என் மலர்tooltip icon

    கோவில்கள்

    தன்னைத் தேடி வரும் பக்தர்களின் கோரிக்கை எதுவாயினும், அதை உடனே நிறைவேற்றித் தரும் கோவிலாக, லோகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.
    தன்னைத் தேடி வரும் பக்தர்களின் கோரிக்கை எதுவாயினும், அதை உடனே நிறைவேற்றித் தரும் கோவிலாக, லோகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகிலுள்ள லோகனார்காவு எனுமிடத்தில் அமைந்துள்ளது.

    தல வரலாறு :

    இந்தியாவின் வடபகுதியிலிருந்த நகரிகர் எனும் ஆரியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடித் தெற்கு நோக்கிச் செல்ல விரும்பினர். அவர்களது குலதெய்வமான லோகாம்பிகையையும், தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்த அவர்கள், லோகாம்பிகையின் கோவிலுக்குச் சென்று, தங்களுடன் வரும்படி வேண்டினர்.

    அவர்களின் வேண்டுதலைக் கேட்ட அவள், அவர்களுடன் வருவதற்குச் சம்மதித்தாலும், அதற்கு ஒரு நிபந்தனையையும் சொன்னாள். நகரிகர்கள் கூட்டமாகச் செல்லும் போது, அவர்களின் பின்னால் அவள் வருவதாகவும், அந்தக் கூட்டத்தினர் யாரும் அவள் வருகிறாளா? என்று பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்றும், அப்படித் திரும்பிப் பார்த்தால் அங்கிருந்து உடனடியாக மறைந்து சென்று விடுவேன் என்பதே அந்த நிபந்தனை.

    நகரிகர்களும் அவளது நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர். நகரிகர்கள் கூட்டமாகச் சென்ற போது, அவர்களின் குலதெய்வமான லோகாம்பிகையும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். கேரளத்திலுள்ள புதுப்பனம் எனும் கிராமத்திற்கு வந்து சேர்ந்த அவர்கள், அங்கு தங்கியிருந்து வணிகம் செய்யத் தொடங்கினர்.

    இந்நிலையில் ஒருநாள், அந்த ஊர்க்காரர்கள் சிலர் நகரிகர் களில் ஒருவரை ஒழுக்கக் குறைவானவர் என்று பழித்துப் பேசினர். அதனால், மனவருத்த மடைந்த அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். அதன் பிறகு, அந்த ஊரில் தொடர்ந்து இருக்க விரும்பாத அவர்கள் அங்கிருந்து வேறு ஊருக்குச் சென்றனர்.

    அவர்கள் செல்லும் வழியிலிருந்த ஓலம்பலம் எனுமிடத்தில் சில நாட்கள் தங்கினர். பின்னர் அங்கிருந்து வேறு இடம் தேடிக் கூட்டமாகச் செல்லத் தொடங்கினர். அந்தக் கூட்டத்தின் பின்னால், அவர்களின் குலதெய்வமான லோகாம்பிகையும் பின் தொடந்து சென்றாள்.

    அப்படிச் சென்ற வழியில், அங்கிருந்த கிராமத்து மக்களின் கண்களுக்கு லோகாம்பிகை தெரிந்தாள். கிராமத்தினர் நகரிகர்களிடம், உங்கள் கூட்டத்தின் பின்னால் நடந்து வரும் அழகிய பெண் யார்? எனக் கேட்டனர். நகரிகர்கள், லோகாம்பிகை விதித்த நிபந்தனையை மறந்து, தங்களுக்குப் பின்னால் வருவது யார்? என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் திரும்பிப் பார்த்தனர். அடுத்த நிமிடம், அவள் யார் கண்களுக்கும் தெரியாமல் மறைந்து போனாள்.

    தங்களின் குலதெய்வம் லோகாம்பிகை சொன்ன நிபந்தனையை மீறிப் பின்னால் திரும்பிப் பார்த்துத் தவறு செய்து விட்டோமே... என்று வருத்தமடைந்த அவர்கள் அந்தப் பகுதியைச் சுற்றிலும் தேடினர். அவர்களால் லோகாம்பிகையைக் காண முடியவில்லை.

    நகரிகர்கள் கூட்டத்தின் தலைவர், “எங்களுக்குத் துணையாக வந்த தெய்வமே, எங்கள் தவறை மன்னித்து, எங்களுக்குக் காட்சியளிக்க வேண்டும், இல்லையெனில் இந்த மலையை விட்டு நாங்கள் கீழிறங்க மாட்டோம்” என்று சொல்லியபடி, அருகிலிருந்த கொடைக்காட்டு (பயங்குட்டு என்றும் சொல்கிறார்கள்) மலையின் மீது, தனது கூட்டத்தினருடன் சேர்ந்து ஏறத் தொடங்கினார்.

    மலை உச்சியில் அவர்களுக்குக் காட்சியளித்த லோகாம்பிகையை அனைவரும் வணங்கித் தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். பின்னர், மீண்டும் தங்களுடன் வரும்படி அழைத்தனர். அப்போது அவள், மலையுச்சியிலிருந்து ஒரு அம்பைத் தொடுக் கும்படியும், அந்த அம்பு விழுமிடத்தில் தனக்குக் கோவில் ஒன்று கட்டும்படியும் உத்தரவிட்டாள்.

    அதை ஏற்ற தலைவர், அங்கிருந்து ஒரு அம்பைத் தொடுத்தார். அது மலையின் கீழ்ப்பகுதியிலிருந்த ஒரு மரத்தைத் துளைத்து நின்றது. அந்த இடத்தில் லோகாம்பிகைக்குக் கோவில் கட்டப்பட்டது. அந்த இடம் லோகனார்காவு என்று பெயரும் பெற்றது.

    ஆலய அமைப்பு :

    லோகனார்காவு கோவிலில் இருக்கும் லோகாம்பிகை அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருப்பதே அதன் சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த அம்மனைப் பகவதியம்மன் என்றும், துர்க்கையம்மன் என்றும் அழைக்கின்றனர். இந்த அம்மன் தாய் மூகாம்பிகையின் மறு தோற்றம் என்றும் சிலர் சொல்கின்றனர்.

    அம்மன் சன்னிதிக்கு வடக்குப் பக்கம் சிவன், விஷ்ணு ஆகியோருக்குத் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிவன் சன்னிதிக்கு எதிரில் இருக்கும் நந்தி சிறிது விலகிய நிலையிலேயே இருக்கிறது. கோவிலின் வடக்கு வாசலில் மேற்கூரையற்ற சன்னிதி ஒன்றில் கோவிலுக்குப் பாதுகாப்பு தரும் தெய்வமாகப் பூதத்தேவர் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    கோவிலின் வடக்குப் பக்கம் பூரக்களி மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் திருவிழாக் காலங்களில் இம்மண்டபத்தில் அம்மனுக்குப் பிடித்தமான பூரக்களி நடனம் நடக்கிறது. இந்த நடனத்தை அம்மன் விரும்பிப் பார்ப்பதாக ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. கோவிலின் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய குளமும், விஷ்ணு சன்னிதி அருகில் சிறிய குளமும் என்று இக்கோவிலுக்கு இரு குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.



    வழிபாடு :

    இக்கோவில் தினமும் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வழி படும் பக்தர்கள் எந்தக் கோரிக்கையை முன் வைத்தாலும், அம்மன் அதை உடனடியாக நிறைவேற்றித் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பக்தர்களும் தங்களது வேண்டுதல் நிறைவடைந்த பின்பு, இரட்டி பாயசம், வலிய வட்டலம் பாயசம் ஆகியவற்றை அம்மனுக்குப் படைத்து, நெய்விளக்கு ஏற்றி, மலர்களை அளித்து, நன்றி தெரிவித்து வழிபடுகின்றனர்.

    சிறப்பு விழாக்கள் :

    லோகனார்காவு கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதம் தொடங்கி 41 நாட்கள் வரை மண்டல விளக்குப் பெருவிழா (மண்டல உற்சவம்) நடைபெறும். இவ்விழாவின் 16-ம் நாள் நகர விளக்கு வழிபாடு நடைபெறுகிறது. கடைசி 11 நாட்கள் அருகிலுள்ள கொங்கனூர் பகவதி அம்மன் கோவிலிலும் மண்டல விளக்கு விழா நடக்கிறது. கொங்கனூர் பகவதி அம்மன் லோகாம்பிகையின் இளைய சகோதரியாகக் கருதப்படுகிறார். இவ்விழா நாட்களில் தச்சொலிக்களி எனும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    மலையாள நாட்காட்டியின்படி மீனம் (பங்குனி) மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் தொடங்கி பூரம் நட்சத்திரம் வரையிலான எட்டு நாட்கள் மீனம் விழா நடைபெறுகிறது. ரோகிணி நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா பூரம் நட்சத்திர நாளில் ஆறாட்டு விழாவுடன் நிறைவடையும். இவ்விழா நாட்களில் பூரக்களி நடனம் நடைபெறு கிறது.

    புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி விழா நாட்களில் எட்டாம் நாளான துர்க்காஷ்டமி நாளில் கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு வழிபாடு (கிரந்த பூஜை) நடைபெறுகிறது.

    லோகனார்காவு விளக்கம் :

    மலையாள மொழியில் லோகம் (உலகம்) என்பது மலா (மலை), ஆர் (ஆறு) மற்றும் காவு (வயல்) ஆகியவைகளால் ஆனது என்பதை விளக்கும் வகையிலும், இந்த உலகத்தைக் காக்கும் அம்மனாக அங்கு அவர் இருப்பதை உணர்த்தும் வகையிலும் அந்த இடத்திற்கு லோகனார்காவு என்று பெயர் ஏற்பட்டது என்கின்றனர்.

