என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பத்ரகாளியம்மன் விரும்பி திருக்கோவில் கொண்ட சில தலங்களில் முதன்மையானது, சிவகாசி பத்ரகாளியம்மன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    தட்சன், தன் மகளான தாட்சாயனியை ஈசனுக்கே மணம் முடித்து தந்தபோதிலும், தனது அகந்தையால் சிவபெருமானைப் பகைத்துக் கொண்டான். நித்தமும் சிவ நிந்தனையையே சிந்தையில் கொண்டான். ஒருமுறை தட்சன் ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். அந்த யாகத்திற்கு சிவனையோ, தன் மகள் தாட்சாயனியையோ அழைக்காமல் தவிர்த்தான்.

    இதனால் வெகுண்ட ஈசன், தட்சனின் அந்த முறைகெட்ட யாகத்தை அழிக்க தம்மில் இருந்து வீரபத்திரரை உண்டாக்கினார். அவரது அருகில் இருந்த அம்பாளின் கோபத்தில் இருந்து பத்ரகாளி உருவானாள். வீரபத்திரரும், அவரது துணையாய் உண்டான பத்ரகாளியுமே ஈசனின் கட்டளைப்படி தட்ச யாகத்தை அழித்தனர். ஈசனின் கோபத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரும், அம்பாளின் கோபத்தில் இருந்து தோன்றிய பத்ரகாளியும் ஈசனின் கட்டளைப்படி ஆங்காங்கே உலகம் செழிக்க திருக்கோவில் கொண்டனர்.

    அப்படி பத்ரகாளியம்மன் விரும்பி திருக்கோவில் கொண்ட சில தலங்களில் முதன்மையானது, சிவகாசி பத்ரகாளியம்மன் திருக்கோவில். கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு திருக்கரங்களுடன் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், ஹஸ்தம், நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள். கருவறையில் வீற்றிருக்கும் இந்த அன்னை, வலது திருப்பாதத்தை தூக்கி குத்துக்காலிட்டு, தனது இடது திருப்பாதத்தை அரக்கனின் தலைமேல் வைத்த வண்ணம் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

    இந்த அன்னையை பவுர்ணமி, அமாவாசை திதிகளிலும், செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் வழிபடுவது சிறப்பு. அந்த நாட்களில் அம்பாள் கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, 8 உதிரி எலுமிச்சைப் பழங்களை அம்பாள் திருப்பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வியாபாரத்தில் மிகுந்த லாபம் உண்டாகும் என்பது ஐதீகம். வியாபாரத்தில் லாபம் கண்டவர்கள், அதில் ஒரு குறிப்பிட்டத் தொகையை அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

    தன லாபம் கிடைக்கவும், எதிரிகள் தொல்லை அகலவும், சுபகாரிய தடைகள் விலகவும் செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில், தொடர்ந்து 8 வாரங்கள் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி பத்ரகாளி அம்மனை வழிபட வேண்டும் என்கிறார்கள். குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய்களும், திருஷ்டிகளும் இத்தல பத்ரகாளியை வழிபட நீங்குகிறதாம்.

    ஆலய ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கம்பீரமாக நிற்கிறது. ஆலய வெளிப் பிரகாரத்தில் நாகராஜா, ஐயப்பன், அனுமன், பஞ்சமுக விநாயகர், லட்சுமி நாராயணர் சமேத அஷ்டலட்சுமி சன்னிதிகள் உள்ளன. தல விநாயகர் பஞ்சமுக விநாயகர். இவர் ஆலய வெளி சுற்று பிரகாரத்தில் உள்ளார். இவரை சங்கட ஹர சதுர்த்தி நாட்களில் வழிபட்டு வர, தொடர்ந்து 8 சங்கடஹர சதுர்த்தியில் அருகம் புல் சாத்தி வழிபட வினைகள் அறுபடும்.

    அடுத்து, இத்தல வெளிப்பிரகார அஷ்டலட்சுமி சன்னிதிகளும் சிறப்பானவை. இங்கு வெள்ளிக்கிழமை மற்றும் அட்சய திருதியை நாட்களில் பசு நெய் தீபம் ஏற்றி, தாமரை, மரிக் கொழுந்து சூட்டி வழிபட வறுமை அகலும். உட்பிரகாரத்தில் உள்ள பைரவர் சன்னிதியில் தேய்பிறை அஷ்டமி நாளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது திரண்ட செல்வத்தைப் பெற்று தரும். இத்தல வீரபத்திரர், அனுமன் சன்னிதியில் பவுர்ணமி நாளில் வெண்ணெய் சாத்தி, வெற்றிலை மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபட உடல் நோய்கள், மன நோய்கள் அகலும்.

    ஆலய கருவறை வெளி மற்றும் உள் பிரகாரத்தில் கன்னி விநாயகர், பைரவர், வீரபத்திரர், மாடசுவாமி, வெயிலுகந்த அம்மன், இருளப்ப சுவாமி, கருப்ப சுவாமி, பேச்சியம்மன் சன்னிதிகள் உள்ளன. பத்ரகாளியம்மனின் சகோதரி பேச்சியம்மனுக்கு பஞ்சமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 11 பஞ்சமி நாட்களில் சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சித்து வர குழந்தைகள், பெரியவர்களுக்கு சொல்வாக்கும், செல்வாக்கும் கிடைக்கும்.

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பத்ரகாளியம்மனிடம் தொட்டில் பிரார்த்தனை வேண்டிக்கொண்டு, அவளது கருவறை தீபத்தில் நல் லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வர, உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    இத்தல ஆலயத்தின் உள்ளே பத்ரகாளி அம்மனின் எதிரே உள்ள நந்தவனத்துக்குள், ஆதி பத்ரகாளி பீடம் உள்ளது. முதன் முதலில் இத்தல பத்ரகாளி அம்மன் அமர்ந்த ஆதி பீடம் இதுவாகும். இந்த நந்தவனத்திற்குள் ஆண் களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களுக்கு அனுமதி இல்லையாம். உடல் உறுப்புகள் நலம் அடையும் பொருட்டு பத்ரகாளியம்மனிடம் வேண்டிக்கொண்ட பக்தர்கள், அவள் அருளால் நலம் பெற்றதும் மண், வெள்ளியால் ஆன கை, கால் போன்ற உடல் உறுப்புகளையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். வீடு வாங்குவதற்கு, மண்ணில் செய்த வீடு போன்ற உருவத்தை இங்கு அம்பாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள். கார் வாங்க நினைப்பவர்கள், கார் போன்ற பொம்மையை வாங்கி அன்னைக்கு சமர்ப்பிக் கிறார்கள்.

    இங்கு சித்திரையில் நடைபெறும் பெருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த விழாவின் போது, கயர்குத்து திருவிழா, பொங்கல் விழா, தேரோட்டம் போன்றவை நடைபெறும். கயர்குத்து என்பது உடம்பில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அன்னையை வழிபடுவது ஆகும். உடல் நோய், கண் திருஷ்டி அகல இந்த நேர்ச்சையை செய்கிறார்கள். கூடவே தங்கள் இடுப்பு பகுதியின் அருகில் ஊசியால் குத்தி நூலை நுழைத்து கட்டி (இப்படி இடுப்பின் இருபுறமும்), பின்பு அந்த நூலை பத்ரகாளி முன்னிலையில் அவிழ்த்து கயர்குத்தினை நிறைவு செய்வார்களாம். இதன் மூலம் தங்கள் உடம்பில் அண்டிய நோய்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து நலம் பெறுவதாக நம்பிக்கை.

    ஜாதக ரீதியாக லக்னத்தை, செவ்வாய் பார்த்தால் அந்த ஜாதகத்திற்குரிய குழந்தைகள் துறுதுறுவென இருப்பார்கள். அதுவே ராகு போன்ற கிரகங்கள் பார்த்தால், குழந்தைகளின் பிடிவாதம் பெருகும். பிள்ளைகளை நல்வழியில் கட்டுப்படுத்தவும், குறைந்த அறிவுத்திறன், மெதுவாக புரிந்து கொள்ளும் திறன் போன்ற பாதிப்புகள் நீங்கவும், இத்தல பத்ரகாளியை அமாவாசை, பஞ்சமி, பவுர்ணமி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் குறைகள் அகலும் என்பது ஐதீகம். இத்தல வெயிலுகந்த அம்மனுக்கு இளநீர், தயிர், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட வெயிலின் தாக்குதலால் நோய்கள் அண்டாது. மேலும் இத்தல வெயிலுகந்த அம்மனுக்கும், பத்ரகாளி அம்மனுக்கும் தொடர்ந்து 18 நாட்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் கண்டிப்பாக மழைபொழியும் என்கிறார்கள். 
    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள காடாளப் பெருமாளின் வைப்புத்தலம் ஒன்று இருக்கிறது. அந்தத் தலத்தின் பெயர் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில்.
    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள காடாளப் பெருமாளின் வைப்புத்தலம் ஒன்று இருக்கிறது. அந்தத் தலத்தின் பெயர் ஸ்ரீனிவாசபுரம். இங்குள்ளது ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில். கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த அழகான ஆலயம். இந்தக் கோவிலின் முகப்பை கடந்தவுடன் கருடாழ்வார் தனி சன்னிதியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டப நுழைவு வாசலின் இடதுபுறம் விநாயகர், வலதுபுறம் கிருஷ்ணன் திருமேனிகள் உள்ளன.

