என் மலர்tooltip icon

    கோவில்கள்

    தமிழ் கடவுளான முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக இருந்து அருளும் தலமாகக் கேரள மாநிலம், கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.
    தமிழ் கடவுளான முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக இருந்து அருளும் தலமாகக் கேரள மாநிலம், கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.

    தல வரலாறு :

    ராவணனிடம் இருந்து சீதையை மீட்டுக் கொண்டு வரும் வழியில், தன்னைச் சந்திப்பதாகச் சொல்லிச் சென்ற ராமனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார், பிரம்மச்சாரி யான கவுண முனிவர். ஆனால், ராமன் சீதையை மீட்டுக் கொண்டு திரும்பிய போது, அவரைச் சந்திக்காமலேயே சென்று விட்டாராம். ராமன் தன்னை மறந்து ஊர் திரும்பிச் சென்றதற்கு, அவரது இல்லற வாழ்க்கையே காரணமென்று நினைத்த கவுண முனிவர், ராமனிடம் தன்னுடைய வேண்டுதல் நிறைவேறாத நிலையில், தான் அதிகம் விரும்பும் கடவுளான முருகப்பெருமானிடம் தன் வேண்டுதலை முன்வைப்பதென்று முடிவு செய்தார்.

    தன் எண்ணப்படி முருகப்பெருமானுக்கு கோவில் அமைத்த கவுண முனிவரின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. ‘ஒரு மனைவியைக் கொண்டிருக்கும் ராமனே இல்லற வாழ்க்கைக்கு இடையே நம்மை மறந்து விட்டாரே, இரண்டு மனைவிகளைக் கொண்ட முருகப்பெருமான் நமது வேண்டுதலைக் கவனிப்பாரோ, மாட்டாரோ’ என்று நினைத்தார்.

    தன் மனதில் எழுந்த சந்தேகத்தின் காரணமாக, கவுண முனிவர் தான் வடித்த முருகப்பெருமானின் சிலையை பிரம்மச்சாரியாக வடித்து, கோவிலில் நிறுவி விட்டார் என்கிறது தல வரலாறு. இதனால் இத்தலத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் ‘பிரம்மச்சாரி முருகன்’ என்றே அழைக்கப்படுகிறார்.

    கோவில் அமைப்பு :

    இந்த ஆலயத்தில் இருக்கும் முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இவர் ‘சுப்பிரமணியசுவாமி’, ‘கிடங்கூரப்பன்’ என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறார். முருகன் சன்னிதிக்கு எதிரே மேற்குப் பகுதி யில் மயில் உருவத்துடன் கூடிய உயரமான கொடி மரம் மற்றும் பலிபீடம் அமைந்திருக்கிறது. கேரளக் கோவில்களில், இங்குள்ள கொடிமரமே மிகுந்த உயரமானது என்கின்றனர். கோவில் வளாகத்தினுள் மகாவிஷ்ணு, சாஸ்தா சன்னிதிகளும் அமைந்துள்ளன. இங்குள்ள கூத்தம் பலத்தில் புவனேஸ்வரி அம்மன் இருந்து அருள் செய்கிறார் என்கிற நம்பிக்கையும் உள்ளது.

    கூத்தம்பலம்:

    இந்தக் கோவிலில் மருத்துவக் குணங்கள் அதிக முடைய ‘குறுந்தொட்டி’ எனப்படும் மரத்தைக் கொண்டு கூத்தம்பலம் என்ற மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் ராமாயணக் காட்சிகளும், பரத முனிவரின் நாட்டிய சாஸ்திர வடிவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. திருவிழாக் காலங்களில் இந்த மண்டபத்தில் வைத்து, பழமையான ‘கூடியாட்டம்’ எனும் கூத்து நடத்தப்படுகிறது. இக்கூத்தில் முருகப்பெருமானைப் பற்றி நடத்தப்படும், ‘பிரம்மச்சாரி கூத்து’ மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது.

    வழிபாடுகள் :

    இந்தக் கோவிலில் தினசரி காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ‘திரு உற்சவம்’ என்று அழைக்கப்படும் இந்த ஆண்டுத் திருவிழா, 10 நாட்கள் வரை வெகு சிறப்பாக நடைபெறும். இவ்விழா நாட்களில் மலையாள மரபு வழி, கலை நிகழ்ச்சிகள் பலவும் நடத்தப்படுகின்றன.



    அதே போல மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதத்தில் திருக்கார்த்திகைத் திருவிழாவும், மகரம் (தை) மாதத்தில் தைப்பூசத் திரு விழாவும் சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

    இவை தவிர இத்தலத்தில் உள்ள மகாவிஷ்ணு சன்னிதியில் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதத்தில் வரும் அஷ்டமி மற்றும் ரோகிணி நட்சத்திர நாளில் ‘கிருஷ்ண ஜெயந்தி விழா’ கொண்டாடப்படுகிறது. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் இங்குள்ள சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை செய்யப்படுகிறது.

    சிங்கம் (ஆவணி) மாதத்தில் உத்திராடம் நட்சத்திர நாளில் ‘புத்தரிசி நாள் விழா’வும், துர்காஷ்டமி, மகாநவமி மற்றும் விஜயதசமி விழாக்களும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன. இதில் விஜயதசமி நாளில் கல்விப் பயிலப் போகும் பிள்ளைகளுக்கு, ‘எழுத்து நிறுத்து விழா’ நடக்கிறது.

    வழிபாட்டுப் பலன்கள் :

    உடல்நலம் வேண்டுபவர்கள் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், திருமணத்தடை நீங்க வேண்டுபவர்கள் சுயம்வர அர்ச்சனை செய்தும் வேண்டிய பலன்களைப் பெறலாம். இங்குள்ள விஷ்ணு சன்னிதியில் பக்தர்கள் பால்பாயாசம், அப்பம் படைத்து விஷ்ணுவை வணங்கி வருகின்றனர்.

    இங்குள்ள கூத்தம்பலத்தில் இருந்து அருளும் புவனேஷ்வரி அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குருதி பூஜை என்னும் சிறப்புப் பூஜை நடத்தப்படுகிறது. வழக்குகளில் வெற்றி பெறவும், தொழில் போட்டிகளைச் சமாளிக்கவும், எதிரிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் விரும்புபவர்கள் இந்தப் பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழி பட்டுச் செல்கின்றனர்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கோட்டயத்தில் இருந்து எட்டுமானூர் வழியாக 14 கிலோமீட்டர் தூரம் பயணித்தோ அல்லது பாலா எனும் ஊரிலிருந்து 9 கிலோமீட்டர் தூரம் பயணித்தோ கூட்டாப்புரம் எனும் கிடங்கூர் சந்திப்பு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்று இக்கோவிலை அடையலாம்.

    கோட்டயத்தில் இருந்து மன்னார்காடு வழியாக 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆயர்குன்னம் என்னும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தும் இக்கோவிலை அடையலாம். இக்கோவிலுக்குக் கோட்டயம், பாலா ஆகிய இரு ஊர்களில் இருந்தும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
    தமிழகத்தில் அரவானுக்கு பல கோவில்கள் இருந்தாலும், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் முக்கியமானதாக கருதப்படுவது குருசேத்திரப் போர். பாண்டவர் களுக்கும், கவுரவர்களுக்கும் நடைபெற்ற இந்தப் போரில், பாண்டவர்கள் வெற்றிபெறுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவன், அரவான் என்று மகாபாரதம் சொல்கிறது.

    சரி.. யார் இந்த அரவான்?

    வில்வித்தையில் சிறந்தவனான அர்ச்சுனனுக்கும், நாகக் கன்னி ஒருத்திக்கும் பிறந்தவன் தான் அரவான். அவன் சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். குருச்சேத்திரப் போர் நடைபெறும் களத்தில், இந்த அரவானை பலிகொடுத்துதான் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள் என்கிறது புராணம்.

    மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பலவிதமான யுக்திகளை, கிருஷ்ண பகவான் கையாண்டார். அதில் ஒன்றாகத்தான் பாண்டவர்களில் ஒருவனும், ஜோதிடத்தில் மேதையுமான சகாதேவனிடம் ‘பாண்டவர்கள் நிச்சயமாக வெற்றிபெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?’ என்று கிருஷ்ணன் கேட்டார்.

    அப்போது ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து பார்த்த சகா தேவன், போர் தொடங்குவதற்கு உகந்த நாளை குறித்துக் கொடுத்ததுடன், சாமுத்திரிகா லட்சணம் கொண்ட ஒரு இளைஞனை களப்பலி கொடுத்தால் வெற்றி உறுதி என்றும் கூறினான்.

    சகாதேவன் குறிப்பிட்ட அந்த லட்சணம் பொருந்தியவர்கள் மூன்று பேரே. அவர்கள் கிருஷ்ணர், அர்ச்சுனன், அரவான். அர்ச்சுனன் இல்லையேல் போர் இல்லை. கண்ணன் இல்லையேல் உலகமே இல்லை. அதனால் எஞ்சியிருக்கும் அரவானைப் போய் சந்தித்தார் கிருஷ்ணன்.

    அவனிடம் பாண்டவர்களின் நிலையை சொன்னார். தான் களப்பலி ஆவதால், நீதி நிலைக்கும், தர்மம் வெல்லும், போரில் பாண்டவர்கள் வெல்வார்கள் என்பதால், கிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டான் அரவான்.

    அதே நேரத்தில் இரண்டு நிபந்தனைகளையும் விதித்தான். ‘கிருஷ்ணரே! நான் திருமணமாகாதவன், தாம்பத்யத்தை அறியாதவன். எனவே என்னை யாராவது ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் ஓரிரவாவது நான் குடும்பம் நடத்த வேண்டும். அடுத்தது... நான் களப்பலி ஆனதும், வெட்டுப்பட்ட என் தலைக்குப் போர் முடியும் வரை, போரில் நடைபெறும் காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டால், நான் நாளைக்கே களத்திற்கு வந்து பலியாகத் தயார்’ என்றான்.

    இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றுவதில் எந்த தடையும் இல்லை. ஆனால் போருக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், அரவானுக்கு எப்படி திருமணம் நடத்துவது? அப்படியே திருமணம் செய்து வைத்தாலும் கூட, இவனின் நிலையை அறிந்த பெண் யார்தான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாள்.

    ஆனால் கிருஷ்ணன் அதுபற்றி யோசிக்கவே இல்லை. உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தவர், அரவானைப் பார்த்து, ‘உன்னுடைய ஆசைகள் இரண்டும் நிறைவேறும். உன்னைத்தேடி இன்று இரவு ஒரு அழகிய பெண் வருவாள். நீ அவளை கந்தர்வ திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியோடு இரு’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.



    மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்டது. அழகிய பெண்ணுக்காக காத்திருந்தான் அரவான். அவன் எதிர்பார்த்தது போலவே.. கிருஷ்ணர் சொன்னது போலவே ஒரு அழகியப் பெண் அங்கு வந்து சேர்ந்தாள். அவளை ஆசையோடு நெருங்கிய அரவான், முழுமை அடையப்போகும் சந்திரனின் சாட்சியாக அவளை கந்தர்வ மணம் புரிந்துகொண்டு, அவளோடு களிப்புற்று இருந்தான்.

    கிருஷ்ணர் தன்னுடைய மாய சக்தியால் ஒரு பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும், அவரே பெண் உருவெடுத்து சென்றார் என்றும் இருவேறு கதைகள் கூறப்பட்டாலும், அரவானின் விருப்பம் நிறைவேறி அவன் மகிழ்ச்சியடைந்தான். மறுநாள் காலை தன் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நீராடி தூய ஆடை அணிந்து களப்பலிக்குச் சென்றான். முறைப்படி அரவானின் களப்பலி முடிந்தது. போர் ஆரம்பமாகி, 18 நாட்கள் நடைபெற்றது. அந்த போரை முழுவதும் அரவானின் தலை உயிர்ப்புடன் இருந்து கண்டுகளித்தது.

