேட்டார்.
இதைக்கேட்டு மனமுருகிய சிவபெருமான், தென்திசையில் தாங்கள் எந்த இடத்தில் இருந்து உலகை சமநிலைப்படுத்துகிறீர்களோ அங்கு நான் தங்களுக்கு திருமணக் கோலத்தில் காட்சி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட அகத்திய முனிவர், தென்திசை நோக்கி வந்தபோது வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி வன்னிமரத்தடியில் தவம் மேற்கொண்டார்.
அப்போது உலகம் சமநிலை அடைந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அகத்தியர், இறைவனின் திருமண தரிசனம் கிடைக்க இந்த ஊருக்கு அருகில் உள்ள வேதாரண்யத்தில் உள்ள இறைவனை வேண்டினார். அகத்தியர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வேதாரண்யத்தில் பார்வதி தேவியுடன் திருமணக்கோலத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி அளித்தார். பின்னர் அகத்தியருக்கு ஈஸ்வரர் பட்டம் கொடுத்து இனி தாங்கள் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுவீர்கள் என அருள்புரிந்தார். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சப்தமி திதியில் அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கோவிலில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஆண்டுக்கு ஒரு முறை அபிஷேகம் நடைபெறும். அப்போது கையால் அரைத்த சந்தனம் பூசப்படும்.
தேவாரப்பாடல் ஆசிரியர்களான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் வேதாரண்யத்திற்கு வந்தனர். திருக்கோவிலை வலம் வந்தபோது அங்கு வேதங்கள் வழிபட்டு அடைத்து சென்ற கோவில் கதவை பார்த்தனர். அந்த கதவை திறக்க முடியாததால் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் 'திட்டி வாயில்' என்னும் பக்கவாயில் அமைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று வந்தனர். இதை அறிந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் நேர் வழியாக இறைவனை வணங்க விரும்பி வேண்டினர். இதன் விளைவாக கதவு திறந்து மூடியது. மாசிமகப் பெருவிழாவின் போது இந்த ஐதீக விழா நடக்கிறது.
மற்ற கோவில்களில் உள்ளது போல் இல்லாமல் இங்கு அனைத்து கோள்களும் நேர்பக்க வரிசையில் இறைவனின் திருமணக்கோலத்தை தரிசிப்பது போல் அமைந்துள்ளன. அதனால் இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். அனைத்து கோவில்களிலும் துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்கு தெற்கு நோக்கி நின்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்தது.
ஆடிப்பூரம்-மாசி மக விழா
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, புண்ணிய காலங்கள் மற்றும் கிரகண காலங்களில் கல்யாணசுந்தர சுவாமி எழுந்தருளி வேதநதி என்ற கடலில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பு ஆகும். இந்த புண்ணிய காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆதிசேது என்ற கோடியக்கரையில் உள்ள சித்தர் கட்டத்தில் நீராடி, பின்னர் வேதாரண்யம் சன்னதி கடல் என்ற வேதநதியில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரமும், மாசிமக விழாவும் பெருவிழாவாக கொண்டாடப்படும்.
ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலம்
ராமபிரான், இலங்கையில் ராவணனை வதம் செய்த பிறகு அவருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் ராமர், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது மேற்கு முகமாக அமைந்துள்ள விநாயகரை வணங்கினார். அப்போது விநாயகர் தனது வலது காலை தூக்கி ராமருக்கு பிடித்திருந்த பிரம்மஹஸ்தி தோஷத்தை உதைத்து நீக்கியதாக தலபுராணம் கூறுகிறது. இதனால் இந்த விநாயகருக்கு ராமவீரஹத்தி விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. வலது காலை தூக்கியபடி நர்த்தன விநாயகர் போல் இந்த விநாயகர் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புடையது.
வீணை இல்லாத சரஸ்வதி
ராமபிரான், சீதையை தேடி இங்கு வந்தபோது கோடியக்கரையில் இருந்து இலங்கையை பார்த்தார். அப்போது ராவணனின் அரண்மனையின் பின்புறம் தெரிந்தது. ஒரு வீரன் கொல்லைப்புறமாக போருக்கு செல்லக்கூடாது என நினைத்த அவர், ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து இலங்கைக்கு சென்றதாக வரலாறு கூறுகிறது. ராமர் இங்கு முதன் முதலில் வந்ததால் ஆதிசேது என இப்பகுதி அழைக்கப்படுகிறது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இத்தலத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி, வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகும். இந்த கோவிலில் உள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் அம்மனின் குரல் இனிமையானதா, சரஸ்வதி வீணையின் நாதம் இனிமையானதா என்ற போட்டி நிலவியது. இதில் வீணையின் நாதத்தை விட அம்மனின் குரல் இனிமையாக இருந்தது. இதனால் சரஸ்வதி தவக்கோலத்தில் வீணை இல்லாமல் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
சென்னையில் இருந்து வேதாரண்யத்துக்கு வர விரும்பும் பக்தர்கள் கடலூர், சிதம்பரம், வழியாக நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யத்துக்கு வந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து வேதாரண்யத்தை அடையலாம். திருச்சி, தஞ்சை பகுதி பக்தர்கள் மன்னார்குடிக்கு வந்து அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யத்தை அடைந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம்.
- தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
- கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று வரலாறு கூறுகிறது.
கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநயாகர் கோவில் என்றும் சொல்லப்படுவது தூத்துக்குடி எல்லைக்குட்பட்ட ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில்.
கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது. கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமார வல்லபன் என்ற அரசன் நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான். ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது.
பிரார்த்தனை செய்பவர் போல வடிவம் கொண்டுவிநாயகரே பண்டிதராக வந்து யாகத்தை நிறைவுசெய்தார். இதனால் இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகப்பெருமான் என்று அழைக்கப்படுகிறது. யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது.
தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள். பின்னர் காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி தேவி சன்னதிகளோடு மகா மண்டபம் அமைக்கப்பட்டது. தேர், கொடிமரம், 10 நாட்கள் உற்சவங்களோடு திருவிழா காணும் முக்கிய விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது.
5 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் ஒரு சமயம் ஆதிசங்கரருக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது, இங்கே கணேச பஞ்சரத்ன கீர்த்தனம் பாடி பிறகு திருச்செந்தூருக்கு சென்று முருகன்சன்னதியில் சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார் என்பது இங்கே நடந்த முக்கிய செய்தி.
வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் பக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008,108 தேங்காய் களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்போது 7-ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார்.
நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஏரலில் இருந்து அடுத்த 4 கி.மீட்டரில் வடக்கு திசையில் ஆறுமுக மங்கலத்தை அடையலாம்.
- சந்திர பகவான் தனது மனைவிகளான 27 நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம்.
- இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.
உடுப்பி கிருஷ்ணர் கோவில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.
விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகி ருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.
தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் 'சந்திர புஷ்கரணி'. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.
உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.
புதிய சுவாமி மடத் தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.
முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார்.
கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது.
- கோவில் கருவறையில் உள்ள மூலவர், பட்டாபிஷேக ராமராக வீற்றிருக்கிறார்.
- ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு பரதன் குடைபிடித்திருக்கிறான்.
