search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    வளமான வாழ்வருளும் வைரவன்பட்டி வைரவன் திருக்கோவில்-சிவகங்கை
    X

    வளமான வாழ்வருளும் வைரவன்பட்டி வைரவன் திருக்கோவில்-சிவகங்கை

    • இத்தலம் பைரவரின் இதய தலமாக விளங்குவதாக சொல்கிறார்கள்.
    • பைரவ தீர்த்தம், வடுக தீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்குளம் உள்ளது.

    பழம்பெருமை வாய்ந்த இந்தத் தலம் வீரபாண்டியபுரம் என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இத்தலத்திற்கு மேலும் வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன்மூதூர், வயிரவநகர், வயிரவமாபுரம் எனவும் பல்வேறு பெயர்கள் உள்ளன.

    தல மூர்த்தி: வளரொளிநாதர் (வைரவன்)

    தல இறைவி: வடிவுடையம்பாள்

    தல விருட்சம்: அழிஞ்சில் மரம் (ஏறழிஞ்சில்)

    தல தீர்த்தம்: வைரவர் தீர்த்தம்

    தலச்சிறப்பு : இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத் தூணுடன் அமைந்துள்ளது. நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோவில்களுள் ஒன்றாகும்.

    நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை திறந்திருக்கும்.

    சிவபெருமானுடைய பல வடிவங்களில் ஒன்று பைரவர். சிவபுராணமும், கந்தபுராணமும் பைரவரைப் பற்றி பாடுகின்றன. பிரம்மாண்ட புராணத்தில் பைரவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. சிவபுராணத்தில், சிவபெருமான் பிரம்மனுடைய அகந்தையை அடக்குவதற்காக, தனது நெற்றிப் புருவ மத்தியில் இருந்து பைரவரை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர், தன்னை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று பைரவர் சிவனிடம் கேட்க, பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஐந்தாவது தலையை கொய்யச் சொன்னார். அவ்வாறே செய்தார் பைரவர். இதனாலேயே, பைரவர், ஒரு கையில் தண்டமும், மற்றொரு கையில் பிரம்மனுடைய தலையும் கொண்டு, காலில் சிலம்புடனும், முத்துமாலையும், கபால மாலையும் கழுத்தில் அணிந்தும் இருப்பவராக வர்ணிக்கப்படுகிறார்.

    நான்கு வேதங்களையும் நாய் உருவத்திற்குள் அடக்கி அதனையே தனது வாகனமாக்கிக் கொண்டார். எல்லா திருக்கோயில்களையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் காக்கும் கடவுளாக பைரவர் உள்ளார். எல்லா சிவ ஆலயங்களிலும், விநாயகரில் ஆரம்பிக்கும் பரிவாரத் தெய்வங்கள் பைரவருடன் முடிவதைப் பார்க்கலாம்.

    வைரவன் கோயில் பைரவர், பிரம்மனின் கபாலத்தையும், திருமாலின் தோலை சட்டையாகவும் அணிந்து காணப்படுவதாக அக்கோயில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.முன்னொரு காலத்தில், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற அசுரர்கள் இழைத்த பெருங்கொடுமை தாங்காத தேவர்கள் சிவபிரானிடம் முறையிட, அவர் அந்தணர் கோலத்தில் இவர்கள் முன் தோன்றி, அழிஞ்சில்வனம் சென்று அவர்களுடைய துயரங்களை போக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    அவ்வாறே தேவர்கள் அந்த இடத்திற்கு வந்த போது, அங்கே வளரொளிநாதரும், வடிவுடையம்பாளும் கோயில் கொண்டிருப்பதைக் கண்டனர். அப்போதுதான் தேவர்களுக்கு, முன்பு திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தானே பிரம்மம் என்ற போட்டி வந்தபோது ஒளி வடிவமாக சிவன் தோன்றி, பின்பு மலையாகக் குளிர்ந்ததும், அவருக்கே வளரொளி நாதர் என்ற பெயர் உருவானதும் நினைவில் வந்தது.அந்த வளரொளிநாதரே தேவர்களுக்காக பைரவர் வடிவம் கொண்டார். அழிஞ்சில் மரம் இக்கோயில் ஸ்தல விருட்சமாக உள்ளது. இத்திருக்கோயில் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்கிறது.