    இந்த அரவானின் களப்பலியை நினைவூட்டும் விதமாக, ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமியை ஒட்டி விழுப்புரம் அருகில் உள்ள கூவாகம் கிராமத்தில் இருக்கும் கூத்தாண்டவர் ஆலயத்தில் சித்திரைப் பெருவிழா நடைபெறும். தமிழகத்தில் அரவானுக்கு பல கோவில்கள் இருந்தாலும், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள திருநங்கைகள் அனைவரும் இந்த ஆலயத்தில் வந்து குவிவார்கள்.

    மகாபாரதப் போரில் களப்பலியான அரவானைத் தங்களின் கணவனாக நினைக்கும் திருநங்கைகள், அரவானை அழகிய பெண்ணாக மாறி மணந்தது கண்ணன்தான் என்றும், தாங்கள் கண்ணனின் வாரிசுகள் என்றும் நம்புகிறார்கள். இதனால் சித்திரைப் பெருவிழாவில் குவியும் திருநங்கைகளின் எண்ணிக்கை ஏராளம்.

    பவுர்ணமிக்கு முதல் நாள் கூத்தாண்டவர் கோவில் முன்பு, திருநங்கைகள் அனைவரும் தங்களை மணப்பெண் போல் அலங்கரித்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கு அரவான் சார்பாக, கோவில் பூசாரி தாலியைக் கட்டுவார். திருமணமான மகிழ்ச்சியில் அன்று இரவு திருநங்கைகளின் ஆட்டம் பாட்டம் மகிழ்வுடன் நடைபெறும். மறுநாள் தேர்த் திருவிழா மற்றும் அரவான் களப்பலி போன்றவை நடை பெறும். அரவான் களப்பலியானதும், முதல் நாள் கட்டிய தாலியை அறுத்தெறிந்து விட்டு, வெள்ளைப் புடவை கட்டி, திருநங்கைகள் அனைவரும் ஒப்பாரிவைத்து சோகமாகக் காணப்படுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான அரவான் கண் திறத்தல் நிகழ்ச்சி மே 1-ந் தேதியும், அன்றைய தினமே அரவான் களப்பலி நிகழ்வும் நடைபெற உள்ளது.

    அரவானின் ஆலயங்கள்


    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் முதல் கோயம்புத்தூர் வரை உள்ள பகுதிகளில் மட்டும் கூத்தாண்டவர் கோவில்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முப்பத்திரண்டு கோவில்கள் பிரபலமானவை, அதில் முதன்மையான இடத்தை கூவாகம் பெறுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர் (நீலிக்கோணாம் பாளையம்), கஞ்சப்பள்ளி, குமாரமங்கலம், குறிச்சி, குட்டாம்பட்டி, துடியலூர்.

    கடலூர் மாவட்டத்தில் கொத்தட்டை, புவனகிரி, தேவனாம்பட்டணம், திருவேட்களம். ஈரோடு மாவட்டத்தில் களரிகியம், சேலம் மாவட்டத்தில் பழைய சூரமங்கலம், பனை மடல், பேளூர், தெடாவூர். திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாப்பட்டு, கீழ்வானம்பட்டி, தேவனூர், வேதாந்தவதி, வீரனேந்தல். வேலூர் மாவட்டத்தில் சோழவரம், ஒடுகத்தூர், புலிமேடு, புதூர், வெள்ளையம்பட்டி, வரகூர். விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம், கொணலூர், பெண்ணை வளம், தைலாபுரம். புதுச்சேரி மாநிலத்தில் மடுகரை, பிள்ளையார்குப்பம் ஆகிய இடங்களில் அரவானுக்கு ஆலயங்கள் உள்ளன.
    தென் தமிழகத்தில் தலை சிறந்த சிவ தலங்களில் பெருமை வாய்ந்தது, திருநெல்வேலியில் உள்ள காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவில்.
    27-4-2018 கோவில் கும்பாபிஷேகம்

    தென் தமிழகத்தில் தலை சிறந்த சிவ தலங்களில் பெருமை வாய்ந்தது, திருநெல்வேலியில் உள்ள காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவில். சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை யும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நான்மறைகளும், சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பின. அதற்காக நான்கு வேதங்களும் சிவபெருமானை வேண்டின. எனவே, வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க, இறைவன் லிங்கமாய் அமர்ந்தார் என்பது தலபுராணம் ஆகும்.

    ராமக்கோன் என்பவர் தினமும் தற்போது நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள பகுதியில் வளர்ந்திருந்த, மூங்கில் காடு வழியாக மணப்படைவீடு மன்னருக்கு பால் கொண்டு செல்வது வழக்கம். ஒரு முறை பால்குடம் சுமந்து சென்ற ராமக்கோன் காலில் மூங்கில் இடறியது. அதில் அவர் கொண்டு வந்த பால் ஓரிடத்தில் கொட்டியது. பால் முழுவதும் சிந்தும் முன்பாக அதைக் கொண்டுபோய் மன்னரிடம் சேர்த்தார். ஆனால் இந்த நிகழ்வு தொடர்கதையானது. தினமும் குறிப்பிட்ட இடத்தில் மூங்கில் இடறி பால் சிந்துவது வாடிக்கையானது.

    ஒருநாள் ராமக்கோனிடம் தினமும் பால் குறைவாக கொண்டுவருவது குறித்து மன்னர் கேட்டார். உடனே ராமக்கோன் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து ராமக்கோனுடன் மூங்கில் வனத்திற்குச் சென்ற மன்னர், குறிப்பிட்ட மூங்கிலை வெட்டச் சொன்னார். அப்போது மறைந்திருந்த சிறிய அளவிலான சுயம்பு மூர்த்தி வெளிப்பட்டது. மன்னருக்கு வேணுவனநாதராக காட்சி தந்த இறைவன், சிறிய உருவத்தில் இருந்து பலமுறை வளர்ந்து காட்சி தந்தார். உடனே மன்னர், அதே இடத்தில் ஆலயம் எழுப்புவதாக வேண்டினான். இதையடுத்து சுயம்பு மூர்த்தி மீண்டும் சிறியதாக மாறியது என்கிறது தல வரலாறு. நெல்லையப்பர் ஆலயத்தில் சுவாமி சன்னிதிக்கு பின்புறம் இன்றும் மூங்கில், தல விருட்சமாக நிற்பதைப் பார்க்கலாம்.

    சரி.. வேணுவனநாதராக இருந்தவர், எப்படி நெல்லையப்பராக பெயர்மாற்றம் கண்டார் என்பதை அறிய வேண்டாமா? வாருங்கள் அந்தக் கதையைப் பார்க்கலாம்.

    இத்தல இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்காக, வேதபட்டர் என்ற அந்தணர், நெல்மணிகளை தர்மம் பெற்று வந்தார். தான் தர்மம் பெற்று வந்த நெல்மணிகளை ஓரிடத்தில் வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது திடீரென பெரும் மழை பெய்யத் தொடங்கியது. நெல்மணி நினைவுக்கு வந்த வேதபட்டர், ‘ஐயகோ! இறைவனுக்காக நான் தர்மம் பெற்று சேகரித்து வைத்திருந்த நெல்மணிகள், மழை வெள்ளத்தில் அடித்துச் சென்று விட்டால், எப்படி இறைவனுக்கு நிவேதனம் செய்வது?’ என்று நினைத்து வருந்தியபடி, இறைவனிடம் வேண்டினார். பின்னர் அங்கிருந்து அவசரம் அவசரமாக நெல்மணிகள் இருந்த இடத்திற்கு வந்தார். அங்கு நெல்மணிகள் இருந்த இடத்தில் மட்டும் வெயில் அடித்தது. அதனை சுற்றியப் பகுதிகளில் மழை நீர் வேலி போல தேங்கி நின்றது. இதையடுத்து இத்தல இறைவன் ‘நெல்வேலி நாதர்’ ‘நெல்லையப்பர்’ என்றும், இத்தலம் ‘நெல்வேலி’ என்றும் அழைக்கப்படலானது.



    இந்த நெல்லையப்பர் ஆலயம் பல அற்புதங்கள் நிகழ்ந்த தலமாக விளங்குகிறது. சுவேத கேது என்ற அரசன் நெல்லையம்பதியை ஆண்டபடி, அனுதினமும் நெல்லையப்பரை பூஜித்து வந்தான். வாரிசு இல்லாத நிலையில் அவனது இறுதி காலம் நெருங்கியது. இதையடுத்து இறைவனின் ஆலயத்தில் அமர்ந்து சிவபூஜை செய்துகொண்டிருந்தான். அப்போது எமன் வந்து அரசனின் மீது பாசக்கயிற்றை வீச, அது அரசனோடு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட இறைவன், எமனை காலால் எட்டி உதைத்தார். பின்னர் அரசனுக்கு, அவன் விருப்பப்படும்போது முக்தி அடைய அருள்பாலித்தார். நெல்லையம்பதியில் நடந்த இந்த நிகழ்வை, ‘கூற்றுதைத்த நெல்வேலி..’ என்கிற பெரிய புராண பாடல் வரிகளில் சேக்கிழார் பெருமான் பதிவு செய்துள்ளார்.

    இந்த ஆலயத்தின் முதலாம் திருச்சுற்றில், சுப்பிரமணியர் சன்னிதிக்கு அருகில் இந்த காலசம்ஹார மூர்த்தியின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

    திருக்கடையூரில் இறைவன் நிகழ்த்தியது, பிறக்கும் போதே இறப்பின் நாளை தெரிந்து கொண்டு பிறந்த இளைஞனுக்காக எமனை எட்டி உதைத்த திருவிளையாடல். ஆனால் இந்த தலத்தில் இறைவன் நிகழ்த்தியது, முதுமை அடைந்து உரிய காலத்தில் மரணம் சம்பவிக்க இருந்த பக்தனை, மரண பயத்தில் இருந்து விடுவித்து முக்தி அளித்த திருவிளையாடல். எனவே திருக்கடையூரை காட்டிலும், அன்னை அறம் வளர்த்தவளாகி, அரனை மணந்து, அகத்திய முனிவருக்கு திருக்கல்யாண கோலம் காட்டிய இந்த திருத்தலத்தில், திருமணம், சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் மற்றும் மிருத்யுஞ்சய மகா வேள்வி ஆகியவை செய்வது சாலச்சிறந்தது என்கிறார்கள்.

    மேலும் இந்த ஆலயத்தில் கணவன்-மனைவி ஒற்றுமைக்கும், வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக, தினசரி நிகழ்வு ஒன்று நடக்கிறது. அதாவது இத்தல இறைவனான நெல்லையப்பர், தினமும் அப்பாளுக்கு 6 கால பூஜையின் போதும் பூ மற்றும் புடவைகளை கொடுப்பார். அதே போல காந்திமதி அம்பாள், சுவாமிக்கு நெய்வேத்தியம் (நிவேதனம்) வழங்குகிறார்.

    சுவாமி நெல்லையப்பர் சன்னிதியில் இரட்டை கருவறைகள் அமைந்துள்ளன. அதில் பிரதான கருவறையில் நெல்லையப்பரும், அருகில் உள்ள மற்றொரு கருவறையில் நெல்லை கோவிந்தனும் உள்ளனர். இதில் நெல்லை கோவிந்தன் மார்பில் சிவலிங்கம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

    தினமும் 6 கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் வசந்த மகோற்சவம் (16 நாட்கள்), வைகாசியில் விசாகத் திருநாள், ஆனியில் பெருந்தேர்த் திருவிழா (10 நாட்கள்), ஆடியில் பூரத்திருவிழா (10 நாட்கள்), ஆவணியில் மூலத் திருவிழா (11 நாட்கள்), புரட்டாசியில் நவராத்திரி விழா (15 நாட்கள்), ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம் (15 நாட்கள்), கார்த்திகையில் கார்த்திகை தீபம், சோமவார திருநாள், மார் கழியில் திருவாதிரை விழா (10 நாட்கள்), தை மாதத்தில் பூசத் திருவிழா (10 நாட்கள்), மாசியில் மகா சிவராத்திரி, பங்குனியில் உத்திரத் திருநாள் (10 நாட்கள்) வெகு விமரிசையாக நடைபெறும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக 24-ந் தேதி (இன்று) யாகசாலை பூஜை யுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    தாமிரசபை


    நெல்லையப்பர் கோவில் வரலாற்றில், தாமிர சபை நடனம் குறிப்பிடத்தக்க ஒன்று. சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் ஆனந்த தாண்டவமும், திருவாலங்காடு ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவமும், மதுரை வெள்ளியம்பலத்தில் சுந்தர தாண்டவமும், குற்றாலம் சித்திர சபையில் அசபா தாண்டவமும் புரிந்த எம்பெருமான், நெல்லையப்பர் கோவில் தாமிர சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சி சிறப்பானது. இந்த ஆலயத்தில் தை அமாவாசை அன்று, 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும், பத்ர தீப திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை அன்று லட்ச தீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம், லட்ச தீப விழாக்களின் போது மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்படும்.