'குடந்தையாம் கும்பகோண அற்புதத் தலத்தில் என் ராகவன் ராமனுக்கோர் பெரிய கோயில் எடுப்பிப்பேன்' என்று உறுதி பூண்டார் ரகுநாத நாயக்கர். எந்த இடத்தில் விஜயநகர வாரிசான ஸ்ரீராமன் எனும் பாலகனுக்கு பல இடர்களுக்குப் பிறகு எதிரிகளின் ராஜதந்திரங்களை முறியடித்து ரகுநாதநாயக்கர் அரச பட்டாபிஷேகம் செய்தாரோ அங்கேயே ஸ்ரீராமனுக்கும் பார்த்துப் பார்த்து கோயிலை கட்டினார். தனக்குள் இருந்த ராம பக்தியையும், சிலிர்த்து சிருங்காரமாக தன்னிலவாக திகழ்ந்த கலைத் திறத்தையும் இத்தலத்தில் அப்படியே அர்ப்பணித்து கோபுரமாக்கினார்.
கும்பகோணத்தின் மையமாக அமைந்துள்ளது ராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது. மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் எழில் சூழ் சிற்பச் சோலைகளும் எதிர்கொள்கின்றன. மூலஸ்தானத்தில் ராமச்சந்திரமூர்த்தி, தன் சிம்மாசனத்திலேயே சீதா பிராட்டிக்கும் இடம் கொடுத்து, ராஜ்ய பரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார். ராஜகம்பீரத் தோற்றம்.
இடது காலை மடக்கி மற்றொரு காலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது. நீருண்ட மேகம் போன்ற நிறம். ஞானச் சூரியனின் கிரணங்களால் ஒளிரும் தெள்ளிய திருமுகம். தாமரை போன்ற மலர்ந்த கண்கள் அருட்சாரலைப் பொழிகின்றன. கூரிய நாசி. செவ்விதழ்கள். அதன் ஓரமாகத் தவழும் பேரானந்தப் புன்னகை. கைகள் அபயஹஸ்தம் காட்டி 'எப்போதும் காப்பேன்' என்கிறது. சீதா பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ராமனிடம் விநயமாக நம் குறைகளை எடுத்துக் கூறுகிறார். நிறைவான வாழ்க்கையை வாரித் தருகிறார். அருகேயே சத்ருக்னன், அண்ணலுக்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக் கிடைக்காத அற்புதம்.
லஷ்மணாழ்வார் ராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கை கூப்பியபடி நிற்பதைப் பார்க்கும்போது மனசு நெகிழ்ந்து போகிறது. அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக் கொண்டு நிற்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். எல்லோரையும் தாண்டி, அனைத்தையும் ராம சொரூபமாக பார்க்கும், ராம சேவகன், ராம தாசன், ஆஞ்சநேய ஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவை சாதிக்கிறார்.
கைகளில் வீணை ஏந்தி, சதாகாலமும் ராமகாவியச் சுவடியை பாராயணம் செய்து கொண்டிருக்கும் கோலம் காணக் கிடைக்காது. அக்காட்சியை காணும் போது கண்களில் கண்ணீர் தானாக சுரக்கும். அங்கேயே உற்சவ மூர்த்திகள் பொலிவுடன் காட்சி தருகின்றனர். அந்த சந்நதியில் மனம் அப்படியே கரைந்து போகிறது. அயோத்திக்கே சென்று விட்ட ஓர் உணர்வு சூழ்கிறது. எம்பெருமானுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் 'ராம... ராம... ராம...' எனும் திவ்ய நாமத்தை விடாமல் சொல்வதேயாகும். இதுவே சகல சம்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் என்பது வேத ரிஷிகளின் வாக்கு.
விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காத்தல், தன்னை மீண்டும் அயோத்தி அழைத்துச் செல்ல வந்த பரதனுக்கு தன்னுடைய பாதுகைகளை அளித்தல், தனக்காக உயிர் கொடுத்த ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தல், முனிவர்களுக்காக அரக்கர்களை அழித்தல், தன்னுடைய துன்பங்களைக் கூறி வருந்திய சுக்ரீவனுக்கு, ஆறுதல் கூறி அவனுடைய ராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொடுத்தல், தன்னிடம் தஞ்சம் என்று வந்த விபீஷணனுக்கு, அபயமளித்து ராஜ்ஜியம் அளித்தல் என்று ராமபிரான் செய்தவை அனைத்தும், இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. கலை மற்றும் சிற்ப ஓவியங்களுக்கு இந்தக் கோவில் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.
- இந்த கோவில் சோழ நாட்டு காவிரி தென்கரை தலங்களில் 119-வது தலமாக விளங்குகிறது.
- இத்தல அம்பாளை வணங்கினால் கைலாயம் சென்ற அருள் பெறலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருக்காரவாசல் தியாகராஜர் கோவிலும் ஒன்று. கண்நோய்களை தீர்க்கும் கண்ணாயிரநாதா் அருள்பாலிக்கும் திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் சோழ நாட்டு காவிரி தென்கரை தலங்களில் 119-வது தலமாக விளங்குகிறது.
இத்தலம் காரகில்(ஒரு வகை மரம்) மரக்காடாக இருந்ததால் திருக்காரகில் என்ற பெயர் பெற்றது. காலப் போக்கில் இந்த பெயர் திருக்காரவாசல் என பெயர் பெற்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் மூலவராக உள்ள கண்ணாயிரநாதர், சிற்றுளி கொண்டு செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தியாக உள்ளாா்.
இந்திரனுக்கு அசுரர்களால் பேராபத்து வர இருந்தபோது முசுகுந்த சக்கரவர்த்தி உதவியுடன் அசுரனை, இந்திரன் வெற்றி கண்டார். வெற்றிக்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்? என இந்திரன் கேட்க, அதற்கு இந்திரன் பூஜை செய்து வரும் விடங்கர் லிங்கத்தை தரும்படி முசுகுந்த சக்கரவர்த்தி கேட்டுள்ளார்.
அந்த லிங்கத்தை தர விருப்பம் இல்லாத இந்திரன், தேவ சிற்பியை வரவழைத்து தான் வணங்கும் லிங்கத்தை போன்று 6 லிங்கத்தை செய்து காண்பித்துள்ளார். அதில் இந்திரன் வணங்கிய விடங்கர் லிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி கண்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து விடங்கர் லிங்கத்துடன், 6 லிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் இந்திரன் வழங்கினார். இதை பெற்றுக் கொண்ட முசுகுந்த சக்கரவர்த்தி 7 இடங்களில் அவைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
அதன்படி திருவாரூரில் உள்ள விதிவிடங்கர், திருநள்ளாறில் உள்ள நகர விடங்கர், நாகையில் உள்ள சுந்தர விடங்கர், திருக்குவளையில் உள்ள அவனி விடங்கர், திருவாய்மூரில் உள்ள நீல விடங்கர், வேதாரண்யத்தில் உள்ள அவனி விடங்கர் மற்றும் திருக்காரவாசலில் உள்ள ஆதிவிடங்கர் என்ற மரகத லிங்கம் அமைக்கப்பட்டு இவை ஏழும் சப்தவிடங்கர் தலங்களாக விளங்குகிறது.
