என் மலர்
கோவில்கள்
- இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரணேற்று என்ற ஒரு திருவிழா நடத்தப்படுகிறது.
- பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள இன்னொரு பிரசித்திப் பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு தூக்க முடிப்புரை கோவிலும் ஒன்று. இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் இரண்டு தேவிகள் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். இதனால் இங்கு தேவிகள் வசிக்க இரண்டு கோவில்கள் உள்ளது.
ஒன்று வெங்கஞ்சி திருவிழா கோவில். மற்றொன்று திருவிழா நாட்களை தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அமர்ந்து ஆசி வழங்கும் வட்டவிளை மூலக்கோவில்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் மீன மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழா வில் பத்தாம் நாள் மீனபரணி நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது.
இதில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கோவில் குமரி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் இங்கு நடத்தப்படும் பூஜைகள் அனைத்தும் கேரள முறைப்படி நடத்தப்படுகிறது. கோவிலின் அமைப்பும் கேரள முறையில் தான் அமைந்துள்ளது.
குழந்தை பேறு இல்லாத தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்தால் அம்மனுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றுவதாக இங்கு வந்து வேண்டிக் கொள்வார்கள். இதேபோல குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழவும் வேண்டுவார்கள்.
திருமணமாகாத பெண்கள், திருமணம் நடக்க அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். அதன்படி வேண்டுதல் நிறைவேறியதும் தங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்து அந்தரத்தில் தொங்கியபடி கோவிலை வலம் வரும் நேர்ச்சைக்காரர்களிடம் கொடுத்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றுகிறார்கள்.
இதேபோன்று இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரணேற்று என்ற ஒரு திருவிழா நடத்தப்படுகிறது. இது கோவிலில் இருக்கும் தேவிகள் அசுரனை வதம் செய்யும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
இந்த கோவில் களியக்காவிளை பகுதியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், உச்சகடை பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. களியக்காவிளை பகுதியில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. திருவிழா நாட்களில் நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
ஆடி மாதம் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். மேலும் இந்த மாதத்தில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை மிகவும் விசேஷமானது. அதிகாலை வேளையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை அம்மன் முன்பு வைத்து பூஜை நடத்துவர். பின்னர் அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
மெய்சிலிர்க்க வைக்கும் தூக்க நேர்ச்சை
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை 10 நாட்கள் தூக்க திருவிழா நடக்கிறது. 4 மர சக்கரங்களுடன் கூடிய தேர் போன்று தூக்க வண்டி அமைந்திருக்கும். அந்த தூக்க வண்டியின் உச்சியில் நீளமான இரண்டு களை கம்புகள் (வில்) பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு வில்களின் நுனியிலும் குறுக்குவாட்டில் தலா இரண்டு மரச்சட்டங்கள் இருக்கும்.
தூக்க வண்டியில் இருப்போரை தூக்ககாரர்கள் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வண்டியிலும் 4 தூக்கக்காரர்களை மார்பிலும், இடுப்பிலும் துணியால் கட்டி அந்த மரச்சட்டங்களில் தொங்கவிடுவார்கள். தொங்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு நபரின் கைகளிலும் தலா ஒரு பச்சிளம் குழந்தை.
தூக்க நேர்ச்சை தொடங்கியதும் தூக்க வண்டியின் வில்களின் பின்பகுதியை கயிறால் கட்டி சிலர் கீழே இழுப்பார்கள். இதனால் முன்பகுதி சர்ரென மேலே போகிறது. அப்போது 4 தூக்கக்காரர்களும் குழந்தைகளுடன் 40 அடி உயரத்தில் மேலே தொங்குவார்கள். அப்போது சுற்றி நிற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலவையிட்டு பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் செண்டை மேளம் ஒலிக்க, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வடம் பிடித்து தூக்க வண்டியை கோவிலை சுற்றி இழுத்து வருவார்கள்.
அந்தரத்தில் குழந்தைகளுடன் தொங்கியபடியே அந்த 4 நபர்களும் கோவிலை ஒரு சுற்று சுற்றி முடிந்ததும் கீழே இறங்குவார்கள். பிறகு வேறு 4 நபர்களை தூக்க வண்டியில் கட்டி தொங்கவிட்டு அவர்களின் கைகளில் வேறு நான்கு குழந்தைகள் கொடுக்கப்படும். இப்படி அதிகாலையில் தொடங்கி இரவு வரை விடிய, விடிய தூக்க நேர்ச்சை நடைபெறும். இந்த காட்சியை காணும் பக்தர்களுக்கு மெய்சிலிர்க்கும். குழந்தைகளை அந்தரத்தில் தூக்கிச் சென்றபடி அம்மனை வழிபடுவதால் இந்த திருவிழாவுக்கு தூக்க நேர்ச்சை திருவிழா என்று பெயர்.
தூக்க காரர்கள் 4-ம் திருவிழா நாளில் இருந்தே விரதமிருக்க வேண்டும். கோவில் வளாகத்தில் தான் தங்க வேண்டும். அந்த 7 நாட்களும் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு எளிமையான உணவு வழங்கப்படும்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் வழிபாட்டு நேரம்
கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் மீனப்பரணி தூக்கத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடத்த ஒரு கோவிலும், தூக்க நேர்ச்சை திருவிழா நடத்த ஒரு கோவிலும் என தனித்தனியாக 2 கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் தினமும் நடைபெறும் பூஜை விபரம்:-
காலை 5.00 மணிக்கு நடை திறத்தல்
காலை 5.15 மணிக்கு நிர்மால்ய பூஜை, தொடர்ந்து கணபதி, சிவன் சன்னதியில் பூஜை,
பகல் 11.30 மணிக்கு உச்சபூஜை
மதியம் 12 மணிக்கு நடை அடைத்தல்
மாலை 5.00 மணிக்கு நடை திறத்தல்
மாலை 6.30 மாலை பூஜை
இரவு 7.30 அத்தாழ பூஜை
இக்கோவிலில் தமிழ் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை நடைபெறுகிறது.