    ஆயிரங்கால் மண்டபம்:

    அம்பாள் சன்னிதி வளாகத்தில் 1,000 தூண்களை கொண்ட ‘ஆயிரங்கால் மண்டபம்’ அமைந்துள்ளது. இந்த மண்டபம் 520 அடி நீளம், 63 அடி அகலம் கொண்டது. இந்த மண்டபத்தில், ஐப்பசி திருக்கல் யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் பங்குனி உத்திர திருவிழாவில், பங்குனி உத்திரம் அன்று மன்னருக்கு, சுவாமி செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த மண்டபம் ஆமை ஒன்றால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

    ஊஞ்சல் மண்டபம் :

    அம்பாள் சன்னிதி முன்பு 96 தத்துவங்களை தெரிவிக்கும் வகையில், 96 தூண்களைக் கொண்ட ‘ஊஞ்சல் மண்டபம்’ அமைக்கப்பட்டுள்ளது. ஐப்பசி திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பிறகு சுவாமி, அம்பாள் ஊஞ்சலில் ஆடும் ஊஞ்சல் உற்சவமும், ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் இந்த மண்டபத்தில் நடத்தப்படும். இந்த மண்டபத்தை கி.பி. 1635-ம் ஆண்டு சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையன் கட்டினார்.

    சோமவார மண்டபம்:

    சுவாமி சன்னிதியின் வடக்கு பக்கம் ‘சோமவார மண்டபம்’ இருக்கிறது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், நவராத்திரி நாட்களில் நடைபெறும் பூஜைகளும் இந்த மண்டபத்தில் வைத்து செய்யப்படுகின்றன. 78 தூண்களை கொண்ட பெரிய மண்டபம் இது.

    மணி மண்டபம்:

    இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி தொங் குவதால் ‘மணி மண்டபம்’ என்று அழைக்கப்படலாயிற்று. நின்றசீர்நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இது. ஒரே கல்லில் சுற்றிச் சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. எந்த ஒரு சிறு தூணைத் தட்டிப்பார்த்தாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். தூண்கள் தோறும் ஸ்வரங்கள் மாறுபடும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான ஸ்வரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. இவை அனைத்தும் ‘இசைத்தூண்கள்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இசைத் தூண்கள் அமைந்துள்ள கோவில்களில், காலத்தால் முற்பட்ட இசைத்தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.

    சங்கிலி மண்டபம்:

    சுவாமி கோவிலையும், அம்பாள் கோவிலையும் இணைப்பதாக அமைந்திருப்பதால், இதற்கு ‘சங்கிலி மண்டபம்’ என்று பெயர். 1647-ம் ஆண்டு கட்டப்பட்ட மண்டபம் இது. இந்த மண்டப தூண்களில் காமவிகார குரங்கு, வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் ஆகிய சிற்பங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    தாமிரசபை:

    நெல்லையப்பர் கோவில் வரலாற்றில், தாமிர சபை நடனம் குறிப்பிடத்தக்க ஒன்று. சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் ஆனந்த தாண்டவமும், திருவாலங்காடு ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவமும், மதுரை வெள்ளியம்பலத்தில் சுந்தர தாண்டவமும், குற்றாலம் சித்திர சபையில் அசபா தாண்டவமும் புரிந்த எம்பெருமான், நெல்லையப்பர் கோவில் தாமிர சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சி சிறப்பானது. இந்த ஆலயத்தில் தை அமாவாசை அன்று, 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும், பத்ர தீப திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை அன்று லட்ச தீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம், லட்ச தீப விழாக்களின் போது மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்படும்.

    வசந்த மண்டபம்:

    100 தூண்களுடைய வசந்த மண்டபத்தில் கோடை காலத்தில் வசந்த விழா நடத்தப்படும். இந்த மண்டபத்தை சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலை வனம் 1756-ம் ஆண்டு திருவேங்கட கிருஷ்ண முதலியாரால் அமைக்கப்பட்டது.

    அமைவிடம்

    இந்த கோவில் நெல்லை மாநகரின் மையப்பகுதியில் உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
    தன் கணவன் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதி தேவி தவம் செய்த தலமே பூவாளூர். மன்மதபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தன் கணவன் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதி தேவி தவம் செய்த தலமே பூவாளூர். மன்மதபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. பண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இத்தலம் இருந்ததால், ‘பூவாளியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ‘பூவாளூர்’ என்றானது.

    இங்குள்ள திருமூலநாத சுவாமி ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘திருமூலநாத சுவாமி’. இறைவி பெயர் குங்கும சவுந்தரி அம்பாள். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பைத் தாண்டியதும் அகன்ற மண்டபத்தில் கொடிமர விநாயகர் அருள்பாலிக்க, கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்துள்ள கலை மண்டபத்தைக் கடந்தால், மகாமண்டப நுழைவு வாசலை துவார பாலகர்களின் அழகு திருமேனிகள் அலங்கரிக்கின்றன.

    மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அதையடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார். இறைவன் சன்னிதியை அடுத்து அன்னை குங்கும சவுந்தரி தனிச் சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறாள். அன்னையின் சன்னிதியின் முன்புறம் கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அன்னையின் சன்னிதியில் மகா மண்டப நுழைவுவாசலில் துவார பாலகிகளின் சுதை வடிவமும், அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் உள்ளன.

    கருவறையில் அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு இறைவன் கல்யாண கோலத்தில் இருப்பதால், இறைவியின் சன்னிதி இறைவனின் இடதுபுறம் அமைந்துள்ளதாக பக்தர்கள் சொல்கின்றனர். தவிர இறைவன் - இறைவி ஆலயங்கள் இணை ந்து அமைந்துள்ளதால் பிரகார வலம் வரும் போது இரண்டு ஆலயத்தையும் சேர்த்தே தான் சுற்றியாக வேண்டும். தனியே சுற்ற இயலாது.

    இறைவனின் தேவகோட்டத்தின் தென்புறம் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மேல்புறம் அண்ணாமலையார், தெற்கில் சிவதுர்க்கை திருமேனிகள் உள்ளன. இங்குள்ள சிவதுர்க்கைக்கு 8 கரங்கள் உள்ளது என்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.

    ஆலயத்தின் திருச்சுற்றின் தெற்கில் நால்வர் மற்றும் நாயன்மார்களின் திரு மேனிகள் அழகுற அமைந்துள்ளன. பொதுவாக நால்வர் வரிசை என்பது சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்ற முறையிலேயே அமைவது வழக்கம். ஆனால் இங்கு மாணிக்கவாசகர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தெரியவில்லை. நாயன்மார் வரிசைக்கு எதிரே மகாலிங்க மூர்த்தியின் தனி சன்னிதி உள்ளது.

    மேற்கு திருச்சுற்றில் வெள்ளை வாரண விநாயகர் அருள்புரிகிறார். இவரே தல விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் தூய வெள்ளை நிறத்தில் காட்சி தருவது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். இவருக்கு அருகே மற்றொரு பிள்ளையாரும் உள்ளார். வெள்ளை நிற பிள்ளையார் ஒரே கல்லால் ஆனவர். இவருக்கு நெய் தீபம் ஏற்றி அருகம்புல் சூட்டி அர்ச்சனை செய்தால் புத்திர தோஷ நிவர்த்தி ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள்.

    அடுத்து தனி சன்னிதியில் ஆறுமுக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் அழகு திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதரால் போற்றிப் பாடப்பெற்ற பெருமான் இவர். இந்த முருகன் ஆறு தலைகளுடன் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பாகும்.

    அதை அடுத்து தண்டாயுதபானி சன்னிதியும், அடுத்து மகாலட்சுமி, நாகர், ஜேஷ்டாதேவி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் விஷ்ணு துர்க்கையின் தனிச் சன்னிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வடக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர்.

    தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அசுரர்கள் ஓயவில்லை. தேவர்களுக்கு இம்சை கொடுத்துக்கொண்டே இருந்தனர். தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நேரே சிவனிடம் சென்றனர். தங்களைக் காப்பாற்றும்படி முறையிட்டனர்.

    ‘முருகன் வருவார் காப்பாற்றுவார்’ எனக் கூறிவிட்டு மீண்டும் தவத்தில் அமர்ந்துவிட்டார் சிவன். ஆண்டுகள் பல கடந்தும் அசுரர்களின் தொல்லை தீரவில்லை. முருகனும் வந்தபாடில்லை. சிவன் தவமும் கலையவில்லை.

    தேவர்கள் மன்மதனிடம் சென்று காமக் கணை வீசி சிவனது தவத்தை கலையச் செய்யும்படி கூறினர். மன்மதன் மறுத்துவிட்டான். ‘மறுத்தால் தாங்கள் சாபம் விடுவோம்’ என தேவர்கள் பயமுறுத்தவே, பயந்த மன்மதன், சிவன் மேல் மன்மத பாணத்தை ஏவினான்.


    திருமூலநாத சுவாமி, குங்கும சவுந்தரி

    கிழக்கு நோக்கி இருந்த சிவன் மேற்கு நோக்கி திரும்ப, சிவனின் நெற்றிக் கண் பார்வை பட்டு மன் மதன் எரிந்து போனான். இந்த சம்பவம் நடந்த தலம் கொருக்கை. நாகை மாவட்டத்தில் உள்ளது இத்தலம். அதன்பின், தன் கணவனை இழந்த ரதிதேவி அழுதாள். கண்ணீர்விட்டு கதறினாள். பலன் இல்லை. உடனே சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினாள். பிரம்மாவும் தவித்தார். மன்மதன் இல்லாததால் அவரது படைப்புத் தொழிலை அவரால் செய்ய முடியவில்லை.

    தனது மானசீக புதல்வனை இழந்த மகாவிஷ்ணுவுக்கும் மன வேதனை. அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். இதனால் மனம் இளகிய சிவபெருமான் தவம் செய்துகொண்டிருந்த ரதியின் முன் தோன்றினார்.

    ‘உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான். மற்றவர் கண்களுக்கு அரூபமாகத் தெரிவான்’ என்று ரதியிடம் கூறிய சிவபெருமான் மன் மதனை உயிர் பெற்று எழுச் செய்தார் என்கிறது இந்த ஆலய தல வரலாறு.

    ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இந்த ஆலயம் பல சிறப்புகளுக்கு உட்பட்டது. இறைவன் சுயம்பு மூர்த்தி. ஏழு முனிவர்களின் புதல்வர்களாகிய எழுபது முனிவர்கள், சைவ சாத்திர நுட்பங்களை தமக்கு அருளுமாறு பெருமானை வேண்டி சைவ சாத்திர யாகம் செய்தனர். வேள்விக்கு மகிழ்ந்த பெருமான் எழுந்தருளி, எழுபதின்மர் உள்ளிட்ட பிரம்மன் முதலியோருக்கு சைவ சாஸ்த்திர நுட்பங்களை அருளினார் என தல புராணம் கூறுகிறது.

    தவத்தில் சிறந்த சிவன முனிவரின் சாபத்தால் பொலிவிழந்த இந்திரன், அவர் வழிகாட்டலின்படி பூவாளூர் பெருமானை வழிபட்டு மீண்டும் பொலிவுபெற்றான். அக்னி தேவன் இப்பெருமானை வழிபட்டு சாப நீக்கம் பெற்றான்.

    இறைவியின் அர்த்த மண்டப இடது பக்க கருங்கல் சுவறில் நீண்ட நாகத்தின் உருவம் காணப்படுகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாகரை வழிபட்டு பயன்பெறுகின்றனர்.

