என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சிவபெருமான் லட்சுமிக்கு அருளியதால் இத்தலத்திற்கு லட்சுமிபுரம் என்ற பெயரும் உண்டு. அதனாலேயே இறைவன் லட்சுமிபுரீஸ்வரர் என்ற நாமகரணம் பூண்டார்.
    சோழ மன்னனான கோச்செங்கோட்சோழன், தில்லை என்னும் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க விரும்பினான். அதற்காக தனது மந்திரியுடனும், படைவீரர்களுடனும் தில்லை நோக்கிப் பயணமானான். மன்னன் பல்லக்கிலும், மந்திரியும் மற்ற வீரர்களும் நடந்தும் பயணத்தைத் தொடர்ந்தனர். பகலிலும் இரவிலும் நடந்த அவர்கள் இரவில், காடா விளக்கின் துணையோடு காட்டுப்பகுதியைக் கடந்தனர்.

    திருநின்றியூர் என்ற ஊரை அடைந்த போது நன்றாக இருட்டிவிட்டது. காடா விளக்குடன் அவர்கள் நடக்க முயன்ற போது, அந்த ஊரின் எல்லையைத் தொட்டதும் அனைத்து காடா விளக்குகளும் அணைந்தன. மீண்டும் ஏற்றிய போதும் அவை மறுபடியும் அணைந்தன. விளக்கு அணைந்ததால், நல்ல கும்மிருட்டு. தட்டுத் தடுமாறி, ஊரின் எல்லையைக் கடந்த பின்னர், காடா விளக்கை ஏற்ற அது நன்றாக எரிந்தது.

    மன்னருக்கும் உடன் வந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. தில்லை சென்று ஆடலரசனை தரிசனம் செய்துவிட்டு மன்னரும் மற்றவர்களும் திரும்பினர். வரும் வழியில் திருநின்றியூரில் மறுபடியும் காடா விளக்குகள் குறிப்பிட்ட அதே இடத்திற்கு வந்ததும் அணைந்தன. இதற்கு என்ன காரணம் என்று அறிந்து வர மந்திரியை பணித்தார் மன்னர்.

    விடிந்தது.. மந்திரி யாரிடமாவது கேட்கலாம் என நினைத்து சுற்றிலும் பார்வையை படரவிட்டபோது, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் தென்பட்டான்.

    அவனை அழைத்து இந்த ஊரில் ஏதாவது விசேஷம் உண்டா? எனக்கேட்டார் மந்திரி. ‘உண்டு’ என்ற அந்தச் சிறுவன்.. ‘தினம் இரவில் காமதேனு வானிலிருந்து இங்கே ஓரிடத்தில் வந்து இறங்கி, அங்கே பாலை சுரக்கிறது’ என்று ஓரிடத்தை சுட்டிக்காட்டினான். வியந்த மன்னரும், மந்திரியும் அவன் சுட்டிக் காட்டிய இடத்தை நோக்கி நடந்தனர். சிறிது தொலைவு சென்றதும் மன்னரின் கால் சேற்றில் மாட்டிக் கொண்டது. அதிலிருந்து விடுபட அவரால் இயலவில்லை.

    மந்திரி பெரிய கல் போன்ற ஒரு இரும்பு குண்டைக் கொண்டு வந்தார். ‘மன்னா! இதை சேற்றில் ஊன்றி மேலே வாருங்கள்’ என்றார் மந்திரி.

    அவர் சொன்னபடியே மன்னர் அந்த இரும்பு குண்டை வாங்கி தரையில் பலமாக ஊன்றினார். மறுகணம் தரையிலிருந்து ரத்தம் பீரிட்டது. பதறிப்போன மன்னன் அந்த இடத்தை தோண்டச் செய்ய அங்கே ஒரு சிவலிங்கம் இருக்கக்கண்டார். அனைவருக்கும் வியப்பு. மன்னன் கண்டெடுத்த அந்த சிவலிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயமே திருநின்றியூரில் உள்ள ‘லட்சுமி புரீஸ்வரர்’ ஆலயம்.

    கோவில் அமைப்பு :

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் அகன்று விரிந்த பிரகாரம். நடுவே நந்தியும் பலிபீடமும் உள்ளன. தொடர்ந்து சிறப்பு மண்டபமும், இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்க இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அதை அடுத்து மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் உள்ளது. கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.


    லட்சுமி புரீஸ்வரர், உலகநாயகி

    மகாமண்டபத்தின் வலதுபுறம் இறைவி உலகநாயகி, நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் பத்மமும், அட்சயமாலையும் அலங்கரிக்க கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகின்றன.

    இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகள் அருள்புரிகின்றன. திருச்சுற்றில் பிள்ளையார், பரிகேஸ்வரர், மகாவிஷ்ணு, பரசுராமர், சுப்ரமணியர், நால்வர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

    சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர் என மூவராலும் பாடப் பெற்ற தலம் இது. பல நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான இந்த ஆலயத்தில், திரிபுவன சக்கரவர்த்தி ராஜ ராஜ தேவனின் கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    சிவபெருமானை நினைத்து, மகாலட்சுமி வரம் வேண்டி தவம் இருந்த தலம் இது. அவளது தவத்தைக் கண்டு இரங்கிய சிவபெருமான், அவள் முன் தோன்றி ‘என்ன வரம் வேண்டும்?’ என வினவினார்.

    மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, ‘தான் என்றும் விஷ்ணுவின் மார்பில் குடியிருக்க வேண்டும்’ என்று வேண்ட சிவபெருமானும் அப்படியே அருள்புரிந்தார் என்கிறது தல வரலாறு.

    சிவபெருமான் லட்சுமிக்கு அருளியதால் இத்தலத்திற்கு லட்சுமிபுரம் என்ற பெயரும் உண்டு. அதனாலேயே இறைவன் லட்சுமிபுரீஸ்வரர் என்ற நாமகரணம் பூண்டார். அனுஷ நட்சத்திரக்காரர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் அவர்களின் துன்பங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தல இறைவிக்கு சந்தனக்காப்பிட்டு, அந்த சந்தனத்தை பிரசாதமாக தினமும் பயன்படுத்தினால், மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற சொல்படி தந்தை கட்டளையிட தன் தாயைக் கொன்றார் பரசுராமர். பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றியது. தனது தோஷம் நீங்க இத்தல இறைவனை சரணடைந்து பாவவிமோசனம் பெற்றார் பரசுராமர். அவரது திருமேனி ஆலயத்தில் மேற்கு திருச் சுற்றில் தனி சன்னிதியில் உள்ளது.

    ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பல நூறு பக்தர்கள் இறைவனை தரிசித்து அன்று பலன் பெறுகின்றனர்.

    இந்தக் கோவிலில் தினசரி இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை - சீர்காழி பேருந்து தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது திருநின்றியூர். 
    பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்.
    அம்மனின் பாதங்கள் கொண்ட கோவில், சோழப்பேரரசியின் பெயரால் உருவான திருத்தலம், சித்தர் சமாதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்.

    இந்த இறைவன் முன்காலத்தில் குலோத்துங்கச் சோழீஸ்வரமுடைய மகாதேவன் என்று அழைக்கப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. தினசிந்தாமணி என்ற பேரரசியின் பெயரால் அழைக்கப்பட்ட இவ்வூர், இன்று ‘சிந்தாமணி’ என்று வழங்கப்படுகிறது. முதலாம் குலோத்துங்கசோழனின் பேரரசி மதுராந்தகி. இவளுக்கு தினசிந்தாமணி என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. இவளின் பெயரால் சோழமன்னன் உருவாக்கிய தலமே இன்றைய சிந்தாமணி

    ஆலயஅமைப்பு :

    ஊரின் கடைக்கோடியில் வயல்வெளிகள் சூழ இயற்கையான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச் சுவர், ராஜகோபுரம் ஏதுமில்லை என்றாலும், விசாலமான இடத்தில் ஆலயம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் வேம்பும், அரசும் காணப்படுகின்றன. அருகே விஸ்வரூப அனுமன் வணங்கிய நிலையில் காட்சிதருகிறார். அருகே, நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. சற்று நடந்ததும், அம்மன் சன்னிதி தனிச் சன்னிதியாக கிழக்கு முகமாய்க் காட்சியளிக்கிறது. அன்னை தையல்நாயகி என அழைக்கப்படுகின்றாள். சன்னிதியின் எதிரில் அம்பிகையின் பாதக் கமலங்கள் தனி பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன.

    இதனைக் கடந்த பின் சுவாமி சன்னிதி வருகிறது. பெரியநந்திதேவர் இறைவனை நோக்குகிறது. மகாமண்டபம் கடந்ததும், கருவறை முன்மண்டபம், கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாரில் நீண்ட லிங்கத் திருமேனியராக இறைவன் காட்சிதருகின்றார். குலோத்துங்கச் சோழீஸ்வரமுடையமகாதேவரின் இன்றைய பெயர் வைத்தீஸ் வரர். இங்கு வரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பதால் இந்த திருநாமத்தைப் பெற்றுள்ளார். இந்தத் திருமேனியும், கோட்டத்தில் அமைந்துள்ள திருமேனிகளும், சுவாமி சன்னிதியும் மட்டுமே பழமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன.

    இவ்வாலயத்தின் சிறப்பு, இங்கு வடிக்கப்பட்டுள்ள சிலா வடிவங்கள அனைத்தும் கலைநயத்தினை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்துவதாகும். நர்த்தன விநாயகர், ஊர்த்துவத் தாண்டவம், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், அடிமுடிதேடும் காட்சி, பிரம்மன், அம்மையப்பன், துர்க்கை, காலபைரவர் போன்ற சிலா வடிவங்கள் வெகுசிறப்புடன் அமைந்துள்ளன. இவை சோழ மன்னர்களின் காலத்தை உறுதி செய்கின்றன.

    இது தவிர விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் சன் னிதிகளும் அமைந்துள்ளன. இந்த முருகப்பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்கிறார்கள். சித்திரகுப்தர், விசித்திரகுப்தர் சன்னிதி சிறிய அளவில் உள்ளது. இவர்கள் எமபயம் போக்கி, உடல்நலம், தருபவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம். ஆலய தீர்த்தம் திருக்கோவிலின் ஊறல் குளம். இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கினால், சிக்கலான நோய்கள் கூட விலகி விடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்தக் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரங்களில் துர்க்கை பூஜை, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் பால்குட விழா என அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    சித்தர் பீடம் :

    ஆலயத்தின் ஈசான்ய மூலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஐக்கியமான ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. இவரின் மீது பஞ்சபூதேஸ்வரர் திருமேனியும், ஞானவிநாயகர், நாகங்கள் திருமேனியும், அரசமரமும், வேப்பமரமும் அமைந்துள்ளன. இவரை பவுர்ணமி தினத்தில் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இவரை வணங்கும் போது பலவித வாசனைகள் வருவதைச் சிலரால் மட்டுமே உணர முடியும் என்று கூறுகிறார்கள்.

    அமைவிடம்:

    விழுப்புரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திற்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் சாலையோர ஊராக சிந்தாமணி அமைந்துள்ளது. விழுப்புரம், திண்டிவனத்தில் இருந்து எண்ணற்ற பேருந்து வசதி உள்ளது. 
    கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்.
    கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்.

    தலவரலாறு :

    முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால் ‘கடம்பவனம்’ என்றும் அழைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர் பால் வியாபாரத்திற்காக சென்ற போது, கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பலநாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதை அறிந்த அந்தப்பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது அதிசயமாக கடம்பக்கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

    இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். அப்போது ஊர் பெரியவர், சுவாமியின் அருளால் அருள்வாக்கு கூறினார்.

    ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால் ரத்தம் வடிவது நின்று விடும் எனக்கூறி, அந்த வனப்பகுதியில் சந்தனமரம் இருக்கும் இடத்தின் அடையாளத்தையும் கூறினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள், அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து சந்தனத்தை ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். சந்தனத்தைப் பூசியதும் ரத்தம் நின்று விட்டது.

    உலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோவில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும், நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். சுவாமியின் அற்புத லீலைகளால் சுவாமியின் பெருமை நாடெங்கும் பரவியது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தது.



    உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம், விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரைவிசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி, நவராத்திரி கொலு, விஜயதசமி, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும்.

    சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்திப் பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.

    உவரி கோவிலில் காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக் காலம், இரவு 7 மணிக்கு சாயரட்சை, 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.

    அமைவிடம் :

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 35 கிலோ மீட்டர் தூரத்திலும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
    கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு எனும் இடத்தில் உள்ளது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் கேரளாவின் தென்பழனி என்று போற்றப்படுகிறது.
    கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு எனும் இடத்தில் உள்ளது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் கேரளாவின் தென்பழனி என்று போற்றப்படுகிறது.

    தல வரலாறு :

    பரம்பொருளாக விளங்குபவர் ஈசன். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வெளியேறிய நெருப்புப் பொறிகளில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். இவர் சிறுவனாக இருந்தபோதே, தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் தொல்லைகளைக் கொடுத்து வந்த சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் எனும் மூன்று அசுரர்களையும் அழித்து வெற்றிவேலனாக வலம் வந்தார்.

    சூரர்களை வதம் செய்தபிறகு பூலோகத்தை தன்னுடைய மயிலில் வலம் வந்த முருகப்பெருமானை, ஓரிடத்தில் மகாவிஷ்ணு வரவேற்றார். அப்போது முருகப்பெருமானை வாழ்த்திப் பாடல்களும் பாடினார். பின்னர் மகாவிஷ்ணு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்த இடத்திலேயே முருகப்பெருமான் கோவில் கொண்டார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    மகாவிஷ்ணு முருகப்பெருமானை வரவேற்றுப் பாடிய பாடல்கள் ‘ஹரிப்பாடல்கள்’ என்றும், அவர் பாடிய இந்த இடத்திற்கு ‘ஹரிப்பாடு’ என்றும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் பற்றியும், கோவில் அமைக்கப்பட்ட விதம் குறித்தும் மற்றொரு செய்தி சொல்லப்படுகிறது.

