என் மலர்tooltip icon

    கோவில்கள்

    துரியோதனனுக்கு சில நல்ல குணங்கள் உண்டு என்பதை எடுத்துக் காட்டும் விதமாக, கேரளா மாநிலம், பொருவழி எனுமிடத்தில் துரியோதனனுக்குத் தனிக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
    மகாபாரதத்தில் வரும் துரியோதனன் கர்ணனுடன் கொண்டிருந்த நட்பின் மூலம் சிறப்புக்குரியவன் என்று பாராட்டப்பட்டாலும், அவனைத் தீயவழியில் செல்பவன், கொடூரமானவன் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவனிடமும் சில நல்ல குணங்கள் உண்டு என்பதை எடுத்துக் காட்டும் விதமாக, கேரளா மாநிலம், பொருவழி எனுமிடத்தில் துரியோதனனுக்குத் தனிக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

    தல வரலாறு :

    பாண்டவர்களைத் தேடிப் பல்வேறு காடுகளின் வழியாகப் பயணித்து வந்த துரியோதனன், தென்பகுதியிலிருக்கும் மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அப்போது, அவனுக்கு அதிக தூரம் நடந்து வந்த களைப்பால் தாகம் ஏற்பட்டது. தாகத்தைத் தணிக்க தண்ணீரைத் தேடினான். சிறிது தொலைவில், மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி ஒன்று இருப்பது தெரிந்தது. அந்தக் குடியிருப்பு பகுதியை நோக்கிச் சென்றான் துரியோதனன்.

    கடுத்தம்சேரி கொட்டாரம் என்றழைக்கப்பட்ட அந்தப் பகுதி யில், தாழ்த்தப்பட்ட குரவா வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். அங்கிருந்த ஒரு வீட்டின் முன்பாக போய் நின்ற துரியோதனன், குடிக்கத் தண்ணீர் தரும்படி கேட்டான்.

    வீட்டிலிருந்து வெளியில் வந்த வயதான பெண்மணி, அவனுக்குத் தண்ணீர் தர மறுத்தாள்.

    துரியோதனன், ‘அம்மா! வீடு தேடி வந்து தாகத்திற்காக தண்ணீர் கேட்பவருக்கு, இல்லை என்று கூறுவது சரியாகுமா?’ என்று கேட்டான்.

    அதைக் கேட்ட அந்தப் பெண், ‘ஐயா! தங்களைப் பார்த்தால் உயர்ந்த வகுப்பினர் போல் தெரிகிறது. உயர் வகுப்பினருக்குத் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த நான் தண்ணீர் கொடுத்தால், எனக்குத் தண்டனை கிடைக்கும்’ என்றாள்.

    ‘அம்மா, பசியும் தாகமும் சாதியற்றவை. நான் அஸ்தினா புரத்து அரசன். எனக்கு இந்த வேளையில் தாங்கள் கொடுக்கும் தண்ணீரே என் உயிரைக் காக்கும். எனக்கு ஏற்பட்டிருக்கும் தாகத்தைத் தீர்க்கத் தண்ணீர் தந்து உதவுங்கள். இந்தப் பகுதி என்னுடைய பேரரசின் கீழ் செயல்படும் குறுநில மன்னர்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்குத் தேவையானது கிடைக்கவும் நான் உதவுகிறேன்’ என்றான் துரியோதனன்.


    துரியோதனன் கோவில் உள் தோற்றம்

    அவன் மேல் இரக்கம் கொண்ட அந்தப் பெண், ஒரு குடுவையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். தண்ணீர் தாகத்தில் இருந்த துரியோதனன், அந்தக் குடுவையில் இருந்ததை முழுமையாகக் குடித்து முடித்தான். அவன் குடித்து முடித்த பின்புதான், அவனுக்குத் தான் குடித்தது தண்ணீர் இல்லை என்பதும், அது புளித்துப் போன நீராக இருப்பதும் தெரிந்தது.

    உடனே ‘அம்மா! தாங்கள் எனக்குக் கொடுத்த தண்ணீர் மிகவும் புளித்துப் போனது போன்ற வாசனையுடன் இருக்கிறதே! ஏன்?’ என்று கேட்டான்.

    அதற்கு அந்தப் பெண், ‘அரசே! தாகத்தால் மிகவும் களைத்துப் போய் வந்த தங்களுக்கு, முதலில் தண்ணீர் தரலாமென்றுதான் நினைத்தேன். அரசரான தங்களுக்குச் சாதாரணமான தண்ணீர் தருவது தவறு என்பதால், எங்கள் வீடுகளுக்கு வரும் விருந்தினர்களுக்குக் கொடுக்கும் கள் எனும் பானத்தைக் குடிக்கக் கொடுத்தேன்’ என்றாள்.

    துரியோதனன், ‘இந்த பானம் புளித்துப் போயிருந்தாலும், அதைக் குடித்த எனக்கு புதுவிதமான மகிழ்ச்சி கிடைத்தது போலிருக்கிறது. உங்களுக்கு வேண்டியதை என்னிடம் கேளுங்கள்’ என்றான்.

    அந்தப் பெண்ணோ ‘இங்கு இறைவன் வழிபாட்டுக்குத் தனியாக ஒரு கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என்று வேண்டினாள்.

    அதற்குச் சம்மதித்த துரியோதனன், அந்தப்பகுதி தலைவரிடம், அவர்கள் விரும்பும் கோவில் ஒன்றைக் கட்டிக் கொள்ள அனுமதியளித்ததுடன், அந்தக் கோவில் கட்டுமானத்துக்கும், பயன்பாட்டுக்கும் தேவையான நிலங்களையும் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளித்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

    இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் வழிபாட்டிற்கு ஏற்றதாக ஒரு புதிய கோவிலைக் கட்டினர். அந்தக் கோவிலில் எந்தச் சிலையும் வைத்து வழிபட விரும்பாத அவர்கள், தங்களுக்கான கடவுளாகத் துரியோதனனையே நினைத்து வழிபட முடிவு செய்தனர் என்கிறது தல வரலாறு.


    மலக்குடா பெருவிழா காட்சி

    கோவில் அமைப்பு :

    ‘மலநடா’ (மலா - மலை, நடா - கோவில்) எனும் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோவிலின் முகப்புப் பகுதியில், கேரளக் கட்டுமானப் பாணியில் அழகிய கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்குள், கருவறைப் பகுதி போல் சுற்றுச்சுவர்களுக்கான அடித்தளம் மட்டும் கட்டப்பட்டிருக்கிறது. நடுவில் சிலை அமைப்பதற்காக உயரமான மேடை மட்டும் உள்ளது. மேற்கூரை எதுவும் அமைக்கப்படவில்லை. இந்தப்பகுதியை அல்தரா அல்லது மண்டபம் என்று அழைக்கின்றனர்.

    கோவிலில் நடைபெறும் முக்கியமான விழா நாட்களில், இந்தப் பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் துரியோதனனையேத் தங்களது முதன்மைக் கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த வழிபாட்டுப் பணிகள் அனைத்தையும், குரவா வகுப்பினர்தான் செய்கின்றனர். இங்கு வந்து வழிபடுபவர்களின் வாழ்வில் வளமான மாற்றம் அமையும் என்கிறார்கள்.

    லக்குடா பெருவிழா :

    ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் நெல் அறுவடை செய்யும் முன்பாக இந்த ஆலயத்தில், ‘மலக்குடா மகோத்சவம்’ நடக் கிறது. இக்கோவிலின் ஊராளி எனப்படும் வழிபாட்டுப் பணி செய்பவர் பயன்படுத்தும் குடையைக் குறிப்பிடும் வகையில், இந்த விழாவை ‘மலக்குடா மகோத்சவம்’ என்கின்றனர்.

    இந்த விழா தொடங்குவதற்கு முன்பாக கோவில் வழிபாட்டுப் பணியைச் செய்பவரும், அவருடைய பணிக்கு உதவியாக இருப்பவர்களும், இந்த ஆலயத்தின் துணைக்கோவில்களில் ஒன்றாக இருக்கும் குருக்கள்சேரி பகவதியம்மன் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள அம்மனை விழாவிற்கு வந்திருந்து சிறப்பிக்கும்படி அழைப்பு விடுக்கின்றனர். அவர்களது அழைப்பை ஏற்றுக் கொள்ளும் அம்மன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, மலநடா கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் மண்ட பத்தில் வந்து அமர்ந்து, திருவிழாவை காண்பதுடன், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்குகிறார்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், குன்னத்தூர் வட்டம், பொருவழி எனும் கிராமத்தில், எடக்காடு எனுமிடத்தில் அமைந்திருக்கிறது இந்த மலைக்கோவில். அடூரில் இருந்து வட கிழக்கிலும், சாஸ்தாம் கோட்டா என்னும் இடத்தில் இருந்து தென்கிழக்கிலும் இந்த ஆலயம் உள்ளது. கொல்லம் நகரிலிருந்து பரணிக்காவு வழியாக 35 கிலோமீட்டர் பயணம் செய்தும், கொட்டாரக்கராவில் இருந்து புத்தூர் அல்லது ஏனாது வழியாக 25 கிலோமீட்டர் பயணம் செய்தும் கோவிலை அடையலாம்.
    நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு தென் கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பாகசாலை என்ற புரந்தரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
    நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு தென் கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பாகசாலை என்ற புரந்தரேஸ்வரர் ஆலயம். கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்திற்கு, பல நூற்றாண்டுகளை கடந்த பெருமை உண்டு. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் புரந்தரேஸ்வரர். இறைவி கல்யாணி அம்பாள்.

    ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் நந்திகேஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அடுத்து மகாமண்டபம் உள்ளது. இடதுபுறம் இறைவியின் சன்னிதி உள்ளது. அன்னை தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். நான்கு கரங் களில் மேல் வலது கரத்தில் சாமரமும், மேல் இடது கரத்தில் வஜ்ராயுதமும், கீழ் வலது மற்றும் இடது கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரை காட்டியும் நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள் அன்னை.