    லோகனார்காவு கோவிலின் இடப்புறத்தில் கரனவர் எனப்படும் நகரிகர் தலைவர்களின் பீடம் ஒன்று அமைந்திருக்கிறது. இங்கு அனுமதி பெற்ற பின்பே, பக்தர்கள் கோவிலுக்குள் வழிபாட்டுக்குச் செல்ல வேண்டும் என்கிற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    லோகனார்காவு கோவிலின் வடக்கு வாசலில் மேற்கூரையற்ற சன்னிதியில் இருக்கும் பூதத்தேவர் கோவிலில் நினைவுத்திறன் அதிகரிக்கவும், தங்களது தொலைந்து போன பொருட்களை மீட்டுக் கொடுக்கும்படியும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்திலிருக்கும் வடகரா எனும் ஊரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீமுண்டா எனுமிடத்தில் அமைந்திருக்கும் லோகனார்காவு லோகாம்பிகை கோவிலுக்கு வடகரா நகரிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
    சயன தோஷம், புத்திர தோஷம் போன்ற சகல தோஷங்களுக்கும் அருமருந்தாக இருப்பது தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் ஆகும்.
    திருக்கடையூர் அபிராமி அம்மனிடம் அபிராமி பட்டர், தமக்கு ‘கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், குன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியில்லாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஓர்துன்பமில்லாத வாழ்வும், துய்யநின் பாதத்தில் அன்பும் வேண்டும்’ என்று பதினாறு வகை பேறுகளையும் வேண்டுகிறார்.

    தனது வேண்டுதலில் ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்று கேட்கிறார். அதாவது மற்றப் பேறுகள் எல்லாம் தவறினாலும் பாதகமில்லை; குழந்தை பாக்கியம் எனும் சந்தான பாக்கியம் தவறாமல் கிடைக்க வேண்டும் என்கிறார். சில தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உடனே கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, எட்டு, பத்து வருடங்களோ கழித்துதான் கிடைக்கிறது.

    ‘குழல் இனிது யாழ்இனிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்பது வள்ளுவன் வாக்கு. குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தசரதர் காலத்திலேயே இருந்திருக்கிறது. தன்னுடைய குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்துதான், தசரத சக்கரவர்த்தியே 4 புதல்வர்களைப் பெற்றுள்ளார்.

    குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக நில்லாது போதல் போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரும். இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் அருமருந்தாக இருப்பது தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் ஆகும். இங்கு கோகுலாஷ்டமியிலும், ஸ்ரீ ஜெயந்தி நாளிலும் கிருஷ்ணர் அவதார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கண்ணன் தவழ்ந்து வரும் அழகை, அவனைப் பெற்ற தேவகிக்கு பார்க்க கொடுத்து வைக்கவில்லை. காரணம்.. அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே இடம் பெயர்ந்து ஆயர்பாடியின் யசோதையிடம் வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெற்றனர்.


    தவழும் கண்ணன்

    சிறுகுழந்தை வடிவில் தவழும் திருக்கோலத்தில், தொட்டமளூர் திருத்தலத்தில் காட்சி தருகிறார் கண்ணன். அந்த ஆலயம் பற்றி தெரிந்து கொள்வோம்.

    நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன், இக்கோவிலைக் கட்டினார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகள் இங்கும் காணப்படுகின்றன. கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்சென்றால், மூலவர் தரிசனம் காணப்பெறலாம். இங்கு மூலவராக ராமஅப்ரமேயர் எழுந்தருளியுள்ளார். இந்தப் பெருமாளை, ராமர் வழிபாடு செய்ததாக கூறுகிறார் கள். ‘அப்ரமேயன்’ என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்’ என்று பொருள். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் பெருமாளுக்கு ‘அப்ரமேயன்’ என்னும் திருநாமம் வருவது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து தனிச் சன்னிதியில் கிழக்கு பார்த்தவண்ணம், அரவிந்தவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். இவரை வெள்ளிக் கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும். நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு சிறப்பான திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக் கிழமைகளில் மாலை வேளையில் இத்தல அரவிந்தவல்லி தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.

    அடுத்து பிரகாரவலம் வருகையில் கிழக்கு பார்த்த வண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணர் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து தவழும் அந்த நவநீத கிருஷ்ணன் அப்படியொரு அழகு. சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். மகான் ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடு செய்துள்ளார்.


    ராம அப்ரமேயர்

    தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க மகான் புரந்தரதாசர் வந்தபோது கோவில் மூடப்பட்டிருந்தது. உடனே அவர், வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா’ என்னும் கீர்த்தனையைப் பாட, கோவில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் இத்திருத்தல சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் இருப்பதாக கூறுகிறார்கள்.

    இத்தல நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கிய தடை உள்ளவர்கள் இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார் கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்துகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில் களையும் கண்ணன் சன்னிதியில் நன்றி யுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

    ஆலயத்தில் சுதர்சனர், நரசிம்மர், வேணுகோபாலர், மணவாள மாமுனிகள், ராமானுஜர், வேதாந்த தேசிகர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. ராஜகோபுரத்தின் எதிரில் ‘புரந்தரதாசர் மண்டபம்’ உள்ளது. புரந்தரதாசர் இங்கிருந்துதான் கண்ணன் கீர்த்தனையை பாடி தரிசனம் பெற்றார். இங்கு கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, ஏகாதசி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

    பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்ற ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்துள்ளது. சென்னை மைசூர் ரெயிலில் சென்று சென்னபட்டினா ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் பயணம் செய்தால், 10 நிமிடத்தில் கோவில் வாசலில் இறங்கலாம். இத்தலத்தின் அருகில் புராதன சிறப்பு மிக்க நதி நரசிம்மர் ஆலயம் உள்ளது.
    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.
    கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    இக்கோவிலின் மூலஸ் தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார். மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார்.

    இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ண ரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள் ளனர். மூலஸ்தானம் எதிரி லுள்ள கொடிமரத்தைச் சுற்றி லும், அஷ்டதிக் பாலகர் களின் உருவம் பொறிக்கப்பட் டிருக்கிறது. முன் மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர்.

    பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் இருக்கும் பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது.

    குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தைக் கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார்.

    அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான்.

    இக்கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர்.

    சித்திரை பிரம்மோற் ஸவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார். இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார்.

    ஆடி கடைசி சனிக்கிழமையன்று( நாளை) இவருக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளை யில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொத்தப்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த கதிர்நரசிங்க பெருமாள் கோவில்.
    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது கொத்தப்புள்ளி கிராமம். இங்கு பழமை வாய்ந்த கதிர்நரசிங்க பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. கதிர் என்றால் ஒளி என்று பொருள். இருளில் தத்தளிக்கும் பக்தர்களை மீட்டெடுக்கும் வகையில், ஒளி பொருந்திய பெருமாளாக அவர் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

    கோவில் கட்டிடக்கலை :

    பழமையை பறைசாற்றும் இந்தக் கோவில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டதாகும். இந்தக் கோவிலை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரத்தில் கோவிலின் கட்டிடக்கலையை பார்க்கும் போது, நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவு கிறது.

    அதாவது கோவிலுக்கு உள்ளேயே, கருவறையை சுற்றி வருவதற்கு இடம் உள்ளது. அதற்கான நுழைவு வாயிலில் குனிந்தபடி உள்ளே சென்று, நிமிர்ந்தபடி வலம் வந்து மீண்டும் குனிந்து கொண்டே வெளியேறும் வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டிடக்கலை நாயக்கர் காலத்தை குறிப்பிடுவதாக உள்ளது.

    கோவில் கருவறையில் கதிர்நரசிங்க பெருமாள், கமலவல்லி தாயார்-லட்சுமியுடன் அருள்பாலித்து கொண்டிருக்கிறார். அவர்களின் முன்பு சுயம்புலிங்கம் உள்ளது. சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் அற்புதமாக காட்சி அளிக்கின்றனர். அர்த்த மண்டபம், மகாமண்டபம் உள் பிரகார அமைப்புடன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    ஜாதக தோஷங்கள் தீரும் :

    பண்டைக்காலத்தில் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவில், காலப்போக்கில் கன்னிவாடி ஜமீன்தார் களால் வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் இந்த கோவிலை, 1964-ம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ரெட்டியார்சத்திரத்தில் உள்ள கோபிநாதசுவாமி கோவிலின் உபகோவிலாகவும் இது விளங்குகிறது.

    இங்கு வந்து, கதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டால், ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். கோவிலின் முன்புறத்தில், பிரமாண்டமான ராஜகோபுரம் உள்ளது. உள்ளே சென்றவுடன் வலதுபுறத்தில் அனுக்கிரக பைரவர், இடதுபுறம் வீரமகா ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.

    அதற்கு அடுத்தப்படியாக கருடாழ்வார் சன்னிதி, மணிமண்டபம், அதன் உள்ளே முன்பக்கத்தில் 2 துவாரக பாலகர்கள் உள்ளனர். பெருமாளிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள், அவைகளை அவர் தீர்த்து வைப்பார் என்று கூறுவதை போல துவாரக பாலகர்களின் தோற்றம் உள்ளது.

