என் மலர்
அமெரிக்கா
- துப்பாக்கியுடன் வந்த மாணவனை பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் உத்தரவிட்டது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போர்ட்லாண்ட்:
அமெரிக்காவின் மேனே மாகாணத்தில் மன்றோ என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்தான். இந்த தகவலை அறிந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று வகுப்பாசிரியர் உதவியுடன் மாணவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் துப்பாக்கியுடன் வந்த மாணவனை பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.
அந்த மாணவர் யாருக்கும் மிரட்டல் விடுக்கவில்லை. எனவே அவன் என்ன காரணத்துக்காக பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்தான் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- தீ விபத்தால் வெள்ளை மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனே எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏர்கண்டிஷனரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தால் வெள்ளை மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
- ரேவதி அத்வைதி பிளக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்.
- எம்.பி.ஏ. படித்து உள்ள ரேவதி அத்வைதி 2019-ம் ஆண்டில் உற்பத்தியில் புதிய சகாப்தம் படைத்தார் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்ற பிறகு தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவர்கள் அரசின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
பல்வேறு அரசு துறைகளில் அமெரிக்கவாழ் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்கினை வகித்து வருகின்றனர். இதுவரை 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அரசு நிர்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது தனது நிர்வாகத்தில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக 14 பேரை ஜோ பைடன் நியமித்து உள்ளார். இதில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒருவரது பெயர் ரேவதி அத்வைதி. மற்றொருவர் பெயர் மனீஷ் பாப்னா.
இவர்களில் ரேவதி அத்வைதி பிளக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். எம்.பி.ஏ. படித்து உள்ள இவர் 2019-ம் ஆண்டில் உற்பத்தியில் புதிய சகாப்தம் படைத்தார் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. இவர் இதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்ட ஈட்டனின் மின்சார துறை வணிகத்திற்கான தலைவராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் இருந்தார்.
இவர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பார்ச்சூனின் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக திகழ்ந்தார். அதற்கான பட்டியலிலும் அவர் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல மற்றொரு இந்தியரான மனீஷ் பாப்னா இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மற்றும் மனித வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் அரசியல், பொருளாதார வளர்ச்சியில் முதுகலைப்பட்டங்களையும் எம்.ஐ.டியில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.
- பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு மோடி தலைமையின் கீழ் ராணுவ பதிலடிக்கு வாய்ப்பு அதிகம் என அறிக்கையில் தகவல்
- 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான அச்சுறுத்தல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு கடந்த காலத்தில் போல் இல்லாமல், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, ராணுவ பலத்துடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது, என அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
காஷ்மீரில் வன்முறை, அமைதியின்மை அல்லது இந்தியாவின் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றால் பதற்றம் அதிகரித்து இரு நாடுகள் இடையே போர் ஏற்படும் ஆபத்து உள்ளது என அறிக்கை கூறுகிறது.
இதேபோன்று அறிக்கையில், கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதில், 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது. இரு நாடுகளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் வழியே எல்லை விவகாரத்தில் தீர்வு கண்டுள்ளது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்ட சூழலும் காணப்படுகிறது. இது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத வகையில் தீவிர கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்றும் தெரிவித்து உள்ளது.
அணுசக்தி நாடுகளான இந்தியாவும், சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லை விவகாரத்தில் படைகளை குவித்து வருவதனால், ஆயுத மோதலை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்து உள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் அதன் நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட கூடிய சாத்தியமும் உள்ளது. அமெரிக்காவை தலையிட அழைக்கக்கூடிய நிலையும் காணப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.
- அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் வழங்கியது.
- செனட்சபை ஓட்டெடுப்பில் 58 பேர் ஆதரவளித்தனர்.
வாஷிங்டன் :
அமெரிக்காவில் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வக்கீல் அருண் சுப்பிரமணியன் என்பவரை ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஆண்டு இறுதியில் நியமித்தார். இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபையின் ஒப்புதல் அவசியமாகும்.
இந்த நிலையில் அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக செனட்சபையில் நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. இதில் 58 உறுப்பினர்கள் அருண் சுப்பிரமணியனை நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 37 பேர் எதிராக வாக்களித்தனர்.
அதை தொடர்ந்து அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாகும் முதல் தெற்காசிய வம்சாவளி என்கிற பெருமையை அருண் சுப்பிரமணியன் பெறுகிறார்.
1970-களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த தம்பதிக்கு 1979-ல் பிறந்த அருண் சுப்பிரமணியன், 2001-ல் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அதை தொடர்ந்து 2004-ம் ஆண்டு, கொலம்பியா சட்டப் பள்ளியில் சட்டப் பட்டம் பெற்றார். அதன் பின்னர், சட்டப் பள்ளி மாணவர்களால் நடத்தப்படும் கொலம்பியா லா ரிவியூ பத்திரிகையின் நிர்வாக கட்டுரை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது சுஸ்மன் காட்ப்ரே எல்எல்பி என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் அவர், 2007 முதல் அங்கு பணியாற்றி வருகிறார்.
- கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.
மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.
- தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
- அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில், நண்பர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ரெயில் மோதியதில் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் திகாலா (வயது 39) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் கடந்த மாதம் 28ம் தேதி பிரின்ஸ்டன் ரெயில்வே சந்திப்பின் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, வாஷிங்டனில் இருந்து பாஸ்டன் நோக்கி சென்ற அம்த்ரக் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட திகாலா, அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் பிளைன்ஸ்போரோவில் வசித்து வந்தார். அவருக்கு மனைவி மற்றும் 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். திகாலா மட்டுமே வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் மாமனார், மாமியாரையும் அவரை கவனித்து வந்துள்ளார். அவர் மரணம் அடைந்தையடுத்து அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில், நண்பர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.
- விளம்பர வருவாயில் மந்தநிலையைக் கண்ட மெட்டா, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி தளத்திற்கு கவனம் செலுத்தியுள்ளது.
- வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா:
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும் பொருளாதார மந்த நிலையால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது.
அந்த வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை உள்ளடக்கிய மெட்டா நிறுவனம் ஒரு புதிய சுற்று பணி நீக்கங்களுக்கு திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த வாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா, கடந்த நவம்பரில் 13 சதவீதம் ஊழியர்களை குறைத்துள்ளது. அதேபோல், மேலும் திறமையான நிறுவனமாக மாற்றும் முயற்சியிலும் மெட்டா ஈடுபட்டுள்ளது. அதன் முந்தைய சுற்றுகளில், மெட்டா நிறுவனம் 11,000 தொழிலாளர்களைக் குறைத்தது.
இதுவே அந்த நிறுவனத்தின் முதல் பெரிய பணிநீக்கம் ஆகும். தனது நிறுவனத்தை சமன் செய்யவும், மேலாளர்களுக்கு தொகுப்புகளை வழங்கவும், தேவையற்றதாகக் கருதும் முழு குழுக்களை குறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படிதான் தற்போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவெடுத்துள்ளது.
விளம்பர வருவாயில் மந்தநிலையைக் கண்ட மெட்டா, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி தளத்திற்கு கவனம் செலுத்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- செர்பிய வீரர் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
- இதனால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் துபாய் ஓபன் டென்னிசில் அரையிறுதியில் தோற்ற போதிலும் ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் முதலிடத்தில் இருப்பது இது 379-வது வாரமாகும். அதிக வாரங்கள் முதலிடத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.
இந்நிலையில், இண்டியன்வெல்ஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் முறையே வருகிற 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும், 22-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரையும் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடைக்காததால் 'நம்பர் ஒன்' வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகி இருக்கிறார்.
கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோகோவிச் தனக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர் இந்தப் போட்டியில் இருந்து பின்வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொள்ள மெல்போர்ன் சென்ற ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதேபோல் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியையும் அவர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணம் டக்ளஸ் காண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
- விருந்தில் கலந்து கொண்டர்கள் யாராவது தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதுகின்றனர்.
அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணம் டக்ளஸ் காண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் தனது பேத்தி 16 வயதை எட்டியதால் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விருந்தில் இளைஞர்கள்- இளம் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் சில இளைஞர்கள் போதைப் பொருள் உட்கொண்டதாக கூறப்படுகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நடந்த இந்த விருந்தின் போது திடீரென ஒருவர் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியில் விருந்தில் பங்ககேற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. விருந்தில் கலந்து கொண்டர்கள் யாராவது தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதுகின்றனர். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டிருக்காது.
- 3-ம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு என்றார் டிரம்ப்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா, உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:
தற்போதைய அமெரிக்க அரசு போரை ஒழுங்காக கையாளவில்லை. நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது.
நான் அதிபராக இருந்திருந்தால் புதின் போரை தொடங்கியிருக்க மாட்டார். ஆனாலும் இதுபோன்ற போரை நடத்த விட்டிருக்க மாட்டேன். போர் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன்.
இப்போது அமெரிக்கா டாங்கிகளை கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறத? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ரஷிய அதிபர் புதின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேல் ஆகாது.
மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு. இந்த போரை நிறுத்தி காட்ட என்னால் மட்டுமே முடியும் என தெரிவித்தார்.
- ஆண்ட்ரியா செரானோ மீது குழந்தை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
- ஆண்டரியா செரானோவுக்கு பாலியல் குற்வாளி என்ற குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கொல ராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்டரியா செரானோ (வயது31). இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். இதில் ஆண்டரியா செரானோ கர்ப்பம் அடைந்தார்.
இதையடுத்து ஆண்ட்ரியா செரானோ மீது குழந்தை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இதில் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆண்ட்ரியா செரானோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து சிறுவனின் தாய் கூறும்போது, என் மகனின் குழந்தை பருவம் பறிக்கப்பட்டதை போல் உணர்கிறேன். இப்போது அவன் தந்தையாக வேண்டும். அவன் பாதிக்கப்பட்டுள்ளான். அதனுடனேயே அவன் வாழ்நாள் முழுவதும் வாழப் போகிறான்.
இந்த வழக்கில் பாலினம் தலைகீழாக இருந்திருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். இவன் ஒரு ஆணாகவும், அவன் (சிறுவன்) சிறுமியாகவும் இருந்திருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று உணர்கிறேன் என்றார்.
இந்த வழக்கில் ஆண்டரியா செரானோவுக்கு பாலியல் குற்வாளி என்ற குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக விசாரணை மே மாதம் நடைபெறுகிறது.