    மகா மண்டபத்தின் தென் மேற்கு மூலையில் கணபதி, காசி விசுவநாதர், காசி விசாலாட்சி திருமேனிகள் தனி மண்டபத்தில் உள்ளன. வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையின் திருமேனிகள் உள்ளன. அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் வீற்றிருக்கிறார்.

    அடுத்துள்ள கருவறையில் இறைவன் புரந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கே பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தின் மேற்கில் முக்குருணி விநாயகர், வடக்கில் சண்டிகேசுவரர், கால பைரவர், வடகிழக்கில் சனீஸ்வரன் சன்னிதிகள் இருக்கின்றன. வடக்குப் பிரகாரத்தில் சனி பகவான் நின்ற கோலத்தில் தனித்து நின்று அருள்பாலிப்பதால், இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.


    புரந்தரேஸ்வரர், கல்யாணி அம்பாள்.

    தல வரலாறு :

    அகலிகை ஒரு பேரழகி. கவுதம முனிவரின் மனைவி. அவளது அபரிமிதமான அழகில் இந்திரன் மதி மயங்கினான். அவளை அடையும் நோக்கில், கவுதம முனிவர் வெளியே சென்றிருந்த வேளையில், அவரது உருவத்திலேயே அகலிகையிடம் வந்தான். சிறிது நேரத்தில் கவுதம முனிவர் இல்லம் திரும்பினார். அவரைப் பார்த்ததும் அஞ்சிய தேவந்திரன், பூனை வடிவம் எடுத்தான். மனைவி தவறு செய்து விட்டதாக கருதிய முனிவர், அவளை கல்லாக போகும்படி சபித்தார். பிறர் மனை நோக்கிய இந்திரனை, அவனது உடல் முழுவதும் ஆயிரம் குறிகள் தோன்றும்படி சாபம் கொடுத்தார்.

    சாபம் பெற்ற இந்திரன் பிரம்மன் கூறிய அறிவுரைப்படி குறுமாணக்குடிக்குப் புறப்பட்டான். வழியில் இத்தலம் வந்து தங்கிய தேவேந்திரன், யாகம் வளர்த்து அங்கிருந்த புரந்தேரேஸ்வரரையும், கல்யாணி அம்பாளையும் வேண்டி தவம் இருந்தான். தேவேந்திரன் தங்கி யாகம் வளர்த்த அந்த ஊர் ‘யாகசாலை’ என அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி ‘பாகசாலை’ என்றானதாக கூறப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் இறைவனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டு, சோமவாரம், திருக்கார்த்திகை, சிவராத்திரி, நவராத்திரி நாட்கள் ஆகியவற்றில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை திறந்திருக்கும்.

    மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்கள், இங்கு திருவிழா நாட்களே. சனிப்பெயர்ச்சி நாட்களில் சனி பகவானுக்கும், குருபெயர்ச்சி நாட்களில் தட்சிணா மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன், அன்னதானமும் நடைபெறுகிறது. ஆவணி உத்திராடம் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக நாள். எனவே அந்த நாளில் இங்கு உள்ள இறைவன் மற்றும் இறைவிக்கு சிறப்பு பூஜை நடைபெறுவதுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும். அன்று இங்கு நடைபெறும் சிறப்பு யாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம் செல்ல, மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரப் பேருந்துகளும் உள்ளன.
    தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம்.
    தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் பிராணநாதேஸ்வரர். மங்களநாதர் என்றும் இவரை அழைப்பார்கள். இந்தக் கோவிலில் எல்லாம் மங்களகரமானவையே! இறைவி ‘மங்களநாயகி’. விநாயகர் ‘மங்கள விநாயகர்’. விமானம் ‘மங்கள விமானம்’. கோவில் ‘மங்கள கோவில்’. தீர்த்தம் ‘மங்கள தீர்த்தம்’.

    தல வரலாறு :

    எமனுடன் போராடி தன் கணவன் சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி. ஆனால் இன்னொரு பெண்ணோ இறைவனுடன் போராடி தன் கணவனை மீட்டாள்.

    என்ன கதை அது?

    முதலாம் குலோத்துங்கசோழனிடம், அலைவாணர் என்ற அமைச்சர் இருந்தார். இவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டவர். தான் வணங்கும் சிவபெருமானுக்கு தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவாலயம் ஒன்று அமைக்க ஆர்வம் கொண்டார். ஆனால் அதற்கு நிறையப் பணம் வேண்டுமே! என்ன செய்வது? என்று யோசித்தார். வரி வசூலில் வரும் பணம் யாவும், அலைவாணர் மூலமே கஜானாவுக்குச் செல்ல வேண்டும். தவறு என்று தெரிந்தும் சிவபெருமானின் மேல் இருந்த பக்தியால் அலைவாணர் அந்தத் தவறை செய்யத் துணிந்தார்.

    ஆம்! வரி வசூலில் வசூலான பணம் முழுவதையும், கோவில் கட்டுவதில் செலவழிக்கத் தொடங்கினார். கோவிலும் கட்டி முடிக்கப்பட்டது. அரசின் வரிப்பணத்தை அமைச்சர் கோவில் கட்ட செலவிடுகிறார் என்று கேள்விப்பட்ட மன்னன் கோபம் கொண்டான். மன்னனின் கோபத்துக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

    கணவனின் முடிவை அறிந்த அவரது மனைவி, அவர் கட்டிய கோவிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக கதறி அழுதாள். தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டினாள். மனமிறங்கினர் இறைவனும், இறைவியும். இறந்து போன அலைவாணர், உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல எழுந்து வந்தார்.

    தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால், இங்குள்ள இறைவன் ‘பிராண நாதேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். அமைச்சரின் மனைவியின் மாங்கல்யத்தைக் காத்து அருள் புரிந்ததால் இத்தல இறைவி ‘மங்கள நாயகி’ என அழைக்கப்படுகிறார்.



    வழிபாடு :

    திருமங்கலக்குடியில் கோவில் கொண்டுள்ள இறைவனை, திருமால், பிரம்மதேவன், அகத்தியர், சூரியன், காளி ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இது திருமாங்கல்ய தோஷங்களை நீக்கும் தலம். மங்களாம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் அகலும்.

    இங்கு ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்னையின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு, பெண்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது.

    பிராண நாதேஸ்வரருக்கு 11 ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து வந்தால், நவக்கிரக தோஷம், பூர்வஜென்ம தோஷம் அனைத்தும் விலகும்.

    கோவில் அமைப்பு :

    ஆலயத்தின் முன்பு ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சித் தருகிறது. உள்ளே இரண்டு பிரகாரங்கள். இறைவன் பிராணநாதேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் தென்திசை நோக்கியபடி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் மங்களநாயகி. அம்மனின் முன்கரத்தில் மாங்கல்ய சரடுகள் தொங்குகின்றன.

    தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆறுமுகக்கடவுள், பிரம்மன் ஆகியோரது திருமேனிகள் உள்ளன.

    இந்தக் கோவில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த பழமையான கோவிலை சம்பந்தரும், திருநாவுக் கரசரும் தம் தேவாரத்தில் சிறப்புறப் பாடியுள்ளனர்.

    நவக்கிரக நாயகர்கள் சாப விமோசனம் பெற அருளிய, திருமங்கலக்குடி பிராணநாதேசுவரரையும், மங்களாம்பிகையையும் தரி சனம் செய்து விட்டு, அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று நவக்கிரக நாயகர்களையும் ஒருமுறை தரிசித்து வரலாமே!

    தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி.
    நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு தென் கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பாகசாலை என்ற புரந்தரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
    நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு தென் கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பாகசாலை என்ற புரந்தரேஸ்வரர் ஆலயம். கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்திற்கு, பல நூற்றாண்டுகளை கடந்த பெருமை உண்டு. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் புரந்தரேஸ்வரர். இறைவி கல்யாணி அம்பாள்.

    ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் நந்திகேஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அடுத்து மகாமண்டபம் உள்ளது. இடதுபுறம் இறைவியின் சன்னிதி உள்ளது. அன்னை தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். நான்கு கரங் களில் மேல் வலது கரத்தில் சாமரமும், மேல் இடது கரத்தில் வஜ்ராயுதமும், கீழ் வலது மற்றும் இடது கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரை காட்டியும் நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள் அன்னை.

    மகா மண்டபத்தின் தென் மேற்கு மூலையில் கணபதி, காசி விசுவநாதர், காசி விசாலாட்சி திருமேனிகள் தனி மண்டபத்தில் உள்ளன. வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையின் திருமேனிகள் உள்ளன. அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் வீற்றிருக்கிறார்.

    அடுத்துள்ள கருவறையில் இறைவன் புரந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கே பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தின் மேற்கில் முக்குருணி விநாயகர், வடக்கில் சண்டிகேசுவரர், கால பைரவர், வடகிழக்கில் சனீஸ்வரன் சன்னிதிகள் இருக்கின்றன. வடக்குப் பிரகாரத்தில் சனி பகவான் நின்ற கோலத்தில் தனித்து நின்று அருள்பாலிப்பதால், இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.

    தல வரலாறு :

    அகலிகை ஒரு பேரழகி. கவுதம முனிவரின் மனைவி. அவளது அபரிமிதமான அழகில் இந்திரன் மதி மயங்கினான். அவளை அடையும் நோக்கில், கவுதம முனிவர் வெளியே சென்றிருந்த வேளையில், அவரது உருவத்திலேயே அகலிகையிடம் வந்தான். சிறிது நேரத்தில் கவுதம முனிவர் இல்லம் திரும்பினார். அவரைப் பார்த்ததும் அஞ்சிய தேவந்திரன், பூனை வடிவம் எடுத்தான். மனைவி தவறு செய்து விட்டதாக கருதிய முனிவர், அவளை கல்லாக போகும்படி சபித்தார். பிறர் மனை நோக்கிய இந்திரனை, அவனது உடல் முழுவதும் ஆயிரம் குறிகள் தோன்றும்படி சாபம் கொடுத்தார்.



