என் மலர்tooltip icon

    கோவில்கள்

    நாகர்கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது. இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.
    கி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இவர் சிறந்த கிருஷ்ண பக்தர் ஆதலால் சர்வாங்கநாதன் என்று அழைக்கப்பட்டவர். இச்செய்தி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வரலாற்றிலும் திருவிதாங்கூர் வைக்கம் கருவூல ஆவணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மன்னர் திருக்குறுங்குடி கோயிலில் புகழ் வாய்ந்த மணி ஒன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.

    கி.பி.15-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வைஷ்ணவ யாத்ரீகர்கள் வட இந்தியாவிலிருந்து இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர். கங்கை மற்றும் யமுனா எனும் பகுதிகளின் இடையே இருக்கும் தீர்க்கப்பட்டர் என்னும் வைஷ்ணவ பக்தரால் பல்வேறு பொருள்கள் இத்திருக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியின்படி இச்சம்பவம் கி.பி.1464-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சதுர்வேதி மங்கலத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு 2 அந்தண பெண்களையும், சிறிய அளவில் நிலங்களும் மன்னர் ஆதித்ய வர்மாவால் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதை திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் வைஷ்ணவ அடையாளத்துடன் கூடிய செம்பு பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் வடசேரி மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதியே அன்றைய சதுர்வேதி மங்கலம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.



    தற்போதுள்ள நாகர்கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது. இக்கோவிலில் வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ண மூர்த்தி தனது இருகரங்களிலும் வெண்ணெய்யை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறார்.

    இத்தலத்தை குமரியின் குருவாயூர் என்று சிறப்பாக அழைப்பர். தினந்தோறும் கிருஷ்ண சாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. இது அவரது பக்த கோடிகளுக்கு ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ண சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.

    கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துடன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் வடசேரியை சார்ந்த கே.கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கமிட்டி மூலமாக சிறப்புற கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சரின் அன்னதான திட்டத்தின் கீழ் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இக்கோவிலின் தேர் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. நாளை (புதன்கிழமை) இரவு 11 மணிக்கு சாமி தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்த கோவிலின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள்.

    கூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் தனது ஷேத்திர கோவையில் ‘கூழையூர்’ என்று பாடி வழிபட்டதால் ‘கூழையூர்’ என்றும், திருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும், வியாழ பகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.

    கி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின் படி கி.பி.1184-ம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் கற்கோவிலாக மாற்றிக் கட்டினான். இந்த தலத்தில், உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் ஆகிய மூன்று நிலைகளையும் ஒரே திருமேனியில் தாங்கியபடி, ஆகாயலிங்கமாக இறைவன் எழுந்தருளியுள்ளார்.

    சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    பிறகு சுக பிரம்ம மகரிஷியின் ஆலோசனைப்படி, வசிஷ்டர் முதலான சப்த ரிஷிகள், வசிஷ்ட நதிக்கரையோரம் 5 இடங் களில் சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த 5 தலங்களே வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூத தலங்கள் என்று போற்றப்படுகிறது. இவற்றுள் ஆகாய தலமாக விளங்குகிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்.

    வியாழ பகவானுக்கு தரிசனம் :

    ஒரு முறை இந்திரன், தேவலோகத்தில் தனது சிம்மாசனத்தில் தேவர்கள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது தேவர் களின் குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். மாயையால் செல்வச் செருக்கும், அதிகார ஆணவமும் இந்திரனின் கண்களை மறைத்த காரணத்தால், தன்னுடைய குருவுக்கு அவன் எழுந்து நின்று மதிப்பளிக்க தவறினான். இதனால் கோபம் கொண்ட வியாழ பகவான் அங்கிருந்து வெளியேறினார். தேவகுரு இல்லாததாலும், அவரது சாபத்தாலும் இந்திரசபை பொலிவிழந்தது.

    தனது தவறை உணர்ந்த இந்திரன் வியாழ பகவானை பல இடங்களிலும் தேடினான். ஆனால் அவரோ தன்னை யார் கண்ணுக்கும் தெரியாத அரூபியாக மாற்றிக்கொண்டு, தனது கவுரவத்தை இழந்த வருத்தத்தில் வனாந்தரத்தில் வாசம் செய்தார். அப்போது கூகையூரில் நெல்லி வனத்தில் எழுந்தருளி இருந்த இறைவனை, மலர் தூவி, வேதங்கள் ஓதி தம் குறை தீர்க்க வேண்டினார். அவருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தருளினார்.

    அப்போது சாபம் பெற்ற இந்திரனும் தமது தவறை உணர்ந்து, இங்கு வந்து வியாழ பகவானை வணங்கினான். அதன்பிறகு மீண்டும் தேவகுருவாக வியாழ பகவான் புகழுடன் வீற்றிருந்தார். வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இந்த திருத்தலத்தில் உள்ள சொர்ண புரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.



    ஆலய அமைப்பு :

    கூகையூரின் வடகிழக்கு பகுதியில் பரந்த நிலப்பரப்பில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சொர்ணபுரீஸ்வரர் கோவில். மூலவர் சொர்ணபுரீஸ்வரர். அம்பாள் திருநாமம் பெரியநாயகி. தலவிருட்சம் நெல்லிமரம், தீர்த்தம் வசிஷ்டநதி. இந்தக் கோவிலின் பிரதான வாசல் மேற்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடியது. இதையடுத்து வலப்பக்கம் 12 தூண்களுடன் கூடிய பெரிய வசந்த மண்டபம் உள்ளது.

    தொடர்ந்து பலிபீடம் மற்றும் பெரிய அதிகார நந்தி, பந்தல் மண்டபத்தைக் கடந்தால் கருவறையை அடையலாம். கருவறையில் கிழக்கு நோக்கியபடி சொர்ணபுரீஸ்வரர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மூலவரின் கருவறை பிரகாரத்தில் தென்புறம் நர்த்தன கணபதி, சூரியன், சந்திரர்கள் மற்றும் நாயன்மார்கள், தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார், வடக்கில் பிரம்மா, விஷ்ணு, சொர்ண துர்க்கை விக்கிரகங்கள் உள்ளன. பிரகார வலத்தில் கற்பக விநாயகர், அழகிய வேலைப்பாடு கொண்ட சுப்ரமணியர், சொக்க நாதர், சண்டிகேசுவரர் ஆகியோரை தரிசிக்கலாம்.

    ஆரம்ப கால கட்டத்தில் இருந்த அம்மன் சன்னிதி முதல் பிரகாரத்தின் திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் அமைந் திருந்தது. தற்போது இந்த இடத்தில் ஆதி அம்மன் எழில்மிகு தோற்றத்துடன் அருள்பாலிக்கிறாள். அதன்பிறகு குலோத்துங்க சோழன் காலத்தில் அம்மனுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டது. அதில் உள்ள அம்மன் பெரியநாயகி என்ற பெயருடன் வீற்றிருக்கிறாள். மேலும் ஆலயத்தில் பைரவர் சன்னிதி, நவக்கிரகங்களும் இருக்கின்றன.

    கோவிலின் மேற்கு திருச்சுற்று மண்டபத்தில் விநாயகர், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், ஸ்ரீதேவி- பூதேவி சமேத திருமால், ஆதி மகாவிஷ்ணு, ஜேஷ்டாதேவி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். தென்புறம் பிரதோஷ நாயகர், நடராஜர் மூர்த்தங்கள் உள்ளன.

    தீவினை அகற்றும் காலபைரவர் :

    இந்த கோவிலில் காலபைரவர் சேத்திரபாலகராகவும், சொர்ணஆகர்ஷண பைரவராகவும் வேண்டுவன எல்லாம் அருளுகிறார். அவரை வழிபட பகை, பயம், வறுமை நீங்கி இழந்தவற்றை மீண்டும் பெற்று வளமுடன் வாழ்வார்கள். அஷ்டமியில் நெய்விளக்குடன் முந்திரி மாலை அணிவித்து, அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். தீவினைகள் அகலும். நல் வினைகள் சேரும்.