    மகா மண்டபத்தின் உள்ளே வலதுபுறம் நிகமாந்த மகாதேசிகர், உடையவர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் திருமேனிகள் தனி மண்டபத்தில் உள்ளன. இடதுபுறம் சுதர்சன பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் தனி சன்னிதிகளில் ஒரு சேர அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலில் இடதுபுறம் மணிகள் மற்றும் வலதுபுறம் பிரபந்தன் என்ற இரு துவாரபாலகர்கள் கம்பீரமாக காவல் நிற்கின்றனர்.

    பொதுவாக ஆலயங்களில் துவாரபாலகர்களின் திருமேனிகள் சுதையில் செய்யப்பட்டவையாக இருக்கும். ஆனால் இங்கு இந்த இரண்டு துவாரபாலகர்கள் திருமேனிகள் கருங்கற்களில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இருவருக்கும் பிற பரிவார தெய்வங்களுக்கு நடைபெறுவது போல் தினசரி பூஜைகள் உண்டு. இது இந்த ஆலயத்தின் தனி சிறப்பு.

    அடுத்துள்ள கருவறையில் பெருமாள் ‘ஸ்ரீனிவாசன்’ என்ற திருநாமம் தாங்கி, நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இங்கு நான்கு கரங்கள். வலது மேல் கரத்தில் சுதர்சன சக்கரமும் இடது மேல் கரத்தில் வாஞ்ச ஜன்ய சங்கும், வலது கீழ் கரத்தில் வரத முத்திரையுடன் சேவை சாதிக்கும் பெருமாளின் இடது கரம் பூமியை நோக்கி தாழ்ந்துள்ளது. பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி காட்சி தருகின்றனர்.

    காளியம்மன் :

    பெருமாளின் பெயரான ஸ்ரீனிவாசன் என்ற பெயரிலேயே இந்த தலம் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் இத்தலம் தற்போது காளி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதற்கு காரணமும் உண்டு. இந்த ஊரில் மந்தகரை காளியம்மன் என்ற காளியை ஊர் மக்கள் சிலர் ஓர் நதியில் கண்டெடுத்தனர். அந்த காளியை ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்து வைத்தனர். ஊருக்கு புதிதாக வந்த அம்மன்தானே என எண்ணிய ஊர்மக்கள் அந்த காளியை வழிபடாமல், ஊரின் வடபால் இருந்த மாரியம்மனை மட்டும் வழிபட்டு வந்தனர்.

    பொறுத்துப் பார்த்தாள் காளி. காளியின் மனம் உக்கிரமடைந்ததால் ஊர் மக்களில் பலருக்கு நோய் வந்தது. பயந்துபோன மக்கள் ஸ்ரீனிவாசப் பெருமாளை சேவித்து காரணம் கேட்டனர். பெருமாள் தனது தங்கையான காளியம்மனை சாந்தமாகும்படி கூற அவள் உக்கிரம் தணிந்தது. ‘இனி இந்த ஊர் உன் பெயரால் அழைக்கப்படும்’ என பெருமாள் அவளுக்கு வரம் அளித்தார். அதுமுதல் ‘ஸ்ரீனிவாசபுரம்’ எனும் இந்த ஊர், ‘காளி’ என அழைக்கப்படலாயிற்று.


    ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள்.

    தினசரி இரண்டு கால பூஜைகள் நடக்கும் இந்த ஆலயம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள ஆஞ்சநேயர் சக்தி உள்ளவர் என பக்தர்கள் நம்புகின்றனர். அமாவாசை தோறும் இங்கு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

    தங்கள் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி, ஒரு தேங்காயையும் அதனுடன் இணைத்து ஒரு துணியில் கட்டுகின்றனர். பின்னர் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்து, அந்த துணி முடிப்பை ஆஞ்சநேயருக்கு அருகே உள்ள விட்டத்தில் கட்டுகின்றனர். அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. பின்னர் திரும்ப வந்து தாங்கள் கட்டிய துணி முடிச்சியை அவிழ்த்துவிட்டு, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி, தயிர்சாதம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து நிம்மதி பெறுகின்றனர்.

    திருவிழாக்கள் :

    இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. வைகாசி திருவோணத்தில் கருடசேவை நடைபெறும். அப்போது பெருமாளின் திருக்கல்யாணம் உற்சவமும், கருட வாகனத்தில் வீதியுலா காட்சியும் உண்டு. ஆனி மாத திருவோண நட்சத்திரத்தில் புஷ்ப விமானத்தில் பெருமாள் தன் தேவியர்களுடன் வீதியுலா வருவர். தைமாதம் மாட்டுப்பொங்கலன்று பாரிவேட்டை என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று பெருமாளும், தேவியர்களும் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். மார்கழி மாதம் திருமஞ்சனமும் வைகுண்ட ஏகாதசியில் இறைவனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளும் நடைபெறுகின்றன.

    ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணஜெயந்தி திருவிழாவில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் உண்டு. ஆவணி சுவாதியில் கருடாழ்வாருக்கும் வைகாசி விசாகத்தில் நம்மாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்திரையில் வரும் சக்கரத்தாழ்வார் ஜெயந்தியில் சக்கரத்தாழ்வாருக்கு பிரத்யேக சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

    பிரதோஷ நாட்களில் இங்குள்ள சுதர்சன பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு வெல்லம், பானகம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். இங்குள்ள சுதர்சன பெருமாள் வெளியே புறப்பட தயாராக இருக்கும் நிலையில் அவரது பாத அமைப்பு உள்ளது. தவிர அவரது கோலமும் சற்றே உக்கிரமாக இருப்பதும் நிஜம். இவரை பிரார்த்தனை செய்தால் பில்லி, சூனியம், பகை விலகி வாழ்வில் நிம்மதி நிலவும் என பக்தர்கள் நம்புகிறார்கள். கேட்டதை கொடுக்கும் பெருமாளை நாமும் ஒரு முறை காளிக்கு சென்று தரிசித்து வரலாமே.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு தென்மேற்கே 13 கிலோமீட்டர் உள்ளது காளி என்ற இந்த தலம். இந்த ஆலயம் செல்ல மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதியும், மினிபஸ் வசதியும், ஆட்டோ வசதியும் உண்டு.
    நாரதீய புராணத்தை இயற்றச் செய்த பெருமைக்குரிய கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவில் இருக்கிறது.
    தெய்வங்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் ஏராளமான புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. புராணங்களில் முக்கியமானவையாக பதினெண் புராணங்கள் திகழ்கின்றன. இவை தவிர்த்து பல புராணங்கள், தெய்வங்களின் பெருமைகளையும், புராண சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில் பக்தர்கள் மனம் லயிக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் நாராதரைப் பற்றிய சிறப்புகளைக் கூறும் நாராதீயப் புராணமும் ஒன்று.

    ஈரேழு உலகங்களுக்கும் சென்று வரக்கூடிய அற்புத சக்தி படைத்தவர் நாரத முனிவர். இவர், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணரின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். அதனால் எப்போதும் இவரது நாவில் இருந்து ‘நாராயண... நாராயண..’ என்ற திருநாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். இவர் தொடங்கும் கலகம், உலக நன்மையின் பொருட்டே இருக்கும் என்பது பல புராணங்கள் தெரிவிக்கும் கருத்து.

    நாரதீய புராணத்தை இயற்றச் செய்த பெருமைக்குரிய கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவில் இருக்கிறது.

    தல வரலாறு :

    படைப்புக் கடவுளான பிரம்மாவும், அவரது புத்திரரான நாரதரும் ஒரு முறை, உயிர்களின் உருவாக்கம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பிரம்மா சொன்ன கருத்து நாரதருக்குச் சரியாகத் தோன்றவில்லை. எனவே அவர் தந்தையின் கருத்தை மறுத்துப் பேசத் தொடங்கினார். அதனால், அவர்களுக்கிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரம்மா, மகனென்றும் பாராமல் நாரதரைத் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும்படி சாபம் கொடுத்தார்.

    தன் தந்தை கொடுத்த சாபத்தின்படி பிரம்மலோகத்தில் இருந்து பூலோகம் வந்த நாரதர், மன அமைதியைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருந்தார். பல இடங்களில் அலைந்து திரிந்தும் கிைடக்காத மன அமைதி, ஒரு இடத்தில் கிடைத்தது. அந்த இடத்தில் நாரதர், தன்னுடைய விருப்பத்திற்குரிய தெய்வமான விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றத் தொடங்கினார்.

    அவரது நீண்டகாலத் தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, நாரதருக்குக் காட்சியளித்தார். நாரதர் தனக்கு காட்சி தந்த விஷ்ணுவிடம், ‘இறைவா! எனக்கு அனைத்து உயிர்களின் உருவாக்கம் குறித்தத் தத்துவ ஞானத்தைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். விஷ்ணுவும் அவர் கேட்ட ஞானத்தை அவருக்கு வழங்கினார். அதில் மகிழ்ச்சியடைந்த நாரதர், தனக்குக் காட்சியளித்த இடத்தில் கோவில் கொண்டருளும்படி விஷ்ணுவை வேண்டினார். விஷ்ணுவும் நாரதரின் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டார்.