    சாபம் பெற்ற இந்திரன் பிரம்மன் கூறிய அறிவுரைப்படி குறுமாணக்குடிக்குப் புறப்பட்டான். வழியில் இத்தலம் வந்து தங்கிய தேவேந்திரன், யாகம் வளர்த்து அங்கிருந்த புரந்தேரேஸ்வரரையும், கல்யாணி அம்பாளையும் வேண்டி தவம் இருந்தான். தேவேந்திரன் தங்கி யாகம் வளர்த்த அந்த ஊர் ‘யாகசாலை’ என அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி ‘பாகசாலை’ என்றானதாக கூறப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் இறைவனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டு, சோமவாரம், திருக்கார்த்திகை, சிவராத்திரி, நவராத்திரி நாட்கள் ஆகியவற்றில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை திறந்திருக்கும்.

    மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்கள், இங்கு திருவிழா நாட்களே. சனிப்பெயர்ச்சி நாட்களில் சனி பகவானுக்கும், குருபெயர்ச்சி நாட்களில் தட்சிணா மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன், அன்னதானமும் நடைபெறுகிறது. ஆவணி உத்திராடம் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக நாள். எனவே அந்த நாளில் இங்கு உள்ள இறைவன் மற்றும் இறைவிக்கு சிறப்பு பூஜை நடைபெறுவதுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும். அன்று இங்கு நடைபெறும் சிறப்பு யாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம் செல்ல, மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரப் பேருந்துகளும் உள்ளன.
    கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்துள்ளது மச்சபுரீஸ்வரர் கோவில். இந்த கோவிலின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். ‘மச்சம்’ என்றால் ‘மீன்’ என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் இது. இந்த மச்ச அவதாரத்துடன் சம்பந்தப்பட்ட கோவில், கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் பெயர் மச்சபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தலாம்பிகை. மீன் உருவில் இருந்த மகாவிஷ்ணு, தன் சுய உருவத்தை அடைய இத்தலத்து சிவனை வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இந்த ஆலயம் மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    தல வரலாறு :


    ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரம்மா அசந்து தூங்கிவிட்டார். அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன், பிரம்மனிடம் இருந்த படைப்புக்கு ஆதாரமான வேதங்களை திருடிச்சென்று விட்டான். இதனால் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மன் செய்வதறியாது திகைத்தார். பரந்தாமனை துதித்து, வேதங்களை மீட்டு தரும்படி வேண்டினார். அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி சத்யவிரதன் என்ற மன்னன் நீரையே உணவாக கொண்டு கடும் தவம் செய்து கொண்டிருந்தான்.

    ஒரு முறை அவன் தன்னுடைய தினசரி கடன்களை செய்து ஆற்றில் இரு கைகளாலும் நீரை அள்ளியபோது, சிறிய மீன் குஞ்சு ஒன்று கைகளில் வந்தது. அந்த மீன் அதிசயிக்கத்தக்க வகையில் பேசியது.

    அந்த மீன் மன்னனிடம், ‘மன்னா! என்னை மீண்டும் நீரில் விட்டுவிடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை விழுங்கி விடும்’ என்றது.

    மீன் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த மீனை தன் கமண்டலத்தில் போட்டுக்கொண்டான். சிறிது நேரத்தில் அந்த கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்துவிட்டது. அதனால் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டான். அதற்கு மேலும் மீன் வளர்ந்து விட்டது. பிறகு குளத்தில் மீனை போட்டான்.

    என்னே அதிசயம்! சிறிது நேரத்தில் குளம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. இறுதியில் படைவீரர்கள் உதவியுடன் மீனை தூக்கிக் கொண்டு போய் கடலில் விட்டான். மீன் கடலளவு வளர்ந்து பிரமாண்டமாய் நின்றது. இதைக் கண்ட மன்னன், தான் வழிபடும் திருமாலே இதுபோன்ற திருவிளையாடலை நடத்துவதாக அறிந்து கொண்டான்.

    ‘பரந்தாமா! தாங்கள் இந்த உருவம் பெற்றதற்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?’ என்றான்.

    அப்போது மீன் வடிவில் இருந்த மகாவிஷ்ணு, ‘மன்னா! வருகிற ஏழாவது நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கப்போகிறது. அச்சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஏற்றிவிடு. பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். மச்ச அவதாரம் எடுத்து, நான் அந்த படகை சுமந்து கவிழ்ந்து விடாதவாறு காப்பாற்றுவேன். அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்’ என்று கூறிவிட்டு மறைந்தார்.

    மகாவிஷ்ணு கூறியபடி ஏழாவது நாளில் பெரிய பிரளயம் ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது.

    அப்போது பெரிய படகு ஒன்று அங்கே வந்தது. மன்னனும் உயிர்களை காப்பாற்ற அவற்றை படகில் ஏற்றிக்கொண்டு சென்றான். பலத்த காற்றால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அப்போது மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றி படகை சுமந்து சென்று பிரளயம் முடிந்ததும் நிலத்தில் விட்டு, அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். மகாவிஷ்ணு, மன்னனுக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார். பின்னர் பரந்தாமன் வேகமாக வெள்ளத்தினுள் சென்று, அசுரனுடன் போரிட்டு அவனை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

    இறைவன் மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது இத்தலம். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்தபோது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்கு உறைவிடமாக விளங்குகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. இங்கு 55 கல்வெட்டுகள் உள்ளன.

    மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    மச்சபுரீஸ்வரர் ஆலயம் வேதங்களை மீட்ட தலம் என்பதால், கல்வி கற்று வரும் மாணவர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. மாணவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தலாம்பிகையையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.

    சங்கு, சக்கரத்தில் முருகன் :

    மச்சபுரீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு தனி சன்னிதி உள்ளது. முன்னால் 3 முகம், பின்னால் 3 முகம், 12 கரங்கள், வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார். திருமாலுக்கு உள்ளதைப்போல இங்கு முருகனுக்கும் சங்கு, சக்கரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகனுடன், வள்ளி தெய்வானையும் உடன் உள்ளனர். இங்கு சத்ரு சம்ஹார பூஜை செய்வது நல்லது. பொதுவாக கருவறை பின்புறம் கோஷ்டத்தில் (சிவன் கோவில்) லிங்கோற்பவர் இருப்பார். இக்கோவிலில் அந்த இடத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் (3 அடி உயரம்) அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவை சங்கு, சக்கர முருகன் பார்க்கிறார். இது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

    அமைவிடம் :

    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடை என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் மச்ச புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பஸ், ஆட்டோ வசதி உண்டு.
    நித்திய கல்யாணப் பெருமாள் ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், வெகுவிரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறைவனை வழிபடுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம்.
    சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி இறைவனடி சேர்ந்து விட்டார்.

    தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர், அவளை மணம் புரிந்தார். அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்னுடைய முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.

    தன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.

    ‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே! நானே நாள்தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று அருளினார்.

    காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார். அதற்குள் இருக்கும் சூட்சுமத்தை உணர்ந்தார். உலகில் எல்லோரும் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணைகொண்டால் பரமாத்மாவான, பெருமாள் ஆதி வராகரை அடையலாம். இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும், அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு. வராகர் யக்ஞ மூர்த்தி.

    வேதம் சொல்லும் தர்மங்கள், யாகங்கள் எல்லாவற்றையும் கொண்ட திருமணம் என்ற இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம். வேதத்தில், திருமண நிகழ்வில் கன்னிகா தானம் மிகமிக முக்கியமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது. திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இதுதான். எனவேதான் வராகர் காலவ முனிவரின் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார். முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து கன்னிகைகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராகப் பெருமாள் எழுந்தருளச் செய்தார். காலவ முனிவர் வராகரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார்.

    ‘திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாணப் பெருமாளாகவே அருள்புரிவேன்’ என்று பெருமாள் உறுதி கூறினார். இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாணபுரி’ என்றும் பெயர் உண்டு.



    எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள். எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப் பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை எனப் பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மறுவியது. பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். ஆனால், தொன்மை கீர்த்தியில் ஈடு இணையற்ற தலம். கருவறையில் வராகர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார். இடது காலை மடித்து அந்த மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் எனும் மந்திரத்தை உபதேசிக்கும் கோலம், காணக் கண்கோடி வேண்டும். பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும். இவரை தரிசிப்பவர்களுக்கு ராகுகேது தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு விடுகிறது.

    உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்திருக்கிறது. எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது. தனிக்கோயில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும். அருளும், அழகும் ஒருசேர வீற்றிருந்து செல்வ வளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார். திருமணத்திற்கான பரிகாரம் இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று பார்ப்போம்.

    திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராகரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோவிலை வலம் வரவேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும் முன்பே திருமணம் நிச்சயமாகிவிடுவது சகஜமானது.

    ன்னனுக்கு அருள் செய்த இறைவன் :

    பல்லவ மன்னன் ஒருவன், திருவிடந்தை தலத்தின் மகிமையை அறிந்தான். இதையடுத்து ‘தினமும் ஒரு பெண்ணுக்கு இத்தலத்தில் திருமணம் செய்து வைப்பேன்’ என்று அறிவித்தான். அதுபோல தினமும் ஒரு தம்பதியாக திருமணம் நடத்தி வைத்தான். ஆனால், ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகுநேரமாகியும் மண மகன் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து நாழிகைகள் கரைந்து கொண்டிருந்தன. ஆனால், அவன் வேண்டுதல் வீணாகவில்லை அதிசுந்தரனாக பேரழகு பொருந்திய மணமகன் வந்தான். மணம் செய்து கொண்டான்.