    முன்னொரு காலத்தில் முருகப்பெருமான் சிலை ஒன்றை வைத்து, பரசுராமர் பூஜை செய்து வழிபட்டு வந்தார். அதன்பிறகு அந்தச்சிலையை ஏதோ ஒரு காரணத்தால் கந்தநல்லூரில் உள்ள கோவிந்தமட்டம் உப்பங்கழியில் விட்டுச் சென்றுள்ளார். அந்தச்சிலை பிற்காலத்தில் காயம்குளம் ஏரிப்பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

    காயம்குளம் ஏரிப்பகுதியில் முருகன் சிலை இருப்பது குறித்த தகவல், அப்போதைய ஏகச்சக்கரா (ஹரிப்பாடு) நில உடைமையாளர்கள் அனைவருக்கும், ஒரே நேரத்தில் கனவாகத் தோன்றியிருக்கிறது. அதனையடுத்து அவர்கள், காயம்குளம் ஏரிப்பகுதிக்குச் சென்று அந்தச் சிலையைத் தேடியிருக்கின்றனர். அந்தத் தேடுதல் வேட்டையில் நெல்புரவுக் கடவு என்னும் இடத்தில் அந்தச் சிலை கிடைத்திருக்கிறது.

    அந்தச் சிலையை நிரந்தரமான இடமொன்றில் வைக்கும் வரை, அருகிலிருந்த ஓரிடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்தச்சிலை அருகில் இருந்த கிறித்தவக் குடும்பம் ஒன்றுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் வைக்கப்பட்டது. பின்னர் தற்போதுள்ள இடத்தில் புதிதாக ஆலயம் கட்டப்பட்டு, அந்த முருகர் சிலையை நிறுவியதாக அந்த வரலாறு சொல்கிறது.

    புதியதாக கட்டப்பட்ட ஹரிப்பாடு கோவிலுக்கு முருகர் சிலையை எடுத்துச் செல்வதற்கு முன்பாக, ஆலமரத்தின் அடியில் இருந்த அந்த சிலைக்குச் சிறிது நேரம் வழிபாடு செய்யப்பட்டது. இப்படி வழிபாடு செய்யப்பட்ட இடத்திலும் ஒரு சிறிய கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை மலையாளத்தில் ‘அரை நாழிகை அம்பலம்’ (அரை மணி நேரம் கோவில்) என்கின்றனர்.



    கோவில் அமைப்பு :

    கேரளாவில் ‘தென்பழனி’ என்று போற்றப்படும் ஹரிப்பாடு சுப்பிரமணியசாமி கோவில், நான்கு கோபுரங்களுடன் வட்ட வடிவக் கருவறையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் சிலை ஒரு முகத்துடன் கிழக்கு நோக்கிய நிலையில் நின்ற கோலத்தில் 8 அடி உயரத்தில் காட்சி தருகிறார். நான்கு கரங்களுடன் அருளும் இத்தல இறைவன், ஒரு கையில் வேல், மற்றொரு கையில் வஜ்ராயுதம் ஆகிய ஆயுதங் களுடனும், ஒரு கை அபய முத்திரையுடனும், மற்றொரு கையை இடுப்பில் வைத்திருப்பது போன்றும் அருள்கிறார்.

    இங்குள்ள முருகப்பெருமான் ‘சுப்பிரமணிய சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார். இந்தச் சிலை சிவ பெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மன் எனும் முப்பெருங்கடவுள்களின் அருளாசிகளுடன் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இக்கோவி லில் முருகப்பெருமான் தனித்து காணப்படுகிறார். இந்த ஆலயம் திரு மணத்திற்கு முன்பாக அமைந்தது என்பதால், இங்கு வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிலைகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இக்கோவில் வளாகத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர், தர்மசாஸ்தா, யட்சி, குருதிக்காமன், பஞ்சமி போன்றவர்களுக்கான சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இக்கோவிலில் மலையாள ஆண்டு 1096- ல் ஏற்பட்ட தீவிபத்தில் கோவிலின் பெரும்பான்மையான பகுதிகள் சேதமடைந்தன. அதன் பின்னர், அப்போதைய அரசர் சித்திரைத் திருநாள் ராம வர்மா என்பவரால், இக்கோவில் மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது என்கின்றனர்.

    ழிபாடுகள் :

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளிலும், முருகப்பெருமானுக்குரிய பிற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதத்தில் ஆவணிப் பெருவிழா, தனு (மார்கழி) மாதத்தில் மார்கழிப் பெருவிழா, மேடம் (சித்திரை) மாதத்தில் சித்திரைப் பெருவிழா என்று பத்து நாட்கள் கொண்ட திருவிழாக்கள் நடத்தப் பெறுகின்றன. மேலும் விருச்சிகம் (கார்த்திகை) மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்திருநாள், இடவம் (வைகாசி) மாதத்தில் சிலை நிறுவப்பட்ட நாள், துலாம் (ஐப்பசி) மாதத்தில் கந்தாஷ்டமி, கன்னி (புரட்டாசி) மாதத்தில் நவராத்திரி மற்றும் மகரம் (தை) மாதத்தில் தைப்பூசம் போன்ற விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    இக்கோவிலில் வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு கிடைத்தல், கல்வியில் மேன்மை போன்றவை கிடைக்கும் என்கின்றனர். சிறப்பு மிகுந்த இந்த ஆலயம் தினமும் காலை 4 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், ஆலப்புழையில் இருந்து திருவனந்த புரம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஹரிப்பாடு நகரம். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த ஆலயத்தைச் சென்றடைவதற்கு ஆட்டோ வசதி உள்ளது. ஆலப்புழையிலிருந்து ஹரிப்பாடு செல்ல அதிகமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. 
    திருமீயச்சூர். அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.
    திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலய தல வரலாறு

    காசிப முனிவரின் பத்தினிகளாக கர்த்துரு, விநதை இருவரும் சிவபெருமானை வழிபடுகின்றனர். இருவரின் பக்தியில் இறைவன் மகிழ்ந்து அவர்கள் முன் தோன்றி இருவருக்கும் ஒவ்வொரு அண்டத்தைக் (முட்டையை) கொடுக்கிறார்.

    இதனைக் குறிப்பிட்ட காலமான ஒரு வருடம் பூஜை செய்து பாதுகாத்து வந்தால், உலகம் பிரகாசிக்கும் சத்புத்திரன் பிறப்பான்” என்று கூறி மறைந்தார். இருவரும் அண்டத்தைப் பாதுகாத்துப் பூஜை செய்து வந்தனர்.

    ஒரு வருடம் கழித்து விநதை யின் அண்டத்திலிருந்து ஒரு பட்சி பிறந்தது. உடனே விநதை ஈஸ்வரனை நினைத்து, “என்ன இறைவா! எனக்குத் சத்புத்திரன் பிறப்பான் என்று கூறினாய். ஆனால் பட்சி பிறந்துள்ளதே” என்று வருந்தி வேண்டுகிறாள்.

    இறைவன், “நான் கூறியது போல் அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாய் கருடன் என்ற பெயரில் உலகமெங்கும் பிரகாசிப்பான்” என்றார்.விநதைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்ற ஏக்கத்தில் அவசரப்பட்டு கர்த்துரு தான் பாதுகாத்துப் பூஜை செய்து வந்த அண்டத்தை பிட்டப் பார்த்தாள். அதிலிருந்து தலை முதல் இடுப்பு வரை வளர்ந்த அங்கஹீனனாய் ஒரு குழந்தை பிறந்தது.

    அவளும் இறைவனை நினைத்து, “இப்படி ஆகி விடடதே!” என்று இறைஞ்சினாள். இறைவன், “நான் கூறியது போலவே இவன் சூரியனுக்குச் சாரதியாய் இருந்து உலகம் முழுவதும் பிரகாசிப்பான்” என்றார்.

    அங்கஹீனனான அருணன் தான் கைலாசம் சென்று ஈஸ்வரனைத் தரிசனம் செய்து வர எண்ணி சூரியனிடம் அனுமதி கேட்டான். சூரியனோ, “நீ அங்கஹீனன் (நொண்டி). உன்னால் ஈஸ்வரனைத் தரிசனம் செய்ய முடியாது” என்றெல்லாம் பரிகசித்தான். மனம் தளராத அருணன் இறைவனை நினைத்து தவமிருந்தான்.
    மமதை கொண்ட சூரியன் அருணனின் தவத்தை எள்ளி நகையாடியதோடு பல தொல்லைகளும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பம் தாங்காது அருணன், முன்னிலும் முனைப்பாக இறைவனை நினைத்து வேண்டினான்.

    இறைவன் அருணனுக்குக் காட்சியளித்து அருள் புரிந்தான். சூரியனிடம் “என்னைத் தரிசனம் செய்ய நினைத்த அருணனைத் துன்புறுத்திய உன் மேனி கிருஷ்ண வர்ணமாய்ப் போகக் கடவது” என்று சாபமிட்டார். இதன் விளைவாக உலகமே இருண்டு போனது.

    பரமேஸ்வரி சிவபெருமானிடம் “இப்படி சாபமிட்ட வீட்டீர்களே! உலகமே இயங்காது போகுமே” என்று வினவ, “அருணன் தவ பலத்தால் உலகம் பிரகாசமடையும்” என்றார். தன் தவறை உணர்ந்த சூரியன் இறைவனிடம் வேண்ட, “நீ எம்மை ஏழுமாத காலம் பூஜை செய்தால் உனது உருவம் கருமை நிறத்திலிருந்து விடுபட்டுக் குணமடையும்” என்றார்.

    தான் சாபவிமோசனம் அடை வதற்காக சூரியன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை ஏழு மாதம் பூஜை செய்து வழிபட்டார். அவ்வாறு வழிபட்ட பின்னரும் தன் கருமை நிறம் மாறாது போகவே வருந்தி, “ஹேமிகுரா” என்று கதறுகிறார்.

    அப்போது சுவாமியுடனிருந்த அம்பாள் தங்களது ஏகாந்தத்தில் குறுக்கிட்ட சூரியன் மேல் கோபம் கொண்டு மீண்டும் சபிக்க முற்பட்டாள். சிவபெருமான் தடுத்து, “நான் கொடுத்த சாபம் நீங்கவில்லையென்ற வருத்தத்தில் என்னை அழைத்துள்ளான். மீண்டும் நீ சாபமிட்டால் உலகம் மறுபடியும் இருண்டு போகும்.

    நீ பரமசாந்தையாயும் உலகம் பிரகாசிக்கவும் தவமிருப்பாயா” என்று அம்பாளைச் சாந்தப்படுத்தி, அம்பாளின் கோபம் தணிய தவமிருக்கப் பணிந்துவிட்டு, சூரியனுக்கு சாபவிமோசனம் அளித்தார். அம்பாள் சாந்த நாயகியாகிறார். அன்னை பராசக்தியின் திருவாயிலிருந்து வசினீ என்ற வாக்தேவதைகள் தோன்றி அவர்கள் திருவாய் மலர்ந்ததுவ சகஸ்ர நாம ஸ்தோத்திரம் எனப்படுகிறது. அம்பாளே அருளியதால் அவரின் பெயர் கொண்டு லலிதா சகஸ்ர நாமம் எனப் பெயர் பெற்றதாகச் சொல்வர்.

    இத்தலத்தில் பூஜை செய்து சூரியன் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்படையிலேயே மீயச்சூர் எனப்பெற்றது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ம் தேதி முடிய சூரிய கிரணங்கள் உதயமாகும் நேரத்தில் இவ்வாலயக் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும்.

    சூரியன், அருணன், காசிப முனிவரின் மனைவி களான கர்த்துரு, விநதை ஆகியோர் இத்தலத்திலிருந்து சிவபெருமானை வழிபட்ட தோடல் லாமல் எமன் இத்தலத்தில் பிறந்து எந்நேரமும் சிவ சிந்தனையுடன் இருந்து பூஜித்ததாகவும், அகத்திய முனிவரும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பூஜை செய்தார்.

    100 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளைக் கெட்டிப்படுத்தும் தெய்வீக சக்தி உண்டு. சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன் ஆயுளைத் தரவல்ல சங்கு கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையும், எமலோகத்தின் ஸ்தல விருட்சங்களில் ஒன்றானதுமான பிரண்டை கலந்த அன்னதானம் செய்து சிவபெருமானை வழிபட்டார் என்பது ஐதீகம்.

    ஸ்ரீ ஹயக்கிரீவர் (பரிமுகப் பெருமான்) அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் செய்கையில், “லலிதாம்பாளை எங்கு தரிசனம் செய்யலாம்?” என்று அகத்தியர் வினவ, “அருணனும் சூரியனும் பூஜை செய்த ஸ்தலம் பூலோகத்தில் மீயச்சூர் எனும் ஊரில் உள்ளது. அங்கு சென்றால் அன்னை ஸ்ரீ லலிதாம்பாளைத் தரிசிக்கலாம். அந்த லலிதா சகஸ்ரநாமம் வாசிப்பதனால் பெற வேண்டிய பலன்களையும் அங்கு சென்றால் நிச்சயம் அடையலாம்” என்றார்.

    அகத்தியரும் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ மேகநாத சுவாமியையும் அன்னை லலிதாம்பாளையும் வணங்கி, பூஜை செய்து லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையின் பூரண பலனைப் பெற்றார் என்பது வரலாறு. பவுர்ணமி தினத்தன்று இவ்வர்ச்சனை செய்து அம்பாளை வழிபட்டால் சகல நன்மைகளும் அடையலாம்.

