search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூவாகம் திருவிழா"

    • திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.
    • திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு விடிய விடிய கும்மியடித்து ஆடி பாடி மகிழ்வார்கள்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் சாமி ஊர்வலம் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமிருந்து வரும் திருநங்கைகள், வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு விடிய விடிய கும்மியடித்து ஆடி பாடி மகிழ்வார்கள்.

    அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து நாளை 3-ந்தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறும். பின்னர் தேவநாயக செட்டியார் பந்தலடியை அரவான்கள் பலியிடுவது நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்ந்த திருநங்கைகள் அரவான்கள் பலிக்கு பிறகு தாலி அறுத்து வளையல்களை உடைத்து அருகில் உள்ள குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலத்தில் வீட்டிற்கு திரும்புவார்கள். தொடர்ந்து 4-ந்தேதி விடையாத்திரையும், 5-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தலைமையில் நடந்து வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை உதவி சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×