    கிழக்கு நோக்கிய திருக்கோயில். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், பலி பீடம், கொடி மரம், அம்மன் சந்நதி, பள்ளியறை, பைரவர் சந்நதி, நந்தி மண்டபம், மேல் சுற்று பிராகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம், பரிவார சந்நதிகள், யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, ராஜகோபுரம், பைரவர் பீடம், பைரவர் தீர்த்தம் என்று பல பகுதிகளைக் கொண்டுள்ளது.

    கணபதி, முருகன், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் சந்நதிகளும் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் சந்நதி அருகே தல விருட்சமான அழிஞ்சில் மரம் கல்லால் செய்து நிறுவப்பட்டுள்ளது. உட்பிராகாரத்தில் அறுபத்து மூவர், கன்னி மூலை கணபதி, தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, ஆறுமுகப் பெருமான்-வள்ளி-தெய்வயானை, சரஸ்வதி, ஆதி வடிவுடையம்மன் ஆகிய தெய்வங்களின் சந்நதிகளும் அமைந்துள்ளன. நவகிரக மேடையும் உண்டு.

    ராஜகோபுரத்தின் எதிரே கோயில் ஊருணி நான்கு துறைகளுடன் மிக அழகாக அமைந்துள்ளது. வளரொளிநாதர் கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறையில் வீற்றருளும் மூலவர் பழங்காலத்தில் அழிஞ்சில் மரத்தின் அடியில் அமைந்து இருந்ததாகச் சொல்கிறார்கள். மகா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து காணப்படும் எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்களையும் மனதையும் கவர்கின்றன.

    மகாமண்டபத் தூண்கள் முழுவதிலும் புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். ராமர், ஹனுமான் சிற்பங்களும் அருகருகே உள்ளன.கருவறை சுற்றுப் பிராகாரத்தில் ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கி நிற்பது வேறெங்கும் காணவியலாத அதிசயக் கோலம். ஹனுமன் இலங்கையில் சீதாதேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியை ராமரிடம் தெரிவித்தார். அதுகேட்டு மகிழ்ந்த ராமர் நன்றிப் பெருக்குடன் ஹனுமனை கை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இது! வேறெங்கும் காண இயலாதது! இதனாலேயே ராமரது சிலையை விட ஹனுமனது சிலை சற்று பெரியதாக உள்ளது போலும்!

    கோயிலின் உள் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் கண்ணப்ப நாயனாரின் சிற்பம் சிவபிரானுடன் காணப்படுகிறது.நடராஜர் சபையின் முன் மண்டப வாயிலில் பாயும் குதிரையை அடக்கி ஆளும் வீரர்களின் சிற்ப அமைப்பு சிறப்பு. வீரர்களின் உடை அலங்காரங்கள், உடலமைப்புகள், முகபாவம் எல்லாம் தத்ரூபமாய் அமைந்து நம்மை வியக்கவைக்கின்றன.

    ராஜகோபுர வாயில் நிலைகளில் உள்ள கொடிப் பெண்களின் சிற்பங்களும் முகபாவம், உடை, தலை அலங்காரம் எல்லாம் அக்காலத்திய நாகரிகத்தை நமக்குக் காட்டும் கண்ணாடிகளாகத் திகழ்கின்றன. திருக்கோயிலின் உள்ளே கல் மண்டபத்தின் மேற்கூரையில் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் பல்வேறு வடிவங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. எல்லாமே இயற்கை வண்ணங்களால் உருவானவை. அவற்றில் திருமாலின் பத்து அவதாரங்கள், பஞ்ச பாண்டவர்கள், வளரொளிநாதர், வடிவுடையம்மன் ஆகிய ஓவியங்களைக்குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    இத்தலம் பைரவரின் இதய தலமாக விளங்குவதாக சொல்கிறார்கள். பைரவ தீர்த்தம், வடுக தீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்க வைரவர் தனது சூலத்தை கோயிலின் தென் திசைப் பக்கம் ஊன்ற, அங்கு ஓர் ஊற்று தோன்றியது. இன்றும் வற்றாத ஊற்று அது என்கிறார்கள்.

    திருக்கோயில் இருப்பிடம்:

    சிறப்புமிகு வைரவன் கோவில், காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் பாதையில் திருப்புத்தூரில் இருந்து 7 km தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 14 km தொலைவிலும், குருஸ்தலம் பட்டமங்கலத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருக்கோட்டியூரில் இருந்து 5 km தொலைவிலும் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து திருமெய்யம் வழியாக திருப்புத்தூர் என்னும் ஊருக்குச் செல்லலாம்.

    Next Story
    ×