    அதனைக் கண்டு மேலும் மகிழ்ச்சியடைந்த நாரதர், அவ்விடத்தில் தான் விஷ்ணுவை வழிபட்ட முறை, அவரைப் போற்றிப் பாடிய பாடல்கள் போன்றவைகளைப் பூலோக மக்களுக்கு அளிக்கும் எண்ணத்துடன் நான் காயிரம் அடிகள் கொண்ட ‘நாரதீய புராணம்’ எனும் நூலினை அங்கேயே அமர்ந்து இயற்றினார் என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்கிறது. இந்த நாரதீய புராணத்தில் விஷ்ணுவின் மகிமை, நாரதருக்கு விஷ்ணு அளித்த கருணை உள்ளிட்ட பல சிறப்புகள் சொல்லப்பட்டிருகின்றன.

    பிற்காலத்தில் இந்த ஆலயம் பராமரிப்பின்றி, வழிபாடுகள் இல்லாமல் போனது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்திற்காக இந்தப் பகுதிக்கு வந்த போது, பாண்டவர்களில் ஒருவனான நகுலன் இங்கிருந்த கோவிலைக் கண்டு, அதனைப் புதுப்பித்து வழிபட்டு வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இந்தக் கோவிலை இங் கிருப்பவர்கள் ‘நகுலன் கோவில்’ என்றே அழைக்கின்றனர். இதேபோல், இத்தலம் அமைந்திருக்கும் பகுதி வண்டுகளும், அவை எழுப்பும் ஒலிகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ‘திருவண்வண்டூர்’ எனப்பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.



    கோவில் அமைப்பு :

    இந்த ஆலயத்தின் கருவறை வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது. கருவறையில் இருக்கும் இறைவன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். இக்கோவில் இறைவன் ‘பாம்பணையப்பன்’, ‘கமலநாதன்’ எனும் பெயர்களால் அழைக்கப்பெறுகிறார். இங்கு இறைவியாகக் கமலவல்லி நாச்சியார் இருக்கிறார்.

    இந்தப் பகுதியில் ஒரு இடத்தைத் தோண்டும்போது ஒரு கிருஷ்ணர் சிலை கிடைக்கப்பெற்றது. அந்தச் சிலையைக் கொண்டு வந்து, இந்த ஆலயத்தின் வளாகத்திற்குள் வைத்து புதிய சன்னிதி களும், மண்டபங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. நின்ற கோலத்தில் வெள்ளித் திருவாபரணம் அணிந்து காட்சியளிக்கும் இவரைக் கோசாலை கிருஷ்ணன் என்றழைக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, சிவன், நாகர் சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

    இந்தக் கோவிலின் மேற்கு நுழைவுவாசலில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரத்தின் மேற்பகுதியில் காளிங்கன் மீது கண்ணன் நடனமாடுவது போன்ற அருமையான சிற்பம் இருக்கிறது. இதன் கீழ்ப்பகுதியில் விஷ்ணுவின் பத்துத் தோற்றங்களிலான (தசாவதாரக் காட்சி) சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நுழைவுவாசலின் முன்புறச் சுவரில் ஒரு பகுதியில் அனுமன், மற்றொரு பகுதியில் கருடன் ஆகியோரது சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    ஆலய சிறப்புகள் :

    * விஷ்ணுவின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில், இது 75-வது திவ்யதேசமாக இருக்கிறது.

    * பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார், இத்தலத்து இறைவனைப் பற்றிப் பத்துப் பாசுரங்களில் பாடிச் சிறப்பித்திருக்கிறார்.

    * இந்தக் கோவில் இறைவனை வழிபாடு செய்தால், வேண்டியது அனைத்தும் அப்படியே கிடைக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    * இத்தல இறைவனிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்குப் பால் பாயசம் நைவேத்தியமாக படைத்து தங்களது நன்றிக்கடனைத் தெரிவித்துக்கின்றனர்.

    * குழந்தை வரம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் இருக்கும் கோசாலை கிருஷ்ணர் சன்னிதிக்கு வெளியே மரத்தொட்டில்கள் வாங்கி வைத்து வழிபடுகின்றனர்.

    வழிபாடுகள் :

    இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி சிம்மம் (ஆவணி) மாதம் வரும் அஷ்டமி நாளில் கிருஷ்ணர் தோற்றம் பெற்ற நாளும், தனுர் (மார்கழி) மாதம் வரும் ஏகாதசி நாளில் வைகுண்ட ஏகாதசி நாளும் மிகச் சிறப்புடையதாக இருக்கின்றன. மேலும், இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் அனுசம் நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து பத்து நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது இறைவன் மோகினித் தோற்றம் மற்றும் அவரது பத்துத் தோற்றக் (தசாவதாரம்) காட்சிகளில் அலங்கரிக்கப்பட்டுப் பக்தர்களுக்குக் காட்சியளிக் கிறார். இந்த நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் கூடி தரிசனம் செய்வதைக் காண முடியும். இவைத் தவிர விஷ்ணுவுக் குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இந்த ஆலயத்தில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் செங்கணூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவண்வண்டூர் திருத்தலம். இந்த இடத்திற்குச் செல்ல ஆலப்புழை, செங்கணூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 
    தில்லைக்காளியின் திருக்கோவில் மிகவும் பழமையானது. இன்று இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    அகிலத்தை ஆட்சி செய்பவள் அம்பிகை. இவள் அருட்சக்தியாக விளங்கும்போது பார்வதியாகவும், புருஷசக்தியாக விளங்கும் போது திருமாலாகவும், கோபசக்தியாக விளங்கும்போது காளியாகவும், போர்சக்தியாக விளங்கும்போது துர்கையாகவும் திருக்கோலங் கொண்டு அருளுகிறாள். இதில் காளி வடிவம் கொடியோரை வேரறுத்து நல்லோரை காப்பதற்கான வடிவமாகும். உக்கிர சிவனான காளனின் கனல் கண்களிலிருந்து தோன்றியவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘காளி’ என்ற பெயர் ஏற்பட்டது.

    காளி வழிபாடு ஹர்ஷவர்த்தனர் காலத்தில் தோன்றியது என்பது வரலாறு கூறும் செய்தி. இவள் வெற்றியைத் தரும் வேதநாயகி என்பதால், பண்டைய அரசர்கள் பலரும் போருக்குச் செல்வதற்கு முன்னரும், வெற்றிவாகை சூடிவந்த பின்னரும், அரசு சார்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய செயல்பாடுகளின் போதும் முதலில் காளியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    காளியின் பிறப்புப் பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன.

    தனக்கு மரணம் சம்பவித்தால் அது ஒரு கன்னிப் பெண்ணால் நிகழவேண்டும் என்று பிரம்மாவிடம் வேண்டி வரம்பெற்றிருந்தான் தாருகாசுரன். அந்த அசுரனை அழிப்பதற்காக சிவனின் கனல் கண்ணிலிருந்து அவள் படைக்கப்பட்டாள் என்றும், அசுரனை அழித்த பிறகு பிரம்மாவின் ஏற்பாட்டின்படி அவள் சிவனின் கரம் பற்றியதாக ஒரு வரலாறு.

    மற்றொரு வரலாற்றின்படி, ஒரு முறை சிவன்- சக்தி இருவருக்கும் தங்களில் யார் சக்தி மிக்கவர் என்பதாக மோதல் ஏற்பட்டது. அதில் சிவனின் கோபத்திற்குள்ளான பார்வதிதேவி, காளியாக சாபம் பெற்றாள் என்றும், தவறை உணர்ந்து பிரயாச்சித்தம் வேண்டியபோது ‘உலக நன்மை பொருட்டு உன்னை காளியாக ஆக்கினோம். வரும் யுகத்தில் அரக்கர் குலத்தால் தேவர்கள், முனிவர்கள் மற்றும் லட்சோபலட்சம் உயிர்களுக்கு அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை உன் கோப சக்தியால் தடுத்து அரக்கர் குலத்தை அழித்து தேவர்களை காத்துவா’ என சிவனால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்டவள் காளி தேவி என்கிறது அந்த வரலாறு.

    வரலாறுகள் வெவ்வேறானாலும் பார்வதிதேவியே, காளி என்பது பாமரர் வரை அறிந்த உண்மை. இறைவனின் அருளாணையின்படி ஆதிகாளி, தட்சிணகாளி, க்ரீம்காளி, ஸ்ததிகாளி, பத்ரகாளி, மதுகைபட சம்ஹார காளி, குஹ்யகாளி, வரகாளி, சதுர்புஜகாளி, நடனகாளி என பத்து விதமான உருமாறி அதேசமயம் கோரத்தன்மை மாறாமல் மகிஷாசுரன், பண்டகாசுரன், தாரஹாசுரன், மதுகைபடர், சும்பநிசும்பர் போன்ற பல அசுரர்களை சம்ஹாரம் செய்து, தேவர்கள், முனிவர்கள் மற்றும் ஏனைய ஜீவராசி களுக்கு அபயம் அளித்தாள். அதன்பின்னரும் அவள் கோபம் தணியவில்லை. இதனால் உலகுக்கு ஆபத்து நேர்ந்து விடலாம் என்பதால், சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடி காளியின் கோபத்தை அடக்கி தில்லையில் அமரச் செய்தார்.

    சாந்தம் அடைந்த காளி, தில்லைவனத்தை அடைந்து ஈசனிடம் ஐக்கியமடைய வேண்டிய தருணத்தை எதிர்பார்த்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள மூலநாதரை பூசித்து தவம் மேற்கொண்டாள். காளியின் அம்சம் முடிவுறும் வேளை நெருங்கி சாபவிமோசனம் பெறும் நிலையில் இருந்தமையால் ‘காளி உரு இனி இல்லை, காளி உருவுக்கு இதுவே எல்லை’ என்றாகி ‘எல்லைக்காளி’ என அழைக்கப்பட்டாள். எல்லைக்காளியாக அவள் தில்லையில் எழுந்தருளியமையால் தில்லைக்காளி என்றும் பெயர் பெற்றாள்.