    அந்த மணமகன் மன்னனை நோக்கி, ‘மன்னா என்னைப் பார்’ என்று சொல்லி, வராகராக காட்சி தந்து மறைந்தான்.

    இதையடுத்து பல்லவ மன்னன் மூலவரே வராக மூர்த்தியாக அமையும் படியாக ஆலயம் எழுப்பினான். இந்த ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், வெகுவிரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறைவனை வழிபடுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம்.

    சென்னை- மாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருவிடந்தை.
    தீய நோக்கமின்றி உள்ளன்போடு வழிபடும் எவரையும் ஏற்றுக் கொள்பவன் இறைவன் என்பதற்குச் சிறந்த சான்றாக விளங்குபவர் வீரட்டானேசுவரர். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    இறைவனை வழிபட விரும்புவோர் சொற்களைக் கொண்டும், பூக்களைக் கொண்டும் வழிபடுவது வழக்கமாக ஒன்று. ஆனால், இறைவனைக் கல்லெறிந்து வழிபட்ட, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் புத்த மதத்தைச் சேர்ந்த ஒரே அடியார் சாக்கியர் மட்டுமே. இவருக்கும் அன்பு காட்டி அருள் வழங்கி இறைவன் தன் திருவிளையாடலை நிகழ்த்திய தலம், காஞ்சீபுரத்தில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலாகும்.

    இத்தலத்து இறைவனை, திருமால் வழிபட்டு தனது பச்சை நிறம் நீங்கிப் பவள நிறம் பெற்றார் என்று காஞ்சிப்புராணம் கூறுகிறது. பல்வேறு சித்தர்களும், முனிவர்களும் இங்குள்ள இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கொங்கண முனிவர். இறைவனின் திருமேனி புகழை உணர்த்த நினைத்த கொங்கண முனிவர், இறைவனையே சோதிக்க நினைத்தார்.

    கொங்கண முனிவரிடம், ஒரு பொருளை எதன் மீது வைத்தாலும், அதனை நீராக்கிவிடும் சக்தி கொண்ட குளிகை இருந்தது. அதனை சிவலிங்கத்தின் மீது வைத்து சோதித்தார். அக்குளிகை நீராக மாறுவதற்குப் பதிலாக, சிவலிங்கம் அதனை உள்ளே இழுத்துக் கொண்டது. இதனைக் கண்டு வியப்புற்ற கொங்கண முனிவர், சிவலிங்கத்தின் பெருமையைப் புரிந்து கொண்டு அங்கேயே தங்கி தவம் செய்து பேறு பெற்றார். இப்படிப் பல்வேறு பெருமைகளின் இருப்பிடமாகத் திகழ்வது வீரட்டானேசுவரர் திருக்கோவில் ஆகும்.

    சாக்கியர் யார்? :

    தொண்டைவள நாட்டிலுள்ள, திருச்சங்கமங்கை என்ற ஊரில், வேளாளர் குளத்தில் உதித்த சாக்கியர், காஞ்சீபுரம் சென்று ஞானம் பெறுவதற்குரிய வழிகள் பலவற்றையும் ஆராய்ந்தார். முடிவில் சாக்கிய சமயம் எனப்படும் புத்த மதத்தில் சேர்ந்தார். என்றாலும், அதில் அவர் மனம் அமைதி பெறவில்லை. செய்வினை, செய்பவன், வினையின் பயன், அதனைக் கொடுப்பவன் என்ற நான்கையும் ஏற்றுக் கொள்கின்ற இயல்பு சைவம் ஒன்றுக்கே உள்ளது என்பதை உணர்ந்தார்.

    எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும்
    மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள் என்றே
    துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவந்
    தன்னை மிகும் அன்பினால் அறவாமை தலைநிற்பார்

    - பெரியபுராணம்

    இதற்கிணங்க, புறத்தில் புத்த மதத்திற்குரிய காவி உடையை விட்டு விடாமல், அகத்தில் சிவனடியாராக வாழத் தொடங்கினார். சாக்கியர் முதன் முறையாகச் சிவன் மீது கல்லெறிவதற்குக் காரணமாக அமைந்தது அவரது உணர்வேயாகும். அவரது செயல் அவருக்கு மன நிறைவையும், அமைதியையும் தந்தது. எல்லை மீறிய ஈடுபாட்டால் அன்றாடம் கல்லெறியத் தொடங்கினார். இதனால் மற்றவர்கள் இச்செயல் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட அவருக்குத் தோன்றவில்லை.

    அவ்வாறு எறிகின்ற நேரத்தில் அவரது மனதில் தோன்றிய ஆனந்தம், இறைவனின் திருவருள் குறிப்பு என்று நினைத்த சாக்கியர், நாள்தோறும் சிவலிங்கத்தின் மீது கல்லெறியும் கடமையைச் செய்துவந்தார். ஒருமுறை கல்லெறிய மறந்து உண்பதற்கு அமர்ந்தார். அப்போது திடீரென சிவபெருமான் மீது கல்லெறிய மறந்ததை நினைத்து, சாப்பிடாமல் ஓடிச் சென்று இறைவன் மீது கல்லெறியக் கையைத் தூக்கினார். அப்போது அவரைத் தடுத்தாட்கொண்ட இறைவன், அவருக்குக் காட்சி தந்து அவரைத் தன் அடியாராக ஏற்றுக் கொண்டார். அத்துடன் அவரைக் கயிலைக்கும் அழைத்துச் சென்றார் என்கிறது பெரிய புராணம்.



    ஆலய அமைப்பு :

    பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய சிறிய வாசலும் பழுதடைந்த கதவுகளும், நம்மை வரவேற்கின்றது. உள்ளே நுழைந்ததும், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிற்பங்கள் உடைந்த நிலையில் கீழே கிடக்கின்றன. சற்றுத் தள்ளியதும் எளிய வடிவில் இறைவன் கருவறை அமைந்துள்ளது.

    இடதுபுறம் விநாயகர், அருகில் நந்திதேவர், பலிபீடம் அடுத்து இரு ஜோடி லிங்கங்கள் மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றன. அவற்றினிடையே இரண்டு ஜோடி பாதங்கள் கருங்கற்களில் வடிக்கப்பட்டுள்ளன. இவை நடராஜர், சிவகாமி அம்மையின் திருவடிகள் எனக் கூறப்படுகிறது. இதேபோல், மற்ற தெய்வங்களான சூரியன், பைரவர் ஆகியோரின் பாதங்கள் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இப்பாதங்களை ஒட்டி, அழகிய கருங்கல் சிற்பத்தில் சிவன் - பார்வதியின் அழகிய திருக்கோலம் காணப்படுகிறது.

    வீரட்டானேசுவரர் :

    இவற்றின் கிழக்கே நோக்கினால், அழகிய கோலத்தில் மூலவர் வீரட்டானேசுவரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவரின் பின்புறம் மதிற்சுவர் மாடத்தில் ஆதிமூலவர் காட்சி தருகிறார். இவர் மீது ஏராளமான வடுக்கள் காணப்படுகின்றன. இவரே சாக்கியரால் கல்லடி பட்டவராக இருக்கக்கூடும் என்கிறார்கள்.

    இவரின் எதிரே விநாயகருக்கு அருகில் வெகு எளிய உருவில் அழகிய சிலையாகச் சாக்கிய நாயனார் தன் கைகளில் பெரிய கல்லைப் பிடித்துக் கொண்டு, அதை இறைவன் மீது எறியும் கோலத்தில் இருக்கிறார். இவரைக் காணும் பொழுது கல்லெறிந்து வழிபட்ட சம்பவம் நம் மனத்திரையில் ஓடுகின்றது.

    ஆலயத்தின் வெளிப்புறம் உயரமான கல்மேடையில் சிறிய வடிவில் நந்தி தேவர் இறைவனை நோக்கிக் காட்சி தருகிறார். நந்திதேவரின் பின்னால் சற்று தொலைவில் ஏகாம்பரேஸ்வரர் கோபுர தரிசனத்தைக் காண முடிகிறது. எண்ணற்ற பெருமைகள் கொண்ட இத்திருக்கோவில், இன்று சிறிய கருவறை மட்டுமே பழம்பெரும் ஆலயம் என்பதற்குச் சாட்சி கூறுகின்றது. இந்த ஆலயத்தில் பவுர்ணமி மற்றும் பிரதோஷ விழா எளிய முறையில் நடந்து வருகின்றது. ஒரு கால பூஜை மட்டுமே நடைபெற்று வருகிறது.

    மைவிடம் :

    காஞ்சீபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சீபுரம் நகரிலுள்ள கோனேரிக்குப்பம் ரெயில்வே கேட்டுக்கு முன்னால், அப்பாராவ் தெருவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. இதேபோல, புதிய ரெயில் நிலையம் இறங்கி கிழக்கே 1 கிலோமீட்டர் தொலைவில் அப்பாராவ் தெரு வழியே சென்றாலும் ஆலயத்தை அடையலாம். தாமல்வார் தெருவும், அப்பாராவ் தெருவும் இணையும் இடமே திருக்கோவில் அமைவிடமாகும்.

    தீய நோக்கமின்றி உள்ளன்போடு வழிபடும் எவரையும் ஏற்றுக் கொள்பவன் இறைவன் என்பதற்குச் சிறந்த சான்றாக விளங்குபவர் வீரட்டானேசுவரர். கல்லெறிந்து வழிபட்டவருக்கே பேறு தந்து கயிலைக்கு அழைத்துச் சென்ற இறைவன், உள்ளன்போடு தனக்குத் திருப்பணி செய்யும் அடியாரைத் தலைமீது வைத்து தாங்குவான் என்பதில் ஐயமில்லை.