ஆதிசேஷனுக்கு கண் கொடுத்த தலமாகவும், பார்வையற்ற பெண் ஒருவர் இறைவனை காண வேண்டியபோது அவருக்கு கண் பார்வை அருளிய தலமாகவும் திகழ்கிறது. சப்தவிடங்கர் தலங்களில் மூலவர் சுயம்பு லிங்கத்தில், நேரடியாக அபிஷேகம் நடைபெறுவது திருக்காரவாசல் ஆயிரம் கண்ணுடைய கண்ணாயிரநாதருக்கு மட்டுமே, மூலிகை தைலம் மற்றும் தயிர், தேனுடன் அத்திப்பழம் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்த அத்தி பழத்தை சாப்பிட்டு, தைலத்தை தலையில் தடவி வந்தால் தீராத பலவகையான கண் நோய் பிரச்சினைகளும் தீரும் என்பது ஐதீகம்.
கோவில் அமைப்பு
கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கண்ணாயிரநாதருக்கு சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தியாகராஜர் சன்னதி முன்புள்ள நந்தி, நான்கு கால்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சியை காணலாம். கிழக்கு நோக்கிய இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முதல் வாயிலை கடந்து உள்ளே சென்றவுடன் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் உள்ள நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஒரே இடத்தில் நின்று நேரே சிவபெருமானையும், வலதுபுறம் அம்பாளையும் தரிசிக்கலாம்.
அம்பாள் கைலாயநாயகி, இந்த தலத்திற்கு நடந்து வந்ததாகவும், அதற்கான பாதசுவடுகள் இருந்து வருகிறது. ஆயிரம் கண்ணுடன், சிவபெருமான் உக்கிரத்துடன் இருந்ததை தணிக்கும் வகையில் பறவையாக மாறி கைலாய நாயகி வந்ததாக வரலாறு. இந்த அம்பாளை வணங்கினால் கைலாயம் சென்ற அருள் பெறலாம்.
இதேபோல் காசியில் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விஸ்வநாதர் சிவலிங்கம் மற்றொரு சிறப்புக்குரியது. இதனை வணங்கினால் காசிக்கு சென்று வந்த பலனை அடையலாம்.
இங்கு உள்ள சன்னதியில் கல்லில் நடராஜர் அருள்பாலிக்கிறார். சந்திரசேகர், மாரியம்மன், மகாலெட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு கல்லினால் ஆன சிலைகள் உள்ளது. மேலும் சொர்ணாகர்ஷன பைரவர், கால பைரவர், பால பைரவர் சன்னதிகளும் இங்கு இடம் பெற்றுள்ளது.
திருக்காரவாசல் தியாகராஜர் கோவில், கிரக தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளதால் இந்த கோவில் பக்தர்கள் மத்தியில் பிரசித்திபெற்ற கோவிலாக உள்ளது.
ருக்குட நடனத்தில் தியாகராஜர்
கண்ணாயிரநாதருக்கு பக்கத்தில் ஆதிவிடங்கர் தியாகராஜரின் சன்னதி அமைந்துள்ளது. இந்த தியாகராஜர் அருகில் பச்சை மரகதலிங்கமாக ஆதி விடங்கர் அருள் பாலிக்கிறார். நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் அபிஷேகம் நடைபெறும். தியாகராஜர் வீர சிங்காதளத்தில் ருக்குட நடன காட்சியுடன் அருள் புரிகிறார். திருவாரூர் வீதி விடங்கர் தியாகராஜரின் அஜபா நடனத்தை கண்ட பதஞ்சலி முனிவர் எல்லா வகை நடனங்களையும் தனக்கு காட்டியருள வேண்டும் என இறைவனிடம் வேண்டியபோது திருக்காரவாசல் வந்தால் காணலாம் என்று தியாகராஜர் கூற, பதஞ்சலி முனிவருக்கு 7 வகையான தாண்டவங்களை ஆடி காட்டிய தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.
கோவிலில் விசேஷ நாட்கள்
வைகாசி விசாகம் அன்று இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை முருகன் வழிபாடு மற்றும் நாள்தோறும் 6 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. தியாகராஜருக்கு வருடப்பிறப்பு, ஆடி, தை, ஐப்பசி ஆகிய மாதங்களில் முதல் நாள், மார்கழி திருவாதிரை திருவிழா, புரட்டாசி பவுர்ணமி என ஆண்டிற்கு 6 முறை அபிஷேகம், திருவாதிரை திருவிழா வலது பாத தரிசனம், வைகாசி விசாகத்தில் இடது பாத தரிசனம் நடைபெறும். மேலும் வைகாசி விசாகத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். மாத பவுர்ணமி நாளில் முசுகுந்த அர்ச்சனை நடைபெறும். சிவராத்திரி, கார்த்திகை தீபத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெறும்.
தல விருட்சம் வில்வ மரம்-பலா
கோவிலுக்குள் நுழையும்போதே இடதுபுறம் வில்வ மரம் காட்சி தருகிறது. ஒற்றை, இரட்டை வில்வ இலைகள் உள்ள நிலையில் இங்கு மட்டும் 7, 9 என்று ஒரே கொத்தில் அத்தனை இலைகள் அதிசயமாக அமைந்துள்ளது. தல விருட்சமாக வில்வ மரமும், அதன் அருகில் பலாமரமும் விளங்குகிறது.
கோவிலுக்கு செல்லும் வழி
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம்.கோவில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
- இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
- தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.
உச்சிப்பிள்ளையார் கோவில் மலையானது மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார். இதைத்தவிர பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகள் கழித்தும் இன்றும் அழியாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.
மூன்று தலைகளை கொண்ட திரிசிரன் என்ற அசுர அரசன் இந்தப் பகுதியை ஆண்ட போது திரிசிரபுரம் என்று அழைக்கப்பட்டு பின்பு சிராப்பள்ளி என்று மாறி தற்சமயம் திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்பட்டு வருகிறது.
சுவாமி : உச்சி பிள்ளையார், தாயுமானசுவாமி, மாணிக்க விநாயகர்.
அம்பாள் : மட்டுவார்குழலி.
தீர்த்தம் : காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம்
தலச்சிறப்பு : இக்கோவிலில் பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும். மலைக்கோட்டை உச்சியில் உச்சி விநாயகரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளியிருப்பது மிக சிறப்பு. பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.
தல வரலாறு : அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப் பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான். எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான்.
விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார். திரும்பி வந்த விபீஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார். சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த விபீஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான் என்பது வரலாறு.
தாயுமானசுவாமி உருவான கதை : இப்பகுதியில் வாழ்ந்த இரத்தினாவதி என்ற பெண்மணி தாயாகும் பேறு பெற்றாள். காவேரி ஆற்றின் மறு கரையில் இருக்கும் தன் தாய்க்கு செய்தி சொல்லி விட்டு காத்திருக்கிறாள். ஆற்றில் வெள்ள பெருக்கு இருந்ததால் தாயால் வர முடியவில்லை. பிரசவ வேதனை அதிகமாக இம்மலையில் இருக்கும் ஈசனை வேண்டினாள்.ஈசனே தாய் வேடத்தில் அங்கு வந்து அவளுக்கு சுகப்பிரசவம் அடைய உதவினார்.நிஜ தாய் வந்த பின்பு தான்,இறைவனே வந்து பிரசவத்திற்கு உதவியது புரிந்தது.மட்டுவார் குழலம்மையுடன் இறைவன் அனைவருக்கும் காட்சி தந்தார். எனவே இறைவன் தாயுமானசுவாமி என அழைக்கப்படுகிறார்.