    108 சிவலிங்க வழிபாடு :

    சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள அம்பாள் பெரிய நாயகி, பக்தர்களுக்காக 108 சிவலிங்கங்களை தனது சன்னிதியில் நிறுவி வழிபடுவது இங்கே விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலில் திருமண வயதை எட்டிய கன்னியர்களும், காளையர்களும் இங்கு வழிபட்டு வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் துர்க்கை தேவிக்கு கால் மண்டலம் திருவிளக்கு ஏற்றி வழிபட விரைவில் திருமணம் நடை பெறும். இங்கு மணம் செய்துக்கொண்டால் நன்மக்கட்பேறு பெறுவதுடன், இல்லறவாழ்வில் பிரிவே வராது என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    கூகையூர் குடங்கையழகு :

    பெரியநாயகி அம்மன் கருவறை முன்புறம் உள்ளது, ‘கூகையூர் குடங்கையழகு’ எனப்போற்றப்படும் குபேரஸ்தான மண்டபம். இந்த குடங்கையை (மண்டபத்தை) தாங்கி நிற்பது நான்கு இசைத்தூண்கள். இவை சிற்பக்கலையில் வல்லுனர்களான தேவ சிற்பிகளால் வடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த தூண்கள் கல்நாண்களுடன் கூடிய ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கிய வீணைகளாக செதுக்கப்பட்டவை.

    இவை ஏழு ஸ்வரங்களின் ராகங்களை வெளிப்படுத்துகின்றன. இதன் விதானத்தில் எழில்மிகு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவில் 9 சதுரங்களை உள்ளடக்கிய தாமரை மொட்டு வடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் சோழர்கால சிற்பக்கலை காணப்படுகிறது. இந்த குடங்கையழகையும், விதான சிற்ப எழிலையும் மற்றும் இசைத்தூண் களையும் உலகத்தரம் வாய்ந்த கலைக்கு ஒப்பிடுகிறார்கள் சிற்ப வல்லுனர்கள். முகூர்த்த நாட்களின் போது இந்த மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இங்கு மணமுடிக்கும் மணமக்கள் வாழ்க்கையில் சகல ஐஸ்வரியங்களும் பெற்று வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    திருவிழாக்கள் :

    இந்தக் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த் திருவிழா, ஆடிப்பூரம், ஆடிக் கிருத்திகை, ஆவணி சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்தசஷ்டி விழா, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், மகர சங்கராந்தி, தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

    சேலத்தில் இருந்து 74 கிலோமீட்டர் தூரத்திலும், சின்னசேலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும், சேலம்-ஆத்தூர்-விருத்தாசலம் சாலையில், சின்னசேலம் கூட்டு ரோட்டில் இருந்து 6 கி.மீ. தூரத்திலும் உள்ளது கூகையூர். ஆத்தூர், தலைவாசல் மற்றும் சின்னசேலம் கூட்டுரோட்டில் இருந்து குரால் கிராமம் வழியாக கூகையூர் செல்ல ஏராளமான பஸ்கள் உள்ளன.
    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சவுமியநாராயணர் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உலக உயிர்களுக்காக நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 95-வது தலம், நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டியருளிய இடம், இந்திரன் பூஜித்த சவுமியநாராயணர் விக்கிரகம் உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது சவுமியநாராயணர் திருக்கோவில். இந்த ஆலயம் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் இருக்கிறது.

    ல வரலாறு :

    பிரம்மதேவரிடம் வரம் பெற்ற இரண்யகசிபு, தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி மகாவிஷ்ணுவை வேண்டினர் தேவர்கள். இதையடுத்து திருமால், இரண்யகசிபுவை வதம் செய்வது பற்றி ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனால் தேவர்கள், ‘இரண்யகசிபுவின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்றனர்.

    அதன்படி இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அதற்கு ஒரு காரணம் இருந்தது. இந்தப் பகுதியில் கதம்ப மகரிஷி என்பவர் விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவம் இருந்து வந்தார். அவர் தன்னுடைய தவத்திற்கு எந்த வித தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவேதான் இந்த இடத்தை திருமால் தேர்வு செய்தார்.

    ஆலோசனை நடந்தபோது, தான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்யப்போவதாக விஷ்ணு தெரிவித்தார். இதையடுத்து அந்த அவதாரத்தை தங்களுக்கு காட்டியருள வேண்டும் என்று, தேவர்களும், கதம்ப மகரிஷியும் கோரிக்கை வைத்தனர். அதன்படி நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே, இறைவன் இத்தலத்தில் தேவர்களுக்கு தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். பின்னர் அவர்களுக்கு நின்ற, நடந்த, இருந்த, கிடந்த என நான்கு கோலங்களைக் காட்டி, இங்கு எழுந்தருளினார்.

    இந்த ஆலயத்தின் விமானம் அஷ்டாங்க விமானமாகும். இது ஓரிரு கோவில்களிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் மூன்று தளங்களாக உள்ளது. விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது விசேஷமாகும். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

    இத்தல இறைவனான சவுமியநாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். இத்தல இறைவனை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து வழிபட்டுள்ளனர்.



    விளக்கு வழிபாடு :

    இந்த ஆலயத்தில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், மாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக் கரையில் ஏற்றிவைத்து வழிபடுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

    ராமானுஜரை வாழ்த்திய நம்பி :

    திருக்கோஷ்டியூரில் நம்பி என்பவரிடம், திருமந்திர உபதேசம் பெறுவதற்காக ராமானுஜர் சென்றார். நம்பியின் இல்லத்திற்கு வெளியில் நின்று, ‘நான் ராமானுஜன் வந்திருக் கிறேன்’ என்றார்.

    அதைக் கேட்ட நம்பி, ‘நான் இறந்த பிறகு வா’ என்று கூறி அனுப்பிவிட்டார். இப்படியே 17 முறை வந்து திரும்பிச் சென்ற ராமானுஜர், மறு முறை வரும்பொழுது, ‘அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார்.

    இதையடுத்து அவருக்கு ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை நம்பி உபதேசம் செய்தார். மேலும் இந்த மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம். மீறி சொன்னால் நரகம் கிடைக்கும் என்றும் எச்சரித்து அனுப்பினார்.

    ஆனால் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்த ராமானுஜர், சவுமிய நாராயணர் ஆலய கோபுரத்தில் ஏறி நின்று, நாராயண மந்திரத்தை சத்தமாக கூறினார். இதனால் கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார்.

    அவரிடம் ராமானுஜர், ‘எனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே. அதுபோதும்’ என்றார்.

    இதனைக் கேட்டு மகிழ்ந்த நம்பி, ‘நீ என்னிலும் பெரியவர்’ என்று கூறி கட்டித் தழுவிக்கொண்டார்.

    மதுரையில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் சென்று, அங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் திருக்கோஷ்டியூரை அடையலாம்.
    சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வங்கக் கடலோரம் அமைந்திருக்கிறது அஷ்டலட்சுமி திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வங்கக் கடலோரம் அமைந்திருக்கிறது அஷ்டலட்சுமி திருக்கோவில். மும்பை நகரில் அருள்பாலிக்கும் மகாலட்சுமி தாயார் ஆலயத்தைப் போலவே, சென்னையில் ஓர் ஆலயம் அமைய வேண்டுமென்று காஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகள் ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தின் பேரில் 1974-ம் ஆண்டு ஆலயப் பணிகள் தொடங்கப்பட்டு 1976-ல் நிறைவு பெற்றது.

    இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தரைத்தளம் சக்கரமாகவும், மொத்த அமைப்பும் மேருவாகவும், இறை தரிசனத்திற்காக மேல் பகுதிக்குச் சென்று கீழே இறங்கி வரும் பாதை ஓம் வடிவிலும் இருப்பதைக் காணலாம். கருவறையின் முன்புறம் இருபத்து நான்கு தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் உள்ளது. மகாலட்சுமி சன்னிதியை வணங்கி விட்டு வரும் பொழுது, 18 படிகளை காணலாம். இந்த படிகள் 18 தத்துவங்களின் உருவாய் அமைக்கப்பட்டுள்ளன. சிற்ப ஆகம விதிப்படி படிகள் குறுகலாக 28 அங்குல அளவில் கட்டப்பட்டுள்ளன.

