என் மலர்
கோவில்கள்
- பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன.
- இது அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.
கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளை யாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.
கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த `விரஜபூமி' சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.
இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா' எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.
பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், `பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.
கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் `விரஜபூமி'யில் உள்ளன. `பிருந்தா' என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.
பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன. கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!
பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.
இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்.
மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.
- 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணி இன்னும் முடிவடையவில்லை.
- இந்த ஆலயத்தின் உயரமான கோபுரம் 105 மீட்டர் கொண்டது.
- இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் 2025-ம் ஆண்டு நிறைவு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, 'சத்தியத்தின் சரணாலயம்' என்பது இதன் பொருள். இந்த சத்திய சரணாலயமானது, கோவில் மற்றும் அரண்மனையின் கலப்பில் கட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட பிரமாண்டமான, வித்தியாசமான கட்டிடமாகவும் இது திகழ்கிறது.
இந்த கட்டிடத்தின் சிந்தனைக்கு சொந்தக் காரர், தாய்லாந்து நாட்டின் தொழிலதிபரான லெக் வீரியப்பன் என்பவராவார். 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணி இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும் அங்கு பொதுமக்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மரத்தால் மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தை காணச் செல்லும் மக்கள், அங்கு கட்டிடத்தின் ஒரு பாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களையும் கூட பார்க்க முடியும்.
இந்த ஆலயத்திற்குள் அயோத்தியை ஆட்சி செய்த ராமரின் வாழ்க்கை வரலாறு, புத்த மதத்தின் வரலாறு, இந்து மதத்தில் உள்ள பல்வேறு புராணங்களைக் கூறும் சிற்பங்கள் அனைத்தும் மரத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மைடீயாங், மைடாக்கியன், மாய் பஞ்சட் மற்றும் தேக்கு போன்ற மரங்களால் இந்த சத்தியத்தின் சரணாலயம் எழுப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரு மரக்கட்டைக்கும், இன்னொரு மரக்கட்டைக்குமான இணைப்பாக கூட, எந்த இரும்பு பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை. இணைப்பிற்கும் கூட மரத்தால் ஆன 'ஆப்பு' கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆலயத்தின் உயரமான கோபுரம் 105 மீட்டர் கொண்டது. இதன் வெளிப்புறம் மேற்கூரையில் படைப்பின் கடவுளான பிரம்மாவின் முகம் மரத்தால் பெரியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆலய வடக்கு மண்டபத்தில் புத்த குவான்யின் மற்றும் ஞானம் பெற்ற பல புத்த பிட்சுகளின் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. தெற்கு மண்டபத்தில் நவக்கிரகங்களான சூரியன், சந்திரன் உள்ளிட்ட கிரகங்களும் செதுக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டபத்தில் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவற்றை உணர்த்தும் சிற்பங்களும் அழகுற உருவாக்கப்பட்டுள்ளன.
பணி நடைபெற்று வருவதால், மக்கள் அனைவரும் இதற்குள் தலைக் கசவம் அணிவிக்கப்பட்டே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் 2025-ம் ஆண்டு நிறைவு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் குணசீலம் கோவில் விளங்குகிறது.
- இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார்.
மூலவர் - பிரசன்ன வெங்கடாஜலபதி
உற்சவர் - ஸ்ரீனிவாசர்
தீர்த்தம் - காவிரி, பாபவிநாசம்
ஆகமம்/பூஜை - வைகானஸம்
புராண பெயர் - பத்மசக்கரபட்டணம்
இந்தக் கோவிலில் உள்ள பெருமாள், தரைதளம் விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார். கோவிலின் அருகில் காவிரி நதியும் எதிர்ப்பக்கத்தில் பாபவிநாச அருவியும் உள்ளது. இந்த கோவிலில் தாயார் சன்னிதி கிடையாது. உற்சவரான ஸ்ரீநிவாசப்பெருமாள் மட்டும் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகின்றார். புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் சுவாமி, குணசீலருக்கு காட்சியளித்த வைபவம் நடக்கும்...
மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக தங்கியிருக்க மறுவாழ்வு மையம் ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளித்து வைத்தியம் வழங்கப்பட்டு வருகிறது.
தல வரலாறு
குணசீலர் என்று பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் காவிரிக்கரையில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வந்த குணசிலருக்கு தன் ஆசிரமத்திலும், பெருமாள் எழுந்தருள வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசிரமத்தில் பெருமாளை வரவழைக்க கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவத்தின் மூலம் பெருமாள் குணசிலருக்கு காட்சியளித்து அந்த ஆசிரமத்திலேயே பிரசன்ன வெங்கடாஜலபதியாக இருந்து இன்று வரை தரிசனம் தருகின்றார். பெருமாலின் பக்தரான குணசீலரால் தான் இந்த பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது.
குணசீலரின் சேவை மற்றொரு ஆசிரமத்திற்கு தேவைப்பட்டதால், குணசீலர் தன் சீடனிடம் பெருமாளை ஒப்படைத்துவிட்டு பூஜைக்கான பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குணசீலம் ஒரு காடாக இருந்தது. வனவிலங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடிலை விட்டு சீடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான். அந்த குடிலில் பெருமாள் சிலை மட்டும் தனியாக இருந்த போது, புற்றினால் மூடப்பட்டுவிட்டது.