    பூவாளூர் பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. ஆலயத்தின் வெளியே வலது புறம் ஓடும் பல்குனி ஆற்றின் கரையில் தனிக் கோவில் கொண்டு அமர்ந்துள்ளார் ஸ்ரீதென் கயா பல்குனி ருத்ர சித்தர். இவருடைய யோக ஜோதி இத்தலத்தில் எப்போதும் இருந்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    மூதாதையர்களுக்கு உரிய திதிகளில் இங்குள்ள பல்குனி நதிக்கரையில் தர்பணங்கள், சிரார்த்த ஹோம வழிபாடுகள் செய்து அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நம் தோஷங்களையெல்லாம் இங்குள்ள பித்ரு காவல் தேவ மூர்த்திகள் ஏற்று, தோஷ நிவர்த்தி ஏற்படுவதுடன் வழிபாட்டின் பரிபூரண பலன் கிட்டும் என்பது அனைவரின் நம்பிக்கை.

    ஆலயத்தின் அருகே வலது புறம் வாக்கு வாளம்மன் ஆலயம் உள்ளது. இதன் கருவறையில் சப்த மாதர்களின் திருமேனி கள் உள்ளன. திருமணம் ஆகாத கன்னியர்கள், இறைவி குங்கும சவுந்தரிக்கு குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை எடுத்து தினசரி நெற்றியில் இட்டுக் கொண்டால் விரைந்து திருமணம் நடைபெறும் என்கின்றனர் பக்தர்கள்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இறைவியின் சன்னிதியில் தொட்டில் வாங்கி கட்டினால் அந்த பாக்கியம் உண்டாகும் என்றும் சொல்கின்றனர் பக்தர்கள்.

    தினசரி நான்கு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    திருச்சி- லால்குடி நெடுஞ்சாலையில் லால்குடியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூவாளூர் என்ற இந்த தலம். 
    தமிழ்நாட்டில் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பழனி உள்பட பல தலங்கள் இருந்தாலும் வைத்தீஸ்வரன் கோவில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.
    திருமாலும் பதுமம்வளர் அயன் முதலாம்
    கடவுளரும் திகழும் மேன்மை
    தருமாலின் நிழல் உறையுஞ் சனகாதியரும்
    வேளூர் தன்னிற் போற்றக்
    கருமாலின் தொடர்பகற்றி பதவிபெற
    மருந்தளித்துக் கருணை செய்ய
    வருமாலை இளம்பிறை சேர் வைத்யலிங்கம்
    பொன்னடியை வணக்கஞ் செய்வாம்.

    - புள்ளிருக்கு வேளூர் புராணம்

    செவ்வாய் தோஷம் என்று தெரிந்ததுமே ஜோதிடர்கள், “ஒரு தடவை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போய் பரிகாரம் செய்துவிட்டு வந்து விடுங்கள்” என்று சொல்வார்கள். தமிழ்நாட்டில் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பழனி உள்பட பல தலங்கள் இருந்தாலும் வைத்தீஸ்வரன் கோவில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

    இந்த கோயில் பழங்காலத்தில் புள்ளிருக்கு வேளூர் அழைக்கப்பட்டது. புள் என்னும் ஜடாயு, இருக்கு என்னும் ரிக்வேதம், வேள் என்னும் முருகப்பெருமான், ஊர் என்னும் சூரியன் ஆகியோர் இறைவனை வழிபட்டு பேறு பெற்றதால் “புள்ளிருக்குவேளூர்’ என்று பெயர் வந்தது.

    முருகனுக்குரிய சிறப்புத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள முருகப்பெருமான் “செல்வமுத்துக்குமரன்’ என்ற திருநாமத்தால் வழங்கப்படுகிறார். மாதம் தோறும் இங்கு கார்த்திகை நாளில் நடைபெறும் மகாபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் செல்வக்குழந்தையாதலால் அன்றாடம் கெண்டியில் பாலை நிவேதனம் செய்வதும், முருகனுக்கு வழிபாடு நடந்தபின்னரே வைத்தியநாதசுவாமிக்கு வழிபாடு நடப்பதும் இத்தலத்திற்கே உரிய சிறப்பு.

    “முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்’ என்னும் பிள்ளைத்தமிழினை இம்முருகப்பெருமான் மீது குமரகுருபரர் பாடியுள்ளார். இந்த ஆலய “திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.”

    இந்த ஆலயம் தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றாகும். வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோயில்.

    பெயர்க் காரணம்:

    புள் (ஜடாயு). இருக்கு (ரிக்வேதம்), வேள் (முருகன்), ஊர் (சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது. மற்றும் சடாயு புரி, கந்தபுரி,வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும், அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறும். வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் மற்றும் வழக்கில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் எனப் பல பெயர்களும் உண்டு.

    தீர்த்தம்:

    கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று.

    சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது. முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர்.

    இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள்ளன.



    மூர்த்திகள்:

    சுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது.

    அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு. இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர். நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.

    தலப்பெருமை:

    முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார். அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளா கின்றனர். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.

    சடாயு குண்டம்:

    சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது.

    இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார்.

    திருச்சாந்துருண்டை:

    இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர்.
    இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை ‘புழுகாப்பு’ என்பர்.

    தல விருட்சம்: கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’ என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர்.

    திருவிழாக்கள் :

    நாள்தோறும் 6 கால பூஜைகள் உண்டு. பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் காட்சி மிக அற்புதமான ஒன்று. உற்சவகாலத்தில் கயிலையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியிருப்பது போல் சுவாமி ஒரு புறமும், அம்பாள் ஒரு புறமுமாக எழுந்தருள, செல்வமுத்துக்குமார சுவாமி நடுவில் எழுந்தருள்வார்.

    மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திருமுன்னிலையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி.

    அங்காரக் க்ஷத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு. ஆண்டு தோறும் நகரத்தார்கள் சித்திரை மாதத்தில் வண்டிப் பயணமாக வேளூருக்கு வரும் வழக்கம் உண்டு. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பயணம் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு சித்திரைத் திங்களில் நடைபெற்று வருகின்றன.

    “தையல் நாயகியைத் தொழுது எழுவார் தொங்கத் தொங்கத் தாலி அணிவார்”. வைத்தியநாதனைப் போற்றி எழுவாருக்கு அவனே மந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்து வைப்பான். பிறவிப் பெரும்பயனையும் தேடித்தருவான்.

    இறைவனது பிரசாதம் சந்தனம்

    இத்தலத்தில் முருகப்பெருமான் ஸ்ரீசெல்வமுத்துக் குமரனாக வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். அவருக்கு அர்த்தயாமப் பூஜையில் சந்தனம் சாத்தப்படும். இதனை அணிபவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கிறது. இக்கோவிலில் திருச்சாந்து உருண்டையாக இதனை விபூதியுடன் சேர்த்துக் தருவார்கள். இதனை உண்பவர்களுக்கு வினையெல்லாம் தீர்ந்து விடுகிறது.

    வேறு பெயர்கள்


    சடாயு பூஜித்தமையால் சடாயுபுரீ என்றும், வேதங்கள் பூஜித்தமையால் வேதபுரி என்றும், கந்தன் பூஜித்தமையால் கந்தபுரி என்றும், சூரியன் பூஜித்தமையால் பரிதிபூரி என்றும், அம்பிகை பூஜித்தமையால் அம்பிகாபுரி என்றும், அங்காரகன் பூஜித்தமையால் அங்காரபுரி என்றும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பெயர் உண்டு.
    இந்த ஆலயத்துக்கு தையல்நாயகி கோவில், வினை தீர்த்தான் கோவில் என்றும் பல பெயர்கள் உண்டு.

    முருகப்பெருமான் தாரகாசுரனுடன் போர் புரிந்த போது அவனது படைகள் காயமுற்றன. அது கண்டு வருந்திய -கந்தப் பெருமான் அவர்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டி தன் அம்மை அப்பரை அழைத்தாராம்.

    அம்மையப்பனே வைத்தியநாதரும், தையல் நாயகியுமாக வந்திருந்து அடிபட்ட வீரர்களுக்கு வைத்தியம் செய்தனராம். இதனால் இந்த தலத்து இறைவன் வைத்தியநாதர் எனவும், அம்மாள் - தையல்நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.



    நித்ய பூஜைகளும் திருவிழாக்களும்

    நாள்தோறும் காமிக ஆகம விதிப்படி ஆறுகாலப் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரமோற்சவம் பங்குனி மாதம் நடைபெறுகிறது. ஸ்ரீசெல்வமுத்து குமாரசுவாமிக்குத் தை மாதம் திருவிழா நடைபெறுகிறது.

    செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் கூட்டமாக வந்து சித்தாமிர்தத் தீர்த்தத்தில் மூழ்கி சுவாமி தரிசனம் செய்வார்கள். உற்சவக் காலத்தில் சுவாமி எழுந்தருளும் போது கைலாசத்தில் சோமஸ்கந்தர் எழுந்தருளி இருப்பது போல் நடுவில் ஸ்ரீசெல்வமுத்துக் குமாரர் எழுந்தருளி வர சுவாமி ஒருபுறம் அம்மையார் மறுபுறமும் எழுந்தருளுவர்.

    மாதந்தோறும் வரும் கார்த்திகை நாட்களில் மற்றும் கந்த சஷ்டி நாட்களில் ஸ்ரீசெல்வமுத்துக் குமாரனுக்கு அபிஷேகம் நடைபெறும். அர்த்தஜாமப் பூஜையில் ஸ்ரீசெல்வமுத்து குமரனுக்கு வழிபாடு நடந்த பின்னரே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும்.

    கோவிலின் அமைப்பு

    நகரின் நடுவே நால்புறமும் உயர்ந்த சுற்று மதில்களால் சூழப்பட்டு மிக அழகாக விளங்குகிறது. முன்புறம் ராஜகோபுரமும், பின்பக்கம் கட்டைக் கோபுரமும், தென்புறம் சாதாரண வாயில் ஒன்று இருக்கிறது.

    ஆலயத்திற்குள் இரண்டு பெரிய பிரகாரங்களும் திருமதிலின் வெளிப்புறம் மாடவிளாகமும் அமைந்திருக்கிறது. அம்மையும், அம்பிகையும் வலம் வர தனித்தனிப் பிரகாரங்கள் உள்ளன.

    ஆலயத்தின் கீழ் திசையில் வைரவக்கடவுளும், மேற்திசையில் வீரபத்திரக் கடவுளும், தென் திசையில் கற்பக விநாயகரும், வட திசையில் காளியும் அமர்ந்து காவல் புரிகின்றனர்.

    மேலைக் கோபுர வாசல் வழியாகச் சென்றால் வெள்ளியாலும், தங்கத்தாலும் இரு கொடி மரங்கள் இருப்பதை காணலாம். கீழ்புறம் ஆறுமுகக்குமாரர் கர்ப்பக்கிருகம் அமைந்துள்ளது. வடக்கு பிரகாரத்தில் ஆவுடையம்மன் என்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த பிரகாரத்தில் செல்வமுத்துக்குமார் சன்னதி உள்ளது. சன்னதிக்கு ஒரு கட்டை கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தின் தென்புறம் ஜூரகரேசுவரர், நவக்கிரக மண்டபம் உள்ளது.

    கிழக்கு முகமாகத் தண்டாயுதபாணி, தெற்கு முகமாக அங்காரகன் ஆகிய மூலவர்களின் சன்னதி அமைந்துள்ளது. கீழை பிரகாரத்தின் கீழ்பால் வேம்பு தலவிருட்சம் உள்ளது. இதுதான் ஆதி வைத்தியநாதபுரி என வழங்கப்படுகிறது. அங்குள்ள கட்டை கோபுர வாயிலையட்டி ஆதிபுராணேசுவரர், வீரபத்திரர் திருஉருவங்கள் உள்ளது.