    அகத்தியர், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையை இவ்வன் னைக்காக அழகிய தமிழில் இயற்றியுள்ளார். இதனை தினமும் பாராயணம் செய்ய சகல செல்வமும், நற்பலன்களும் கிட்டும்.

    அமர்ந்த திருக்கோலத்தில் கலையழகு மிளிர வடிவமைக் கப்பட்டுள்ள அன்னை ஸ்ரீ லலிதாம்பாள் சிலையின் கால்களில் கொலுசு அணிவதற்கு ஏற்ப இடைவெளிகளோடு அமைக் கப்பட்டுள்ளதை அண்மையில் அறிந்து, பக்தர்கள் சிலர் சேர்ந்து கொலுசு செய்து அணிவித் துள்ளார்கள்.

    இத்தலத்தில் தாமரை இலைகளில் சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட் சத்திரத்தில் குறிப்பிட்ட ஹோரையில் சிவபெருமானை பூஜித்து, அத்தாமரை இலையிலே அன் னத்தை படைத்து, ஏழைகளுக்கு அன்னதானமளித்து தாமும் உண்டால் எக்கடுமையான நோய்களால் துன்பப்பட்டாலும் அந்நோயிலிருந்து நிவாரணம் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ காலனும், சிவபெருமானும் அருள் புரிவர் என்பது நம்பிக்கை.

    இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவைகளைச் செய்தால் பூரண ஆயுளோடு ஆரோக்கியமாய் வாழ்வர்.

    வேளாக்குறிச்சி ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டார சன்னதிகள் அவர்கள் இத்தலத்தின் பரம்பரை அறங்காவலராக இறைபணியாற்றி வருகிறார்கள். ஆதீன இளவரசு சீர்மிகு சத்திய ஞான மகாதேவ சுவாமிகள் தம் தந்தையாரோடு இணைந்து இறைபணியை நிறைவுடன் ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவில் அமைப்பு :

    திருமீயச்சூர் கோவிலின் ராஜகோபுரம் 5 நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும் கோவிலின் இரண்டாவது உள் கோபுரம் 3 நிலைகளுடன் 5 கலசங்களுடன் காணப்படுகின்றன.

    முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தில் உள்ளது. அதனை அடுத்து பெருங்கோவிலின் 2-வது உள் கோபுரத்தில் நுழையும்போது விநாயகர் நம்மை வரவேற்கிறார்.

    முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட்பிரகாரத்தின் தென் பகுதி பிரதிஷ்டைகள், சேக்கிழார் போன்றோரது திருஉருவங்களும், சப்த மாதாக்கள் பூதலிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில் அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், லிங்கங்களும் உள்ளனர்.

    இக்கோவில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தில் சேத்திர புராணேஸ்வரர் திருஉருவம் அமைந்துள்ளது.

    இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் புறத்தில் இருந்து பார்க்கும் போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து பார்க்கும்போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிற்பத்தை காணும்போது நம் தினப்படி வாழ்வில் நடக்கும் விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள் நடந்தாலும், வெளியில் இருந்து ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அப்படியே கோபமான முகத்தை, சாந்தமான முகமாக மாற்றிக் கொண்டு விருந்தோம்பல் புரிவது நமது பண்பாடு. இவ்வாறு இறைவன் அவர்களை காணச் சென்ற பக்தர்களாகிய நம்மை விருந்தினர்களாக நினைத்து மனைவியை சிரித்த முகத்துடன் இருக்குமாறு சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்ற ஈஸ்வரனுக்குத்தான் அவரது பக்தர்கள் மேல் எத்தனை பிரியம்.

    இப்பெருமானைப் பார்த்து விட்டு அப்படியே சுற்றிவரும்போது தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர் ஆகியோர் திருஉருவங்களையும் கடந்து செல்கின்றோம். இந்த பெருங்கோவிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், தூண்களும் அழகு சேர்க்கின்றன. இக்கோவிலின் வடப்பக்கத்திலே இளங்கோவிலை தரிசனம் செய்யலாம்.

    இத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று கவனித்தால் 5 கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் புண்ணியம். கோபுரங்களின் தரிசனம் கோடானு கோடி புண்ணியம்.

    கோபுர தரிசனத்திற்கு பின்னர் அங்கேயே சற்றுதள்ளி, இளங்கோவிலின் சுற்று லிங்கோத்பவர், பிரம்மா, மகா விஷ்ணுவாகிய மும்மூர்த்திகளின் தரிசனம் நமக்கு கிடைக்கிறது.

    இக்கோவிலின் பிரகார சுவற்றில் தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, சது சண்டிகேஸ்வரர் உள்ளனர். தல விநாயகர், சண்டிகேஸ்வர், அருணாசலேஸ்வர், சூரிய பகவான், ஆகாச லிங்கம், வாயுலிங்கம் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

    இத்திருக்கோவில் அன்னை லலிதாம்பிகை இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாத வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இப்பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் உயர்வு தாழ்வின்றி வாழ வேண்டும். இக்கோவிலில் காணும் சிற்பங்களில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

    அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் :

    சர்வலாங்கார அம்பிகையாக கைகளில் வளையல்களும் அமர்ந்த நிலையில் கால்களில் கொலுசும் இடுப்பில் ஒட்டியானமும் கழுத்தில் சகல விதமான ஆபரணங்களும் அணிந்து அற்புதமாக காட்சி அளிக்கின்றாள் திருமீயச்சூர் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.

    சிறப்பு வாய்ந்த ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மாசி மாத அஷ்டமி நவமி இணைந்த நாளில் ஆதி சைவ சிவாச்சார்யர்களும் அன்னையின் பக்தர்களும் அம்பாள் உபாசகர்களும் கூடி இணைந்து ஏகதின லட்சார்ச்சனை மற்றும் ஹோமம் பள்ளயம் எனப்படும் அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் போன்ற வழிபாடுகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    லட்சார்ச்சனையின் போது 10 காலத்திற்கும் 10 விதமான பிரசாதங்கள் காலம் ஒன்றிற்கு 10 கிலோ வீதம் 100 கிலோ பிரசாதம் நைவைத்தியம் செய்யப்படுகின்றது. உச்சிகாலத்தில் விசேஷமாக பிரண்டை சாதம் 10 கிலோ நைவேத்தியம் செய்யப்படுகின்றது.

    அர்ச்சனையின் போது காலை முதல் மாலை வரை 10 ஆயிரம் ஆவர்த்தி ஹோமமும் அதன் அங்கமாக ஆயிரம் ஆவர்த்தி தர்ப்பணமும் நடைபெற்று அம்பிகைக்கு மகா அபிஷேகமாக பால், பழம், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்றவை செய்விக்கப்பட்டு கலசாபிஷேகம் செய்து சர்வலாங்கார பூஷிதையாக அலங்காரம், மலர் கிரீடம் தரித்து காட்சி தரும் அம்பிகைக்கு மஹா நைவேத்தியம் செய்யப்படும்.

    அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர் சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.

    சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த காட்சியை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருந்து கண்டுகளித்து மீண்டும் மீண்டும் தரிசித்து இன்புறுவர்.



    சூரியன் அருள்புரிந்த திருமீயச்சூர்  :

    அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை அருளும் அற்புதத்தலம் திருமீயச்சூர். அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர். இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
    திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கீழ் உள்ள தலம். திருமீயச்சூர் மற்றும் இளங்கோவில் இரண்டும் ஒரே ஆலயத்துககுள் திகழ்கின்றன. இவை சம்பந்தராலும், அப்பராலும் பாடப்பெற்றன.

    மூலவர் சுயம்புலிங்கத் திருமேனி (மேகநாதர்), அம்பாள் சவுந்தரநாயகி, லலிதாம்பிகை, கோபுரங்கள் கஜப்பிருஷ்ட விமான அமைப்பில் உள்ளன. இக்கோவிலின் வடக்குப் பிராகாரத்திலுள்ள இளங்கோவில் இறைவன் ஸ்ரீசகலபுவனேஸ்வரர். அம்பிகை மின்னல் மேகலாம்பாள்.

    உட்பிராகாரத்தில் விநாயகர், வில்லேந்திய முருகர், பஞ்ச பூதலிங்கங்கள் தனித்தனியே அஷ்ட திக் பாலகர்கள், சப்த மாதர்கள் பூஜித்த லிங்கங்கள், சேத்ர புராணேஸ்வரர், கல்யாண சுந்தரர், துர்க்கை, சூரியன் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோவி லின் உட்பிராகாரங்களில் மொத்தம் 25 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    இங்கே 12 ராசிகளுக்கான 12 நாகர்களையே அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். அருணனும் சூரியனும் வழிபட்ட தலம். சூரியன் சுவாமியையும் அம்பாளையும் யானை மீது வைத்து மேக மண்டலத்திலிருந்து பூஜை செய்ததால் சுவாமிக்கு மேகநாதர் என்று பெயர். எமனும், சனிபகவானும் இத்தலத்தில் சூரியனுக்கு மகன்களாகப் பிறந்தனர். சங்கு புஷ்பங்களை தாமரை இலையில் வைத்து அர்ச்சனை செய்தும், வஸ்ரவள்ளி எனப்படுகின்ற பிரண்டையால் சாதம் செய்து நிவேதித்துவம் எமன் வழிபட்டாராம்.

    இன்றும் இங்கே பக்தர்கள் தங்களின் தேக ஆலோக்கியத்துக்காக, 108, 1008 சங்குகளால் அபிஷேகம் செய்தும், சங்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தும், பிரண்டை சாதம் நைவேத்தியம் செய்தும் கோவிலில் விநியோகித்து வழிபடுகிறார்கள்.

    கிளியை தூது அனுப்பும் துர்க்கை :

    திருமீயச்சூர் தலத்துக்கு நாம் எதை வேண்டி ஸ்ரீ லலிதாபர மேஸ்வரியை வழிபட வந்துள்ளோமோ அதனை ஸ்ரீ துர்க்கையிடம் “தாயே நான் இன்ன கோரிக்கையாக வந்துள்ளேன். நீதான் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியிடம் சிபாரிசு செய்ய வேணும்” என பிரார்த்தித்தால், ஸ்ரீ துர்க்கை தன் கையில் உள்ள கிளியை நமக்காக தூது செல்ல அனுப்பி வைக்கிறாள். ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சந்நிதி எதிரிலுள்ள கொடி மரத்தில் அந்தக் கிளி அமர்ந்து நமது கோரிக்கைகளை அம்பாளிடம் சமர்ப்பிக்கிறதாம்.

    ஒரு பக்கம் கோபம் இன்னொரு பக்கம் சாந்தம் :

    சூரியன் இங்கே மேகநாதரை வழிபட்டு கருமை நீங்கிச் செவ்வொளி பெற்று இன்புற்றார். மேகநாதர் சந்நிதி கோஷ்ட தெய்வமாக விளங்குவது சேத்திர புராணேஸ்வரர் சிற்பம். சிவசாபத்திலிருந்து விமோசனம் பெற சூரியன் திருமீயச்சூரில் தங்கினான்.

    சாபத்தின் கடுமையால் சீக்கிரம் விமோசனம் வேண்டி சூரியன் அலறிய குரல், ஏகாந்தமாய் இருந்த அம்பாளுக்கு பாதிப்பை உண்டாக்கியது. அதனால் கோபமடைந்து, சூரியனை சபிக்கத் திருப்புகிறாள். சுவாமி அம்பாளின் முகவாயைப் பிடித்து நான் ஏற்கனவே கொடுத்த சாபத்தினால் இவ்வுலகம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. நீயும் சபிக்காதே என்றார்.

    இந்தக் காட்சி சேத்திர புராணேஸ்வரர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் சாந்தமாகவம் தெரியும்.

    7 பிறவிகள் பாவம் தீரும் :

    இங்கு ரதசப்தமி ஏகதின உற்சவம் தை அன்று நடைபெறுகிறது. பீஷ்ம பிதாமகர் முக்தி அடைந்த தினம். பரமேஸ்வரனால் சூரியனுக்கு ஏற்பட்ட சாபம் (கருமை நிறம்) நீங்கி மேகநாதரையும், லலிதாம்பிகையையும் சூரியன் வழிபட்டு சாப விமோசனம் அடைந்து முழுமையான பிரகாசம் அடைந்த தினம் இது.
    ரதசப்தமி நண்பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் ரிஷப வாகனராய் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்து அருள்கிறார். அப்போது, எருக்கம் இலை, அருகம்புல், பசுஞ்சாணம் மூன்றையும் சிரசில் வைத்து சங்கல்ப ஸ்நானம் செய்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கப் பெறும் என்பது முன்னோர் வாக்கு.

    பிரண்டை சாத நைவேத்தியம் :

    100 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் தோன்றுவதால் சங்கிற்கு ஆயுளைக்காலம் உள்ளது என்பதால், சத்ய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், அதிக ஆயுளை சங்கினைக் கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, சக்தி வாய்ந்த மூலிகைகள், எமலோகத்தின் தல விருட்சமான பிரண்டை கலந்து சாதத்தினை அன்னதானம் செய்து சிவபிரானை வழிபட்டார் என்பது இந்த கோவிலின் ஐதீகம்.

    மென்மையானவள் :

    ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம். லலிதா என்பதற்கு மென்மையான என்று பொருள். லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலப மானவள் என்றும் அர்த்தம்.
    கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது.
    கோவில் அமைப்பு :

    கோவில்களின் அமைப்பும், கட்டிட தொழில் நுட்பமும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழ்நாட்டில் பிரமாண்ட பிரகாரங்கள், கலர்கள், கோபுரங்கள் இருக்கும். மற்ற மாநில ஆலயங்களில் அப்படி பார்க்க முடியாது.

    அந்த வகையில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது.

