என் மலர்

  ஆன்மிகம்

  பிறவித் துன்பம் நீக்கும் வர்க்கலை ஜனார்த்தனர் கோவில்
  X

  பிறவித் துன்பம் நீக்கும் வர்க்கலை ஜனார்த்தனர் கோவில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிறவித் துன்பம் நீக்கிப் பேரின்பம் தந்தருளும் தலமாகக் கேரள மாநிலம், வர்க்கலை ஜனார்த்தனர் கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
  மனிதராகப் பிறந்தவர்கள், தங்களுடைய பிறவித் துன்பம் நீங்கிப் பிறவாமை எனும் பேரின்பத்தைப் பெற வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின் மிகப்பெரும் சிறப்பு என்பார்கள். பிறவித் துன்பம் நீக்கிப் பேரின்பம் தந்தருளும் தலமாகக் கேரள மாநிலம், வர்க்கலை ஜனார்த்தனர் கோவில் இருக்கிறது.

  தல வரலாறு :

  படைப்புக் கடவுளான பிரம்மா உலக நல்வாழ்வுக்காக நூறு வேள்விகளைச் செய்து முடித்தார். வேள்வியின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்த பிரம்மா, வேள்வியில் கலந்து கொண்ட தேவர்கள், ரிஷிகள், மகான்கள், வேள்விப்பணி செய்தவர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்து, அவர்களுக்குச் சுவையான உணவுகளுடன் விருந்தும் அளித்தார். அந்த மகிழ்ச்சியோடு, தன்னைப்போல் இனி வேறுயாரும் இதுபோல் நூறு வேள்வி களைச் செய்ய முடியாது என்ற கர்வமும் எழுந்தது.

  அப்போது அந்த இடத்திற்கு வயதான பெரியவர் ஒருவர் வந்து சேர்ந்தார். பசியால் மிகவும் வாடிப் போயிருந்த அந்த முதியவர், பிரம்மனிடம் தன்னுடைய பசியைத் தீர்க்கும்படி வேண்டினார். பிரம்மாவும் தன்னுடைய உதவியாளர்களை அழைத்து, முதியவருக்கு தேவையான உணவை வழங்கச் சொன்னார்.

  அவர்களும் முதியவரை உணவருந்தும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும் முதியவர் உணவு தாருங்கள் என்று கையை நீட்டினார். அப்போது அங்கிருந்த அனைத்து உணவுகளும் மாயமாக மறைந்தன. முதியவருக்கு கொடுக்க உணவு இல்லை. இதுபற்றி பிரம்மாவிடம் தகவல் கூறப்பட்டது. அவரும் விரைந்து வந்து, ‘ஐயா! சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். உடனடியாக உணவு தயார் செய்து வழங்கச் சொல்கிறேன்’ என்றார்.

  பிரம்மனுக்கு வந்த சோதனை :

  பசியோடு வந்த முதியவரும் ‘சரி..’ என்று காத்திருக்கத் தொடங்கினார். மீண்டும் உணவு தயாரானது. ஆனால் சமைக்கப்பட்ட உணவு, பாத்திரத்தில் எடுத்து வைக்கப்பட்டதும் மறைந்து போனது. அதைக் கண்ட பிரம்மா, பெரியவர் உருவத்தில் வந்திருப்பது யார்? என்று அறிய தன் கண்களை மூடி தியானித்தார். அவர் முன்பாக விஷ்ணு கையை நீட்டி உணவு வேண்டியபடி தோற்றமளித்தார்.

  இதைக் கண்ட பிரம்மா, கண்களைத் திறந்து, அவரை வணங்கினார். அப்போது முதியவர் உருவில் இருந்த விஷ்ணு, ‘பிரம்மா! உலகத்தினருக்கு நல்வாழ்வு கிடைக்க, நீ செய்த வேள்விகளால் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால்.. தன்னைத் தவிர, வேறு யாராலும் இது போன்ற வேள்விகளை செய்ய முடியாது என்று நினைத்த நீ கொண்ட கர்வத்தால் பெரும் தவறு செய்து விட்டாய். நூறு வேள்விகளைச் செய்ய முடிந்த உன்னால், ஒருவருடைய பசியை போக்க முடியாத கீழ்நிலை ஏற்பட்டுவிட்டது’ என்றார்.