ஞானவர்மன் என்ற பெயர் கொண்ட மன்னன் அந்தப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம் அது. அரண்மனையின் பசுக்கள் அந்த காட்டில், புல் மேய்வதற்காக விடப்படும். தொடர்ச்சியாக அந்த காட்டினுள் சென்ற மாடுகளில் மடியில் இருந்து பால் கரப்பது இல்லை. இதற்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்வதற்காக, அந்த காட்டிற்குச் சென்ற மன்னனுக்கு ஒரு அசரீதி குரல் ஒலித்தது. அந்தக் குரலின் மூலம் புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்ந்த மன்னன் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு கோவில் எழுப்பினான்.
மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார். மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் குணசீலம் கோவில் விளங்குகிறது. குணசீல மகரிஷிக்கு முன்பாக திருப்பதி இறைவன் தோன்றினார் என்பதால், திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் குணசேலனைப் பார்வையிட முடியுமென்று நம்புகிறார்கள்.
கோவில் அமைப்பு
கோவில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர். வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கும் சன்னதி இருக்கிறது. ஆவணி திருவோணத்தன்று நடக்கும் குருபூஜையின்போது இவர் புறப்பாடாவார்.
கோவிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும்.
திருவிழா:
சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி. பிரம்மோற்ஸவத்தின் முக்கியத் திருவிழா, புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் – அக்டோபர்) 11 நாட்களுக்கு ஒன்பது நாள் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலான கோவில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு.
பலன்கள்
உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜர் சீடர் சுருதிதேவனும், பகுவிராஜ மன்னன் கால் பாதிக்கப்பட்ட போதும் இந்தக் கோவிலுக்கு வந்து குணம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், வாய்பேச முடியாத நிலையில் இந்த கோவிலுக்கு வந்து பேசும் சக்தியைப் பெற்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தரிசன நேரம்:
காலை 6.30AM – 12.30PM மாலை 4.00PM – 8.30PM
கோவில் சடங்குகள் ஒரு நாளைக்கு ஆறு முறை செய்யப்படுகின்றன; விஸ்வரூபம் – 6:30am. காலசந்தி – 8:30am. உச்சிகாலம் – 12:30pm. திருமல்வடை – 5:30pm. சாயரக் ஷை – 6:30pm. அர்த்தஜாமம் – 8:30pm. ஒவ்வொரு சடங்குகளும் நான்கு படிகள் உள்ளன – அபிஷேக (புனிதமான) குளியல், அலங்காரம், நெய்வேத்யம் (உணவு பிரசாதம்) மற்றும் தீப ஆராதனை.
முகவரி:
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில்,
குணசீலம் 621 204,
திருச்சி மாவட்டம்.
- கருவறையில், ‘அகத்தீஸ்வரர்’ என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
- இத்தல இறைவியின் திருநாமம், ‘ஆனந்தவல்லி’ என்பதாகும்.
திருச்சியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருகமணி என்ற ஊர். இங்கு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் விலகி நிம்மதியாக வாழ்வதற்கு சித்தர்கள் மூலமாக சிவபெருமான் பல வழிகளைக் காட்டியுள்ளார். அவற்றில் ஒன்றுதான், இந்த பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் வழிபாடு.
ஆம்.. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் கருவறையில், 'அகத்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். இத்தல இறைவியின் திருநாமம், 'ஆனந்தவல்லி' என்பதாகும். ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது.
பல கோடி யுகங்களுக்கு முன்பாக சிவபெருமான், தமிழ் மொழியை முருகப்பெருமானுக்கு கற்றுத்தந்தார். முருகப்பெருமான், தமிழின் சுவையை சித்தர்களின் தலைவராக கருதப்படும் அகத்தியருக்கு போதித்தார். அத்தகைய சிறப்புமிக்க அகத்தியருக்குரிய 'ஓம் அகத்தீசாய நமக' என்ற குரு மந்திரத்தை நாம் ஜெபித்தால், அனைத்து விதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.
இந்த பூமியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களிலும் அகத்தியர், வழி பாடும், பூஜையும் செய்திருக்கிறார். தவிர, அகத்தியரால் உருவான ஆலயங்களும் ஏராளமாக இருக்கின்றன. அகத்தியரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் மூலவராக அமைந்த ஆலயங்களுக்கு 'அகத்தீஸ்வரர் கோவில்' என்றே பெயர் அமைந்திருக்கும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவராகப் போற்றப்படுவது போல, பெண் சித்தர்களின் தலைவியாக அகத்தியரின் மனைவி லோபமுத்ரா போற்றப்படுகிறார். அகத்தியருக்கும், லோபமுத்ராவிற்கும் திருமணம் நடந்த இடமாகவே திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ள பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் திகழ்கிறது.
ஒரு தலைசிறந்த சிவபக்தனை மணம் முடிக்க வேண்டும் என்று லோபமுத்ரா சபதம் எடுத்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்காக, அகத்தியர் பல்வேறு விதமான உபதேசங்களை, லோபமுத்ராவுக்கு வழங்கினார். அதன் முடிவாக, தான் எதிர்பார்த்த தலைசிறந்த சிவடினயார் அகத்தியர் என்பதை லோபமுத்ரா உணர்ந்துகொண்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் இங்கு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
30 வயதைக் கடந்தும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் அன்று, இங்கே வருகை தருவது மேலும் சிறப்பான அருளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். அப்படி வரும் போது, இங்குள்ள மூலவருக்கும், அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப் பூ மாலை அணிவித்து ஒரு முகூர்த்த நேரம் (90 நிமிடங்கள்) பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் தலவிருட்சமான வில்வ மரத்தை, அகத்தியருக்கு பிடித்த 8 எண் இலக்கத்தை குறிக்கும் வகையில் எட்டின் மடங்குகளில் வலம் வர வேண்டும். அப்போது 'அகத்தீசாய நமக' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதற்கான பலனை திருமணமாகாதவர்கள், விரைவில் அடைவார்கள்.
- இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
- இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
மூலவர் : ரங்கநாதன பெருமாள்
அம்மன் / தாயார் :
ரங்கநாயகித் தாயார்
தல விருட்சம் : புன்னாக மரம்.
தீர்த்தம் : பெண்ணையாறு
ஆதிதிருவரங்கம் திருத்தலத்தில் ஆலயத்தின் தானியக்களஞ்சியம் பிரமாண்ட தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இந்த நெற்களஞ்சியம், மூன்று பாகமாகப் பிரிக்கப்பட்டு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. கீழ்ப்பாகம் நெல்தானியமும், நடுபாகம் கம்பும், மேல்பாகம் கேழ்வரகு தானியங்களும் சேமித்து வைக்கப்பட்டன. வறட்சி காலங்களில் சேமித்து வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அன்னதானம் செய்யவும் பயன்படுத்தப்பட்டது. நெற்களஞ்சியத்தின் மேற்பாகத்தில், அன்னலட்சுமி தாயார் சிலை சிறப்பாக அமையப்பெற்றுள்ளது.
மன்னர்கள் காலத்தில், கோவில்களை நிர்மாணித்துப் பராமரிக்க, ஒவ்வொரு கோவிலுக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மானியமாக கொடுத்தனர். அந்த மானிய நிலங்களில் விவசாயம் செய்து அதில் வரும் விளைச்சலில் ஒரு பங்கை கோவிலுக்கு வரியாக செலுத்தவேண்டும். அப்படி கிடைக்கும் அதிகப்படியான தானியங்களை சேமித்து வைக்க கோவில்களில் பெரிய களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன. இன்று நம் பாரம்பரிய விவசாய வரலாற்றை சொல்லும் அடையாளச் சின்னங்களாக நிற்கிறது தானிய களஞ்சியங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த கோவில் தானிய களஞ்சியம் இன்று மக்களுக்குக் காட்சிப் பொருளாக நிற்கிறது.
ஆதிதிருவரங்கம் கோவிலின் ராஜகோபுரத்திற்கு அருகிலே அமைந்துள்ளது இந்தக் களஞ்சியம். இதன் வரலாற்றை கோவில் மண்டபத்தில் அமர்ந்தவாறு சொன்னார், அந்தக் கிராமத்தின் 91 வயதானவரான ஜெயராமன், "வட ஆற்காடு, தென் ஆற்காடு என மொத்தம் 12 காடுகள் இந்த பகுதியில் ஆதிகாலத்தில் இருந்தது. இதில் ஆதி திருவரங்கம் தென் ஆற்காடு முடியும் இடத்திலும், வட ஆற்காடு துவங்கும் இடத்திலும் இருக்கிறது. 'காடு' என்று சொல்லப்பட்ட ஊர்களை இப்போது நாடு என்று சொல்கின்றனர்.
இதில், 'நடுநாடு' என்பது இந்த பகுதி. இந்த நாட்டை செழிப்பாக வைத்திருந்தது வட பெண்ணையாறுதான் (கோவிலின் வடக்கே பெண்ணையாறு செல்வதால், இதனை வட பெண்ணையாறு என்கிறார்). திருக்கோவிலூரில் இருந்து ஆதி திருவரங்கம் வரையில் கோவிலுக்கு சொந்தமாக ஆதிகாலத்தில் 400 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தது. இது காலப்போக்கில் குறைந்து 100 ஏக்கராக சுருங்கிவிட்டது.
மன்னர்கள் காலத்தில் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட மானிய நிலங்களில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் விளைச்சலில் 'ஆறில் ஒரு பங்கு' தானியத்தைக் கோவிலுக்கு வரியாக கொடுக்க வேண்டும். அப்படி கிடைக்கும் தானியங்களை சேமித்து வைப்பதற்காக மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான் இந்த களஞ்சியம்.
வரி மூலமாக கிடைக்கும் நெல், வரகு, கேழ்வரகு, கம்பு மாதிரியான தானியங்களை கனத்தம் கட்டி (களஞ்சியத்தின் சேமிக்கும் பகுதியில் தடுப்பு ஏற்படுத்துவது) வைத்திருந்தனர். களஞ்சியத்தினை மூன்று அறைகளாக பிரித்து அமைத்திருக்கின்றனர். இந்த களஞ்சியத்தில் சேமிக்கும் தானியத்தைக் கொண்டு கோவில்களில் வேலை செய்பவர்களுக்கு தானியங்களை சம்பளமாக கொடுத்துள்ளனர்.
எனக்கு விபரம் தெரிந்த பிறகு களஞ்சியத்தில் எந்தவிதமான தானியங்களையும் சேமித்து வைக்கவில்லை. என்னோட தாத்தா காலத்தில் தானியங்களை இந்த களஞ்சியத்தில் சேமித்து வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த களஞ்சியம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர். கோவில் மூலஸ்தானம் இருக்கும் பகுதிகளை தவிர மற்றப்பகுதிகள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர். இந்தக் கோவிலை வளர்த்துக்கட்டும் அளவுக்கு அந்தக் காலத்தில் நடுநாடு வளமாக இருந்திருக்கிறது. எங்கள் நாட்டின் விளைச்சலை சொல்லும் விதமாக இந்தக் களஞ்சியம் நிற்கிறது.