    ஸ்ரீமூகாம்பிகை கோவில் கர்நாடகத்தில் இருந்தாலும் கேரள கோவில்களின் அமைப்புகளையும், பாணியையும் ஒத்திருக்கின்றது. கிழக்கு கோபுரவாயிலை 1996&ம் ஆண்டு புனர் நிர்மானம் செய்து பழைய அமைப்பு மாறாமல் கருங்கற்களால் கட்டியுள்ளார்கள். இக்கோவிலின் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தட்டினால் வேயப்பட்டதாகும்.

    எல்லா கோவில்களை போல முதலில் நம் கண்ணில் தென்படுவது கொடிக்கம்பம். அம்பாளின் கர்பக்கிரகம் கொடிக் கம்பத்தை ஒட்டியிருப்பது விளக்குத்தூண். ஒரே கல்லினால் ஆன அழகிய தூண் இது. இதில் ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம்.

    கேரள கோவில்களில் ஆண்கள் கோவிலின் உள்ளே& சன்னதி அல்லது கருவறை அருகில் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொல்லூர் மூகாம்பிகை கோவிலிலும் இந்த விதி கடைபிடிக்கப்படுகிறது.

    அன்னையின் கருவறை& எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் அம்மனின் சிம்ம வாகனம். கருவறையின் இருபுறமும் தியான மண்டபம் உள்ளது. பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்கிறார்கள். அன்னைக்கு முன்பாக ஸ்வர்ணரேகையுடன் கூடிய ஜோதிர்லிங்கம் உள்ளது.

    அன்னை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் வேண்டும் வரம் அருள்கிறாள்.

    முன்வாயிலைக் கடந்து மீண்டும் வெளிப்பிரகாரம் சுற்றினால் முதலில் சரஸ்வதி மண்டபம். இது மிகவும் விசேஷமான இடம். ஆதி சங்கரர் ஸ்ரீமூகாம்பிகையை நோக்கி மனமுருகி “சவுந்தர்ய லஹரியை” இங்கு அமர்ந்து எழுதியதாகவும் இங்கே தான் அரங்கேற்றி அருளியதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த சரஸ்வதி மண்டபம்& கலா மண்டம் எனப்போற்றப்படுகிறது. கேரளம் தந்த மாபெரும் ஓவியர் ரவி வர்மா இங்கு சித்திரங்கள் வரைந்துள்ளார்.

    இன்று கூட இந்த சரஸ்வதி மண்டபத்தில் தமிழ்நாடு மராட்டியம், தெலுங்கானா, கேரள, கர்நாடக ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் யாராவது தங்களது கலா நிகழ்ச்சியை தினமும் இரவு ஏழு மணி அளவில் நடத்துகிறார்கள். அம்மன் சிவேலி முடிந்ததும் அம்பாளின் பஞ்சலோக விக்ரகத்தை இந்தச் சரஸ்வதி மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்வர். அந்த சமயங்களில் தான் இசை நடனம் என அரங்கேற்றங்கள் நடைபெறும்.

    நவராத்திரி நாட்களில் இந்த சரஸ்வதி மண்டபம் தனி பொலிவு பெறும். விஜயதசமி அன்று இங்கு தங்கள் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம் அன்று ஆதிசங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்னும் சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஆதிசங்கரரின் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

    ஆலயத்தில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் மேற்குப் பார்த்து அருள் பாலிக்கிறார். முருகன் சன்னதிக்கு அடுத்திருப்பது தான் சரஸ்வதி மண்டபம்.
    மேற்கு கோபுரவாசல் அருகில் வடமேற்கு மூலையில் கிணறு உள்ளது. அதற்கு முன் ஆஞ்சநேயர் சன்னதி. இந்த தனிச்சன்னிதி வாயுதிசையில் அமைந்துள்ளது.
    அதனை அடுத்து உள்ளது விஷ்ணு சன்னதி, கேரள பக்தர்கள் இந்த விஷ்ணுவை குருவாயூரப்பன் என்றே வணங்குகின்றனர்

    அப்படியே வடக்கு பிரகாரத்திற்கு சென்றால் கோவில் அலுவலகம் உள்ளது. வழிபாடு சீட்டுகள் தருமிடம், இலவச உணவு சாப்பிடும் இடத்துக்கு போகும் வழி உள்ளது.

    வடகிழக்கு மூலையில் துளசிமாடம். அதனை அடுத்து அம்பாளின் பரிவார தேவதைக்கு எல்லாம் தளபதியான வீரபத்திரர் சன்னதி அமைந்துள்ளது. இவர் தானே கம்ஹாசூரன் சம்ஹாரத்தில் அம்பாளுக்குப் படைத்தளபதியாக நின்றவர். மேலும் ஆக்ரோஷம் மிகுந்த வீரபத்திரரின் உக்கிரம் குறைக்கத்தான் அவருக்கு எதிரே ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்ததாக சொல்லுகிறார்கள். அதனால் தான் வீரபத்திரர் அமைதியாக இருக்கிறார் எனக் கூறுகிறார்கள்.

    வீரபத்திரர் இந்த தலத்திற்கு ரட்சாதிகாரி, சிவேலி தவிர அன்னைக்குச் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் இவருக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    கருவறை அமைப்பு :

    மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையில் வரத கரம் தன் தாளை சுட்டிக்காட்டும் படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தபடி கருவறையில் வீற்றுள்ளாள். கருவறையின் விமானம் முழுவதும் கெட்டியான தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.

    கருவறையில் அம்மையின் முன்னர் தரையோடு தரையாக சிவலிங்கம் உள்ளது. சுயம்பாகத் தோன்றிய அந்த சிவலிங்கம் பொற் கோடால் இரு பிளவுபட்டாற் போன்றும் இடப்பாகம் பெரிதாகவும் அமையப் பெற்றுள்ளார்.

    துவாபரயுகத்தில் கோலமுனி தவம் புரிந்த பொழுது இத்தலம் தோன்றியது. உச்சிப் பொழுதின் போது கண்ணாடியின் மூலமாக இந்த லிங்கத்தின் மீது பிரதிபலிக்கச் செய்தால் அப்பொற்கோட்டைப் பார்க்கலாம்.

    இடப்புறம் காளி, கலைமகள், அலைமகள் ஆகியோரை சுட்டுவதாக இந்த லிங்கம் அமைந்துள்ளது. வலப்புறம் அயன், அரன், அரி ஆகிய மூவரையும் சுட்டுவதாக அமைந்துள்ளது. இயக்கமில்லானும், இயக்கமே உருவாய் உடையாளும் இச் சிவலிங்கத்தில் ஒன்றி உள்ளனர். இவ்வாக்கியத்தின் ஆதாரமாக அமைந்துள்ளதே இப்பொற்கோடு ஆகும்.

    இன்று காணப்படும் திருவுருவம் ஆதி சங்கரரால் பஞ்சலோகத்தில் தனக்கு கிடைத்த காட்சிப்படி அமைக்கப் பெற்றதாகும். அதற்கு முன்னர் இங்குச் சிவலிங்கமும் ஸ்ரீ சக்கரமும் மட்டுமே இருந்து வந்தன.

    அன்னையை வழிபட்ட பின்னர் அனைவரும் வீரபத்திர சுவாமியை தவறாது வழிபடுகின்றனர். அன்னை அவ்வப் பொழுது நவமணியால் அலங்கரிக்கப்படுகிறார். அவள் பொன் வண்ணத்தாள், செவ்வாடை விருப்பமுடையாள்.

    கன்னியாகுமரியில் பகவதி தேவியின் மூக்கில் மாணிக்க மூக்குத்தி அலங்கரிப்பது போல் கொல்லூரில் அவள் மார்பில், இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. பின் மகாகாளி கலைமகள், ஆகியோரின் உற்சவத் திருமேனிகளும் மூன்று முகமும் தசகரமும் பாம்பின் மீது கால் ஊன்றிய நிலையில் கணபதியின் திருவுருவம் உள்ளன.

    முதல் பிரகாரத்தில் பஞ்சமுக சுயம்பு கணபதி உள்ளார். இங்கு காணப்படும் ஸ்ரீசக்கரம் மும்மூர்த்திகளால் அமைக்கப்பெற்றது என்பது மரபு. இது இறைவியின் அருவுருவ நிலையை சுட்டிக் காட்டுவதாகும்.

    வடை நிவேதனம்

    தொழிலில் வெற்றி பெற குங்கும அர்ச்சனை செய்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட வடை நிவேதனம் செய்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க மகாதிருமதுர நிவேதனம் செய்கிறார்கள்.

    இப்பிரசாதம் முன்பு யாரும் உட்கொள்ளாமல் கிணற்றில் வீசப்பட்டது. கருவறையில் வைத்து பூஜை செய்து தரப்படுவதை உட்கொண்டால் பல சிறப்புகள் அடையலாம்.

    கிணற்றில் வீசப்பட்டு வந்த பிரசாதத்தை அதில் ஒளிந்து கொண்டு குஞ்சன் நம்பியார், முட்டன் நம்பூதிரி ஆகியோர் அப்பிரசாதம் வீசப்பட்ட போது பிடித்து உட்கொண்டமையால் கவித்துவ வல்லமை பெற்றனர் என்பது செவி வழி செய்தி.

    அசுரனை அழித்த ஆயுதம் :

    அன்னை மூகாம்பிகை அனைத்து வித சக்தியையும் பெற்று அசுரனை அழித்தாள். குடசாத்திரி மலையில் உள்ள இடத்தில்தான் அவள் அசுரனை அழித்தாள். அந்த இடம் கொல் லூரில இருந்து மலை மீது 4500 அடிகள் உயரத்தில் உள்ளது. இங்கு முகட்டில் ஓர் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில் உண்டு. இதனை சர்வக்ஞபீடம் என்பர். இது கொல்லூரிலிருந்து 18 மைல் தொலைவில் உள்ளது.

    ஒன்பது மைல் வரையில் பஸ்சில் செல்லலாம். பின் காட்டில் 6 மைல் நடந்து செல்ல வேண்டும். அதன்பின் மலை மீது மூன்று மைல் ஏறிச் செல்ல வேண்டும். சக்யாத்திரி மலைக்காடுகளில் நறு மணம் பரப்பும் மலர்கள் பல உள்ளன. அவற்றைக் கண்டுகளித்துக் கொண்டே செங்குத்தான மலை மீது ஏறிச் சென்றால் குடசாத்திரி மலை முகட்டை அடையலாம்.

    இங்கு இரண்டு சிறிய கோவில்கள் முகட்டின் அடிவாரத்தில் உள்ளன. முதற்கோவிலில் சவுந்திர வடிவுடை காலபைரவியாக அம்பிகை உள்ளாள். இக்கோவிலின் முன் 25 அடி உயரத்தில் ஓர் துருபிடிக்காத இரும்புத் தூண் உள்ளது. இது மூகனை அழித்த திரிசூலம் என்று சொல்கிறார்கள்.

    கொல்லூர் செல்வது எப்படி? :

    சென்னையிலிருந்து மங்களூர் சுமார் 800 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அங்கு செல்ல சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் செல்கின்றன. சென்னையில் தினமும் மதியம் 12 மணிக்கு புறப்படும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் மங்களூர் போய் சேர்ந்து விடுகிறது.

    சென்னையில் இருந்து மங்களூருக்கு செல்ல ஆம்னி பஸ்களும் உள்ளன. ஆனால் அது 14 அல்லது 15 மணி நேர பயணமாக இருக்கும்.
    எனவே சில பக்தர்கள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பஸ்சில் சென்று , பிறகு பெங்களூரில் இருந்து மங்களூர் சென்று கொல்லூர் செல்வதுண்டு. ஆனால் ரெயில் பயணமே எளிதானதாக இருக்கும்.

    மங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து நீங்கள் வெளியில் வந்ததுமே ஏராளமான தனியார் பஸ்கள் கொல்லூர் செல்ல தயாராக நிற்கும். அதில் ஏறிச்சென்றால் சுமார் 4 மணி நேர பஸ் பயணத்துக்குப் பிறகு கொல்லூர் சென்று சேர்ந்து விடலாம்.

    சென்னையில் இருந்து கொல்லூர் செல்லும் பக்தர்கள் பஸ், ரெயில் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். பஸ் பயணத்துக்கு சுமார் 20 மணி நேரம் கூட ஆகிவிடலாம். அதற்கேற்ப தயாராக இருக்க வேண்டும்.

    வசதி இருப்பவர்கள் சென்னையில் இருந்து கொல்லூருக்கு விமானத்தில் செல்லலாம். கட்டணமாக ரூ. 3 ஆயிரம் வரை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் மிகக்குறைந்த கட்டணத்தில் சென்றுவர முடியும். அதுபோல மங்களூரில் இருந்து கொல்லூருக்கு தனியார் பஸ்சில் சென்றால் 4 மணி நேரம் ஆகும். அதற்கு கட்டணமாக ரூ. 140 வசூலிக்கிறார்கள்.

    காரில் சென்றால் 2 1/2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். அதற்கு ரூ. 3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். காரில் சென்றால் வழியில் உள்ள உடுப்பி கிருஷ்ணரையும் தரிசிக்க நேரமும் வாய்ப்பும் கிடைக்கும். சென்னையில் இருந்து மங்களூர் வரை விமானம் பிறகு அங்கிருந்து கொல்லூருக்கு கார் பயணத்தை தேர்வு செய்தால் சுமார் 5 மணி நேரத்துக்குள் சென்று சேர்ந்துவிட முடியும். எனவே அதற்கேற்ப கொல்லூர் பயணத்தை திட்டமிட்டு வகுத்துக் கொல்லுங்கள்.