    மடைப்பள்ளியின் மேற்கு முகமாக அன்னபூரணி அம்மன் திருஉருவம் அமைந்துள்ளது. தெற்கு பிரகாரத்திற்கு தெற்கில் அம்மன் சன்னதியில் சீத்தாமிர்த தீர்த்தம் அமைந்துள்ளது. இதன் நால்புறமும் திருமாளிகை பத்தி மண்டபங்கள் அமைந்துள்ளன.

    சுவாமி சன்னதியின் வடக்கே முதலில் பள்ளியறையும் அதற்கடுத்து சுக்ரவார அம்மன் உற்சவரும் தையல்நாயகி சன்னதியும் அமைந்துள்ளது. சுவாமி சன்னதிக்கு செல்லும் முதல் வாயிற்படியின் இருபுறம் உள்ள குடைவறைகளில் வடக்கில் அதிகார நந்தி உற்சவரும், தெற்கில் சடாயு உற்சவரும் எழுந்தருளியுள்ளனர்.

    சுவாமி சன்னதிக்கு மேற்குபுறம் செல்வமுத்து குமாரசாமி உற்சவர் வள்ளி தெய்வானையோடும் எழுந்தருளி உள்ளனர். அதற்கடுத்து கஜலட்சுமியும், அஷ்டலட்சுமியும் உள்ளனர். வடக்கு பகுதியில் ஸ்ரீநடராஜர் சிவகாமி அம்மையோடு எழுந்தருளியுள்ளார்.

    சுவாமி கர்ப்பக கிரகத்தில் வடக்கே எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மன் மகிமை மிக்கவள். கீழை திருமாளிகைப் பகுதியில் சூரியன் அங்காரகன் நீங்கலாக நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. தெற்கு பிரகாரத்தில் அறுபத்துமூவர் மூலவர்களும் சப்த கன்னிகளும் அமைந்துள்ளனர்.

    வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

    தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர். தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

    மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள்.
    சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருஞான சம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார்.

    குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார்.

    சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர், சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு ‘யார் தந்த எச்சில் பாலை உண்டாய்? சொல்' எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.

    அப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி' என்று பதிகம் பாடலானார். ஆம்! அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம்.

    பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும், அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள்.

    திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள்.

    இதற்கு அடுத்து சில படிகள் ஏறிச் சென்றால் மலையின் உச்சியில் சட்டைநாதர், சங்கம வடிவினராக உள்ளார். இரண்யனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் குறையவில்லை. இதையடுத்து சிவபெருமான் நரசிம்மருடன் போரிட்டு, அவரது தோலை உரித்து சட்டையாக போர்த்திக் கொண்டார். இதனால் இந்த இறைவனுக்கு ‘சட்டை நாதர்’ என்று பெயர். இவர் பைரவர்களின் தலைமையை ஏற்றவர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் சின் முத்திரையைக் காட்டுகிறது. இடது திருக்கரம் கதையை பற்றி இருக்கிறது.

    இந்தத் திருக்கோவில் தேவஸ்தானம் ‘சட்டைநாதர் தேவஸ்தானம்’ என்றே அழைக்கப்படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் ‘சட்டைநாதர் உலா' நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாத திருவாதிரை நன்னாளில் காலையில் தருமபுரம் ஆதீனம் குரு மகாசன்னிதானம், இளைய சன்னிதானம் முன்னிலையில், ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ ‘சம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டிய ஐதீக விழா' நடைபெறுகிறது.

    அன்று மாலையில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் உள்ள சம்பந்தர் உற்சவமூர்த்தி, அருகில் உள்ள திருக்கோலக்கா சிவாலயம் சென்று நள்ளிரவில் திருக்கோலக்கா ஈசனிடம் பொற்றாளமும், அந்த பொற்றாளத்தின் ஓசையை அத்தல ஓசை நாயகி அம்மனிடமும் பெற்று மறுநாள் காலையில் மீண்டும் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் திரும்புவார்.

    சீர்காழிக்கு மேற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக்கா. மூன்று வயதில் தோடுடைய செவியன் பதிகம் பாடி ஈசனை ஆராதித்த சம்பந்தர், தனது சிவத்தல யாத்திரையை தொடங்கினார். அப்போது அருகில் உள்ள திருக்கோலக்கா திருத்தலம் சென்றடைந்தார். திருக்கோலக்கா சென்ற சம்பந்தர் அங்கு ஈசன் சன்னிதியில் தனது சின்னஞ்சிறு கைகளைத் தட்டி கைத்தாளம் போட்டுக் கொண்டே, இறைவனை துதித்து பதிகம் பாடினார்.

    ‘மடையில் வாளை பாய மாதரார்
    குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
    சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
    உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ’

    என்று தொடங்கிய அந்தப் பதிகத்தை சம்பந்தர் பாடிக்கொண்டிருந்த போது, அவரது பிஞ்சுக் கரங்கள், கைதாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின. பிஞ்சு கரங்கள் சிவக்க.. சிவக்க.. கைத்தாளம் இட்டு, தன் துதிபாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்த சிவபெருமான், ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ முன்வந்தார்.


    திருத்தாளமுடையார், ஓசை கொடுத்த நாயகி

    அதன்படி ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, இத்தல ஈசன் ‘ஹாரக்குதவனேஸ்வரர்’ கொடுத்தருளினார். ஆனால் அந்த பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக இத்தல அம்பிகையான அபீதகுசாம்பாள் அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்றுமுதல் இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும் ‘தொனிபிரதாம்பாள்’ என்றும் பெயர் பெற்றார்.

    சுந்தரர் இத்தல இறைவனைப் பற்றி பாடும் போது, சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை பதிந்துள்ளார். ஆம்! ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை, கோலக்காவினிற் கண்டு கொண்டேனே' என்று போற்றிப்பாடுகிறார் சுந்தரர். ஓசை கொடுத்த நாயகி அம்மன் சன்னிதி வாசலில் பிள்ளையாரும், பழனி தண்டாயுதபாணியும் இருபுறமும் தனிச் சன்னிதியில் அருள்பாலிப்பது இத்தலத்தின் பெரும் சிறப்பு. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகளும் இத்தலம் வந்து வழிபட்டுள்ளனர்.

    மந்தாகினி என்ற பெண்மணியின் மகனான விஸ்வநாதன் பிறவி ஊமை. அவனை அழைத்துக்கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, ஈசன்- அம்பாளை முறைப்படி வழிபாடு செய்து, பின்னர் இத்தல கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வழி பட்டுச் சென்றாளாம் மந்தாகினி. சிறிது காலத்தில் மந்தாகினியின் மகன் விஸ்வநாதன் ‘அம்மா' என்றழைத்து பேச ஆரம்பித்தானாம். மகிழ்ந்த மந்தாகினி மீண்டும் இத்தலம் வந்து நன்றிப் பெருக்குடன், 42 கிராமில் தங்கத்தால் தாளம் செய்து அதனை இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளார்.

    இதே போல் 12 வயதாகியும் பேச்சு வராத ஒரு சிறுவனை அவனது பெற்றோர் இந்த தலத்திற்கு அழைத்து வந்து வழிபட்டு சென்றனர். பின்னர், இத்தலத்தில் சம்பந்தர் பாடிய, ‘மடையில் வாளை பாய’ என்ற பதிகத்தை வீட்டிற்குச் சென்று தினமும் பாராயணம் செய்து வந்துள்ளனர். இதன் பலனாக அந்தச் சிறுவன் பேசத் தொடங்கினான். அவனின் பெற்றோரும் பொன்னால் ஆன தாளத்தை செய்து காணிக்கையாக இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளனர்.

    இவ்வாறு அம்மனின் அருளால் பேச்சு வந்தவர்கள், தங்களின் முழு முகவரியுடன் அந்த விவரத்தை ஆலய பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவேட்டின் படி பார்க்கும்போது, அம்மன் அருளால் பேச்சு வரப்பெற்றவர்களின் எண்ணிக்கை 600-க்கும் மேல் என்பது ஓசை நாயகியின் அருளுக்கு சாட்சி. வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் மற்றும் பிறந்து மூன்று வருடமாகியும் பேச்சு வராத குழந்தைகளை இந்தக் கோவிலுக்கு அழைத்து வந்து தாளபுரீஸ்வரருக்கு ‘அஷ்டோத்திரமும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனை’யும் செய்து, 2 லிட்டர் தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, நிவேதனம் செய்யப்பட்ட தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற சம்பந்தரின் தேவாரப் பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

    கருவறையில் கிழக்கு நோக்கிய சுவாமியையும், அம்பாளையும் வணங்கி ஆலயப் பிரகார வலம் வந்தால் விநாயகர், மகாலட்சுமி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், சனிபகவான், சூரியன், சந்திரன், நால்வர் சன்னிதி, பைரவர் சன்னிதிகளும் உள்ளன. சனிக் கிழமை மற்றும் அஷ்டமி திதி நாட் களின் அந்திப்பொழுதில், இத்தல சனிபகவானையும் பைரவரையும் தொடர்ச்சியாக 8 முறை வழிபாடு செய்து வர நவக்கிரக தோஷங்கள் யாவும் அகலும் என்கிறார்கள்.

    இரண்டு அம்மன்கள்

    திருக்கோலக்கா கோவிலில் ஓசை கொடுத்த நாயகி அம்மனுக்கு இரண்டு சிலைகள் உள்ளது. இதனை பழைய அம்மன், புதிய அம்மன் என்று அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மன் புதியவராம். கருவறையின் முன் மண்டபத்தில் வடபுறமாய் தனிச் சன்னிதியில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மனை, பழைய அம்மன் என்கிறார்கள்.

    முன்பு பழைய அம்மன் சிலையே கருவறையில் இருந்துள்ளது. ஓசை நாயகி அம்பிகையின் பழைய சிலையில் சிறிது பின்னம் ஏற்பட, ஊரார் தற்போது கருவறையில் உள்ள புதிய சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு, பழைய சிலையை அகற்றிவிட்டனர். அன்றிரவு ஊராரின் கனவில் வந்த அம்பிகை, ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் பின்னம் (ஊனம்) ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா?’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த ஊரார்... பின்னம் ஏற்பட்ட பழைய சிலையையும், மூலஸ்தானத்தின் அருகிலேயே தனி இடத்தில் வைத்து பூஜிக்கத் தொடங்கிவிட்டனர். இத்தல அம்பாளுக்கு புடவை சாற்றுபவர்கள், கண்டிப்பாக இத்தல பழைய அம்மனுக்கும் புடவை சாற்றிட வேண்டும் என்பது ஐதீகம்.

    சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா திருத்தலம் அமைந்துள்ளது.
    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகிலிருக்கிறது மடப்புரம். இங்கு வளைந்தோடும் வைகையின் விளிம்பில் ஆக்ரோஷ அவதாரமாக நிற்கிறாள் பத்ரகாளி.
    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகிலிருக்கிறது மடப்புரம். இங்கு வளைந்தோடும் வைகையின் விளிம்பில் ஆக்ரோஷ அவதாரமாக நிற்கிறாள் பத்ரகாளி.

    ஒரு பிரளய காலத்தில் மதுரை மாநகரை வெள்ளம் சூழ்ந்தபோது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி, மதுரையின் எல்லையைக் காட்டச் சொல்லி சிவனை வேண்டினார். அப்போது ஆதிசிவன் பாம்பு வடிவில் தோன்றி மதுரையின் நான்கு புறத்தையும் தன் உடலால் வளைத்துக் காட்டினார். அப்போது பாம்பின் படமும் அதன் வாலும் ஒன்றையன்று தொட்டுக்கொண்டு நின்ற இடம்தான் படப்புரம் எனப்பட்டது. இதுவே மருவி மடப்புரமாக ஆனது.

