search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில்
    X

    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில்

    108 திவ்ய தேசங்களில் மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வைணவ தலங்களில் 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அடுத்ததாக திருப்பதி-திருமலை ஏழுமலையானை சொல்வார்கள். மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயமூலவருக்கு தேவராஜபெருமாள் என்று பெயர். உற்சவரை பேரருளாளன் என்று அழைக்கிறார்கள். தாயாருக்கு பெருந்தேவி தாயார் என்று பெயர் சூட்டி உள்ளனர். இத்தலத்து பெருமாள் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக 24 படிகளை ஏறிச்சென்று தரிசிக்க வேண்டி உள்ளது. பெருந்தேவி தாயார் தனி சன்னதியில் நின்று அருள்பாலிக்கிறார்.

    சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதிக்கு எதிரில் ஆலயத்தின் திருக்குளம் இருக்கிறது. இந்த திருக்குளம்தான் இப்போது அனைத்து பக்தர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கிறது.

    காரணம், இந்த திருக்குளத்துக்குள் மூழ்கி கிடக்கும் அத்திவரதர் நமக்கு ஆசி வழங்க குளத்தில் இருந்து வெளியே வர இருப்பது தான்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அத்திவரதர் இந்த திருக்குளத்துக்குள் இருந்து வெளியில் வருவார். 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிறகு மீண்டும் திருக்குளத்துக்குள் போய் விடுவார். அடுத்து 40 ஆண்டுகள் கழித்துதான் அவர் மீண்டும் வெளியில் வருவார்.

    இதற்கு முன்பு 1939-ம் ஆண்டு அத்திவரதர் வெளியில் வந்தார். அதன் பிறகு 40 ஆண்டுகள் கழித்து 1979-ம் ஆண்டு வெளியில் வந்தார். இதைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து தற்போது (2019) மீண்டும் அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து வெளியில் வர இருக்கிறார். இந்த அத்திவரதர்தான் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஒரு காலத்தில் மூலவராக திகழ்ந்தார். இவர் மரத்தால் செய்யப்பட்டவர் ஆவார். ஏதோ சில காரணங்களால் அவர் குளத்துக்குள் செல்ல நேரிட்டது. என்றாலும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற ஐதீகப்படி அவர் வெளியில் வருவார்.

    ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பஞ்சாங்க குறிப்புகளின் அடிப்படையில் அத்திவரதரை வெளியில் எடுப்பார்கள். தற்போதைய நிலவரப்படி ஜூன் மாதம் 26-ந்தேதி அல்லது ஜூலை மாதம் 1-ந்தேதி அத்திவரதரை திருக்குளத்துக்குள் வெளியில் அழைத்துவர முடிவு செய்துள்ளனர்.

    40 ஆண்டுகளுக்கு வெளியில் யாருக்கும் தன்னை தெரியாதபடி தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் அத்திவரதர் எந்த இடத்தில் மூழ்கி இருக்கிறார் என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆலயத்தின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கு பகுதியில் அனந்தசரஸ் திருக்குளம் அமைந்துள்ளது. அந்த திருக்குளத்தின் உள்ளே இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. அதில் நீராழி மண்டபமும் ஒன்றாகும்.

    இந்த மண்டபத்தின் கீழே அத்திவரதரை சயன கோலத்தில் வைத்துள்ளனர். அத்திவரதர் மரத்தால் செய்யப்பட்டவர் என்பதால் நீரில் மிதந்து விடக்கூடாது என்பதற்காக நான்கு புறமும் தடுப்பு வைத்துள்ளனர். மேலும் வெள்ளி தகடு பதித்த பெட்டியில் அவர் இடம் பெற்றுள்ளார். அவர் பள்ளிக்கொண்டிருக்கும் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஒருபோதும் தண்ணீர் வற்றுவதே கிடையாது. அதனால்தான் அத்திவரதரை அவ்வளவு எளிதில் யாரும் பார்க்க முடியாது. 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அந்த குளத்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றி விட்டு அத்திவரதரை வெளியில் எடுத்து தரிசனம் பெற வைப்பார்கள்.

    இந்த அத்திவரதர் பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்று வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாகத்தீயில் இருந்து தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டதால் அவர் அசரீரி மூலம் தன்னை குளத்துக்குள் வைக்கும்படி கூறி விட்டாராம். அதன் பிறகு பழைய சீவரத்தில் இருந்து கல்எடுத்து அதில் சிலை செய்து வரதராஜ பெருமாள் ஆலயத்தில் தேவராஜ பெருமாளாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    அத்திவரதர் திருக்குளத்துக்குள் சென்றதற்கு வேறு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. யாகத்தீயில் இருந்து தோன்றியதால் உஷ்ணத்தை தணித்துக் கொள்ளவே அவர் திருக் குளத்துக்குள் வாசம் செய்வதாக பேச்சுவழக்கில் கூறப்படுகிறது. திருக்குளத்தில் இருந்து வெளியில் வந்ததும் வசந்த மண்டபத்தில் 48 நாட்களுக்கு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து சேவை சாதிப்பார். 24 நாட் கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் சேவை சாதிப்பார்.