    இதேபோல் வாகனங்களுடன் கூடிய பைரவர் சன்னிதி இங்கு தான் உள்ளது. தொழில் ரீதியாக வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்திலும், பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் 12 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு பூசணிக்காய் படைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அனைத்து தொழில்களும் சிறந்தோங்கும். வாகன விபத்து, நான்கு கால் ஷீவன்களால் ஏற்படும் ஆபத்து ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் கோவிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவர் தான், சரஸ்வதியின் குரு. இவரை வழிபட்டால், கல்வி, செல்வம் பெருகும். ஆவணி திருவோண நாளில், ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஏலக்காய் மாலை சாற்றி இவரை வழிபடுகின்றனர்.

    ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளது. சதுரபலகை வடிவ கல்லில் தேவர்களுடன் சக்கரத்தாழ்வார் இருப்பது சிறப்பாகும். கோர்ட்டு வழக்கு, வாகனத்தினால் வரும் விபத்து ஆகிய வற்றில் இருந்து பக்தர்களை காப்பாற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சித்திரை நட்சத்திர நாளில், இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்வதால் சகல நன்மைகளும் உண்டாகும்.

    சக்கரத்தாழ்வார் சன்னிதியின் பின்புறத்தில் நரசிம்மர் உள்ளார். நரசிம்மரை வழிபட்டால் எதிரியின் பலம் குறையும். செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமைதோறும் மஞ்சள்பொடி, சந்தனம், இளநீர், பால் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்தால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

    கதிர்நரசிங்க பெருமாள் கோவிலின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது நெய் தீபம் ஏற்றுவது தான். எண்ணெய் ஊற்றி இங்கு தீபம் ஏற்றுவதில்லை. திருமண தடை நீங்கவும், கணவர் நலம் பெற வேண்டியும், மன அழுத்தம் குறையவும் ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

    திருவிழாக்கள் :

    நரசிம்மன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருக்கார்த்திகை, புரட்டாசி 3-வது சனிக்கிழமை பூஜை, பைரவருக்கான தேய்பிறை அஷ்டமி பூஜை, திருக்கல்யாண உற்சவம் ஆகியவை கோவிலின் முக்கிய விழாக்கள் ஆகும். சித்திரைத்திருநாள் வருடபிறப்பு, ஆடி மாதம் 18-ம் நாள் ஆஞ்சநேயர் சிறப்பு திருமஞ்சனம், ஆவணி மூலம் ஹயக்ரீவர் திருமஞ்சனம், கோலாஷ்டமியன்று உறியடி உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.

    புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமை பெருமாள், ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம், 2-வது வாரம் வெண்ணை காப்பு, 3-வது வாரத்தில் பெருமாள்-ஏகாந்த சேவை, ஆஞ்சநேயர்-காய்கறி அலங்காரம், பெருமாள், செங்கமலவல்லி தாயார்-திருக்கல்யாண உற்சவம், 4-வது வாரம் ஆஞ்நேயர்-பெருமாளுக்கு பழ அலங்காரம், 5-வது வாரத்தில் ஆஞ்சநேயர், பெருமாள்-புஷ்ப அலங்காரம் ஆகியவை நடத்தப்படுகிறது.

    இதேபோல் கார்த்திகை மாதத்தில் தீபவழிபாடு, மார்கழி முதல் தனூர்மாத பூஜை, அமாவாசை நாளில் அனுமன் ஜெயந்தி, ஆஞ்சநேயர் திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி நாளில் பரமபதவாசல் திறப்பு, பெருமாள் உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது.

    திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில், பழனி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழனி செல்லும் பொதுமக்கள், பக்தர்கள் கதிர்நரசிங்க பெருமாளை தரிசித்து வருகின்றனர். குறிப்பாக ஆஞ்சநேயரின் அருளை பெற சனிக்கிழமைதோறும் இங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
    கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தில் சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என பிருந்தாவன் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    மதுரா:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ண பகவான் கோயில் உள்ளது. கிருஷ்ணர் இங்கு பிறந்தார் என்பதால், கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணர் பிறந்த தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் போது கோயிலில் பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து, பல வண்ண நிறத்திலான மின் விளக்குகள் அமைத்து சிறப்பான அலங்காரங்கள் செய்யப்படும்.



    இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தில் சீன தயாரிப்புகள் இடம்பெறாது
    என பிருந்தாவன் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், “இந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் சீன விளக்குகள் மற்றும் சீன தயாரிப்பு அலங்கார பொருள்கள் நிச்சயம் இடம்பெறாது. கோயிலுக்கு வரும் துறவிகள், யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர் மக்களும் சீன தயாரிப்புகளை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மத்திய அரசும் சீன பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, இந்திய எல்லையில் தனது படைகளை நிறுத்தியுள்ள சீனாவை கண்டிக்கும் வகையில் பிருந்தாவன் கோயில் நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
    ஆறு வகையான இறை வழிபாட்டில் சக்தியை கடவுளாக வழிபடும் நெறி ‘சாக்தம்’ என்பதாகும். சக்தி வழிபாட்டில் உலகின் ஆதிசக்தியான அன்னை பராசக்தியே மூலக்கடவுளாக போற்றப்படுகிறாள்.
    ஆறு வகையான இறை வழிபாட்டில் சக்தியை கடவுளாக வழிபடும் நெறி ‘சாக்தம்’ என்பதாகும். சக்தி வழிபாட்டில் உலகின் ஆதிசக்தியான அன்னை பராசக்தியே மூலக்கடவுளாக போற்றப்படுகிறாள்.

    கிராம தேவதைகள் எனப்படும் காவல் தெய்வங்களை வழிபடுவது என்பது, கிராம மக்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் மரபுகளில் ஒன்று. வருடம் தவறாது வானம் மழை பொழிந்து நீரைத் தரவேண்டும், அந்த நீரை பயன்படுத்தி, பயிர் செய்யப்படும் தானியங்களின் விளைச்சல் பெருகவேண்டும், அந்த தானியத்தை உண்டு உயிர் வாழும் உயிரினங்கள் பசி, பட்டினிகளுக்கு ஆட்படாது வாழவேண்டும், மனிதர்களுக்குள் ஏற்படும் பேதங்கள் விலகி, அவர்கள் நல்லவர்களாகவும் ஒற்றுமையுடனும் வாழவேண்டும் என்பனவற்றை முன்வைத்தே கிராம தேவதைகளை ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வழிபடுவது வழக்கமாயிற்று.

    இத்தகைய கிராம தேவதைகளில் பெரும்பாலான கிராமங்களில், அம்பாள் முதலிடத்தையும், அய்யனார் இரண்டாம் இடத்தையும் பிடித்திருப்பர். அம்பாள் ஆலயங்களைப் பொறுத்தவரை ஒரு சில ஊர்களைத் தவிர, பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் அல்லது காளியம்மன் என்ற பெயர்களைக் கொண்டதாகவே அமையப் பெற்றிருக்கும்.

    மாரியம்மன் அவதாரம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. மாரா என்னும் அசுரனை அழித்ததால் அந்த ஆதிபராசக்திக்கு மாரியம்மன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், மாரியை (மழையை) பொழிவிப்பதால் இப்பெயர் வந்தது என்றும் கூறுவதுண்டு.

    சிவந்த முகத்துடனும், சற்றே கோபத்தை வெளிப்படுத்தும் பார்வையுடனும், செவ்வாடை அணிந்து, வலது இரு கரங்களில் முறையே உடுக்கை மற்றும் கத்தியுடனும், இடது இருகரங்களில் சூலாயுதம் மற்றும் அபய ஹஸ்தத்துடனும், தலையில் அக்னி கிரீடத்துடனும், காதுகளில் பாம்படம் தரித்து காட்சியளிப்பவளே மாரியம்மன்.

    இவளே அனைத்து கடவுளுக்கும் ஆதிசக்தியாய் இருந்துள்ளாள் என்பதற்கு ஆதாரமாக, தேவிமகாத்மியத்தில் இடம்பெற்றுள்ள ‘சைவகாலே மஹாகாளி மஹாமாரி ஸவரூபையா’ என்ற வரிகளை கூறலாம். மேலும் இந்தியாவைத் தாண்டி கடல்கடந்து இலங்கை, மொரிஷியஸ், சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, ஹாங்ஹாங், வியட்நாம், பாகிஸ்தான் (5 கோவில்கள்) போன்ற பல நாடுகளில் அவளுக்கான ஆலயம் எழுப்பப் பெற்றிருப்பதை பார்க்கும் போது அனைத்துத் தெய்வங்களுக்கும் மேலானவளாக அவள் இருந்திருக்கிறாள் என்பதை உணர முடிகிறது.

    தென்னிந்தியாவில் மாரி என்ற பெயரில் வழிபடப்படுபவள், வட இந்தியாவில் சீதளாதேவி என்ற பெயரிலும், கிழக்கு இந்தியாவில் மானஸாதேவி என்ற பெயரிலும் வழிபடப்படுகிறாள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாரியம்மன் கோவில் பிரசித்திப் பெற்றதாக விளங்குகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன், ஈரோடு பெரியமாரியம்மன்,

    திருச்சி சமயபுரம் மாரியம்மன், கோவை பண்ணாரியம்மன், மதுரை வண்டியூர் மாரியம்மன், திருமங்கலம் மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், சேலம் கோட்டை மாரியம்மன், திண்டுக்கல் நத்தம் மாரியம்மன், சிவகங்கை கொப்புடையம்மன், தருமபுரி கணவாய் மாரியம்மன், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் என்ற வரிசையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமையும், புகழையும் தருபவளாக இருந்து அருள் பாலித்து வருகிறாள் மாதானம் முத்துமாரியம்மன்.