    இந்த ஆலயத்தை சிலர் ‘ஓம்காரத் தலம்’ என்கின்றனர். வற்றாத நீர்நிலைகள் உள்ள இடத்திலோ, ஆநிரைக் கூட்டங்கள் வாழும் இடத்திலோ, எந்நேரமும் வேத மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இடத்திலோ, ‘ஓம்’ என்ற பிரணவ ஒலி முழங்கிக் கொண்டிருக்கின்ற இடத்திலோ ஆலயம் அமைப்பது சிறப்பானது என ஆகமங்களும், புராணங்களும் கூறுகின்றன. அதன்படி ‘ஓம்’ என்ற பிரண ஒலியை ஏற்படுத்தும் வங்கக் கடற்கரையோரம் இந்த ஆலயம் அமைந்திருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

    மூலவர் சன்னிதியான மகாலட்சுமியின் கருவறை முற்றிலும் கருங்கல்லினால் ஆன கர்ப்பக் கிரகம் ஆகும். இங்கு மகாலட்சுமி தாயார், பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக் கிறார். இரண்டு திருக்கரங்களும் அபய மற்றும் வரத முத்திரையை காட்டியபடி அருள்கிறார். இந்த ஆலயத்தில் மகாலட்சுமி தாயார் தான் முதன்மையானவர் என்றாலும், உற்சவ மூர்த்தியாக மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவாக திருமணக் கோலத்தில் காட்சி தருவது சிறப்புக்குரிய அம்சமாகும்.

    ஆலயத்தில் தசாவதார பெருமாள், கமல விநாயகர், குருவாயூரப்பன், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், தன்வந்திரி பகவான், சங்கநிதி, பத்மநிதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.

    திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள், லட்சுமி சீனிவாசருக்குத் திருக்கல்யாண உற்சவம் பிரார்த்தனை நடத்தினால் விரைவில் திருமணம் நடைபெறும். அஷ்ட லட்சுமிகளும் இந்த ஆலயத்தில் இருப்பதால், குழந்தை பாக் கியம், செல்வ வளம், கல்வி மேன்மை, மன தைரியம், உள்ளிட்ட அனைத்து பலன்களையும் பெறலாம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

    இந்த ஆலயத்தைச் சென்றடைய சென்னை கோயம்பேடு, சென்னை சென்ரல் பஸ் நிலையங் களில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.



    ஐஸ்வரியங்கள் தரும் அஷ்டலட்சுமிகள் :

    இந்த ஆலயத்தில் அனைத்து ஐஸ்வரியங்களையும் அருளும் அஷ்டலட்சுமிகளின் சன்னிதிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கலாம்.

    ஆதி லட்சுமி: திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய முதல் லட்சுமியே ‘ஆதி லட்சுமி’ ஆவார். ஆலயத்தின் தரைத்தளத்தில் தெற்கு முகமாக இந்த ஆதி லட்சுமி அருள்புரிகிறார். அமர்ந்த நிலையில் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்ட படியும் இருக்கிறார். தொங்க விட்ட பாதத்தின் கீழ் பூர்ணகும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் போன்ற அபூர்வ மங்கள அம்சங்களுடன் காட்சி தருகின்றார்.

    தான்ய லட்சுமி: வளமான தானிய வகைகளை வழங்குபவள் ‘தான்ய லட்சுமி’ ஆவார். தரைத்தளத்தில் மேற்கு நோக்கியபடி இந்த சன்னிதி அமைந்துள்ளது. அமர்ந்த வண்ணம் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்டும், யானையை பீடமாகக் கொண்டு அமர்ந்திருக்கிறார் இந்த அன்னை. ஆறு திருக் கரங்களைக் கொண்ட தான்ய லட்சுமியின் வலது கரத்தில் தானிய நெற்கதிர், அபய ஹஸ்தம், அம்பும், இடது கரத்தில் வில், கரும்பு, வரத ஹஸ்தம் ஆகியவை இருக்கிறது.

    தைரிய லட்சுமி: மனதிற்கு தைரியத்தை தருபவள் ‘தைரிய லட்சுமி’. இவர் தரைத்தளத்தில் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார். தாமரைப் பூவின் மீது அமர்ந்து, இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்டபடியும் இருக்கிறார். உயர் கிரீடத்தை அணிந்திருக் கும் இந்த தேவிக்கு எட்டு திருக்கரங்கள். வலது கரத்தில் சூலம், அபய ஹஸ்தம், அம்பு, சக்கரம் ஏந்தியும், இடது கரத்தில் வில், கபாலம், வரத ஹஸ்தம், சங்கு  ஏந்தியும் காட்சி தருகிறார்.

    சந்தான லட்சுமி: எல்லா செல்வத்தையும் விட சிறந்த செல்வமான குழந்தை செல்வத்தை அளிப்பவள். இவர் முதல் தளத்தில் தெற்கு முகமாக வீற்றிருக்கிறார். அமர்ந்த நிலையில் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்ட படியும், சடையுடன் கிரீடத்தை அணிந்தபடி அருள்புரிகிறார். இந்த தேவி தன்னுடைய நான்கு திருக்கரங்களில் வலது கரத்தில் கத்தி, அபய ஹஸ்தம் தாங்கியும், இடது கரத்தில் கேடயம், வரத ஹஸ்தம் தாங்கியும் அருள்கிறாள். பீடத்தில் இரு கன்னிப் பெண்கள் சாமரம் வீசிக் கொண்டும், விளக்கினைக் கையில் ஏந்திக் கொண்டும் நின்றிருக்கிறார்கள்.

    விஜய லட்சுமி: வெற்றியை அருள் பவள் ‘விஜய லட்சுமி’. இவர் முதல் தளத்தில் மேற்கு முகமாக வீற்றிருக்கிறார். அன்னப் பறவையின் மீது அமர்ந்தபடி இடது காலை மடித்துக் கொண்டும், வலது காலை கீழே தொங்கும் படியாகவும் வைத்திருக்கிறார். எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி தரும் இந்த தேவியை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.

    வித்யா லட்சுமி: எல்லா செல்வத்தையும் விட முதன்மையான செல்வமான கல்விச் செல்வத்தை அளிப்பவள். இவர் முதல் தளத்தில் வடக்கு நோக்கி  வீற்றிருக்கிறார். இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்டபடியும் குதிரை வாகனத்துடன் கூடிய தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கிறார். நான்கு திருக்கரங் களில் வலது புறம் சங்கு, அபய ஹஸ்தமும், இடது கரத்தில் பத்ம, வரத ஹஸ்தமும் தாங்கியிருக்கிறார்.

    கஜ  லட்சுமி: அனைத்து ஐஸ்வரியங் களையும் அளிப்பது  கஜ லட்சுமியே. இவர் ஆலயத்தின் முதல் தளத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். பத்மாசனக் கோலத்தில் தாமரை மலரின் மீது, இரு கரங்களிலும் தாமரை மலரைத் தரித்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவருக்கு இருபுறமும் ஒரே கல்லினாலான இரண்டு யானைகள் தும்பிக்கையில் கலசம் ஏந்தி வாழ்த்தும் தொனியில் அமைந்துள்ளன. கஜ லட்சுமியை ராஜ லட்சுமி, ஐஸ்வரிய லட்சுமி என்ற பெயர்களால் அழைக்கின்றனர்.

    தன லட்சுமி: தனத்திற்கு அதிபதியானவள் ‘தன லட்சுமி’. இரண்டாவது தளத்தில் கிழக்கு நோக்கிய சன்னிதியில் இந்த தேவி வீற்றிருக்கிறார். அமர்ந்த வண்ணம் இடது காலை மடித்துக் கொண்டும், வலது காலை கீழே தொங்கும் படியாகவும் அருள்கிறார். ஆறு திருக்கரங்களை கொண்டவராக திகழ்கிறார் இந்த தேவி. தனலட்சுமியின் அருள் கிடைத்தால் செல்வங்கள் தாராளமாகவே குவியும்.
    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வாயுலிங்க தலமாகும். இந்த ஆலயம் சிவத்தலமாக மட்டுமின்றி, அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பதால், பைரவத் தலமாகவும் திகழ்கிறது.

    ஆறு அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் காம நாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் லிங்கம், வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது தல புராணம். அம்பாளின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும்.

    மன்மதன் வழிபட்ட தலம் :

    இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த மரத்தடியில் அமர்ந்துதான் இத்தல இறைவனை மன்மதன் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. முருகப்பெருமானின் அவதாரத்திற்கு முன்பாக, அதாவது மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் தகனம் செய்வதற்கு முன்பாகவே, மன்மதன் தனது மனைவி ரதியுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மன்மதன் வழிபட்டதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது.

    காமம் என்றால் விருப்பம், ஆசை என்ற பொருளும் உண்டு. தமது பக்தர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி தரும் பெருமான் என்பதாலும் ‘காமநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த திருத்தலம் மன்மதனுக்கு உகந்த இடம் என்பதால், திருமணமான இளம் தம்பதியினர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் இல்லறம் இன்பமாக இருக்கும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல பிரிந்த தம்பதியர் இங்கு வந்து மனமுருக இறைவனை தரிசித்தால் ஒன்று படுவார்கள் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.

