என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பழஞ்சிறை தேவியை வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், இந்தப் பிறவியில் தொல்லைகள் அகலும் என்றும் கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆதிக் கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய மனைவி, சக்தி சொரூபிணியான பார்வதிதேவி ஆவாள். உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள் அந்த தேவி.

    ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் (பள்ளத்தாக்குகள்) நிரம்பப் பெற்றிருந்தது கேரளம். அதனால் அந்தப் பகுதி ‘மலையாளம்’ என்று அழைக்கப்பட்டது. அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாகக் கிடந்தது. அதனால் அந்த இடத்தை ‘அந்தன் காடு’ என்று அழைத்தனர்.

    உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில், யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடைந்திடவும் அந்த தவத்தை அவர் செய்து கொண்டிருந்தார்.

    முனிவரின் தவத்தை மெச்சிய பார்வதி தேவி, அவர் முன்பாகத் தோன்றி, “இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக. இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்” என்று கூறி மறைந்தாள்.

    தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாலோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார், முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார்.

    நாளடைவில் அந்த வனப் பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுளுக்குப் பின்னர், காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் பல நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததைக் கொண்டு, அந்தப் பகுதி ‘பழஞ்சிறை’ என்று அழைக்கப்பட்டது.

    ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்தப் பகுதியில், அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு, இங்கு ஆலயம் அமைக்கப்பட்டது. பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால், இந்த அன்னையை ‘பழஞ்சிறை தேவி’ என்றே பெயரிட்டு அழைத்தனர். இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக, சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக, இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

    இந்த ஆலயத்தில் அழகு வண்ணச் சிற்பங்கள், கண்களையும் கருத்தையும் கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்பக் கிரகத்தை, 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும்மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதாரக் காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் பங்குனி மாத இறுதியில் திருவிழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வு மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தைப் போல, இந்த ஆலயத்திலும் பொங்கல் வைபம் என்பது மிகவும் பிரசித்திப் பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.



    இந்த விழாவைத் தவிர, மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி ஆலயத்தில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது ‘கன்னியர் பூஜை’ என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறுவயது தோற்றத்தில் இருப்பது போல, பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்கிறார்கள். இந்த நாளில், பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக, சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள்.

    அதே போல் இந்த ஆலயத்தில் நடைபெறும் பூதபலி பூஜையும், பஞ்சபூத பொங்கல் விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற ஆலய பூசாரி, தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி, மூவர்ண பட்டு உடுத்தி வருவார். ஆலயத்தின் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்நோக்கிச் செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்கு பலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

    பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண்ணால் உருவாக்கப்பட்ட பானையில், கைகுத்தல் அரிசியை போடுவார்கள். பானையில் நீர் விட்டு, நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குரவை ஒலி ஆகியவை எழுப்பப்படும். பொங்கல் தயாரானதும், வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது. இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு ‘பஞ்சபூத பொங்கல்’ என்று பெயர்.

    நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ‘சண்டி ஹோமம்’ நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடக்கும்.

    இத்தலத்தில் அருளும் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து, சுயம்வர அர்ச்சனை நடத்தினால், திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. பழஞ்சிறை தேவியை வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், இந்தப் பிறவியில் தொல்லைகள் அகலும் என்றும் கூறப்படுகிறது.

    தோற்றப்பாட்டு


    அருள்சுரக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும். விழாவில் ஒவ்வொரு நாளும், சில பக்தர்கள் தங்கள் இனிய குரலில் ‘தோற்றப்பாட்டு’ என்னும் பாடலைப் பாடுவார்கள். அன்னையின் அவதார மகிமை இந்தப் பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலைப் பாடுபவர்கள் அதற்கு முன்பாக 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இந்தப் பாடலைக் கேட்டாலே, அனைத்து பாவங்களும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் அமைந்துள்ளது, பழஞ்சிறை தேவி கோவில்.
    விழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற இடத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், அரவான் பலியிடும் விழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
    மகா விஷ்ணு பல சமயங்களில் மோகினி அவதாரம் எடுத்திருப்பதை புராணங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அமிர்தத்தை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் வழங்குவதற்காக மோகினி அவதாரம் எடுத்தார். அதே போல் மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரவானை களப்பலியிடும் முன்பு, மோகினியாக அவனை மணம் செய்து கொண்டார் என்று புராணங்கள் சொல்கின்றன.

    மகாபாரதப் போரின்போது பாண்டவர்களின் வெற்றிக்காக சர்வ வல்லமை படைத்த ஒருவரைப் பலியிட முடிவு செய்யப்பட்டது. யாரும் உயிரை விட முன்வராத நிலையில், அர்ச்சுனனின் மகன் அரவான் ஒப்புக்கொண்டான். ஆனால் அதற்கு முன்பாக தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். ஆனால் ஒரே நாளில் இறப்பைத் தழுவப் போகிறவனுக்கு யார் தான் பெண் தர முன்வருவார்கள். எனவே மகாவிஷ்ணுவே, மோகினியாக அவதரித்து, அரவானை மணம் புரிந்தார்.

    மறுநாள் யுத்த களத்தில் அரவான் பலியிடப்பட்டான். கணவனை இழந்த மோகினி, விதவைக் கோலம் தரித்து கணவனின் இழப்பை நினைத்து கதறி அழுதார் என்பது வரலாறு.

    விழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற இடத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், அரவான் பலியிடும் விழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மகாவிஷ்ணுவின் அம்சமாக பாவிக்கப்படும் திருநங்கைகளின் திருவிழாவாகவும் இது திகழ்கிறது. இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் இங்கு வந்து சேர்வார்கள். இந்த விழாவில் அரவானை, தங்களுடைய கணவனாக ஏற்றுக்கொண்டு திருநங்கைகள் திருமணம் செய்து கொள்வார்கள். மறுநாள் அதிகாலையில் அரவான் களப்பலி நடந்து, திருநங்கைகள் விதவைக் கோலம் பூணும் காட்சி நடத்தப்படும்.

    கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து, அரவானை வழிபாடு செய்தால் உடல் நோய்கள் குணமாகும். ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் பிணிகள் மறையும். திருநங்கை கள் தங்கள் வாழ்வில் அனைத்து வகையான பேறுகளும் பெற்று மகிழ்வார்கள். மரண பயம் விலகும் என்று சொல்லப்படுகிறது.

    சித்ரா பவுர்ணமி அன்று இந்த ஆலயத்தில் சித்திரை தேரோட்டம் நடைபெறும். அப்போது விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசி வணங்குவார்கள்.

    விழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தென் மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கு வசித்த நாடார் சமுதாயத்தினர் ஏராளமானோர் சுமார் 1850-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பஞ்சம் பிழைக்க நிலக்கோட்டை வந்ததாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் நிலக்கோட்டை பகுதி மக்கள் பிளேக் நோய், காலரா, அம்மை போன்ற நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள்.

    இதை அறிந்த நாடார் சமுதாயத்தை சேர்ந்த பெரியோர்கள் இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம்தான் காரணம் எனக் கருதினார்கள். எனவே அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அப்போது முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஆரம்ப காலத்தில் மிகச்சிறிய அளவில் கோவிலை ஏற்படுத்தினார்கள். மேலும் கோவில் அருகே ஒரு தெப்பக்குளமும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைத்து பொதுமக்கள் அம்மனை வேண்டி வணங்கி வந்தனர். அதன் எதிரொலியாக நிலக்கோட்டையில் ஏற்பட்ட நோய் தாக்குதல் விரைவாக குறைந்தன.

    அம்மனின் அருளால்தான் இந்த அற்புதங்கள் நடந்தது என்று நம்பிய நாடார் சமுதாயத்தினர் 1912-ம் ஆண்டு அந்தக் கோவிலில் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரையிலும் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள்.

    அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1987-ம் ஆண்டு கலைநயத்துடன் பல்வேறு வேலைப்பாடுகளுடன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகள் கொண்ட 50 அடி உயர ராஜகோபுரம் அமைத்து மிகப்பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்தக் கோவில் வளாகத்தில் முதல் கடவுள் விநாயகர், சுப்பிரமணியசுவாமி, துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணாசலேஸ்வரர், பைரவர், லிங்கோத்பவர், ஆஞ்சநேயர் மற்றும் ஒரே இடத்தில் ரெங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளின் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் நேர்த்திக்கடனை சொல்லி வழிபட்டு வருவதும், அதை நிறைவேற்றித்தரும் தெய்வமாக அம்மன் வீற்றிருக்கிறாள் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    கரும்பு தொட்டில் குழந்தை

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் புத்தம் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து அதை கரும்பு தொட்டில் கட்டி குழந்தையை அதில் வைத்து நிலக்கோட்டை முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள். பின்னர் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    இதையடுத்து தொட்டில் கட்டிய கரும்புகளை கோவில் முன்புள்ள நிர்வாகிகளிடம் ஒப்படைத்து காணிக்கையாக செலுத்துவார்கள். மாரியம்மன் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கரும்புகள் பெருகிய வண்ணம் இருக்கிறது. இதுகுறித்து கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் கூறும்போது, அம்மனின் அருளால் ஆண்டுதோறும் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்கள்.

    நோய்களுக்கு அருமருந்தாகும் தீர்த்தம்

    நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடை காலத்தில் பரவும் நோய்களில் ஒன்றான அம்மை நோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய் தீர அம்மனை மனதார வேண்டிக் கொள்வார்கள். குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இதுபோல் மற்ற நோய்களுக்கும் அம்மனின் தீர்த்தம் மருந்தாக பயன்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என கோவில் நிர்வாகிகளும், பூசாரிகளும் தெரிவித்தனர்.