    தில்லைக்காளியின் திருக்கோவில் மிகவும் பழமையானது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை மற்றும் சிவஞானபுரம், மதுரை மாவட்டம் மடப்புரம் மற்றும் முடுக்குசாலை, பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர், தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் மற்றும் வடமட்டம், திருச்சி மாவட்டம் உறையூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி மற்றும் கண்டிபட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் பச்ச மடம், திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம். ஏனாதிமங்கலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள காளி கோவில்களுக்கு இல்லாத சில சிறப்புகளை இக்கோவில் கொண்டுள்ளது.

    இந்த ஆலயத்தில் உள்ள காளிசிலை விசுவாமித்திர மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தனது யாகத்திற்கு தடையாய் இருந்த தாடகை என்னும் அரக்கியை கொன்ற காரணத்தினால் ராமர், லட்சுமணர்களுக்கு ஏற்பட்டது. அவர்களின் தோஷத்தை போக்க யாகம் செய்ய விரும்பிய விசுவாமித்திரர், தில்லைவனக்காடாக இருந்த இப்பகுதிக்கு ராமர், லட்சுமணர்களுடன் வந்தார். பின்னர் இங்கு காளிதேவியை பிரதிஷ்டை செய்து யாகத்தை நடத்தியதாக வரலாறு சொல்கிறது.

    இரணியனை வதம் செய்த நரசிம்மமூர்த்திக்கு, அதன் பின்னரும் கோபம் குறையவில்லை. அவர் இந்த உலகத்தையே விழுங்க நினைத்தார். இதைக் கண்ட சிவபெருமான் சரபமூர்த்தியாக வடிவம் கொண்டு திருமாலை கட்டுப்படுத்த முயன்றார். அதுசமயம் அவர் தனக்கு கூடுதல் சக்தி வேண்டி வடக்கில் அமர்ந்திருந்த காளியை துணைக்கு அழைத்து, நரசிம்மரை அடக்கியருளினார். இதனால் தில்லைக்காளிக்கு ‘உத்தர பிரத்யங்காரகாளி’ (வடபத்ரகாளி) என்ற பெயரும் ஏற்பட்டது.



    ஆலய அமைப்பு

    மேற்கு நோக்கிய திருக்கோவிலுக்கு கம்பீரமான ராஜகோபுரம் அழகு சேர்க்கிறது. கோபுரத்திற்கு முன்னால் சிவப்பிரியை தீர்த்தம் உள்ளது. இது இவ்வாலயத்திற்கான தீர்த்தமாகவும், நடராஜபெருமானின் பத்து தீர்த்தங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. கோபுரத்திற்கு உள்ளே மகாமண்டபமும், அதன் தென் புறத்தில் பிரசன்ன விநாயகர், வடபுறத்தில் வள்ளி-தெய்வானை சமேத கார்த்திகேயன் சன்னிதிகள் இருக்கின்றன.

    மகாமண்டபத்தைத் தாண்டி பிரகார வாசலில் துர்கா, ஜெயதுர்கா என்னும் துவார சக்திகள் உள்ளனர். அவர்களைக் கடந்து உள்ளேச் செல்ல பிரம்மசாமுண்டீஸ்வரி எனப்படும் தில்லையம்மன் நான்கு முகங்களும் நான்கு திருக்கரங்களும் கொண்டு சாந்தசொரூபியாகக் காட்சியளிக்கின்றாள். வலது மேல்கரத்தில் ருத்ராட்ச மாலையும், கீழ்கரத்தில் கமலகிண்ணியும், இடது மேல்கரத்தில் சூலமும், கீழ் கரத்தில் அமலோற்பவமும் தாங்கி அமர்ந்தகோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த அன்னை ‘நான்முகி’ என்றும் குறிப்பிடப்படுகிறாள்.

    அர்த்தமண்டபத்தில் தாரகாசுரனை வதம் செய்து, சினம் தணிந்து, ஈசனை நாடும் நிஷ்டை கோலத்தில் தில்லைக்காளி அருள்பாலிக்கிறாள். இவளது திருவுருவம் வெள்ளை வஸ்திரம் சூடப்பெற்று குங்குமகாப்பு செய்து கண்களை மட்டுமே காணும் வண்ணம் உக்கிரகோலத்தில் அலங்கரிக்கப்படுகிறது. கருணையே வடிவாக கண்களால் நம்மை அரவணைக்கும் அன்னையை கரங்குவித்து கண்மூடி வணங்குவோருக்கு அவள் அருள்பாலிக்கிறாள்.

    தில்லைகாளியின் சன்னிதிக்கு அருகில், அவளது உற்சவமூர்த்தி சன்னிதி மற்றும் அகோரவீரபத்திரர் சன்னிதி காணப்படுகின்றன. வடக்கு பிரகாரத்தில் துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர் அருள்கின்றனர். கருவறைச்சுற்றில் நான்கு முகத்துடன் கையில் ஓலைச்சுவடி மற்றும் எழுத்தாணி கொண்டு வடக்கு நோக்கி பிரம்மசொரூபிணியாகவும், ஒரே முகத்துடன் கரத்தில் சங்கு-சக்கரம் தாங்கி கிழக்கு நோக்கி நாகவைஷ்ணவ ரூபிணியாகவும், மான்-மழுவேந்தி தெற்கு நோக்கி தட்சணசொரூபிணியாகவும் அருள்பாலிக்கிறாள். இந்த மூன்று திருமேனிகளும் படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்தும் நானே என்பதை உணர்த்துகின்றன.

    தெற்கு பிரகாரத்தில் விநாயகப்பெருமான் ஏழு திருக்கரங்களுடன் கூத்தாடும் கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு அருகாமையில் கலைமகளை நினைவூட்டும் விதமாக நின்ற நிலையில் வீணைவாசிக்கும் அபிநயத்துடன் சர்வவித்யாம்பிகை அருள்பாலிக்கிறாள்.

    சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் சிவன், ஆனந்த தாண்டவம் மற்றும் நிருத்தத் தாண்டவம் ஆடிய திருத்தலம் என்பது மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு இணையாக சக்தியும் நடனமாடிய இடம் என்பதை இவ்வாலயத்தை தரிசிப்பவர்களால் மட்டுமே அறியமுடியும். காளிதேவி சாபவிமோசனம் பெற்ற இத்தலத்தில் சாப விமோசனம் வேண்டுவோரும், எதிரிகளால் சிரமத்திற்கு ஆளானவர்களும், வெற்றி அல்லது எடுத்தகாரியம் சிறக்க விரும்புவோரும், கல்வி- செல்வம் -வீரம் உட்பட பதினாறு பேறுகளை வேண்டுவோரும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    ஆலயத்தில் வைகாசி மாதம் பத்துநாட்கள் பிரம்மோற்சவம், ஆடியில் கொள்ளிடம் ஆற்றிலும், மாசியில் கடலிலும் தீர்த்தவாரி, புரட்டாசி-ஐப்பசியில் வரும் நவராத்திரி ஆகியவை முக்கிய திருவிழாக்களாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி பவுர்ணமி திதியின் போது காலை 6 மணிக்கு சந்திரனும், பவுர்ணமியின் இரண்டு நாட்களுக்குப்பிறகு திருதியை திதியில் மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள் சூரியனும் தன் பொன்னொளியை பரப்பி அம்பிகையை தரிசிக்கும் அரிய காட்சி காணக் கிடைக்காத ஒன்றாகும்.

    கல்வெட்டுச் செய்தி

    இக்கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய படைத்தலைவனும், பல்லவகுல சிற்றரசனுமாகிய கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1229-1278) எழுப்பியதாக கூறப்படுகிறது. தன் ஆட்சியை நிறுவுவதில் ஏற்பட்ட இடையூறுகளை களைந்து வெற்றியருளவேண்டும் என்று காளிதேவியை கோப்பெருஞ்சிங்கன் வேண்டினான். அதை அன்னை நிறைவேற்றிக்கொடுத்ததன் அடிப்படையில் தில்லை காளிக்கும், பிரம்மசாமுண்டீஸ்வரிக்கும் ஆலயம் எழுப்பினான் என்கிறது கல்வெட்டுச் செய்தி ஒன்று.

    கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தின் வடக்கு வாசலில் இருந்து அரை கிலோமீட்டர் வடக்காக இவ்வாலயம் அமைந்துள்ளது. 
    செண்பக வனம் அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம் தான் அது.
    சந்தனம் குளிர்ச்சியை உடையது; சுடர் சூடானது. குளிர்ச்சியுடைய சந்தனத்தை, அக்னி சொரூபமான சிவபெருமான் ஏற்று, ஒரு ஆண்டு முழுவதும் அந்த சந்தன மேனியுடன் காட்சி தரும் ஆலயம் ஒன்று உள்ளது.

    கிருதயுகத்தில் ரத்தினபுரம், திரேதாயுகத்தில் வில்வவனம், துவாபரயுகத்தில் செண்பக வனம் அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம் தான் அது.

    திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூருக்கு அருகில் இருக்கிறது வட திருமுல்லைவாயில். இத்தல இறைவன், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நாயகியின் பெயர் லதாமத்யாம்பாள், கொடியிடை நாயகி என்பதாகும்.

    தல வரலாறு

    காஞ்சியிலிருந்து அரசாட்சி செய்து வந்தான், தொண்டைமான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான். அதே வேளையில், புழல்கோட்டையில் இருந்து கொண்டு ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள், எருக்கத்தூண்களும், வெண்கலக்கதவும், பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர்.

    இவர்களைக் காண தொண்டைமான் வரும் வழியில் ‘கோழம்பேடு’ என்னும் கிராமத்தைக் கடக்கும்போது, அங்கிருந்த சிவன் கோவிலின் வெண்கல மணியோசை கேட்டது. மன்னன் ஒருவன் யானையில் வருவதைக் கண்ட அசுர குறுநில மன்னன் ஒருவன், தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்த்தான். தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளை அழைத்து வரத்திரும்பினான். அப்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக் கொண்டன. அந்த முல்லைக்கொடிகளை அகற்றி வழி உண்டாக்க நினைத்த மன்னன், யானையில் இருந்தபடியே தனது உடைவாளை உருவி புதரை வெட்டினான். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது கண்டு மிரண்டான்.

    செய்வதறியாது திகைத்த மன்னன், யானையில் இருந்து கீழே இறங்கிப் பார்த்தபோது, புதருக்குள் ஒரு லிங்கத் திருமேனி இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் வழிவதையும் கண்டான். தான் செய்த தவறை உணர்ந்த மன்னன், தன்னுடைய வாளால் தலையை அரிந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றான்.

    அப்போது இறைவன் காளை வானத்தின் மீது காட்சி தந்து, ‘மன்னனே! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை. நான் மாசு இல்லா மணியே! கவலைப்படாதே, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வென்று வருக’ என்று அருள் புரிந்தார்.

    இந்த சுயம்பு மூர்த்தியானவர், ஆலயத்தின் கருவறையில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேல்புறம் வெட்டுப்பட்ட வடு உள்ளது. வெட்டுப்பட்ட இடத்தில் எப்போதும் சந்தனம் சாத்தப்பட்டிருக்கும். ஆதலால் அபிஷேகங்கள் லிங்கப்பகுதிக்குக் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். சுவாமிக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் என்பதால், லிங்கத்தின் மீதிருக்கும் சந்தனம் களையப்படுவதில்லை. அந்த சந்தனத்தின் மீதே மீண்டும் சந்தனம் சாத்தப்படும்.



    வருடத்திற்கு ஒருமுறை சித்திரை சதயத்தில் மட்டும் சந்தனக்காப்பு முழுமையாக களையப்பட்டு, அபிஷேகம் முடிந்து மீண்டும் சந்தனக்காப்பு செய்யப்படும். இந்த நாளில் மட்டுமே லிங்கத்திருமேனியின் சொரூபத்தை நாம் தரிசிக்க முடியும். மற்றபடி ஆண்டு முழுவதும் இறைவனின் மீது சந்தனக்காப்பு இருந்து கொண்டே இருக்கும்.

    இறைவன் கட்டளைப்படி நந்தியம்பெருமான், தொண்டைமான் அரசனுடன் போருக்குப் போனதால், இத்தலத்தில் நந்தி கருவறைக்குப் பின்புறம் காட்டி அமர்ந்துள்ளார். தொண்டைமான், நந்தியுடன் வந்ததால் ஓணன், காந்தன் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சன்னிதியின் முன்னால் பொருத்தப்பட்டுள்ளது என்பது ஆலய வரலாறு சொல்லும் செய்தி. அவ்வளவு பெரிய வெள்ளெருக்குத் தூண்களை வேறெங்குமே காண முடியாது என்பது இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்று. இந்த வெள்ளெருக்கன் தூண்கள் சிவாம்சமாகக் கருதப்படுகிறது

    சுவாமிக்கு முன்பு வெளிப்புறத்தில் தொண்டைமான், நீலகண்ட சிவாச்சாரியார், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, ரச லிங்கம் ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பரிவாரத்தில் வீரபத்திரர், நால்வர், விநாயகர், நாகலிங்கம், மகாலட்சுமி, அறுபத்துமூவர், பைரவரும் அருணகிரியும் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேசுவரர் சன்னிதி உள்ளன. நடராஜ சபைக்கு அருகில் தொண்டைமானுக்குக் காட்சி தந்த ரிஷப நாயகர் உள்ளார்.

    சென்னை- பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்துக் கொடியிடை அம்மை ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்ட திருவுருக்களாகும். இவர்கள் மூவரும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று அழைக்கப்படுகின்றனர். வெள்ளிக்கிழமையோடு, பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளில், இம்மூன்று அம்பிகைகளையும் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தால் பெருஞ் சிறப்பு வந்து சேரும்.

    தெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். அருகில் தீர்த்தக்குளம். ராஜகோபுரத்தில் நுழையும்போது எதிரில் பிரசன்ன விநாயகர் அருள்கிறார். உள்ளே கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள் அம்பாள் சன்னிதியும், சோமாஸ்கந்தர் சன்னிதியும், சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளன வெளிப்பிரகாரத்தில் வில்வமரம் உள்ளது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
    மதுரையில் அழகர் கோவிலின் மலையில் மேலே உள்ளது ராக்காயி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுவாமி : ராக்காயி அம்மன்
    தீர்த்தம் : நூபுர கங்கை தீர்த்தம்
    தலவிருட்சம் : ஜோதி விருட்சம், சந்தனமரம்

    தலச்சிறப்பு :

    எம்பெருமான் ஸ்ரீமந்த் நாராயணன் த்ரிவிக்ரமாவதாரம் செய்து சகல உலகங்களையும் அளந்த போது எம்பெருமானின் திருவடி பிரம்ம லோகத்திற்கு செல்ல அப்போது(36 ஆயிரம் வருடங்களாக ) பெருமானின் பாதத்தை கண்டு வணங்கிட வேண்டி தவம் செய்த பிரம்ம தேவனும் தன் அருகில் ஸ்வரணா கலசத்தில் இருந்த கங்கை நீரால் எம்பெருமானின் பாதத்திற்கு அபிஷேகம் செய்தான்.

    அப்போது எம்பெருமானின் பாதத்தில் அணிந்திருந்த சிலம்பு எனும் நூபுரத்திலும் கங்கை தீர்த்தம் பட்டு பிரம்ம லோகத்தில் இருந்து பூவுலகிற்கு வந்து சேர்த்து அன்று முதல் இன்றும் என்றும் ஸ்ரீமத் நாராயணின் திருவடியில் இருந்து பெருகி வருகிற புண்ணிய நதியாக திகழ்கிறது. பிரம்ம தேவனால் பெருமானின் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட கங்கையே எம்பெருமானின் திருவடியில் அணிந்துள்ள நூபுரம் எனும் சிலம்பில் பட்டு இங்கே வற்றாத அருவியாக ஓடிவருவதால் நூபுர கங்கை என்றும் தமிழில் சிலம்பாறு என்றும் பாடல் பெற்று உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களையும் விடச் சிறந்ததாய் விளங்குகிறது. இந்த நூபுர கங்கை புண்ணிய தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி தினத்தன்று ஸ்ரீ சுந்தரராஜ பெருமான் எழுந்தருளி தைலக்காப்பு திருமஞ்சனம் கண்டருளி பக்தர்களுக்கு எல்லா மங்களங்களையும் அருளுகிறார்.

    தல வரலாறு :

    சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகையாற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.

    நடைதிறப்பு : காலை 7 மணிமுதல்  இரவு 7.30 மணிவரை திறந்திருக்கும்.

    கோயில் முகவரி : அருள்மிகு ராக்காயி அம்மன் திருக்கோவில்,
    அழகர் கோவில்- 625 301
    மதுரை மாவட்டம்.

    தொலைபேசி எண் : 0452-247 0228.
    கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கேடிலியப்பரை வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
    தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து ‘வட பத்ரிகாரண்யம்’ ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி ‘தென் பத்ரிகாரண்யம்’ ஆயிற்று. ‘பத்ரி’ என்றால் ‘இலந்தை’ என்று பொருள். எனவே தான் இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத் தலம், தென் பத்ரிகாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இலந்தை மரமும் இத்தல விருட்சமாயிற்று.

    முருகப்பெருமான், தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். ‘அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது?’ என்று தனது தந்தையான சிவபெருமானைக் கேட்டார்.

    அதற்கு ஈசன், ‘பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை, நவலிங்க பூஜை செய்து வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார்.

    அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான், தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள், முருகப்பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த சொரூபியான சுந்தர குஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவம் கொண்டு, வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். இதனால் இத்தல அன்னைக்கு ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்ற திருநாமமும் உண்டு.

    குமரன் தவக்கோலத்திலேயே இங்கு காட்சி தருகிறார்.

    கோவில் அமைப்பு:

    கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக் கோவில்களில், கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரியகோவில். கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சி யளிக்கிறது. கோபுரத்திற்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாக கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார்.



    ஆலயத்தின் விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார். கட்டுமலை மீதுள்ள சன்னிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம்.