திருச்சி பெயர்க்காரணம் : திரிசிரன் என்ற மூன்று தலையுடைய அசுர மன்னன் இப்பகுதியை ஆண்டதாக சொல்லப்படுகிறது.அதனால் இப்பகுதியை திரிசிரபுரம் என்று வழங்கப்பட்டு அதுவே மருவி சிராப்பள்ளி என்றும் திருச்சிராப்பள்ளி என்றும் வழங்கி வருகிறது என்று வரலாறு கூறுகிறது.
தரிசன நேரம்: காலை 6.30AM 8PM திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் இந்தக் கோவில் திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில்,
திருச்சிராப்பள்ளி 620 002.
தொலைபேசி எண் +91-431- 270 4621.
- திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும்.
- இங்கு ஒரே சன்னிதியில் 2 சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலில் அமைந்துள்ளது, விருத்தபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் காசியில் உள்ள விசுவநாதர் கோவிலுக்கு முன்னதாக உருவானதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும்.
'ஓம்' என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால், படைக்கும் தொழிலை பிரம்மதேவன் இழக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து படைப்புத் தொழிலை மீண்டும் பெற வழிபாடு செய்து வந்தார். லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். அதற்கு 'பிரம்ம தீர்த்தம்' என்று பெயர். இந்த தீர்த்த குளம் இன்றளவும் இந்தக் கோவில் அருகே காணப்படுகிறது.
பிரம்மன் நான்கு முகம் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவனின் முகத்தை உருவாக்கி வழிபட்டார். இந்த லிங்கத்திற்கு பெயர் 'சதுர்முக லிங்கம்' ஆகும். இந்த லிங்கமும் இங்கு இருக்கிறது. 2-ம் சுந்தரபாண்டியன் எனும் மன்னரால் பிற்காலத்தில் இக்கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கோவில் கருவறையில் லிங்கம் 9 அடி உயரத்திலும், ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது. இவர் 'விருத்தபுரீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். 'விருத்தம்' என்றால் 'பழமை' என்று பொருளாகும். இதனால் 'பழம்பதிநாதர்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. லிங்கத்திற்கு 3 முழத்திலும், ஆவுடையாருக்கு 30 முழத்திலும் வேட்டி கட்டப்படுகிறது.
கேட்டதைக் கொடுக்கும் சிவபெருமானுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேட்டியும், துண்டும் செலுத்துவது உண்டு. வேட்டியும், துண்டும் பிரத்யேகமாக நெய்து பக்தர்கள் அளிப்பார்கள். அம்பாள் பெரியநாயகி எனும் பிரகந்நாயகி, சிவனுக்கு இடப் புறம் கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வழிபாடு நடத்தினால் தேவார பாடல்கள் பாடப்பெற்ற பாண்டிய நாட்டின் 14 சிவன் கோவில்களிலும் வழிபட்ட பலன் கிடைக்குமாம்.
இந்த ஆலய இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு, மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். அடுத்த பிறவி இன்றி, முக்தி அளிக்கக்கூடிய தலமாக இது விளங்குகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கி உடனடி பலன் கிடைக்கும். இக்கோவிலில் நான்கு யுகத்தை குறிக்கும் வகையில், நான்கு தல விருட்சங்கள் உள்ளன. கிருதயுகத்தில் சதுர கள்ளியும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்த மரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தல விருட்சமாக கொண்டுள்ளது.

இங்கு ஐந்து பிள்ளையார் சிலைகள் ஒரே வரிசையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஒரு பிள்ளையார் எனவும், நடுவில் மூலவ பெரிய பிள்ளையார் எனவும் கூறப்படுகிறது. 'ஆகண்டல விநாயகர்' என்ற பெயரில் தனிச் சன்னிதியிலும் விநாயகர் வீற்றிருக்கிறார். அந்த சன்னிதியில் சுரங்கப்பாதை அமைத்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீர்த்த தாண்டதானம் எனும் ஊரில் இருந்து சுந்தரபாண்டிய மன்னர் வந்து வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சுரங்கப்பாதை இருந்த இடம் தற்போது மூடப்பட்டுள்ளது.
சிவன் கோவிலில் பொதுவாக ஒரு சண்டிகேஸ்வரர் சன்னிதி இருக்கும். ஆனால் இங்கு ஒரே சன்னிதியில் 2 சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர். அம்பாள் சன்னிதி அருகிலும் சண்டிகேஸ்வரி தேவி இருக்கிறார். வேறு எங்கும் இல்லாத வகையில் இக்கோவிலின் ராஜகோபுரமும், மூலவரின் விமான கோபுரமும் பெரியஅளவில் காணப்படுகிறது. இதில் விமான கோபுரம், ராஜகோபுரத்தை விட அழகுடன் காணப்படுகிறது. கோவிலில் தட்சிணாமூர்த்தி வேறு எங்கும் இல்லாத வகையில் அமர்ந்த நிலையில் உள்ளார்.
சூரியன், சந்திரன், பைரவர் உள்ளிட்ட சன்னிதிகளும், மூலவரின் பின்பகுதியில் பெருமாளும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். கோவிலில் வழக்கமான பூஜைகளுடன் மாதாந்திர உற்சவங்கள், கார்த்திகை சோமவாரத்தில் 1,008 சங்காபிஷேகம், வைகாசியில் தேரோட்டத்துடன் 11 நாள் திருவிழா நடக்கிறது. வைகாசி விசாகத்தன்று மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பாகும்.
கோவில் நடை காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.
கவுதமரின் சாபம் பெற்ற இந்திரனும், படைப்பு தொழிலை மறந்த நான்முகனும், தக்கனின் சாபத்தால் தன் கலையிழந்த சந்திரனும், சிவத்துரோகம் செய்த வாயுபகவானும் இத்தலம் வந்து வழிபட்டு நற்பேறு பெற்றார்கள். ஆதிசேடன், விநாயகர், அகத்தியர், வசிஷ்ட முனிவர், இந்திரனது வெள்ளை யானை, சவுந்திரபாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலமாக இது இருக்கிறது.
புதுக்கோட்டையில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தூரத்திலும், திருவாடானையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், ஆவுடையார் கோவிலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலும் திருப்புனவாசல் அமைந்துள்ளது.
- ‘இசக்கி’ என்ற சொல்லுக்கு ‘மனதை மயக்குபவள்’ என்று பொருள்.
- முப்பந்தலில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள்.
ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கன்னியாகுமரி– திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இவ்விடத்தில் கூடி பந்தல் அமைத்து, அதன் கீழ் தங்களின் பிரச்சினைகளை அவ்வையார் தலைமையில் பேசி தீர்த்துக் கொண்டனர். இதன் அடிப்படையிலேயே இந்த இடம் முப்பந்தல் என்று பெயர் பெற்றது.
