search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthu Mariamman temple"

    • திருவாண்டார் கோவில் அருகே நடைபெற்றது.
    • தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலாவும் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் திருவாண்டார் கோவில் அருகே உள்ள கொத்தபுரி நத்தம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலாவும் நடைபெற்றது.

    மேலும் ஊரணி பொங்கல், சாகை வார்த்தல் , உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று வெள்ளிக்கிழமை காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு விதமான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பிறகு செடல் திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் எழுந்தருளிய பின்னர் தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது.

    அதன் பிறகு மாலை 7 மணிக்கு கழுமரம் ஏறும் திருவிழா நடந்தது. அதில் 70 அடி உயரம் உள்ள கழு மரத்தின் காப்பு கட்டிய பக்தர்கள் மட்டும் ஏரி அமர்ந்தனர். பின்னர் கூடையில் வரும் மோரினை அருந்திய பிறகு அங்கிருந்து எலுமிச்சை பழத்தினை பக்தர்களுக்கு வீசி எறிந்தனர்.

    அந்த பழத்தினை பிடித்து சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன் பிறகு அன்னதானம் சாமிக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு கொடுத்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராமசாமி, செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் ஜானகிராமன், துணைத் தலைவர் வெங்கடேசன், உறுப்பினர் பெருமாள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

    ×