    ஒருமுறை பார்வதியை அழைத்துக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பிய சிவபெருமான், மடப்புரம் பகுதிக்கு வந்தார். காடு மிகப் பரந்து கிடக்கிறது. இதற்குமேல் உன்னால் வரமுடியாது தேவி... அதனால் நீ இங்கேயே இரு. நான் மட்டும் வேட்டையாடிவிட்டு வருகிறேன் என்று பார்வதியிடம் சொன்னாராம். ‘இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் நான் மட்டும் தனியே இருப்பது எப்படி?’ என்று பார்வதி கேள்வி எழுப்ப, அய்யனாரை அழைத்து பார்வதிக்குத் துணையாக வைத்துவிட்டுப் போனார் சிவபெருமான். அப்போது பார்வதி, இந்த இடத்தில் நான் இருப்பதால் இந்த ஸ்தலத்துக்கு ஏதாவது சிறப்பைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க, இந்த இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் இருக்கும் வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும்! என்று வரம் கொடுத்தாராம் சிவபெருமான்.

    அதன்பின்தான் மடப்புரத்தில் காளிவடிவில் தங்கினாள் சக்தி. காளிக்குத் துணையாக இருந்த அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக இங்கே ஆட்சி செலுத்தினாலும், சக்தியின் வடிவமாக நின்றுகொண்டிருக்கும் பத்ரகாளிக்குத்தான் பிரதான வழிபாடு!

    சிவபெருமான் அருளிய வரத்தின்படி மடப்புரத்திலிருந்து மூன்று மைல் தொலைவுக்குள் வைகையில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்கிறது. காசு, பணம் செலவு செய்து காசிக்குப் போக முடியாதவர்கள் மடப்புரத்தை ஒட்டியுள்ள திருப்புவனத்துக்கு வந்து தங்களின் முன்னோர்களுக்குக் காரியங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு போவது இன்றும் நடக்கிறது.

    கோயில் வளாகத்துக்குள் வெட்டவெளியில் கூரைகூட இல்லாமல் நாக்கைத் துருத்தியபடி ஆக்ரோஷமாக நிற்கிறாள் பத்ரகாளி. காளியின் இரண்டு பக்கமும் பிரமாண்டமாக இரண்டு பூதங்கள். பதின்மூன்றடி உயரம் கொண்ட காளியின் தலைக்குமேல் ராட்சதக் குதிரை ஒன்று தாவியபடி நிற்கிறது.

    காளியை மனமுருகி வேண்டி நின்ற பக்தர் ஒருவர் எந்த நேரமும் உனக்குப் பக்கத்திலேயே இருக்க எனக்கு வரம் கொடுக்கவேண்டும் என்றாராம். அவரது பக்தியை மெச்சிய காளி அவரைக் குதிரையாக மாற்றி, தனக்கு நிழல்தரும் குடையாக வைத்துக்கொண்டாராம். தன்னை நாடிவரும் பக்தர்களைத் தாமதமின்றிக் காப்பாற்ற ஆயத்த நிலையில் காளியின் வலதுகையில் திரிசூலம். அநீதியை அழிக்கத் திரிசூலம் ஏந்திநிற்கும் காளி, அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.

    காளிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டுவந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும். காளிக்குப் பிடித்தமான காணிக்கைப்பொருள் எலுமிச்சம்பழ மாலைதான். காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்கள் கோக்கிறார்கள். குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் கோக்கவேண்டியிருக்கும்.

    மடப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாருக்காவது கொடுக்கல், வாங்கல் பிரச்னை என்றால் பெரும்பாலும் கோர்ட்டுக்கோ போலீஸக்கோ போவதில்லை. அவர்கள் நாடிவரும் கோர்ட், பத்ரகாளி கோயில்தான்.

    காளிக்கு வலப்புறத்தில் சின்னதாக ஒரு திண்டு. இதன் பெயர் சத்தியக்கல். இரண்டு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தத் திண்டில் இருவரும் சூடத்தை ஏற்றி, அணைத்து நாங்கள் தப்புச் செய்யவில்லை என சத்தியம் செய்யவேண்டும். பின்னர் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு காளிக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடிதபடி, நாங்கள் தப்பு செய்யவில்லை என வாக்குக் கொடுக்க வேண்டும்.

    இங்கு யாராவது பொய்ச் சத்தியம் செய்தால் முப்பது நாட்களுக்குள்ளாக அந்த நபரைக் குறைகேட்டுவிடுமாம் காளி. சில நேரம் பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதுண்டு. இப்படித் தண்டிக்கப்படுபவர்கள் மறுபடியும் காளியிடம் வந்து காணிக்கை செலுத்திப் பரிகாரம் தேடிக்கொண்டு போவது இப்போதும் நடக்கிறது.

    இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது. காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக் கிறார்கள். அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க திராணி இல்லாதவர்கள் ஈரத்துணியுடன் இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு, அவங்களை எதுத்துக் கேக்க எனக்கு சக்தியில்லை. நீதான் எனக்கு கேட்டுக் கொடுக்கணும் என்று கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுகிறார்கள். இந்தக் கண்ணீருக்கு மனமிரங்கிவரும் காளி, அநியாயக்காரர்களை அடித்து எழுப்பி இம்சை பண்ணி அவர்களையும் தன்னுடைய வாசலுக்கு வரவழைத்து விடுகிறாள்.

    காளிக்குப் பின்னால் பிராகாரத்தில் வேப்பமரம் ஒன்று உண்டு. இதற்கும் தெய்வசக்தி இருக்கிறது. நீண்டநாட்களாகத் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்கள் இந்த மரத்தின் மடியில் மஞ்சள் தாலியைக் கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டி விட்டால் தாமதிக்காமல் அவர்களது வீட்டில் குவா - குவா சத்தம் கேட்கிறது. வேப்பமரத்தில் கட்டப்பட்டுள்ள தாலி மற்றும் தொட்டில்களின் எண்ணிக்கை இதையெல்லாம் பறைசாற்றுகின்றன.

    எல்லா நாட்களும் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை கோயில் திறந்திருக்கிறது.
    கணவன் - மனைவிக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கித் தம்பதியர்களை ஒன்று சேர்த்து வைக்கும் தலமாகக் கேரள மாநிலம், திருவஞ்சைக்களம் மகாதேவர் கோவில் அமைந்திருக்கிறது.
    தலச் சிறப்பு

    சேரநாட்டை ஆண்ட பெருமாக் கோதையார் எனும் மன்னர் திருவஞ்சைக்களம் மகாதேவர் மீது அதிகமான பக்தி கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் மகாதேவரை வணங்கும் போது, அவருக்கு இறைவனின் சிலம்பொலி கேட்கும். அந்தச் சிலம்பொலியைக் கேட்ட பின்பே, அவர் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    ஒருநாள் அவர் இறைவனை வழிபடும் போது, சிலம்பொலி கேட்கவில்லை. தன்னுடைய வழிபாட்டில் ஏதோ குறை ஏற்பட்டு விட்டது என்று நினைத்த அவர், உடைவாளால் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தார். அப்போது, அந்த இடத்தில் பெரும் சிலம்பொலி கேட்டது.

    அங்கேக் காட்சியளித்த இறைவன், ‘மன்னா! சோழ நாட்டிலிருக்கும் சுந்தரர் எனும் பக்தர் இனிமையான பக்திப் பாடல்களைப் பாடி என்னை வழிபடுவார். இன்று அவர் பாடிய பாடலில் மெய்மறந்து இருந்ததால், உன் வழிபாட்டைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அதனால், என் சிலம்பொலி உனக்குக் கேட்கச் சிறிது காலதாமதமாகி விட்டது’ என்றார்.

    உடனே மன்னன், இறைவனைப் பாடல்களால் மகிழ்விக்கும் சுந்தரரைப் பற்றி இறைவனிடம் கேட்டறிந்தார். பின்னர் சுந்தரரைத் தேடி அவரது இல்லத்துக்குச் சென்றார். அவர்கள் இரு வருக்கும் இடையில் நல்ல நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு, சேர மன்னனின் அழைப்பை ஏற்ற சுந்தரர் திருவஞ்சைக்களம் சென்று, அங்கிருக்கும் இறைவனை வழிபட்டுத் திரும்பினார்.

    அதன் பிறகு, சுந்தரர் சோழ நாடு, பாண்டிய நாடு மற்றும் தொண்டை மண்டலம் ஆகியவற்றிலிருக்கும் பல சிவன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் சேரநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    சேரநாட்டிற்குச் சென்ற சுந்தரர் அங்கிருக்கும் பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டார். இறுதியாக அவர், திருவஞ்சைக்களம் கோவிலுக்குச் சென்று, இப்பூவுலக வாழ்வினை அகற்ற வேண்டி ‘தலைக்குத் தலை மாலை’ என்னும் பதிகம் பாடினார். அதைக் கேட்ட இறைவன் அவரை அழைத்து வரும்படி, சிவ கணங்களை அனுப்பி வைத்தார். அவர்களும் சுந்தரரை ஒரு வெள்ளை யானையில் அழைத்துச் சென்றனர்.

    அப்போது சுந்தரர், தனது உயிர் நண்பரான சேர மன்னனை நினைத்தார். உடனே, சேர மன்னன் குதிரை ஒன்றில் அங்கு வந்து சுந்தரரை மூன்று முறை வலம் வந்து, அவருக்கு முன்பாக இறைவனிருப்பிடம் சென்றடைந்தார். இறைவனின் பெரும் கருணையை அறிந்து மகிழ்ந்த சுந்தரர் இறைவனைப் போற்றி, ‘தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே” என்னும் பதிகம் பாடினார்.

    இந்தப்பாடல் முடிவடைந்த நிலையில் சுந்தரரும் இறைவன் இடத்திற்கு வந்து சேர்ந்தார். சுந்தரர் கடைசியாகப் பாடிய பாடலைத் திருவஞ்சைக்களம் கோவிலில் சேர்ப்பிக்கும்படி இறைவன் ஆணையிட, வருண பகவான் அப்பாடலைக் கோவிலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார் என்கிறது ஆலயத்தின் வரலாறு.

    கோவில் அமைப்பு :

    இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். இங்கு அம்மனுக்கான தனிச் சன்னிதி இல்லை. கருவறையினுள் இறைவனுடன் அம்மன் இணைந்து, சதாசிவ (உமாமகேசுவர) நிலையில் கிழக்கு நோக்கியபடி இருக்கிறார். இக்கோவில் இறைவன் மகாதேவர், அஞ்சைக்களத்தீசுவரர் எனும் பெயர்களிலும், அம்மன் ‘உமையம்மை’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    ஆலயத்தில் கணபதி, ஐயப்பன், அனுமன், நாகராசா, பசுபதி, சப்தமாதர்கள், ரிஷபம், நந்திகேசன், பள்ளியறை சிவன், பிரதோச நிருத்யா, நாகயக்சி, தட்சிணாமூர்த்தி என்று இருபத்தைந்துக்கும் அதிகமான தெய்வங்களின் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவிலில் சுந்தரரும், சேர மன்னனும் சேர்ந்த நிலையில் தனிச்சன்னிதி இருக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தினமும் மாலை வேளையில் ‘தம்பதி பூஜை’ நடத்தப்படுகிறது. அதன் பிறகு, ‘பள்ளியறை பூஜை’ நடைபெறுகிறது. இந்தப் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடும் தம்பதியர்களுக்கு, விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்தால் அவை நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். பவுர்ணமி நாளன்று நடைபெறும் இப்பூஜைகளில் கலந்துகொள்வது மிகவும் சிறப்புக்குரியது என்கின்றனர். இந்தப் பூஜைகளில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    கோவில் சிறப்புகள் :

    தேவாரப்பாடல் பெற்ற 274 சிவபெருமான் கோவில்களில், இக்கோவில் 266-வது கோவிலாக இருக்கிறது.

    பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க இக்கோவிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றிருக்கிறார்.

    இக்கோவிலில் இருக்கும் நடராசமூர்த்தி சிலையின் கீழுள்ள பீடத்தில் ‘திருவஞ்சைக்களத்து சபாபதி’ எனும் தமிழ் எழுத்திலான பெயர் இடம் பெற்றிருக்கிறது.

    இக்கோவிலில் சுந்தரர், சேரமான் நாயனார் ஆகியோருக்கான உற்சவச் சிலைகளும் இருக்கின்றன.

    கிழக்கு ராஜகோபுர நுழைவுவாசல் பக்கக் கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோவிலுக்குள் செல்வது போலவும், எதிர்ச் சுவரில் கோவிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன.