தல வரலாறு :
முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர். இந்த ஊரில் நாட் டிய பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் செல்வச் செழிப்பில் வசித்து வந்தாள். அவளது சொத்தின் மீது ஆசை கொண்ட ஒருவன், இசக்கியை காதல் மொழி பேசி வஞ்சனையால் வீழ்த்தினான். பின்னர் இசக்கியை வீட்டில் உள்ள நகை பணத்துடன் அருகில் இருந்த காட்டுக்கு வரவழைத்தவன், இசக்கி அவன்பால் கட்டுண்டு இருந்த போது தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டான். இதில் இசக்கி துடிதுடித்து இறந்துபோனாள்.
பின்னர் அந்தக் கயவன், நகை– பணத்துடன் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று தீண்டியதில் அவனும் இறந்துபோனான். இந்த நிலையில் தெய்வ பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் தன்னை வஞ்சனையால் கொன்றவனைத் தானே அழிக்க வேண்டும் என்று வரம் பெற்று மீண்டும் தன்னையும், தன்னை ஏமாற்றியவனையும் உயிர்த்தெழச் செய்யுமாறு வேண்டினாள். சிவனும் வரம் கொடுத்தார்.
கள்ளியை, குழந்தையாக மாற்றி...
அதன்படி பாம்பு தீண்டி இறந்து கிடந்த இசக்கியை கொன்றவன் வீடு திரும்பினான். இசக்கியோ காட்டில் அலைந்து திரிந்தாள். ஒருநாள், காட்டில் இருந்த கள்ளிச் செடியை ஒடித்து அதனை அழகிய குழந்தையாக மாற்றி னாள் இசக்கி. பின்னர் அந்த குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, தன்னை ஏமாற்றிய கயவனின் ஊருக்கு சென்று பஞ்சாயத்தை கூட்டி, தன்னையும், தனது குழந்தையையும் அவன் ஏற்க மறுப்பதாக புகார் கூறினாள்.
விசாரணைக்கு வந்த இசக்கியை ஏமாற்றியவன், அவள் தனது மனைவியல்ல, அது என் குழந்தை அல்ல என்று மன்றாடினான். ஒரு கட்டத்தில் இசக்கி தனது இடுப்பில் இருந்த குழந்தையை கீழே இறக்கி விட்டாள். அந்த குழந்தை நேராக, குற்றம் சாட்டப்பட்டவனிடம் சென்று அப்பா என்றது. இதனை பார்த்த பஞ்சாயத்து தலைவர், 'குழந்தை பொய் சொல்லாது, எனவே நீ உன் மனைவியுடன் பேசி ஒரு முடிவுக்கு வா' என்று கூறி ஒரு வீட்டில் இருவரையும் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டனர்.
முப்பந்தலில் அமர்ந்தாள் :
இந்த நேரத்திற்காக காத்திருந்த இசக்கி, நள்ளிரவு ஆனதும் விஸ்வரூபம் எடுத்தாள். பின்னர் தன்னை ஏமாற்றி கொன்றவனை, தனது கையால் கொன்று பழிதீர்த்தாள். அதன்பிறகு பழவூரை விட்டு, மேற்கு நோக்கி நடந்தாள். அப்போது அவ்வையார் முப்பந்தல் பகுதியில் மூவேந்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற இசக்கியை அழைத்து, சாந்தப்படுத்தி, 'இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்' என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். இதனை கயிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் பார்வதியை நோக்க, உடனே பார்வதிதேவி தன் வீரசக்தியை இசக்கிக்கு அளித்தாள். அன்று முதல் ஊரை காக்கும் தெய்வமானாள் இசக்கி. முப்பந்தலில் அமர்ந்ததால் முப்பந்தல் இசக்கி அம்மன் என்று பெயர் பெற்றாள்.
அவ்வைக்கு தனி சன்னிதி :
இசக்கியை, அவ்வையார் சாந்தப்படுத்தியதால் முப்பந்தலில் அவ்வையாரம்மன் என்ற பெயரில் அவ்வைக்கு தனி சன்னிதி உள்ளது. மேலும் இசக்கியின் சகோதரனான நீலனுக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. திருமாலே இசக்கியின் தமையனாக வந்ததாக கூறப்படுகிறது. 'இசக்கி' என்ற சொல்லுக்கு 'மனதை மயக்குபவள்' என்று பொருள். முப்பந்தலில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள். வலதுபுறம் பிராமணத்தி அம்மன் உள்ளார். கருவறை சுற்றுச்சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
கோவில் சுற்றுப்பிரகாரத்தில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும், அவ்வையாரம்மனும் தனி சன்னிதியில் பாங்குடன் அருள்புரிகின்றனர். முகப்பில் காவல் தெய்வங்களான சுடலைமாடனும், அவருக்கு எதிரில் பட்டவராயரும் தனி சன்னிதிகளில் உள்ளனர். இந்த கோவிலின் அருகில் மற்றுமொரு இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கும் சுடலை மாட சுவாமி காவல் தெய்வமாக கனகம்பீரமாக அமர்ந்துள்ளார். இந்தக் கோவில் கருவறை முன் மண்டபம் கேரள பாணியில் ஓடு வேயப்பட்டுள்ளது. இங்குள்ள இசக்கி அம்மன், ஆதி இசக்கி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். ஆலயத்தின் வெளியே மிகப் பெரிய அளவில் இசக்கி அம்மன் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ளார்.
- இந்த ஆலய இறைவனை, அருணகிரிநாதர் சிறப்புற புகழ்ந்து பாடியிருக்கிறார்.
- இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டதாக உள்ளது.
சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது. இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
நுழைவாயிலைக் கடந்து ஆலயம் நோக்கி செல்கையில், சாலையின் இரு பக்கமும் பசுமையான நிலங்கள், வீசியாடும் நெற்கதிர்கள், குலுங்கிக்குலை தள்ளி ஆடும் வாழைத் தோப்புகள், கிராமத்தின் நுழைவாயிலில் சப்தமாதர் கோவில் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில், மேற்கே பெருமாள் கோவில், பெருமாள் கோவிலுக்குப் பின்னால் விஷ்ணு, துர்க்கை கோவில்கள், வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது. இவ்வூரில் ராமர் கோவில், விநாயகர் கோவில், ஜைனர் 22-வது தீர்த்தங்கரர் பள்ளி என கோவில் பல இருப்பதை, அருணகிரிநாதர், ஆடகம்பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பலவீதியுமே நிறைவான தென்சிறுவாபுரி எனத் திருப்புகழில் பாடியுள்ளார்.
சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக வருக! வருக! எனக் கட்டியம் கூறி நம்மை வரவேற்கிறது. ஐம்பொறிகளையும், ஐம்பூதங்களையும் அடக்கு, அடக்கு! என ராஜகோபுரம் நம்மிடம் கூறுவது போல் உள்ளது. உயரமான கொடிமரம், கொடிமரத்துக்கு முன்னால் அழகே திருஉருவம் கொண்டதுபோல் மரகதப் பச்சைமயில் கொலுவாக வீற்று இருக்கிறது. இதுபோல் சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் உலகிலும் வேறு எங்கும் இல்லை என உறுதியாக கூறலாம்.
கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகத கல்லில் சூரியனார் ஒளி வீசிக்கொண்டு இருக்க, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட கம்பீரமான ராஜகணபதி மரகத கல்லில் பச்சைப் பசேல் என மன்னிட மரகத விநாயகர் என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை, அளிக்க அழகுக் கோலத்துடன் வீற்று இருக்கிறார். பின் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரர், ஆதிமூலவர் (முன் இருந்த பாலசுப்பிரமணிய சுவாமியின் விக்ரகம்), நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் புடைசூழ சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும். சந்ததமும், அடியார் சிந்தையில் குடியிருக்கும் முருகப்பெருமான், நம் சிந்தையைக் கவர்கிறார்.
முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.
முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப்பச்சையில் கரும்பச்சை வைரம் போல் பிரகார ஜோதியாகக் காட்சி அளிக்கிறார். இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.
அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு மயிலுமாடி நீயுமாடி வரவேணும் என்று பாடியதற்கு இணையாக, இங்கு மைந்துமயில் உடன் ஆடிவர வேணும் என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள். அருணாசலேசுவரர், அபீதகுஜாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளிநங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை தைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார்.
கைத்தலம் பற்றுகின்ற பொழுது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்ப்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண்மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக்கண் கோடி வேண்டும். பின்புறத்திலிருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார். மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை. ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பாக வள்ளி மணவாளப்பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.
இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. முருகன் சிலை கூட முன்பு மரகதபச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டிருக்கலாம். இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக்கோவிலிலும் இல்லை.
அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த ஸ்தலத்தைப் பாடியுள்ளார். அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தாம். அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன. கண்டறியப்பட்ட 215 ஸ்தலங்களில் 35 ஸ்தலங்களைச் சிறப்பாக பாடியுள்ளார். 8 ஸ்தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். 6 ஸ்தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார்.
திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார். மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு சீதளவாரிஜ பாதா நமோ நம: என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.
அண்டர்பதி குடியேற என்ற முதல் திருப்புகழில் மகிமீற, மகிழ்கூர, மகிழ்வாக, மகிகூற, இன்பமுற என ஐந்து இடங்களில் மகிழ்ச்சிப் பெருக்கு கூறப்பட்டது போல் வேறு எந்த திருப்புகழிலும் சிறப்பாக ஐந்து முறை சொல்லப்படவில்லை என்பது இன்னும் ஒரு சிறப்பு. இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும். அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோளா, வடிவேலா, முருகேசா, பெருமாளே! என ஒரு வாக்கியமாக அமைவதுபோல் வேறு எந்த ஒரு திருப்புகழிலும் அமையவில்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஸ்தலத்துக்கு வருபவர் கடுமையான விரதமாக பசி பட்டினி இருந்து நோன்பு நோற்று இறைவனை அடைய வேண்டியதில்லை. சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே! என்று இவரை எப்போதும் நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார் எனக்கூறுகிறார் அருணகிரிநாதர்.
இரண்டாவது திருப்புகழ் அர்ச்சனை திருப்புகழாக இருப்பது சிறப்பு. பழனிக்கு நாதவிந்து கலாதி நமோ நம என்றும் திருப்புகழைப்போல் சிறுவைக்கு சீ தள வாரிஜ பாதா! நமோ நம எனும் திருப்புகழை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
அர்ச்சனை திருப்புகழ் 6-ல் சரணாகதியின் மேன்மையான முருகனின் பாத சரணத்தைக் குறித்து சிறுவைக்கு எழுதி இருப்பது சிறப்பு. வானவர் ஊரினும் வீறாகிலீறளகாபுரி வாழ்வினும் மேலாக திருவாழ் சிறுவாபுரி வாழ்வே சுதாரிபர் பெருமாளே எனப்பாடி இங்கு வருபவர்கள் தேவேந்திர பட்டணத்தை காட்டிலும் வளமாக வாழ்வர் என அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொல்கிறார். மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.
நான்காவது திருப்புகழில் ஜெயமதான நகர் என்று சிறுவையே வெற்றி கொண்டநரம் என்கிறார். ஜெயமதான நகர் அளகை போல வளமிகுந்த சிறுவைமேலி வரமிருந்த பெருமாளே என வெற்றியை தன்னிடம் அமைத்துக் கொண்ட சிறுவை நகரம். குபேரப்பட்டணம் என அழைக்கப்பட்ட அளகாபுரி போல் எல்லா வளங்களும் அதிகமாகக் குடிகொண்டுள்ள சிறுவாபுரியில் குடிகொண்டு உள்ள சிறுவை முருகன் வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன் என அருணகிரிநாதர் சொல்வது. வரமிகுந்தவனை அடிக்கடி நாடி வந்து அவனிடம் இருப்புள்ள வரங்களைப் பெற்று செல்ல வாருங்கள், வாருங்கள்! என அழைப்பதுபோல உள்ளது.
இந்த ஆலய இறைவனுக்கு, ஒரு மண்டலம் (48 நாட்கள்), நெல்லி முள்ளி பொடி கொண்டு அபிஷேகம் செய்து வந்தால், தீராத நோயில் இருந்தும் விடுபடலாம். 48 நாட்களும் ஆலயத்திற்கு வரவேண்டும் என்பது இல்லை. கோவில் அர்ச்சகரிடம், அந்த பொடியைக் கொடுத்து அபிஷேகத்தில் சேர்க்க செய்தால் மட்டுமே போதுமானது.
இந்த ஆலய இறைவனான பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தல மூலவரை செவ்வாய்க்கிழமை தோறும், தொடர்ந்து ஆறு வாரங்கள் வழிபாடு செய்து, வள்ளி மணவாளப் பெருமானை வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கும். செல்வ வளம் பெருகும், நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். இந்த தலத்தில் உள்ள மூலவரை ஆறு முறை வலம் வரவேண்டும் என்கிறார்கள். அப்படி வலம் வந்தால், மாற்றங்கள் நிறைந்த இன்பம் வாழ்வு உண்டாகும்.
அமைவிடம்
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சென்னைக்கு வடக்கே 34 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் கும்முடிபூண்டி ரெயில் மார்க்கத்தில் 39 கிலோ மீட்டர் தூரத்திலும், கவரப்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது சிறுவாபுரி.
- சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் கிடையாது.
- இறைவனே நவக்கிரக நாயகனாக அருள் ஆட்சி செய்து வருகின்றார்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது.
ராஜ ராஜசோழனின் முப்பாட்டனால் கட்டப்பட்ட இந்த கோவில் சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலின் இணைக் கோவிலாக உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த கோவில் இறைவனை மகாவிஷ்ணு பூஜித்து சக்கராயுதம் பெற்றதாலும், மேலும் இத்தல இறைவனை பிரம்மன் சக்கரவாகப் பறவையாக உருமாறி பூஜை செய்து சாபம் நீங்க பெற்றதால் இந்த கோவில் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.
சப்தமாதர்கள்
முற்காலத்தில் சக்கராப்பள்ளி மிகவும் பெரிய ஊராக இருந்து வந்துள்ளது. சக்கராப்பள்ளியை சுற்றி சப்தமாதர்கள் வழிபாடும் அதிகமாக உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்ய அன்னை ஆதிபராசக்திக்கு துணையாக நின்றவர்கள் சப்தமாதர்கள் ஆவர். அவர்களை இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகமாக வழிபட்டு வந்தனர்.