மாதந்தோறும் வரும் பரணி நட்சத்திர நாளில் விசேஷ பூஜை நடைபெறும். தினசரி பூஜையை கோவில் பூசாரிகள் செய்யும் நிலையில் பரணி நட்சத்திர நாள் விசேஷ பூஜைகள் நடைபெறும். ஆவணி மாதம் 1-ந்தேதி அதிகாலை 4.50 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஓணம் திருநாளில் கோவிலைச் சுற்றி அம்மன் எழுந்தருளல் நடைபெறும். இக்கோவிலில் நேர்ச்சைகள் மற்றும் வழிபாடுகள் ஆன் லைனில் புக்கிங் செய்யப்படுகிறது.
- கம்பர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வணங்கி வந்தனர்.
- 150 ஆண்டுகள் கழித்து கம்பருக்கு அப்பகுதி மக்கள் கோவில் எழுப்பினர்.
கி.பி. 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ நாட்டில் தேரழுந்தூரில் கம்பர் வாழ்ந்து வந்தார். காளி கோவிலில் பூசாரியாக இருந்த அவருக்கு காளியின் அருளால் புலமை சிறப்பு ஏற்பட்டது. இதனால் அரசர்களின் நன்மதிப்பை பெற்றார். இந்நிலையில் கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் மகள் அமராவதியை காதலித்தார். இதனால் கோபமுற்ற சோழ மன்னன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை விதித்தார்.
இதை அறிந்த அமராவதி அம்பிகாபதியின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மகளை இறந்ததால் கோபம் கொண்ட சோழ மன்னன் கம்பரை நாடு கடத்த உத்தரவிட்டான். இதனால் கம்பர் பாண்டிய நாடு வந்தார். மகனை பிரிந்த சோகத்தால் எங்கும் தங்க மனம் இல்லாமல் சென்று கொண்டே இருந்தார். அவ்வாறு செல்லும்போது காளையார்கோவில் அருகே உள்ள முடிக்கரை ஜமீனை காண விரும்பினார்.
அதற்காக நாட்டரசன் கோட்டை அருகே உள்ள ஒத்தையடி பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தம்பிகளா இந்த வழி எங்கே போகிறது என கேட்டார். அதற்கு சிறுவர்கள் இந்த வழி எங்கும் போகாது நாம் தான் அந்த வழியாக போக வேண்டும் என்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கம்பரிடம் நீங்கள் எங்கே போக வேண்டும் என்று ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கேட்டனர். அதற்கு கம்பர் நான் முடிக்கரை போக வேண்டும் என்றார்.
உடனே சிறுவர்கள் அடிக்கரையை பற்றி போனால் முடிக்கரை செல்லலாம் என தெரிவித்தனர். உடனே கம்பர் தம்பிகளா நான் பெரிய கவி என நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் என்னை விட திறமைசாலிகளாக உள்ளீர்கள் என்று கூறி மீண்டும் வழியை கேட்டார். உடனே அந்த சிறுவர்கள் இந்த கண்மாயின் அடிக்கரையிலிருந்து கண்மாய் முடியும் வரை சென்றால் நீங்கள் கேட்கும் முடிக்கரை என்ற ஊர் வரும் என்றனர்.
ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் உள்ள புத்திக்கூர்மையை கண்ட கம்பர் இந்த மண்ணில் ஏதோ விசேஷம் உள்ளது என்று அங்கேயே தங்கினார். அந்த இடம்தான் இன்றைய நாட்டரசன்கோட்டை ஆகும். கம்பர் அப்பகுதி மக்களுக்கு இலவச சித்த வைத்தியம் செய்து கொண்டே இலக்கிய பணிகளை ஆற்றி வந்தார். பின்னர் ஒரு நாள் அவர் ஜீவ சமாதி ஆகினார். அதன் பின் அப்பகுதி மக்கள் கம்பரின் சேவையை போற்றும் வகையில் கம்பர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வணங்கி வந்தனர்.
150 ஆண்டுகள் கழித்து கம்பருக்கு அப்பகுதி மக்கள் கோவில் எழுப்பினர். தற்போது 5 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் தோட்டத்தின் நடுவே இருக்கும் அக்கோவில் கம்பரின் புகழ் பரப்பி வருகிறது. கோவிலின் உள்ளே பீடத்தின் மீது லிங்கமும் இருபுறமும் விநாயகர் சுவாமி சிலைகளும், பீடத்தின் எதிரே நந்தியும், வெளியே இருபுறமும் கோவிலை நிறுவிய தமிழ் சான்றோர்களின் சிலையும், பால தண்டாயுதபாணி சிலையும் உள்ளது.
கோவிலின் எதிரே கம்பர் விரும்பி போற்றி பாடிய அனுமனுக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகள் அறிவில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காக கம்பர் கோவில் வந்து இங்குள்ள மண்ணை எடுத்து தண்ணீரோடு சேர்த்து குழந்தைகளுக்கு தீர்த்தமாக கொடுக்கின்றனர். கம்பர் கம்பராமாயணத்தை கலியாண்டு 3986 சகாப்தம் 807 விசுவாவசு வருடம் அதாவது கி.பி.886-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி அஸ்த நட்சத்திர நாளில் அரங்கேற்றினார். அதனை நினைவூட்டும் வகையில் நாட்டரசன்கோட்டையில் கம்பர் கோவிலில் விழா நடந்து வருகிறது.
- இங்கு அம்பாள் நின்றும், இருந்தும், கிடந்தும் அருள்பாலிக்கிறாள்.
- ஸ்ரீ மஹா காலேஸ்வரர் 59 ¼ அடி உயரத்தில் தரிசனம் தருகிறார்.
சுவாமி : கூத்தப்பர் காளி.
தீர்த்தம் : அம்பாள் தீர்த்தம்-காளியாறு,சிவதீர்த்தம்-சிவகங்கை பாதாள கங்கை.
தலவிருட்சம் : மஹா வில்வம்.
தலச்சிறப்பு : உலகிலேயே மிக உயரமான ஸ்ரீ மஹா காலேஸ்வரர் 59 ¼ அடி உயரத்திலும்,ஸ்ரீ காளீஸ்வரி 54 ¼ அடி விஸ்வரூப தரிசனம் தருகிறார்கள்.விஸ்வரூப மஹாகாலீஸ்வரியின் திருப்பாதத்தின் கீழ் உள்ள பதினாறு படிகளும் பதினாறு செல்வங்களாக அமைந்துள்ளது.