    பழங்காலத்தில் பிரம்பு எனப்படும் ஒருவகை தாவரக் காடாக இருந்த இப்பகுதியில், ஒரு புளியமரம் செழித்து வளர்ந்திருந்தது. அதை பார்த்த வணிகர் ஒருவர், விலைக்கு வாங்கி வெட்டி வண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்டார். வெட்டுண்ட புளிய மரத் துண்டுகளை ஏற்றிவந்த பார வண்டி தற்போது கோவிலுள்ள பகுதிக்கு வந்தபோது பொழுதுசாய்ந்து விட்டது. எனவே மறுநாள் புறப்பட முடிவு செய்த வணிகர், இரவு அங்கேயே தங்கினார். மறுநாள் சூரியன் உதித்த பின்னர் வண்டியில் மாடுகளை பூட்டி ஓட்ட முற்பட்டபோது பலவித முயற்சிகளை மேற்கொண்டும் பாரவண்டி கிளம்பவில்லை. தொடர்ந்து பல தடைகள் வந்துகொண்டே இருந்தது.

    இது விவரமறிந்து வடகால் ஜமீன்தார் இவ்விடத்திற்கு வந்தனர். அவர்கள் புளிய மரத்தை, மேலும் சிறு துண்டுகளாக்கி ஏற்றிச் செல்லுமாறு கூறினர். மரத்தை சிறு துண்டுகளாக்க வெட்டியபோது, எல்லோரது கண்களையும் கூசச் செய்யமாறு ஒரு பேரொளி கிளம்பியது. அதில் இருந்து வெளிப்பட்டு அனைவரையும் பக்தி பரவசம் கொள்ளச் செய்து ஆட்கொண்டாள் ஸ்ரீமுத்துமாரியம்மன்.

    இதைப் பார்த்து ஆனந்தம் கொண்ட ஜமீன்தார், இருகரம் கூப்பி நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து வணங்கினார். அதே சமயம் அம்பாளின் திருவுருவம் ஒரு கரமும் ஒருபக்க தனமும் இல்லாது குறையுருவாக வந்துள்ளதே என கவலையும் கொண்டார், இது புரிந்த தேவி தான் பிரம்புகாட்டில் ஒருபுற்றின் கீழ் இருப்பதாக உணர்த்த அவ்விடம் சென்று முழுமையாக இருந்த அம்பாளை வெளிக் கொணர்ந்து ஆலயம் எழுப்பும் பணியை மேற்கொண்டார் ஜமீன்தார்.

    பாரவண்டியை கனக்கவைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்ட அம்பாள், தான் குடியிருந்த புளியமரத் துண்டுகளை காலப்போக்கில் துளிர்க்கச் செய்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தினாள்.

    மண்ணியாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்தக் திருக்கோவில். இந்தக் கோவிலுக்கு தற்போது தான் ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சலவைக்கல்லால் ஆன மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில் விநாயகர் மற்றும் பின்னமான அம்பாள் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. அர்த்த மண்டபத்தில் விநாயகர், சுப்ரமணியர் உடனுறை அம்பாளின் உற்சவ திருமேனி இடம் பெற்றுள்ளது. கருவறையில் அனைவரையும் காத்து ரட்சிக்கும் அம்பாள், தன்னை நாடி வந்து வேண்டுவோருக்கு வேண்டியதை தருபவளாய் அருள்பாலிக்கிறார்.

    பிரகாரத்தில் விநாயகரும், கோவிலின் எதிரில் வெட்டுண்டு துளிர்த்த முந்நூறு ஆண்டு பழமையான புளியமரமும் உள்ளன. அதனையொட்டி கருப்பழகி, ஆரியமாலா உடனுறை காத்தவராயன் சன்னிதியும், 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பேச்சியம்மன் சன்னிதி களும் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அடுத்ததாக தெற்கு நோக்கிய வள்ளி -தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சன்னிதி இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று தீமிதி மகோற்சவம் நடக்கிறது. இதில் சுமார் 3000 பக்தர்கள் தீமித்து அம்பாளுக்கு நேரத்திக்கடன் செலுத்துவார்கள். இவ்வாண்டு தீமிதி உற்சவம் இன்று (11-8-2017) நடைபெறவுள்ளது.

    வடகால் ஜமீன் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்ட இக்கோவில், அவர் வழி வந்தவர்களால் 1890-ல் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1908 நீண்ட கால இடைவெளிக்குப்பின் 2006-ம் ஆண்டுகளில் மறு கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 5 நிலை ராஜகோபுரமும் பின்னப்பட்ட அம்பாளுக்கு தனி சன்னிதியும் கட்டப்பட்டு 2017 செப்டம்பர் 15 அன்று திருக்குடமுழுக்கு செய்யப்படவுள்ளது. தொடர்ந்து கோவிலை வடகால் ஜமீன் குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தீமிதி மகோற்சவத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கும்பகோணம் கோட்டம் சார்பாக திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களிலுள்ள முக்கிய ஊர்களிலிருந்தும், இந்த ஆலயத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் இவ்வாலயத்தை தரிசிக்க விரும்புவோர், சிதம்பரம் மற்றும் சீர்காழியிலிருந்து புத்தூர்- திருமயிலாடி ஆகிய ஊர்கள் வழியாக பழையாறு துறைமுகம் செல்லும் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தானம் வழங்கப்பட்ட ஊர் :

    இன்றைய சீர்காழி வட்டம் முற்காலத்தில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அவர்களின் பிரதிநிதியாக வடகால் ஜமீன்தார்கள், இப்பகுதியில் இருந்த 2000 வேலி நிலங்களில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றிருந்தனர். நாயக்க மன்னர்களின் ஆணைக் கிணங்க வடகால் ஜமீன்தார்களால், பதினோரு அந்தணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட ஊரே ‘மகாதானம்’. பெரிய அளவிலான நிலத்தை தானமாக அளித்ததால் இப்பெயர் வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி மாதானமாகியது.
    காயத்ரிதேவியை வழிபட்டு வந்தால், கர்மவினைகள் அகலும் என்பதே காயத்ரி வழிபாட்டின் பலன். காயத்ரிதேவி திருக்கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    உலக இயக்கத்துக்கு ஆதாரமாக நாம் கருதும் இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற பிரகலாதன் கூற்றுப்படி ஒவ்வொன்றும் இறையருளால் நிகழ்வதாகவே நாம் நம்புகின்றோம். முற்காலத்தில் வாழ்ந்த முனிவர்களும், ரிஷிகளும் இவ்வாறே நினைத்து உலக நன்மை வேண்டி இறைவனிடம் பல வரங்கள் கேட்டுப்பெற்றனர். இதற்காக அவர்கள் பல மந்திரங்களை உச்சரித்து இறைவனை போற்றினர். நான்கு வேதங்களிலும் சுமார் ஏழு கோடிக்கும் மேற்பட்ட மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பீஜாட்சர மந்திரங்கள் எனப்படும் இவற்றுள் மிக உயர்வானவை காயத்ரி மந்திரம்.

    ‘ஓம் பூர் புவ சுவஹ
    தத் சவிதுர் வரேண்யம்
    பர்கோ தேவஸ்ய தீமஹி
    தியோ யோ ந பிரசோதயாத்’

    ‘பூர் எனப்படும் பூலோகம், பவ எனப்படும் புவர்லோகம்(இடைலோகம்), சுவஹ எனப்படும் சொர்க்கலோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைத்து எங்கெங்கும் மூலாதாரமாய் நிறைந்து உயிர்கள் யாவும் உடல், ஆன்ம மற்றும் தெய்வீக நிலையில் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்த போற்றுதலுக்குரிய தெய்வீக பேரொளியை நாம் தியானிப்போம். அந்த மேலான தெய்வம் நம் அறிவுக்கு என்றென்றும் ஒளியூட்டட்டும்’ என்பதே இந்த மந்திரத்தின் பொருளாகும்.

    மந்திரங்களில் சிறந்த காயத்ரிக்கு உருவம் தந்தவர் விசுவாமித்திர முனிவர். ஐந்து தலைகளும், பத்து கரங்களும் கொண்ட காயத்ரிதேவியை அவர் உருவாக்கினார். இந்த தேவிக்கு சாவித்ரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு. காயத்ரி புலன்களின் தலைவி, சாவித்ரி உயிரின் தலைவி, சரஸ்வதி வாக்கின் தலைவி. எண்ணம், செயல், சொல் மூன்றாலும் தூய்மையையும், மேன்மையையும் உணர்த்துபவரே (திரிகரணசுத்தி) காயத்ரிதேவி. மனிதர்கள் மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளிலும் தூய்மையை கடைப்பிடித்து காயத்ரிதேவியை வழிபட்டு வந்தால், கர்மவினைகள் அகலும் என்பதே காயத்ரி வழிபாட்டின் பலன்.

    காயத்ரிதேவி அம்மனுக்கு முதன்முதலாக கோவில் எழுப்பப்பட்ட பெருமையும், புகழும் சிதம்பரத்திற்கேச் சேரும். ஒரு காலத்தில் காடாக இருந்த இப்பகுதியில் காயத்ரிதேவிக்கு சிறிய ஆலயம் இருந்தது. இங்குள்ள காயத்ரி தேவியை, அந்தணர் ஒருவர் தினமும் வழிபட்டு வந்தார்.



