search icon
என் மலர்tooltip icon

    சிங்கப்பூர்

    • கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்.
    • கோத்தபய ராஜபக்சே கடந்த 14-ந் தேதி சிங்கப்பூருக்கு சென்றார்.

    சிங்கப்பூர்:

    இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். 13-ந் தேதி இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கு எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூர் சென்றார். தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும், அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது.

    இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே பயணம் தொடர்பான பத்திரிகைகளின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் குடியேற்ற ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அந்த ஆணையம் கூறியிருப்பதாவது:-

    தனிப்பட்ட பயணமாக கோத்தபய ராஜபக்சே கடந்த 14-ந் தேதி சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.

    பொதுவாக இலங்கையை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது, 30 நாள்வரை தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்படும் அதற்கு மேல் தங்குவதை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். தகுதி அடிப்படையில் அவை தனித்தனியாக பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.

    இதற்கிடையே, சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மக்கள், இலங்கையில் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ஆட்சி மாற்றத்துடன் உறுதியான கொள்கை மாற்றமும் வர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சிலர் ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்து, அதற்கான பணத்தை சேமித்து, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு சைக்கிள் பயன்படும் என்பதால், வேறு சிலர் சைக்கிள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள். நம்பகமான நபர்கள் மூலம் உதவி அனுப்புவதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

    • கோத்தபயவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கப்பூரில் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    • சட்டத்தை மீறி யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று சிங்கப்பூர் போலீஸ் எச்சரித்துள்ளது.

    சிங்கப்பூர் :

    சொந்த நாட்டில் எதிர்ப்பு உச்சமடைந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பியோடினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூருக்கு கடந்த வியாழக்கிழமை சென்றடைந்தார். அங்கிருந்தபடியே வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேயை அனுமதித்ததற்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு நெருப்பு கொழுந்துவிடத் தொடங்கியுள்ளது. அவரது வருகைக்கு எதிராக ஓர் ஆன்லைன் மனுவை உருவாக்கியுள்ள தொழிலதிபர் ரேமண்ட், கோத்தபய மீது சிங்கப்பூர் போலீசில் பணமோசடி புகாரும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

    அவரது ஆன்லைன் மனுவுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோத்தபயவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபு ராமச்சந்திரன் என்பவரின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள பூங்கா ஒன்றில் கடந்த சனிக்கிழமை அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    கோத்தபயவை அனுமதித்த சிங்கப்பூரின் முடிவை இலங்கையர்கள் பலரும் எதிர்த்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோத்தபய வருகைக்கு எதிராக, சட்டத்தை மீறி யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று சிங்கப்பூர் போலீஸ் எச்சரித்துள்ளது.

    அதேவேளையில், தனிப்பட்ட பயணத்தை விரைவாக முடித்துக்கொண்டு கிளம்புமாறு கோத்தபயவை சிங்கப்பூர் அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • இறுதிப்போட்டியில் சீனாவின் வாங் ஜி யி- பி.வி.சிந்து மோதினர்
    • பதிலடி கொடுத்த சீன வீராங்கனை 2ம் செட்டை வசமாக்கினார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    போட்டியின் துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்த பி.வி.சிந்து, அதன்பின்னர் சிறப்பான சில ஷாட்களை அடித்து ஆட்டத்தை தன் வசமாக்கினார். அடுத்தடுத்து 11 புள்ளிகள் பெற்ற அவர் 11-2 என முன்னிலை பெற்றார். அதன்பின்னரும் தனது நிலையை தக்க வைத்த சிந்து, முதல் செட்டை எளிதில் வென்றார். இரண்டாம் செட் ஆட்டத்தில் பதிலடி கொடுத்த சீன வீராங்கனை அந்த செட்டை வசமாக்கினார்.

    அதன்பின் சுதாரித்து ஆடிய சிந்து, கடுமையான போராட்டத்திற்கு பிறகு 3ம் செட்டை வென்றார். இப்போட்டியில் 21-9, 11-21, 21-15 என்ற செட்கணக்கில் சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ள பி.வி.சிந்து, இந்த ஆண்டு மூன்றாவது கோப்பையை வென்றிருக்கிறார். இதற்கு முன்பு சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் என இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றிருந்தார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து வியட்நாம் வீராங்கனையை தோற்கடித்தார்.
    • இதேபோல், இந்தியாவின் சாய்னா நேவால் சீன வீராங்கனையை வென்றார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஹூ பிங் ஜியாவோவுடன் மோதினார். இதில் சாய்னா 21-19, 11-21, 21-17 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமின் துய் லின் நுயெனுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 19-21, 21-19, 21-18 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனா தொற்றில் இருந்து பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் தப்பிப்பதற்கு தடுப்பூசி உதவிகிறது.
    • கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் டோங் (52), கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

    சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் மற்றும் அமைச்சர் எட்வின் டோங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    67 வயதான ஹலிமா அவரது பேஸ்புக் பதிவில், "லேசனா காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பெரியளவில் பாதிப்பில்லை. நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். இந்த வார நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    53 வயதான பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்திற்கு முன் கொரோனா தொற்று சோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், "சபாநாயகர் டான் தனது பதிவில், அறிகுறிகள் லேசாக இருக்கிறது என்றும் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கும்படியும், கொரோனா தொற்றில் இருந்து பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் தப்பிப்பதற்கு தடுப்பூசி உதவிகிறது. எனவே உங்கள் முறை வரும்போது பூஸ்டர்களைப் பெறுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் டோங் (52), கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவிந்த ராஜசேகரன் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார்.
    • பணம் வாங்கிய பின்னர் மல்லிகா இவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் திருமணத்தையும் தள்ளிப்போட்டபடி சென்றார்.

    சிங்கப்பூர்:

    தமிழகத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜசேகரன். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தார்.

    இதற்காக அவர் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார்.

    இதை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மல்லிகா ராமு (வயது 51) என்ற பெண் கோவிந்த ராஜசேகரை தொடர்பு கொண்டார்.

    தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தான் ஆஸ்திரேலியா நாட்டு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் தனது போட்டோவை அனுப்பினால் 51 வயது என்பது வெளியில் தெரிந்து விடும் என நினைத்து தனது உறவுக்காரரான 25 வயதுடைய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டார்.

    இதை பார்த்த கோவிந்த ராஜசேகர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இந்த நிலையில் தனது தாய்க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் உடனடியாக பணம் தேவைப்பபடுவதாகவும் மல்லிகா கோவிந்த ராஜசேகரிடம் கூறினார்.

    இதை நம்பி அவரும் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன் பிறகு மல்லிகா இவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் திருமணத்தையும் தள்ளிப்போட்டபடி சென்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்த ராஜசேகர் போலீசில் புகார் செய்தார். சிங்கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகா ராமுவை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி திருமண மோசடியில் ஈடுப்பட்டதும் தெரிந்தது.

    இதையடுத்து மல்லிகா சிங்கப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 7 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கு முன்பும் மல்லிகா இதுபோன்று திருமண மோசடி செய்து பலரிடம் பணம் பறித்து போலீசில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×