    ஆலய அமைப்பு :

    இந்தக் கோவிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும், கருவறையில் ஆனந்த விமானமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை சதுரவடிவமானது. இறைவனின் கரு வறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அம்பிகை முன்பும் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.

    கருவறைக்கு முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. முதல் சுற்றில் உற்சவ மண்டபம், திருக்குளம், தலவிருட்சம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-ம் சுற்றின் தாழ்வறையில் சந்திர, சூரியன், பைரவர், சமயக்குரவர்கள் காட்சி தருகின்றனர். கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், முருகன், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன.

    இங்கு பிரம்மாவிற்கும், நடராஜருக்கும் தனித்தனி சன்னிதி இருக்கிறது. கோவிலின் வடபக்கம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.



    அஷ்டபைரவர்கள் :

    காமநாதீஸ்வரர் கோவிலில் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், கால பைரவர் ஆகியோர் எட்டு திசைகளில் இருந்து அருள்புரிகிறார்கள். இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை. மாதந்தோறும், தேய்பிறை அஷ்டமி நாளில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கிறது. இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தால் திருமணத்தடை, நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமி பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள்.

    பின்னர் வெள்ளிக வசம், சந்தனகாப்பு, புஷ்ப அலங்காரம் உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.

    திருவிழாக்கள் :

    ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தேய்பிறை, பைரவாஷ்டமி, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.

    ஆறகளூர் காமநாதீஸ்வரரை வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். கல்வி, வியாபாரம், தொழில் செழிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள், வேலைகள் கிட்டும். இந்த கோவிலின் தலவிருட்சமான மகிழமரத்தின் இலையை அரைத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. சேலத்தில் இருந்து ஆத்தூர் 52 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து ஆறகளூருக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    ஆதிவராகப் பெருமாள் பூவராக மூர்த்தியாக கடலூர் மாவட்டத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அந்த திவ்ய சேத்திரத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    திருப்பதி - திருமலையில் ஏழுமலையான் எழுந்தருள்வதற்கு இடமளித்தவர் ஆதிவராகப் பெருமாள். இவர் திருமலையில் சந்திர புஷ்கரணி திருக்குளத்தின் அருகில் தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்ட பிறகே, ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரமாக விளங்குவது வராக அவதாரம்.

    இவர் பூவராக மூர்த்தியாக கடலூர் மாவட்டத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அந்த திவ்ய சேத்திரத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    ஆலய அமைப்பு :

    மேற்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நிற்கிறது ஆலயம். கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், சிற்ப அழகு மிளிரும் கருங்கல் தூண்களுடன் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அங்குள்ள கருடாழ்வாரைச் சேவித்துவிட்டு உள்ளே சென்றால், கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள் துவார பாலகர்களாக வீற்றிருக்கின்றனர். கருவறையின் உள்ளே பாவன விமானத்தின் கீழ் பூவராகமூர்த்தி சேவை சாதிக்கிறார்.

    திருமலை, காஞ்சி, திருக்கோவிலுர், ஒப்பிலியப்பன் கோவில் போன்ற தலங்களில் நெடுமாலாகக் காட்சி தருபவர், இங்கே சிறிய மூர்த்தியாகப் பெரிய கீர்த்தியுடன் தோற்றம் காட்டுவது கொள்ளை அழகு. மேற்கு நோக்கி திருமேனியாக இருந்தாலும், வராக மூர்த்தியின் முகமானது தெற்கு பார்த்தபடி இருக்கிறது.

    வழக்கமாகச் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சிதரும் மகாவிஷ்ணு, இங்கு வராகர் கோலத்தில் இரண்டு கரங்களுடன், அதனை இடுப்பில் வைத்தபடி எழில் கோலத்துடன் இருக்கிறது. அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் உடன் இருக்கின்றனர். முழுவதும் சாளக்கிராமக் கல்லால் ஆனது இந்த வராகமூர்த்தியின் உருவம். எனவே தினமும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    வட இந்தியாவில், சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் அருளும் பூவராக மூர்த்தி பெருமாளும், சுயம்புமூர்த்தி என்ற பெருமையுடன் திகழ்கிறார்.

    பூமியை மீட்டவர் :

    இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்க மகாவிஷ்ணு, வராகராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்தார். பின்னர் இரண்யாட்சனை அழித்து கடலுக்குள் இருந்த பூமியை மீட்டு, தனது இரு கோரைப் பற்கள் இடையே சுமந்தபடி வெளிப்பட்டு அருள் செய்தார் என்கிறது புராணம்.



    இவர் தனது ஒரு விழிப் பார்வையினால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிப் செடியையும் உருவாக்கினார். இந்த ஆலயத்தின் தல விருட்சமாக அரசமரம் உள்ளது. திருக்கோவிலின் பின்புறம் நித்ய புஷ்கரணி என்ற திருக்குளம் உள்ளது. இதன் அருகே தென் கிழக்கில் தலவிருட்சம் காணப்படு கிறது. இதன் அருகே பிரகன்நாயகி சமேத நித்திஸ்வரர் வீற்றிருக்கும், பழங்கால சிவன் ஆலயம் ஒன்று இருக் கிறது.

    வரம் அருளும் பூவராகவர் :

    பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் வழிபட்டால், சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாட்டு பாடிய ஆண்டாள் தனிச் சன்னிதியில் இருக்கிறார்.

    பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி, வராகி போன்ற சப்த மாதர்களின் திருமேனிகள் உள்ளன. இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில், குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டாலும், குழந்தை பாக்கியம் வந்து சேரும். இது தவிர ஆலயத்தில் உடையவர் சன்னிதி, சேனை முதலியார் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதி ஆகியவையும் உள்ளன.

    தெற்குப் பக்கத்தில் தனிக்கோவிலில் அம்புஜவல்லித் தாயார் கிழக்கு திசை நோக்கி அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான், இந்த அம்புஜவல்லித் தயார்.

    இத்தலத்து சுவாமியையும், தாயாரையும் சேவித்தாலே திருமண வரம், குழந்தைபேறு கிடைக்கும். பகை அகலும், காரியத் தடை விலகும் என்று கூறுகிறார்கள். இத்தல மகிமை பற்றி கந்தபுராணம், பிரமாண்ட புராணம், விஷ்ணுபுராணம், பாகவதம் ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

    விழாக்கள் :

    இக்கோவிலில் மாசி மக நாளில், உற்சவ மூர்த்தியானவர், சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை என்ற கடலோர கிராமத்துக்கு எழுந்தருள்வார். அங்கே தர்காவின் எதிரே பெருமாள் வரும்போது இஸ்லாமிய மக்கள், அரிசி, பூ, பழம் கொடுத்து மரியாதை செய்வார்கள். பிறகு புவனகிரி வந்து அங்குள்ள சவுராஷ்டிர சத்திரத்தில் சுவாமி தங்கியிருக்கும் போது, மத வேறுபாடின்றி அனைவரும் இறைவனைச் சேவிப்பார்கள் என்பது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் ஸ்ரீமுஷ்ணம் உள்ளது. கடலூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன.
    திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சன்னியாசி கிராமத்தில் இருக்கிறது கல்யாண சீனிவாச பெருமாள் கோவில்.
    திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சன்னியாசி கிராமத்தில் இருக்கிறது கல்யாண சீனிவாச பெருமாள் கோவில். சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் இது. திருப்பதி வெங்கடாஜலபதி தான் இங்கும் மூலவராக இருக்கிறார். உற்சவர் கல்யாண சீனிவாசர்; தாயார் அலமேலு மங்கை.

    இத்தலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் மூலவர் வெங்கடாஜலபதி, திருமலை திருப்பதியில் அமர்ந்து இருப்பதை போலவே இங்கும் அமர்ந்துள்ளார். இதனால் இத்தலம் ‘தென் திருப்பதி’ என்ற சிறப்பு பெயர் பெற்று திகழ்கிறது. சுவாமி, தனது வலது மார்பில் ஸ்ரீதேவியையும், இடது மார்பில் பூதேவியையும் தாங்கியபடி வீற்றிருக்கிறார். மேலும் கையில் சங்கு, சக்கரம், இடுப்பில் சந்திரவம்ச உடைவாளுடன் கூடிய ஒட்டியாணம், மேனியில் சப்தகிரி, லட்சுமி, துளசி, தாமரை, செண்பக மாலைகளை அணிந்திருக்கிறார். திருப்பாதத்தில் தண்டை கொலுசு அணிந்தபடி அற்புத கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    கோவிலின் அர்த்த மண்டபத்தில் அலமேலு தாயார், நின்ற திருக் கோலத்தில் அருள் பாலிக்கிறார். அவருக்கு இடப்புறம் கைகளில் ஆயுதங் களை ஏந்தியபடி, ஆசி வழங்கிய கோலத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார்.

