search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அற்புதங்கள் நிகழ்த்திய வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவில்
    X

    அற்புதங்கள் நிகழ்த்திய வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவில்

    • கள்ள சத்தியம் செய்தால் அம்மன் கடுங்கோபம் கொள்வாள் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.
    • ஆண்டு தோறும் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா நடக்கிறது.

    கொட்டாரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெருமாள்புரத்தில் வெட்டிமுறிச்சான் இசக்கிஅம்மன் கோவில் உள்ளது. முன்பு இந்த கோவில் தெற்கு கிழக்காக சிறிய கோவிலாக இருந்தது. கோவிலில் குடிகொண்டிருந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். அப்போது திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம்திருநாள் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இந்த கோவில் வழியாக பேச்சிப்பாறை கால்வாய் வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த இடத்தை பார்வையிட தலைமை பொறி யாளர் மூக்கன்துரை என்ற ஆங்கிலேயர் வந்தார்.

    கால்வாய் வெட்ட கோவில் ஆலமரம் இடையூறாக இருப்பதாக கருதிய அவர் அதை வெட்டி அகற்ற முடிவு செய்தார். இதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலின் சக்தியை மூக்கன்துரைக்கு எடுத்துரைத்தனர். அம்மன் சிறப்பை கேட்ட மூக்கன்துரை, நான் கூப்பிட்டால் அம்மன் வருவாளா? என் குரலுக்கு பதில் குரல் தருவாளா? என்று மேட்டு அம்மா என்று அழைத்ததாகவும் அதற்கு அன்னையிடம் இருந்து பதில் குரல் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் அன்னையின் குரல் தூரத்தில்தான் கேட்கிறது. எனவே மரத்தை வெட்டியே ஆக வேண்டும் என்று மூக்கன்துரை தனது பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பணியாளர்கள் மரத்தை வெட்டினார்கள். அப்போது அதிசயம் நடந்தது. வெட்டப்பட்ட மரத்தில் இருந்து ரத்தம் வடிந்ததாகவும் மரத்தை வெட்டியவர்களில் சிலர் இறக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் வருந்திய மூக்கன்துரை இதை மன்னரின் பார்வைக்கு கொண்டு சென்றார். தகவல் அறிந்த மன்னர் கால்வாய் வெட்டும் திட்டத்தை கைவிட்டார்.

    அத்துடன் தற்போது இருக்கும் கோவிலின் உள்பகுதியை கட்டிக்கொடுத்து தேவியை புதிய கோவிலுக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். ஆனால் இருப்பிடத்தை மாற்றக்கூடாது என்று மகாராஜாவின் கனவில் அன்னை கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அன்னை அமர்ந்திருக்கும் ஆலமரத்தின் வேர்களுக்கு மேல் செங்கல் அடுக்கி சுவர் எழுப்பப்பட்டது.

    தற்போது பல ஆண்டுகள் ஆகியும் சுவருக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் இருப்பது அன்னையின் அருளை காண்பிக்கிறது. இந்தப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் சத்தியத்தை காப்பாற்ற தவறு இழைக்கிறவர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய சொல்வார்கள். கள்ள சத்தியம் செய்தால் அம்மன் கடுங்கோபம் கொள்வாள் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.

    இங்கு வாரத்துக்கு 2 நாள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள். இந்துக்கள் மட்டும் அல்லாமல் வேறு மதத்தினரும் வந்து வழிபட்டு செல்வது சிறப்பு. இந்த அம்மை கேரளாவில் சோட்டாணிக்கரை பகவதிஅம்மன் கோவிலுக்கு இந்த கோவில் ஒப்பானது.

    வெள்ளைக்கார என்ஜீனியர் மூக்கன்துரை முன்னிலையில் மரம் வெட்டப்பட்டதை நினை வுபடுத்தியே இந்த கோவில் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

    ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் பழைய கோவிலில் மதியம் 12 மணிக்கு பூஜையும், புதிய கோவிலில் 1 மணிக்கு பூஜையும் நடக்கிறது. அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடைசி வெள்ளிக்கிழமை அன்று இரவில் சிறப்பு பூஜை முடிந்ததும் சமபந்தி விருந்து நடக்கிறது.

    ஆண்டு தோறும் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா நடக்கிறது. கார்த்திகை மாத கடைசி வெள்ளி அன்று சிறப்பு கொடை நடக்கிறது.

    Next Story
    ×