    மிளகு, உப்பு காணிக்கை


    நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பல இடர்பாடுகளும், துன்பங்களும் நீங்குகின்றன. மனிதர்களுக்கு ஏற்படும் பருக்கள், உடலில் தோன்றும் பல தொந்தரவுகள் தீர அம்மனுக்கு மிளகு, உப்பு காணிக்கை செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அதன்படி நோய் குணமானதும் திருவிழாவின்போது அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் மிளகு, உப்பு காணிக்கையை கொடிக்கம்பத்தில் செலுத்துவார்கள். இதேபோன்று உடலிலும், மனதிலும் இன்னல்களுக்கு ஆளாகும் போது அதனை சரியாக்க அம்மனை வேண்டி வருவார்கள். இதனை தீர்த்துவைக்கும் அம்மனுக்கு பிடித்த மிளகு, உப்பை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதை அந்தகாலம் முதல் இன்று வரை இப்பகுதி மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.

    மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்


    நிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர்களின் அக்னிசட்டி ஊர்வலத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். 
    மிகவும் புகழ்வாய்ந்த ஆலயம் கடலூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் புனிதவல்லி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவில்.
    ஆன்மிக அதிர்வலைகள் நிரம்பிய நாடு தமிழ்நாடு. கண்ணுக்கு தெரியாத ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும் இன்னும் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றன. கலியுகத்தில் இடர்களால் மக்கள் பரிதவிப்பதை தவிர்க்கவே பல ஆலயங்கள் வழிபாட்டில் உள்ளன. அந்த வகையில் மிகவும் புகழ்வாய்ந்த ஆலயம் தான், கடலூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் புனிதவல்லி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவில்.

    நந்திகேஸ்வரர் தமது சீடர்களாகிய புஜண்ட மகிரிஷிக்கும், மார்க்கண்டேயருக்கும், சிவபெருமானின் பெருமையை இந்த இடத்தில்தான் உபதேசித்து அருளினார். அதன் பின்னர் தான் சித்தர் காகபுஜண்டர் இங்கு சிவலிங்கம் நிறுவி வழிபட்டார் என்பது தல வரலாறு. மூலஸ்தானத்தில் உள்ள புஜண்டேஸ்வர சுவாமியாக அருள்பாலிக்கும் சிவலிங்கமும், புனிதவல்லி அம்பாளும், நந்தி பெருமான் சிலையும் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானதாகும். கோவிலின் தல விருட்சமாக நாகலிங்க மரம் விளங்குகிறது.

    சித்தர் காகபுஜண்டரால் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதற்கு சான்றாக கோவிலின் தென்புறத்தில் வடக்கு திசை பார்த்தவாறு காகபுஜண்டர், தனது மனைவி பகுளாதேவியுடன் அருள்பாலிக் கிறார். காகபுஜண்டர் பல இடங்களில் சிவலிங்கம் நிறுவி வழிபாடுகள் செய்திருந்தாலும், தமிழகத்திலேயே காகபுஜண்டர் பெயரில் உள்ள சிவலிங்கம் இது மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்.

    காகபுஜண்டர் ஜோதிடத்தில் மிகவும் வல்லவர். இவரை வழிபடுவதன் மூலம், நமக்கு நவக்கிரக தோஷங்கள் இருந்தால் விலகி விடும். இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று காகபுஜண்டருக்கும், பகுளா தேவிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. புஜண்டேஸ்வரர் முன்பு 21 நெய் விளக்குகள் ஏற்றி சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டு, சித்தரையும் வழிபாடு செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும் பித்ரு தோஷங்கள் நீங்கும்.

    கோவிலை வலம் வரும்போது விநாயகர், வள்ளி -தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

    கடலூர் - சிதம்பரம் சாலையில் கடலூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலப்பாக்கம் கிராமம். இங்குதான் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
    முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. நெல்லை மாவட்டத்தில் இப்புண்ணிய மலை அமைந்துள்ளது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது. நெல்லையில் இருந்தும் மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும். இந்த தோரணமலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான்.

    இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா?

    தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து பார்க்கும் தேரையர் சித்தர் இருவரும் பல நூறு ஆண்டுகளாக வழிபட்ட பெருமை, மகிமையும் இந்த முருகப் பெருமானுக்கு உண்டு. தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான முருகத் தலங்களில் அறுபடை வீடுகள் உள்பட எந்த ஒரு தலத்துக்கும் இல்லாத மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாக இது கருதப்படுகிறது.

    பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். நீங்கள் என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் சரி... தொழில் விருத்தி ஆகவேண்டுமா? குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளா? கடன் தொல்லையா? நல்ல வேலை வேண்டுமா? பதவி உயர்வு வேண்டுமா? திருமணம் நடக்க வேண்டுமா? புத்திரப் பாக்கியம் வேண்டுமா? இப்படி நீங்கள் என்ன கேட்டாலும் தோரண மலை முருகன் வாரி வழங்க தயங்குவதே இல்லை.

    அகத்தியரின் மருத்துவ ஆய்வுக்கு வித்திடப்பட்ட இடம் இந்த தோரணமலை என்பது குறிப்பிடத்தக்கது. அகத்தியரின் சீடராக வந்து சேர்ந்த தேரையரும் மருத்துவத்தில் நிறைய புதுமைகளை செய்தார். அவர்கள் இருவராலும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோரணமலை மிகப்பெரும் மருத்துவ தொழிற்சாலை போல செயல்பட்டது.

    அவர்கள் அந்த மலையில் இருந்த போது, தங்கள் இஷ்ட தெய்வமான இந்த முருகரை வழிபட்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார். அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார். மிகவும் சிறப்பாக வழிபடப்பட்ட முருகனும் கால ஓட்டத்தில் அருகில் உள்ள சுனைக்குள் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. தோரணமலை அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்த நா.பெருமாள் என்பவர் கனவில் ஒருநாள் முருகப்பெருமான் தோன்றினார்.

    “நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வைத்து வணங்குங்கள்” என்றான். மறுநாள் விடிந்ததும் பெருமாள் ஆட்களை அழைத்து கொண்டு மலை உச்சிக்கு சென்றார். சுனையில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றினார்கள். சொன்னபடி தோரணமலைமுருகன் அங்கே இருந்தார்.

    அந்த சிலையை எடுத்து மலை அடி வார குகையில் வைத்து வழிபட்டனர். இன்றும் அந்த சிலையே தோரணமலை சன்னிதானத்தில் மூலவராக உள்ளார். பெருமாளின் மகனும் ஆசிரியருமான ஆதிநாராயணன், தோரணமலை முருகன் பற்றிய சிறப்புகளை பரப்பச் செய்தார். தற்போது அவருக்கு 84 வயது ஆகிறது. 60 ஆண்டுகளாக தோரணமலை முருகனுக்கு சேவை செய்த சிறப்பு அவருக்கு உண்டு.

    தற்போது அவரது குமாரர் செண்பகராமன், தோரணமலை முருகனின் சிறப்புகளை உலகம் முழுமைக்கும் பரவச்செய்யும் தன்னலமற்ற பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதனால் தோரணமலை முருகனை வழிபட வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.

    தோரணமலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1 தமிழ்ப்புத்தாண்டு விழா மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    தோரணமலை முருகன் பற்றிய கூடுதல் தகவல்களை செண்பகராமனிடம் 99657 62002 என்ற எண்ணில் பெறலாம்.

    பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அரூப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிர்ப்பதை உணர முடியும்.

    மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது. எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும்.

    இத்தகைய சிறப்புடைய இந்த புண்ணியமலை உச்சியில் முக்கியமான வசதிகள் இல்லாதது மிகப்பெரும் மனக்குறைவாக உள்ளது. முருகப்பக்தர்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் அந்தத்திருப்பணிகளை செய்து முடித்து விடமுடியும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.
    ராஜராஜ சோழன் கட்டிய காலத்தால் அழியாத ஒரு கட்டிடக் கலைதான் தஞ்சை பெரியகோவில். இந்த ஆலயம் ஓவியக் கலைகளில் சிறப்பு மிக்க இருப்பிடமாகவும் விளங்குகிறது.
    தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு, சோழநாட்டை கி.பி. 985 முதல் கி.பி.1014 வரையான ஆண்டுகளில், ஆட்சி செய்தவர் அருண்மொழிவர்மன். சோழ தேசத்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கி, அவர்களை வளமாக வாழச் செய்ததுடன், தன்னுடைய தோள் வலிமை பறைசாற்றும் விதமாக பல போர்களை வென்று, தன் தேசத்து எல்லையை விரிவுபடுத்தியர் இவர். தன்னுடைய செய்வதற்கரிய செயல்களின் காரணமாக சிவபாதசேரகன், ராஜகேசரி உள்ளிட்ட 42 பட்டங்களை பெற்றவர் என்றாலும், ராஜராஜன் என்ற பெயர்தான் அவரது புகழை வான் ஓங்கி ஒலிக்கச் செய்தது என்றால் அது மிகையல்ல.

    ராஜராஜ சோழன் கட்டி பல ஆலயங்களும், கட்டிடங்களும் இன்றும் அவரது பெயர் சொல்லும் வகையில் புகழ்பெற்று விளங்குகின்றன. அவற்றில் காலத்தால் அழியாத ஒரு கட்டிடக் கலைதான் தஞ்சை பெரியகோவில். இந்த ஆலயம் ராஜராஜ சோழனுக்கு எவரும் எட்ட முடியாத உச்சத்தை தொட வழிவகை செய்தது. அதோடு இந்த ஆலயம் ஓவியக் கலைகளில் சிறப்பு மிக்க இருப்பிடமாகவும் விளங்குகிறது.