இதில் சுமார் 5000 களம் (ஒரு களம் 12 மரக்கால்) தானியங்களை சேமித்து வைக்கலாம் எனத் தாத்தா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது, களஞ்சியத்தில் சேமிக்கும் அளவுக்கு தானியங்கள் இல்லாததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் களஞ்சியம் சிதைந்துக்கொண்டே வருகிறது.
பாரம்பரிய விவசாயத்தோட அருமையை சொல்லும் இந்த களஞ்சியத்தை பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுத்தால் பின்னாடி வர்ற சந்ததிகளுக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கும்" என்று கோரிக்கை வைத்தார்.
திருத்தல வரலாறு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம். இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. முதல்யுகம் மற்றும் முதலவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது. இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்கதர்களுக்கு வழங்குகிறது. அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம்.
இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர். போகம் என்றால் மகிழ்ச்சி (சந்தோசம்) எனப் பொருள். அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது. அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியிள்ளார். அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீதி வைத்துள்ளார். அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார். அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார். இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.
வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறுள்ளது. இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்னையும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.
பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.
கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் 'கிருஷ்ணாரண்யம்' என்றும் பெயர் பெற்றது. தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும். காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு, இது பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்துள்ளது. பக்தர்கள் பலி பீடத்தில் இருந்தே கிருஷ்ணரை சேவித்துக் கொள்கிறார்கள். இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.
தென்பெண்ணை ஆற்றின் தென் கரையோரம் மேட்டுப் பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இதன் தோற்ற மும் இதை உராய்ந் தாற்போல வடக் கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சி யாய் இன்பம் அளிக்கிறது.
நைவேத்தியம்
ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமிக்கு தினமும் நைவேத்தியமாக சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. மற்றபடி உபயதாரர்கள் ஆலய நிர்வாக முடிவுபடி நைவேத்தயங்கள் படைக்கப்படுவது உண்டு.
கோவில் விழாக்கள்
சித்திரை (ஏப்ரல்)- பத்து நாள் வசந்தோற்சவம்
வைகாசி (மே)- வைகாசி விசாகம் ஆனி (ஜூன்)- சந்தன தைலத்தால் எண்ணெய் காப்பு- ஆனித்திருமஞ்சனம், ஆடி (ஜூலை): பெண்ணெ நதிக்கரையில் ஆடிப்பெருக்கு, ஆவணி (ஆகஸ்டு)- கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி (அக்டோபர்)- நவராத்திரி மண்டபத்தில் நவராத்திரி, ஐப்பசி (நவம்பர்)- தீபாவளி, கார்த்திகை (டிசம்பர்)- கார்த்திகை தீபம், மார்கழி (ஜனவரி)- திருப்பாவை, தெருபஜனைகள், பரமபதவாசல் திறப்பு. மாசி (மார்ச்)- கெடிலம் ஆறு ஆரம்ப இடமான 30 கி.மீ. தொலைவில் உள்ள மையனூர் கிராமம் சென்று கருட தீர்த்தம் கொண்டு வந்து உற்சவருக்கு அபிஷேகம், வீதி உலா கோயிலுக்கு திரும்புதல். பங்குனி- பிரம்மோற்சவம்.
செல்வது எப்படி?
ஆதிதிருவரங்கம் ஆலயம் திருக்கோவிலூர் அருகே அமைந்துள்ளது. திருக்கோவிலூர் நகரத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ்&ரெயில்கள் உள்ளன. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலையில் இருந்து நிறைய பஸ்கள் திருக்கோவிலூருக்கு செல்கின்றன. எனவே ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு செல்பவர்கள் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி சென்று மிக எளிதாக செல்ல முடியும். சென்னையில் இருந்து செல்பவர்களுக்கு நேடியாக திருக்கோவிலூருக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. இல்லையெனில் விழுப்புரம் சென்று போகலாம்.
சென்னையில் இருந்து காரில் செல்பவர்கள் விழுப்புரம் கடந்ததும் வலது பக்கத்தில் பிரியும் சாலை வழியாக சென்றால் எளிதாக திருக்கோவிலூர் சென்றடைய முடியும். விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் 38 கி.மீ. தொலைவில் உள்ளது. கூகுள் பார்த்து செல்ல நினைக்காதீர்கள். ஏனெனில் விழுப்புரம் கடந்த பிறகும் கூகுள் சில சமயங்களில் தொலைவான பாதையை காட்டுகிறது.
எனவே விழுப்புரம் கடந்ததும் வலது பக்கம் திரும்பும் சாலையை அந்த பகுதியில் இருப்பவர்களில் கேட்டு தெரிந்து கொண்டு செல்வது நல்லது. விழுப்புரத்தில் இருந்து 2 வழிகளில் திருக்கோவிலூருக்கு செல்லலாம். விழுப்புரம் நெருங்கிய இடது பக்கத்தில் ஓட்டல் அண்ணாமலை வரும். அதையொட்டி பாதையில் விழுப்புரம் நகருக்குள் சென்றால் அங்கிருந்து மாம்பழப்பட்டு காரணை, முகையூர் வழியாக எளிதாக திருக்கோவிலூருக்கு செல்ல முடியும்.