    ஆலய தரிசனம் செய்ய, ஆலயத்தை ஒட்டியுள்ள வீட்டில் அணுகினால் எளிதில் தரிசிக்கலாம்.
    உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்றுதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் 4-வது அவதாரம்தான் நரசிங்கரின் தோற்றம். இரண்யகசிபு, தான் அரசன் மட்டுமல்ல அனைத்துலகத்துக்கும் இறைவன் என்று மக்கள் அனைவரையும் தன் நாமத்தை உச்சரிக்கும்படி வற்புறுத்தினான். ஆனால் அவனது மகனான பிரகலாதனோ ‘நாராயணரே கடவுள்’ என்று அவரது நாமத்தையே உச்சரித்து வந்தான். இதனால் தந்தையாலேயே பல இன்னல்களுக்கு ஆளானான் பிரகலாதன். ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலை வரும்போதும், அவனை நாராயணர் காத்து அருள்புரிந்தார்.

    ஒரு கட்டத்தில் ‘நீ சொல்லும் நாராயணன் எங்கே இருக்கிறான்?’ என்று மகன் பிரகாலதனைப் பார்த்து கேட்டான் இரண்யகசிபு.

    அதற்கு பிரகலாதன், ‘அவர் எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள். தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என்றான்.

    உடனே இரண்யகசிபு, ‘இந்த தூணில் இருக்கிறானா?’ என்றபடி அருகில் இருந்த தூணை உடைக்க, அதில் இருந்து சிங்க முகமும், மனித உடலுமாக நரசிங்க அவதாரத்தில் திருமால் கர்ஜித்தபடி வெளியே வந்தார். பின்னர் தன்னுடைய கூரிய நகங்களைக் கொண்டு இரண்யகசிபுவை வதம் செய்தார் என்கிறது புராணம்.

    உக்கிர நரசிம்மர் :


    இரண்யகசிபுவை வதம் செய்தது போலவே, உக்கிர தோற்றத்தில் இறைவன் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்றுதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த ஆலயத்தில் உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் மேற்கு திசை பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அவர் வீற்றிருக்கும் கருவறை விமானம், பாவன விமானம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த நரசிம்மர் 16 கரங்களுடன் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள் இரண்யகசிபுவின் உடலை கிழித்த படியும், மற்ற கரங்களில் பதாககிஸ்தம், ப்ரயோக சக்கரம், ஷீரிகா எனும் குத்துக்கத்தி, காணம், ராட்சசனின் தலையை அறுத்தல், கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், இரண்யனின் காலை அழுத்தி பிடித்தல், சங்கம், வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை, இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது என்று காட்சி தருகிறார்.

    மூலவருக்கு கீழே இடது புறம் சுக்ரர், வசிஷ்டர், பிரகலாதன், நீலாவதி ஆகியோர் உள்ளனர். இங்கே இருக்கும் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். அவரது பெயராலேயே இத்திருக் கோவில் விளங்குகிறது.

    இந்த ஆலயம் ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு 10-ம் நூற்றாண்டில் ராஜராஜசோழன், 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு இந்தக் கோவில் விளங்குவதால், திருமணம் கைகூடும், வேலைவாய்ப்பு கடன் நிவர்த்தி உண்டாகும். பில்லி சூனியம் அண்டாது என்று கூறுகிறார்கள். நவக்கிரக பரிகாரம் போன்ற பிரார்த்தனைகள் நல்ல பலனைக் கொடுப்பதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.



    ஆலய அமைப்பு :

    மேற்கு திசை நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் இருக்கிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் இடது புறம் வேப்பமரத்தடியில் சிறிய துர்க்கை கோவிலும், வலதுபுறம் நாகர் கோவிலும் இருக்கின்றன. அதனை ஒட்டி கோவில் தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. அதைக் கடந்தால் கிழக்கு நோக்கியவாறு நெற்றியில் நாமமிட்டவாறு, விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். அவருக்குத் தோப்புகரணம் போட்டுவிட்டு உள்ளே சென்றால், பலி பீடமும், கொடி மரமும் நம்மை வரவேற்கின்றன. அதை அடுத்தாற்போல் கருங்கல் தூண்களோடு கூடிய பழங்கால மண்டபத்தில் பெரிய திருவடி என்ற பெயர் கொண்ட கருடாழ்வார் காட்சி தருகிறார்.

    ஆலயத்தின் வடக்கு வெளிச் சுற்றில் ஆண்டாள் நாச்சியாருக்கு தனிச்சன்னிதியும், தெற்குச் சுற்றில் கிழக்கு பார்த்தவாறு தல நாயகியான கனகவல்லித் தாயாரின் சன்னிதியும் உள்ளன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு தாயார் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தாயார் சன்னிதியை அடுத்து தெற்கு நோக்கிய சிறிய சன்னிதியில், சீதா, லட்சு மணர், ஆஞ்சநேயர் சூழ இருக்கும் ராமபிரானின் ஐம்பொன் திருமேனியை தரிசிக்கலாம். இந்த சன்னிதியின் எதிரே வில்வமரம் ஒன்று தல விருட்சமாக இருப்பது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

    பிரகாரத்தின் வடமேற்கு மூலையின் ஓரிடத்தில் நின்றால் சுவாமி, தாயார், ஆண்டாள், கருடாழ்வார், ராஜகோபுரம், கருவறை விமானங்கள் மற்றும் கொடிமரத்தை ஒருசேர தரிசிக்க முடியும். பொதுவாக நரசிம்ம மூர்த்தியின் தோற்றம் சிங்கமுகத்தோடு இருப்பதால், பார்ப்பவர்களுக்கு அச்ச உணர்வு தோன்றலாம். ஆனால் அவர் பக்தர்களுக்கு கருணையை வாரி வழங்குபவர்.

    அசுர வதம் முடிந்ததும் உக்கிரமான கோபத்துடன் அக்னி போன்று இருந்த சுவாமியை அனுகுவதற்கு தேவர்களும், முனிவர்களும் பயந்தனர். ஏன்... மகாலட்சுமியே கூட அவரது அருகில் செல்லத் தயங்கினாள். ஆனால் கும்பிட்ட கரங்களுடன் தன்னைத் தொழுது நிற்கும் பக்த பிரகலாதனை வாரி அணைத்து மடியில் வைத்துக் கொண்டார் நரசிம்மர் என்கிறது புராணக்கதை ஒன்று. அவர் அசுரர்களுக்குத்தான் உக்கிரமானவர், தன்னை வணங் கும் பக்தர்களுக்கு அல்ல என்பதையே அந்தக் கதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    சிங்கிரிகுடியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூவரசன் குப்பம், விழுப்புரம் - திருச்சி ரெயில் மற்றும் பஸ் மார்க்கம் அருகே உள்ள மடப்பட்டு, கெடிலம் கூட்ரோடுக்கு அருகில் உள்ள பரிக்கல் ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நரசிம்மர் ஆலயங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் சென்றால் தவளகுப்பம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ உள்ளே சென்றால் அபிஷேகபாக்கம் என்ற சிறு கிராமம் உள்ளது. இங்கேதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. பெயரிலேயே ‘சிங்கர்’ என்றிருப்பதால், நரசிங்கர் குடியிருக்கும் தலம் என்பது பொருத்தமானதாகவே அமைந்திருக்கிறது.
    பிறவித் துன்பம் நீக்கிப் பேரின்பம் தந்தருளும் தலமாகக் கேரள மாநிலம், வர்க்கலை ஜனார்த்தனர் கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    மனிதராகப் பிறந்தவர்கள், தங்களுடைய பிறவித் துன்பம் நீங்கிப் பிறவாமை எனும் பேரின்பத்தைப் பெற வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின் மிகப்பெரும் சிறப்பு என்பார்கள். பிறவித் துன்பம் நீக்கிப் பேரின்பம் தந்தருளும் தலமாகக் கேரள மாநிலம், வர்க்கலை ஜனார்த்தனர் கோவில் இருக்கிறது.

    தல வரலாறு :

    படைப்புக் கடவுளான பிரம்மா உலக நல்வாழ்வுக்காக நூறு வேள்விகளைச் செய்து முடித்தார். வேள்வியின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்த பிரம்மா, வேள்வியில் கலந்து கொண்ட தேவர்கள், ரிஷிகள், மகான்கள், வேள்விப்பணி செய்தவர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்து, அவர்களுக்குச் சுவையான உணவுகளுடன் விருந்தும் அளித்தார். அந்த மகிழ்ச்சியோடு, தன்னைப்போல் இனி வேறுயாரும் இதுபோல் நூறு வேள்வி களைச் செய்ய முடியாது என்ற கர்வமும் எழுந்தது.

    அப்போது அந்த இடத்திற்கு வயதான பெரியவர் ஒருவர் வந்து சேர்ந்தார். பசியால் மிகவும் வாடிப் போயிருந்த அந்த முதியவர், பிரம்மனிடம் தன்னுடைய பசியைத் தீர்க்கும்படி வேண்டினார். பிரம்மாவும் தன்னுடைய உதவியாளர்களை அழைத்து, முதியவருக்கு தேவையான உணவை வழங்கச் சொன்னார்.

    அவர்களும் முதியவரை உணவருந்தும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும் முதியவர் உணவு தாருங்கள் என்று கையை நீட்டினார். அப்போது அங்கிருந்த அனைத்து உணவுகளும் மாயமாக மறைந்தன. முதியவருக்கு கொடுக்க உணவு இல்லை. இதுபற்றி பிரம்மாவிடம் தகவல் கூறப்பட்டது. அவரும் விரைந்து வந்து, ‘ஐயா! சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். உடனடியாக உணவு தயார் செய்து வழங்கச் சொல்கிறேன்’ என்றார்.

    பிரம்மனுக்கு வந்த சோதனை :

    பசியோடு வந்த முதியவரும் ‘சரி..’ என்று காத்திருக்கத் தொடங்கினார். மீண்டும் உணவு தயாரானது. ஆனால் சமைக்கப்பட்ட உணவு, பாத்திரத்தில் எடுத்து வைக்கப்பட்டதும் மறைந்து போனது. அதைக் கண்ட பிரம்மா, பெரியவர் உருவத்தில் வந்திருப்பது யார்? என்று அறிய தன் கண்களை மூடி தியானித்தார். அவர் முன்பாக விஷ்ணு கையை நீட்டி உணவு வேண்டியபடி தோற்றமளித்தார்.