    மங்களூரில் இருந்து சென்னை திரும்பும்போது குருவாயூர் செல்ல விரும்புபவர்கள் குட்டிபுரம், பட்டாம்பி, சொரனூர் ஆகிய ஊர்களில் இறங்கி அங்கிருந்து செல்லலாம். இல்லையென்றால் சொரனூருக்கு அடுத்த நிறுத்தமான திருச்சூர் ரெயில் நிலையத்தில் இருந்தும் குருவாயூர் செல்லலாம்.

    கோயம்புத்தூர் மற்றும் பாலக்காட்டில் இருந்தும் நிறைய ரயில்கள் மங்களூர் செல்கின்றன. மங்களூரில் இருந்து தனி வாடகை காரில் ஏறிச் சென்றால் உடுப்பி சென்று கண்ணபிரானையும், அன்னேகுட்டே சென்று விநாயகப் பெருமானையும் கண்டு தரிசனம் செய்யலாம். உடுப்பியில் இருந்து சிருங்கேரி சென்று சாரதாதேவியை தரிசிக்கலாம். மங்களூரில் இருந்தோ, உடுப்பியில் இருந்தோ தர்மஸ்தலா செல்லலாம்.

    தர்மஸ்தலாவில் இருந்து சுப்ரமணியா செல்லலாம். சுப்பிரமணியாவில் இருந்து தலைக்காவேரி செல்லலாம். உடுப்பி, அன்னேகுட்டே, சிருங்கேரி, தர்மஸ்தலா, சுப்ரமணியா போன்ற இறைத்திருத்தலங்கள் பக்தப் பெருமக்கள் கண்டு தரிசிக்க வேண்டிய முக்கியமான திருத்தலங்கள் ஆகும்.
    பெங்களூரில் இருந்தும் கூட உடுப்பி மற்றும் கொல்லூருக்கு செல்ல படுக்கை வசதியுடன் கூடிய நிறைய பஸ்கள் உள்ளன.



    பூஜைகளுக்கு ஏற்ப புரோகிதர்கள் :

    * தேவியின் கர்ப்பகிரகத்தை, மூல விக்கிரகத்தைத் தூய்மைப்படுத்துதல் அலங்காரம் செய்தல், தேவியைத் தலையில் சுமந்து சீவேலி வருதல் போன்ற காரியங்கள் ஒரு குடும்பத்தினர் செய்தல் வேண்டும்.

    * பூஜை நெறிகள், சித்ய கருகங்கள் பலிபீட நைவேதத்யம் போன்றவை ஒரு குடும்பத்தினர் செய்தல் வேண்டும். இவர்களே தேவி ஆலயத்தின் தலைமை குருக்கள் ஆவார்கள்.

    * சண்டிகா ஹோமம் மற்றும் ஆகம நியமங்கள் செய்ய ஒரு குடும்பத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    * வெண் கொற்றக் குடை ஏந்தி செல்ல ஒரு குடும்பத்தினர்.

    * கட்டியங்கூறவும் தேவியின் செங்கோலை ஏந்தி செல்ல ஒரு குடும்பத்தினர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    இப்படி ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்குள் ஒவ்வொரு பணியாகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    கசாய நைவேத்தியம் :

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் இரவு 9 மணிக்கு கசாய தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் இஞ்சி, குரு மிளகு, ஏலக்காய் திப்பிலி, இலவங்கம், வெல்லம் ஆகிய மருத்துவ மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. நல்ல மருத்துவ குணம் கொண்ட இம்மூலிகை கஷாயத்தை பக்தர்கள் வாங்கிக் குடிப்பதற்கு தவறுவதில்லை. இக்கசாயம் ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் கூறிய முறைப்படி தயார் செய்யப்பட்டு இன்றளவும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பிரதோச பூஜை :

    கொல்லூரில் தினமும் இரவு 7 மணிக்கு நடத்தப்படும் பூஜை பிரதோச பூஜை காலமாக கருதப்படுகிறது. எல்லா விசேஷமான பூஜைகளும் ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருச்சன்னதியிலும் நடைபெறுகிறது. அந்த நேரத்தில் உற்சவர் சிலை சரஸ்வதி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு மங்கள ஆரத்தியும், அஷ்ட அவதான சேவையும் செய்யப்படுகிறது.

    அன்னைக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் :

    தாய் மூகாம்பிகைக்கு நெற்றி, கண்கள், மூக்கு, காது ஆகியவற்றில் விலை உயர்ந்த ரத்தினங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு வருகிறது. விசேஷ காலங்களில் அன்னையின் திருமார்பில் அணிவிக்கப்படும் ‘பச்சைக்கல் அட்டிகை’ சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் கெதளி ராஜ வம்சத்தை சேர்ந்த அரசன் ஒருவன் தேவிக்கு காணிக்கையாக அளித்த ஒன்றாகும். இதன்விலை மதிப்பிட முடியாதது ஆகும். சுயம்பு லிங்கத்திற்கும் விசேஷ பூஜை காலங்களில் அணிவிப்பதற்கு என்றே தனியாக அணிவிக்கப்படும் ஆபரணங்களும் உண்டு.

    கொல்லூரில் நட்சத்திர தரிசனம் :

    மாலை 6.30 மணிக்குமேல் கொல்லூரில் இருந்து நட்சத்திர தரிசனம் பார்க்கலாம். இது நட்சத்திரமல்ல. ஆனால் இது ஒரு ஒளிதரும் கிரகம். இதனை மங்கள கிரகம் என கேரள பக்தர்கள் அழைக்கின்றனர். இது மேற்குத்திசையில் அடிவானத்தில் தெரியும். 7 மணிக்கு ‘பளிச்’ என்று மிகத் தெளிவாகத் தெரியும்.

    சீவேலி :

    மூகாம்பிகை தேவியின் மூல விக்கிரகம் பக்கத்தில் சிறிய இரண்டு தேவிகளின் விக்கிரங்கள் உள்ளதைப் பார்க்கலாம். இதில் ஒரு தேவியின் திருவுருவத்தை தினத்திற்கு மூன்று வேளை அதாவது காலை, உச்சி, வேளை, இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் ஆலயத்தின் உள்ளேயுள்ள பிரகாரத்தைச் சுற்றி திருவுலா வருவது வழக்கம். இதனை “சீவேலி” என்பார்கள்.

    உட்பிரகாரத்தில் சீவேலி வருவது போன்று குறிப்பிட்ட விசேஷ தினங்களில் அம்மன் ஆலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய தெருக்களில் நகர்வலம் வருவதும் உண்டு. அம்மன் சீவேலி வருவது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.

    தேவியை தொட்டு அலங்காரம் செய்யவும் மூல கர்ப்பகிரக அறையைச் சுத்தம் செய்யவும் ஒரு குடும்பத்தினருக்கே பரம்பரை பரம்பரையாக உரிமை உள்ளது. இவர்களே சீவேலி சமயத்திலும் தேவியை தொட்டு சுமந்து செல்ல உரிமைப் பெற்றவர்களும் ஆவார்கள்.

    முதலில் இந்த குடும்பத்தினரைச் சேர்ந்த புரோகிதர் ஒருவர் தனது தலையில் தேவியின் திருவுருவத்தை சுமந்தவாறு நடப்பார். இவருக்கு முன்னாள் கட்டியங் கூறுபவரும் அம்மனுக்கு வெண்கொற்றக்குடை எடுத்துச் செல்பவரும் தீபம் ஏந்திச் செல்பவரும் நடப்பார்கள்.

    இவர்களின் பின்னால் பக்தர்கள் பக்தி பெருக்குடன் பின் தொடர்வார்கள். உட்பிரகாரத்தில் பலி பீடங்களுக்கு நைவேத்யம் படையலைத் தலைமை பூசாரி படைத்தவாறு அதற்குரிய பூஜைகளைச் செய்தவாறு செல்ல அதன் பின்னால் அம்மன் கொலுவிருக்கும் உட்பிரகாரத்திலேயே சீவேலி நடைபெறும்.

    உட்பிரகாரத்தின் சீவேலி முடிந்ததும் வெளி பிரகாரத்தில் தேவியைத் தலையில் சுமந்தவாறு ஒரு முறையும் நீண்ட பல்லக்கில் ஒரு முறையும் பின்னர் வெள்ளி தகடு வேய்ந்த சிறிய பல்லக்கில் ஒரு முறையும் தேவி சீவேலியாக 3 தடவை வலம் வருவாள். காலை இரவு ஆகிய இரு நேரங்களில் மிக பெரிய மரத்தால் ஆன ரதத்தில் அம்மனை அமர்த்தி பக்தர்கள் வெளி பிரகாரத்தில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.

    சீவேலி சமயத்தில் நகாரா என்ற இரட்டை சிறிய முரசும் நமது ஊரில் உள்ள நாகஸ்வரம் வகையை சார்ந்த சற்றே பெரிய செனாய் என்ற இசைக்கருவியும் வாசிக்கப்படும். உடன் ஒத்து என்ற ஸ்ருதி வாத்தியக் கருவியும் இசைக்கப்படும்.

    10 சன்னதிகள் :

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் 10 சன்னதிகள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    1. ப்ராணலிங்கேஸ்வர் சன்னதி
    2. ப்ராத்தேஸ்வரர் சன்னதி. இந்த இரண்டும் லிங்கம். லிங்கத்தினுள் லிங்கம் என புதுமையாக இருக்கிறது. அருகில் சென்று பார்க்கலாம்
    3. பஞ்சமுக கணபதி சன்னதி
    4. சந்திர மவுலீஸ்வரர்
    5. நஞ்சண்டேசுவரன் சன்னதி - இரண்டும் லிங்கம் தான்.
    6. பெருமாள் சன்னதி
    7. ஆஞ்சநேயர் சன்னதி
    8. வீரபத்திரர் சன்னதி
    9. முருகப்பெருமான்
    10. சரஸ்வதி மண்டபம்



    குத்து விளக்கு தீபம் :

    ‘இது சித்தி சேஷத்திரம் மனதில் பக்தியுடன் வேண்டியதை அம்பாள் பக்தர்களுக்கு வழங்குவாள்’ என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. பொதுவாக சக்தி தலங்களில் அகல் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு செய்வார்கள். ஆனால் இங்கு குத்து விளக்கின் பஞ்சமுகத்திலும் திரிவைத்து நெய் விளக்கு ஏற்றி அம்பாளை வழிபடுவது விசேஷம்.

    இதற்கு கட்டணமாக ரூ.300 வசூலிக்கிறார்கள். அந்த சீட்டை காட்டினால் குத்து விளக்கு தருவார்கள். அதில் 5 திரிகளில் விளக்கு ஏற்றி மூகாம்பிகையை வழிபடலாம். நித்திய உற்சவம் வாரத்தில் வெள்ளி உற்சவம் பௌர்ணமி அமாவாசை நவராத்திரி, மார்ச் இறுதி ஏப்ரல் முதல் வாரத்தில் எட்டு நாள் ரதோற்சவம். ஜூன் முதல் வாரம் சுக்லபட்சம் அஷ்டமி திதியில் அம்பாளின் ஜனமாஷ்டமி திருவிழா நடைபெறும்.

    கட்டணம் செலுத்துவோர்ருக்கு தங்க ரதத்தில் அம்பாள் உலாவரும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடத்திவைக்கப்படும்.

    திருவிழாக்கள் :

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத் தில் மார்ச் மாதம் வசந்த விழா நடைபெறும். அப்பொழுது தேர் திருவிழா நடைபெறும். ஜூன், ஜூலை மாதங்களில் வளர்பிறை அஷ்டமி நாளில் அம்பிகையின் திரு அவதாரத் திருவிழா நடைபெறும். புரட்டாசி மாதம் நவராத்திரித் திருவிழா நடைபெறும்.

    மகாலட்சுமி விரதம். மகா சிவராத்திரி, கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஜ்வேஷ்டலட்சுமி சங்கர ஜெயந்தி ஆகிய நாட்களில் அம்பிகைக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

    பங்குனி உத்திரத்தின் பொழுது மிகப்பெரிய விழாவான தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று கொடியேற்றுவிழா நடைபெற்று மூல நட்சத்திரத்தன்று தேர் திருவிழா முடிவடைகிறது. அன்று ஆற்றங் கரையில் மக்களுக்கு விருந்து கொடுக்கப்படுகிறது.

    அன்னையின் விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மூகாசூரனுக்கு திருவிழா நடைபெறும். விழாகாலத்தில் சண்டிஹோமம் உருத்திராபிஷேகம் சகஸ்ரநாம அர்ச்சனை முதலிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். எட்டாம்நாள் தேர் திருவிழாவின்போது தேரிலிருந்து நாணயம் உலோகத்துண்டுகள் வீசப்படும் அவை கிடைப்பது பெரும் பேறாக மக்கள் கருதுகின்றனர்.

    ஒன்பதாம் நாள் ''ஒகுலி'' என்று ஓர் விளையாட்டு நடைபெறும். கலைமகள் மண்டபத்திற்கு அருகில் உள்ள குளத்தில் நீர் நிறைத்து, வாழைப்பழக்குலையை ஓர் கம்பில் கட்டி தொங்கவிடுவார்கள். அதனை பிடிக்க முயலும் பொழுது வாழைக்குலையை எட்டிப்பிடிப்பவர் வெற்றி பெற்றவராகிறார். இவ்விளை யாட்டிற்கு பின்னர் அம்பிகையை ஆற்றில் நீராட்டி ஆலயத்திற்கு அழைத்து வருவார்கள். அத்துடன் இத்திருவிழா நிறைவு பெறும்.