    அடுத்துள்ள சோமாஸ்கந்தர் திருச்சன்னிதியில் தட்சிணாமூர்த்தி, பத்ரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்களையும், மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவர், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சன்னிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

    முருகப்பெருமானின் பூஜைக்கும், தவத்துக்கும் கெடுதல் உண்டாகாதவாறு காவல்புரிந்த அஞ்சு வட்டத்து அம்மையின் சன்னிதி முதல் பிரகாரத்தில் முருகன் சன்னிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கிறது. இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சன்னிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

    இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது. காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புணுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இந்தப் பெயர் திருநாவுக்கரசரின் ‘ஆளான அடியவர்க்கு அன்பன் தன்னை...’ என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டகத்துள் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. பாடல் தோறும் ‘கீழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர்’ என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார்.

    கீழ்வேளூர் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்குள்ள முருகப்பெருமான், பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி பிரம்மச்சாரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும்.

    தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங் களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்திற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன. நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது.
    விழுப்புரத்திற்கு அருகே உள்ள பிரம்மதேசம் என்ற திருத்தலத்தில் ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
    எத்தனையோ அவதாரங்கள், எத்தனையோ திருவிளையாடல்கள் மூலமாக நாயன்மார்களையும், பல சிவனடியார்களையும், தன்னை வணங்கும்பக்தர்களையும், ஏன்... உமையவளான அன்னை பார்வதியையே பல முறை சோதனைக்குள்ளாக்கி இருக்கிறார் சிவபெருமான்.

    அப்படி ஈசனின் பெரும் சோதனையில் சிக்கியவர்கள் அனைவருமே தங்களின் வேதனை தீர்ந்து, பெரும் புகழையும், முக்தியையும் அடைந்திருக்கிறார்கள் என்பதை பல புராணங்களும், கோவில் தல வரலாறுகளும் நமக்கு எடுத்துரைக்கும் சான்றாகும்.

    திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் சிவன் ஆலயத்தில் அருள்புரியும் பிரம்மபுரீஸ்வரரைப் போல, விழுப்புரத்திற்கு அருகே உள்ள பிரம்மதேசம் என்ற திருத்தலத்திலும் ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவன் வழிபட்டதால் இத்தலம் ‘பிரம்மதேசம்’ என்றும், இத்தல இறைவன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர மன்னர்கள் என பலரும் போற்றி வணங்கிய திருத்தலம் இந்த பிரம்மதேசம். வேதம் கற்றுத் தெளிந்தவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்பட்ட ஊர் இது என்று கூறப்படுகிறது. இங்கு பாதாளீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என்ற இரண்டு சிவாலயங்கள் இருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். பிரம்மதேசம் ஊரின் மையப்பகுதியில் பாதாளீஸ்வரர் ஆலயமும், ஊரின் வடக்கு திசையில் ஏரிக் கரையின் அருகில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன.

    இதில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் பாதையில் வீற்றிருக்கும் விநாயகரின் திருநாமம் ‘தேரடி விநாயகர்’ என்பதாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயம் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டின்படி, இந்த ஆலயம் சோழ மன்னர்களின் காலத்தவை என்றும், ஆராய்ச்சியின் போது இந்தப் பகுதியில் கிடைத்த துர்க்கை சிலையை வைத்துப் பார்க்கும் போது இந்த ஆலயம் பல்லவர் காலத்திலும் இருந்திருக்கலாம் என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது.

    ஆலயத்திற்குள் நுழைந்ததும் நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். நந்திக்கு வலது புறம் பெரிய மண்டபம் உள்ளது. இது அன்னையின் சன்னிதியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேற்கு நோக்கி உள்ளே நுழைந்தால், பிரமாண்டமான திருச்சுற்று மாளிகையைக் காணலாம். இதில் இரட்டைப் பிரகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உருண்டை வடிவ கல்லால் ஆன தூண்கள், அற்புதமாக வடிவமைக்கப்பட்டு நான்கு புறமும் கல் மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. அந்த காலத்தில் இந்த மண்டபத்தில் கல்விச்சாலை செயல்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


    பிரம்மபுரீஸ்வரர், பெரியநாயகி

    இறைவனின் கருவறையானது, கிழக்கு நோக்கி சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே வட்ட வடிவிலான ஆவுடையாரோடு, உயரமான பாணலிங்கத் திருமேனி கொண்டு பிரம்மபுரீஸ்வரர் அருட்காட்சி தருகிறார். முகப்பு மண்டபத்தின் வடக்கில், தெற்கு நோக்கி அமைந்துள்ள சன்னிதியில் அன்னை பெரியநாயகி என்ற திருநாமத்தோடு, பெயருக்கேற்றாற்போல் பெரிய திருவுருவத்தோடு நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.

    அன்னையின் மேல் வலது கரத்தில் அல்லி மலரும், மேல் இடது கரத்தில் தாமரையும் தாங்கியிருக்கிறார். கீழ் வலது கரத்தில் அபய முத்திரையோடும், கீழ் இடது கரத்தில் வரத முத்திரையோடும் அழகுற ஆனந்த தரிசனம் தருகின்றாள். தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே பிரம்மன் அருள்கின்றனர். மேலும் பிரகாரத்தில் விநாயகர், நின்ற கோல விநாயகர், வள்ளி-தெய்வானையோடு வஜ்ஜிரப்படை மற்றும் சக்திப்படை ஏந்திய முருகப்பெருமான், துர்க்கையம்மன், காலபைரவர் ஆகியோரது சன்னிதிகளும், வடதிசையில் சண்டிகேஸ்வரர், அருகில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றனர்.

    இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சிறந்த குரு பரி காரத் தலமாக விளங்குகிறது. குரு பகவானுக்குரிய அதிதேவதை பிரம்மதேவன். எனவே இத்தலத்தில் உள்ள குரு பகவானை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்புக்குரியதாகும். மேலும் திங்கட்கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்ம நட்சத்திர நாட்களில் பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரரை வணங்குவது பலன்கள் பலவற்றை தரும்.

    மேலும் முற்பிறவி மற்றும் இப்பிறவி பாவங்களைப் போக்கும் தலமாகவும் இது திகழ்கிறது. இங்கு மாசி மகம், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் வெகுவிமரிசையாக நடை பெறும். மாசி மகத்தன்று, இத்தலத்திற்கு வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்மனேரி சாஸ்தா ஆலயத்திற்குச் சென்று தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆலயம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பூஜை செய்பவர்கள் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. இருப்பினும் கிராமத்தில் உள்ள ஒருவர் பூஜை செய்கிறார்.

    கல்வெட்டுச் சிறப்பு

    தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் 1918-ம் ஆண்டு நடந்த ஆய்வின்படி இந்தப் பகுதியில் 34 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அந்த கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்க்கும்போது, பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் என பலரும் இந்த பிரம்மதேசத்தின் மீது அதிகமாக பற்றுகொண்டிருந்ததை அறிய முடிகிறது.

    தவிர இந்த கல்வெட்டுகளின் மூலமாக முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழதேவன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், பிற்கால பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெரும்சிங்கன், ஜடாவர்ம சுந்தரபாண்டியன், சாளுக்கிய மன்னனான நரசிங்க மகாராஜன், விஜயநகர மன்னர்களான வீரப்பிரதாப தேவராய மகாராயர், வீரப்புக்கண்ணுடையார் என பலரும் இத்தலத்திற்கு திருப்பணி செய்திருப்பது உறுதியாகிறது.

    விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் 16 கிலோமீட்டர் தொலைவில் நேம்பூர் என்ற ஊர் வரும். இந்த ஊரில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் பிரம்மதேசத்தை அடையலாம். நேம்பூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. 
    12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப்பெற்றிருக்கும் ஆலயம், சித்தர் சிவபீடம் என்று அழைக்கப்படும் ராசி கோவிலாக திகழ்கிறது திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்.
    மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் மற்றும் திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் என்று சொல்லக் கூடிய பஞ்சகங்கள் போன்றவை தான் நிர்ணயம் செய்கின்றன. இவைகளால் ஏற்படக்கூடிய தோஷங்களில் ராசி ரீதியாகவும், நட்சத்திர ரீதியாகவும் மனிதர்களாகிய நாம் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகிறோம். அந்த பாதிப்பில் இருந்து விடுபட பலரும் பரிகாரத் தலங்களைத் தேடிச் செல்கிறார்கள்.

    அந்த வகையில் நமக்கெல்லாம் சிறந்த பரிகார தலமாக இருக்கிறது திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்ட மிகப் பழமை வாய்ந்த சிவாலயம் இதுவாகும். 12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப்பெற்றிருக்கும் இந்த ஆலயம், சித்தர் சிவபீடம் என்று அழைக்கப்படும் ராசி கோவிலாக திகழ்கிறது.

    இத்தல இறைவனின் பெயர் ஏகாம்பரேஸ்வரர். அம்பாளின் திருநாமம் காமாட்சியம்மன். இந்த சிவாலயத்தில் வட்ட வடிவிலான பீடம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய பன்னிரண்டு ராசிகளுக்குரிய குறிகள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் ஐராவதம், புண்ட்ரீகன், புஷ்பதந்தன், குமுதன், சார்வபவுமன், அஞ்சனன், சுப்ரதீபன், வாமனன் என திசைகளை காக்கும் அஷ்டதிக் கஜங்கள்(யானைகள்), நாகங்கள், 64 கலைகளை விளக்கக்கூடிய சிற்பங்கள், ஒவ்வொரு ராசிக்கும் உரிய அதி தேவதை, பிரத்தியதி தேவதைகள் ஆகியன 4, 8, 16, 32 ஆகிய எண்ணிக்கையில் வாழ்க்கையின் தத்துவத்தை வெளிப் படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பீடத்தின் மீதுதான் அனுக்கிரக மூர்த்தியாக ஏகாம்பரேஸ்வரரும், சாரங்கநாத சித்தர் வழிபட்ட சிவ லிங்கமும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் இது போன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய சிவாலயம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பாகும்.