    ஒரு முறை கடுமையான தோஷங்களால் துன்பப்பட்ட மன்னன் ஒருவன், தில்லை காளியை தரிசித்து விட்டு, நடராஜரை தரிசனம் செய்ய வந்தான். அவனை சந்தித்த அந்தணர், காயத்ரி தேவியின் மந்திரத்தை மன்னனுக்கு சொல்லிக் கொடுத்தார். அதை உச்சரித்து வந்த மன்னன் குணம் பெற்றான். இதையடுத்து மன்னன், காயத்ரி தேவிக்கு மிகப்பெரிய ஆலயத்தை அமைத்தான்.

    காலப்போக்கில் அழிந்து போன இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 1990-ல் கும்பாபிஷேகம் கண்டது. இந்த குட முழுக்கின் போது, பல தலைமுறை களாய் பூஜிக்கப்பட்டு வந்த 2 அடி உயர மூலவர் சிலையை மாற்றி, நான்கடி உயரத்தில் உட்கார்ந்த நிலையிலான காயத்ரிதேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய மூலவரும் கருவறை யிலேயே இருக்கிறார்.

    இந்த ஆலயத்தின் சிறிய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் வலது புறம் விநாயகரும், இடதுபுறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர். நடுநாயகமாக அன்னை காயத்ரிதேவி தாமரை மலரில் அமர்ந்து பேரருள் புரிகிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவன், காயத்ரி, சாவித்ரி ஆகிய ஐந்து கடவுளர்களின் வடிவமாக அன்னை திகழ்கிறாள்.

    அவரது கரங்களில் கதை, அங்குசம், சங்கு, சக்கரம், தாமரைமலர், சாட்டை, கிண்ணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். அன்னையின் பாதத்தின் அருகே ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. தேவியின் முன்பு நந்தீஸ்வர பெருமானும், பலிபீடமும் இடம்பெற்றுள்ளது. கருவறைக் கோட்டத்தில் சரஸ்வதி, அமுதக்கலசம் ஏந்திய மகாலட்சுமி, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

    பவுர்ணமிதோறும் இவ்வாலயத்தில் சிறப்பு ஹோமமும், திருவிளக்கு வழிபாடும் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு மந்திரங்களை ஜபித்து வழிபாடுகளை மேற்கொண்டால் கல்வி கேள்விகளில் ஞானம் கைவரப்பெறும், வேலையின்மை, தொழில்முடக்கம் ஆகியவை நீங்கும். தோஷங்கள் மற்றும் வினைகள் அகலும், அனைத்து செல்வங்களும் பெற்று பரிபூரண வாழ்வும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆலயம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்தக் கோவிலில் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு மூன்றுநாள் திருவிழா நடைபெற உள்ளது.

    காயத்ரிதேவியின் திருக்கோவில் சிதம்பரம் நகரில் வடக்கு தேர் வீதியும், மேற்கு தேர் வீதியும் இணையுமிடத்தில் மேற்கு நோக்கி பிரியும் காயத்ரி அம்மன் கோவில் தெரு வழியாக அரைகிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

    கோவில் பற்றிய விவரங்களுக்கு இந்த எண்ணில் 91 4144- 223 450 தொடர்பு கொள்ளலாம்.
    கேரள மாநிலம், தாலிப்பரம்பா எனும் ஊரில் பரசினிக்கடவு எனுமிடத்தில் இந்த முத்தப்பன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
    கேரளா மாநிலம் பையாவூர் எனும் ஊரில் வசித்த ஒரு தம்பதியருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. அதனால் கவலையடைந்த அவர்கள், அருகிலிருந்த சிவபெருமான் கோவிலுக்குச் சென்று, வேண்டிக் கொண்டிருந்தனர். ஒருநாள் அந்த தம்பதியின் கனவில் தோன்றிய இறைவன் சிவபெருமான், மறுநாள் காலையில் ஆற்றில் கூடை ஒன்றில் ஒரு குழந்தை மிதந்து வரும் என்றும், அந்தக் குழந்தையை எடுத்து நல்ல முறையில் வளர்த்துக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டு மறைந்தார்.

    இறைவன் கனவில் சொன்னபடி, ஆற்றில் மிதந்து வந்த ஒரு கூடையில், மலர்ப் படுக்கையில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. அந்த தம்பதியர் குழந்தையை எடுத்து வந்து வளர்க்கத் தொடங்கினர்.

    அந்தக் குழந்தை, குழந்தைப் பருவத்திலேயே பல குறும்புகளைச் செய்யத் தொடங்கியது. குழந்தை வளர்ந்து பெரியவனானதும் கூட அந்த சேட்டைகள் தொடர்ந்தது. உயர்வகுப்பினர் கடைப்பிடித்து வந்த வாழ்க்கை நெறிகள் எதையும் பொருட்படுத்தாமல், வேட்டைக்குச் சென்று விலங்குகளைக் கொல்வது, அதன் இறைச்சியை உண்பது, மது அருந்துவது என்று பெற்றோர் களுக்குப் பிடிக்காத பல்வேறு செயல்களைச் செய்யத் தொடங்கினான். இதுபற்றிய பெற்றோரின் அறிவுரையையும் அவன் கேட்கவில்லை.

    பெற்றோரின் கண்டிப்பில் கோபமடைந்த அவன், தான் சிவபெருமானின் தோற்றம் என்பதை அவர்களிருவருக்கும் காட்டினான். தாங்கள் வளர்த்த குழந்தை சிவபெருமானின் மறுதோற்றம் என்பதைக் கண்ட அவர்கள் அவனை வணங்கி நின்றனர். அதன்பின்னர் அங்கிருக்க முடியாமல், அவன் வீட்டை விட்டு வெளியேறினான். குன்னத்தூர்படி எனுமிடத்தில் சந்தன் என்பவன் பனை மரத்திலிருந்து கள் இறக்கிக் கொண்டிருந்தான்.

    அவன் அங்கிருந்து சென்றதும், அங்கிருந்த பனை மரத்தில் ஏறி, தனக்குத் தேவையான அளவு கள்ளைக் குடித்து மகிழ்ந்தான். ஒவ்வொரு நாளும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளின் அளவு குறைந்து கொண்டே இருந்ததால், சந்தன் சந்தேகமடைந்தான். ஒரு நாள் இரவு காவல் பணியில் ஈடுபட்டான். ஒருவன் பனை மரத்தில் ஏறி கள்ளை எடுத்துக் குடிப்பதைப் பார்த்துக் கோபமடைந்த சந்தன், தான் வைத்திருந்த அம்பை எய்தான். அம்பு சென்ற அடுத்த நொடியில், சந்தன் கல்லாக மாறி நின்றான்.

    மறுநாள் காலையில் அங்கு வந்த சந்தனின் மனைவி, தன் கணவனின் நிலையைக் கண்டு வருத்தமடைந்தாள். அவள் சுற்றிலும் பார்த்தாள். அவளுக்கு, அங்கிருந்த பனைமரம் ஒன்றில் வயதான ஒருவர் அமர்ந்திருப்பது போன்று தெரிந்தது. உடனே அவள் அவரைப் பார்த்து, ‘முத்தப்பா, கல்லாய்க் கிடக்கும் என் கணவனைக் காப்பாற்ற இறங்கி வா’ என்று வேண்டினார். (கேரளாவில், வடக்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு மொழியில் ‘முத்தப்பன்’ என்றால் ‘தாத்தா’ என்று பொருள்) பனை மரத்திலிருந்து அவரும் கீழிறங்கி வந்தார். அவர் சந்தனை, கல் உருவத்திலிருந்து விடுவித்துச் சுய உருவம் கொடுத்தார்.

    இதனால் மகிழ்ச்சியடைந்த அந்தத் தம்பதியர், அவரை முத்தப்பன் என்றே அழைத்ததுடன், அவருக்கு கோவிலை கட்டி வழிபடத் தொடங்கினர். குன்னத்தூர்படியில் அமைந்த இந்தக் கோவில்தான் முத்தப்பனின் முதல் கோவில் என்கின்றனர். சந்தனுவும், அவனது மனைவியும் முத்தப்பனுக்கு, அவர் விரும்பிய கள், மீன், கருவாடு, இறைச்சி போன்றவைகளைப் படைத்துத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர். இப்போதும் இதே வழிபாடுதான் நடைபெறுகிறது.

    இந்நிலையில் குன்னத்தூர்படியிலிருந்து வேறிடத்தில் கோவில் கொள்ள விரும்பிய முத்தப்பன், ஒரு அம்பை எய்தினார். அது பரசினிக்கடவு என்று அழைக்கப்படும் தலத்தில் போய் விழுந்தது. அங்கும் முத்தப்பனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.