    இறைவன் சுந்தரரை அழைத்து வருவதற்காக அனுப்பிய வெள்ளை யானை, சுந்தரரை ஏற்றிக் கொண்டு சென்றதாகச் சொல்லப்படும் மேடை ஒன்று, இங்குள்ள சாலை ஒன்றின் நடுவில் அமைந்திருக்கிறது. இம்மேடையினை ‘யானை வந்த மேடை’ என்று சொல்கின்றனர்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கொச்சியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சூரிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் கொடுங்கலூர் சென்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் திருவஞ்சைக்களம் சென்றடையலாம்.
    பெருமைகளுக்கு உரிய உடையவருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. ‘உடையவர் ஆலயம்’ என்பது தான் ஆலயத்தின் பெயரே. இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    உடையவரான ராமானுஜர் பல நூல்களை இயற்றியவர். குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். துறவரத்திற்கு பெருமை சேர்த்தவர். விரும்பி இறைவனடி சேர்ந்தவர்.

    காஞ்சியில் இருந்த ராமானுஜர், ஒரு முறை ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் வந்தார். ஆலயத்திற்கு உள்ளே சென்று ரங்கநாதரின் திருவுருவையையும், அழகிய கண்களையும் கண்டு மயங்கி நின்றார் ராமானுஜர். ரங்கநாதப் பெருமாள், ராமானுஜரை ஆசீர்வதித்து அவருக்கு ‘உடையவர்’ என்ற நாமத்தை வழங்கினார்.

    120 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்த ராமானுஜர் பல்வேறு துன்பங்களையும் போராட்டங்களையும் சந்தித்தாலும் இறை வழிபாடு மூலம் அனைத்தையும் வென்றார்.

    தனது கடைசி காலத்தில் உடையவர், இறைவனை அடைய எண்ணம் கொண்டார். ஸ்ரீரங்கனை வேண்டினார். ரங்கனும் அவருக்கு அருள்புரிந்தார்.

    ‘உன்னுடைய தொடர்பு யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் அனை வருக்கும் நான் நற்கதியை அளிக்கிறேன்’ என்றார் பெருமாள்.

    மனம் மகிழ்ந்தார் உடையவர். ஆனால் அவருடைய சீடர்களுக்கு அவரை பிரிய மனம் இல்லை. எனவே தன்னைப் போலவே ஒரு விக்கிரகத்தை செய்யச்சொன்னார் உடையவர்.

    சீடர்களும் அவரைப்போலவே ஒரு விக்கிரகத்தை செய்தனர். அதைக் கட்டி அணைத்து தன்னுடைய சக்தியை அந்த விக்கிரகத்தின் உள்ளே செலுத்தினார். அதனை ஸ்ரீபெரும்புதூரில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் எண்ணப்படியே தை மாதம் புஷ்ய நட்சத்திரத்தன்று அந்த விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இத்தனை பெருமைகளுக்கும் உரிய உடையவருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. ‘உடையவர் ஆலயம்’ என்பது தான் ஆலயத்தின் பெயரே.

    சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். எதிரே கருவறையில் உடையவர் எனும் ராமானுஜரின் திருமேனி உள்ளது.

    இங்கு உடையவருக்கு கோடை உற்சவம் 5 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் திருவாதிரை அன்று உடையவர் வீதிவுலா வருவதுண்டு.

    உடையவரை வேண்டுவதால் தடைபட்ட திருமணம் நல்ல முறையில் நடந்தேறும் என்றும், நாள்பட்ட பிணிகள் விலகும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

    யாராவது இறந்துபோனால் 13-ம் நாள் அவருக்காக அவரது உறவினர் இங்கு வந்து உடையவர் சன்னிதியில் ‘ரியல் சாத்து’ என்ற சடங்கை நடத்துகின்றனர். 5 பேர் திவ்ய பிரபந்தம் ஓதுகின்றனர். இதனால் இறந்தவர் வைகுண்டம் செல்வதாக நம்பிக்கை.

    உடையவரின் சன்னிதிக்கு வடதுபுறம் வெங்கடேச பெருமாள் சன்னிதி உள்ளது. கருவறையில் பெருமாள், பத்மாவதி தாயாருடன் சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாள் நின்றுகொண்டிருக்க தாயார் அமர்ந்த நிலையில் சேவை சாதிக்கும் அமைப்பு சிறப்பானது என்கின்றனர் பக்தர்கள்.

    பெருமாளுக்கு எதிரே சக்கரத்தாழ்வார் காட்சி தரு கிறார். இவரும் அமர்ந்த நிலையிலேயே உள்ளார்.

    இங்கு தாயாரிடம் வேண்டியது அனைத்தும் 3 மாதங்களில் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் தாயாருக்கு சேலை வாங்கி சாத்துவதுடன், 18 மூலிகைகளுடன் அபிஷேகம் செய்து தங்கள் நன்றிக்கடனை தெரிவிக்கின்றனர்.

    தைமாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று பெருமாள்- தாயார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. ஆடி மாதம் ஏகாதசி அன்று பெருமாள்- தாயாருக்கு ஜேஷ்டா அபிஷேகம் நடக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இங்கு வரும் பக்தர்கள், பெருமாள் மற்றும் தாயாரை வணங்குவதுடன் உடையவரையும் வணங்கி அருள்பெற தவறுவதில்லை என்பது உண்மையே.

    அமைவிடம்

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம். ஆட்டோ வசதியும் உள்ளது.
    நவராத்திரியில் பத்து நாட்கள் சண்டிஹோமம் நடைபெறும் ஆலயம், மாசியில் பிரமோற்சவம் காணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்.
    இந்தியக் கூலித் தொழிலாளர்கள் தோற்றுவித்த ஆலயம், சிங்கப்பூர் அரசின் பாரம்பரியச் சின்னமான கோவில், தங்க விமானம், வெள்ளிரதம் கொண்ட கோவில், நவராத்திரியில் பத்து நாட்கள் சண்டிஹோமம் நடைபெறும் ஆலயம், மாசியில் பிரமோற்சவம் காணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்.

    தலவரலாறு :

    சிங்கப்பூர் நகரை செம்மைப்படுத்த ஏராளமான இந்தியர்கள், கூலித் தொழிலாளர்களாக அந்த நாட்டுக்குக் கப்பலில் சென்றனர். அங்கே தினக்கூலியாக வேலைபார்த்த அவர்களுக்கு, வழிபட நம் நாட்டுதெய்வம் இல்லையே என்ற ஏக்கம் இருந்துவந்தது. அதன் பயனால், அன்றைய சுண்ணாம்புக் கம்பம் என்று அழைக்கப்பட்ட, இன்றைய லிட்டில் இந்தியா பகுதியில் கி.பி. 1835-ல் எழுப்பப்பட்ட ஆலயமே, வீரமாகாளியம்மன் ஆலயம்.

    இந்தப் பகுதியில் வாழ்ந்த, இந்தியத் தொழிலாளர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக, இக்கோவில் விளங்கியது. தமிழர்கள் தங்கள் கூலியின் சிறுபகுதியை ஆலய வளர்ச்சிக்கு செலவு செய்து மகிழ்ந்தனர்.

    தொடக்கத்தில் வீரமாகாளியம்மனுடன் பெரியாச்சி அம்மன் இடம் பெற்றது. அதன்பிறகு, விநாயகர், முருகன் ஆகிய தெய்வ வடிவங்களும் இடம் பெற்றன.

    கி.பி. 1908-ம் ஆண்டு ரிச்சர்ட் ஓவன் நோரீஸ் என்பவரிடம் இருந்து, 150 வெள்ளிக்கு நிலம் வாங்கப்பட்டது. அதன்பின் அந்த இடத்தில் ஆலய கட்டுமானத்திற்கு பக்தர்களும், நிர்வாகிகளும் பேருதவி செய்தனர். ஆலயத்தில் வீரமாகாளியம்மன் திருவடிவம் நிறுவப்பட்டது.

    இதன்பிறகு, கி.பி. 1883-ம் ஆண்டு புதிய ஆலயத்திற்கான திருப்பணிகள் தொடங்கின. 1987-ல் ஆலயம் ராஜகோபுரத்துடன் கட்டி முடிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.


    வீரமாகாளியம்மன்

    2012-ம் ஆண்டு ஆலய திருப்பணியின் போது அம்பிகையின் கருவறை விமானத்திற்கு தங்கக் கவசம் அமைக்கப்பட்டு, புதிய ஆறு மாடி கட்டிடமும் கட்டப்பட்டது. 2014-ம் ஆண்டு, சிங்கப்பூரில் முதன்முறையாக உத்தமபட்ச யாகசாலை எனப்படும், வீரமாகாளியம்மனுக்கு மட்டும் 33 யாககுண்டங்கள் அமைத்து மொத்தம் 74 யாககுண்டங்களுடன் மஹாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    இன்று இவ்வாலய வீரமாகாளியம்மன், சிராங்கூன் பகுதிமக் களைக் கடந்து, நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் இஷ்டதெய்வமாய் திகழ்கிறாள்.

    ஆலய அமைப்பு :


    கிழக்கு நோக்கிய ஆலயம் மூன்று நிலைகளைக் கொண்டு கம்பீரமாக நிற்கின்றது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம். அதற்கடுத்து விநாயகர், மூலவர் வீரமாகாளி யம்மன், முருகர், நடராஜர்- சிவகாமி, மாணிக்கவாசகர், காலபைரவர், சின்னக்கருப்பர், பெரியக்கருப்பர், மதுரைவீரன், முத்தால்ராயர், 18 கை துர்க்கை, சரஸ்வதி, சமயபுரத்தம்மன், பெரியாச்சியம்மன், ராமர்- சீதா, லஷ்மணர், அனுமன், சிவன், பார்வதி, நால்வர், நவக்கிரகம், சண்டிகேசுவரர், நாகர், பள்ளியறை எனஅனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன.

    அன்னை வீரமாகாளி நடுநாயகமாக அமர்ந்த கோலத்தில் வலதுகாலை மடக்கி, இடதுகாலை தொங்கவிட்டு எட்டுகரங்களும்.. சிரித்த முகமுகமாக காட்சியளிக்கிறாள். அன்னையின் திருமுகம் நம் துன்பங்களையெல்லாம் மறக்கச் செய்து விடுகிறது.


    மதுரைவீரன், சின்ன கருப்பன், பெரியகருப்பன்

    விழாக்கள் :

    மாசி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. மக நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடக்கிறது. இது தவிர, வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், அஷ்டமியில் பைரவர் அபிஷேகம், பவுர்ணமியில் வீரமாகாளி மற்றும் லட்சுமி துர்க்கை சிறப்பு அபிஷேகம் முதலியவை நடைபெறுகின்றன. நவராத்திரி யில் சண்டியாகம் 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆலயத்தில் காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    பக்தர்களின் மற்றும் தமிழர்களின் வசதிக்காகத் திருமணம் நடைபெற சமுதாயக்கூடம், அன்னதானக் கூடம் என பல்வேறு ஆறு சமூகநலப் பணிகளுக்கு ஆறு மாடிக் கட்டிடம் ஆலயத்தின் பின்புறம் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் காலையும், மாலையும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

    அமைவிடம் :

    சிங்கப்பூர் நகரின் லிட்டில் இந்தியா என்ற பகுதியில், சிராங்கூன் சாலையில் வீரமாகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வந்து செல்ல ெரயில், பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன.
    32 விநாயகர் திருவுருவம் அமையப்பெற்ற திருத்தலம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கோலாலம்பூர் கோர்ட்டுமலை கணேசன் திருக்கோவில்.
    கோலாலம்பூரின் முதல் ஆலயம், நாள்தோறும் 1008 சங்காபிஷேகம் நடைபெறும் அபூர்வ ஆலயம், தங்க விமானம், தங்க காசு மாலை பெற்ற முதல் கோவில், 32 விநாயகர் திருவுருவம் அமையப்பெற்ற திருத்தலம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கோலாலம்பூர் கோர்ட்டுமலை கணேசன் திருக்கோவில்.