    யுனெஸ்கோ அமைப்பு, தஞ்சை பெரியகோவிலை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து ஆலயங்களிலும் ராஜகோபுரங்களே முதன்மை பெறும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மூலவர் வீற்றிருக்கும், தட்சிண மேரு என்ற விமானமே அற்புத அதிசயமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அசையாத, அழியாத 216 அடி உயரமுள்ள இந்த விமானத்துக்கு, பூமியில் போடப்பட்டிருக்கும் அஸ்திவாரம் வெறும் 6 அடி மட்டுமே. விண்தொடும் இந்த விமானத்தின் கட்டிடக்கலையே, பழந்தமிழனின் கட்டுமானக் கலையை உலகுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

    தஞ்சாவூருக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு சிறப்பு தலையாட்டி பொம்மை. இந்த பொம்மை எப்படி சாய்ந்தாலும் எழுந்து நிற்குமே தவிர, கவிழ்ந்து விழாது. அதுபோலவே கம்பீரமானதாக எழுந்து நிற்கிறது தஞ்சாவூர் பெரிய கோவில் விமானம் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.

    சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் பாடிய பாடல்கள், தேவாரப் பாடல்கள் எனப்படுகின்றன. இந்த தேவாரப் பாடல்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள், தில்லையில் செல்லரித்துக் கிடப்பதை அறிந்த ராஜராஜ சோழன், தனது மதிநுட்பத்தால் அந்த ஓலைச் சுவடிகளை மீட்டு, உலகமெங்கும் தேவாரப் பாடல்களை உலவவிட்டான் என்பது வரலாற்று நிகழ்வாகும்.

    தஞ்சையின் மையப்பகுதியில் காட்சிதரும் பெரிய கோவிலில், பிற்காலத்தில் மராட்டியர்கள் எழுப்பிய நுழைவு வாசல் காட்சி தருகிறது. அதைக் கடந்து சென்றால், ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய கேரளாந்தகன் வாசல் உள்ளது. அதற்கடுத்து மூன்று நிலை கொண்டதாக எழுந்து நிற்கும் ராஜராஜசோழன் கட்டிய கோபுர வாசல் நம்மை வரவேற்கிறது. ராஜராஜன் வாசலின் இருபுறமும் உள்ள, யானையை விழுங்கும் பாம்பு, துவாரபாலகர்களின் காலை சுற்றியிருக்கும் பாம்பு ஆகியவை சிறப்பு வாய்ந்த சிற்பங்களாக பார்க்கப்படுகின்றன.

    கோவிலின் உள்ளே இருக்கும் தனி மண்டபத்தில் 19½ அடி நீளம், 8¾ அடி அகலம், 12 அடி உயரத்துடன், ஒரே கல்லால் ஆன, 25 டன் எடைஉள்ள பெரிய நந்தி காண்போரை வியக்க வைக்கிறது. நந்தி மண்டபத்தை அடுத்து, சில படிகள் ஏறினால் மகா மண்டபம் உள்ளது. அதன் வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் துர்க்கா தேவியும் வீற்றிருக்கிறார்கள்.

    அரங்கம் போல அமைந்த மகா மண்டபத்தில்தான், தெய்வங்களின் செப்பு சிலைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மீட்டுக் கொண்டுவரப்பட்ட, ராஜராஜன் ஐம்பொன் சிலையும் இங்கு வைத்துதான் வழிபடப்படுகிறது.

    கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரியது என்று போற்றப்படுகிறது. 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் உள்ள ஆவுடையாரின் மேல், 13 அடி உயரமும் 23½ அடி சுற்றளவும் உள்ள லிங்கம் பிரமாண்டமாய்க் காட்சி தருகிறது. இந்த ஆலயத்தில் சிவலிங்க வழிபாடு, மகுடாகம அடிப்படையில் அமைந்துள்ளது. உள்கூடாக அமைந்துள்ள விமானத்தை 26¾ சதுர அடியுள்ள பிரம்மராந்திரக் கல் ஒன்று மூடியுள்ளது. 10 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆன நந்திகள் நான்கு மூலைகளிலும் நிறுத்தப்பட்டு எடையைச் சமன் செய்கின்றன. மூலவர் ‘பிரகதீஸ்வரர்’ என்றும், ‘பெருவுடையார்’ என்றும் போற்றப்படுகிறார்.

    கருவறையில் இரு சுவர்களுக்கும் இடையே கூடு போன்ற அமைப்பு உள்ளது. அங்கே சுவர்களில் வண்ண ஓவியங்கள் சித்திரக் கலையின் சிறப்பைச் சித்தரிக்கின்றன. மேல் தளச் சுற்றில் பலவகையான நடன பாவங்கள் சிற்பங்களாக உள்ளன.

    இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு இவைகள் அனுமதிக்கபடுவதில்லை. தனி புத்தகமே எழுதும் ஆளவுக்கு கோவிலின் உள்ளும், புறமும் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. வெளிச் சுற்றில் தென்மேற்குப் பகுதியில் மராட்டிய மன்னரால் கட்டப்பட்ட விநாயகர் கோவிலும் வடமேற்கு பகுதியில் நாயக்க மன்னரால் எழுப்பப்பட்ட வள்ளி- தேவசேனா சமேத மயில் மீது வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமான் கோவிலும் மயில் மண்டபமும் விளங்குகின்றன.

    ஆனைமுகன், ஆறுமுகன் ஆலயங்களுக்கு இடையே கருவூர் சித்தர் கோவில் அமைந்துள்ளது. கருவூரார் தனது திருவிசைப்பாவில் உள்ள 11 பாடல்களில் பெருவுடையாரை புகழ்கின்றார்.

    கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், கோமுகம் அருகே உயரமான ஒரு கோவிலில் சண்டிகேசரும் அருள் பாலிக்கிறார்கள்.

    நந்தி மண்டபத்துக்கும், பெருவுடையார் கோவிலுக்கும் இடையே தெற்கு பார்த்த அழகிய கோவிலில் ஆறடி உயரத்துடன் நின்றபடி பெரியநாயகி அருள் வழங்குகிறார். இது 12-ம் நூற்றாண்டில் பாண்டியரால் கட்டப்பட்டது. அதன் அருகே நாயக்கர் கால, நடராசர் மண்டபம் தனியே உள்ளது.

    பரந்த வெளிப்பிரகாரத்தில் அம்மன் சன்னிதிக்கு நேரே எழுந்தருளியுள்ள மகா வராகி அம்மன் மிகவும் பிரசித்து பெற்றவர். இவருக்கு நவராத்திரி வழிபாடும், பஞ்சமி திதி வழிபாடும் நடத்தப்படுகின்றன.

    திருவிசைப்பாவில் ஐந்து மரங்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதும் அங்கேயுள்ள பழமையான வன்னிமரம் ஒன்றே தலவிருட்சம் என்று பேசப்படுகிறது.

    தமிழரசன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி மாத சதயத் திருவிழா அரசு விழாவாக இரு தினங்கள் கொண்டாடப்பட்டாலும் சிவாலயங்களுக்குரிய பிரதோஷம், மகா சிவராத்திரி, கார்த்திகை சோமவாரங்கள், ஆருத்ரா தரிசனம் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

    இருப்பினும், தஞ்சைப் பெரிய கோவிலில் 18 நாள் சித்திரைப் பெருந்திருவிழா சிறப்பினும் சிறப்பாக கருதப்பட்டு, கொடி ஏற்றத்துடன், தினமும் அலங்காரங்களுடன் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 15-ம் நாளில் புதிதாக செய்யப்பட்ட தேரில் கடந்த 5 ஆண்டுகளாக சித்திரைத் தேரோட்டம் நான்கு ராஜ வீதிகளிலும் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சி.

    பரந்த வெளிகளுடன் உயர்ந்த கோட்டை மதில் சுவர்களும் நீர் நிறைந்த அகழியும் சூழ்ந்த இந்த அற்புத ஆலயத்துக்கு தமிழகம், அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டவர்கள் பலரும் தினமும் சுற்றுலாவாகவும் வழிபாட்டிற்காகவும் வந்து மகிழ்கின்றனர். அனைத்து மூர்த்தங்களும் பெரியதாக இருப்பதால் இந்த ஆலயம் ‘பெரிய கோவில்’ என்றே போற்றப்படுகிறது.
    108 திவ்ய தேசங்களில் மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வைணவ தலங்களில் 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அடுத்ததாக திருப்பதி-திருமலை ஏழுமலையானை சொல்வார்கள். மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயமூலவருக்கு தேவராஜபெருமாள் என்று பெயர். உற்சவரை பேரருளாளன் என்று அழைக்கிறார்கள். தாயாருக்கு பெருந்தேவி தாயார் என்று பெயர் சூட்டி உள்ளனர். இத்தலத்து பெருமாள் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக 24 படிகளை ஏறிச்சென்று தரிசிக்க வேண்டி உள்ளது. பெருந்தேவி தாயார் தனி சன்னதியில் நின்று அருள்பாலிக்கிறார்.

    சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதிக்கு எதிரில் ஆலயத்தின் திருக்குளம் இருக்கிறது. இந்த திருக்குளம்தான் இப்போது அனைத்து பக்தர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கிறது.

    காரணம், இந்த திருக்குளத்துக்குள் மூழ்கி கிடக்கும் அத்திவரதர் நமக்கு ஆசி வழங்க குளத்தில் இருந்து வெளியே வர இருப்பது தான்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அத்திவரதர் இந்த திருக்குளத்துக்குள் இருந்து வெளியில் வருவார். 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிறகு மீண்டும் திருக்குளத்துக்குள் போய் விடுவார். அடுத்து 40 ஆண்டுகள் கழித்துதான் அவர் மீண்டும் வெளியில் வருவார்.