    ‘கள் குடித்தல், இறைச்சி உண்ணுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது’ என்று அவனுடைய பெற்றோர் கண்டித்ததால், பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய முத்தப்பன், தன்னுடன் நண்பனான திருவப்பனையும், தான் வளர்த்த நாயையும் கூட்டிச் சென்றான். இறைவனாக முத்தப்பன் கோவில் கொண்ட இடத்தில், அவரது நண்பனான திருவப்பனுக்கும் வழிபாடு நடக்கிறது. முத்தப்பன் சிவபெருமானின் தோற்றம் என்றும், திருவப்பன் விஷ்ணுவின் தோற்றம் என்றும், இந்த ஆலயம் சிவன், விஷ்ணு இணைந்த கோவில் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

    கோவில் அமைப்பு :

    பரசினிக்கடவு எனுமிடத்தில் அமைந் திருக்கும் இக்கோவிலில் சிறிய கருவறை ஒன்று இருக்கிறது. இதனுள் இரண்டு பஞ்சலோகச் சிலைகள் இருக்கின்றன. ஒரு சிலையினைத் ‘திருவப்பன்’ என்றும், மற்றொரு சிலையை ‘வெள்ளாட்டம்’ என்றும் சொல்கின்றனர். கருவறையினுள் வாள், திரிசூலம் போன்ற சில ஆயுதங்களும் இருக்கின்றன. கேரளக் கோவில்களின் கருவறைக்கு எதிரே அமைக்கப்படும் வழிபாட்டு மண்டபம் இந்தக் கோவிலில் இல்லை.

    பரசினிக்கடவு முத்தப்பன் கோவிலுக்குச் சமயப்பாகுபாடின்றி அனைவரும் வந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இக்கோவில் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கிறது. இங்கு வரும் பக்தர் களுக்குப் பச்சைப்பயறு, தேங்காய்த் துண்டு, தேநீர் போன்றவை வழங்கப்படுகின்றன. இது தவிர தினமும், வாழைப்பழம், மிளகு, அரிசி மாவு, மஞ்சள்பொடி சேர்த்துத் தயாரித்த உணவு வழங்கப்படுகிறது. சில வேளைகளில் தேங்காய்த் துண்டு, வறுத்த கருவாடு போன்றவையும் கொடுப்பதுண்டு.



    தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காகக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முத்தப்பன் வழிபாட்டிற்காகத் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றுடன் கள்ளையும் சேர்த்துத் தருகின்றனர். முத்தப்பனுக்குப் பிடித்தமான இந்த வழிபாட்டுப் பொருட்களைக் கொடுத்தால், அவர் பக்தர்கள் வேண்டியது அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் என்பது இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    முத்தப்பன் கோவிலில் புத்தரி திருவப்பன் பெருந்திருவிழா கார்த்திகை மாதத்தில் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவிற்குக் கேரளா மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    திருவப்பன் - முத்தப்பன் :

    இக்கோவிலில் இருவர் தன்னைத் திருவப்பனாகவோ அல்லது முத்தப்பனாகவோ வேடமிட்டுத் தெய்யம் ஆட்டம் ஆடுகின்றனர். திருவப்பனாக வேடமிடுபவர், தலையில் தலைப்பாகை ஒன்றை அணிந்திருப்பார். அந்தத் தலைப்பாகையின் மேல் பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருக்கும். நடுப்பகுதி மிக உயரமாக இருக்கும். கண்களுக்கு வெள்ளியாலான ஒரு தகடை அணிந்து கொள்வதுடன், நீண்ட கருமையான தாடியும் வைத்துக் கொண்டிருக்கிறார்.

    முத்தப்பனாக வேடமிடுபவர் கோவிலின் உள்ளே காணப்படும் அம்பையும் வில்லையும் எடுத்து இடக்கையில் வைத்துக் கொள்கிறார். இவர் அணிந்திருக்கும் தலைப்பாகையின் உயரம் குறைவானது. இவருக்கு வெள்ளை நிறத்தில் தாடி இருக்கிறது. பக்தர் களுக்குத் தேங்காய்க் கீற்றைப் பிரசாதமாகத் தரும், இவர் அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களுக்கும் தேங்காய்த் துண்டு களைச் சாப்பிடக் கொடுக்கிறார். அவ்வப்போது பக்தர்கள் வழங்கும் கள்ளை முத்தப்பனாக இருப்பவர், அருந்திவிட்டுப் பக்தர்களுக்கும் தருகிறார்.

    இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், தெய்யம் ஆட்டமாடும் திருவப்பனையோ, முத்தப்பனையோ கண்டு தங்களது மனக்குறைகளைக் கூறித் தங்கள் துன்பங்கள் மறைந்திட உதவும்படி வேண்டுகின்றனர். அவர்களுக்குக் கடவுளாக இருந்து, அவர்களின் துன்பத்திலிருந்து விடுபட நல்ல வழியைக் காட்டுகின்றனர். பக்தர்கள் வழங்கும் காணிக்கையை இருவருமே பெற்றுக் கொள்கின்றனர்.

    முத்தப்பன் கோவில்கள் :

    கேரளாவின் கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல கிராமங்களில் முத்தப்பன் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில்களில் குன்னத்தூர்படி, பரசினிக்கடவு தவிர்த்து, புரலிமலா, பாடவில், தில்லங்கேரி, கண்ணபுரம், வல்லுவன்கடவு போன்ற ஊர்களில் அமைந்திருக்கும் கோவில்களும் சிறப்பு பெற்றிருக்கின்றன. இது போல் கேரளாவின் வடமாவட்டங்களுக்கு அருகிலிருக்கும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையிலுள்ள சில ஊர்களிலும் முத்தப்பனுக்குக் கோவில்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இவை தவிர, மலேசியாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் புக்கிட் பெர்த்தாம், ஜொகூர் மாநிலத்தில் தம்போய் ஆகிய இடங்களிலும் முத்தப்பனுக்குக் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில்களில் முத்தப்பனுக்குப் பிடித்தமான மது, இறைச்சி ஆகியவற்றைப் படைத்து வழிபாடு கள் செய்யப்படுகின்றன.

    வழிபாடு இல்லை :

    இக்கோவிலில் ஐப்பசி 1-ந் தேதி முதல் கார்த்திகை மாதம் 11-ந் தேதி வரையிலும், ஆடி மற்றும் ஐப்பசி மாத அமாவாசை நாட்களிலும், ஆலயத்தில் பூஜை செய்பவரின் குடும்பத்தில் ஏதேனும் மரணம் நிகழ்ந்திருந்தாலும் மேற்படி வழிபாடு நடத்தப்படுவதில்லை.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், தாலிப்பரம்பா எனும் ஊரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் பரசினிக்கடவு எனுமிடத்தில் இந்த முத்தப்பன் கோவில் அமைந்திருக்கிறது. இரண்டு ஊர்களிலிருந்தும் இக்கோவிலுக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
    திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமதுரை பேரூராட்சியில் அமைந்துள்ளது சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்.
    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமதுரை பேரூராட்சியில் அமைந்துள்ளது. அருள்மிகு சவுந்தரவள்ளி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமானாக இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வல்ல கொண்டம நாயக்கர் மகன் ருத்ரப்ப நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இத்திருக்கோவிலில் ஏராளமான நகைகள் இருந்ததாகவும், அதனை கள்வர்கள் கவர்ந்து செல்ல, திப்பு சுல்தான் அதனை மீட்டுத் தந்ததாகவும், செவி வழி செய்தி உலவுகிறது.

    சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த திருக்கோவில் 15 அடி உயரத்தில் பழங்கால சுற்றுச்சுவர்களை உடையதாகும். இங்கு சவுந்தரராஜ பெருமாளுக்கும் சவுந்தரவள்ளி தாயாருக்கும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. மேலும், கருடாழ்வார், விஷ்ணு துர்க்கை, சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் மற்றும் ஆண்டாளுக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இதுபோக, வாகன மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, கொடிக்கம்பம் மற்றும் கோவிலின் நுழைவு வாயிலின் முன்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதி, தீபம் போடும் கம்பம் ஆகியவை அமைந்துள்ளன.

    இது தென்கலை கோவிலாகும். இங்கு பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது. இத்திருக்கோவிலுக்கு சொந்தமாக பால் கேணி ஒன்று அமைந்துள்ளது. து 10 அடி உயரம் கொண்ட 4 பக்க சுவரும், 10 அடி ஆழமும் கொண்டதாகும். இந்த பால் கேணியில் வறட்சியான காலங்களில் கூட தண்ணீர் வற்றாது என்பது சிறப்பு.

    ஆடி மாதம் இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கொடியேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் அனுமார், சிம்மம், கருடன், சேஷ வாகனம், யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 7-ம் நாளன்று திருக்கல்யாணமும், ஆடிப் பவுர்ணமி நாளில் திருத்தேரோட்ட உற்சவமும் நடைபெறும்.

    குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்துடன் வீதி உலா மற்றும் முத்துப் பல்லக்கில் பெருமாள் உற்சவம் வரும் நாட்களில் சுற்று வட்டார பகுதி கிராமத்தினர் திரளாக வந்து பெருமாளை வழிபட்டு அருள் பெற்று செல்வர். சவுந்தரராஜ பெருமாளை தரிசித்தால் தொழில் வளரும், குடும்பம் செழித்தோங்கும், திருமண யோகம் கூடி வரும், நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.
    எண்ணிலடங்காப் பெருமைகளைக் கொண்டது, திருக்கோவிலூர் திரிவிக்ரம சுவாமி எனும் உலகளந்தப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பஞ்சகிருஷ்ணாரண்யத் தலங்களுள் ஒன்று, நடுநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று, முதலாழ்வார்கள் முக்தி பெற்ற தலம், வாமனருக்குத் தனிக்கோவில் கொண்ட தலம், பல்லவர், சோழர், விஜயநகர மன்னர்கள் என பலரும் திருப்பணி செய்து மகிழ்ந்த கோவில் என எண்ணிலடங்காப் பெருமைகளைக் கொண்டது, திருக்கோவிலூர் திரிவிக்ரம சுவாமி எனும் உலகளந்தப் பெருமாள் திருக்கோவில்.