அரியநாச்சி, அழகு நாச்சியம்மன் என்ற பெயர்களில் சக்கராப்பள்ளியை சுற்றி பல ஊர்களில் சப்த மாதர்கள் கோவில் கொண்டுள்ளனர். பிரம்மனின் சக்தியாக பிராம்மி, மகேசனின் சக்தியாகிய மகேஸ்வரி, முருகனின் சக்தியாக கவுமாரி, மகாவிஷ்ணுவின் சக்தியாக வைஷ்ணவி, வராகரின் சக்தியாக வராகி, இந்திரனின் சக்தியாக இந்திராணி, துர்க்கையின் சக்தியாக சாமுண்டி ஆகியோர் சப்தமாதர் ஆவர்.
எம பயம் போக்கும் தலம்
இந்த சப்த மாதர்களில் பிரம்மனின் சக்தியாகிய பிராம்மி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்துள்ளார். இத்தல இறைவன் எமனை சாடியதால் இவர் எமபயம் போக்க வல்லவர் என்றும் அதற்கு சாட்சியாக தேவநாயகி சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் அருள்வதும் எம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது. இத்தல இறைவி தன்னை துதிக்கும் பக்தர்களுக்கு அருள்வதற்காக ஒரு காலை முன்பு எடுத்து வைத்த நிலையில் அருள் புரிகிறாள்.
சக்கரவாகேஸ்வரர் கோவிலில் உள்ள தெட்சிணாமூர்த்தி சன்னதி வேறு எங்கும் காண இயலாத சிற்ப அழகுடன் 5 தலை நாகம் குடைபிடிக்க ஆலமரத்தின் கீழே அமர்ந்து தன்னை நாடும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்ற தோற்றத்துடன் உள்ளது. சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் கிடையாது. இறைவனே நவக்கிரக நாயகனாக அருள் ஆட்சி செய்து வருகின்றார். ஆதிகாலத்தில் இந்த கோவிலில் பங்குனி உத்திரம் உற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது.
முக்தி அளித்தார்
பின்னர் காசியிலிருந்து வந்த அநவித்யநாத சர்மா - அனுக்ஞை தம்பதியினர் ராமேசுவரம் செல்லும் வழியில் இத் தலத்தில் தங்கினர். அப்போது இரவில் இவர்கள் கனவில் இறைவன் எழுந்தருளி சப்த மாதர்கள் வழிபட்ட சப்தஸ்தலங்களான ஹரிமங்கை, சூலமங்கை, நந்தி மங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை என்னும் சப்ததலங்களுக்கு கண்ணாடிப் பல்லக்கில் சக்கரவாகேஸ்வரரும், தேவநாயகியும் புறப்பாடு செய்ய கூறினார். இதன்படி பங்குனி உத்திரம் முடிந்த பின் வரும் சித்திரை நட்சத்திரத்தில் கிளம்பி, சுவாதி நட்சத்திரத்தில் மீண்டும் கோவிலில் இறைவனை எழுந்தருள செய்ததால் அநவித்யநாத சர்மா தம்பதிக்கு இறைவன் முக்தி அளித்தார்.
பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
தற்போது பிரமாண்ட கண்ணாடி பல்லக்கில் சாமி ஏழூர் பல்லக்கு புறப்பாடு ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஏழூர் பல்லக்கின் 2-ம் நாளில் அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே அழகுநாச்சியம்மன் கோவில் முன்பு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். மேலும் இந்த விழா தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய கோவில் விழாக்களில் ஒரு விழாவாக உள்ளது.
சப்தமாதர்கள் சப்ததலங்களில் தனித்தனியே சிவனை வழிபட்டு பெருநிலை பெற்றனர். சிவனை வழிபட்டு 7 விதமான தரிசனம் பெற்றனர். இது பற்றி அறிந்த பார்வதிதேவி இந்த 7 தலங்களில் சிவனை வழிபட்டு 7 விதமான தரிசனம் பெற்றார்.
குடமுழுக்கு
சக்கராப்பள்ளியில் சிவநேத்திர தரிசனமும், அரியமங்கையில் கங்கா தரிசனமும், சூலமங்கையில் திரிசூல தரிசனமும், நந்தி மங்கையில் திருக்கழல் தரிசனமும், பசு மங்கையில் உடுக்கை தரிசனமும், தாழமங்கையில் நாக தரிசனமும், புள்ளமங்கையில் ஆலகால விஷத்தை இறைவன் அமுதமாக மாற்றிய காட்சி தரிசனமும் பார்வதி தேவிக்கு கிடைத்தது. இத்தல இறைவனை சக்கரவாக பறவை வழிபடும் புடைப்பு சிற்பமும், சோழ அரசி செம்பியன் மாதவி வழிபடுவது போன்ற கருங்கல்லால் ஆன புடைப்பு சிற்பம் இந்த கோவிலில் உள்ளது. பங்குனி உத்திரம் பின்வரும் சித்திரை நட்சத்திர தினத்தன்று இறைவன், இறைவி மங்கள வாத்தியம் முழங்க கண்ணாடி பல்லக்கில் ஏழூர் புறப்பாடு நடைபெறும் அதிகாலை நேரத்தில் கோபுர தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் முன்பு கூடுகின்றனர். இதன்படி வழிபாடு செய்தால் பக்தர்களுக்கு வற்றாத செல்வமும், திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சக்கரவாகேஸ்வரர் கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.
சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவின் நிறைவாக சாமிக்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடக்கிறது. அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு இந்நிகழ்ச்சி நடக்கிறது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பொம்மை ஆடிய பிறகு சாமிக்கு பொம்மை பூப்போடுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான காரணம் குறித்த விவரம் வருமாறு:- ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இறுதியில் இறைவனை தஞ்சம் அடைகிறான். எவ்வளவு ஆட்டம் ஆடினாலும் முடிவில் இறைவனிடம் தான் தஞ்சமடைய வேண்டும் என்பதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இந்த பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
வழக்குகளில் வெற்றி அளிக்கும் சக்கரவாகேஸ்வரர்
*சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரரை வழிபட்டால் எமபயம் நீ்ங்கி மாங்கல்ய பலன், குழந்தை பேறு கிடைக்கும்.
*இக்கோவிலில் நடக்கும் சப்தஸ்தான விழா தொடக்க நாளில் அதிகாலை கோபுர தரிசனம் செய்தால் நிலம், வீடு சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து வழக்குகளில் வெற்றி, அரசு வேலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் அமைவிடம்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் தஞ்சை - கும்பகோணம் சாலையில் தஞ்சையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், அய்யம்பேட்டையிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலை பஸ் அல்லது ஆட்டோ மூலம் அடையலாம்.
- இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
- இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குகின்றது.
மூலவர் : ரங்கநாதன பெருமாள்
அம்மன் / தாயார் : ரங்கநாயகித் தாயார்
தல விருட்சம் : புன்னாக மரம்.
தீர்த்தம் : பெண்ணையாறு
நைவேத்தியம்
ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமிக்கு தினமும் நைவேத்தியமாக சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. மற்றபடி உபயதாரர்கள் ஆலய நிர்வாக முடிவுபடி நைவேத்தயங்கள் படைக்கப்படுவது உண்டு.