    இதற்கு முன்பு 1939-ம் ஆண்டு அத்திவரதர் வெளியில் வந்தார். அதன் பிறகு 40 ஆண்டுகள் கழித்து 1979-ம் ஆண்டு வெளியில் வந்தார். இதைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து தற்போது (2019) மீண்டும் அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து வெளியில் வர இருக்கிறார். இந்த அத்திவரதர்தான் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஒரு காலத்தில் மூலவராக திகழ்ந்தார். இவர் மரத்தால் செய்யப்பட்டவர் ஆவார். ஏதோ சில காரணங்களால் அவர் குளத்துக்குள் செல்ல நேரிட்டது. என்றாலும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற ஐதீகப்படி அவர் வெளியில் வருவார்.

    ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பஞ்சாங்க குறிப்புகளின் அடிப்படையில் அத்திவரதரை வெளியில் எடுப்பார்கள். தற்போதைய நிலவரப்படி ஜூன் மாதம் 26-ந்தேதி அல்லது ஜூலை மாதம் 1-ந்தேதி அத்திவரதரை திருக்குளத்துக்குள் வெளியில் அழைத்துவர முடிவு செய்துள்ளனர்.

    40 ஆண்டுகளுக்கு வெளியில் யாருக்கும் தன்னை தெரியாதபடி தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் அத்திவரதர் எந்த இடத்தில் மூழ்கி இருக்கிறார் என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆலயத்தின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கு பகுதியில் அனந்தசரஸ் திருக்குளம் அமைந்துள்ளது. அந்த திருக்குளத்தின் உள்ளே இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. அதில் நீராழி மண்டபமும் ஒன்றாகும்.

    இந்த மண்டபத்தின் கீழே அத்திவரதரை சயன கோலத்தில் வைத்துள்ளனர். அத்திவரதர் மரத்தால் செய்யப்பட்டவர் என்பதால் நீரில் மிதந்து விடக்கூடாது என்பதற்காக நான்கு புறமும் தடுப்பு வைத்துள்ளனர். மேலும் வெள்ளி தகடு பதித்த பெட்டியில் அவர் இடம் பெற்றுள்ளார். அவர் பள்ளிக்கொண்டிருக்கும் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஒருபோதும் தண்ணீர் வற்றுவதே கிடையாது. அதனால்தான் அத்திவரதரை அவ்வளவு எளிதில் யாரும் பார்க்க முடியாது. 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அந்த குளத்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றி விட்டு அத்திவரதரை வெளியில் எடுத்து தரிசனம் பெற வைப்பார்கள்.

    இந்த அத்திவரதர் பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்று வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாகத்தீயில் இருந்து தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டதால் அவர் அசரீரி மூலம் தன்னை குளத்துக்குள் வைக்கும்படி கூறி விட்டாராம். அதன் பிறகு பழைய சீவரத்தில் இருந்து கல்எடுத்து அதில் சிலை செய்து வரதராஜ பெருமாள் ஆலயத்தில் தேவராஜ பெருமாளாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    அத்திவரதர் திருக்குளத்துக்குள் சென்றதற்கு வேறு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. யாகத்தீயில் இருந்து தோன்றியதால் உஷ்ணத்தை தணித்துக் கொள்ளவே அவர் திருக் குளத்துக்குள் வாசம் செய்வதாக பேச்சுவழக்கில் கூறப்படுகிறது. திருக்குளத்தில் இருந்து வெளியில் வந்ததும் வசந்த மண்டபத்தில் 48 நாட்களுக்கு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து சேவை சாதிப்பார். 24 நாட் கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் சேவை சாதிப்பார்.

    அந்த 48 நாட்களும் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் திருவிழா கோலமாக காணப்படும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் வரும் அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் காஞ்சீபுரத்தில் திரள்வார்கள்.

    ஒரு நாளைக்கு சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு அத்திவரதரை சுமார் 25 லட்சம் பக்தர்கள் நேரில் பார்த்து தரிசனம் செய்ய வாய்ப்புள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவையே இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பெரும்பாலும் வாழ்நாளில் ஒரு தடவைதான் ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

    அத்திவரதரை சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் ஆலயத்தினர் மேற்கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் அவர்களை ஒரு வாசல் வழியாக வரவழைத்து மற்றொரு வாசல் வழியாக வழியனுப்ப ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுபோல அத்திவரதரை பக்தர்கள் தரிசிப்பதற்காக எந்த இடத்தில் வைக்கலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக அரச மரம் உள்ளது.

    கீதையில் கிருஷ்ண பகவான் தனது வடிவமாக குறிப்பிட்ட அரச மரமாக இந்த அரச மரம் கருதப்படுகிறது. இந்த மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியை திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை தினத்தன்று சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாக கிடைக்கும் என்று ஐதீகம் உள்ளது. ராமானுஜருக்காக கூரத்தாழ்வார் கண் பார்வை இழந்தது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அவருக்கு மீண்டும் வரதராஜ பெருமாள் ஆலயத்தில்தான் கண் பார்வை திரும்ப கிடைத்தது. எனவே இந்த ஆலயத்தில் வழிபட்டால் கண் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

    மூலவரை தரிசனம் செய்ய கீழே இருந்து 24 படிகளை ஏறி செல்ல வேண்டும். இந்த 24 படிகளும் காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை குறிப்பாக சொல்கிறார்கள். எனவே இந்த படிகள் ஏறி செல்லும்போது பெருமாளை நினைத்தபடியே செல்ல வேண்டும்.

    வரதர்’ என்ற பெயர் எப்படி வந்தது?

    காஞ்சீபுரத்தில் ஒரு தடவை பிரம்ம தேவர் தனது செயல்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்திற்கு அவர் தனது மனைவி சரஸ்வதியை அழைக்கவில்லை. இதனால் பிரம்மா மீது சரஸ்வதிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. மனைவி இல்லாமல் பிரம்மாவால் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவானது. இதனால் காயத்ரி மற்றும் சாவித்திரியின் துணைக்கொண்டு பிரம்மா தொடங்கினார்.

    இதை அறிந்த சரஸ்வதி அந்த யாகத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்தாள். அவள் வேகவதி ஆறாக மாறி யாகத்தை அழிக்க கரைபுரண்டு வந்தாள். இதை கண்டு பெருமாள் அந்த நதியின் குறுக்கே படுத்து சயன கோலமாக தன்னை வெளிப்படுத்தினார். இதை கண்டதும் நதியாக இருந்த சரஸ்வதி தனது பாதையை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டாள்.

    இதை அறிந்த பிரம்மா மிகவும் நெகிழ்ந்து போனார். தனக்காக ஆற்றின் குறுக்கே படுத்த பெருமாளை வணங்கினார். அப்போது தேவர்களும், ரிஷிகளும் பெருமாளை வணங்கி தங்களது விருப்பங்களும் நிறைவேற வரம் கேட்டனர். அவர்கள் கேட்டதையெல்லாம் பெருமாள் இல்லை என்று சொல்லாமல் வாரி வாரி வழங்கினார். இதனால் அந்த பெருமாளுக்கு கேட்டவரம் தருபவர் என்ற பெயரில் வரதர் என்ற பெயர் உருவானது.

    தோஷங்கள் போக்கும் தங்க-வெள்ளி பல்லி

    சிருங்கி பேரர் என்னும் முனிவரின் இருமகன்கள் கவுதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். ஒருநாள் அவர்கள் பூஜைக்கு கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்தன. இதை கண்ட முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்து விட்டார்.

    பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என தெரிவித்தார். அதன்படி இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.

    பெருமாள் அவர்கள் இருக்கும் மோட்சத்துக்கு செல்ல வழிகாட்டினார். அதோடு சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்கும் என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி நலம் உண்டாகும். சூரியன், சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.

    இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் வரதராஜபெருமாள் ஆலயத்தின் கருவறை பின்பகுதியில் மேற்கூரையில் தங்கம், வெள்ளியில் பல்லிகள் அமைத்துள்ளனர். பக்தர்கள் அந்த பல்லிகளை தொட்டு தடவி வணங்குகிறார்கள். இதன் மூலம் தங்கள் தோஷங்கள் நிவர்த்தி பெறுவதாக நம்புகிறார்கள். இதனால் வட மாநில மக்களிடம் வரதராஜபெருமாள் ஆலயம் பல்லி ஆலயம் என்று புகழ் பெற்றுள்ளது.

    தினமும் வரதரை வழிபடலாம்


    40 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குளத்தில் இருந்து வெளியில் வர இருக்கும் அத்திவரதரை எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பணிபுரியும் சம்பத்குமார் பட்டர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

    1939-ம் ஆண்டு நான் பிறந்தேன். இப்போது எனக்கு 80 வயதாகிறது. நான் பிறந்த ஆண்டில்தான் அத்திவரதர் வெளியில் வந்திருந்தார். எனவே அந்த ஆண்டு அவரை நான் தரிசிக்க இயலவில்லை. அதன் பிறகு 1979-ம் ஆண்டு அத்திவரதரை வெளியில் வந்தபோது நான் கண்குளிர அவரை தரிசித்து ஆசி பெற்றேன்.

    இப்போது மீண்டும் 2-வது முறையாக அத்திவரதரை தரிசிக்க உள்ளேன். என்னை போன்று அத்திவரதரை 2-வது தடவை தரிசிக்க இருப்பவர்கள் பலர் உள்ளனர். வேங்கடவரத தத்தாச் சாரியார் என்பவர் 1939, 1979-ம் ஆண்டுகளில் அத்திவரதரை தரிசித்துள்ளார். தற்போது அவர் 3-வது முறையாக அத்திவரதர் சேவையை பெற உள்ளார். அவருக்கு 85 வயது ஆகிறது.