    நவராத்திரி காலத்தில் சிறுதேரில் அம்பிகை கோவிலின் கண் இருக்கும் சிறு பிரகாரத்தில் பவனி வருவாள். கார்த்திகை தீபத்தன்று அம்பிகையை ஆற்றில் நீராட்டி அழைத்து வந்த பிறகு விருந்து அளிப்பர். இதற்கு வனவிருந்து என்று பெயர்.
    அன்னையின் விழா சிறப்பு

    இத்தலத்தில் அன்னை மூகாம் பிகைக்கு நான்கு விழாக்கள் மிக சிறப்பாக நடைபெறுகின்றன. அவை: ஆனியில் அன்னையின் ஜெயந்தி விழா, ஆடியில் மகா வரலட்சுமி ஆராதனை விழா, புரட்டாசியில் 10 நாட்கள் நவராத்திரி விழா, மாசியில் மகா தேர்த்திருவிழா ஆகியவையாகும்.
    இவ்விழா காலங்களில் பல மாநிலங்களில் இருந்தும் திரளான மக்கள் வந்து அன்னை மூகாம்பிகையின் விழா கோலத்தை கண்டு வணங்கி வாழ்வில் வளம் பெறுகின்றனர். அன்னை மூகாம்பிகையின் தேர்த்திருவிழா தொடங்கு வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னே, மூகாசுரனுக்கும் திருவிழா நடைபெறுகின்றது.

    தங்கும் விடுதிகள் :

    கொல்லூருக்கு செல்பவர்கள் தங்குவதற்கு ஆலயம் சார்பில் 9 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அதில் பக்தர்களுக்கு தேவைக்கேற்ப அறைகளை ஒதுக்கி தருகிறார்கள். ஆனால் தனி நபராக சென்றால் ஆலய விடுதிகளில் தங்க அனுமதி மறுக்கிறார்கள். கொல்லூரில் ஏராளமான தனியார் லாட்ஜுகள் உள்ளன. அங்கு தான் தனி நபராக தங்க முடியும். ஆனால் கட்டணம் அதிகமாக கொடுக்க வேண்டியது இருக்கும்.

    கவல் தொடர்பில் கவனம் தேவை :

    கொல்லூர் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சில நிறுவனங்களின் செல்போன் சேவையில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். சில செல்போன் நிறுவனங்களின் சிக்னல்கள் கொல்லூர் மற்றும் அதை சுற்றி 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிடைப்பது இல்லை. எனவே செல்போன் சேவையை பயன்படுத்து வதில் கவனமாக இருக்க வேண்டும். ஜியோ செல்போன் சேவை அங்கு கிடைப்பதில்லை. ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களின் சேவை எளிதாக கிடைக்கிறது. ஆனால் ரோமிங் இல்லா விட்டால் செல்போனில் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வது தடைபட்டுவிடும். எனவே கொல்லூர் செல்லும் பக்தர்கள் பி.எஸ்.என்.எல். சேவையை பயன் படுத்துவது நல்லது.

    ஆலய முகவரி:

    ஸ்ரீமூகாம்பிகை கோவில்,
    கொல்லூர்,
    குண்டப்புரா தாலுகா,
    உடுப்பி மாவட்டம்,
    கர்நாடகா பின்- 576220
    காரைக்காலில் உள்ள பார்வதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் ‘திருத்தெளிச்சேரி’ எனவும், ‘கோவில் பத்து’ எனவும் அழைக்கப்படும் இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு.
    இந்திரப் பதவியில் இருந்த தேவராஜன், விஷிராகரன் என்ற அசுரனைக் கொன்றான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. கொடி வடிவில் அது தொடர்ந்து துன்புறுத்தியது. இதையடுத்து தேவேந்திரன், தொஷ்டா என்பவரை இந்திரப் பதவியில் அமர்த்தி விட்டு பூலோகம் சென்றான்.

    தொஷ்டா தனது புதல்விகளான சாயை, சுவைச்சளை இருவரையும், சூரியனுக்கு மணம் முடித்து வைத்தான். சூரியனின் பிரியம் சுவைச் சளையிடம் மட்டுமே இருந்தது. சாயை தேவியிடம் பாராமுகமாய் நடந்து கொண்டான் சூரியன். இந்த தகவலை நாரதர் மூலம் அறிந்த தொஷ்டாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. சூரியனை ஒளி இழக்கும்படி சபித்தான்.

    தன்னுடைய சாபம் நீங்குவதற்காக சூரியன், தன் தேவியுடன் பூலோகம் அடைந்தான். சமீவனநாதரை நோக்கி தவம் செய்து வணங்கி, லிங்கத்திற்கு மேல் பாகத்தில் தாமரை ஓடை உண்டாக்கி, அந்த நீரால் இறைவனை வணங்கித் துதித்தான். அவனது பிரார்த்தனை பலித்தது. சமீவன நாதர் அவன் முன் தோன்றி, அவனது சாபத்தை நீக்கியருளினார்.

    சூரியனும் அவரை மகிழ்வோடு வணங்கி ‘நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். என்னால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம், என் பெயரால் ‘சூரிய புஷ்கரணி’ என்று அழைக்கப்பட வேண்டும். அதில் நீராடுபவர் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட வேண்டும். தங்களுக்கும் என் நாமத்தால் பெயரிடப்பட வேண்டும். எனக்கு இரு பிள்ளைகள் பிறக்க வேண்டும்’ என்று கேட்க, சமீவனநாதரும் அவ்வாறே அருளினார்.

    இதன்படி இத்தலத்து இறைவன் பாஸ்கரலிங்கம் என்றும், தீர்த்தம் சூரிய புஷ்கரணி எனவும், தலம் பாஸ்கர ஷேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.

    காரைக்காலில் உள்ள பார்வதீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் பார்வதீஸ்வரர்தான் இந்த பெருமைக்கும் பெயருக்கும் உடையவர். இங்கு அருள்பாலிக்கும் இறைவி பெயர், சுயம்வரத பஸ்வினி என்பதாகும்.

    ஆலயம் அமைந்துள்ள இடம் ‘திருத்தெளிச்சேரி’ எனவும், ‘கோவில் பத்து’ எனவும் அழைக்கப்படும் இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு. இத்தலம் கிரேதாயுகத்தில் ‘சமீவனம்’ எனவும், துவாபர யுகத்தில் ‘ஆனந்தவனம்’ எனவும் அழைக்கப்பட்டு, இந்த கலியுகத்தில் ‘முக்தி வனம்’ என அழைக்கப்படுகிறது.

    இத்தலத்திற்கு திருத்தெளிச்சேரி என்று பெயர் வந்ததற்கு காரணம் உண்டு.

    ஒரு சமயம் சோழ வள நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. ஊர் எங்கும் மக்கள் பசி பட்டினியால் தவித்தனர். அதனால் இசுவாகு வம்சத்தில் வந்த அரசன் ஒருவன், இத்தல இறைவனை வழிபட்டு மக்களின் வேதனையை போக்கும்படி வேண்டி நின்றான். கருணை கொண்ட இறைவன் மழை பொழியச்செய்தார். பின் இறைவனே உழவனாக வேடங்கொண்டு விதை தெளித்தார். இதனால்தான் இத் தலம் திருத்தெளிச்சேரி என அழைக்கப் படுகிறது.

    இன்றும் ஆனி மாதம் ‘விதை தெளி உற்சவம்’ இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இறைவன்-இறைவி எதிரே உள்ள சூரிய புஷ்கரணிக்கு எழுந்தருளி, விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும். பின்னரே விவசாயிகள் விதை தெளிக்கத் தொடங்குவர்.

    பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை வழிபட்டு, அவரையே மணந்து இறைவனை அடைந்த தலம் இது. எனவே கன்னியர் தாங்கள் விரும்பும் கணவரை அடைய இத்தல இறைவன் அருள்புரிவார் என பக்தர்களின் நம்பிக்கை.



    ஆலய அமைப்பு :

    இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரமும், அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வட திசையில் இறைவி சுயம்வர தபஸ்வினியின் சன்னிதி உள்ளது. அன்னை நான்கு திருக்கரங்களுடன் தென்திசை நோக்கி காட்சி அளிக்கிறாள்.

    திருச்சுற்றில் மேற்கில் வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமி, தெற்கில் நடராஜர்- சிவகாமி, வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் பைரவர், சூரியன், ரேணுகாதேவி, சனீஸ்வரர், பிடாரி அம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இதனை அடுத்து மகாலிங்கமும், தெற்கில் அறுபத்து மூவர் திருமேனிகளும் உள்ளன. தேவக் கோட்டத்தில் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். வடகிழக்கில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது.

    இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. நவராத்திரியின் போது இறைவன்-இறைவிக்கு 9 நாட்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 10-ம் நாள் அம்பு போடும் வைபவம் நடைபெறும். திருக்கல்யாணம், சங்காபிஷேகம், கடைஞாயிறு, வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை, புனர்பூசம், திருவோணம், கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை தீபம், பிரதோஷம், ஐவர் ஐக்கிய உற்சவம் ஆகியவை திருவிழா நாட்களே.

    சைவத்தை நிலைநாட்டிய சம்பந்தர் :

    தனது தல யாத்திரையின் போது திருஞானசம்பந்தர் சமீவனமான இந்தப் பகுதிக்கு வந்தார். அதுசமயம் சோழநாட்டை வீரசோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் சைவத்தின் பெருமை உணராது வேறு ஒரு பிரிவினரை ஆதரித்து வந்தான்.

    அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வந்த திருஞானசம்பந்தரிடம், ‘நீங்கள் ஈசனைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்வது உண்மையானால்.. தீயால் காய்ச்சப்பட்ட பீடத்தில் அமர்ந்து அதனை மெய்ப்பித்துக் காட்டுங்கள். ஒரு வேளை நீங்கள் தோற்றுவிட்டால் உங்களை கழுமரத்தில் ஏற்றுவேன்’ என்றான்.

    அதற்கு சம்மதித்த சம்பந்தர், சிவபெருமானை வேண்டிக்கொண்டு ‘வேதங்கள் உண்மையானால், திருநீறு மற்றும் ருத்ராட்சங்கள் அழியாதவை என்பது உண்மையானால், பரமசிவம் ஒருவனே மூல முதல் பொருள் என்பது உண்மையானால், எனக்கு எந்த சிறு துன்பமும் நேராமல் இருக்கட்டும்’ என்று கூறிக்கொண்டே தீயில் காய்ச்சிய இரும்பு பீடத்தில் அமர்ந்தார்.

    அவருக்கு எந்தவித தீங்கும் நேரவில்லை. வியப்பில் ஆழ்ந்த மன்னன் வீர சோழன், சம்பந்தர் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். அவரிடம் உபதேசம் பெற்றான்.

    சூரிய வழிபாடு :


    இத்தலத்தில் நடைபெறும் சூரிய பூஜை மிகவும் விசேஷமானது. இங்குள்ள இறைவனை வழிபட்டு சூரிய பகவான் சாபம் நீங்கப் பெற்றான் அல்லவா? அதனால் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அஸ்தமனச் சூரியன், தன் பொன் நிறக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்யும் காட்சியை இங்குக் காணலாம்.

    அந்த நாட்களில் சூரிய பூஜை வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. சூரியனின் கதிர்கள், மூலவரின் கருவறை வழியாக சிவபெருமானின் சிரசில் படும். அது சமயம் தாமரை மலர் கொண்டு மூலவருக்கு சோடச ஆராதனைகளுடன், அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகத்திற்கு தேவையான தீர்த்தங்கள் எதிரே உள்ள சூரிய புஷ்கரணியில் இருந்தே கொண்டு வரப்படும்.

    ஆலயத்தின் தலவிருட்சம் வன்னி மற்றும் வில்வ மரமாகும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப்பெற்ற சிவ தலம், தற்போது ‘திருச்செங்கோடு’ என்று கூறப்படுகிறது. இறைவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பாகம்பிரியாள் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது.

    இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவ தீர்த்தம். இத்தலமரமாக இலுப்பை மரம் உள்ளது. இது விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம் ஆகும்.

    அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர், சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள்.

    மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

    திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் இக்கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை உள்ளது. இதில் இருபாதைகள் உண்டு. ஒன்று நடைப்பயணமாகப் படிக்கட்டு வழிச் செல்வோருக்கானது. மற்றொன்று வாகனம் மூலம் செல்வோருக்கானது. கோவில் நிர்வாகத்தாரால் மலைமேல் செல்ல கட்டணச் சிற்றுந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இந்த மலைக் கோவிலுக்குச் செல்லும் பாதை, 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழக்கு மேற்கில் 262 அடி நீளமும், தெற்கு வடக்காக 201 அடி நீளமும் கொண்டது இந்தக் கோவில். இதன் வடக்கு வாசல் ராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென் திசைகளிலும் இக்கோவிலுக்கு வாசல்கள் உண்டு. அவற்றுள் தென் திசை வாசலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது.

    செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் கொண்டது இந்த ஆலயம். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாசல் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணி இருக்கிறது.

    அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள்என அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.



    ஆதிசேஷன், மகாவிஷ்ணு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மகாவிஷ்ணு தனிக்கோவிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, இவருக்கு தனியே கொடியேற்றி 10-ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.

    இக்கோவிலில் செங்கோட்டு வேலவர் சன்னிதியும், அர்த்த நாரீஸ்வரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற லிங்கத்துடன் நாகேஸ்வரர் சன்னிதியும், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் (நின்ற கோலம்) சன்னிதியும் உள்ளன.

    கோவை மாவட்டத்தில் உள்ள காடாம்பாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாததூளி. இவரது மனைவி சுந்தரியம்மாள். இந்த தம்பதியருக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. எனவே அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் ஏறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தான, தருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றிணைந்து திருச்செங்கோடு மலைமீது ராஜகோபுரம் அமைத்துத் தந்துள்ளனர்.

    இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107-வது திருப்பதிகத்திலும், திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116-வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். இக்கோவிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டுவேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனு பூதியில் பாடியுள்ளார்.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்தூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்பு உள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லினால் ஆன சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல்சங்கிலிகள் ஆகிய சிற்ப விநோதங்கள் உள்ளன.