இத்திருப்படியின் கீழ் உள்ள அறையில் கால ஜோதி சுடர் வீசிப் பிரகாசிக்கிறது. இங்கு அம்பாள் நின்றும், இருந்தும், கிடந்தும் அருள்பாலிக்கிறாள்.சக்தியினுடைய பஞ்ச பேதங்களையும் குறித்து ஐந்து சக்திகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இச்சா சக்திமஹாகாலேஸ்வரி,கிரியாசக்தி ப்ரத்யங்கிராதேவி,ஞானசக்தி குஹ்யகாளி,ஞானசக்தியின் திருமுன் ஞானலிங்கம்,பராசக்தி சிவமாயாதேவி,ஆதிசக்தி அரூப நிலையில் வனகாளியாகவும் உள்ளனர்,அஷ்ட காளிகள் பத்து பைரவர்கள் உள்ளனர்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை, மதியம் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருவெறும்பூர்.
கோயில் முகவரி : கூத்தப்பர் காளி கோவில்,கூத்தைப்பார், திருச்சி மாவட்டம்.
- தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று உள்ள ஒரே கோவில், கூத்தனூர் கோவில் தான்.
- பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி கோவிலில் விஜயதசமி நாளில் நடக்கிறது.
படைப்பு கடவுளான பிரம்மாவின் சக்தியாக வணங்கப்படுபவர் சரஸ்வதி. ரிக் வேதத்தில் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளார். வளமையை தருவதாகவும், படைப்புக்கு ஊக்கமாக இருப்பதாகவும், அனைத்தையும் தூய்மைப்படுத்துவதாகவும் நீரை குறிப்பிடுகிறார்கள்.
ஆறாக (நீராக) உருவகிக்கப்படும் சரஸ்வதி தேவி படைப்பின் சக்தியாவார். பேச்சுக்கலை, எழுத்துக்கலை என கலைகளுக்கெல்லாம் கடவுளாகவும் சரஸ்வதி தேவி வணங்கப்படுகிறார்.
அறிவு என்பது ஒளி. அறியாமை என்பது இருள். சரஸ்வதி தேவிக்கு பிடித்த வெண்மை நிறம், இருளை அகற்றும் வல்லமை உடையது. அவ்வாறே அறியாமை இருளை அறிவு, ஆற்றலால் அகற்றி சரஸ்வதி தேவியும் அருள்புரிகிறார். வெள்ளை ஆடை அணிந்து, வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கிறார் சரஸ்வதி தேவி. இவருக்கு என தனிக்கோவில்களை காண்பது அரிது.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்துக்கு அருகே கூத்தனூரில் சரஸ்வதி தேவிக்கு என தனிக்கோவில் உள்ளது. முன்புறம் 3 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கும் இக்கோவிலின் முன் மண்டபம் கலை வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது.
மூலவராக சரஸ்வதி தேவி அருள்பாலிக்கிறார். பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை தரிசிக்க கண் கோடி வேண்டும். அறிவு அருள் மலரும் அவருடைய கோலத்தை தரிசிக்க தரணி முழுவதிலும் இருந்தும் மக்கள் கூத்தனூரில் திரள்கிறார்கள். இங்கு உள்ள 'ருத்ர கங்கை'எனும் அரசலாற்றில் சரஸ்வதி ஆறு சங்கமித்ததாக தல வரலாறு கூறுகிறது.
இந்த ஊரை 2-ம் ராஜராஜ சோழன் தனது அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதாகவும், அதனால் இந்த ஊர் கூத்தனூர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கூத்தனூர் சரஸ்வதி தேவியை மகாகவி பாரதியாரும் தரிசனம் செய்து உளளார். கோவில் பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணியும் அருள்பாலிக்கிறார்கள். சரஸ்வதி தேவிக்கு முன்னால் உள்ள அன்ன வாகனத்தில் நர்த்தன விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும்.
பள்ளியில் சேர்க்கும் முன்பாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு அழைத்து வந்து நெல் மணியில் 'அ' எழுத பழகி கொடுக்கிறார்கள். இதற்காக பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி கோவிலில் விஜயதசமி நாளில் நடக்கிறது.
கல்வி வரம் தருபவராக சரஸ்வதி அம்மன் இங்கு அருள்பாலிப்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வு நாளில் அம்மனை தரிசிக்க தவறுவதே இல்லை. தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று உள்ள ஒரே கோவில், கூத்தனூர் கோவில் தான். சரஸ்வதிக்கு வேறு எங்கும் தனியாக கோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு குணமடைவது வழக்கமாக உள்ளது.
- நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும்.
தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை கிராமமான குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் திருநெல்வேலியில் இருந்து 68 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை படு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும். முத்தாரம்மன் வழிபாடு சிறப்பானது.
கிராமங்களில் அம்மைப் போடுவதை முத்து போடுவதாக கூறுவார்கள். அப்படி போட்டிருக்கும் 'முத்தை' (அம்மை நோயை) 'ஆற்ற'க்கூடிய அம்மன் என்பதால் 'முத்து ஆற்று அம்மன்' என்பது நாளடைவில் 'முத்தாரம்மன்' என கூறலாயிற்று. அதனால்அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு குணமடைவது வழக்கமாக உள்ளது.
கிட்டதட்ட 500 ஆண்டுகளுக்கு முன் மைலாடி என்னும் ஊரில் ஆசாரி ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன் தனக்கு சிலை செய்து அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் கொடுத்தனுப்புமாறு கூறினார். அதேபோல அர்ச்சகரின் கனவிலும் தோன்றி ஆசாரி தரும் சிலையை கொண்டு வந்து வைத்து வழிபடுமாறு கூறினார். அம்மன் கனவில் சொன்னது படியே அனைத்தும் நடந்தது. தன் உருவத்தை தானே வடிவமைத்துக் கொண்ட அம்பாளுக்கு இங்கே கோயிலமைத்து வழிபாட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தி யும் இருந்து அருள்பாலிக்கின்றனர். குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.
குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா பெரும் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் ஊர் முழுவதும் உள்ள ஆட்ட கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு தெருவெங்கும் நடன மாடி திருவிழா நடத்த வேண்டிய தொகையை வீடுகள்தோறும் காணிக்கையாக பிச்சையெடுப்பர். புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களைக்கட்டும். கொண்டாடி விட்டு 10-ம் நாள் விஜயதசமியன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
இந்த நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும். இதை தவிர ஆடிக்கொடை திருவிழா, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி போன்ற தினங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அம்மை நோய் கண்டவர்கள் நலமடைய இங்கே பிரார்த்திக்கின்றனர்.