    பக்தர்கள் ஒரே நேரத்தில், வெங்கடாஜலபதி, அலமேலு தாயார், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய மூவரையும் வழிபடும் வகையில் ஆலயத்தின் அமைப்பு இருக்கிறது. இது ஒரு சிறப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சுவாமிக்கு பின்பு வலப்புறம் லட்சுமி, இடப்புறம் ஆண்டாள் ஆகியோர் மதிற்சுவரில் இருந்து அருள்பாலிக்கின்றனர். மூலவர் சன்னிதியின் மேல் உள்ள விமானம் ‘ஆனந்த விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.



    பல ஆண்டுகளுக்கு முன்பு அல்லல்படும் மனித இனத்தின் மீது கருணை கொண்ட நாராயணர், சீனிவாசன் என்ற திருநாமம் கொண்டு மனித வடிவில் பூலோகத்திற்கு வந்தார். அப்படி வந்த இறைவன், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் தங்கினார். தாமிரபரணியில் குடிகொண்டு இருந்த அவரை, யார் என்று அறிந்து கொண்ட முனிவர்கள், மகரிஷிகள், சித்தர்கள், மகாபுருஷர்கள் அனைவரும் தினமும் சென்று சீனிவாச பெருமாளை வழிபட்டு வந்தனர். அவர்களில் சன்னியாசி என்ற ஒருவரும் இருந்தார்.

    சுவாமியின் மனித ரூப காலம் முடிவடையும் தருணம் நெருங்கியது. தன் பணி முடிந்து இறைவன் தன் உலகுக்கு சென்று விட்டால், மனித குலம் நற் பயன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமே என்ற அச்சம் சன்னியாசிக்கு ஏற்பட்டது. எனவே அந்த சன்னியாசி, நாராயணரை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். அவரது தவத்தை அறிந்து அவரது வேண்டுகோளுக்கு செவிசாய்த்த நாராயணர், சன்னியாசிக்கு அருள்காட்சி தந்தார். அந்த இடத்திலேயே கோவில் கொண்டு மக்களை காப்பதாக உறுதி கூறினார்.

    இவ்வாறு சன்னியாசியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நாராயணர், இத்தலத்தில் வீற்றிருந்து கல்யாண சீனிவாசர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தந்து அருள்புரிந்து வருகிறார். சன்னியாசியின் வேண்டுகோளை ஏற்று நாராயணர் இங்கு அமர்ந்ததால் இந்த இடத்துக்கு ‘சன்னியாசி கிராமம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

    ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    திருநெல்வேலி ஜங்ஷன், டவுன் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து ஆட்டோக்களில் சென்று வரலாம்.

    தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏகவுரி அம்மன் கோவில் உள்ளது.
    சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாகவும், குலதெய்வமாகவும், அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் காளியாகவும் விளங்கியவள் ஏகவுரி அம்மன். வல்லப சோழன், கரிகாற்சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரால் வழிபடப்பட்டு வந்தவள். இவர்கள் போர்க்களம் செல்லும் போது வெற்றிவாகை சூட இத்தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செல்வது வழக்கம்.

    தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வல்லம் என்ற ஊர். இங்குள்ள ஏகவுரி அம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. எட்டு திருக்கரங்களுடன் தேவி, பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த தேவி ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சிதருகிறாள்.

    தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சிஅளிக்கிறாள். அம்மன் பாதத்தில் சக்திவாய்ந்த ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் சக்தியானது வழிபடும் பக்தர் களின் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவுகிறது.

    தல வரலாறு :

    முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அவன் முன்பு தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். மகிழ்ந்து போன தஞ்சன், பெண்களைத்தவிர வேறு எவரும் என்னை வெல்ல முடியாத வரம் வேண்டும் என்றான். இறைவனும், ஒரு பெண்ணை தவிர யாராலும் உன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை வழங்கினார்.

    இறைவனிடம் வரம் பெற்ற ஆணவத்தால் தஞ்சன் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானை சரண் அடைந்து அரக்கனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான், அரக்கன் அழியும் நேரம் நெருங்கிவிட்டது என்று கூறி, பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற கவுரி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். அளவுகடந்த கோபத்தோடு வந்த தேவியைப் பார்த்த அரக்கன் போருக்கு தயாரானான். தேவிக்கும், அரக்கனுக்கும் கடும்போர் ஏற்பட்டது. தஞ்சன் வெறியுடன் தன்வில்லை வளைத்து பாணங்களைத் தொடுத்து தேவியின் மீது சரமாரியாக எய்தினான்.

    தேவி அவற்றை எல்லாம் தடுத்துத் தள்ளி பெரும் போர் புரிந்தாள். கதாயுதத்தால் தஞ்சன் மார்பு மீது தாக்கினாள். இறுதியாக அரக்கன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். சிம்ம வாகனத்தில் சீற்றமுடன் வந்த தேவி எருமைக்கடாவாக வந்த அரக்கனை வாளால் தலைவேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள்.

    உயிர் பிரியும் நேரத்தில் அரக்கனுக்கு அறிவு வந்து தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்படவேண்டும் என்று வேண்டினான். அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் தேவி. அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப் போயின.

    நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை நோக்கி விரைந்தார். “ஏ கவுரி” சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகவுரி அம்மனாக வடக்கு நோக்கி அமர்ந்து அருள்புரிந்து வருகிறாள்.

    அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.



    அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. அந்த சுதை வடிவம் இன்றளவும் மாற்றப் படாமல் வழிபடப்பட்டு வருகிறது.

    கோவில் கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் விநாயகர், முருகன், காத்தவராயன், சண்டிகேசுவரர், வராகி, பிரத்தியங்கரா தேவி, நாகர் ஆகியோரை தரிசனம் செய்யலாம். வெளிப்பிர காரத்தில் மதுரை வீரன் தன் துணை வியர்களான வெள்ளையம்மாள், பொம்மியுடன் காட்சி தருகிறார். கருப்பசாமி, லாட சன்னியாசி, காத்தான் ஆகிய கிராம தேவதைகளையும் அங்கே பார்க்கலாம். ஏகவுரி அம்மன் ஆலயத்தில் பகல் முழுவதும் கோவில் நடை திறந் திருக்கும்.

    தடைப்பட்ட திரு மணம் நடைபெற மற்றும் குழந்தை பாக்கியம் முதலியவைக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக உள்ளது. திருமண தடை உள்ள பெண்கள் இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி, அம்மனின் திருப்பாதத்தில் மஞ்சள் வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு அம்மனை வழிபட துன்பங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும் என்கின்றனர். ஏவல், பில்லி, சூனியம், கிரகக்கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபட்டு பலன் பெறுகின்றனர்.

    ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று தேவிக்கு மகா சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ராபவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். சண்டிஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மகிழ்ந்து துயர்களை நீக்கி வாழ்வில் அனைத்து நலன்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.

    ராகு, கேது தோஷம் நீங்கும் :


    கோவில் கருவறையில் ஏகவுரி அம்மனைச் சுற்றியபடி இரண்டு நாகங்கள் இருப்பதை காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் நீங்கும் தலம். இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    எருமைக்கன்று காணிக்கை :

    ஏகவுரி அம்மன் கோவில் ஒரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. மிகவும் உடல் நலமில்லாமல் இருப்பவர்கள் தாங்கள் உடல் நலம் பெற்றால் அம்மனுக்கு எருமைக்கன்றை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறார் கள். அவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் தாங்கள் உடல் நலம் பெற்றவுடன் அந்த வருடம் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா அன்று எருமைக்கன்றை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபட்டுச்செல்கின்றனர்.