மற்றொரு பாதையும் இருக்கிறது. அதை தென்பெண்ணை ஆறு ஒட்டியே செல்லும். அதுவும் பாதை நன்றாக இருக்கிறது. இந்த 2 வழிகளிலும் திருக்கோவிலூர் செல்லலாம். அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் ஆதிதிருவரங்கம் ஆலயம் இருக்கிறது. திருக்கோவிலூரில் இருந்து டவுன் பஸ், ஆட்டோக்கள் இருக்கிறது. சமீபத்தில் கொங்கு மண்டல பகுதிகளை இணைக்கும் வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது.
- மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.
சுவாமி : தேவி கருமாரியம்மன்.
தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்.
தலவிருட்சம் : கருவேல மரம்.
தலச்சிறப்பு :
இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு. ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு நிகழ்ச்சியாக செய்யப்படுகின்றது.
மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு. இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் தீர்த்தல், வியாதி, வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக நம்பப்படுகிறது.
தல வரலாறு :
அந்த காலத்தில் வெள்வேல மரங்கள் இவ்விடத்தில் அதிகம். எனவே வேற்காடு எனப்பெயர் பூண்டது. நான் மறைகளே வெள்வேல மரங்களாகி நின்ற வரலாறு இதோ! வெள்ளத்தால் உலகம் ஒரு முறை அழிவுற்றது. சிவன் உலகை மீண்டும் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியது, பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள்.
அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் உலகம் இயங்க ஆரம்பமானது. வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. தேவர்கள் தோன்றிய இவ்விடத்தின் ஒரு பகுதி 'தேவர் கண்ட மடு' என்று அழைக்கப்படுகிறது. இதுவே திருவேற்காடு வரலாறு. இந்த திருவேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் : ஆறு கால பூஜை, (குறிப்பு:- அர்த்தஜாம பூஜை ஞாயிறு இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது)
திருவிழாக்கள் :
சித்ராபௌர்ணமி,
ஆடித் திருவிழா(12 வாரங்கள்),
தைப்பூசம்,
மாசிமகம்,
ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
கோவில் முகவரி :
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்,
திருவேற்காடு – 600 077,
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம்.
- இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் திருத்தலத்தில் உள்ளது, லலிதாம்பிகை உடனாய மேகநாத சுவாமி திருக்கோவில். இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்கர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அருள்கிறார். கோவிலுக்குள் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் லலிதாம்பிகை சன்னிதி இருக்கிறது. கருவறையில் வீற்றிருக்கும் லலிதாம்பிகை, வலது காலை மடக்கி, இடது காலை தொங்க விட்ட நிலையில், அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த அன்னைக்கு லலிதா சகஸ்ரநாமம், லலிதா நவரத்ன மாலை படித்து வழிபட்டால், அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்கிறார்கள்.
இந்த லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது. அதுபற்றி இங்கே பார்ப்போம். திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் சன்னிதியில் நடத்தப்படும் நெய்க்குள தரிசனம் வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படும். அவை, வைகாசி மாத பவுர்ணமி தினம், நவராத்தி விழா கொண்டாடப்படும் இறுதி நாளான விஜயதசமி மற்றும் மாசி மாதத்தில் அஷ்டமி யும், நவமியும் இணையும் தினம் ஆகியவையாகும்.
இந்த தினங்களில் லலிதாம்பிகையின் சன்னிதிக்கு முன்பாக 15 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி வைப்பார்கள். அதன் இரு மருங் கிலும் மட்டை மற்றும் தென்னை ஓலைகளைக் கொண்டு அணைபோடுவார்கள். 15 அடி நீளமும் மூன்று பாகமாக பிரிக்கப்படும். அம்பாளின் சன்னிதி முன்பாக அமைந்த முதல் பாகத்தில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம், அடுத்ததாக புளியோதரை, இறுதியாக தயிர் சாதம் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கலின் நடுவே குளம் போன்று அமைத்து, அதில் அதிக அளவு நெய்யை ஊற்றுவார். இதனால் அதற்கு 'நெய்க்குளம்' என்று பெயர்.
லலிதாம்பிகைக்கு அபிஷேகம் முடிந்ததும் திரையிடப்பட்டு அலங்காரங்கள் செய்யப்படும். அதன்பின்னர் திரையை விலக்கும் போது, நெய்க்குளத்தில் அன்னையின் அலங்கார ரூபம் தெரியும். இதனை 'நெய்க்குள தரிசனம்' என்பார்கள். இந்த தரிசனத்தைக் காணும் பக்தர்களின் வாழ்வில் துன்பங்கள் விலகும். மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
திருவாரூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்காலில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, திருமீயச்சூர் திருத்தலம்.
- ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார்.
- விழுப்புரம் அடுத்த தீவனூரில் நெற்குத்தி விநாயகர், லிங்க வடிவில் அருள்கிறார்.
மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது, திருபுவனம் கோட்டை. இங்கு விநாயக கோரக்கர் அருள்பாலிக்கிறார். நோய்களை தீர்ப்பதிலும், சனி தோஷம் நீக்குவதிலும் இந்த விநாயகர் வல்லவர். விநாயகர் வடிவத்தில், கோரக்க சித்தர் அருள்பாலிப்பதால் இவருக்கு 'கோரக்க விநாயகர்' என்று பெயர்.
ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன புண்ணிய காலங்களில் இந்த விநாயகரின் தெற்குப் பகுதியிலும் உத்திராயன காலங்களில் வடக்குப் பகுதியிலும் தன்னுடைய கதிர்களைப் பாய்ச்சி, சூரியன் இந்த விநாயகரை வணங்குகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் சிவலிங்க ஆவுடையாரின் மேல், வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திசையை நோக்கி விநாயகர் வீற்றிருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ளது, மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்துப் போகும் காலங்களில், இவரது உடலில் மிளகை அரைத்துத் தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.
விழுப்புரம் அடுத்த தீவனூரில் நெற்குத்தி விநாயகர், லிங்க வடிவில் அருள்கிறார். இந்த லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.
நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது, ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவரது சன்னிதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இங்கு சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள், நடராஜப் பெருமானுடன் பஞ்சமுக ஹேரம்ப கணபதி திருவீதியுலா வருகிறார்.
கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோவிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதி வீற்றிருக்கிறார். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.
சிதம்பரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது, திருநாரையூர். இங்கு நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த பொள்ளாப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர் இவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார் என்பது, இவரது பெயரின் விளக்கம் ஆகும்.
- கள்ள சத்தியம் செய்தால் அம்மன் கடுங்கோபம் கொள்வாள் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.
- ஆண்டு தோறும் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா நடக்கிறது.
கொட்டாரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெருமாள்புரத்தில் வெட்டிமுறிச்சான் இசக்கிஅம்மன் கோவில் உள்ளது. முன்பு இந்த கோவில் தெற்கு கிழக்காக சிறிய கோவிலாக இருந்தது. கோவிலில் குடிகொண்டிருந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். அப்போது திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம்திருநாள் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இந்த கோவில் வழியாக பேச்சிப்பாறை கால்வாய் வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த இடத்தை பார்வையிட தலைமை பொறி யாளர் மூக்கன்துரை என்ற ஆங்கிலேயர் வந்தார்.
கால்வாய் வெட்ட கோவில் ஆலமரம் இடையூறாக இருப்பதாக கருதிய அவர் அதை வெட்டி அகற்ற முடிவு செய்தார். இதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலின் சக்தியை மூக்கன்துரைக்கு எடுத்துரைத்தனர். அம்மன் சிறப்பை கேட்ட மூக்கன்துரை, நான் கூப்பிட்டால் அம்மன் வருவாளா? என் குரலுக்கு பதில் குரல் தருவாளா? என்று மேட்டு அம்மா என்று அழைத்ததாகவும் அதற்கு அன்னையிடம் இருந்து பதில் குரல் வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அன்னையின் குரல் தூரத்தில்தான் கேட்கிறது. எனவே மரத்தை வெட்டியே ஆக வேண்டும் என்று மூக்கன்துரை தனது பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பணியாளர்கள் மரத்தை வெட்டினார்கள். அப்போது அதிசயம் நடந்தது. வெட்டப்பட்ட மரத்தில் இருந்து ரத்தம் வடிந்ததாகவும் மரத்தை வெட்டியவர்களில் சிலர் இறக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் வருந்திய மூக்கன்துரை இதை மன்னரின் பார்வைக்கு கொண்டு சென்றார். தகவல் அறிந்த மன்னர் கால்வாய் வெட்டும் திட்டத்தை கைவிட்டார்.
அத்துடன் தற்போது இருக்கும் கோவிலின் உள்பகுதியை கட்டிக்கொடுத்து தேவியை புதிய கோவிலுக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். ஆனால் இருப்பிடத்தை மாற்றக்கூடாது என்று மகாராஜாவின் கனவில் அன்னை கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அன்னை அமர்ந்திருக்கும் ஆலமரத்தின் வேர்களுக்கு மேல் செங்கல் அடுக்கி சுவர் எழுப்பப்பட்டது.
தற்போது பல ஆண்டுகள் ஆகியும் சுவருக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் இருப்பது அன்னையின் அருளை காண்பிக்கிறது. இந்தப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் சத்தியத்தை காப்பாற்ற தவறு இழைக்கிறவர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய சொல்வார்கள். கள்ள சத்தியம் செய்தால் அம்மன் கடுங்கோபம் கொள்வாள் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.
இங்கு வாரத்துக்கு 2 நாள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள். இந்துக்கள் மட்டும் அல்லாமல் வேறு மதத்தினரும் வந்து வழிபட்டு செல்வது சிறப்பு. இந்த அம்மை கேரளாவில் சோட்டாணிக்கரை பகவதிஅம்மன் கோவிலுக்கு இந்த கோவில் ஒப்பானது.
வெள்ளைக்கார என்ஜீனியர் மூக்கன்துரை முன்னிலையில் மரம் வெட்டப்பட்டதை நினை வுபடுத்தியே இந்த கோவில் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் பழைய கோவிலில் மதியம் 12 மணிக்கு பூஜையும், புதிய கோவிலில் 1 மணிக்கு பூஜையும் நடக்கிறது. அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடைசி வெள்ளிக்கிழமை அன்று இரவில் சிறப்பு பூஜை முடிந்ததும் சமபந்தி விருந்து நடக்கிறது.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா நடக்கிறது. கார்த்திகை மாத கடைசி வெள்ளி அன்று சிறப்பு கொடை நடக்கிறது.
- இத்தலத்திற்கு குரங்கணில் முட்டம் என்ற மறறொரு பெயரும் உள்ளது.