    தலவரலாறு :

    மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில், கி.பி.1889-ம் ஆண்டு வாழ்ந்தவர், வாக்னர்துரை என்ற வெள்ளைக்காரர். காவல்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி, பிரபல வழக்கறிஞராகவும் பணிபுரிந்தவர் இவர். இவருக்கு இப்பகுதியில் மிகப்பெரிய பங்களாவும், கோர்ட்டு அலுவலகமும், மிகப்பெரிய தோட்டமும் இருந்தன.

    அந்த பங்களாவில் தோட்ட வேலைபார்த்து வந்த தொழிலாளி ஒரு தமிழர். இயல்பாகவே தெய்வபக்திகொண்ட அவர் தன்னிடம் இருந்த சிறிதளவு தொகையைக்கொண்டு கணேசன் வடிவத்தை உண்டாக்கி, அதனை பங்களாவின் பின்புறம் வைத்து வழிபட்டு வந்தார்.

    நாளடைவில் கணேசரின் புகழ் வெளியே தெரிய ஆரம்பித்து, கணேசரை வழிபடுவோர் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்தது. இதனால் சிறிய சன்னிதி அமைத்து, காலை, மாலை என வழிபாடுகள் நடக்கத் தொடங்கியது.

    இதனைக் கண்டு மனம் பொறுக்காத சிலர், வாக்னர்துரையிடம் புகார் செய்து அந்த ஆலயத்தை அகற்றத் தூண்டினர். இதற்கு செவி மடுத்த துரை, அந்தத் தொழிலாளியைக் கூப்பிட்டு ‘உடனே கோவிலை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் நானே இடித்து அகற்றுவேன்’ என்று ஆவேசப்பட்டார்.

    இவ்வாறு கூறிய ஓரிரு நாளில், வாக்னர் துரைக்கு வாதநோய் ஏற்பட்டது. அவரின் கையும் காலும் அசைவற்றுப்படுக்கையில் கிடந்தார். வெளிநாட்டில் இருந்து வைத்தியர் வந்து மருத்துவம் பார்த்தும், அவர் குணம் பெறவில்லை.

    இதற்குக் காரணம் கணேசரின் கோபமே என்பதை உணர்த்த வாக்னர் துரையின் தமிழ் நண்பர்கள், இது பற்றி அவரிடம் பக்குவமாக எடுத்துக் கூறினர். அவரின் உடலில் திருநீறை பூசிவந்தால் குணம் பெறலாம் எனக் கூறினர். என்றாலும், அவரின் வறட்டுக் கவுரவம் அதைத் தடுத்தது.

    ஆனால் கணேசர், தொழிலாளியின் கனவில், துரைக்கு விபூதியை தந்து தடவி விடும்படி கூறினார். அவர் அவ்வாறே செய்ததும், துரையின் வாதநோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்து, இயல்புநிலைக்குத் திரும்பினார்.

    தன் தவறை உணர்ந்த துரை, அந்த இடத்தில் பெரிய ஆலயம் எழுப்பி வழிபட இடம் தந்து, நிதியுதவியும் செய்தார். இந்தச் சம்பவம் காட்டுத்தீயாக நாடெங்கும் பரவியது. மக்களின் கூட்டமும் அதிக அளவில்கூடத் தொடங்கியது என்கிறது இந்த ஆலய வரலாறு.



    தனிச்சிறப்புகள் :

    உற்சவ மூர்த்தியாக விளங்கும் கணபதி தங்கத்தாலான வடிவம் என்பது மற்றொரு சிறப்பு அம்சம். இவ்வாலயத்தில் நாள்தோறும் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. இது வேறெந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு ஆகும். தங்க விமானம், தங்ககாசு மாலை பெற்ற முதல் ஆலயம் இது. 1008 தங்க காசுமாலையின் காசுகள் ஒவ்வொன்றிலும் 108 மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    விழாக்கள் :

    விழாக்களில் முக்கியத் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் தமிழர்கள் மட்டுமல்லாது சீனர்கள், மலேயர்களும் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆலயம் கோலாலம்பூரில் பழமையான ஆலயமான, மகா மாரியம்மன் திருக்கோவிலின் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

    அமைவிடம்:

    கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மகாமாரியின் ஆலயத்தின் அருகே 1 கி.மீ. தொலைவில் உள்ள புகுலாமா பகுதியின் மேடான இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

    நல்ல நோக்கத்திலான வேண்டுதல்களை நிறைவேற்றுவதில், கோர்ட்டுமலை கணேசன் வள்ளல் என்பதால், இவரை நாடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிய வண்ணம் உள்ளது.

    பத்துமலை சென்றுவரும் கணேசர் :

    இந்த ஆலயத்தின் பக்தர்கள் நன்கொடையால் தங்க ரதம் செய்யப்பட்டுள்ளது. தைப் பூசத்தன்று தங்கம் மற்றும் வெள்ளி ரதங்களில் பவனி வரும் கணேசர் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் ஆலயம் சென்று, தன் தம்பிக்கும், அடியார்களுக்கும் தரிசனம் தந்தபின்பு, மீண்டும் ஆலயம் திரும்புவது வழக்கமாக உள்ளது. வழிநெடுக திரளான மக்கள் அவரை வரவேற்று தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர்.
    ஆயிரம் கண்ணுடையாள் ஆலயத்தில் வீற்றிருக்கும் 3 தேவியர்களின் அவதார சிறப்புகளையும், அருளை பெற பக்தர்கள் வணங்கி வழிபடும் முறைகளையும், அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
    மதுரை அருகே உள்ள ராஜபாளையத்தில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் மகாசக்தி பீடம் இருக்கிறது. இங்கு சமயத்திற்கு வந்து சங்கடங்களை தீர்க்கும் சமய புரத்தாளின், உற்சவ திருநாமமான ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்ற திருநாமத்தோடு அம்பாள் அருள்பாலித்து வருகிறாள். இந்த அன்னை 41 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை ஓடி வந்து களைபவளாக அருளாட்சி செய்து வரு கிறாள்.

    இந்த அன்னையின் ஆலயம் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது. ஆயிரம் கண்ணுடையாள் அம்மனைத் தவிர, இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி கருமாரியம்மன், சொர்ணகர்ஷண பைரவர், நாகராஜர்-நாகராணி, புற்று அம்மன் சுயம்பு பீடம் மற்றும் வாசலில் நின்ற கோலத்தில் 18-ம் படி கருப்பணசாமி ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

    ஆயிரம் கண்ணுடையாள், மகா வராகி தேவி, பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி ஆகிய மூன்று தேவியர்களும் முக்கிய தெய்வங்களாக வீற்றிருந்து அருள்வழங்கும் அற்புதமான திருத்தலம் இது. இந்த மூன்று தேவியர்களும் தனித்தனி சன்னிதியில் கோவிலின் பிரதான தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். பக்தர்களை காக்கும் இந்தத் தேவியர்களின் அவதார சிறப்புகளையும், அருளை பெற பக்தர்கள் வணங்கி வழிபடும் முறைகளையும், அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

    அம்பிகையின் நித்திய கன்னிகளாக தோன்றியவர்கள், சப்த கன்னியர் என்று கூறினாலும் இவர்களின் தோற்றம் பற்றி பல கதைகள் உண்டு.

    வராகி அம்மன்

    பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் சப்த கன்னியர்கள். இந்த வரிசையில் 5-வதாக வராகி அம்மன் உள்ளார். அவர் பஞ்சமி தாய்.. வாழ்வின் பஞ்சங்களை போக்குபவள். வராகி அம்மன் தோற்றம் கோபத்தின் உச்சமாக இருந்தாலும், பக்தர்களுக்கு அன்பை மழையாக பொழிபவள். வராகி அன்னை, திருமாலின் வராக அவதார அம்சமாவார்.

    வராக முகத்தையும், மனித உடலோடு கூடி 4 கரத்தினையும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்ட அம்மன் இவர். மிருக பலம், தேவ குணம் கொண்டு பக்தர்களின் துன்பங்களை நீக்குபவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவராக இந்த அன்னையை வழிபாடு செய்கிறார்கள். பஞ்சமி, பவுர்ணமி அல்லது ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து ஐந்து கிழமைகளில் தேங்காய் முடியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால், வேண்டிய பலனை அள்ளிதருவாள் வராகி என்று புராணங்கள் கூறுகின்றன.

    பிரத்தியங்கிரா தேவி

    நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாளின் உக்கிரத்தை போக்கு வதற்கு வழி தெரியாமல், தேவர்களும் முனிவர்களும் தவித்து நின்றனர். பின்னர் அவர்கள் சிவ பெருமானை வேண்ட, அவர் சரபு என்ற பறவையாக உருவெடுத்து வந்தார். அதாவது பறவையும், பூதமும், மிருகமும் கலந்த புதிய வடிவம் அது. அந்த உருவத்துடன் நரசிம்மருடன் போரிட்டார் சிவபெருமான்.



    அப்போது நரசிம்மர், கண்ட பேரண்டம் என்ற பறவையை தோற்றுவிக்க, அந்தப் பறவை ஈசனை எதிர்த்தது. உடனே சிவபெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணில் இருந்து பிரத்தியங்கிரா தேவியை தோற்றுவித்தார். அந்த பிரத்தியங்கிரா தேவி, பேரண்ட பறவையை அப்படியே விழுங்கினாள். இதையடுத்து சிவபெருமான், நரசிம்மரை வென்று அவரது ஆக்ரோஷத்தை குறைத்து சாந்தப்படுத்தினார். சிவபெருமான் வடிவெடுத்த சரபு பறவை இறக்கையின் ஒரு பகுதியாக பிரத்தியங்கிரா தேவி உள்ளார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பவுர்ணமி, அமாவாசையிலும் மிளகாய் யாகம் செய்து வழிபாடு செய்தால், பிரத்தியங்கிரா தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    ஆயிரம் கண்ணுடையாள்

    வராகி அம்மன், பிரத்தியங்கிரா தேவியருக்கும் முதன்மை தெய்வமாக விளங்குகிறாள், ஆயிரம் கண்ணுடையாள். ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை கோவிலின் பெருவிழா நடைபெறும். அப்போது ஆடி மாத பூக்குழி வைபவம் மிக சிறப்பாக நடைபெறும். சித்ரா பவுர்ணமிக்கு 1,008 கலசாபிஷேகமும், குடும்ப நல வேள்வியும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதே போன்று தை மாத பவுர்ணமியில் இருமுடி திருவிழா நடக்கிறது. பக்தர்கள் மாலை அணிவித்து விரதமிருந்து, செவ்வாடை அணிந்து இருமுடி கட்டி இங்கு வந்து அன்னைக்கு அகல் விளக்கு பூஜையும் நடைபெறும்.

    ஒவ்வொரு திருவிழாவின் போதும் 41 அடி உயர ஆயிரம் கண்ணுடையாளுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம், கூடை கூடையாக மலர் அபிஷேகமும் செய்யப்படும். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இந்த திருவிழாவின் போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    ஆயிரம் கண்ணுடையாளை மனதார வேண்டிக்கொண்டால், பில்லி சூனியம், பூமி, வாஸ்து, வியாபாரம், கடன் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வதாகவும், கல்வி, செல்வம், ஞானம், பெருக வழி கிடைப்பதாகவும், கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லைகள் இன்றி வளமான வாழ்வு கிடைப்பதாகவும் இங்கு அடிக்கடி வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் யாகம், பூஜைகள் வெகு சிறப்பாக நடை பெறும். இந்த விழாக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வடமாநில சிவாலயங் களைப் போன்ற சிறப்பு

    தெய்வீக மணத்துடன் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. ஆயிரம் கண்ணுடையாள், சிவனின் பத்தினி அம்சமானவள் என்பதால், சமீபத்தில் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட பாணலிங்கம் ஆவுடையுடனும், சுற்றி 18 சித்தர்கள் அமர்ந்த கோலத்துடன் பூஜை செய்யும் விதமாகவும் அமைந்த சிலை தனிச் சன்னிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான வட மாநில சிவ ஆலயங்களைப் போன்று, இங்கும் பக்தர்கள் அந்த சிவலிங்கத்தைத் தொட்டு வணங்கி வழிபடுவதுடன், அந்த லிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தும் வழிபடலாம்.
    ×