    காஞ்சீபுரத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ளவர்கள் அத்திவரதரை தரிசிக்க உள்ளனர். முன்பெல்லாம் அத்திவரதர் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் திருக்குளத்தில் இருந்து வெளியில் வந்தார். இடையில் அது 40 ஆண்டுகளாக மாறி விட்டது. வரதராஜபெருமாள் ஆலயத்தில் மூலவர் எப்படி இருக்கிறாரோ அதே மாதிரி அத்திவரதர் இருப்பார். 24 படிக்கட்டுகள் கொண்ட திருக்குளத்துக்குள் சில அடி ஆழத்துக்குள் சயன கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ளார். கிழக்கு திசையிலும் பாதமும், மேற்கு திசையில் திருமுகமும் கொண்டு அவர் சயன கோலம் கொண்டுள்ளார்.

    4 கால் மண்டபத்தின் கீழே தொட்டி போன்ற அமைப்புக்குள் வெள்ளி பேழையில் அத்திவரதர் இருக்கிறார். அவரை குறிப்பிட்ட தினத்தன்று இரவில்தான் வெளியில் எடுப்பார்கள். உடனடியாக சாந்தி ஹோமம் செய்து சுத்தப்படுத்தப்படும். பிறகு பரிகார பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவரை தரிசிப்பது நமது பூர்வஜென்ம புண்ணியமாகும்.

    அத்திவரதருக்கு தினமும் நைவேத்தியம் செய்து பூஜைகள் நடைபெறும். இந்த 48 நாட்களில் ஏதாவது ஒரு நாள் அத்திவரதரை வழிபட்டால் நிச்சயமாக நமது கர்மவினைக்கு ஏற்ப உரிய பலன்கள் கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை.

    இவ்வாறு சம்பத்குமார் பட்டர் கூறினார்.

    வரதர் குளத்துக்குள் சென்றது ஏன்?

    ஒரு தடவை பிரம்மா யாகம் நடத்திய போது யாக தீயின் காரணமாக மூலவராக நிறுவப்பட்டு இருந்த அத்திமர சிலையில் சற்று பின்னம் ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரம்மா என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார். வேறு எந்த வடிவிலும் இத்தகைய பெருமாளை மீண்டும் உருவாக்க இயலாதே? என்று அவர் தவித்தார்.

    தனது தவிப்புக்கு தீர்வு காண பெருமாளிடம் வேண்டினார். இதையடுத்து பெருமாள் அவர் முன் தோன்றி ஆலயத்தின் திருக்குளத்தில் தென் திசையில் நீராழி மண்டபத்தின் கீழே தன்னை சயன கோலத்தில் வைக்கும்படி அறிவுறுத்தினாராம். அதன் பேரில்தான் அத்திவரதர் திருக்குளத்தின் உள்ளே சென்றார் என்று சொல்கிறார்கள்.

    மேலும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தன்னை வெளியில் எடுத்து வழிபட வேண்டும் என்றும் அத்திவரதர் உத்தரவிட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து தரிசனம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
    மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம் தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோரிடமும் உண்டு. எழுந்து நடமாட முடியாத முதியவர்கள் கூட இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் தீர வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள். அதே சமயம் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதில் கவலைகொள்வார்கள்.

    ஒருவருக்கு மரண பயம் வந்து விட்டால், யாராலும் அவரைத் தேற்ற முடியாது. மரணத்தை விடவும் கொடியது அதன் மீதான பயம். அத்தகைய மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம்தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.

    சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில், இங்கு எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார், ஈசன். எனவே இங்கு காலசம்ஹார மூர்த்தியாக அவர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூல வருக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர். அம்பிகையின் திருநாமம், அபிராமி. இத்தல அம்மனுக்கு குங்குமார்ச்சனை செய்து, தினமும் அபிராமி அந்தாதி பாராயணம் செய்துவந்தால் அடியவர் களின் இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி வீசும் என்பது நம்பிக்கை.

    பாற்கடலில் தோன்றிய அமிர்தம் இருந்த குடம் (கடம்), இங்கு சிவலிங்கமாக இருப்பதால் ஈசனுக்கு ‘அமிர்தகடேஸ்வரர்’ என்று பெயர் வந்தது. பிரம்மதேவர் இங்குள்ள ஈசனை வழிபட்டு ஞான உபதேசம் பெற்றுள்ளார். அமிர்தகடேஸ்வரர் மேற்கு பார்த்த வண்ணமும், அபிராமி அம்மன் மூலவரை பார்த்தபடி கிழக்கு நோக்கியும் வீற்றிருப்பது சிறப்புக்குரியது.

    மிருகண்டூயர்-விருத்தை தம்பதிகளின் புதல்வன் மிருகண்டு மகரிஷி. இவருக்கும் முற்கல முனிவரின் மகளான மருத்துவதிக்கும் திருமணமானது. ஆனால் அவர்களுக்கு நெடுநாட்களாக புத்திரபாக்கியம் வாய்க்கவில்லை. திருக்கடையூர் அருகில் உள்ள மணல்மேடு என்னும் இடத்தில் தவச்சாலை அமைத்துத் தங்கியிருந்த இந்த தம்பதியர், தினமும் திருக்கடையூர் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தனர்.

    ஒருநாள் மிருகண்டு மகரிஷியின் கனவில் தோன்றிய ஈசன், “அன்பனே! உனக்கு 16 வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும் நிறைந்த அறிவோடும், உயர்ந்த ஒழுக்கத்தோடும் வாழும் குழந்தை வேண்டுமா? அல்லது மந்த அறிவோடும், தீய குணங்களோடும் 100 வயது வரை வாழும் பிள்ளை வேண்டுமா?” என்று கேட்டார்.

    மிருகண்டு முனிவர், “குறைவான காலம் வாழ்ந்தாலும், நல்ல அறிவோடு விளங்கும் மகனே வேண்டும்” என்று வேண்டினார். ஈசனும் அப்படியே வரம் அளித்து மறைந்தார்.

    சில காலத்திலேயே மிருகண்டு முனிவருக்கும், மருத்துவதிக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மார்கண்டேயன் என்று பெயரிட்டனர். சிறு வயதிலேயே சிறந்த அறிவோடும், சிவ பக்தியோடும் அந்த பிள்ளை விளங்கியது.

    பல ஆண்டுகள் கடந்தது. மார்கண்டேயனுக்கு பதினைந்து வயது நிறைவுற்று, பதினாறாம் வயது பிறந்தது. தங்கள் மகனின் ஆயுட்காலம் முடியப்போவதை உணர்ந்த மிருகண்டுவும், மருத்துவதியும் மனம் கலங்கினர். தன் பெற்றோரின் முக வாட்டத்தை பார்த்தே, தனக்கான பிரச்சினையை அறிந்து கொண்டான், அறிவில் சிறந்த மார்கண்டேயன்.

    இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்ததும், சிவத்தல யாத்திரைச் செல்ல மார்கண்டேயன் விரும்பினான். அதன்படி காசியில் இருந்து தனது யாத்திரையைத் தொடர்ந்தான். ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று, இறைவனை தரிசித்து விட்டு, இறுதியாக திருக்கடையூர் வந்தான். அன்றோடு அவனுக்கு பதினாறு வயது நிறைவடைகிறது. சிவனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தான், மார்கண்டேயன்.

    அவனது உயிரைப் பறிக்கப் பாசக்கயிற்றுடன் அங்கு வந்தான், எமதர்மன். அதைக் கண்டு பயந்து போன மார்கண்டேயன், மூலவரான அமிர்தகடேஸ்வரரை இறுக தழுவிக் கொண்டான். அப்போது எமதர்மன் வீசியப் பாசக்கயிறு மார்கண்டேயன் மீதும், அவன் இறுக தழுவி இருந்த சிவலிங்கம் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், சிவலிங்கத்தை பிளந்து கொண்டு வெளிப்பட்டு, எமனை தன் காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார். இத்தல அமிர்தகடேஸ்வரர் காலனை சம்ஹாரம் செய்ததால் ‘கால சம்ஹார மூர்த்தி' ஆனார்.

    பின்பு அருகிலிருந்த மார்கண்டேயரை அழைத்த ஈசன், “குழந்தாய்! நீ என்றும் பதினாறு வயதுடன், சிரஞ்சீவியாய் இருப்பாய்' என்று அருளி மறைந்தார்.

    காலன் என்னும் எமதர்மன் சம்ஹாரம் செய்யப்பட்டதால், பூமியில் இறப்பு என்பதே இல்லாமல் போனது. பூமியின் பாரத்தை பூமாதேவியால் தாங்கமுடியவில்லை. அவள் தன் வேதனையைத் தீர்க்கும்படி சிவபெருமானை பிரார்த்தித்தாள். பூமாதேவிக்கு இரங்கிய ஈசன், எம தர்மனை உயிர்ப்பித்தார். எமனுக்கு மீண்டும் உயிர் அளித்ததும் இந்தத் தலத்தில் தான் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

    காலனை இங்கு ஈசன் சம்ஹாரம் செய்ததால், தீராத நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நோய் குணமாகி நீண்ட ஆயுள் பெறுவார்கள். குறைவான ஆயுள் கொண்டவர்கள், ஆயுள் கண்டம் உள்ளவர்கள், இங்கு வந்து முறைப்படி தீபம் ஏற்றி வழிபட்டால், அதில் இருந்து விமோசனம் பெறலாம்.

    மிருத்யுஞ்ச ஹோமம், ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, உக்ரரத சாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், சஹஸ்ர சந்திர தரிசன சாந்தி முதலியன இங்கு நாள்தோறும் நடைபெறுகின்றன. மேற்கண்ட ஹோமங்களை வேறு தலங்களில் செய்ய நேர்ந்தாலும் திருக்கடையூர் ஈசனை நினைத்தே செய்ய வேண்டும் என்பது நியதியாக உள்ளது.