  அதைக் கேட்ட பிரம்மா, ‘இறைவனே! என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய கர்வம் அழிந்து போய்விட்டது. என்னை இந்நிலையிலிருந்து விடுவித்துக் காத்தருளுங்கள்’ என்று வேண்டினார்.

  ‘பிரம்மனே! உன் தவறை உணர்ந்து கொண்ட நீ, இனி எனக்கு எதைச் சமர்ப்பித்தாலும், எனது பசி அடங்கி விடும்’ என்று அருள்புரிந்தார். அதைக் கேட்ட பிரம்மா, தனது கமண்டலத்திலிருந்து ஒரு துளி நீரையும், தன் கையில் வைத்திருந்த துளசி இலையில் ஒன்றையும் இறைவனுக்கு முன்பாகப் படைத்தார். இறைவனின் பசியும் அடங்கியது, பிரம்மவின் கர்வமும் நீங்கியது.

  பின்னர் பிரம்மதேவன், ‘இறைவா! கர்வம் கொள்பவர்கள் தவறை உணர்ந்து திருந்திடவும், அவர்களுடைய நல்வாழ்வுக்கு உதவிடவும் இந்தத் தலத்தில் கோவில் கொண்டு அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தார். விஷ்ணுவும் அவரது வேண்டுகோளை ஏற்றி பிரம்மதேவருக்கு தோற்ற மளித்த உருவத்திலேயே, தனது கையை நீட்டிக் கொண்டு நின்றபடி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

  கோவில் கட்டுமானம் :

  பாண்டிய மன்னன் ஒருவன், தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தினால் துன்பம் அடைந்தான். அந்த துன்பத்தில் இருந்து மீள்வதற்காக பல்வேறு கோவில்களுக்கு பயணம் செய்தான். வழியில் வர்க்கலை எனுமிடத்திற்கு வந்த அவன் அங்கிருந்த கடலில் நீராடினான். கடலில் நீராடியதும் அவனுக்குத் தான் செய்த பாவங்கள் அனைத்திலுமிருந்து விடுபட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்தபடி அங்கேயே ஓரிடத்தில் படுத்து உறங்கிப் போனான்.

  அப்போது, அவன் கனவில் தோன்றிய இறைவன், பிரம்மாவின் வேள்வியைத் தொடர்ந்து, அவருடைய வேண்டுகோளுக்கேற்ப அங்கே கோவில் கொண்டதையும், பிற்காலத்தில் அக்கோவில் கடலுக்குள் மூழ்கிப் போய் விட்டதையும் தெரிவித்தார். கடலில் மூழ்கிக் கிடக்கும் கோவிலில் நிறுவப்பட்ட சிலையை எடுத்துப் புதிய கோவில் ஒன்றைக் கட்டும்படியும் தெரிவித்தார்.

  இறைவன் தன் கனவில் சொன்ன கடல் பகுதியில், அந்தச் சிலையைத் தேடி எடுக்கும்படி தன்னுடன் வந்த படை வீரர்களுக்கு உத்தரவிட்டான். அவர்கள் அந்தக்கடலில் சிலையைத் தேடச் சென்ற போது, கடலின் மேற் பரப்பில் ஒரு இடத்தில் மட்டும் நிறைய மலர்கள் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு, அங்கு கடலினுள் சென்று தேடிச் சிலையைக் கொண்டு வந்தனர். அந்த சிலையைக் கொண்டு மன்னன் கோவிலை நிறுவினான் என்கிறது தல வரலாறு.  ஆலய அமைப்பு :

  இந்தக் கோவிலின் கருவறை வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது. கருவறையில் இருக்கும் ஜனார்த்தனரின் சிலை கிழக்கு திசையைப் பார்த்தபடி நின்ற நிலையில் உள்ளது. மூலவரின் வலது கை வாயை நோக்கிச் செல்லும்படி இருக்கிறது. கோவில் வளாகத்தில் சிவன், சாஸ்தா, கணபதி, நாகதேவி ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த சன்னிதிகளில் சிவன், சாஸ்தா சன்னிதிகள் தமிழ்நாட்டுக் கட்டிடப் பாணியைக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்குள்ள மூலவருக்கு ஆண்டுதோறும் கிருஷ்ணாஷ்டமி நாளில், தங்கத்தாலான அங்கி அணிவிக்கப்படுகிறது.