- வருகிற 8-ந்தேதி இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில், பாலாற்றின் தென்கரைத் தலமாக அமைந்துள்ளது, குரங்கணில் முட்டம். பொதுவாக ஊர்களின் பெயர்கள், அந்த தலத்தை வழிபட்டவர்கள் பெயரைக் கொண்டு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையிலே குரங்கு, அணில், காகம் என மூன்று உயிரினங்கள் வழிபட்டு பேறு பெற்றதால், 'குரங்கணில் முட்டம்' என இந்த தலம் வழங்கப்படுகின்றது.
வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும், தங்களின் முன்வினைப் பயனால் பறவை மற்றும் விலங்கு களாக பிறக்க நேர்ந்தது. அதன்படி வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர். தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலைநாதனை வேண்டி நின்றனர். காஞ்சிபுரத்திற்கு தெற்கே உள்ள சிவாலயம் சென்று வழிபட்டால், அவர்களுடைய வினைப் பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்பலாம் என இறைவன் வழிகாட்டினார்.
அதன்படியே மூவரும் இங்கு வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம். இப்படி குரங்கு, அணில், காகம் வழிபட்டு பேறு பெற்ற தலமாக திகழ்வது, குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் எனும் சிவாலயமாகும். தொண்டை நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஆறாவது தலமாக குரங்கணில்முட்டம் திகழ்கின்றது. கிருஷ்ணதேவராயர், சம்புவராயர் எனப் பல்வேறு மன்னர்களாலும் போற்றப்பட்ட தலமாகவும் இது விளங்குகின்றது.
திருமாகறலில் இருந்து கச்சியம்பதி நோக்கிச் செல்லும் வழியில், இத்திருக் கோவிலின் பெருமையறிந்து வருகை தந்த, திருஞானசம்பந்தர் பதிகம் பாடினார்.
"...கொய்யார் மலர்சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே"
என்கின்றார் திருஞானசம்பந்தர்.
இத்தல இறைவனான வாலீஸ்வரர், மேற்கு நோக்கியபடி எளிய வடிவில் கம்பீரத்துடன் காட்சி தருகின்றார். இவரே 'கொய்யாமலர்நாதர்' என்றும், மலைமீது சுயம்புவாக தோன்றியதால் 'கொய்யாமலைநாதர்' என்றும் அழைக்கப்படுகின்றார். கருவறையில் வழக்கமாக காணப்படும் துவாரபாலகர்களுக்குப் பதிலாக, வலம்புரி விநாயகரும், முருகப்பெருமானும் அமைந்துள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டால், முன்வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இறைவனின் கருவறைக்கு வெளியே வலதுபுறம் அன்னையின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னையின் திருப்பெயர், 'இறையார் வளையம்மை' என்பதாகும். அன்னை சிறிய வடிவில் எழிலான கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அன்னையின் பெயரை 'இறையார் வளையாளை ஓர் பாகத்து அடக்கி..' என்ற பாடல் வரிகளால் திருஞானசம்பந்தர் உறுதி செய்கிறார். இவ்வாலயத்தின் தல மரமாக இலந்தை மரமும், தீர்த்தமாக பிறைச்சந்திர வடிவில் காகம் தன் அலகால் கீரிய 'காக்கை மடு'வும் விளங்குகின்றன.
சுமார் 27 ஆண்டுகளுக்குப்பின், வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
அமைவிடம்
காஞ்சிபுரம்-செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து தெற்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் தூசி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் குரங்கணில் முட்டம் ஊர் இருக்கிறது.
-பனையபுரம் அதியமான்
- இந்த கோவில் தொடர்பான கதை சுசீந்திரம் தலப்புராணத்தில் உள்ளது.
- செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்படுகிறது.
குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த போது பத்மநாபபுரத்தில் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். பின்னர் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்ததும் நவராத்திரி விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த விழாவில் குமரி மாவட்டம் குமாரகோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய 3 சிலைகளும் பங்கேற்று வருகின்றன. ஆண்டு தோறும் இந்த 3 சாமி சிலைகளும் வெகுவிமரிசையான ஊர்வலத்துடன் திருவனந்தபுரம் சென்று வருகின்றன. கொரோனா பிரச்சினை இருந்த போதும் பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சாமி ஊர்வலம் நடைபெற்றது.
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும்போது அம்மனுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள். மேலும் போலீசாரின் பேண்டு வாத்தியமும் இடம்பெறும். இத்தகைய சிறப்புமிக்க முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளக் கரையில் உள்ளது.
இந்த கோவில் தொடர்பான கதை சுசீந்திரம் தலப்புராணத்தில் உள்ளது. லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய 3 பேரும் குழந்தை வடிவில் இருந்த தங்கள் கணவர்கள் மீண்டும் வடிவம் பெற கார்த்தியாயினி நோன்பு இருந்தபோது காட்சி கொடுத்த தாய்த் தெய்வம் இவள். கவுதமரின் சாபம் நீங்க இந்திரன் 300 கன்னியரை சாட்சியாக வைத்து பூஜித்தபோது தோன்றியவள் என்றும் கதைகள் கூறுகின்றன.
கோவில் வடக்கு பார்த்தது என்றாலும் தெற்கு வாசல் வழியே தான் பக்தர்கள் செல்ல முடியும். இதன் வழி சென்று தெற்கு வடக்காக அமைந்திருக்கும் கோவிலின் வடக்கு முன் மண்டபத்தை அடையலாம். கருவறையின் முன் அர்த்த மண்டபம் இருந்தாலும் முக மண்டபத்திலிருந்தே பக்தர்கள் இறைவியை தரிசிக்க முடியும். செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்படுகிறது.