    இதைக் கண்ட பிரம்மா, கண்களைத் திறந்து, அவரை வணங்கினார். அப்போது முதியவர் உருவில் இருந்த விஷ்ணு, ‘பிரம்மா! உலகத்தினருக்கு நல்வாழ்வு கிடைக்க, நீ செய்த வேள்விகளால் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால்.. தன்னைத் தவிர, வேறு யாராலும் இது போன்ற வேள்விகளை செய்ய முடியாது என்று நினைத்த நீ கொண்ட கர்வத்தால் பெரும் தவறு செய்து விட்டாய். நூறு வேள்விகளைச் செய்ய முடிந்த உன்னால், ஒருவருடைய பசியை போக்க முடியாத கீழ்நிலை ஏற்பட்டுவிட்டது’ என்றார்.

    அதைக் கேட்ட பிரம்மா, ‘இறைவனே! என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய கர்வம் அழிந்து போய்விட்டது. என்னை இந்நிலையிலிருந்து விடுவித்துக் காத்தருளுங்கள்’ என்று வேண்டினார்.

    ‘பிரம்மனே! உன் தவறை உணர்ந்து கொண்ட நீ, இனி எனக்கு எதைச் சமர்ப்பித்தாலும், எனது பசி அடங்கி விடும்’ என்று அருள்புரிந்தார். அதைக் கேட்ட பிரம்மா, தனது கமண்டலத்திலிருந்து ஒரு துளி நீரையும், தன் கையில் வைத்திருந்த துளசி இலையில் ஒன்றையும் இறைவனுக்கு முன்பாகப் படைத்தார். இறைவனின் பசியும் அடங்கியது, பிரம்மவின் கர்வமும் நீங்கியது.

    பின்னர் பிரம்மதேவன், ‘இறைவா! கர்வம் கொள்பவர்கள் தவறை உணர்ந்து திருந்திடவும், அவர்களுடைய நல்வாழ்வுக்கு உதவிடவும் இந்தத் தலத்தில் கோவில் கொண்டு அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தார். விஷ்ணுவும் அவரது வேண்டுகோளை ஏற்றி பிரம்மதேவருக்கு தோற்ற மளித்த உருவத்திலேயே, தனது கையை நீட்டிக் கொண்டு நின்றபடி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

    கோவில் கட்டுமானம் :

    பாண்டிய மன்னன் ஒருவன், தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தினால் துன்பம் அடைந்தான். அந்த துன்பத்தில் இருந்து மீள்வதற்காக பல்வேறு கோவில்களுக்கு பயணம் செய்தான். வழியில் வர்க்கலை எனுமிடத்திற்கு வந்த அவன் அங்கிருந்த கடலில் நீராடினான். கடலில் நீராடியதும் அவனுக்குத் தான் செய்த பாவங்கள் அனைத்திலுமிருந்து விடுபட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்தபடி அங்கேயே ஓரிடத்தில் படுத்து உறங்கிப் போனான்.

    அப்போது, அவன் கனவில் தோன்றிய இறைவன், பிரம்மாவின் வேள்வியைத் தொடர்ந்து, அவருடைய வேண்டுகோளுக்கேற்ப அங்கே கோவில் கொண்டதையும், பிற்காலத்தில் அக்கோவில் கடலுக்குள் மூழ்கிப் போய் விட்டதையும் தெரிவித்தார். கடலில் மூழ்கிக் கிடக்கும் கோவிலில் நிறுவப்பட்ட சிலையை எடுத்துப் புதிய கோவில் ஒன்றைக் கட்டும்படியும் தெரிவித்தார்.

    இறைவன் தன் கனவில் சொன்ன கடல் பகுதியில், அந்தச் சிலையைத் தேடி எடுக்கும்படி தன்னுடன் வந்த படை வீரர்களுக்கு உத்தரவிட்டான். அவர்கள் அந்தக்கடலில் சிலையைத் தேடச் சென்ற போது, கடலின் மேற் பரப்பில் ஒரு இடத்தில் மட்டும் நிறைய மலர்கள் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு, அங்கு கடலினுள் சென்று தேடிச் சிலையைக் கொண்டு வந்தனர். அந்த சிலையைக் கொண்டு மன்னன் கோவிலை நிறுவினான் என்கிறது தல வரலாறு.



    ஆலய அமைப்பு :

    இந்தக் கோவிலின் கருவறை வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது. கருவறையில் இருக்கும் ஜனார்த்தனரின் சிலை கிழக்கு திசையைப் பார்த்தபடி நின்ற நிலையில் உள்ளது. மூலவரின் வலது கை வாயை நோக்கிச் செல்லும்படி இருக்கிறது. கோவில் வளாகத்தில் சிவன், சாஸ்தா, கணபதி, நாகதேவி ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த சன்னிதிகளில் சிவன், சாஸ்தா சன்னிதிகள் தமிழ்நாட்டுக் கட்டிடப் பாணியைக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்குள்ள மூலவருக்கு ஆண்டுதோறும் கிருஷ்ணாஷ்டமி நாளில், தங்கத்தாலான அங்கி அணிவிக்கப்படுகிறது.

    விஷ்ணு உருவாக்கிய சக்கர தீர்த்தம் :

    இந்தக் கோவிலின் எதிர்புறத்தில் விஷ்ணு சக்கரத்தைக் கொண்டு உருவாக்கியதாகக் கருதப்படும் ‘சக்கர தீர்த்தம்’ எனும் பெரிய குளம் ஒன்று இருக்கிறது. இந்தக் குளம் தோன்றியதற்குத் தனியாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

    ஒரு நாள், நாரதர் தனது தந்தையான பிரம்மாவைக் காண பிரம்மலோகத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, நாரதருக்குத் தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்து வந்த இறைவன் விஷ்ணு, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கே தோன்றி மறைந்தார்.

    இறைவன் விஷ்ணுவைக் கண்ட பிரம்மா, இறைவன் விஷ்ணுவைப் பார்த்து வணங்கினார். அப்போது அங்கிருந்த ஒன்பது முனிவர்கள் விஷ்ணு தோன்றி மறைந்ததை கவனிக்காததால், பிரம்மதேவர் அவருடைய மகன் நாரதரைப் பார்த்து வணங்கியதாகத் தவறாக நினைத்துச் சிரித்தனர்.

    அவர்களின் சிரிப்பைக் கண்ட நாரதர், சிறிது நேரத்திற்குள்ளாக அங்கு நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். அதன் பிறகு, அவர் முனிவர்களிடம் நடந்தவைகளை எடுத்துச் சொன்னார். முனிவர்கள், தாங்கள் அறியாமல் செய்த தவறால், தாங்கள் முன்பு செய்த வேள்விகளின் பலன்கள் அனைத்தையும் இழந்து போனார்கள்.

    அப்போது முனிவர்கள், பிரம்மா தங்களை மன்னித்தருளவும், தாங்கள் இழந்த வேள்வியின் சக்திகளை மீண்டும் திரும்பப் பெறுவதற்கும் தகுந்த வழியைக் காட்டும்படி நாரதரிடம் வேண்டினர்.

    உடனே நாரதர், தன்னிடமிருந்த ஆடை ஒன்றைக் கீழ் நோக்கி வீசி, ‘இந்த ஆடை எங்கு சென்று விழுகிறதோ, அங்கு சென்று இறைவனை வழிபட்டு, நீங்கள் இழந்த சக்திகள் அனைத்தையும் மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்.

    அந்த ஆடை விழுந்த இடத்திற்குச் சென்ற ஒன்பது முனிவர்களும், இறைவன் விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றத் தொடங்கினர். அப்போது, அவர்களில் ஒருவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்டே இருந்தது. அவரால் தியானத்தில் சிறிது நேரம் கூட அமர முடியவில்லை. இதனால், கவலையடைந்த முனிவர்கள் இறைவன் விஷ்ணுவிடம், அந்த முனிவரின் தண்ணீர் தாகத்தைப் போக்கிட வேண்டினர்.

    அவர்கள் முன்பாகத் தோன்றிய விஷ்ணு, தன் கையில் வைத்திருந்த சக்கரத்தைக் கொண்டு அங்கு ஒரு குளத்தை உருவாக்கி, அவர்களின் தண்ணீர் தாகத்தைப் போக்கினார். அந்தக் குளமே ‘சக்கர தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

    அமைவிடம் :

    திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 39 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வர்க்கலை. இங்கு அரபிக்கடலின் கரையோரம் ஆலயம் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல எர்ணாகுளத்தில் இருந்து கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வர்க்கலை பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தருமலிங்கமலை. இந்த மலையின் உச்சியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் இறைவன், தருமலிங்கேஸ்வர சுவாமி. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தருமலிங்கமலை. இந்த மலையின் உச்சியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் இறைவன், தருமலிங்கேஸ்வர சுவாமி.

    இந்த மலையின் அடிவாரத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. அதையொட்டி ஒரு திருமண மண்டபம் உள்ளது. திருமண மண்டபத்திற்கு மேல் பகுதியில் இயற்கை வழிபாடாக புற்று வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்ணாந்து பார்த்தால் மலையின் உச்சியில் தருமலிங்கேஸ்வரர் ஆலயம் நம் கண்களுக்குத் தெரியும்.

    சுமார் 100 படிகளைக் கடந்தவுடன் மூன்றடுக்கு ராஜ கோபுரம் உள்ளது. அழகான அந்த கோபுரத்தைக் கடந்து மேலே நடந்தால், இதமான தென்றல் நம்மை தாலாட்டியபடியே தொடர்ந்து வருவதை நாம் ரசனையோடு ரசிக்கலாம். சிறிது தொலைவு சென்றதும் அடியார்சாமி கோவில் வரும்.அதைக் கடந்து நாம் சீரற்ற படிகளைக் கடந்துதான் நடக்க வேண்டும். சில இடங்களில் படிகளே இல்லாமல் சரட்டென்று சரிவாய் இருக்கும் கருங்கற்களில் தைரியமாக காலை வைத்துதான் மேலே ஏற வேண்டும்.