  விஷ்ணு உருவாக்கிய சக்கர தீர்த்தம் :

  இந்தக் கோவிலின் எதிர்புறத்தில் விஷ்ணு சக்கரத்தைக் கொண்டு உருவாக்கியதாகக் கருதப்படும் ‘சக்கர தீர்த்தம்’ எனும் பெரிய குளம் ஒன்று இருக்கிறது. இந்தக் குளம் தோன்றியதற்குத் தனியாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

  ஒரு நாள், நாரதர் தனது தந்தையான பிரம்மாவைக் காண பிரம்மலோகத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, நாரதருக்குத் தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்து வந்த இறைவன் விஷ்ணு, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கே தோன்றி மறைந்தார்.

  இறைவன் விஷ்ணுவைக் கண்ட பிரம்மா, இறைவன் விஷ்ணுவைப் பார்த்து வணங்கினார். அப்போது அங்கிருந்த ஒன்பது முனிவர்கள் விஷ்ணு தோன்றி மறைந்ததை கவனிக்காததால், பிரம்மதேவர் அவருடைய மகன் நாரதரைப் பார்த்து வணங்கியதாகத் தவறாக நினைத்துச் சிரித்தனர்.

  அவர்களின் சிரிப்பைக் கண்ட நாரதர், சிறிது நேரத்திற்குள்ளாக அங்கு நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். அதன் பிறகு, அவர் முனிவர்களிடம் நடந்தவைகளை எடுத்துச் சொன்னார். முனிவர்கள், தாங்கள் அறியாமல் செய்த தவறால், தாங்கள் முன்பு செய்த வேள்விகளின் பலன்கள் அனைத்தையும் இழந்து போனார்கள்.

  அப்போது முனிவர்கள், பிரம்மா தங்களை மன்னித்தருளவும், தாங்கள் இழந்த வேள்வியின் சக்திகளை மீண்டும் திரும்பப் பெறுவதற்கும் தகுந்த வழியைக் காட்டும்படி நாரதரிடம் வேண்டினர்.

  உடனே நாரதர், தன்னிடமிருந்த ஆடை ஒன்றைக் கீழ் நோக்கி வீசி, ‘இந்த ஆடை எங்கு சென்று விழுகிறதோ, அங்கு சென்று இறைவனை வழிபட்டு, நீங்கள் இழந்த சக்திகள் அனைத்தையும் மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்.

  அந்த ஆடை விழுந்த இடத்திற்குச் சென்ற ஒன்பது முனிவர்களும், இறைவன் விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றத் தொடங்கினர். அப்போது, அவர்களில் ஒருவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்டே இருந்தது. அவரால் தியானத்தில் சிறிது நேரம் கூட அமர முடியவில்லை. இதனால், கவலையடைந்த முனிவர்கள் இறைவன் விஷ்ணுவிடம், அந்த முனிவரின் தண்ணீர் தாகத்தைப் போக்கிட வேண்டினர்.

  அவர்கள் முன்பாகத் தோன்றிய விஷ்ணு, தன் கையில் வைத்திருந்த சக்கரத்தைக் கொண்டு அங்கு ஒரு குளத்தை உருவாக்கி, அவர்களின் தண்ணீர் தாகத்தைப் போக்கினார். அந்தக் குளமே ‘சக்கர தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

  அமைவிடம் :

  திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 39 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வர்க்கலை. இங்கு அரபிக்கடலின் கரையோரம் ஆலயம் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல எர்ணாகுளத்தில் இருந்து கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வர்க்கலை பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
  Next Story
  ×