மேலும் ஊனமுற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் சொத்துக்கள் இழந்தவர்கள், வியாபாரம் விருத்தியடைய விரும்புபவர்கள் ஆகியோரும் மாவிளக்கு பூஜை, அங்க பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்தல் என தங்களால் இயன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பலன் அடைகின்றனர்.
- அம்பாளின் திருநாமம் ‘உலக நாயகி’ என்பதாகும்.
- ராமாயணத்துடன் தொடர்புடையதாக இந்தத் தலம் புகழப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித் திருப்பூர் செல்லும் சாலையில் உள்ளது, ஒலகடம் என்ற ஊர். இங்கு உலக விடங்கீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் 'உலகடம்' என்று இடம்பெற்றுள்ள இந்த ஊர், கி.பி. 12-ம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களின் ஆட்சியில் 'உலகவிடங்கம்' என்று வழங்கப்பட்டது. தற்போது இந்த ஊர் 'ஒலகடம்' எனப்படுகிறது. காவிரிக்கரையின் வட பகுதியில் அமைந்திருப்பதால் 'வடகரை உலக விடங்கம்' என்ற பெயரும் இதற்கு உண்டு.
இத்தல இறைவன் 'உலகேஸ்வரர், ஒலகேஸ்வரர், உலக விடங்கீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் 'உலக நாயகி' என்பதாகும். 'விடங்கர்' என்றால் 'உளியால் செதுக்கப்படாதவர்' என்று பொருள். இங்கு உள்ள ஈசன் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். உலக விடங்கர் உலக மக்களைக் காக்கும் பெருமைக்குரிய உலக ஈஸ்வரராக இங்கு திகழ்கிறார். ராமாயணத்துடன் தொடர்புடையதாக இந்தத் தலம் புகழப்படுகிறது.
லட்சுமணனின் உயிரைக் காப்பதற்காக இமயமலையில் இருந்து மூலிகைச் செடிகள் நிரம்பிய சஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு இந்த வழியாக பறந்து சென்றார், அனுமன்.
இந்த ஆலய இறைவன் இருக்கும் இடத்திற்கு மேலே பறந்தபோது, அனுமனின் கை அசைவற்று நின்று போனது. இதையடுத்து, கீழே சிவபெருமானின் திருத்தலம் இருப்பதை உணர்ந்து கொண்ட அனுமன், கீழே இறங்கி, மூன்று முறை இத்தல இறைவனின் இருப்பிடத்தை வலம் வந்து வழிபட்டு அதன் பிறகு புறப்பட்டுச் சென்றார் என்கிறது தல வரலாறு.
- இறைவன் கருவறையில் புஜங்க சயனத்தில் உள்ளார்.
- தாயார் கமலவல்லி அமர்ந்த கோலத்தில் காட்சி.
மூலவர் பெயர் - அப்பக்குடத்தான், அப்பால ரெங்கநாதன்
உலாப் படிமம் பெயர் - அப்பக்குடத்தான்
தாயார் / அம்மன் பெயர் - இந்திரா தேவி, கமலவல்லி
தலமரம் - புரசை
மாவட்டம் - தஞ்சாவூர்
திருவிழாக்கள் - பங்குனி உத்திரம் தேர், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, உறியடி உற்சவம்
அப்பக்குடத்தான் கோயிலில் சோழர், பாண்டியர், விஜயநகரர் போன்ற அரச மரபினர் ஆட்சிக்காலங்களில் பலரும் அளித்த கொடைகள் பற்றி கூறும் கல்வெட்டுகள் பல இடம் பெற்றுள்ளன. அவை அப்பாலரங்கனை 'திருப்பேர் நகரான்' என்றும், தாயாரை 'திருப்பேர் நகரான் நாச்சியார் பரிமளவில்லியார்' என்றும் குறிப்பிடுகின்றன.
விஜயநகர அரசு கால கல்வெட்டொன்றில் பரிமளவில்லியார்க்கும் செல்வருக்கும் (பெருமாளுக்கும்) சந்தி பூஜைகளுக்காக இரண்டு தூப பாத்திரம், செப்புக்குடம், மணி, திபஸஹஸ்ரதாரை, திருவந்திக்காப்புக் குடம், திருகுத்துவிளக்கு, படிக்கம், பஞ்சபாத்திரம், பாத்திர வேதிகை, தளிகை சமர்ப்பனை போன்ற பூஜா பாத்திரங்கள் அளித்தமையை பட்டியலிட்டு கூறுகின்றது. சோழர் கல்வெட்டுகளில் திருச்சடை முடி எனும் அருகிலுள்ள ஊரும், பிற்கால கல்வெட்டு ஒன்றில் வளம் பக்குடி குமார தேவராயன் என்பான் கடம்பங்குடி என்ற ஊரையும் திருப்பேர் நகரனான பள்ளிகொண்ட பெருமாளுக்கு திருவிடையாட்டமாக அளிக்கப் பெற்றமையை விவரிக்கின்றன.
விக்கிரம சோழ தேவர் கல்வெட்டொன்றில் காலம் பொல்லாததாய் ஊர் அழிந்து குடிமக்கள் எல்லாம் ஊரைவிட்டு ஓடிப்போன ஒரு சோதனையான காலத்திற்குப் பின்பு வாசுதேவன் ஸ்ரீதரபட்டன் என்பவர் முயற்சியால் மீண்டும் ஊர் மீட்சி பெற்றதும், சிவாலயத்திற்கும், வைணவ ஆலயத்திற்கும் அவர் செய்த அருந்தொண்டுகள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.
இறைவன் கருவறையில் புஜங்க சயனத்தில் உள்ளார். தாயார் கமலவல்லி அமர்ந்த கோலத்தில் காட்சி. உற்சவர் செப்புத் திருமேனிகள் உள்ளன.
நம்மாழ்வாரால் பாசுரஞ் சூட்டப்பட்ட இத்தலம் திருப்பேர் நகர் என்றால் யாருக்கும் தெரியாது. கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். இயற்கையின் அரவணைப்பில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள அழகான தலமாகும் இது. இத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்றும், ஸ்ரீரெங்கத்திற்கு முன்னதாக ஏற்பட்டதென்றும் அதனால் தான் கோயிலடி அதாவது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்துக் கொடுத்த ஸ்தலமென்பதால் கோவிலடி என பெயர் பெற்றதாக கர்ண பரம்பரை. பஞ்ச ரங்கம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்கங்களில் இதுவும் ஒன்று.