    அமைவிடம்

    அர்த்தநாரீஸ்வரர் கோவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் மலையின் மீதுள்ளது. இக்கோவில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் திருச்செங்கோடு கயிலாசநாதர் கோவில் உள்ளது. 
    தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 108-வது திருத்தலம் சங்காரண்யேஸ்வரர் கோவில் ஆகும். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். .
    மகாவிஷ்ணு தனது நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்ச சன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கெளமோதகி), வாள் (நாந்தகம்) ஆகியவற்றையும், தோளில் வில்லையும் (சாரங்கம்) ஆயுதங்களாகத் தரித்திருப்பார். இவைகளில் வாளும், சாரங்கமும் மறைந்திருந்து அருளும் ஆயுதங்களாகும். இந்த ஆயுதங்கள் ஒவ்வொன்றும் அவருக்குக் கிடைத்ததன் பின்னணியில் புராண வரலாறுகள் உள்ளன. இவைகளில் சங்கு மற்றும் சக்கரம் இரண்டும், அவர் ஈஸ்வரனிடம் இருந்து கேட்டுப் பெற்றவைகளாகும்.

    சங்கின் பிறப்பு பற்றி தேவி மகாத்மியத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் மகனாக சுதர்மன் அவதரித்தான். ராதையின் சாபம் காரணமாக அவன் அசுர குலத்தில் சங்க சூடன் என்ற பெயரில் பிறக்க நேரிட்டது. சங்கசூடன் தான் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் சிவபெருமான் அவனை சூலாயுதத்தால் அழித்து சாம்பலாக்கினார். அவனது எலும்புகள் தான் ஆழ்கடலில் விழுந்து சங்குகளாக மாறியதாக சொல்லப்பட்டுள்ளது.

    சங்கில் பலவகைகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை. இதில் இடம்புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். சைவ மற்றும் வைணவ ஆலயங்களில் 108 மற்றும் 1008 என்ற எண்ணிக்கையில் வைத்து செய்யப்படும் சங்கு பூஜை, சப்தாகர்ஷண சக்தி பூஜைகளில் இடம்புரி சங்கையே பயன்படுத்துவார்கள். திருகு சங்குகள் திருஷ்டி போக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் பயன்படும். இடது கையால் பிடிக்கத் தகுந்த அமைப்புடன் இருக்கும் சங்குகளே வலம்புரி சங்குகளாகும். இவை புனிதமும் ஆற்றலும் நிறைந்தவை. லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும். காதில் வைத்துக் கேட்டால் ‘ஓம்’ என சதா நேரமும் ஒலித்த வண்ணம் இருக்கும்.

    பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர். தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல், வலம்புரி சங்குக்கு மட்டுமே உண்டு. வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால், மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க்கிழமை அம்மனை வழிபட்டு வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.

    சலாந்திரன் என்ற அசுரனை அழிப்பதற்காக சிவபெருமான் உருவாக்கிய சுதர்சன சக்கரத்தின் சக்தியை அறிந்து, அது தன்னிடம் இருந்தால் எதிர்காலத்திற்குப் பயன்படும் என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இதையடுத்து அவர், ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, 1000 தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தார். ஒருநாள் ஆயிரம் மலர்களுக்கு ஒன்று குறைவாக இருக்க, தன்னுடைய கண் மலரையே பெயர்த் தெடுத்து ஈசனை அர்ச்சித்தார். இதையடுத்து அவருக்கு சுதர்சன சக்கரம் கிடைத்தது.

    அதன்பிறகு பாற்கடலில் இருந்து வெளிவந்த லட்சுமியின் அழகில் மயங்கி, அவளை திருமணம் செய்து கொண்ட மகாவிஷ்ணு, லட்சுமியோடு வெளிவந்த சங்கு மற்றும் துளசியையும் தனதாக்கிக்கொள்ள விருப்பம் கொண்டார். சங்கில் இருந்து எழும் ‘ஓம்’ எனும் ஒலி, துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது என்பதால், அதனைத் தன் இடது கரத்தில் தரிக்க விரும்பியவர், ஈசனை வழிபட்ட அந்த சங்கை பெற்றார் என்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோவில் தல வரலாறு சொல்கிறது.

    சங்கசூடனால் கடலில் உருவான சங்குகள் தனது சந்ததியினருக்குச் சொந்தமானவை என்று உரிமை கொண்டாடினான் பாஞ்சன் என்ற அசுரன். இதனால் அவனுடன் போரிட்டு வென்றதால், அவரிடம் உள்ள சங்கிற்கு ‘பாஞ்சசன்யம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக மற்றொரு வரலாறும் உள்ளது.

    தலைச்சங்காடு திருத்தலத்திற்கு, தலையுடையர் கோவில்பத்து, தலைச்சங்கானகம், சங்குவனம், சங்காரண்யம் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன. தலைமையான சிவாலயத்தை கொண்டிருந்த காரணத்தாலும், திருமாலின் வேண்டுதலை ஏற்று சிவன் சங்கு வழங்கி அருள்புரிந்ததாலும் (தலபுராணம் சொல்வது), சங்குபூக்கள் பூத்துக் குலுங்கும் வனமாக இருந்தமையாலும் (கல்வெட்டுச் செய்தி), பூம்புகார் துறைமுகம் செழிப்புற்று விளங்கிய காலகட்டத்தில் கடலில் இருந்து எடுக்கப்படும் சங்குகள் விற்பனை செய்யப்படும் இடமாக இவ்வூர் இருந்தமையாலும் (வரலாறு) இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என பல்வேறு ஆதாரங்கள் கூறப்படுகிறது. இருப்பினும் அவை அத்தனையும் பொருந்துவதாகவே உள்ளது.

    திருமாலுக்கு சங்கு வழங்கிய இறைவன் ‘சங்காரண்யேஸ்வரர்’, ‘சங்கவனேஸ்வரர்’, ‘சங்கருணாதேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரநாயகி. தலவிருட்சம் புரசு மரம். தீர்த்தம் சங்கு தீர்த்தம். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 108-வது திருத்தலம் இதுவாகும். மேலும் பஞ்சாரண்ய தலங்களான சுவேதாரண்யம் (திருவெண்காடு), வேதாரண்யம் (திருமறைக்காடு), வில்வாரண்யம் (திருச்சாய்க்காடு), வடவாரண்யம் (திருவாலங்காடு), சங்காரண்யம் (தலைச்சங்காடு) என்னும் ஐந்து தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் விளங்குகிறது.

    கோச்செங்கட்கண் சோழனால் மூன்று பிரகாரங்களுடன் வடக்குநோக்கி கட்டப்பட்ட மாடக்கோவில் இது. ஆனால் தற்போது இவ்வாலயத்தில் இரண்டு பிரகாரங்கள் மட்டுமே உள்ளன. தேரோடிய பிரகாரம் மக்கள் வசிப்பிடமாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. ஆலய வாசலின் முன்னால் தல தீர்த்தமான சங்குதீர்த்தம் இருக்கிறது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இத்தீர்த்தத்தில் நீராடி நெய்தீபம் ஏற்றி இவ்வாலய இறைவனை வழிபடுவதுடன், அம்பாளுக்கு செய்யப்படும் சந்தனக்காப்பில் சிறிதளவு வாங்கி பிரசாதமாக கருதி உண்டும் வயிற்றில் பூசியும் வந்தால் குழந்தையின்மை குறை நீங்கும், தீராத வயிற்றி வலி, தோல் நோய் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.


    கோவில் உட்புறத்தோற்றம்

    ஆலய அமைப்பு :

    கோபுரம் இல்லாத நுழைவு வாசல் மண்டபத்தின் இடதுபக்கத்தில் அதிகாரநந்தி, வலது பக்கத்தில் சுதை சிற்ப முனீஸ்வர் வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், பலி பீடம், நந்தியம்பெருமான் அருள்பாலிக்கின்றனர். விநாயகரின் இருபக்கத்திலும் சங்கநிதி பதுமநிதி இருவரும் இடம்பெற்றுள்ளனர். பிரகாரத்தின் பின்பக்கத்தில் தென்கிழக்கில் விநாயகர், அவருக்கு அடுத்ததாக சீனுவாசப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். இவர் இவ்வூர் பஜனை மடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டவர் ஆவார்.

    ஒருசாரர் சங்கு வேண்டி சிவனை வழிபட்ட பெருமாள் இவரே என்றும், மற்றொரு தரப்பினர் இவ்வாலயத்திற்கு தெற்கே அரைகிலோமீட்டர் துரத்திலுள்ளதும், நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றுமான தலைச்சங்கை நான்மதியபெருமாளே அவர் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை.

    சங்கு வேண்டி தவம் செய்த பெருமாள், ஆலயத்தினுள்ளே சிவனுக்கு வலதுபுறத்தில் உள் பிரகாரத்தில் சிறிய வடிவில் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார். சீனுவாசப் பெருமாள் சன்னிதிக்கு அடுத்து சிங்காரசுப்ரமணியர் வள்ளி-தெய்வானையுடன் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். வடமேற்கில் கஜலட்சுமி சன்னிதியும், பின்னால் மதில்சுவரை ஒட்டி ஜேஷ்டாதேவியின் சன்னிதியும் உள்ளன. பிரகாரத்தின் மேற்கு பகுதியில் சண்டிகேஸ்வரர் தனி சன்னிதியில் அருள்கிறார். அம்பாள் சன்னிதியை ஒட்டி ஆலயத்தின் தீர்த்தக்கிணறு இருக்கிறது.

    அடுத்ததாக ஆலயத்தின் இறைவி சவுந்தரநாயகி கிழக்கு நோக்கி தனி சன்னிதியில் இருந்தவாறு அருள்பாலிக்கிறார். அம்பாள் சன்னிதியில் அவருக்கு வலதுபுறத்தில் புவனத்தைக் கட்டிக்காக்கும் புவனேஸ்வரி தாயாரும், சன்னிதிக்கு வெளியே ஆலய வாசலை ஒட்டி ஸ்ரீலிங்கம், பைரவர் மற்றும் சந்திரன் உள்ளனர்.

    வெளிப்பிரகாரத்தில் இருந்து உள் பிரகாரத்துக்குச் செல்லும் வழி நேராக அமைக்கப்படாமல் மாடக்கோவிலுக்கே உரிய முறையில் பிரகாரத்தின் ஒருபகுதியில் அதாவது கிழக்குப் புறமாக உயரமான படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பால் கொடிமரத்தில் இருந்து வணங்குவோருக்கு இறைகாட்சி கிடைக்காது என்பதால், வழக்கமான வாசல் இடம்பெறும் இடத்தில் பிரதோஷநாயகர்-நாயகி கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரதோஷநாயகர்-நாயகி கற்சிலையாக காட்சியளிக்கும் திருக்கோவில் இது மட்டுமே ஆகும்.

    அநேக ஆலயங்களில் தெற்குமுகம் பார்த்து அருளாசிதரும் ஆடல்வல்லப்பெருமான் இவ்வாலயத்தின் அலங்காரமண்டபத்தில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரில் அவரை வணங்கும் அடியார்களான நால்வர் திருமேனி இடம் பெற்றுள்ளது. மகாமண்டபத்தினுள் கருவறை மையத்திற்கு வடகிழக்கில் அகிலாண்டேஸ்வரரும், கிழக்கில் சங்கு வேண்டி தவம் புரிந்த திருமாலும், சண்டிகேஸ்வரரும், ராமர் மற்றும் சீதாதேவியும், தென்கிழக்கில் வலம்புரி விநாயகரும், தெற்கில் பாலசுப்பிரமணியரும், தென்மேற்கில் தனாகார்ஷண வாயுலிங்கேஸ்வரரும், வடமேற்கில் நீலகண்டேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர்.

    கருவறைச்சுற்றில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, சண்டிகேஸ்வரர், சுரகேஸ்வரர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது பிரகாரத்தின் மையத்தில் அமைந்துள்ள கருவறையில் தண்டி, முண்டி இருவரும் காவல்புரிய, திருமாலுக்கு சங்கு வழங்கி அருள்பாலித்த சங்காரேண்யேஸ்வரர் மூன்றடி உயர சுயம்பு மூர்த்தியாக சங்கு போன்ற உருண்டையான வடிவில் விசாலமான கருவறையில் திருக்காட்சி தருகிறார். இவர் மீது எண்ணெய் அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் மயிர்கால்கள் இருப்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். இக்காட்சி காண்பவர்களை புல்லரிக்கச் செய்கிறது. எங்கும் காணக்கிடைக்காத இவ்வகை லிங்கத்தை ‘ரோமாஞ்சன லிங்கம்’ என்பர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந் திருக்கும்.

    புதுச்சேரி - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சீர் காழிக்கும், ஆக்கூருக்கும் இடையில் தலைச்சங்காடு அமைந்துள்ளது. சீர்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்காலில் இருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. அருகாமை ரெயில் நிலையம் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை. 
    சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது.
    தென்பாண்டிய நாட்டை ஆண்டுவந்த ஸ்ரீவல்லப பாண்டிய மன்னன், மிகச் சிறந்த சிவ பக்தன். அவன் ஒருமுறை தம் படைகளோடு நகரை வலம் வந்தான். அப்போது மாலை வேளை நெருங்கியது. தினமும் சாயரட்சையில் பூஜைசெய்து சிவனை வழிபடும் வழக்கமுள்ள ஸ்ரீவல்லபன், வழிபாட்டுக்காக தாமிருந்த பகுதியில் ஆலயம் ஏதாவது உள்ளதா? என்று தேடினான்.