    பத்ம புராணம், பிரமாண்ட புராணம் இரண்டிலும் புகழப்படும் தலமாக திருக்கோவிலூர் திகழ்கிறது. பெருமாள் வாமன அவதாரம் எடுப்பதற்கு முன்பு இந்த ஆலயம் கிருஷ்ணன் கோவில் என அழைக்கப்பட்டது. கோபாலன் என்ற சொல்லே கோவாலன் என்று அழைக்கப்பட்டு, திருக்கோவலூர் என ஆனது.

    மகாபலி என்ற மன்னன் தர்ம நியாயங்களின்படி ஆட்சிபுரிந்து வந்தான். என்றாலும் தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தியவாறு இருந்தான். அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் இவனுக்குத் துணையாக இருந்து ஆதரித்து வந்தார். மகாபலியின் இன்னலைப் பொறுக்காத தேவர்கள், திருமாலிடம் தஞ்சம் புகுந்தனர். தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பதாக உறுதி அளித்தார் திருமால்.

    இந்த நிலையில் குழந்தை வரம் கேட்டு காசியபர் -அதிதி தம்பதியினர், திருமாலை வேண்டி காமேஷ்டி யாகம் செய்தனர். அவர்களுக்கு குட்டையான வடிவம் கொண்டு மகனாக பிறந்தார். இது வாமன அவதாரம் என்று அழைக்கப்படுகிறது.

    வாமனர் பூமி தானம் பெற மகாபலிச் சக்கரவர்த்தியிடம் வந்தார். அவர் கேட்ட மூன்றடி மண்ணை கொடுக்க மகாபலி ஒப்புக்கொண்டான்.

    வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார், தன் சீடனைக் காக்க எண்ணி, அவனிடம் உண்மையைக் கூறி தானம் கொடுக்க வேண்டாம் என்றார்.

    ஆனால் கொடுத்த வாக்கை மீறாத மகாபலி, ‘வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்றால், அது தமக்குப் பெருமையே’ என்று கூறி, கமண்டலத்தைச் சாய்த்து தாரை வார்க்கத் தொடங்கினான்.

    இதனைத் தடுக்க விரும்பிய சுக்ராச்சாரியார், வண்டாக மாறி, கமண்டலத்தில் தண்ணீர் வரும் வழியை மூடினார். ஆனால் வாமனர், ஒரு புல்லை எடுத்து துவாரத்தில் குத்தியதால் சுக்ராச்சாரியார் தமது ஒரு கண்ணை இழந்தார். முடிவில், மகாபலி தண்ணீர் விட்டுத் தாரை வார்த்தான்.

    வாமனர், ஓரடியை வைத்து மண்ணுலகை அளந்தார். மற்றொரு அடியால் விண்ணுலகம் முழுவதையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று வாமனர் கேட்க, மகாபலி தன் செருக்கை இழந்து மூன்றாவது அடியைத்

    தன் தலை மீதே வைக்க வேண்டினான். அதன்படியே பெருமாள் வைக்க பாதாளம் சேர்ந்தான் என்பது இந்தத் தல வரலாறு.

    ஞானிகளும், நாரதரும், கின்னரர்களும் இத்தலத்தில் தவமி யற்றிய தாகக் கூறப்படுகிறது. மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்ட முனிவர், திருமாலின் வாமன அவதாரத்தைக் காண விரும்பித் தவமியற்றிய தலம் இது.

    திருக்கோவிலூர், திருக்கண்ண புரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக் கண்ண கவித்தலம் என ஐந்து தலங்கள் பஞ்ச ஷேத்திர தலம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் முதன்மையானது திருக்கோவிலூர்.



    உலகளந்த பெருமாள் :

    ஆலயத்தின் நாயகனாக விளங்கும் திரிவிக்ரம சுவாமி களின் பிரமாண்டத் திருக்கோலம் நம் கண்ணுக்கும், கருத்துக்கும் வியப்பூட்டுகிறது. இவரே உலகளந்தப் பெருமாள் என அழைக்கப்படுகின்றார். வலது காலை உயரத் தூக்கி, இடது திருவடியில் நின்று புன்னகையுடன் சேவை சாதிக்கின்றார். வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம் ஏந்தி ஞானத்தை அருள்கின்றார். (பொதுவாக வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு இருப்பது வழக்கம்).

    ஓரடியால் வானத்தை அளந்தும், மற்றொரு அடியால் பாதாள உலகை அளந்தும், மூன்றாவது அடியை எங்கே வைப்பது என மகாபலியை கேட்கும் விதமாக வலது கையை வைத்துள்ளார். மேலே உள்ள திருவடியை பிரம்மா ஆராதனை செய்ய, கீழே உள்ள திருவடியை லட்சுமி, பிரகலாதன், மகாபலி, நமச்சு மகாராஜா ஆகியோர் பூஜை செய்கின்றனர்.

    சுக்ராச்சாரியார், மிருகண்டு மகரிஷி, அவரது பத்தினி, முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், கருடன் ஆகியோர் கருவறையின் வலது பக்கமும், இடது பக்கமும் காட்சி தருகின்றனர்.

    மூலவரின் திருமேனி 21 அடி உயரம் கொண்ட பழமையான தேவதாருவால் (மரத்தால்) ஆனதாகும். இவருக்கு உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயார் என பல்வேறு திருநாமங்கள் உண்டு. எம்பெருமான் பச்சிலை மூலிகைகளைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டு பேரழகனாக வீற்றிருக்கிறார்.

    நாச்சியார் சன்னிதி :

    திரிவிக்ரம சுவாமியின் வலதுபுறம் தாயார் பூங்கோவல் நாச்சியார் சன்னிதி அமைந்துள்ளது. இது, கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை கொண்டு எழிலோடு தனிக்கோவிலாக அமைந்துள்ளது. மூலவர் பூங்கோவல் நாச்சியார் என்றும், உற்சவர் புஷ்பவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகின்றாள். திரிவிக்ரம சுவாமியை பிரம்மா, இந்திரன், மகாபலி, மிருகண்டு, குஷி, காசியபர் மற்றும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    விழாக்கள் :
     
    தமிழ் புத்தாண்டு, ராமநவமி, ராமானுஜர் விழா, வைகாசி வசந்த உற்சவம், ஆனியில் திருமாலுக்கு ஜேஷ்டாபிஷேகம், ஆடியில் பத்து நாட்கள் ஆண்டாள் பூர விழா, ஆடி வெள்ளி, கடைசி வெள்ளி தாயாருக்கும், பெருமாளுக்கும் புஷ்பங்கி சேவை, ஆவணியில் வேணுகோபாலருக்கு 10 நாட்கள் விழா, வாமன ஜெயந்தி மூன்று நாட்கள், புரட்டாசி பவித்ர உற்சவம், தாயாருக்கு நவராத்திரி விழா, திருமாலுக்கு தினப்படி திருமஞ்சனம், ஐப்பசி திருவோணத்தன்று முதலாழ்வார் களுக்கு 5 நாள் விழா, மணவாள மாமுனிகள் பத்து நாள் உற்சவம், கார்த்திகை தீப உற்சவம் மூன்று நாள், கைசீக ஏகாதசி, மார்கழியில் பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து, தைத் திருநாள், மாசியில் மகம், பங்குனி பிரம்மோற்சவம் என விழாக்களுக்கு பஞ்சமில்லாத் திருக்கோவிலாகத் திகழ்கின்றது.

    காலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை, 8.30மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 5.45 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இது மாறுபடும்.

    அமைவிடம் :

    விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தென்மேற்கே 200 கிலோமீட்டர், விழுப்புரத்திற்கு மேற்கே 40 கிலோமீட்டர், திருவண்ணாமலையின் தென்கிழக்கே 40 கிலோமீட்டர், திருவெண்ணெய்நல்லூருக்கு மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.
    ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சர்ப்ப தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலங்களை பார்க்கலாம்.
    ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய பரிகாரத் தலங்கள்.....

    * சிதம்பரம் நடராஜர் ஆலயம், சிவகாமசுந்தரியின் சந்நிதியில் உள்ள சித்திரகுப்தரை திங்கட்கிழமை எமகண்ட வேளையில் வணங்கினால் கேது தோஷம் நீங்கும்.

    * நாகர்கோவில், நாகநாதர் ஆலயத்தில் மூலவரே நாகர்தான். கருவறையின் ஓலை விதானத்தில் எப்போதும் ஒரு நாகம் காவல் காக்கிறது என்பது ஐதீகம். இங்குள்ள இரண்டு அரச மரங்களை வலம் வந்து நாகராஜனையும், நாகராணி என்ற துர்க்கையையும் வழிபட, ராகு-கேது தோஷங்கள் நீங்குகின்றன.

    * கேரள மாநிலம் - ஆலப்புழை, ஹரிபாத நகரிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது மன்னார் சாலை. இங்கு நாகராஜன், சர்ப்பயக்ஷியோடும், சகோதரி நாகசாமுண்டியோடும் தாத்தாஇடம் என்ற பாதாள அறையில் தரிசனம் தருகிறார். ராகு - கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயில்ய நட்சத்திரத்தன்று இங்கு வந்து முறையாக வழிபட அந்த தோஷங்கள் நீங்குகின்றன.

    * நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயம். இங்கு அருளும் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மாமருந்து. வீடுகளில் விஷ பூச்சிகள் வராமல் இருக்க வெள்ளியினாலான பாம்பு, தேள் போன்ற உருவங்களை உண்டியலில் செலுத்துகிறார்கள். இவ்வாறு செலுத்தினால் நாகதோஷம் நீங்கப்பெறுவர்.

