search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பெருகமணி ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில்
    X

    பெருகமணி ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில்

    • கருவறையில், ‘அகத்தீஸ்வரர்’ என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
    • இத்தல இறைவியின் திருநாமம், ‘ஆனந்தவல்லி’ என்பதாகும்.

    திருச்சியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருகமணி என்ற ஊர். இங்கு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

    பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் விலகி நிம்மதியாக வாழ்வதற்கு சித்தர்கள் மூலமாக சிவபெருமான் பல வழிகளைக் காட்டியுள்ளார். அவற்றில் ஒன்றுதான், இந்த பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் வழிபாடு.

    ஆம்.. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் கருவறையில், 'அகத்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். இத்தல இறைவியின் திருநாமம், 'ஆனந்தவல்லி' என்பதாகும். ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது.

    பல கோடி யுகங்களுக்கு முன்பாக சிவபெருமான், தமிழ் மொழியை முருகப்பெருமானுக்கு கற்றுத்தந்தார். முருகப்பெருமான், தமிழின் சுவையை சித்தர்களின் தலைவராக கருதப்படும் அகத்தியருக்கு போதித்தார். அத்தகைய சிறப்புமிக்க அகத்தியருக்குரிய 'ஓம் அகத்தீசாய நமக' என்ற குரு மந்திரத்தை நாம் ஜெபித்தால், அனைத்து விதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

    இந்த பூமியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களிலும் அகத்தியர், வழி பாடும், பூஜையும் செய்திருக்கிறார். தவிர, அகத்தியரால் உருவான ஆலயங்களும் ஏராளமாக இருக்கின்றன. அகத்தியரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் மூலவராக அமைந்த ஆலயங்களுக்கு 'அகத்தீஸ்வரர் கோவில்' என்றே பெயர் அமைந்திருக்கும்.

    அகத்தியர் சித்தர்களின் தலைவராகப் போற்றப்படுவது போல, பெண் சித்தர்களின் தலைவியாக அகத்தியரின் மனைவி லோபமுத்ரா போற்றப்படுகிறார். அகத்தியருக்கும், லோபமுத்ராவிற்கும் திருமணம் நடந்த இடமாகவே திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ள பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் திகழ்கிறது.

    ஒரு தலைசிறந்த சிவபக்தனை மணம் முடிக்க வேண்டும் என்று லோபமுத்ரா சபதம் எடுத்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்காக, அகத்தியர் பல்வேறு விதமான உபதேசங்களை, லோபமுத்ராவுக்கு வழங்கினார். அதன் முடிவாக, தான் எதிர்பார்த்த தலைசிறந்த சிவடினயார் அகத்தியர் என்பதை லோபமுத்ரா உணர்ந்துகொண்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் இங்கு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

    30 வயதைக் கடந்தும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் அன்று, இங்கே வருகை தருவது மேலும் சிறப்பான அருளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். அப்படி வரும் போது, இங்குள்ள மூலவருக்கும், அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப் பூ மாலை அணிவித்து ஒரு முகூர்த்த நேரம் (90 நிமிடங்கள்) பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் தலவிருட்சமான வில்வ மரத்தை, அகத்தியருக்கு பிடித்த 8 எண் இலக்கத்தை குறிக்கும் வகையில் எட்டின் மடங்குகளில் வலம் வர வேண்டும். அப்போது 'அகத்தீசாய நமக' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதற்கான பலனை திருமணமாகாதவர்கள், விரைவில் அடைவார்கள்.

    Next Story
    ×