    பிராது கட்டும் வழக்கம் :

    ஏகவுரி அம்மன் கோவிலில் பிராது கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சொத்தை பறிகொடுப்பது, திருட்டு போன்ற சம்பவங்களுக்கு அம்மனிடம் பிராது கொடுப்பதால் நியாயம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை கோவில் பூசாரியிடம் ஒரு வரிவிடாமல் கூறுவார்கள். அதற்கு பூசாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து முறையிடுவார். இதைக்கேட்டு ஏகவுரி அம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச்செய்கிறாள் என்பது ஐதீகம்.
    சிக்கமகளூரு மாவட்டம் எம்.சி.ஹள்ளி கிராமத்தில் உள்ள பத்ரகிரி மலையில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் முருகன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
    கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும், மலைநாடுகளில் முதன்மையானதாகவும், புனித பூமியாகவும் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி தாலுகா திகழ்கிறது. இந்த நகருக்கு ‘உருக்கு நகரம்’ என்ற புனைப்பெயரும் உண்டு. இந்த நகரம் ஆன்மிகத்திலும் சிறந்து விளங்குகிறது. இதேபோல் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவும் இயற்கை அன்னையின் செல்வச்செழிப்பு மிகுந்து, பக்தி மனம் கமழும் இடமாக காட்சி அளிக்கிறது.

    சிவசுப்பிரமணியர் கோவில் :

    இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பத்ராவதி மற்றும் தரிகெரே பகுதிகளுக்கு இடையே எம்.சி.ஹள்ளி கிராமத்தில் பத்ரகிரி மலை அமைந்துள்ளது. அந்த மலையில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் முருகன் ஆலயம் இருக்கிறது. இக்கோவிலில் வள்ளி-தெய்வானையுடன் சிவசுப்பிரமணியராக வீற்றிருந்து, முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பச்சை கம்பளம் விரித்தது போன்று பசுமை வயல் வெளியின் நடுவே பத்ரகிரி மலையில் சிவசுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் நுழைவு வாசலில் சென்றதும், மலை அடிவாரத்தில் முதலில் தென்படுவது அகத்தியர் மண்டபம் ஆகும். அங்கு அகத்தியர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    வனதுர்க்கை அம்மன் :

    அகத்தியர் மண்டபத்தை அடுத்து சக்தி தேவதையாகவும், பத்ரகிரியின் காவல் தெய்வமாகவும் வன துர்க்கை அம்மன் வீற்றிருக் கிறார். வன துர்க்கை அம்மன் அஷ்ட புஜங்களுடனும், அக்னி ஜுவாலையுடனும், பிறை சூடி சாந்த ரூபினியாகவும், புன்னகை பூத்துக்குலுங்கும் எழிலுடனும், கம்பீரத் தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார். துர்க்கை அம்மனின் திருக்கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், வில், குவளை, அமிர்த கலசம் ஏந்திய நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    அதையடுத்து மண்டப தூண்களில் அரியும், சிவனும் ஒன்றே என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும்படியாக சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. மத்தவாச்சாரியர் வசிஷ்ட மகாமுனிவர், விஸ்வாமித்திரர், ரேணுகாதேவி, பெரிய நாயகி, அர்த்தநாரீஸ்வரர், காயத்திரி தேவி, கங்காதேவி, அம்பிகாதேவி, நாகதேவி, துர்காதேவி ஆகிய சுவாமிகள் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக் கிறார்கள்.

    அதைத்தொடர்ந்து மூலவர் சன்னிதானத்துக்கு செல்லும் மலைப்பாதையில் ஏறும்போது பஞ்சமுக விநாயகர் நின்ற கோலத்தில் தனிக் கருவறையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும் விநாயகர் வீற்றிருக்கும் சன்னிதியில், சித்தி-புத்தி என்னும் பொருளுடன் கலையரசியான சரஸ்வதி தேவி வீணை ஏந்தி அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வடபுறத்தில் மகாலட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.


    வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியர்

    ஆதி விநாயகர் :

    அங்கிருந்து சற்று மேலே ஏறினால் ஆதி விநாயகர் வீற்றிருக் கிறார். அதன்பிறகு மிகவும் பழமையான அரச மரம் இருக்கிறது. அதன் அடியில் நாகதேவதை உருவ சிலைகள் உள்ளன. இதன் அருகே பக்தர்களின் செவ்வாய்தோஷம், ராகுதோஷம், சந்தான தோஷம் போன்ற தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய பரிகார மண்டபங்கள் அமைந்துள்ளன. அதையடுத்து இரும்பாசூரனும், பரிகார தெய்வங்களும் உள்ளனர்.

    அதை தாண்டிச் சென்றால் 110 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் வகையில் ராஜகோபுரத்தின் திருப்பணிகள் நடந்து வருவதை காணலாம். அங்கிருந்து மயில்தோகை விரித்தாற்போன்று இருவழிப்படி மண்டபம் அமைந்துள்ளது. அதன் அருகே கொடிமரமும் அமைந்திருக்கிறது. கொடிமரத்தின் முன்பு பக்தர்கள் மண்டியிட்டு முருகனை நினைத்து வேண்டினால் அவர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்று நம்பப்படுகிறது.

    வள்ளி-தெய்வானையுடன் காட்சி தரும் முருகன்:

    அதன்பிறகே மூலவரான முருகன் பிரமாண்ட தோற்றத்துடன் சிவசுப்பிரமணி சாமியாக காட்சி தருகிறார். அவரைச் சுற்றி மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. முருகனின் கருவறையில் இருந்து இருபுறமும் இந்த மண்டபங்கள் காட்சி அளிக்கின்றன.

    கருவறையில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி உள்ளார். இதுமட்டுமல்லாமல் மகா மண்டபத்தில் பலி பீடம், மயில் வாகனம் அமைந்திருக்கிறது. இருபுறமும் துவார சக்தி காவல் தெய்வமாக இருக்கிறார்.

    மனித உடலுடன் நந்தி பகவான் :

    கருவறையின் தென்புறத்தில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. பலி பீடம், மகா நந்தி ஆகியவை சிவன் சன்னிதியின் கருவறைக்கு நேர் எதிரில் அமைக் கப்பட்டு உள்ளது. இந்தக்கோவிலில் வித்தியாசமாக நந்தி பகவான், மனித உடல் அமைப்புடன் காட்சி தருகிறார். இது இக்கோவிலில் உள்ள சிறப்பம்சம் ஆகும்.

    இக்கோவிலில் சிவன் லிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். லிங்கத்தின் பின்புறத்தில் சூரியனும், சந்திரனும் ஒருசேர அமைந்திருப்பதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    63 நாயன்மார்கள் :

    அதையடுத்து மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், சுந்தரர், அப்பர், சேக்கிழார், காரைக்கால் அம்மையார் திருமேனியும், 63 நாயன்மார்களும் அமைந்திருக் கிறார்கள். இதுமட்டுமல்லாமல் கோவிலில் முருகன் சன்னிதி வடபுறத்தில் 12 ராசிகள் உள்ளடங்கிய புரவி பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் உற்சவர் மணிமண்டபம் அமைந்துள்ளது.

    இப்படி சிவசுப்பிரமணியசாமி கோவிலில் பல்வேறு தெய்வங்களும், பரிகார தெய்வங்களும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.


    கோவில் நுழைவு வாசல்

    விழாக்காலம் :

    இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், கார்த்திகை மகா தீபம் ஆகியவை கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசம், பவுர்ணமி, விசாகம், பிரதோஷம் போன்றவையும் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது கார்த்திகை தீப பெருவிழா. திருவண்ணாமலையில் மகா தீபத்தை கண்டு தரிசிப்பது சிறப்பாகும். அதுபோல், இந்தக்கோவிலில் கார்த்திகை தீபத்தன்று, கோவிலுக்கு வரும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளின் பெயர்கள் துண்டு சீட்டுகளில் எழுதப்பட்டு முருகனின் பாதத்தில் வைக்கப்படும்.

    அப்போது முருகனின் அருள் கிடைக்கும் குழந்தையை சக்தி தாயாக பாவித்து, புனித நீராட்டி, மலர் சூட்டி, மங்கள இசை முழங்க, பக்தர்களின் அரோகரா, அரோகரா எனும் கோஷம் முழங்க, நெய் கலசம் ஏந்தி, குழந்தையின் கரங்களால் அகண்ட தீபத்தில் நெய் வார்க்கப்பட்டு பின்னர் பக்தர் களுக்கு மகாஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது சிறப்பாகும்.

    தோஷங்களும், பரிகாரங்களும்...

