search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பெரியநாயகி சமேத ஆபத்சகாயர் திருக்கோவில்
    X

    பெரியநாயகி சமேத ஆபத்சகாயர் திருக்கோவில்

    • கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
    • சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவ தலங்களில், இது 50-வது தலம் ஆகும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பழனம் என்ற ஊரில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத ஆபத்சகாயர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவ தலங்களில், இது 50-வது தலம் ஆகும். தேவாரப் பாடல்பெற்ற காவிரிக்கரை தலங்களிலும் இது 50-வது தலமாகும்.

    தஞ்சாவூரை சுற்றி அமைந்த 'சப்த ஸ்தான தல'ங்களில் இது இரண்டாவது தலமாகும்.

    மூலவர்: ஆபத்சகாயர்

    அம்மன்: பெரியநாயகி

    தல விருட்சம்: கதலி (வாழை), வில்வம்

    தீர்த்தம்: மங்கள தீர்த்தம், காவிரி

    முன்காலத்தில் இப்பகுதி கதலி வாழை நிறைந்த வனமாக இருந்துள்ளது. எனவே 'கதலி வனம்' என்ற பெயரும் உண்டு.

    ஒரு சமயம் அந்தணச் சிறுவன் ஒருவனை, எமதருமன் பின்தொடர்ந்தான். பயந்துபோன சிறுவன் இந்த ஆலய இறைவனிடம் தஞ்சம் புகுந்தான். இறைவன் அச்சிறுவனுக்கு காட்சியளித்து எமதர்மனிடம் இருந்து காத்தருளினார். ஆகையால் இத்தல இறைவனுக்கு 'ஆபத்சகாயர்' என்று பெயர்.

    இங்கு அருளும் மூலவரான ஆபத்சகாயர், சுயம்பு லிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். புரட்டாசி, பங்குனி மாத பவுர்ணமி தினங்களுக்கு முன்பின் இரண்டு தினங்கள், சந்திரனின் ஒளி இத்தல இறைவன் மீது விழுகிறது.

    இந்த ஆலய இறைவனை சந்திரன், குபேரன், திருமால், திருமகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

    இந்த ஆலயத்தின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளை கொண்டது. இவ்வாலயத்தில் பலிபீடம் உள்ளது. ஆனால் கொடிமரம் இல்லை.

    ஏழூர் சப்தஸ்தான விழா, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

    வெளிப்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னிதிகள் உள்ளன. தவிர, சப்த மாதர்கள், வேணுகோபாலர், பல்வேறு பெயர்களில் சிவலிங்கங்கள், நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

    தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருப்பழனம் ஊர் உள்ளது.

    Next Story
    ×