search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirukoshtiyur"

    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்றதும், 108 வைணவ தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததுமான சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்வத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் வருவார்கள். அப்போது தெப்பக்குள படிக்கட்டிலும், குளத்தை சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தையொட்டி பெருமாள் தேவியருடன் கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெருமாள் தங்க கிரீடம் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொடி மரம் அருகே விஷ்ணு பூத பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் கருடன் படம் வரையப்பட்ட வெள்ளை நிற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு தர்ப்பை புல், மாவிலைகளாலும் வெண்பட்டு சுற்றப்பட்டு, பால், தயிர் திருமஞ்சனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்றைய தினம் இரவு சாமி திருவீதி புறப்பாடு நடந்தது.

    திருவிழாவில் 2-ம் நாள் முதல் 6-ம் நாள் வரை தினந்தோறும் காலையில் சாமி திருவீதி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடசேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெறும். 6-ம் நாளான வருகிற 15-ந்தேதி இரவு திருவீதி புறப்பாடும், ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும் நடைபெறும். 7-ம் நாளில் சாமி சூர்ணாபிஷேகம், தங்க தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு நடைபெறும். 8-ம் நாளில் சாமி திருவீதி புறப்பாடும், இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும்.

    9-ம் நாளில் காலை வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், பின்னர் பகல் 11 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெறும். 10-ம் நாளான 19-ந்தேதி காலை பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் தெப்பம் சுற்றுதலும், இரவு 10 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும். 11-ம் நாளான 20-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் நடை பெறும்.
    ×