    சித்திரை மாதம் வரும் மகம் நட்சத்திர நாளின் பின்னிரவில் ‘எம சம்ஹார விழா', இந்த ஆலயத்தில் நடை பெறுகிறது. அன்று இரவு பஞ்ச மூர்த்திகளும் இத்தல நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு காலசம்ஹார மூர்த்தி வீர நடனமிடுவார். பின்பு நூற்றுக்கால் மண்டபம் அருகில் மார்கண்டேயன் பல்லக்கை, சிறுவர்கள் சுமந்து வருவர். காலசம்ஹார மூர்த்தி பாலாம்பிகையுடன் அப்போது எழுந்தருளுவார். திடீரென அங்கு மிகப்பெரிய வடிவிலான எருமை வாகனத்தில் எமதர்மன் கையில் பாசக்கயிற்றுடன் வந்திடுவார். அவர் மார்கண்டேயரை துரத்துவார்.

    அப்போது மார்கண்டேயர் ஓடிவந்து காலசம்ஹார மூர்த்தியை சுற்றிவந்து சரணடைவார். உடனே காலசம்ஹார மூர்த்தி சூலத்தால் எமனை சம்ஹாரம் செய்திடுவார். இவை அனைத்தும் இந்த ஐதீக விழாவில் நடத்திக் காண்பிக்கப்படுகிறது. பின்னர் காலசம்ஹார மூர்த்தி நள்ளிரவில் திருவீதி உலா வருவார்.

    திருக்கடையூர் திருத்தலம் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
    ஒரு ஆலயத்தின் தல புராணம் ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது. அந்த ஆலயம், திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
    மகப்பேறு என்பது ஒரு சிலருக்கு பெரும் கவலையளிக்கக்கூடியதாக இருக்கிறது. எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லை என்றால் அந்த வாழ்க்கை முழுமை பெறாது. திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் வேண்டும் அபிராமி பட்டர் கூட, “கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியில்லாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தானமும் வேண்டும்” என்கிறார். எது தவறினாலும் சந்தானம் என்னும் குழந்தை பாக்கியம் தவறாமல் கிடைக்க வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது குழந்தைச் செல்வம்.

    சிலருக்கு உடனடியாக புத்திரப் பேறு கிடைத்து விடும். ஆனால் ஒரு சிலருக்கு அது அமைய வெகு காலம் ஆகிவிடும். அதிலும் தற்போது இருக்கும் உணவு பழக்கங்கள், மன அழுத்தம், இறுக்கமான உடைகளை அணிவது, மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்துவது, இரவு நேர வேலை, வேலைப்பளுவினாலும், கர்ம வினைகளாலும், சாபங்கள், தோஷங்களினாலும் புத்திரப்பாக்கியம் கிடைக்க தாமதம் ஆகும். இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதுதான்.

    ஆனால் ஒரு ஆலயத்தின் தல புராணம் ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது. அந்த ஆலயம், திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோவில் ஆகும். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்டத் திருக்கோவில் இதுவாகும். மயிலாடுதுறை அருகில் உள்ள குத்தாலத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவாலங்காடு அமைந்துள்ளது. இங்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் புத்திர காமேஸ்வர தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் நீராடி இத்தல ஈசனையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்து அதிதி தேவர்களையும், இந்திரன் தன் மகன் ஜெயந்தனைப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

    பரதன் எனும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தைப்பாக்கியம் இல்லாமல் வருந்தினான். இதனால் அவன் மனம் வெதும்பி திருத்துருத்தி அமிர்த முகிழாம்பிகை சமேத சொன்னவாறு அறிவார் திருக்கோவிலில் ஈசனை வழிபட்டு தவம் மேற்கொண்டான். தவத்திற்கு இரங்கிய ஈசன் அசரீரியாக, “பரதா! அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடி, அத்தலத்து வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிேஷகம், அர்ச்சனை செய்து பசுநெய்யைக் கருவறைத் தீபத்தில் சேர்த்து வழிபட்டு வா. நிச்சயம் புத்திரப் பாக்கியம் கிடைக்கும். பங்குனி மாத அமாவாசை தினத்தில் இங்கு வந்து நீராடி எம்மை வழிபட்டால் மலடியும் குழந்தை பெறுவாள்” என்று அருளினார்.

    பரதனும் அவன் மனைவியும் அவ்வாறே பங்குனி அமாவாசை நாளுக்காகக் காத்திருந்து திருவாலங்காடு வந்து, புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி அத்தல வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.

    இத்தலத்தில் பழைய அம்மன், புதிய அம்மன் என இரண்டு அம்மன்கள் உள்ளனர். இங்கு உள்ள பழைய அம்மனின் சிலை, சிறிது சேதமானதால் புதிய அம்மனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். புதிய அம்மனை பிரதிஷ்டை செய்த உடன் பழைய அம்மன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அம்மன் அசரீரியாக “உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது சேதமாகி விட்டால் அவர்களை வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?” எனக் கேட்க, பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.

    இத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்றவாறு அருள்பாலிக்கிறாள். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் இத்தல அம்பாள் சன்னிதியில் கருவறைத் தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறைவேறும். இத்தலத்தின் பழைய அம்மனும் உயிரோட்டமானவள். எனவே மூலவர் வண்டார்குழலி அம்மனுக்கு செய்யும் அனைத்து உபசாரங்களையும் அந்த அம்பாளுக்கும் செய்து வரவேண்டும் என்கிறார்கள்.

    பழைய வண்டார்குழலி அம்மன் அருகில் தனிச் சன்னிதியில் சரஸ்வதி அம்மன் உள்ளார். இத்தல சரஸ்வதி அம்மனுக்கு புனர்பூசம், பஞ்சமி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர். இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவேரி அம்மன், வள்ளி- தெய்வானை சமேத முருகர் சன்னிதிகளும் உள்ளன.

    இத்தல மூலவர் வடாரண்யேஸ்வரர் மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பது, இத்தலம் மிகச்சிறந்த பரிகாரத் திருத்தலம் என்று கட்டியம் கூறி நம்மை அழைக்கிறது. இத்தல வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் வழிபாட்டின் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

    இங்குள்ள பைரவருக்கு அமாவாசை, அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு, வெள்ளியில் சிறிய நாய் காசு செய்து அதனைக் கருப்பு கயிற்றில் கட்டி தாயத்து செய்கிறார்கள். அதனை புத்திரகாமேஸ்வரர், பைரவர் காலடியில் சமர்ப்பித்து பின்பு அதனை எடுத்து குழந்தைகளுக்கு அணிவித்து விட்டால் குழந்தைகளை பாலாரிஷ்ட தோஷங்கள் அண்டாது என்கிறார்கள்.

    புத்திரபாக்கியம் வேண்டி இங்கு வழிபட மிகச்சிறப்பான நாள், பங்குனி மாத அமாவாசைதான். அன்றைய தினம் இங்கு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்து வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு பலனடையலாம். பங்குனி மாத அமாவாசை அன்று இங்குள்ள புத்திரகாமேஸ்வரர் சன்னிதியில் சிறப்பு யாகம் நடைபெறுகிறது. புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் ஈசனுக்கு தீர்த்தவாரியும் நடைபெறும். குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுவோர் இந்த இறைவனை வழிபட்ட பிறகு, அருகில் உள்ள திருவாவடுதுறை ஒப்பிலாமுலைநாயகி உடனுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ‘புத்திர தியாகேசர்' சன்னிதியில் வழிபட்டு பிரார்த்தனையை நிறைவு செய்யவேண்டும். அதன் மூலம் புத்திர பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.
    திருமணத் தடைக்கான தோஷங்களை நீக்கி, உடனடியாகத் திருமணத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், கொல்லம் நகரில் அமைந்திருக்கும் உமா மகேசுவர சுவாமி ஆலயம் திகழ்கிறது.
    தல வரலாறு :

    கயிலாயத்தில் இருந்து சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதியில் இருக்கும் அகத்திய மலைக்கு வான்வழியாக வந்து கொண்டிருந்தனர். பூவுலகை ரசித்துக் கொண்டே வந்த இறைவி, வழியில் ஓரிடத்தில் இருந்த இயற்கையின் அழகைக் கண்டு மனம் மயங்கினாள். பார்வதிதேவிக்கு சிறிது நேரமாவது, அங்கு தங்கிச் செல்ல வேண்டுமென்று தோன்றியது. இறைவியின் விருப்பத்தை அறிந்த சிவபெருமான், அவளோடு வானில் இருந்து கீழே இறங்கினார். இருவரும் அங்கிருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் தங்கினர்.

    பிற்காலத்தில் அந்த இடத்தின் அருகே சிற்பி ஒருவர் குடியிருந்தார். அவரது கனவில் தோன்றிய இறைவன், ஆலமரத்தடியில் தானும் இறைவியும் இருப்பதாக தெரிவித்து, அங்கு இருவருக்கும் சிலை அமைத்து கோவில் கட்டி வழிபடும்படி கூறினார்.

    மறுநாள் காலையில் அரண்மனைக்குச் சென்ற சிற்பி, தான் இரவில் கண்ட கனவை அரசரிடம் தெரிவித்தார். கோவில் கட்டுவதற்காக மன்னரின் அனுமதியைப் பெற்று, அவரது கனவில் இறைவன் சொன்ன ஆலமரத்தின் அடியில் ஒரு பீடம் அமைத்து, அதன் மேல் களிமண்ணால் செய்யப்பெற்ற சிவபெருமான் மற்றும் பார்வதிதேவி சிலைகளை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார்.

    காலப்போக்கில் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, கோவிலில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. கருவறையில் இருந்து சிலைகளும் கருங்கல்லால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கோவில் வரலாறு கூறுகிறது.