    இந்த கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இத்தலத்தில் காமாட்சியம்மன், சிந்தாமணி மாணிக்க விநாயகர், ஐஸ்வர்ய மகாலட்சுமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி, அரசு-வேம்பு இணைந்த மரத்தடியில் ராகு, கேதுவுடன் கூடிய வலம்புரி விநாயகர், நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகிய சன்னிதிகளும் தனித் தனியாக அமையப்பெற்றுள்ளன.

    சாரங்கநாதர் எனும் சித்தர் இந்த ஆலயத்தில் ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டதாகவும், அவர் இந்த ஆலயத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும் கருதப்படுவதால், அவர் நினைவாக துளசி மாடமும், அதன் அருகில் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சித்தர் சன்னிதியில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மாலையில் யாக வேள்வியும், 210 சித்தர்களின் தமிழ் போற்றி வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகிறது. இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்ற பக்தர்கள் தங்களது ஜாதக குறிப்பினை வைத்து எடுத்துச்செல்கின்றனர்.



    கோவிலின் வடபுறத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்கள் அமையப்பெற்றுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மரங்களில் ஒரு குடம் நீர் ஊற்றுவது சிறந்த பரிகாரமாகும். ஆலயத்தின் அக்னி மூலையில் தீர்த்தக் குளம் உள்ளது. ராமர் சொல் கேட்டு அக்னிபிரவேசம் செய்த சீதாதேவி, இக்குளத்தில் நீராடி இங்குள்ள சிவனை வழிபட்டதாக ஐதீகம். எனவே இந்த குளத்திற்கு ‘சீதாதேவி குளம்’ என்ற பெயரும் உண்டு.

    இத்திருத்தலத்தில் மாதம் இருமுறை பிரதோஷம், சிவராத்திரி, தேய்பிறை அஷ்டமி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் உள்ளிட்ட விசேஷங்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இத்தலத்தில் பக்தர்கள், தங்கள் ராசிக்குரிய இடத்தில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இந்த ஆலயத்தில் தற்போது 63 நாயன்மார்கள் மற்றும் சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரது திருமேனிகளை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் பகல் 12 மணி வரையும், இரவு 7.30 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.

    இந்தக் கோவிலுக்கு அருகில் பரந்தமலை என்னும் மலை உள்ளது. அங்கு சப்தகன்னியர்களும், வற்றாத சுனையும் உள்ளது. எல்லா காலத்திலும் அந்த சுனையில் நீர் இருந்து கொண்டே இருக்கும். மேலும் அங்கு சித்தர்கள் வாழ்ந்த சிறிய குகைகளும் காணப்படுகின்றன.

    அமைவிடம்

    திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கல்லூரியில் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. 
    சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் மனம் கவர்ந்த கோவில் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குகிறது இலம்பையங்கோட்டூர் சிவாலயம்.
    தீண்டாத் திருமேனிநாதர், தேவலோகக் கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தொண்டைநாட்டுத் தலம், சந்திரன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், யோகதட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள திருக்கோவில், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் மனம் கவர்ந்த கோவில் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குகிறது இலம்பையங்கோட்டூர் சிவாலயம்.

    தல வரலாறு :

    தொண்டை வள நாட்டில் பாடல் பெற்ற 32 தலங் களுள் 13-வது தலமாக விளங்குவது இலம்பையங்கோட்டூர். திரிபுர சம்ஹாரத்தின் போது, சிவனுக்கு இடையூறு ஏற்பட்டு தேர் அச்சு முறிந்து சாய்ந்தது. அப்போது சிவபெருமான் அணிந்திருந்த கொன்றை மாலை பூமியில் விழுந்தது. அந்த மாலை ஒரு சுயம்பு லிங்கமானது. தேவர்களைக் காப்பதற்காக புறப்படும் போது, தோன்றிய லிங்கம் என்பதால் இந்த இறைவன் ‘தெய்வநாயகேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்.

    இந்த நிகழ்வை திருஞானசம்பந்தர் தனது இரண்டாவது பாடலில், திருமலர்க்கொன்றையான் என்ற வரிகள் வாயிலாக உணர்த்துகிறார்.

    திருஞானசம்பந்தர் பல்வேறு சிவ தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடியவாறு, இந்தத் திருத் தலத்தைக் கடந்து சென்றார். அப்போது இறைவன் ஒரு குழந்தையாக வந்து இத்தலத்திற்கு அழைத்தார். ஆனால் திருஞானசம்பந்தர் வரவில்லை. அதனால் முரட்டுக் காளையாக வந்து வழிமறித்து, மிரட்டி இத் தலத்தை திருஞானசம்பந்தருக்கு இறைவன் காட்டியதாக தல வரலாறு சொல்கிறது.

    இச்சம்பவத்தைப் ‘பாலனாம்.. விருத்தனாம்.. பசுபதிதானாம்..’ என்ற பாடலின் வாயிலாக அறிய முடிகிறது.

    இத்தல இறைவியின் பெயர் கனககுசாம்பிகை. இவர் இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கியபடி எழில்மிகு தோற்றத்துடன் காட்சி தருகிறார். அம்மனின் பாதத்தில் காஞ்சிப் பெரியவர் வழங்கிய சக்கரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. இத்தல ஈசன், கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். தெற்கு நோக்கி இறைவி காட்சி தருகிறாள். ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய ரம்பாபுரிநாதர், பதினாறு பேறுகளைத் தரும் சிவனாக அமர்ந்திருக்கிறார். கோவிலின் தெற்கே மல்லிகா புஷ்கரணி என்ற திருக்குளம் உள்ளது. இது ரம்பா தீர்த்தம், சந்திர தீர்த்தம் என வெவ் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

    ஆலயத்தின் இடப்புறத்தில் பழங்கால சத்திரம் காட்சி தருகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் 1948-ம் ஆண்டும், ஆலய பரம்பரை அறங்காவலரால் 1979-ம் ஆண்டும் குடமுழுக்கு நிகழ்ந்துள்ளன.



    இத்தலத்தின் மற்றொரு சிறப்பு, இங்கே கருவறை சுற்றுச்சுவரில் எழுந்தருளியிருக்கும் யோக தட்சிணாமூர்த்தி. இவர் சின்முத்திரையைத் தனது இதயத்தில் நிறுத்தி, கண்கள் இரண்டையும் கீழ்நோக்கியும், வலது கரத்தில் திரிசூலம், இடது கரத்தில் ருத்திராட்ச மாலை ஆகியவற்றைத் தாங்கியும், மற்றொரு இடதுகரத்தைக் கீழே நிறுத்தி, இடது பாதத்தை அபஸ்மாரன் என்ற முயலகன் மீது அமர்த்தியும், சனகாதி முனிவர்களுடன் கல்லால மரத்தின் அடியில் அபூர்வ திருக்காலத்தில் அமர்ந்துள்ளார்.

    தேவலோகக் கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை மூவரும் இத்தலம் வந்து வழிபட்டுப் பேறு பெற்றதை, சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருக்கூவப் புராணம் நூல் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், இவர்கள் வழிபட்டதன் நினைவாக தனி சிவலிங்கமும், சுற்றுப் பிரகாரத்தின் இடது புறம் காணப்படுகிறது. இந்த சிவலிங்கம் 16 பட்டைகள் கொண்டு விளங்குகிறது. இச்சம்பவம் காரணமாக திருஅரம்பேஸ்வரர் என்ற திருப்பெயரும் இறைவனுக்கு உண்டு. எனவே, அழகை விரும்பும் பெண்கள் அவசியம் சென்று வழிபட ஏற்ற தலம் இது.

    இத்தலத்து இறைவனை வழிபட்டால், மறுபிறவியே இல்லை என்பதை ஞானசம்பந்தர் உறுதிபடக்கூறுகிறார். மறுபிறவி வேண்டுவோர் யாரும் இல்லை என்பதால், அவசியம் இத்தலத்து நாயகனைத் தரிசித்துப் பிறவாநெறி பெற்றுய்யலாம்.