நினைத்த காரியத்தை நிறைவேற்றுபவள் முன்னுதித்த நங்கை என்கிறார்கள். அந்த பகுதி பெண் பக்தர்கள். திருமண தடை மற்றும் குழந்தையில்லா பெண்கள் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள். பிறகு நேர்ச்சையாக உருவங்களையும், தொட்டில்களையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து விட்டு செல்கிறார்கள். முன்னுதித்த நங்கை அம்மனின் சிறப்புகளை அறிந்த நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ் கோபி, அம்மனின் தீவிர பக்தராகி விட்டார். நேரம் கிடைக்கும் வேளைகளில் கோவிலுக்கு வரும் அவர் அம்மனை தரிசித்து விட்டு செல்கிறார். மேலும் கோவிலில் சில நற்பணிகளையும் அவர் நிறைவேற்றி உள்ளார்.
மற்ற அம்மன் கோவில்களை போல் இங்கும் ஆடி மாதம் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அம்மனுக்கு வித, விதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு குழந்தை வடிவில் அலங்காரம் செய்யப்படுகிறது. ஆடி செவ்வாய்க்கிழமைளில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
தாணுமாலையன் கோவிலின் திருவிழாவிற்கும், இந்த கோவிலுக்கும் இடையேயான உறவு காலங்காலமாக தொடருகிறது. தாணுமாலையன் கோவில் திருவிழா ஆங்காரபலி இங்கே தான் நடக்கிறது. தேர்த்திருவிழாவிற்கு முந்திய நாள் இரவில் இங்கே பூஜை நடைபெறும்.
பூஜை விவரம்: காலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு பூஜை, 7 மணிக்கு பூஜை, மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 7 மணிக்கு பூஜை, 8 மணிக்கு நடை அடைப்பு.
- இக்கோவிலில் தான் சயன நரசிம்மர் சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார்.
- கருடாழ்வார் இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் அருள்பாலிக்கிறார்.
மூலவர் – சரநாராயணப்பெருமாள்
தாயார் – ஹேமாம் புஜவல்லித் தாயார், செங்கமலத்தாயார்
தல விருட்சம் – வில்வம்
தீர்த்தம் – கருட தீர்த்தம்
முன்பொரு சமயம் சிவபெருமான் திரிபுர அசுரர்களை போரிட்டு அழிக்க, தேவர்கள் தேர் ஒன்றினை படைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சூரிய, சந்திரர் தேரின் இரு சக்கரங்களாகவும், பூமி தேரின் தட்டாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும் பிரம்மன் தேர் ஓட்டுபவராகவும், விஷ்ணு அம்பாகவும் இருந்து சிவனுக்கு உதவினர் என்கிறது புராண நூல்கள். இதன் மூலம், சிவனுக்கு விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் "சரநாராயணப்பெருமாள்" என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
திருமாலின் திவ்வியத்திருத் தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.
எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
இங்கு தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. தாயாரின் திருநாமம் ஹேமாம்புஜ நாயகி, செங்கமலத்தாயார் என்பதாகும். ஒவ்வொரு உத்திரத்தன்றும் இவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மற்ற கோயில்களில் கைகூப்பிநிற்கும் கருடாழ்வார், இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாகப் புராணம் கூறுகிறது.
ஆயிரத்து 300 வருடங்களுக்கு முன்பு ஊரின் மட்டத்திற்கு கீழ் இந்த ஊர் "ஓம்" என்ற வடிவில் இருந்திருக்கிறது. இங்குள்ள பெருமாள் உப்பிலியப்பன் சீனிவாசனைப்போல், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் மிருகண்ட மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி. புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம்.
சரநாராயணப்பெருமாள், சயன நரசிம்மர், ஹேமாம்புஜ வல்லித்தாயார் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னிதி உள்ளது.
சரநாராயணப்பெருமாள் திருக்கோயில் உள்ள இடம் அதிகாபுரி க்ஷேத்திரம் ஆகும். விமானம் – நளினக விமானம். இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர். இவர் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருக்கோவிலூர் தேஹளீசப்பெருமாளால் அபிமானம் பெற்ற திருக்கோயில், நிகமாந்த மகா தேசிகரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். வில்லிபுத்தூரார் எழுதிய மகாபாரதத்தில் அர்ஜுனன் குருக்ஷேத்திரப்போர் முடிந்து, பிராயச்சித்தத்திற்காக இங்கு வந்து வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. பிரமாண்ட புராணத்தில் இந்த பெருமாளைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் பல்லவ அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டது.
திருவிழா:
சித்திரை விசேஷ திருமஞ்சனம், வைகாசி வசந்த உற்சவம், ஆடி – ஒவ்வொரு வெள்ளியிலும் ஊஞ்சல் சேவை, ஆவணி – ஸ்ரீஜெயந்தி உற்சவம், புரட்டாசி – பெருமாள் புறப்பாடு, ஐப்பசி – தீபாவளி உற்சவம், கார்த்திகை – திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி – தனுர்மாத பூஜை, தை – உள் புறப்பாடு, மாசி – ஒரு நாள் மண்டகப்படி, பங்குனி – உத்திர திருமஞ்சனம் என மாதம் தோறும் ஒரு விழா.
கோரிக்கைகள்:
இது ஓர் பிரார்த்தனை ஸ்தலமாகும். அமாவாசை வழிபாடு இக்கோயிலின் தனிச்சிறப்பு.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில்,
திருவதிகை,
கடலூர் மாவட்டம்.