ஆதிதிருவரங்கம் திருத்தலத்தில் ஆலயத்தின் தானியக்களஞ்சியம் பிரமாண்ட தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இந்த நெற்களஞ்சியம், மூன்று பாகமாகப் பிரிக்கப்பட்டு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. கீழ்ப்பாகம் நெல்தானியமும், நடுபாகம் கம்பும், மேல்பாகம் கேழ்வரகு தானியங்களும் சேமித்து வைக்கப்பட்டன. வறட்சி காலங்களில் சேமித்து வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அன்னதானம் செய்யவும் பயன்படுத்தப்பட்டது. நெற்களஞ்சியத்தின் மேற்பாகத்தில், அன்னலட்சுமி தாயார் சிலை சிறப்பாக அமையப்பெற்றுள்ளது.
மன்னர்கள் காலத்தில், கோவில்களை நிர்மாணித்துப் பராமரிக்க, ஒவ்வொரு கோவிலுக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மானியமாக கொடுத்தனர். அந்த மானிய நிலங்களில் விவசாயம் செய்து அதில் வரும் விளைச்சலில் ஒரு பங்கை கோவிலுக்கு வரியாக செலுத்தவேண்டும். அப்படி கிடைக்கும் அதிகப்படியான தானியங்களை சேமித்து வைக்க கோவில்களில் பெரிய களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன.
இன்று நம் பாரம்பரிய விவசாய வரலாற்றை சொல்லும் அடையாளச் சின்னங்களாக நிற்கிறது தானிய களஞ்சியங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த கோவில் தானிய களஞ்சியம் இன்று மக்களுக்குக் காட்சிப் பொருளாக நிற்கிறது.
ஆதிதிருவரங்கம் கோவிலின் ராஜகோபுரத்திற்கு அருகிலே அமைந்துள்ளது இந்தக் களஞ்சியம். இதன் வரலாற்றை கோவில் மண்டபத்தில் அமர்ந்தவாறு சொன்னார், அந்தக் கிராமத்தின் 91 வயதானவரான ஜெயராமன், "வட ஆற்காடு, தென் ஆற்காடு என மொத்தம் 12 காடுகள் இந்த பகுதியில் ஆதிகாலத்தில் இருந்தது. இதில் ஆதி திருவரங்கம் தென் ஆற்காடு முடியும் இடத்திலும், வட ஆற்காடு துவங்கும் இடத்திலும் இருக்கிறது.
'காடு' என்று சொல்லப்பட்ட ஊர்களை இப்போது நாடு என்று சொல்கின்றனர்.இதில், 'நடுநாடு' என்பது இந்த பகுதி. இந்த நாட்டை செழிப்பாக வைத்திருந்தது வட பெண்ணையாறுதான் (கோவிலின் வடக்கே பெண்ணையாறு செல்வதால், இதனை வட பெண்ணையாறு என்கிறார்). திருக்கோவிலூரில் இருந்து ஆதி திருவரங்கம் வரையில் கோவிலுக்கு சொந்தமாக ஆதிகாலத்தில் 400 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தது. இது காலப்போக்கில் குறைந்து 100 ஏக்கராக சுருங்கிவிட்டது.
மன்னர்கள் காலத்தில் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட மானிய நிலங்களில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் விளைச்சலில் 'ஆறில் ஒரு பங்கு' தானியத்தைக் கோவிலுக்கு வரியாக கொடுக்க வேண்டும். அப்படி கிடைக்கும் தானியங்களை சேமித்து வைப்பதற்காக மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான் இந்த களஞ்சியம்.
வரி மூலமாக கிடைக்கும் நெல், வரகு, கேழ்வரகு, கம்பு மாதிரியான தானியங்களை கனத்தம் கட்டி (களஞ்சியத்தின் சேமிக்கும் பகுதியில் தடுப்பு ஏற்படுத்துவது) வைத்திருந்தனர். களஞ்சியத்தினை மூன்று அறைகளாக பிரித்து அமைத்திருக்கின்றனர். இந்த களஞ்சியத்தில் சேமிக்கும் தானியத்தைக் கொண்டு கோவில்களில் வேலை செய்பவர்களுக்கு தானியங்களை சம்பளமாக கொடுத்துள்ளனர்.
எனக்கு விபரம் தெரிந்த பிறகு களஞ்சியத்தில் எந்தவிதமான தானியங்களையும் சேமித்து வைக்கவில்லை. என்னோட தாத்தா காலத்தில் தானியங்களை இந்த களஞ்சியத்தில் சேமித்து வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த களஞ்சியம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர். கோவில் மூலஸ்தானம் இருக்கும் பகுதிகளை தவிர மற்றப்பகுதிகள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர்.
இந்தக் கோவிலை வளர்த்துக்கட்டும் அளவுக்கு அந்தக் காலத்தில் நடுநாடு வளமாக இருந்திருக்கிறது. எங்கள் நாட்டின் விளைச்சலை சொல்லும் விதமாக இந்தக் களஞ்சியம் நிற்கிறது. இதில் சுமார் 5000 களம் (ஒரு களம் 12 மரக்கால்) தானியங்களை சேமித்து வைக்கலாம் எனத் தாத்தா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இப்போது, களஞ்சியத்தில் சேமிக்கும் அளவுக்கு தானியங்கள் இல்லாததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் களஞ்சியம் சிதைந்துக்கொண்டே வருகிறது. பாரம்பரிய விவசாயத்தோட அருமையை சொல்லும் இந்த களஞ்சியத்தை பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுத்தால் பின்னாடி வர்ற சந்ததிகளுக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கும்" என்று கோரிக்கை வைத்தார்.
திருத்தல வரலாறு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம். இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. முதல்யுகம் மற்றும் முதலவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது. இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்கதர்களுக்கு வழங்குகிறது. அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம்.
இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர். போகம் என்றால் மகிழ்ச்சி (சந்தோசம்) எனப் பொருள். அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது.
அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியிள்ளார். அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீதி வைத்துள்ளார். அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார். அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார். இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.
வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறுள்ளது.
இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்ணெயும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.
பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது. கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் 'கிருஷ்ணாரண்யம்' என்றும் பெயர் பெற்றது. தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும்.
காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு, இது பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்துள்ளது. பக்தர்கள் பலி பீடத்தில் இருந்தே கிருஷ்ணரை சேவித்துக் கொள்கிறார்கள். இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணெயும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.
தென்பெண்ணை ஆற்றின் தென் கரையோரம் மேட்டுப் பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இதன் தோற்ற மும் இதை உராய்ந் தாற்போல வடக்கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சியாய் இன்பம் அளிக்கிறது.
இத்தலத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகள்
இந்த கோவிலில் மேல்தளத்திற்கு செல்ல படிக்கட்டுகள் இருப்பது வரலாற்று சிறப்பு. மேல் உள்ள பால சன்னதிக்கு செல்வதற்கும் மற்றும் மூலவர் சன்னதிக்கு மேல் பெருமாள் மூச்சு விடும் இடம் காண் பதற்காகவும் இப்படிக் கட்டுகள் பயன்பட்டன. அதற்கு சான்றாக படிக்கட்டின் அடி பாகத்தில் யானையின் நான்கு பாத சுவடுகள் கருங்கல்லால் பதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பதிக்கப்பட்ட யானையின் பாதச்சுவடுகள் கோவில் புனர் அமைத்தல் பணிகள் நடைபெறும் பொழுது மறைந்துவிட்டது.