    தீண்டாத் திருமேனி :

    இத்தல இறைவன் சுயம்புவாகத் தோன்றியவர். மேலும் இந்த லிங்கம் ‘தீண்டாத்திருமேனி’ என்ற சிறப்புடன் திகழ்கிறது. அதாவது இத்தல மூலவருக்கு பூ சாத்துதல் மட்டுமே உண்டு. லிங்கத்தைத் தொட்டு அபிஷேகம் செய்வதெல்லாம் வழக்கில் இல்லை. இதே போன்ற தீண்டாத் திருமேனிகள், கூவம், திருப்பாசூர், திருஊறல்-தக்கோலம் முதலிய இடங்களில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    அமைவிடம் :


    இச்சிறப்புமிகு தலம் அமைந்துள்ள இடம், இலம்பையங்கோட்டூர் என்றாலும், இதன் இன்றைய பெயர் எலுமியன்கோட்டூர். இது காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சுங்குவார்சத்திரம் அருகே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து மேற்கே 55 கி.மீ., பூந்தமல்லியிலிருந்து மேற்கே 40 கி.மீ., காஞ்சீபுரத்தில் இருந்து வடக்கே 25 கி.மீ., ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மேற்கே 22 கி.மீ, பேரம்பாக்கத்தில் இருந்து தெற்கே 5 கி.மீ. தொலைவில் எலுமியன்கோட்டூர் அமைந்துள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்தும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் மூலம் பேரம்பாக்கம் செல்ல வேண்டும். அங்கிருந்து தெற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.
    உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது. இந்த கோவில் வானில் உள்ள கயிலாய மலையின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
    ராஜராஜ சோழன் உலகிற்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய சொத்து ‘தஞ்சை பெரிய கோவில்’. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில், வலது புறம் கல்லணைக் கால்வாய், இடதுபுறம் சிவகங்கை பூங்கா, முன்புறம் ராஜா மிராசுதார் மருத்துவமனை இவைதான் பெரிய கோவிலின் தற்போதைய எல்லைகள். “பிரகதீஸ்வரர் கோவில்“ என வடமொழியிலும், “பெருவுடையார் ஆலயம்“ என தமிழிலும் அழைக்கப்படும்.

    இக்கோவில் கட்டப்படும் முன்பு இந்த இடத்தில் நைமி சாரண்ய முனிவர்கள் வாழ்ந்து வந்ததாக புராண வரலாறு கூறுகிறது. சுற்றுப்புறத்தில் மலைகளே இல்லாத நிலையில் முழுக்க முழுக்க கருங்கல்லால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது இந்த கோவிலின் சிறப்புகளில் ஒன்று. ராஜராஜன் இந்த கோவிலை கி.பி.1004-ல் தொடங்கி 6 ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளான். 1010-ம் ஆண்டு முதல்முறையாக இந்தகோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    மகாமேரு மலை

    உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது. இந்த கோவில் வானில் உள்ள கயிலாய மலையின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். 216 அடி உயரமுள்ள விமானம் மகாமேரு மலையாக வடிக்கப் பட்டுள்ளது. அதன் கீழ் திசை சிகரத்தில் சிவபெருமான், உமாதேவி, குமாரர்கள், பிறதெய்வங் களின் சிற்பங்கள் உள்ளன.

    தஞ்சை பெரிய கோவிலை உருவாக்கிய தலைமை தச்சன் ‘குஞ்சரமல்லன்‘. ராஜராஜன், இந்த சிற்பிக்கு “ராஜாராஜப் பெருந்தச்சன்“ என்ற விருது வழங்கி சிறப்பித்துள்ளான். பெரிய கோவிலின் வரலாற்றில் தொடர்புடைய வேறு பலரும் உள்ளனர். ராஜராஜன் பெரிய கோவிலைக் கட்டி முடித்துவிட்டு அதன் திருச்சுற்று மாளிகையின் பெரும்பாகத்தை எழுப்பும் பொறுப்பை தனது தளபதியான கிருஷ்ணன் ராமன் என்பவரிடம் ஒப்படைத்தான்.

    கேரளாந்தகன் கோபுரம்

    தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரமாகும். இதன் வாயிலில் நிறுத்தப்பட்டுள்ள 2 நிலைக் கால்கள் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. 4 அடி நீளம், 3 அடி அகலம், 40 அடி உயரத்தில் ஒரே கல்லிலான இந்த 2 நிலைக்கால்களும் தஞ்சையில் இருந்து குறைந்த பட்சம் 80 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. ராஜராஜன், கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக இந்த வாயிலுக்கு ‘கேரளாந்தகன் வாயில்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் இரண்டாவது கோபுரம் ‘ராஜராஜன் கோபுர வாயில்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திலும் 40 அடி உயரமுள்ள 2 நிலை கால்கள் உள்ளன.

    மகாநந்தி

    ராஜராஜன் வாயிலுக்கு எதிரே உள்ள 16 கால்மண்டபத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி உள்ளது. இந்த நந்தி கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் நாயக்க மன்னர்களால் உருவாக்கபட்டதாகும். இந்த மண்டபத்துக்கு தென்புறம் திருச்சுற்று மாளிகையில் வடதிசை நோக்கியவாறு காணப்படும் நந்தியே ராஜராஜன் காலத்தில் கோவிலுக்காக வடிக்கபட்டது.

    கோவில் கருவறையில் பிரகதீஸ்வரர் என்ற பெரிய லிங்கம் இடம்பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி 6 அடி அகலத்தில் சாந்தாரம் என்ற சுற்று அறை உள்ளது. இந்த அறைக்கு தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் மிகப்பெரிய வாயில்கள் உள்ளன. இங்கு படிக்கட்டுகள் கிடையாது. காற்று இவ்வறைக்குள் புகுவதற்கு இவை அமைக்கப்பட்டுள்ளன. கடுங்கோடையிலும் இச்சுற்று அறையில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருக்கும். இந்த அறையின் கட்டுமான அமைப்பு ஐம்பூதங்களுள் ஒன்றான காற்று இறைவனை ஆராதிக்கும் வகையில் அமைந்துள்ளது. கருவறையினுள் 13 அடி உயரத்தில் சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கத்தின் கீழ் 55 அடி சுற்றளவு உடைய வட்ட பீடமும், 6 அடி நீள கோமுகமான நீர்த்தூம்பும் அமைந்துள்ளன.

    சிற்பங்கள்

    கருவறையில் உள்ள லிங்க வடிவத்துக்கு மேலாக விமானத்தின் உச்சியில் திகழும் கலசத்தின் பீடம் வரை இக்கட்டிடம் உட்புறம் முழுக்கூடாக அமைந்துள்ளது. பிரபஞ்சம் பெருவெளியாகவும், ஆடவல்லான் என்னும் வடிவமாகவும் அந்த இடத்தை கருதியதால் சிவபெருமான் ஆடிக்காட்டும் 108 கரண சிற்பங்கள் செதுக்கப்பட வேலை தொடங்கப்பட்டது. இவற்றுள் 80 கரண சிற்பங்கள் மட்டுமே முழுமை அடைந்துள்ளன. ( இந்த சிற்பங்களை செதுக்கும் போது ஏற்பட்ட சில சம்பவங்களால் இப்பணி தடைப்பட்டதாக சில செய்திகள் கூறுகின்றன)

    பொற்கோவில்


    தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜன் கட்டியபோது விமானத்தின் மேல் செப்புத் தகடுகளைப் போர்த்தி, அவற்றின்மேல் பொன் பதித்ததாக அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவபெருமான் தங்கியுள்ள மேருமலை எவ்வாறு பொன்மலையாக விளங்குகிறதோ அதைப்போல தஞ்சை பெரியகோவிலும் பொன்மலையாக விளங்குகிறது’ என்று ஒட்டக்கூத்தர் தன் நூலில் எழுதி உள்ளார். விமானத்தின் மேல் பதிக்கப்பட்ட பொன் பிற்காலத்தில் படையெடுப்புகளில் சூறையாடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில்தான் என்பது வரலாற்று உண்மை.

    கி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இவர் சிறந்த கிருஷ்ண பக்தர் ஆதலால் சர்வாங்கநாதன் என்று அழைக்கப்பட்டவர். இச்செய்தி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வரலாற்றிலும் திருவிதாங்கூர் வைக்கம் கருவூல ஆவணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இம் மன்னர் திருக்குறுங்குடி கோயிலில் புகழ் வாய்ந்த மணி ஒன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.

    கி.பி.15-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வைஷ்ணவ யாத்ரீகர்கள் வட இந்தியாவிலிருந்து இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர். கங்கை மற்றும் யமுனா எனும் பகுதிகளின் இடையே இருக்கும் தீர்க்கப்பட்டர் என்னும் வைஷ்ணவ பக்தரால் பல்வேறு பொருள்கள் இத்திருக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியின்படி இச்சம்பவம் கி.பி.1464-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சதுர்வேதி மங்கலத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு 2 அந்தண பெண்களையும், சிறிய அளவில் நிலங்களும் மன்னர் ஆதித்ய வர்மாவால் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதை திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் வைஷ்ணவ அடையாளத்துடன் கூடிய செம்புபட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் வடசேரி மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதியே அன்றைய சதுர்வேதி மங்கலம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள நாகர் கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது. இக்கோவிலில் வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ண மூர்த்தி தனது இருகரங்களிலும் வெண்ணெய்யை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறார்.

    இத்தலத்தை குமரியின் குருவாயூர் என்று சிறப்பாக அழைப்பர். தினந்தோறும் கிருஷ்ணசாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. இது அவரது பக்த கோடிகளுக்கு ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ண சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.

    கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துடன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் வடசேரியை சார்ந்த கே.கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கமிட்டி மூலமாக சிறப்புற கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    கிருஷ்ணசாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த 20-ந்தேதி நடந்தது. தேர் திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை 7.05 மணிக்கு நடக்கிறது. 10 மணிக்கு ராஜா திருமண மண்டபத்தில் சமபந்தி விருந்து, மாலை 6 மணிக்கு மங்கள இசையும், இரவு 7 மணிக்கு நகைச்சுவை மாலை, 8 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி பரிவேட்டைக்கு எழுந்தருளல், 9 மணிக்கு சப்தாவர்ணமும் நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 4 மணிக்கு சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், 5 மணிக்கு அலங்கார குதிரை, யானையுடன் சுவாமி திருவீதி உலாவருதலும் இரவு 10 மணிக்கு சாமி தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    ×