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செவ்வாய்தோஷம், பித்துரு தோஷம், ஜாதக பொருத்தமின்மை, திருமணத்தடை ஆகியவை நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம், செல்வம், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருதல் ஆகியவை கிட்டும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. அதற்கான பரிகார முறைகளும் உள்ளன. அதாவது செவ்வாய் தோஷம் நீங்க வேண்டி வரும் பக்தர்கள் திங்கட்கிழமை அன்று இரவே கோவிலுக்கு வந்து, குளத்தில் நீராடிவிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு முதல் பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    அதேபோல், செவ்வாய்க்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் திருமணத்தடை, ஜாதக பொருத்தமின்மை, புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்து பூஜை செய்தால் தடைகள் நீங்கி நினைத்தது நடக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

    அமைவிடம்:

    இக்கோவில் பெங்களூரு-ஒன்னாவர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் பத்ரகிரி அமைந்துள்ளது.
    திருவானைக் காவலில் அமைந்துள்ள பஞ்சமுகேஸ்வரர் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    திருவானைக் காவலில் உள்ள பஞ்சமுகேஸ்வரர் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். வலது புறம் திரும்பி நடந்தால் நாம் அருள்மிகு பஞ்சமுகேஸ்வரரை தரிசிக்கலாம்.

    பஞ்சமுக ஈஸ்வரன் :

    வலது புறம் உள்ள இறைவனின் சன்னிதியில் கருவறையில் கிழக்கு திசை நோக்கி அருள்புரிகிறார் பஞ்சமுகேஸ்வரர். ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் இறைவன்.

    சத்தியோஜாதம், அகோரம், தத்புருஷம், வர்மதேவம், ஈசானம், என்பனவே அந்த ஐந்து முகங்கள்.

    நான்முகனுக்கு இருப்பது போல் சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாக கணக்கிடப்பட்டு ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்சமுகேஸ்வரர் என இந்த இறைவன் அழைக்கப்படுகிறார். தாமரை பீடத்தில் அமர்ந்துஅருள் பாலிக்கிறார் இறைவன்.

    எதிரே தனி சன்னிதியில் 90 டிகிரி நேர்க் கோணத்தில் இறைவி திரிபுர சுந்தரியின் சன்னிதி உள்ளது. இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள்பாலிப்பதால் இருவரையும் நாம் ஒரு சேர தரிசிக்க முடியும். இந்த அமைப்பு அபூர்வமானது என்கிறார்கள் பக்தர்கள்.

    இங்கு அம்மனுக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் இரண்டு கரங்களில் சங்குகளை சுமந்தபடியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறாள்.

    இறைவனையும் இறைவியையும் தரிசித்து விட்டு திரும்பி நடந்து சிறப்பு மண்டபத்தினுள் நுழைந்து மகாமண்டபத்தில் நுழைந்தால் ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜராஜேஸ்வரரை நாம் தரிசிக்கலாம்.

    எதிரே நந்தியும், பலிபீடமும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவி ராஜ ராஜேஸ்வரியின் சன்னிதி உள்ளது.

    தல வரலாறு :

    விச்ரவஸ்ஸீக்கு ராவணன், குபேரன் என்று இரு புத்திரர்கள். இருவரின் தாய்மார்கள் வெவ்வேறானவர்கள். இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை வளர்ந்து இருவரும் யுத்தம் புரியும் அளவிற்கு அது வளர்ந்தது.

    யுத்தமும் நடந்தது. குபேரனின் அனைத்து சொத்துகளும், ஐஸ்வரியங்களும,் புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன.

    மனம் உடைந்த குபேரன் மகாதேவரை ஆராதிக்க அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.

    ‘மகாவிஷ்ணுவானவர் தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்து, ராவணனை யுத்தத்தில் சந்திப்பார். அப்போது ராவணன் தோற்கடிக்கப் படுவான். உன்னிடமிருந்து பறிபோன புஷ்பக விமானம் உன்னை அப்போது அடையும்’ என்றது அக்குரல்.

    பின் குபேரன் காவிரியின் தென் கரையில் ஒரு ஆலயம் அமைத்து, இறைவனை அங்கு பிரதிஷ்டை செய்து அவருக்கு ராஜராஜேஸ்வரர் என்று பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான். ராஜராஜேஸ்வரர் அருளால், குபேரன் இழந்த தன் பெருமைகளையும், பொருளையும் மீண்டும் பெற்றான்.

    பரிவார தெய்வங்கள் :

    ஆலய பிரகாரத்தின் மேற்கில் மகா கணபதி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், கஜ லட்சுமி ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது.

    கிழக்குப் பிரகாரத்தில் கால பைரவர் காட்சி தருகிறார். மாத தேய்பிறை அஷ்்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர சிவலிங்க வடிவிலான சதுஷ் சஷ்டி கலேஸ்வரரின் திருமேனியும், அவர் அருகே சதுஷ் சஷ்டி கலேஸ்வரியின் திருமேனியும் அருள்பாலிக்கின்றன.

    தாமரை வடிவ பீடத்தில் எண்கோண வடிவ ஆவுடையில் பாணம் அமைந்துள்ளது. இந்த இறைவனுக்கு 64 முகங்கள். பாணம் முழுவதும் உள்ள 64 வரிக் கோடுகள் முகங்களாக கணக்கிடப்பட்டு அதே கோணத்தில் இறைவனை தரிசிக்கின்றனர் பக்தர்கள்.

    இறைவனின் பின் புறம் நான்கு வேதங்கள் சாலிக்கிராமம் வடிவில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும்.

    ஆலயத்தின் தலவிருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 12 முதல் 16 இதழ்கள் இருப்பது இந்த ஆலயத்தில் காணப்படும் அற்புதமான அதிசயம்.

    இறைவனின் தேவக் கோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. தேவக் கோட்டத்தின் தென்புறம் துர்க்கையின் திருமேனியும் கிடையாது.

    ஆராதனைகள் :

    இங்கு இறைவனுக்கு மாத சிவராத்திரியிலும், பிரதோஷ நாட்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

    இறைவன் பஞ்சமுகேஸ்வரருக்கும், அன்னை திரிபுர சுந்தரிக்கும் கார்த்திகை சோம வாரங்களிச் சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஆலயம் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    குபேரனின் துயர் தீர்த்த இத்தலத்து இறைவன் ராஜ ராஜேஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர் களின் துயரையும் தீர்ப்பார் என பக்தர்கள் நம்புவது நிஜம் தானே!

    திருச்சி மாவட்டம், திருவானைக் காவல் கடைவீதியிலிருந்து 1 கி.மீ கிழக்கில் உள்ளது இந்த ஆலயம்.
    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எல்லோரா கயிலாசநாதர் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா, குகை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. இந்த எல்லோரா மலையைக் குடைந்து பல குகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் எண்கள் இடப்பட்டது 34 குகைகள், எண்கள் இடப்படாதவை 7 குகைகள். இங்குள்ள குகைகள் அனைத்தும் இந்து மதம், பவுத்த மதம், ஜைன மதங்களின் நம்பிக்கையை உணர்த்துவதாக உள்ளன. எண்கள் இடப்பட்ட குகைகளில் 1 முதல் 12 வரையான குகைகள் பவுத்த மதத்தவரின் நினைவாலயங்களாக இருக்கின்றன. 13 முதல் 29 வரையிலான குகைகள் அனைத்தும் இந்து மத சாயல் கொண்டவை. 30 முதல் 34 வரையானது ஜைனர்களின் மதக்கோட்பாடுகளோடு ஒத்துபோகின்றன.

    இங்கு நாம் காண இருப்பது இந்தப் பகுதியில் அமைந்துள்ள 16-ம் எண் கொண்ட குகை. அப்படியென்ன சிறப்பு இதில் இருக்கிறது என்கிறீர்களா?..

    இங்கு வடிக்கப்பட்டிருப்பது 100 அடி உயரம் கொண்ட சிவ ஆலயம். இதனை கயிலாசநாதர் ஆலயம் என்று அழைக்கிறார்கள். மலை உச்சியில் இருந்து கீழ் நோக்கி செங்குத்தாக செதுக்கப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், மலையைக் குடைந்து, அதிலிருந்து பெரும் பாறையைத் தனியாக வெட்டி எடுத்து, மீதமுள்ள பாறைகளை சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து, தனித் தனிச் சன்னிதிகளாகவும், யானைகளாகவும், கீர்த்தி ஸ்தம்பங்களாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த கயிலாசநாதர் ஆலயத்தைக் கட்ட வெளியில் இருந்து சிறு கல்லைக்கூட எடுத்து வரவில்லை. கோவில் அனைத்தும் இதே மலையின் கற்களாலேயே உருவானவை என்பதுதான் இதன் விசேஷம்.