    அந்த 48 நாட்களும் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் திருவிழா கோலமாக காணப்படும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் வரும் அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் காஞ்சீபுரத்தில் திரள்வார்கள்.

    ஒரு நாளைக்கு சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு அத்திவரதரை சுமார் 25 லட்சம் பக்தர்கள் நேரில் பார்த்து தரிசனம் செய்ய வாய்ப்புள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவையே இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பெரும்பாலும் வாழ்நாளில் ஒரு தடவைதான் ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

    அத்திவரதரை சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் ஆலயத்தினர் மேற்கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் அவர்களை ஒரு வாசல் வழியாக வரவழைத்து மற்றொரு வாசல் வழியாக வழியனுப்ப ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுபோல அத்திவரதரை பக்தர்கள் தரிசிப்பதற்காக எந்த இடத்தில் வைக்கலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக அரச மரம் உள்ளது.

    கீதையில் கிருஷ்ண பகவான் தனது வடிவமாக குறிப்பிட்ட அரச மரமாக இந்த அரச மரம் கருதப்படுகிறது. இந்த மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியை திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை தினத்தன்று சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாக கிடைக்கும் என்று ஐதீகம் உள்ளது. ராமானுஜருக்காக கூரத்தாழ்வார் கண் பார்வை இழந்தது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அவருக்கு மீண்டும் வரதராஜ பெருமாள் ஆலயத்தில்தான் கண் பார்வை திரும்ப கிடைத்தது. எனவே இந்த ஆலயத்தில் வழிபட்டால் கண் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

    மூலவரை தரிசனம் செய்ய கீழே இருந்து 24 படிகளை ஏறி செல்ல வேண்டும். இந்த 24 படிகளும் காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை குறிப்பாக சொல்கிறார்கள். எனவே இந்த படிகள் ஏறி செல்லும்போது பெருமாளை நினைத்தபடியே செல்ல வேண்டும்.

    வரதர்’ என்ற பெயர் எப்படி வந்தது?

    காஞ்சீபுரத்தில் ஒரு தடவை பிரம்ம தேவர் தனது செயல்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்திற்கு அவர் தனது மனைவி சரஸ்வதியை அழைக்கவில்லை. இதனால் பிரம்மா மீது சரஸ்வதிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. மனைவி இல்லாமல் பிரம்மாவால் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவானது. இதனால் காயத்ரி மற்றும் சாவித்திரியின் துணைக்கொண்டு பிரம்மா தொடங்கினார்.

    இதை அறிந்த சரஸ்வதி அந்த யாகத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்தாள். அவள் வேகவதி ஆறாக மாறி யாகத்தை அழிக்க கரைபுரண்டு வந்தாள். இதை கண்டு பெருமாள் அந்த நதியின் குறுக்கே படுத்து சயன கோலமாக தன்னை வெளிப்படுத்தினார். இதை கண்டதும் நதியாக இருந்த சரஸ்வதி தனது பாதையை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டாள்.

    இதை அறிந்த பிரம்மா மிகவும் நெகிழ்ந்து போனார். தனக்காக ஆற்றின் குறுக்கே படுத்த பெருமாளை வணங்கினார். அப்போது தேவர்களும், ரிஷிகளும் பெருமாளை வணங்கி தங்களது விருப்பங்களும் நிறைவேற வரம் கேட்டனர். அவர்கள் கேட்டதையெல்லாம் பெருமாள் இல்லை என்று சொல்லாமல் வாரி வாரி வழங்கினார். இதனால் அந்த பெருமாளுக்கு கேட்டவரம் தருபவர் என்ற பெயரில் வரதர் என்ற பெயர் உருவானது.

    தோஷங்கள் போக்கும் தங்க-வெள்ளி பல்லி

    சிருங்கி பேரர் என்னும் முனிவரின் இருமகன்கள் கவுதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். ஒருநாள் அவர்கள் பூஜைக்கு கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்தன. இதை கண்ட முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்து விட்டார்.

    பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என தெரிவித்தார். அதன்படி இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.

    பெருமாள் அவர்கள் இருக்கும் மோட்சத்துக்கு செல்ல வழிகாட்டினார். அதோடு சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்கும் என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி நலம் உண்டாகும். சூரியன், சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.

    இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் வரதராஜபெருமாள் ஆலயத்தின் கருவறை பின்பகுதியில் மேற்கூரையில் தங்கம், வெள்ளியில் பல்லிகள் அமைத்துள்ளனர். பக்தர்கள் அந்த பல்லிகளை தொட்டு தடவி வணங்குகிறார்கள். இதன் மூலம் தங்கள் தோஷங்கள் நிவர்த்தி பெறுவதாக நம்புகிறார்கள். இதனால் வட மாநில மக்களிடம் வரதராஜபெருமாள் ஆலயம் பல்லி ஆலயம் என்று புகழ் பெற்றுள்ளது.

    தினமும் வரதரை வழிபடலாம்


    40 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குளத்தில் இருந்து வெளியில் வர இருக்கும் அத்திவரதரை எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பணிபுரியும் சம்பத்குமார் பட்டர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

    1939-ம் ஆண்டு நான் பிறந்தேன். இப்போது எனக்கு 80 வயதாகிறது. நான் பிறந்த ஆண்டில்தான் அத்திவரதர் வெளியில் வந்திருந்தார். எனவே அந்த ஆண்டு அவரை நான் தரிசிக்க இயலவில்லை. அதன் பிறகு 1979-ம் ஆண்டு அத்திவரதரை வெளியில் வந்தபோது நான் கண்குளிர அவரை தரிசித்து ஆசி பெற்றேன்.

    இப்போது மீண்டும் 2-வது முறையாக அத்திவரதரை தரிசிக்க உள்ளேன். என்னை போன்று அத்திவரதரை 2-வது தடவை தரிசிக்க இருப்பவர்கள் பலர் உள்ளனர். வேங்கடவரத தத்தாச் சாரியார் என்பவர் 1939, 1979-ம் ஆண்டுகளில் அத்திவரதரை தரிசித்துள்ளார். தற்போது அவர் 3-வது முறையாக அத்திவரதர் சேவையை பெற உள்ளார். அவருக்கு 85 வயது ஆகிறது.

    காஞ்சீபுரத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ளவர்கள் அத்திவரதரை தரிசிக்க உள்ளனர். முன்பெல்லாம் அத்திவரதர் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் திருக்குளத்தில் இருந்து வெளியில் வந்தார். இடையில் அது 40 ஆண்டுகளாக மாறி விட்டது. வரதராஜபெருமாள் ஆலயத்தில் மூலவர் எப்படி இருக்கிறாரோ அதே மாதிரி அத்திவரதர் இருப்பார். 24 படிக்கட்டுகள் கொண்ட திருக்குளத்துக்குள் சில அடி ஆழத்துக்குள் சயன கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ளார். கிழக்கு திசையிலும் பாதமும், மேற்கு திசையில் திருமுகமும் கொண்டு அவர் சயன கோலம் கொண்டுள்ளார்.

    4 கால் மண்டபத்தின் கீழே தொட்டி போன்ற அமைப்புக்குள் வெள்ளி பேழையில் அத்திவரதர் இருக்கிறார். அவரை குறிப்பிட்ட தினத்தன்று இரவில்தான் வெளியில் எடுப்பார்கள். உடனடியாக சாந்தி ஹோமம் செய்து சுத்தப்படுத்தப்படும். பிறகு பரிகார பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவரை தரிசிப்பது நமது பூர்வஜென்ம புண்ணியமாகும்.

    அத்திவரதருக்கு தினமும் நைவேத்தியம் செய்து பூஜைகள் நடைபெறும். இந்த 48 நாட்களில் ஏதாவது ஒரு நாள் அத்திவரதரை வழிபட்டால் நிச்சயமாக நமது கர்மவினைக்கு ஏற்ப உரிய பலன்கள் கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை.

    இவ்வாறு சம்பத்குமார் பட்டர் கூறினார்.

    வரதர் குளத்துக்குள் சென்றது ஏன்?

    ஒரு தடவை பிரம்மா யாகம் நடத்திய போது யாக தீயின் காரணமாக மூலவராக நிறுவப்பட்டு இருந்த அத்திமர சிலையில் சற்று பின்னம் ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரம்மா என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார். வேறு எந்த வடிவிலும் இத்தகைய பெருமாளை மீண்டும் உருவாக்க இயலாதே? என்று அவர் தவித்தார்.

    தனது தவிப்புக்கு தீர்வு காண பெருமாளிடம் வேண்டினார். இதையடுத்து பெருமாள் அவர் முன் தோன்றி ஆலயத்தின் திருக்குளத்தில் தென் திசையில் நீராழி மண்டபத்தின் கீழே தன்னை சயன கோலத்தில் வைக்கும்படி அறிவுறுத்தினாராம். அதன் பேரில்தான் அத்திவரதர் திருக்குளத்தின் உள்ளே சென்றார் என்று சொல்கிறார்கள்.

    மேலும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தன்னை வெளியில் எடுத்து வழிபட வேண்டும் என்றும் அத்திவரதர் உத்தரவிட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து தரிசனம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
    Next Story
    ×