    கோவில் அமைப்பு :

    ஆலயத்தின் முன்பகுதி தமிழகக் கட்டுமான முறையிலும், கோவிலின் உள்பகுதி அனைத்தும் கேரளக் கட்டுமான முறையிலும் கட்டப்பட்டிருக்கிறது. கோவில் கருவறையில் ஒரே பீடத்தில் இறைவன் சிவபெருமானும், அவருக்கு இடது புறத்தில் இறைவி பார்வதி தேவியும் அமர்ந்த நிலையில் இருக்கின்றனர். இங்கிருக்கும் இறைவி ‘உமா’ என்றும், இறைவன் ‘மகேசுவர சுவாமி’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    ஆலய முகப்புப் பகுதியில் கணபதி, முருகன் மற்றும் நந்திகேசன் ஆகியோருக்கான சன்னிதிகள் உள்ளன. கோவிலுக்குள் நாகர்களுக்கும், காவல் தெய்வமான மாடன் தம்புரானுக்கும் சன்னிதிகள் இருக்கின்றன.

    இங்கு தினசரி வழிபாடாக, கணபதி வேள்வி, உமாமகேசுவர பூஜை, ஐஸ்வர்ய பூஜை நடைபெறுகிறது. அதோடு ஞாயிற்றுக்கிழமை - பாக்யசூக்திர பூஜை, திங்கட்கிழமை சுமங்கலி பூஜை, சுயம்வர பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை, செவ்வாய்க்கிழமை முருகன் மற்றும் மாடன் தம்புரான் ஆகியோருக்குச் சிறப்புப் பூஜை, புதன்கிழமை சரஸ்வதி பூஜை, வியாழக்கிழமை மாங்கல்ய பூஜை, சுயம்வர அர்ச்சனை, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ராகு கால பூஜை, சனிக்கிழமை நீராஞ்சனம் என்று ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று திருவாதிரைத் திருவிழா, மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி, சித்திரை மாதத்தில் வரும் அட்சயதிருதியை போன்றவை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இங்கு ஐயப்பனுக்குரிய மண்டல பூஜை நாட்களிலும், மகரவிளக்கு நாளிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இந்தக் கோவிலில் ஜாதக வழியாக சில தோஷங்களால் தடைபட்டிருக்கும் திருமணத் தடையை நீக்குவதற்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு சிறப்பு வழிபாடு செய்பவர்களுக்கு உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருமண வாய்ப்பு அமையப்பெற்றவர்கள், தங்கள் திருமண அழைப்பிதழை கோவிலில் வைத்திருக்கும் சிறப்பு அறிவிப்புப் பலகையில் பார்வைக்காக வைத்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தை கேரளாவின் திருமணஞ்சேரி என்றும் அழைக்கிறார்கள்.

    கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்கள் சேர்வதற்காக, ‘சம்வத சூக்த மந்திர புஷ்பாஞ்சலி’ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கொல்லம் நகரில் இக்கோவில் அமைந்திருக்கும் பகுதி ‘உமாமகேசுவரம் சந்திப்பு’ என்றே அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    ஒரேஇடத்தில் ஆற்றின் நடுவிலும், ஆற்றின் இருகரையிலும் ஒரே திருநாமத்தில் மூன்று கோவில்கள் அமைந்திருக்கிறது. இந்த மூன்று ஆலயத்தையும் ஒரு சேர வணங்குவது சிறப்பானது.
    தாமிரபரணி நதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய, தன் பாதையை மாற்றி கொண்டுள்ளது. அப்படி தன் போக்கை மாற்றிய வேளையில், பல ஆலயங்கள் நதிக்குள் மூழ்கி புதைந் திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்படி புதைந்து போன ஆலயங்கள் ஒரு கட்டத்தில் வெளிப்பட்டால், அதற்கு காரணம், அந்த ஆலயத்தின் பெருமையும், எல்லாம்வல்ல இறைவனின் அருள் செயலும்தான் என்பதை மறுக்க முடியாது.

    அப்படியொரு அருள்செயல் சுத்தமல்லி தாமிர பரணி ஆற்றுப்பகுதியில் நடந்துள்ளது. அங்கு வெளிப்பட்ட பழமையான ஆலயம், ‘கோமதி அம்பாள் சமேத கந்தருவரீஸ்வரர் என்ற அங்குண்டீசுரமுடைய நயினார்’ ஆலயம் ஆகும்.

    தாமிரபரணி கரையில் கீழச்செவல் கிராமத்திற்கும், சுத்தமல்லி கிராமத்திற்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதி சித்தர்காடு. பரசுராமர் பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. சித்தபுரி, வேதபுரி, ரிஷிபுரி, சித்தர்காடு, சித்தவல்லி, சித்தமல்லி, சுத்தமல்லி என்று பல நாமங்களை கொண்டது இந்த இடம். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருத்தலத்தில் 18 சித்தர்கள், முனிவர்கள், தேவர்கள் வழிபட்டுள்ளனர்.

    குலசேகர ஆழ்வார், முதலாம் குலோத்துங்கன், வீரமார்த்தாண்டவர்மன், பராக்கிரம பாண்டியன், கொல்லங்கொண்ட உடையான் போன்ற மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்துள்ளனர்.

    வேதவியாசரின் சீடரான சூதமா முனிவர், இந்தக் கோவிலின் பெருமையைப் பாடலாக தாமிர பரணி மகாத்மியத்தில் பாடியுள்ளார். இக்கோவிலில் பங்குனி மாதம் வரும் மீன - பரணி நட்சத்திரத்தில் இறைவனை வழிபட்டால் அனைத்து நற்பலனும் கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

    ஒரு சமயம் சரஸ்வதி தேவிக்கு, துர்வாச முனிவரால் சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க, பிரம்மனுடன் சரஸ்வதி தேவி சித்தர்காட்டிற்கு தவம் செய்ய வந்தாள். அவள் பூஜிப்பதற்காக மாணிக்க லிங்கம் ஒன்றை, தேவ சிற்பியான விஸ்வகர்மா வடிவமைத்தார். அந்த லிங்கம் அங்கிருந்த பாறை மீது சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்தது. சித்தர்காட்டில் உருவான அந்த லிங்கத்திற்கு ‘சித்தீஸ் வரர்’ என்று பெயர்.

    ஆரம்ப காலத்தில் இந்த ஈசனை அகத்தியர் வழிபட்டு வந்துள்ளார். அவர் உலகை சமன் செய்ய பொதிகை மலை வந்தார். அங்கு கயிலைநாதனான சிவபெருமானை வணங்க ஆவலாய் இருந்தார். ஒவ்வொரு நாளும் தீர்த்த யாத்திரையாக தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று வந்தார். அப்போது இந்த இடத்தில் நின்றபடி “ஈசனே நான் உம்மை கயிலாயமலையில் உள்ள படியே பூஜிக்க வேண்டும்” என்று வேண்டினார்.

    அப்போது சரஸ்வதிதேவி பூஜை செய்த இறைவன், அகத்தியருக்கு காட்சியளித்தார். உடனே அகத்தியர் “இறைவா! தாங்கள் கயிலாயநாதர். பனிபடர்ந்த மலையில் குளர்ச்சியாக வாழ்பவர். இங்கேயும் நீங்கள் தான் தோன்றினீர்களா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

    அப்போது “அங்கு (கயிலாயம்) நான் உண்டு என்றால், இங்கும் உண்டு” ஒரு அசரீரி வாக்கு கேட்டது. எனவே இந்த இறைவனுக்கு ‘அங்குண்டீஸ்வரர்’ என்று அகத்தியர் பெயரிட்டு வணங்கினார்.

    பரணி நட்சத்திரத்தில் கூடிய நன்னாளில் ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து மீன- பரணி வைபவத்தைக் கொண்டாடி ஆனந்தம் அடைந்துள்ளார். ஸ்ரீசக்ர நாயகி அன்னை ஸ்ரீ மாதா, இங்கு ஈசனைப் பூஜித்துக் கொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம். பதினெண் சித்தர்களும், இதற்கு முன் வாழ்ந்த ஸ்ரீ சந்தானு மகானு பாவுலு சித்தரும் தங்களது மருத்துவ ஆராய்ச்சியைத் தொடங்கு வதற்கு முன்பாக, இத்தல சித்தீஸ்வரரை வணங்கி, அந்த சக்தி முழுவதையும் இந்த ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இந்த இறைவன் ‘ஆதி மருந்தீஸ்வரர்’ என்றும் திருநாமம் கொண்டுள்ளார்.

    காலங்கள் கடந்தது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது கருவூர் சித்தர் பல சிவன் கோவில்களில் வழிபாடு செய்து விட்டு, சித்தீஸ்வரரை தரிசிக்க வந்தார். சுத்தமல்லியில் உள்ள தவணை தீர்த்தக் கட்டத்தில் நின்றபடியே சிவனை பார்த்தார். இறைவனோ வெள்ளத்துக்குள் மூழ்கி இருக்கிறார். தவணை தீர்த்தக்கட்டத்தில் நின்று கொண்டு, “நான் உம்மை எப்படி வழிபடுவது?” என வேண்டினார்.



    அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. வடகரையில் கந்தர்வன் அமைத்த ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்கி செல். அவரும் வேறு யாரும் அல்ல நான் தான் என உரைக்கும் வண்ணம், “அங்கு (தாமிரபரணி நதிக்குள்) நான் உண்டெனில், இங்கும் (வடகரையில்) நான் உண்டு” என்று அந்த அசரீரி சொன்னது. எனவே தான் வடகரையில் உள்ள சிவனும் ‘அங்குண்டீஸ்ரமுடையார்’ என பெயர் பெற்றார்.

    கந்தர்வன் ஒருவன் துர்வாசரின் சாபத்தால் நாரையாக மாறினான். தனக்கு சுயஉருவம் கிடைக்க சிவபெருமானை நினைத்து தவம் செய்தான். ஆடாமல் அசையாமல் சமாதி நிலைக்கு சென்றான். பிரம்மா, புலிந்த மலை மேல் இருந்து கசாலிகா தேவியை நதியாக ஓடிவரச் செய்தார். அந்த நதி சமாதி நிலையில் இருந்த கந்தர்வனை வெகு தூரம் அடித்து வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் வீசியது. கந்தர்வன் கண்விழித்தபோது, ரிஷி பத்தினியான அக்னிசிகாவின் ஆசிரமம் தென்பட்டது.