1. ஆதிரங்கம் - ஸ்ரீரெங்கப்பட்டினம் (மைசூர்) 2. அப்பால ரெங்கம் - திருப்பேர் நகர் 3. மத்தியரங்கம் – ஸ்ரீரெங்கம் 4. சதுர்த்தரங்கம் – கும்பகோணம் 5.பஞ்சரங்கம் - இந்தளூர் (மாயவரம்) இந்த பஞ்சரங்கத்தைப் பற்றி குறிப்பிடும்போது ஸ்ரீரங்கத்தை மத்தியரங்கம் என்று சொல்லுவதால் 5 இல் மத்திமமான 3வது இடத்தை ஸ்ரீரங்கம் பெற்றது.
எனவே அப்பாலரங்கம் ஸ்ரீரங்கத்தைவிட முன்னானது என்னும் கருத்தை ஒப்பலாம். நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் 33 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். நம்மாழ்வார் இப்பெருமானைப் பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச் சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது தான்.
இங்கு பெருமானுக்கு தினந்தோறும் இரவில் அப்பம் அமுது செய்துப் படைக்கப்படுகிறது. அப்பம் அமுது செய்து தினந்தோறும் படைக்கப்படும் திவ்ய தேசம் இது ஒன்றுதான். ஸ்ரீரெங்க ராஜ சரிதபாணம் என்னும் நூல் இத்தலம் பற்றிய குறிப்புக்களை கொடுக்கிறது. இத்தலமும், சூழ்ந்துள்ள இயற்கைக் காட்சிகளும் திருமங்கையாழ்வாரின் பாடல்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. காவிரிக் கரையில் ஒரு மேட்டின் மேல் அமைந்துள்ள இக்கோவில் தொலை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும், கொள்ளிட நதியில் ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பதற்கும் பேரழகு வாய்ந்தது.
ஆழ்வார்கள் ஒரு ஸ்தலத்தில் அனுபவிக்கும் பெருமாளை மற்றோர் ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்யும்போது மறக்கவொன்னா ஆற்றாமையால் மீண்டும் மங்களாசாசனம் செய்வது மரபும் வழக்கமுமாயிற்று. திருப்பேர் நகரில் வணங்கிப் போன பின்பும் அப்பக்குடத்தான் திருமங்கை மன்னனை விடாது பின் தொடர்கிறார். தம்மை விட்டு நீங்காத அந்த அர்ச்சாவதார சோதியை திருவெள்ளறை சென்று கண்டேன் என்று மீண்டும் மங்களாசாசனம் செய்கிறார்.
அமைவிடம்
அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில்,
திருப்பேர் நகர்,
கோயிலடி-613 105.
தஞ்சாவூர்.
தொலைபேசி - 04362-281488, 281304
- மூலவருக்கு ‘மகா தேவர்’ என்று பெயர்.
- இந்த ஆலயத்தில் அம்பாளுக்கு தனியாக சன்னிதி இல்லை.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரில் அமைந்துள்ளது, வைக்கத்தப்பன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. பகலிலும், இரவிலும் நடை சாத்தப்படும் போது, அர்ச்சகர் ஒருவர், நான்கு கோபுர வாசல்களிலும் வந்து, "யாரும் பசியாக இருக்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு, நடையை சாத்தும் வழக்கம் இருக்கிறது.
கரன் என்னும் அசுரன், முக்தி அடைய வேண்டும் என்பதற்காக கடும் தவம் இருந்தான். அவன் சிறந்த சிவ பக்தனும் ஆவான். அவன் முன்பாக தோன்றிய ஈசன், கரனிடம் மூன்று சிவலிங்கங் களைக் கொடுத்து "இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால் முக்தி கிடைக்கும்" என்று கூறினார். மேலும் கரனை பின் தொடர்ந்து செல்லும்படி, புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரையும் சிவபெருமான் அனுப்பிவைத்தார்.
ஒரு சிவலிங்கத்தை வலது கையிலும், மற்றொரு சிவலிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது சிவலிங்கத்தை தன்னுடைய வாயிலும் எடுத்துக் கொண்டு, தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான் கரன். சிறப்பான இடத்தை தேர்வு செய்து அதில் சிவலிங்கங்களை நிறுவ நினைத்த கரன், தன்னுடைய பயணத்தின்போது களைப்பை உணர்ந்தான். அதனால் கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தவன் தன்னுடைய வலது கையில் இருந்து சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்கு பிறகு, கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றபோது, அது இயலாமல் போனது.
சிவலிங்கம் அந்த இடத்திலேயே நிலைபெற்றுவிட்டதை உணர்ந்த கரன், அங்கு வந்த வியாக்ரபாதரிடம் அந்த சிவலிங்கத்திற்கு பூைஜ செய்து வழிபடும்படி கேட்டுக்கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்தபடி அங்கேயே தங்கிவிட்டார். கரன் அங்கிருந்து புறப்பட்டு, ஏற்றமானூர் என்ற இடத்தில் தன்னுடைய இடது கையில் இருந்த சிவலிங்கத்தையும், கடித்திருத்தி என்ற இடத்தில் தன்னுடைய வாயில் இருந்த சிவலிங்கத்தையும் நிறுவி வழிபட்டான். அதன்பலனாக அவனுக்கு முக்தி கிடைத்தது.
பிற்காலத்தில் பரசுராமர், வான் வழியில் வடதிசை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் கீழே பார்த்தார். அங்கு நாவல் பழ நிறத்தில் ஒரு சிவலிங்கம், நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் தென்பட்டது. அங்கு இறங்கிய பரசுராமர், அந்த சிவலிங்கத்திற்கு பீடம் ஒன்றை அமைத்து, அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடு செய்தார். அந்த சிவலிங்கம், கரன் என்ற அசுரனால், வலது கையில் எடுத்துவரப்பட்டு, வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் என்பது தெரியவந்தது. அதுவே வைக்கம் மகாதேவர் அருளும் ஆலய இறைவன் என்று பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.