    சுற்றிலும் சில இடங்களில் அடர்த்தியும், சில இடங்களில் அடர்த்தி இல்லாத மரங்களின் கூட்டங்கள். அந்தக் காட்டுப் பகுதியை நாம் காணும் போதே நம் மனம் திக்திக் என்று அடித்துக் கொள்வதை தவிர்க்க இயலாது. அந்த மலைத் தொடரில் யானை, மான், செந்நாய், மலைப் பாம்பு, மயில் போன்ற விலங்குகள் நடமாடுவதுண்டு என்றாலும், நம் கண்ணில் படுவதென்னவோ மயில்களும், குரங்குகளும் தான்.

    மலைப்பாதை முழுவதும் நேரே நடந்து வலதுபுறம் திரும்பி மறுபடியும் நடந்து வலது புறம் திரும்பி, மீண்டும் நடந்து மீண்டும் திரும்பினால் தருமலிங்கேஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.


    தருமலிங்கேஸ்வரர்

    ஆலய அமைப்பு :

    முதலில் ஸ்தூபியும் கொடிமரமும் உள்ளன. அதையடுத்து மகாமண்டபம். நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் உள்ளது. இருபுறம் துவார பாலகர்கள் காவல் நிற்க, உள்ளே கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் ஆவுடையார் மீது சிவலிங்கத் திருமேனியில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். கருவறை நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் மற்றும் வலது புறம் முருகப் பெருமான் திருமேனிகள் உள்ளன.

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை தினம் தினம் குளிப்பாட்டும் காட்சி நம் கண்களை வியக்க வைக்கும் காட்சியாகும். கருவறையின் விமானம் தொலைவிலிருந்து பார்க்கும் பக்தர்களின் கண்களுக்கு நல் விருந்தாக அமைகிறது.

    கிரிவலம் :

    இங்கு மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. இந்த கிரிவலத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்படும் கிரிவல பக்தர்கள் சுமார் 6 கி.மீ தொலைவு நடந்து மலையை சுற்றி வர வேண்டும். சித்திரை பவுர்ணமியில் நடைபெறும் கிரிவலத்தில் சுமார் ஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வது நம்மை வியக்க வைக்கும் உண்மை.

    தினசரி இங்கு காலை பூஜை நடக்கும் போது ஒரு புதுமுறை கையாளப்படுகிறது. ஒரு தட்டில் நிறைய உதிரிப்பூக்களுடன் கருவறையை விட்டு வெளியே வரும் அர்ச்சகர் வெளியே நிற்கும் பக்தர்கள் அனைவர் கரங்களிலும் பூக்களை அள்ளித் தருகிறார். பின் அனைவரையும் தங்கள் விருப்பம் போல் பிரார்த்தனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார். பிறகு அந்தப் பூக்கள் அனைத்தையும் ஒரு தட்டில் திரும்ப வாங்கிக் கொண்டு கருவறையின் உள்ளே செல்கிறார். கருவறையில் உள்ள தருமலிங்கேஸ்வரருக்கு அந்த உதிரி மலர்களாலேயே அர்ச்சனை செய்வது நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.


    முருகப்பெருமான், கோவில்தோற்றம்

    திருவிழாக்கள் :

    தினசரி மூன்று கால பூஜைகள் நடக்கும் இந்த மலைக் கோவிலில் மாதந்தோறும் பிரதோஷம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மாத பவுர்ணமி நாட்கள், பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலிய நாட்களில் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆலயத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.

    முதல்நாள் மதுக்கரை ஊர்மக்களும், இரண்டாம் நாள் திருமலையம்பாளையம், மூன்றாம் நாள் எட்டிமடை மக்கள் என மூன்று நாட்களும் மூன்று ஊர்மக்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்து மகிழ்கின்றனர்.

    தைப்பூசம், நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் பிறந்த குழந்தையை அழைத்து வந்து இறைவன் சன்னிதியில் மொட்டையடித்து, இறைவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது இங்கு இயல்பாக காணும் காட்சிகள்.

    இறைவன் சன்னிதியில் தமிழ் முறைப்படி திருமணங்கள் நடப்பதும் வாடிக்கையான காட்சிகள்.

    சுமார் 1,000 அடி உயரத்தில் இருக்கும் இறைவனை தரிசிக்க நாம் சுமார் 818 படிகளை கடந்து செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பும் போது நம் மனதில் ஒரு உன்னதமான அமைதியும் மகிழ்ச்சியும் நிலவி நிற்பதை நாம் தவிர்க்க இயலாது. மாலை ஆறு மணிக்கு மேல் மலைமீது ஏற அனுமதியில்லை. கோவையிலிருந்து இத்தலம் செல்ல நிறைய பேருந்து வசதிகளும், ஆட்டோ, கால் டாக்ஸி வசதிகளும் உள்ளன.

    கோவை-பாலக்காடு சாலையில் கோவையிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள மரப்பாலம் என்ற ஊரில் உள்ளது இந்த மலை. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவு நடந்தால் தருமலிங்க மலையை அடையலாம்.
    விருதுநகரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிவகாசி பத்திரகாளியம்மன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    பிரம்மதேவனின் புதல்வனான தட்சன், தன் மகளான தாட்சாயனியை ஈசனுக்கே தாரைவார்த்துக் கொடுத்தார். இருப்பினும் தனது அகந்தையால் சிவ பெருமானைப் பகைத்துக் கொண்டான். நித்தமும் சிவ நிந்தனையையே சிந்தையில் கொண்டான். ஒருமுறை, தட்சன் ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு சிவனையோ தாட்சாயனியையோ அழைக்காமல் தவிர்த்தான். இதனால் வெகுண்ட ஈசன், தட்சனின் அந்த முறைகெட்ட யாகத்தை அழிக்க தம்மில் இருந்து வீரபத்திரரை உண்டாக்கினார். அவரது அருகில் இருந்த அம்பாளின் கோபத்தில் இருந்து பத்திரகாளி உருவானாள். வீரபத்திரரும், அவரது துணைவியாய் உண்டான பத்திரகாளியுமே ஈசனின் கட்டளைப்படி தட்சனின் யாகத்தை அழித்தனர்.

    பத்திரகாளியம்மன் ஆலயம் :

    அதன் பிறகு ஈசனின் கோபத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரும், அம்பாளின் கோபத்தில் இருந்து தோன்றிய பத்திரகாளியும் ஈசனின் கட்டளைப்படி உலக மக்களின் நல்வாழ்வுக்காக ஆங்காங்கே திருக்கோவில் கொண்டனர். அப்படி பத்திரகாளியம்மன் விரும்பி திருக்கோவில் கொண்ட சில தலங்களில் முதன்மையானது சிவகாசி பத்திரகாளியம்மன் திருக்கோவில்.

    கருவறையில் பத்திரகாளியம்மன் எட்டு திருக்கரங்களுடன் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், ஹஸ்தம், நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள். அன்னை கருவறையில் ஒய்யாரமாக தனது வலது திருபாதத்தை தூக்கி குத்துக் காலிட்டு, தனது இடது திருபாதத்தை அரக்கனின் தலைமேல் வைத்தவண்ணம் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருக்கிறாள். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வம் இவள்.

    இந்த அன்னையை பவுர்ணமி, செவ்வாய், வெள்ளி, அமாவாசை முதலிய நாட்களில் அந்திசாயும் பொழுதில் வழிபடுவது நல்லது. வழிபாட்டின் போது அம்மனின் கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, 8 உதிரி எலுமிச்சை பழங்களை அவள் திருப்பாதத்தில் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வியாபாரத்தில் மிகுந்த லாபம் கிடைக்கும். சிலர் தங்கள் வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை, பத்திரகாளி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். தன லாபம் கிட்ட, எதிரிகள் தொல்லை அகல, சுபகாரிய தடைகள் அகல செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் தொடர்ந்து 8 வாரங்கள் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி பத்திரகாளி அம்மனை வழிபட வேண்டும். குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய்களும், திருஷ்டி கோளாறுகளும் இவளை வழிபட நீங்குகிறதாம்.

    ஆலய அமைப்பு :

    இந்தத் திருக்கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கன கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. ஆலய வெளிப் பிரகாரத்தில் நாகராஜா, ஐயப்பன், அனுமன், லட்சுமி நாராயணர் சமேத அஷ்டலட்சுமி சன்னிதிகள் உள்ளன. இத்தல விநாயகர் பஞ்சமுக விநாயகர். இவரும் ஆலய வெளி சுற்று பிரகாரத்தில்தான் உள்ளார். இவரை சங்கட ஹர சதுர்த்தி நாட்களில் வழிபட்டு வரலாம். மேலும் தொடர்ந்து 8 சங்கடஹர சதுர்த்தியில் அருகம் புல் சாற்றி வழிபட வினைகள் அறுபட்டு நம் சங்கடங்கள் யாவும் தீரும்.

    அஷ்ட லட்சுமி சன்னிதியில் வெள்ளிக்கிழமை மற்றும் அட்சய திருதியை நாட்களில் பசு நெய் தீபம் ஏற்றி, தாமரை, மரிக்கொழுந்து மாலை சூட்டி லட்சுமியின் துதியை பாராயணம் செய்து வந்தால், வறுமை அகலும். கடன் தொல்லை நீங்கும். செல்வம் சேரும். அஷ்டலட்சுமியுடன், இத்தலத்தில் உள்ள பைரவரையும் தேய்பிறை அஷ்டமி நாளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் திரண்ட செல்வம் வந்து சேரும்.