    * ராமநாதபுரம், பரமக்குடியிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது நயினார் கோயில். இங்குள்ள இறைவன் -நாகநாதர். ஆதிசேஷனும் அஷ்ட நாகங்களும் வழிபட்ட மூர்த்தி இவர். ராகு-கேது தோஷங்கள் நீங்க இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க தோஷங்கள் நீங்குகின்றன.

    * திருநெல்வேலியில் கார்க்கோடகன் என்று அழைக்கப்படும் ராகு-கேது தலம் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் ராகு-கேது அம்சமாகத் திகழ்கிறார். இவருக்கு அமிர்தகலசம் செய்து நிவேதித்தால் ராகு-கேது தோஷங்கள் நீங்கும்.

    * மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள கோடங்கிபட்டியில் அருளும் சித்திரகுப்தரை பவுர்ணமி தினங்களில் வழிபட்டால் கேது தோஷம் நீங்குகிறது. கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தர் ஆவார்.

    * கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்பனந்தாள், ஆதிசேஷனும் நாகக்கன்னிகைகளும் வழிபட்ட தலம். இங்குள்ள கிணற்றில் நாகக் கன்னிகை பீடம் காணப்படுகிறது. இத்தல ஈசனை வழிபட ராகு-கேது தோஷம் நீங்கும்.

    * சென்னை, பல்லாவரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநீர்மலை. இங்கு குளக்கரையில் தூமகேது கணபதி அருள்கிறார். தூமம் ராகுவையும் கேது கேதுவையும் குறிக்கும். ராகு-கேது அம்சமாய் விளங்கும் இவரை தரிசித்தால் அரவு கிரகங்களால் ஏற்படும் சுபகாரியத் தடைகள் விலகி மங்களங்கள் உண்டாகும்.

    * ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட திருவஹிந்திரபுரம், கடலூர்-பண்ருட்டி பாதையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. பெருமாளின் தாகத்தைத் தீர்க்க ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சேஷ தீர்த்தக் கரையில் உள்ள நாக சர்ப்பத்தை வழிபட, ராகு-கேது தோஷங்கள் நீங்கும்.

    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அபீதகுஜாம்பாள் சந்நிதிக்கு முன் மண்டபத்தில் அருளும் சித்திரகுப்தரை தரிசித்து வலம் வந்தால் கேது தோஷ பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.

    * கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நிதி கொண்டு அருள் பொழியும் துர்க்கையை தரிசித்தால் ராகு-கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். இந்த துர்க்கை நவகிரகநாயகி என போற்றப்படுகிறாள்.

    * நாகப்பட்டினம், வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 3 கி.மீ மணல்மேடு வழியில் கோயில் கொண்டிருக்கிறார் புற்று வடிவான சிவலோகநாதர். இவருக்கு திங்கட்கிழமைகளில் புனுகுச்சட்டம் சாற்றி வழிபட ராகு-கேது தோஷங்கள் விலகுகின்றன.

    * தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர். இத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாம்புப் புற்றுக்கு பக்தர்கள் பால், முட்டை ஆகியவற்றை வைத்து வணங்குகின்றனர். 12 அடிக்குமேல் நீளம் உள்ள பாம்பு ஒன்று 6-4-1988-ல் இங்கு சட்டை உரித்து விட்டுச் சென்றிருக்கிறது. அதை பொதுமக்களின் பார்வைக்காக கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழி பட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    முதலில் ராகுகால பூஜை நடந்த ஆலயம் :

    தமிழ்நாட்டில் ராகு கால பூஜை முதன் முதலில் தொடங்கிய பெருமை குடந்தை அருள்மிகு காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன் கோவிலில் தான் எனப்படுகிறது. இங்கே நாள் தோறும் ராகு கால பூஜை நடைபெற்று வருவது சிறப்பு.
    ஜாதகத்தில் தோஷம் உள்ள கன்னிப் பெண்கள் இங்குள்ள இறைவன் இறைவியை ஆராதனை செய்தால் தோஷம் நீங்குவதுடன், அவர்களுக்கு விரைந்து திருமணமும் நடந்தேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.
    சிவபெருமானிடம் சாபம் பெற்று, பசுவாக உருவெடுத்து பூலோகம் வந்தாள் பார்வதி தேவி. சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் பாலைப் பொழியும் போது, பசுவின் பால் இறைவனின் மேல் பட்டு பாவ விமோசனம் பெற்றாள் பார்வதி.

    சிவபெருமான்- பார்வதி திருக்கல்யாணம் பந்தணைநல்லூரில் நடைபெறுவதென முடிவாயிற்று. அந்தப் பெருமணத்திற்கு கயிலையில் இருந்து அனைத்து தேவாதி தேவர்களும் பந்தணைநல்லூருக்கு வரத்தொடங்கினர்.

    ஸ்ரீ பசுபதீஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண வந்த அக்னி தேவன், சிவபெருமானை பூஜை செய்ய விரும்பினான். இதற்காக பந்தணை நல்லூருக்கு அக்னி திக்கில், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். தினம் தினம் அந்த இறைவனை பூஜித்து வணங்கினான்.

    அந்த தலம் ஸ்ரீ ரங்கராஜபுரம்

    தல வரலாறு :

    இத்தலத்திற்கு இப்பெயரை சூட்டியவர் மகாவிஷ்ணு.

    ஆம்.. மண்ணியாற்றில் நீராடிவிட்டு, இத்தலத்து இறைவனை ஆராதிக்க வந்த மகாவிஷ்ணு, இத்தலத்துக்கு அரங்கராஜபுரம் என பெயர் சூட்டினார். அதுவே தற்போது ஸ்ரீ ரங்கராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது

    வனவாசத்தில் இருந்த பாண்டவர்களின் ஒருவராகிய பீமராஜன் காட்டில் நள்ளிரவில் இடும்பனைக் கொன்றார். அவரைப் பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. இத்தலம் வந்த பீமராஜன் இத்தலத்து இறைவனை ஆராதித்து தோஷம் நீங்கப் பெற்றார். தன்னை காத்து அருள் புரிந்த இத்தலத்து இறைவனை இடும்போஸ்வர சுவாமி என்று பீமன் அழைக்க, அந்தப் பெயரே இத்தலத்து இறைவனுக்கு நிலையாகிவிட்டது.

    ஆலய அமைப்பு :

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் இடும்பேஸ்வர சுவாமி. இறைவி பெயர் குசும குந்தலாம்பிகை. ஆலய முகப்பைக் கடந்ததும் விசாலமான பிரகாரம் உள்ளது. கொடிமரம், பீடம், நந்தி இவைகளைக் கடந்தால் மகாமண்டபம்.

    மகா மண்டபத்தின் வலது புறம் இறைவியின் சன்னிதி உள்ளது. அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தென் முகம் நோக்கி புன்னகை தவழ காட்சி தரும் அழகே அழகு. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் விநாயகர், வலது புறம் முருகன் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன.

    அடுத்துள்ள கருவறையில் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி வீற்றிருந்து அருள்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்க்கையும் இருக்கிறார்கள்.



    பிரகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், ஐயப்பன் ஆகியோரும், வடக்கு திசையில் சண்டிகேசுவரரும் தனித்தனி சன்னிதிகளில் அருள் பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களின் தனி மண்டபம் உள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் சூரியன், பைரவர், சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன.

    ஆராதனைகள் :

    ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

    இங்குள்ள அய்யப்பன் சன்னிதியில் கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று நூற்றுக் கணக்கான பேர் மாலை போட்டுக் கொண்டு மண்டல விரதத்தை இங்கு தொடங்குகின்றனர். இங்குள்ள இறைவன் அக்னி தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

    எனவே, இங்கு கிழக்கு பிரகாரத்தில் உள்ள சூரியதேவன் மிகவும் சக்தி உள்ளவர் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    வெப்பத்தால் வரும் நோய்கள் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களை குணமாக்குவதில் இங்குள்ள சூரியபகவான் வல்லவர் எனக் கூறுகின்றனர். சூரிய தேவனை வணங்கி, ஒன்பது வாரங்கள் அவர் எதிரே அமர்ந்து, அவருக்கு அபிஷேகம் செய்து வந்தால் நோய்களின் கடுமை நீங்கி குணமாவது நிச்சயம் என்கின்றனர். பீமனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியவர் இத்தலத்து இறைவன் எனவே இத்தலம் தோஷ நிவர்த்தி தலமாகவும் போற்றப்படுகிறது.

    ஜாதகத்தில் தோஷம் உள்ள கன்னிப் பெண்கள் இங்குள்ள இறைவன் இறைவியை ஆராதனை செய்தால் தோஷம் நீங்குவதுடன், அவர்களுக்கு விரைந்து திருமணமும் நடந்தேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

    இந்த ஆலயத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு நவசண்டி மகாயாகம் நடைபெறுவதோடு அப்போது மக்கள் வெள்ளம் சூழ காட்சி தரும் இந்த ஆலயத்தைக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    நம்மை அறியாது நம்மைச் சூழ்ந்துள்ள தோஷங்கள் நீங்க நாமும் ஒரு முறை இத்தலம் சென்று வரலாமே!

    திருப்பனந்தாள் - மணல்மேடு பேருந்து தடத்தில் உள்ள பந்தநல்லூர் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீரங்கராஜபுரம் என்ற இத்தலம்.
    ×