    விமானத்துடன் கூடிய இந்த ஆலயத்தை ராஷ்டிரக்கூட வம்சத்தைச் சேர்ந்த முதலாம் கிருஷ்ணர் என்ற மன்னன் (கி.பி.757- கி.பி.773) காலத்தில் கட்டத் தொடங்கியதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் ஆலயம் எப்போது கட்டி முடிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. இது ஒரு ஒற்றைக்கல் முறையிலான ஆலயம் ஆகும்.

    இந்தக் கோவிலை உருவாக்க நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றும், கிட்டத்தட்ட 4 லட்சம் டன் எடை கொண்ட பாறைகள் குடைந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தை அமைக்க மூன்று விதமான உளிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருத்து கூறியுள்ளனர். திராவிடக் கலைப்பாணிக்குரிய பண்புகளையும், ராஷ்டிரக்கூட கலைப்பாணியின் அம்சங்களும் கலந்து இந்த ஆலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது.



    250 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில், அதாவது அந்த அளவிலான மலைப்பகுதியைக் குடைந்து இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆலயம் 148 அடி நீளமும், 62அடி அகலமும், 100அடி உயரமும் கொண்டிருக்கிறது.

    ஆலயத்தின் கோபுரம் இரட்டை அடுக்கு கொண்டு அமைந்திருக்கிறது. நந்தி மண்டபம், கோபுரம் இரண்டும், இரண்டு அழகிய கல் தூண்களால் இணைக்கப்பட்டுள்ளன. ஆலய விமானம் 3 அடுக்கு கொண்டது. இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் கயிலாசநாதர் மேற்கு திசை பார்த்தபடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    ஆலயம் முழுவதையும் தங்களின் தோளில் தாங்குவதுபோன்ற தோற்றத்தில், மிகப்பெரிய யானைச் சிற்பங்கள், அடி பீடத்தில் வரிசையாக வடிக்கப்பட்டிருக்கின்றன. இது பார்ப்பதற்கு கலையம்சம் பொருந்தியதாக இருக்கிறது. ஆலயத்தின் வட பகுதியில் உள்ள சிற்பங்களில் ராவணனின் சிற்பம் சற்று வித்தியாசமாக அமைந்திருக்கிறது. தன்னுடைய 10 தலைகளில் 9 தலைகளை ஈசனுக்கு காணிக்கையாக தருவது போன்றும், அந்த 9 தலைகளையும், சிவபெருமான் மாலையாக கோர்த்து அணிந்திருப்பது போன்றும் இந்த சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

    இது தவிர சிவ- பார்வதி திருக்கல்யாண சிற்பமும், அதன் அருகிலேயே திரிபுரம் எரித்த திரிபுராந்தகர் சிற்பமும் அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தேரில் சிவபெருமான் தன்னுடைய கால்களை அகலவிரித்து நின்றபடி, வில்லில் அம்பைப் பூட்டி 3 அசுரர்களின் தலைகளுக்கும் குறி வைப்பது போல் இந்த திரிபுராந்தகர் சிலை அமைந்துள்ளது. தேரின் சாரதியாக பிரம்மதேவன் இருக்கிறார். 4 வேதங்களும் தேரின் சக்கரங்களாக உள்ளன.

    உலக அதிசயங்களில் ஒன்றாக சேர்க்கும் அளவுக்கு உயர்ந்த கலையம்சத்துடன் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தைப் பார்க்கும் போது, மதத்தை வளர்ப்பதற்காக கோவில் அமைக்கப்பட்டதா? அல்லது கலையை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில் பக்தியைக் காட்டிலும், கலையுணர்வே மிகுதியாக எழுந்து நிற்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எல்லோரா கயிலாசநாதர் திருக்கோவில்.
    108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குவது கபிஸ்தலம் எனப்படும் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குவது கபிஸ்தலம் எனப்படும் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில். இந்த ஆலயம் தஞ்சை மாவட்டம் திருவையாறு-கும்பகோணம் சாலையில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. கபி என்ற சொல்லுக்கு குரங்கு என்று பொருள். ராமபக்தனான அனுமனுக்கு, திருமால் இத்தலத்தில் ராமபிரானாக காட்சி அளித்ததால் ‘கபிஸ்தலம்’ என பெயர் ஏற்பட்டது.

    ‘கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா, தீ
    மாற்றமும் சாரா வகை அறிந்தேன்- ஆற்றங்
    கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
    உரைக்கிடக்கும் உள்ளத்தெனக்கு’

    என்று திருமங்கை ஆழ்வார் ஆற்றங்கரைக் கண்ணனே என்று பாடியதால் பெருமாளை கண்ணன் என்றும் அழைப்பர். இத்தலத்தில் மூலவர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி புஜங்க சயனராக ஆணைக்கருளியவராக பாம்பணையில் பள்ளி கொண்டபடி காட்சி தருகிறார். தாயார் ரமாமணி வல்லிக்கு தனி சன்னிதி உள்ளது. உற்சவர் வரதராஜ பெருமாள். தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி, கபில தீர்த்தம்.

    தல வரலாறு :

    இந்ரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் ஏகாதசி தோறும் விரதம் இருப்பது வழக்கம். எப்போதும் நாராயணனை நினைத்து தவமிருப்பார். அச்சமயத்தில் ஒருமுறை அகத்திய முனிவர் தன் சீடர்களுடன் மன்னனை காண வந்தார். பகவானை நினைத்து தியானத்தில் இருந்த மன்னன், அகத்தியரை கவனிக்கவில்லை. ஆணவத்தில் தன்னை அவமரியாதை செய்வதாக கருதிய அகத்தியர், மன்னனை யானையாக போகும்படி சபித்தார். சாபம் உடனே பலித்தது. மன்னன் கஜேந்திரனாக (யானை) பிறந்தான். ஒரு குளத்தில் தாமரை மலர் எடுத்து வந்து தினமும் பகவானை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.



    புகூ என்ற கந்தர்வன் தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து கபிஸ்தலத்தில் உள்ள குளத்தில் குளிப்பது வழக்கம். ஒருநாள் அந்தக்குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த காசிப முனிவரின் காலை கந்தர்வன் பிடித்து இழுத்தான். உடனே கோபம் கொண்ட முனிவர் அவனை முதலையாக போகும் படி சாபமிட்டார். கந்தர்வன் முதலையாக மாறி பெருமாளிடம் சாபவிமோசனம் வேண்டி இந்த குளத்தில் இருந்து பிரார்த்தனை செய்து வந்தான். முதலையாக மாறி இருந்த கந்தர்வன், ஒரு நாள் மலர் பறிக்க வந்த கஜேந்திரனின் காலை பிடித்துக் கொண்டான். முதலையின் பிடியில் இருந்து யானை தனது காலை விடுவிக்க முயல, யானையை முதலை தண்ணீருக்குள் இழுக்க, ஓராயிரம் வருட காலங்கள் இந்த போராட்டம் நீடித்தது.

    கடைசியாக கஜேந்திரன், பகவானின் பாதத்தை சரணடைந்து ‘ஆதிமூலமே’ என்றழைத்து பிரார்த்தனை செய்தான். கருணா மூர்த்தியான பகவான் ஸ்ரீமன் நாராயணன் சங்கு, சக்கரதாரியாக கருடன் மீது விரைந்து வந்து தன் சக்கராயுதத்தால் முதலையை சம்ஹாரம் செய்தார். முனிவரின் சாபம் நீங்கப் பெற்ற முதலை, கந்தர்வனாக ஆனது. கஜேந்திரனுக்கு பெருமாள் மோட்சம் அளித்து தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

    தூய்மையான பக்தி கொண்டு வணங்குவோருக்கு இத்தலத்து பெருமாள் மோட்சம் அளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. வலது கரத்தில் சின் முத்திரையுடன் ஆதிமூல பெருமாள் பள்ளி கொண்ட திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். நாபிக் கமலத்தில் பிரம்மன் அமர்ந்திருக்கிறார். பொற்றாமரை வல்லி தாயார், கனகவல்லி தாயார் உடனிருக்கின்றனர்.

    இங்கு சக்கரத்தாழ்வார், நரசிம்மருக்கு தனி சன்னிதிகள் உள்ளன. வருடந்தோறும் ஆடி மாதம் கஜேந்திர மோட்சம் உற்சவம் 3 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரை மாதம் உற்சவம், ஆடிப்பூரம், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, இராபத்து, பகல்பத்து உற்சவம் நடைபெறும். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் பஸ்சிலும் ஏறி இத்தலத்துக்கு செல்லலாம். பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் செல்ல டவுன் பஸ் வசதி உள்ளது.
    ×