    இத்தல வீரபத்திரர், அனுமன் சன்னிதியில் பவுர்ணமி நாளில் வெண்ணெய் சாத்தி, வெற்றிலை மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபட உடல் நோய்கள், மன நோய்கள் அகலும். இங்கு ஆலய உள் பிரகாரத்தில் கன்னி விநாயகர், பைரவர், வீரபத்திரர், மாட சுவாமி, வெயிலுகந்த அம்மன், இருளப்ப சுவாமி, கருப்ப சுவாமி, பேச்சியம்மன் சன்னிதிகள் உள்ளன. பத்திரகாளியம்மனின் சகோதரி பேச்சியம்மன். இந்த அம்மனுக்கு பஞ்சமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 11 பஞ்சமி நாட்கள் சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சித்து வந்தால், சொல்வாக்கும், நல்ல செல்வாக்கும் கிடைக்கும்.

    ம்பிக்கை அவசியம் :

    குழந்தை பாக்கியம் வேண்டு பவர்கள், இத்தல அம்பாள் பத்திரகாளியம்மனிடம், தொட்டில் பிரார்த்தனை செய்து, அவளது கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வர உடனே குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகள் இங்கு வந்து அம்மனிடம் வேண்டிக்கொள்ள கண்டிப்பாக குழந்தைபாக்கியம் அளித்திடுவாள் பத்திரகாளியம்மன். ஆம்! நமக்கு தேவை அவள்பால் உறுதியான நம்பிக்கை மட்டுமே. அதுவும் நாம் அவள்பால் வைக்கும் நம்பிக்கை அபிராமி பட்டர் போல இருக்க வேண்டும்.

    அபிராமிபட்டர் மிகச்சிறந்த அன்னை பக்தர். அவர் திருக்கடையூரிலே அருளும் அன்னை அபிராமியிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இருந்தாலும் அன்னை அவரது முதல் பாடலிலோ, 50-வது பாடலிலோ, 60-வது பாடலிலோ கூட வந்து அமாவாசையை பவுர்ணமி ஆக்கவில்லை. அவரை நன்கு சோதித்து, தன் பால் அவர் வைத்துள்ள நம்பிக்கையை சோதித்து, அவரது 79-வது அபிராமி அந்தாதி பாடல் பாடும் போது தான் அமாவாசையை பவுர்ணமி ஆக்கினாள். அதுபோன்றதொரு நம்பிக்கையை நாமும் பத்திரகாளியம்மன் மீது வைக்க வேண்டும்.

    இங்கு சித்திரையில் நடக்கும் கயிறு குத்து திருவிழா, பொங்கல் விழா, தேரோட்டம் வெகு சிறப்பானதாகும். கயிறு குத்து என்பது உடம்பில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அன்னையை வழிபடுவது. உடல் நோய், கண் திருஷ்டி அகல இந்த நேர்ச்சையை செய் கிறார்கள்.

    ஜாதக ரீதியாக லக்னத்தை, செவ்வாய் பார்த்தால் அந்த ஜாதகத்திற்குரிய குழந்தைகள் துறுதுறுவென இருப்பார்கள். இத்துடன் ராகு போன்ற கிரகங்கள் பார்த்தால், குழந்தைகளின் பிடிவாதம் பெருகும். பிள்ளைகளை நல்வழியில் கட்டுப்படுத்தவும், குறைந்த அறிவுத்திறன், மெதுவாக புரிந்து கொள்ளும் திறன் போன்ற பாதிப்பு உள்ள குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து, இத்தல பத்திரகாளியை அமாவாசை, பஞ்சமி, பவுர்ணமி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் குறைகள் அகலும் என்கிறார்கள். இத்தல வெயிலுகந்த அம்மனுக்கு இளநீர், தயிர், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட வெயிலின் தாக்குதலால் ஏற்படும் நோய்கள் அண்டாது. மேலும் வெயிலுகந்த அம்மனுக்கும், பத்திரகாளி அம்மனுக்கும் தொடர்ந்து 18 நாட்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால், கண்டிப்பாக மழைபொழியும் என்கிறார்கள்.

    ஆதி பத்திரகாளியம்மன் :

    இத்தல ஆலயத்தின் உள்ளே பத்திரகாளி அம்மனின் எதிரே உள்ள நந்தவனத்துக்குள் ஆதி பத்திரகாளி பீடம் உள்ளது. முதன் முதலில் இத்தல பத்திரகாளி அம்மன் அமர்ந்த ஆதி பீடம் இதுவாகும். இந்த நந்தவனத்திற்குள் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களுக்கு அனுமதி இல்லையாம். உடல் உறுப்புகள் நலம் அடையும் பொருட்டு பத்திரகாளியம்மனிடம் வேண்டிக்கொண்ட பக்தர்கள், அவள் அருளால் நலம் பெற்றதும் மண், வெள்ளியினால் ஆன கை, கால் போன்ற உடல் உறுப்புகளையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மண்ணில் செய்த வீடு போன்ற உருவத்தை இங்கு அம்பாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

    விருதுநகரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் சிவகாசி உள்ளது.
    விழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற பகுதியில் இருக்கிறது கூத்தாண்டவர் கோவில். இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    விழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற பகுதியில் இருக்கிறது கூத்தாண்டவர் கோவில். இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இந்த திருவிழாவில்தான் திருநங்கைகள் கலந்து கொண்டு, அரவானை கணவனாக நினைத்து தாலி கட்டிக்கொள்ளும் வைபவம் நடைபெறும். இந்த சிறப்பு மிகுந்த விழா சித்ரா பவுர்ணமியன்று வெகு விமரிசையாக நடைபெற்று நிறைவுபெறும்.

    மகாபாரத புராணக் கதையின் முக்கிய கதாபாத்திரமான அர்ச்சுனனுக்கும், நாகக்கன்னிக்கும் பிறந்தவர் அரவான். மகாபாரதத்தில் 18 நாட்கள் நடைபெற்ற குருச்சேத்திரப் போரை மையமாகக் கொண்டது அரவானின் கதை. குருச்சேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெற, காளி தேவிக்கு பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு எந்த குற்றமும் இல்லாத, சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தேவைப்பட்டது. பாண்டவர் தரப்பில் சகல லட்சணமும் பொருந்தியவர்கள் மூன்று பேர் இருந்தனர். ஒருவர் கிருஷ்ணர், மற்றவர்கள் அர்ச்சுனனும், அவனது மகன் அரவானும். இவர்களில் கிருஷ்ணரும், அர்ச்சுனனும் குருச்சேத்திரப் போருக்கு அவசியத் தேவை உள்ளவர்கள். எனவே அரவான் அந்த பலிக்காக தேர்வு செய்யப்பட்டான்.

    பலியாக ஒப்புக்கொண்ட அரவான் மூன்று கோரிக்கைகளை வைத்தான். பலியாகும் முன் ஒரு நாள் மட்டும், ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ வேண்டும். பலி கொடுத்ததும் தன்னுடைய கண்களால் குருச்சேத்திர போரை முழுமையாக பார்க்க வேண்டும். தனக்கு பூலோகத்தில் வழிபாடு நடைபெற வேண்டும். பின்வரும் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிவிட கிருஷ்ணருக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் ஒரே நாளில் இறக்கப் போகும் ஒருவனை எந்த பெண் மணந்து கொள்ள முன் வருவாள். எனவே கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணம் செய்து கொண்டாள். அரவான் இறந்ததும் தாலி விலக்கி விதவைக் கோலம் கொண்டாள்.

    இதனை நினைவு கூறும் வகையிலேயே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா நடக்கிறது. 18 நாட்கள் நடைபெற்ற குருச்சேத்திரப் போரை நினைவு கூறும் வகையில், இந்த ஆலய திருவிழாவும் 18 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரா பவுர்ணமி அன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு, திருநங்கைகள் கோவில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக் கொள்வார்கள். அன்று இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் என்று கோவில் விழா களைகட்டும்.



    மறுநாள் பொழுது விடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிற்பம், கூத்தாண்டவர் கோவிலில் இருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுத களம் கொண்டு செல்லப்படும். வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கும் வைபவம் அப்போதுதான் அரங்கேறும். அமுதகளத்தில் அரவான் தலை துண்டிக்கப்படும். திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறும்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்களுக்கு முன்பாகவே திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் குவியத் தொடங்கிவிடுவார்கள். திருநங்கைகளின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும், அவர்களை கலைகளை வெளிப்படுத்தும் விழாவாக இந்த திருவிழா அமைகின்றது.

    கூத்தாண்டவர் கோவில்கள் :

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் முதல் கோயம்புத்தூர் வரை உள்ள பகுதிகளில் மட்டும் கூத்தாண்டவர் கோவில்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முப்பத்திரண்டு கோவில்கள் பிரபலமானவை, அதில் முதன்மையான இடத்தை கூவாகம் பெறுகிறது.

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர் (நீலிக்கோணாம்பாளையம்), கஞ்சப்பள்ளி, குமாரமங்கலம், குறிச்சி, குட்டாம்பட்டி, துடியலூர். கடலூர் மாவட்டத்தில் கொத்தட்டை, புவனகிரி, தேவனாம்பட்டணம், திருவேட்களம். ஈரோடு மாவட்டத்தில் களரிகியம், சேலம் மாவட்டத்தில் பழையசூரமங்கலம், பனை மடல், பேளூர், தெடாவூர். திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாப்பட்டு, கீழ்வானம்பட்டி, தேவனூர், வேதாந்தவதி, வீரனேந்தல். வேலூர் மாவட்டத்தில் சோழவரம், ஒடுகத்தூர், புலிமேடு, புதூர், வெள்ளையம்பட்டி, வரகூர். விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம், கொணலூர், பெண்ணைவளம், தைலாபுரம். புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கரை, பிள்ளையார்குப்பம் ஆகிய இடங்களில் அரவானுக்கு ஆலயங்கள் உள்ளன.

    விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் சந்திப்பில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கூவாகம்.
    ×