    ரிஷிபத்தினி, கற்கள் நிறைந்த ஒரு கலசத்தை கந்தர்வனிடம் கொடுத்தார். அதை வைத்து அவன் பூஜித்து வந்தான். சில நாட்களில் கலசத்தில் இருந்த கற்கள் அனைத்தும் சேர்ந்து சிவலிங்கமாக மாறியது. அதை பரத்வாஜ முனிவரின் ஆலோசனைப்படி அங்கே பிரதிஷ்டை செய்து வணங்கினான், கந்தர்வன். அப்போது ஈசன், சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் தோன்றி காட்சி தந்தார். அந்த இறைவன் ‘கந்தவேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். கந்தர்வன் சாப விமோசனம் பெற்று தேவலோகம் சென்றான். ஆனாலும் வருடம் தோறும் மீன-பரணி நட்சத்திரம் அன்று, தேவர்கள் புடைசூழ இங்கு வந்து சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

    அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்த மழையால், தாமிரபரணி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகத் தாமிரபரணி இருபிரிவாகப் பிரிந்து செல்லும் சித்தர் காடு பகுதி நீருக்குள் மூழ்கியது. அப்போது கரையில் இருந்த சித்தீஸ்வரமுடையார் நயினார் என்ற அங்குண்டீஸ்வரர் கோவில் மணலில் புதைந்தது. அந்த இடத்தைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து விட்டது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் சில ஆண்டு களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, சுத்தமல்லி பகுதியில் இருந்த தாமிரபரணி தண்ணீர் இன்றி வறண்டது. தொடர்ந்து அங்கு மணல் அள்ளப்பட்டதால் சுமார் 8 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த சித்தீஸ்வரர் கோவில், 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தென்பட்டது. அந்த பகுதி மக்கள், அடியார்களின் நடவடிக்கையால் மணல் குவியல் அகற்றப்பட்டு, ஆலயத்தின் முழு வடிவமும் வெளியே தெரிந்தது.

    ஆலயத்தின் கருவறையில் சிவலிங்கம் உள்ளது. அதைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. இந்த நிலை எப்போதுமே கயிலாய மலையில் சிவன் குளிர்ச்சியாக இருப்பது போலவே விளங்குகிறது. இங்கு அம்பாள் இல்லை. ஆற்றில் வெள்ளத்தில் சிலை அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது சுவாமிக்கு மட்டும் தினமும் பூஜை நடக்கிறது. ஹயக்ரீவரின் சாபத்தால் குதிரை முகம் கொண்ட பெண், இக்கோவிலில் வழிபட்டு சாப விமோசனமும், ஞானமும் பெற்றதால், குரு சாப நிவர்த்தி தலமாகவும் இது திகழ்கிறது.

    தாமிரபரணி ஆற்றின் உள்ளே இருக்கும் சிவாலயம், ‘ஆதி தலம்’ ஆகும். இந்த ஆலயம் தண்ணீருக்குள் மூழ்கிய வேளையில், தென் புறத்தில் ஒரு ஆலயம் அமைத்து சிவனை பூஜித்து வந்துள்ளார்கள். அந்த ஆலயம் தற்போதும் உள்ளது. அதே போல் கந்தர்வன் வழிபட்ட ஆலயம் வடகரையில் உள்ளது. ஒரேஇடத்தில் ஆற்றின் நடுவிலும், ஆற்றின் இருகரையிலும் ஒரே திருநாமத்தில் மூன்று கோவில்கள் அமைந்திருக்கும் அற்புத தலமாக இந்த இடம் போற்றப்படுகிறது. இந்த மூன்று ஆலயத்தையும் ஒரு சேர வணங்குவது சிறப்பானது.

    இந்த ஆலயம் திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாளையங்கோட்டை - சேரன்மகாதேவி சாலையில் மேலச்செவல் என்னும் இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நயினார் குளம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரின் தாமிர பரணி ஆற்றங்கரையில் இந்த ஆலயம் உள்ளது.

    பெருமாள் கோவில்

    இடைக்காட்டு சித்தர், சிவபெருமானை நினைத்து தவம் செய்ய எண்ணினார். அதற்கு ஒரு நல்ல இடத்தை காட்டியருளும்படி இறைவனிடமே வேண்டினார். ஈசனும், “தாமிரபரணி நதி தீரத்தில், இரு நதிகளுக்கு இடைப்பட்ட வனம்தான் நீ தவம் செய்ய ஏற்ற இடம்’ என்று வழிகாட்டினார்.

    இடைக்காடர் அந்த இடத்திற்கு வந்தார். அப்போது ஓரிடத்தில் பாம்பும் கீரியும், நாகமும் கருடனும் அருகருகே அமர்ந்திருப்பதை கண்டு வியந்தார். “இதுதான் நான் தவம் செய்ய தேடிய சிறந்த இடம். இங்குதான் ஈசன் குடிகொண்டிருக்க வேண்டும்” என்று நினைத்து அங்கேயே தங்கி தவத்தில் ஆழ்ந்தார்.

    அவரது தவத்தை மெச்சி, ஸ்ரீதேவி- பூதேவியுடன் கருட வாகனத்தில் திருமால் காட்சி தந்தார். அப்போது இடைக்காடர், “இறைவா! எனக்கு காட்சி தந்தது போலவே, இந்தப் பூமியிலே தம்பதி சமேதராய் அமர்ந்து, நித்திய வாசம் செய்து அருள்பாலிக்க வேண்டும்” என்று வேண்டினார்.

    அதன்படியே ‘வேதநாராயணன் அழகிய மன்னார் சாமி’ என்ற நாமத்தில், பெருமாள் இங்கு அருள்பாலித்து வருகிறார்.
    சப்தமாதர் ஆலயம் துறையூருக்கு வடக்கே அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மகிஷாசுரன், கொடிய அசுரன். அவன் பிரம்மனை நோக்கித் தவமிருந்தான். அவரிடம் இருந்து பல வரங்களைப் பெற்றான், தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட, ‘அவன் ஒரு பெண்ணால் மரணமடைவான்’ என சபித்தார் பிரம்மா. பின்னர் பிரம்மா பராசக்தியிடம் பிரார்த்தனை செய்தார்.

    பராசக்தி தன் உடலில் இருந்து பிராமி, வைஷ்ணவி, இந்திராணி, மகேஸ்வரி, கவுமாரி, வராகி என ஆறு தேவிகளைத் தோற்றுவித்தாள். ஆறுபேரும் மகிஷனுடன் போரிட்டனர். அவனை வெல்ல இயலவில்லை. கோபம் கொண்ட சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணில் இருந்து பத்ரகாளியைத் தோற்றுவித்தார்.

    பத்ரகாளியின் தோற்றத்தைக் கண்ட பார்வதி, அவளை சுயரூபம் கொள்ளும்படி செய்தாள். அவளே சாமுண்டி.

    அவள், பார்வதியை பணிந்து அசுரனை அழிக்க அருள்புரியும்படி வேண்டி நின்றாள்.

    பார்வதி, “உனக்கு என் அருள் என்றும் உண்டு. நீயே இந்த ஆறு பேர்களுக்கும் தலைவியாய் இருந்து அசுரனை அழிப்பாய். இந்த உலகைக் காப்பாய். இனி நீங்கள் ஏழு பேரும் சப்தமாதர் என அழைக்கப்படுவீர்கள்” என அருளினாள்.

    பின், இவர்களை எதிர்க்க ரக்த பீஜன் என்பவன் வந்தான். அவனுடன் சப்தமாதர்கள் போர் புரிந்தனர். அவன் சிந்திய ரத்தம் முழுவதையும் சாமுண்டி பருகினாள். அவன் ரத்தம் வற்றியது. ரக்தபீஜன் வதம் முடிவுக்கு வந்தது. சப்தமாதர்களை பாதாள உலகுக்கு அனுப்பிவிடுமாறு பைரவருக்கு சிவபெருமான் கட்டளை இட்டார். சப்தமாதர்களுக்கு கடும் பசி. எனவே அவர்கள் அங்கு கண்ணில் பட்டதை எல்லாம் எடுத்து உண்டார்கள். நரசிம்மர் இதைக் கண்டார். அவர் சப்தமாதர்களின் தீய குணங்களை எல்லாம் தான் ஏற்றுக் கொண்டார். அவர்களை கருணை காட்டும் தெய்வங்களாக மாற்றினார்.

    இப்படிப்பட்ட சப்தமாதர் ஆலயம் துறையூருக்கு வடக்கே அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. ஆலயம் வடக்கு நோக்கி இருக்கிறது. முகப்பைக் கடந்ததும் நீண்ட பிரகாரம். அடுத்து மகா மண்டபம். மகா மண்டபத்தின் வலது புறம் விநாயகர், முருகன் திருமேனிகள் உள்ளன.

    திருச்சுற்றின் மேற்கு பகுதியில் அய்யனார், ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தின் அடுத்துள்ள கருவறையில் சப்தமாதர்கள் வடக்கு திசை நோக்கி வரிசையாக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றனர். அற நிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ஆலயம் 400 வருடங்களை கடந்த மிகப் பழமையான ஆலயம் ஆகும்.

    வண்ண வண்ண உடைகளில் இந்த சப்தமாதர்களை தரிசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தம் குல மக்களை மட்டுமின்றி தன்னை நாடி வரும் அனைவரது குறைகளையும் களைந்து அவர்களை வளமுடன் வாழ வைப்பதில் இந்த சப்தமாதர்களுக்கு நிகரில்லை என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    அமைவிடம் :


    துறையூரில் உள்ள இந்த ஆலயம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது. துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆலயம் செல்ல நகரப் பேருந்து வசதியும், ஆட்டோ வசதியும் உள்ளது.
    ×