இந்த ஆலயத்தின் கருவறையில் 2 அடி உயர பீடத்தின் மீது, 4 அடி உயரத்தில் சிவலிங்கமாக கிழக்கு நோக்கிய நிலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். மூலவரான இவருக்கு 'மகா தேவர்' என்று பெயர். வியாக்ரபாதர் வழிபட்ட காரணத்தால் 'வியாக்ரபுரீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. ஆனால் பக்தர்கள் அனைவரும் இவரை ஊரின் பெயரைக் கொண்டு 'வைக்கத்தப்பன்' என்றே அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் அம்பாளுக்கு தனியாக சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடை சாத்தப்படும் போது, கோவில் அர்ச்சகர் ஒருவர், ஆலயத்தின் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து "யாரும் பசியாக இருக்கிறீர்களா" என்று கேட்கும் பழக்கம் உள்ளது. அப்படி யாரேனும் 'பசியாக இருக்கிறேன்' என்று கூறினால், அவரை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று, அவருக்கு உணவிட்டு பின்தான் கோவில் நடையை சாத்த வேண்டும் என்ற முறை இருக்கிறது. இதை ஈசனின் கட்டளையாகவே இன்றும் அந்த ஆலயத்தில் பின்பற்றுகிறார்கள்.
- தலைமலை அய்யனார் கோவில் கருவறைக்கு வெளியே வெட்டவெளியில் தான் உள்ளார்.
- அய்யனாருக்கும், ஆதி சிவசங்கரிக்கும், பிரம்ம சக்திக்கும் வெட்டவெளியில்தான் பூஜை நடக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம், ராமநதி அணை பகுதி. இந்த அணைக்கு மேற்கே மலையில் ராமநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தலைமலை ஐய்யனார் கோவில். இவரை அந்த பகுதி மக்கள் 'தலைமலை அய்யன்' என்றும் அழைப்பார்கள். இந்த கோவிலின் வரலாற்றை பார்ப்போம்.
இந்தியாவில் பல மலைகள் இருந்தாலும் இமய மலையும், பொதிகை மலையும் தான் தலைசிறந்த, புகழ்பெற்ற மலைகளாகும். சிவன் - பார்வதி திருமணத்திற்கு அனைத்து முனிவர்களும், ஞானிகளும் இமயமலைக்கு வந்ததால், வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது. இதை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு செல்லுமாறு சிவபெருமான் கூறினார். இதை ஏற்று பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், இங்கு தலைமலை அய்யனாரையும், ஆதிசங்கரியான அம்பாளையும், பிரம்ம சக்தியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவருடன் தேரையர் சித்தர், கோரக்கர், மச்சமுனி, கலைக்கோட்டு மாமுனி ஆகியோரும் அங்கு தங்கி இருந்து தலைமலை அய்யனாரை வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதை அடுத்த, காட்டு வழியே வந்த ராமனும், லட்சுமணனும் அகத்தியரை சந்தித்தனர். அப்போது அகத்தியர், இத்தல அய்யனாரை ராமர் வழிபடும் முன், அவர் குளிப்பதற்காக ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி தான் ராமநதியாகும். அந்த ராமநதியில் குளித்து விட்டு ராமரும், லட்சுமணரும் தலைமலை அய்யானாரை வழிபட்டனர். அப்போது அகத்தியர், அம்பாளின் சக்தியை திரட்டி, ராவணனை வெல்வதற்காக ஒரு அம்பு தயாரித்து கொடுத்து, "இலங்கைக்கு சென்று ராவணனை வென்று சீதையை மீட்டு வருவாய்" என்று ஆசீர்வாதம் செய்தார்.
ராமநதியில் புனிதநீராடி தலைமலை அய்யனாரை மனதார வேண்டினால், அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தலைமலை அய்யனார் கோவில் அமைந்த வனப்பகுதிக்கு, ஒரு நிறைமாத கர்ப்பிணி விறகு பொறுக்க வந்தாள். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. உடனே அந்தப் பெண், தலைமலை அய்யனார் கோவில் கருவறைக்குள் மழைக்காக ஒதுங்கினாள். அதே நேரம் அவளுக்கு பிரசவ வலியும் ஏற்பட்டுவிட்டது. ஒரு ஆண் கருவறைக்குள் இருப்பது, கர்ப்பிணிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்று எண்ணிய அய்யனார், கருவறையை விட்டு வெளியேறினார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பெண்ணின் ரத்தவாடைக்கு, காட்டில் இருந்த கடுவாய் புலி அங்கு வந்தது. தாயையும், குழந்தையையும் அடித்து தின்ன முற்பட்டது. அப்போது அந்தப் பெண், 'அய்யனாரே' என்று சத்தம் போட்டாள். உடனே அய்யனார், கடுவாய் புலியை கல்லாக மாறும்படி சபித்தார். அந்த புலியின் கற்சிலையை இன்றும் ஆலயத்தில் காணலாம்.
அதே போல் கர்ப்பிணிக்கு இடம் கொடுத்த தலைமலை அய்யனார், கோவில் கருவறைக்கு வெளியே வெட்டவெளியில் தான் உள்ளார். அவர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அய்யனாருக்கும், ஆதி சிவசங்கரிக்கும், பிரம்ம சக்திக்கும் வெட்டவெளியில்தான் பூஜை நடக்கிறது. ராமநதி அணைப்பகுதியில் மழை பெய்யவில்லை என்றால், அந்த பகுதி மக்கள் தலைமலை அய்யனார் கோவிலுக்கு சென்று வருண ஜெபம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனால் உடனடியாக மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை.
தலைமலை சாஸ்தா அருகில் வனபேச்சி அம்மனுக்கும், கருப்பசாமிக்கும் தனியாக கோவில் உள்ளது. ராமநதியில் குளித்துவிட்டு இங்குள்ள கருப்பசாமியை 9 கடைசி வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். இந்த அய்யனாரை வழிபட்டு வேண்டுதல் நிறைவேறிய பின்னர், பக்தர்கள் அவருக்கு மணி செய்து கட்டுகிறார்கள். இதனால் கோவில் மரம், மண்டபம் முழுவதும் மணிகளாகவே காட்சி அளிக்கிறது. இந்த கோவில் அருகில் தோரணமலை முருகன் கோவில், சூட்சமுடையார் சாஸ்தா கோவில், வில்வவனநாத சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களும் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கடையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் ராமநதி அணை உள்ளது. அணை வரை கார், வேன், ஆட்டோ செல்லும். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் கோவிலுக்கு செல்லவேண்டும். பாவூர்சத்திரத்தில் இருந்து தோரணமலைக்கும், ராமநதி அணைக்கும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகிறது.
- இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள பழமையான கோவில் அழகம்மன் கோவில். வடிவு என்றால் அழகு. அதனுடன் ஈஸ்வரன் என்ற சொற்கள் இணைந்து வடிவீஸ்வரம் ஆனது என்றும் வடிவு ஈஸ்வரிபுரம் வடிவீஸ்வரம் ஆனது என்றும் கூறுகிறார்கள். பழையாற்றின் வலது கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.
திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் அம்மன் தெற்கு பார்த்து பக்தர்களுக்கு அருள் காட்சி தருகிறார். அம்மன் அருகே வலது புறத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி தருகிறார். சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு முன்பு நந்தி பகவானும், அவருக்கு அடுத்து நேர் எதிரே அழகிய கொடி மரமும் அமைந்துள்ளது. இந்த கொடிமரத்தின் இடது புறம் கொடி மர முருகரும், வலது புறமும் கொடி மர விநாயகரும் காட்சி அளிக்கிறார்கள். கொடி மரத்தின் மேல் பகுதியில் கோவிலின் தளத்தில் நவ கிரகங்கள் காட்சி அளிக்கிறது.
கொடிமரத்தை தரிசிப்பவர்கள் நவக்கிரகங்கள் மற்றும் முருகர், விநாயகரை தரிசித்து விட்டு சன்னதிக்குள் நுழையலாம். அதன் பிறகு அழகம்மன், சுந்தரேஸ்வரரின் அருள் காட்சியை தரிசிக்கலாம்.
இந்த கோவிலில் சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், நாகராஜர், சாஸ்தா, காசி விஸ்வநாதர், வள்ளி -தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், சந்திரன், ஸ்ரீதேவி- பூதேவியுடன் மகாவிஷ்ணு ஆகியோர் தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.
இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு பள்ளியறை பூஜை, 6.00 மணிக்கு அபிஷேகம், காலை 11 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு ஸ்ரீபலி, 8.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அழகம்மன் கோவிலில் ஆடி மாதம், ஆடி பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதே போல ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பூரம் ஆகிய வையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் மாசி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது தேரோட்டமும், 10-ம் நாளில் அம்மனுக்கு ஆராட்டும் நடைபெறும். ஐப்பசி மாதம் திருக்கல்யாணம், கந்தசஷ்டி விழா ஆகியவை நடைபெறுகிறது.
கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கள் கிழமை தோறும் கடை பிடிக்கப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது. அதே போல சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
மார்கழி மாதம் நடராஜருக்கு திருவாதிரை திருவிழாவும், ஆனி மாதம் நடராஜருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. அதே போல வருஷாபிஷேகம் மற்றும் புனர்பூசமும் சிறப்புடன் நடைபெறுகிறது. அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த 14-6-1991-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று உள்ளது. மேலும் 3 நிலைகளுடன் தெற்கு கோபுரமும் இங்கு அமைக்கப்பட்டது. இந்த கோவிலில் அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது. இந்த தெப்ப குளத்தின் கரையில் தான் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும்.
அழகம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தோஷம், தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். சுவாமி, அம்மன் தனி சன்னதியில் இங்கு காட்சியளிப்பதால் இங்கு வழிபாடு செய்யும் பெண் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும். தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.
- இந்த கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது.
- இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிரமாண்டமாக நடக்கும்.
குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலானது குமரி மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் மார்த்தாண்டம் - தேங்காய்பட்டினம் வழியில் பைங்குளம் சந்திப்பு அருகே அமைந்துள்ளது.
கோவில்செம்பன் என்னும் பெரியவர் தனது மகளுக்கு குழந்தை வரம் வேண்டி இப்பகுதியில் பீடம் அமைத்து வழிபட்டார்.
நாளடைவில் செம்பன் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. இந்த அதிசயத்தை செம்பன், மக்களிடையே பக்தி பரவசமாக சொல்ல தொடங்கியதை தொடர்ந்து ஊர் மக்கள் அப்பகுதிக்கு வந்து பத்திரகாளி அம்மனை வழிபட தொடங்கினர். பின்னர் பீடத்தை சுற்றி ஒரு சிறு கோவில் கட்டினர். காலரா நோயினால் பாதிக்கப்பட்ட தனது ஒரே குழந்தையை கண்டு கண் கலங்கிய தாய்ஒருவர் நம்பிக்கையுடன் இந்த ஆலயத்துக்கு வந்து கதறி அழுதார். இரவு அப்பெண்மணியின் கனவில் அம்மன் தோன்றி வலது கையால் குழந்தையை தடவி நோயில் இருந்து உன் குழந்தை குணமடைந்து விட்டான் என்று கூறி மறைந்தது. அம்மன் கனவில் கூறியபடி அந்த குழந்தைக்கு காலரா நோய் முற்றிலும் தீர்ந்தது.
அதன்பின்பு இக்கோவிலில் அம்மனின் அற்புதங்கள் ஏராளம் நடந்ததால் குமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிரமாண்டமாக நடக்கும். இந்த திருவிழாவில் நடைபெறும் பால்குட ஊர்வலமும், அம்மன் தென்வீதி ஆறாட்டும், 10-ம் நாள் திருவிழா அன்று நள்ளிரவில் நடைபெறும் போட்டி வாண வேடிக்கையும் பிரசித்தி பெற்றது.
குழந்தையில்லா தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலில் வழிபடுகிறார்கள். பின்னர் நேர்ச்சையாக வாழைக் குலைகளை வழங்குவர். மேலும் பால்குட நேர்ச்சை, பொங்கலிடுதல் உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்பார்கள்.
- ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது.
- அனுமன் 10 கரங்களுடன் காட்சி அளித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வடக்கு நோக்கிய சன்னதியில் நாற்கரங்களும் நெற்றிக்கண்ணும் உடைய திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார். இந்த ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது. ராஜகோபால சாமி கோவிலின் நுழைவு வாயிலில் மொட்டை கோபுரமே உள்ளது. நுழைவு வாயிலை அடுத்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன.
தென்கிழக்கு மூலையில் அக்னி திசையில் திருமடப்பள்ளி உள்ளது. தெற்கு பிரகாரத்தில் தாயார் சன்னதி உள்ளது. கருவறையில் செங்கமலவள்ளித் தாயார் எழுந்தருளியுள்ளார். கருடாழ்வாரை தரிசித்து மூலவர் பெருமாள் சன்னதிக்கு சென்ற பின் மகா மண்டபத்தில் உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்.
அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலின் வடக்கு பிரகாரத்தில் அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை தரிசனத்துக்கு எழுத்தருள செய்யும் கிழக்கு நோக்கிய மண்டபம் உள்ளது. இக்கோவில் கருவறையில் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவ பெருமாள் உள்ளார். இந்த மூலவருக்கு அருகே உற்சவர் ராஜகோபால பெருமாள், ருக்மணி-சத்யபாமாவுடன் அருள் பாலிக்கிறார்.
அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் எழுந்தருளி உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் 3 கண்களையும், 10 கரங்களையும் உடையவர். சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தி முதுகின் இரு பக்கங்களிலும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சி அளிக்கிறார். இதுபோன்ற ஆஞ்சநேயரின் திருமேனி இக்கோவிலில் மட்டுமே உள்ளது.
அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து கடந்த 1978-ம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய சாமி சிலைகள் கொள்ளை போனது. இந்த சிலைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இருந்து மீட்கப்பட்டு தற்போது இந்த கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். ஆனந்த வாழ்வு தரும் அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் தல வரலாறு மிகவும் பிரசித்தி பெற்றது.
இலங்கையில் யுத்தம் செய்து சீதையை மீட்டபின், புஷ்பக விமானத்தில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் ஆகியோர் ஆயோத்திக்கு திரும்பினர். வழியில் அவர்கள் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி விருந்துண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர், ராமபிரானிடம், ராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு உள்ளனர். அவர்களுள் இரக்தபிந்து, இரக்தராட்சசன் ஆகிய இருவரும் மிக கொடியவர்கள். அவர்கள் தற்போது கடலுக்கடியில் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவம் நிறைவேறினால் அவர்கள் ராவணனைப்போல பலம் பெற்றுவிடுவார்கள். எனவே உலக நன்மைக்காக அவர்களை நீங்கள் அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்ற ராமபிரான், அரக்கர்களை அழிக்க மாவீரனான அனுமனை பணித்தார். அனுமனோ, அழியாவரம் பெற்றவர். அளவில்லா ஆற்றல் உடையவர். இருப்பினும் அரக்கர்களை அழிக்க திருமால் தன் சங்கு சக்கரத்தையும் அனுமனுக்கு அளித்தார். பிரம்மா, பிரம்ம கபாலத்தை அனுமனுக்கு வழங்கினார். ருத்ரன் மழுவையும், ராமபிரான் வில்- அம்புகளையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும் வழங்கினா்.
இவ்வாறு தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களை தாங்கி அனுமன் 10 கரங்களுடன் காட்சி அளித்தார். அப்போது கருடாழ்வார் தன் இரு சிறகுகளையும் அவருக்கு தந்தார். கடைசியாக அங்கு வந்த சிவபெருமான், 10 கரங்களிலும் ஆயுதங்களுடன் நின்ற ஆஞ்சநேயரை கண்டு தான் என்ன தருவது என சிந்தித்து தனது 3-வது கண்ணை அனுமனுக்கு அளித்தார்.
3 கண்கள்(திரிநேத்ரம்), 10 கைகளுடன் வீர அனுமான் புறப்பட்டு சென்று கடலுக்கு அடியில் பதுங்கி தவம் செய்து கொண்டிருந்த இரக்தபிந்து, இரக்தராட்சசன் ஆகிய இருவரையும் சம்ஹாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமரை சந்திக்க வந்தார். வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பியுள்ள இடத்தை கண்ட அனுமன் ஆனந்த மிகுதியால் அங்கு தங்கினாா். அந்த இடமே அனந்தமங்கலமானது. இந்த கோவிலில் 6 கால பூஜை நடந்து வருகிறது. அமாவாசை தோறும் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், திருவராதனங்களுடன் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு செல்கின்றனர். மார்கழி மாதம் அமாவாசையின்போதும் சிறப்பு வழிபாடு மிகவும் பிரமாண்டமாக நடக்கிறது.
ஆஞ்சநேயர் வழிபாட்டின் பயன்கள்
* அனந்தமங்கலம் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமால், சிவபெருமான், பிரம்மன், ராமன், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பயன் கிடைக்கும்.
* சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம்.
* ஆஞ்சநேயர் வழிபாட்டால் அறிவு கூர்மையாகும்.
* உடல் வலிமை பெருகி மன உறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய்கள் நீங்கும்.
* வாக்கு வன்மை வளமாகும்.
நவக்கிரக njhஷம் நீக்கும் ஆஞ்சநேயர்
அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்ய வாசஸ்தலம் என்பதால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் வழிபடலாம். இருப்பினும் சில குறிப்பிட்ட காலங்களில் வழிபடும்போது அதிக பயனை பெறலாம். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை ஆஞ்சநேயருக்கு அவதாரத் திருநாள். அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் சிறப்பு.
மாதந்தோறும் அமாவாசை திதியிலும் மூல நட்சத்திரத்திலும் ஆஞ்சநேயரை வழிபட்டு் பயன்பெறலாம். ராகுகாலம், அஷ்டமி திதி ஆகிய தீய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கி கொள்ளலாம். வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை, எலுமிச்சம்பழ மாலை ஆகியவை அனுமனுக்கு உகந்தவை ஆகும். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் வெப்பம் பட்ட வெண்ணெய் போல் கரைந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அனுமனுக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்தும், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சுண்டல், வடைமாலை ஆகிய பிரசாதங்களை நைவேத்யம் செய்தும் பக்தர்களுக்கு வழங்கியும் நலம் பெறலாம். ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளதால் அவரை வழிபட்டால் நவக்கிரகங்களால் பாதிப்புகள் ஏற்படாது. உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், ஊழ்வினையால் துன்பப்படுபவர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டால் அல்லல் அகன்று ஆனந்தம் பெறுவர்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்க சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக திருக்கடையூருக்கு சென்று அங்கிருந்து அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். சென்னையில் இருந்து ரெயில் மூலம் வர வரும்பும் பக்தர்கள் சோழன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள்கள் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து அனந்தமங்கலத்துக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து பின்னர் அங்கிருந்து அனந்தமங்கலம் வந்து ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.