    நீருக்குள் நீலகண்டன் :

    ஆலயம் ஏதுமின்றிப் போகவே, தவித்த மன்னனுக்கு அந்தப் பகுதியில் இருந்த மக்கள் உதவ முன்வந்தனர். அங்கிருந்த குளத்து மண்ணில் சிவலிங்கம் உருவாக்க முயன்றனர். இதற்காக, களிமண் எடுக்க குளத்துக்குள் மூழ்கியபோது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த கல் விக்கிரகத்தை அரசனிடம் வழங்கினர். அதனைக் கொண்டு சந்தியா கால சிவ பூஜையை நிறைவுசெய்த ஸ்ரீவல்லபன், மனநிறைவுடன் திரும்பிச்சென்றான்.

    அரண்மனைக்குத் திரும்பினாலும், அலுவல் நினைப்பைவிட அரனின் நினைப்பே அந்த அரசனின் சிந்தையில் மேலோங்கியிருந்தது. மன்னனின் மனமுருகிய பக்தியில் நெஞ்சம் நெகிழ்ந்தார் எம்பெருமான். மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், ‘குளத்தில் கண்டெடுத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் அமைத்து வழிபடு’ என்று கூறி மறைந்தார்.

    ஈசனின் கருணைக்கு தாம் ஆட்பட்டு விட்டதை எண்ணி பூரிப்படைந்த ஸ்ரீவல்லபன், மறுநாளே சிவலிங்கத்தைக் கண்டெடுத்த பகுதிக்குச் சென்று, குளத்தில் கிடைத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். ஈசன் விருப்பப்படியே கோவில் அமைத்து அளவிலா ஆனந்தம் கொண்டான்.

    ஈசனைக் குளிர்வித்த பசுக்கள் :

    காலச்சுழற்சியில் இவ்வாலயம் கவனிப்பார் இன்றி, மண்ணுக்குள் புதையுண்டது. எனினும் ஈசனின் திருவிளையாடலால் 600 ஆண்டுகளுக்கு முன்பு வெளியுலகுக்குத் தெரியவந்தது. அவ்வூரில் இருந்த பசு வளர்த்த சிலர், மேய்ச்சலுக்குச் சென்ற தங்களது பசுக்கள் பால் தராதது கண்டு வருந்தினர். பால் தராததற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்ட அவர்கள், ஒருநாள் மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்களைப் பின் தொடர்ந்தனர்.

    அப்போது மேய்ச்சலை முடித்த பசுக்கள் அனைத்தும் ஓரிடத்தில் கூடிநின்று, தானாகவே பாலைச் சொரிந்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். பால் சொரிந்த இடத்தைப் பார்த்தபோது, அதில் ஸ்ரீவல்லப மன்னன் பூஜித்த லிங்கம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஊர்மக்களை ஒன்றுதிரட்டி புதையுண்ட கோவிலை மீட்டுருவாக்கம் செய்து, வழிபாட்டுக்குக் கொண்டு வந்தனர்.

    சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இவ்வாலய நாயகன் கயிலாசநாதர் எனவும், நாயகி ஆவுடையம்மாள் எனவும் அழைக்கப் பெறுகின்றனர். பசு மாட்டின் குளம்படித் தடம் லிங்கத்தின்மீது உள்ளதைக் காணலாம்.


    ஆவுடையம்மாள், இரட்டை பைரவர், கயிலாசநாதர்

    ஆலய அமைப்பு :

    சிவ- விஷ்ணு ஆலயமாக விளங்கும் இத்திருக்கோவிலில், கயிலாசநாதருக்குப் பின்புறமுள்ள சன்னிதியில் கோமளவல்லி மற்றும் குமுதவல்லித் தாயார்கள் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இந்தப் பெருமாளை வழிபட்டால் குடும்பப் பிரச்சினைகள் தீரும். பூந்தி, லட்டு, கற்கண்டு படையலிட்டு, துளசி மாலை சாத்தி, நெய் தீபமேற்றி இந்தப் பெருமாளை வழிபடுவது சிறப்பு.

    வேளாண்மைப் பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு ஆலயத்தில் வழிபாடு செய்தாலும், ஆயிரம் மடங்கு பலன் கிட்டும் என்பது ஐதீகம். அதன்படி வயல்கள் சூழ அமைந்துள்ள இந்த சிவனை வழிபாடு செய்வோருக்கு செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது திண்ணம். உடலும் ஆரோக்கியம் பெறும். ஆவுடையம்மாளை ஆடித் தபசுக் காலத்தில் வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது; குழந்தை வரமும் கிடைக்கிறது. இங்கு தட்சிணாமூர்த்தி சிரசில் லிங்கம் அமைத்திருப்பது விசித்திரமான காட்சி.

    இரட்டை பைரவர் :

    நவக்கிரகங்கள் தத்தமது வாகனத்துடன் இங்கு வீற்றிருப்பது சிறப்பம்சம். இதையடுத்து ஒரே சன்னிதியில் இரட்டை பைரவர்கள் வீற்றிருப்பது அபூர்வமானது. இவர் களுள் ஒருவருக்கு வாகனம் இல்லை. ஒரு பைரவர் உயரமானவர், மற்றொருவர் உயரம் குறைவானவர். இந்த இரட்டை பைரவர்களைத் தேய்பிறை அஷ்டமி திதியில் மாலை வேளையில் வழிபாடு செய்தால், செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

    தொழில், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் ஐந்து தேய்பிறை அஷ்டமி திதியில், 60 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் இட்டு, நல்லெண்ணெய்யில் இரண்டு தீபங்கள் ஏற்றி, தயிர்ச் சாதம் படைத்து இரட்டை பைரவரை வழிபட நஷ்டம் நீங்கி, பெருத்த லாபம் ஏற்படும். புதிதாக தொழில், வியாபாரம் தொடங்குபவர்களும் இங்கு வந்து பைரவரை வழிபட்டு பயன் பெறலாம்.

    இந்த ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாணம், கார்த்திகை மகாதீபம், மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும். இவ்வாலய தல விருட்சம் வன்னி மரம், தீர்த்தம் வருண தீர்த்தம். ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    பெயர்க் காரணம் :

    தம் முன்னோர்களுக்கு ஈஸ்வரம் அமைக்கும் மகாபாக்கியம் கிடைத்ததை பெரும்பேறாகக் கருதிய ஸ்ரீவல்லப பாண்டியனின் வழித்தோன்றலான மாறவர்மன் சுந்தரபாண்டியன், இப்பேறு கிடைக்க மக்கள் செய்த உதவிக்குப் பிரதிபலனாக, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியிலிருந்து அந்தப் பகுதி மக்களுக்கு விலக்கு அளித்தான். இதனால் அப்பகுதி ‘மாறன் தாய நல்லூர்’ என்று அழைக்கப்பட்டது. ‘மாறன்’ என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். ‘தாயம்’ என்பதற்கு ‘உரிமை’ என்று பொருள். பாண்டிய மன்னன் தம் வரி உரிமையை மக்களுக்கு விட்டுக்கொடுத்த நல்ல ஊர் என்னும் பொருள்படும் படியாக அப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி, தற்போது ‘மாறாந்தை’ என அழைக்கப்படுகிறது.

    12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் கல்வெட்டில், இவ்வூர் ‘விக்கிரம பாண்டியபுரம்’ என்றும், இறைவன் ‘கயிலாசமுடைய நாயனார்’ என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. ஸ்ரீவல்லப பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய மன்னர்கள் இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ள விவரங்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் 15 கல்வெட்டுகள் உள்ளன.

    அமைவிடம் :


    திருநெல்வேலியிலிருந்து மேற்காக தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்காக 38 கி.மீ. தொலைவிலும், ஆலங்குளத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் மாறாந்தை உள்ளது. மாறாந்தை பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. அருகில் கோவில் அமைந்துள்ளது. ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் கவுண்டன்ய மகாநதியின் கரை ஓரத்தில் கெங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் கவுண்டன்ய மகாநதியின் கரை ஓரத்தில் கெங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்கி நல்லாசி புரிகிறாள். மிகவும் புராதானம் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 1-ந் தேதி கெங்கைஅம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு அருளாசி பெற்று செல்கின்றனர்.

    கெங்கை அம்மன் வரலாறு :

    முன்னொரு காலத்தில் ஜமதக்கினி என்கிற முனிவர் தனது மனைவி ரேணுகாதேவி (கெங்கைஅம்மன்) மற்றும் மகன்களுடன் வாழ்ந்து வந்தார். ரேணுகாதேவி தினமும் தாமரை குளத்தில் நீராட செல்வது வழக்கம். அவ்வாறு நீராட செல்லும்போது மண்ணால் குடம் செய்து, நீராடிவிட்டு திரும்பி வரும்போது மண் குடத்தில் தண்ணீர் எடுத்து வருவார். அதேபோல் ஒருநாள் ரேணுகாதேவி தாமரை குளத்திற்கு சென்று நீராடி உள்ளார். அப்போது வான்வழியே சென்ற கந்தர்வனின் நிழல் குளத்தில் தெரிந்துள்ளது. அந்த கந்தர்வன் அழகில் சில நொடிகள் ரேணுகாதேவி மயங்கி உள்ளார்.

    இதை ஞான திருஷ்டி மூலம் உணர்ந்த ஜமதக்கினி முனிவர், தனது மனைவி கற்பு நெறியை தவறி விட்டதாக கடும் கோபம் கொண்டார். இந்த குற்றத்திற்கு தண்டனையாக தனது மகன் பரசுராமனிடம் உனது தாயின் தலையை வெட்டி கொண்டு வா என ஆணையிட்டார். தந்தை சொல்லை வேத வாக்காக எடுத்துக் கொண்ட பரசுராமன் ஏன், எதற்கு என கேள்வி கேட்காமல் தனது தாயின் தலையை வெட்ட புறப்பட்டார்.

    தனது மகனே தன் தலையை வெட்ட வருவதை கண்ட ரேணுகாதேவி மகனால் வெட்டப்பட்டு இறப்பதை விட தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதே மேல் என முடிவு செய்து ஓடத் தொடங்கினாள். அப்போது சலவை தொழிலாளி ஒருவரது வீட்டில் மறைந்து கொண்டாள். அங்கும் பரசுராமன் வரவே கடலில் வீழ்ந்து இறப்பதே மேல் என முடிவு செய்து கடலை நோக்கி ஓடினாள். தொடர்ந்து ரேணுகாதேவியை பரசுராமன் விரட்டி வந்தார்.

    அப்போது ரேணுகாதேவி வெட்டியான் ஒருவரது வீட்டில் பதுங்கி கொண்டாள். இதனை அறிந்த பரசுராமன் அங்குவந்து தனது தாயின் தலையை வெட்ட முயன்றார். அதனை தடுத்த வெட்டியானின் மனைவி சண்டாளச்சியின் தலையை வெட்டினார். பின்னர் தனது தாயின் தலையை வெட்டினார். பின்பு தனது தந்தையிடம் சென்ற பரசுராமன், உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் என கூறினார். அப்போது ஜமதக்கினி முனிவர் தனது மகனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். அதனை தருகிறேன் என கூறினார்.

    உடனே பரசுராமன் தனது தாயை உயிர்பித்து தருமாறு வேண்டினார். அப்போது ஜமதக்கினி முனிவர் ஒரு பாத்திரத்தில் புனித நீரை கொடுத்து இந்த தண்ணீரை கொண்டு வெட்டப்பட்டு கிடக்கும் உடலுடன் தலையை சேர்த்து வைத்து உயிர்பித்து கொள் என்றார். இதனையடுத்து மகிழ்ச்சியில் திளைத்த பரசுராமன், வேகமாக சென்று உயிர்பிக்கும் போது அவசரத்தில் சண்டாளச்சியின் உடலில் ரேணுகாதேவியின் தலையையும், ரேணுகாதேவியின் உடலில் சண்டாளச்சியின் தலையையும் வைத்து புனிதநீரை தெளித்தார். இதன்பின்னர் ரேணுகாதேவியும், சண்டாளச்சியும் உயிர் பெற்றனர்.

    இந்த புராணத்தை கொண்டுதான் குடியாத்தம் கெங்கைஅம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 1-ந் தேதி சிரசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது கெங்கைஅம்மன் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கெங்கையம்மன் கோவிலில் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சியின் உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.

    தனது மகனால் வெட்டப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற கெங்கைஅம்மன் பிற்காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக இருந்து காத்து வருவதோடு, அவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்து அருள்புரிந்து வருகிறார். 
    ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்த வைணவத் தலம் பூரி ஜெகந்நாதர் ஆலயம் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்த வைணவத் தலம் பூரி ஜெகந்நாதர் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை தேவி ஆகிய மூவரும் ஒரே கருவறையில் இருந்து அருள்பாலிக்கின்றனர். இவர்கள் திருமேனி மரத்தால் ஆனது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த மூன்று திருமேனிகளும் உரிய சடங்குகளுடன் புதியதாக மரத்தில் வடிக்கப்பட்டு ஆலயத்தில் வைக்கப்படும். இந்த ஆலயத்தில் பலச் சிறப்புகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

    இந்த ஆலயத்தின் கொடி, காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

    கோவில் இருக்கும் பூரி என்ற ஊரில் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும், கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.

    பொதுவாக காற்றானது, காலையில் இருந்து மாலை வரையான நேரங்களில், கடலில் இருந்து நிலத்தை நோக்கியும், மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.


    ஜெகந்நாதர், சுபத்திரை, பாலபத்திரர்

    இந்தக் கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழல், பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்குத் தெரிவதில்லை.

    ஆலயத்தின் மேல் பகுதியில் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.

    இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு, வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி, இருபது லட்சமானாலும் சரி, சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணாவதும் இல்லை என்கிறார்கள்.

    இந்த ஆலய சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு, விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள். அப்படி சமைக்கும் போது, அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.

    சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்புறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது, கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்குக் கேட்காது. ஆனால், அதே சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது, கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்குக் கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும். 
    ×