என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் அல்காரஸ் பெற்ற 100-வது வெற்றி இதுவாகும்.
    • இவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமை பெற்றார்

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூரை சந்தித்தார்.

    இதில் அல்காரஸ் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் 132-வது ஆட்டத்தில் ஆடிய அல்காரஸ் ருசித்த 100-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அமெரிக்க ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோ 131 ஆட்டங்களில் 100-வது வெற்றியை அடைந்து முதலிடத்தில் உள்ளார்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.
    • அப்போது வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

    இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம், வங்கிகள் சரிவைச் சந்திருக்கின்றன..... என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா... இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உறுதியளிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். இதனால் அதிபர் ஜோ பைடன் பாதியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.

    • அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் கருங்கடல் பகுதியில் பறந்தது.
    • ரஷிய போர் விமானம் அமெரிக்காவின் டிரோன் மீது மோதியது.

    வாஷிங்டன்:

    கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் மீது ரஷிய போர் விமானம் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரக டிரோனும், ரஷியாவின் எஸ்.யு-27 ரக போர் விமானமும் கருங்கடல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

    இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க ராணுவத்தின் எம்.க்யூ -9 ரக டிரோன் வழக்கமாக சர்வதேச விமானங்களை கண்காணித்து வந்தபோது அதனை இடைமறித்து ரஷிய போர் விமானம் அமெரிக்க டிரோன் மீது மோதியது என தெரிவித்துள்ளது.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரு சிறந்த நட்புறவைக் கொண்டுள்ளதாக டிரம்ப் பேச்சு
    • வெளிநாட்டுப் போர்களின் ஆதரவாளர்களால் அமெரிக்க வாக்காளர்கள் சோர்வடைந்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அயோவா மாநிலம் டேவன்போர்ட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டு பேசியதாவது:-

    உலகத்திற்கு இப்போது இருப்பதைவிட ஆபத்தான காலம் இருந்ததில்லை. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷியாவை சீனாவின் கரங்களுக்குள் தள்ளியிருக்கிறார். இன்று உங்கள் முன் நிற்கும் நான் மட்டுமே, மூன்றாம் உலகப் போரைத் தடுப்பதற்கு உறுதியளிக்கும் ஒரே வேட்பாளர். ஏனென்றால் நீங்கள் மூன்றாம் உலகப் போரை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

    நான் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரு சிறந்த நட்புறவைக் கொண்டுள்ளேன். ரஷிய அதிபர் எனது கோரிக்கையை கேட்பார். மேலும் தீர்வு காண்பதற்கு எனக்கு ஒரு நாளைக்கு மேல் ஆகாது.

    இரு கட்சிகளிலும் வேரூன்றிய அரசியல் வம்சங்கள், விரும்பத்தகாத சிறப்பு நலன்கள், சீனாவை விரும்பும் அரசியல்வாதிகள் மற்றும் முடிவற்ற வெளிநாட்டுப் போர்களின் ஆதரவாளர்களால் அமெரிக்க வாக்காளர்கள் வெறுப்படைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் ஒரு வாலிபருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
    • வீடியோவில் போலீஸ்காரர்களுடன் இணைந்து ஆடும் நபர் ஹோலி கொண்டாடியது போல தெரிகிறது.

    அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.

    ஆர்ஆர்ஆர் படம் வெளியானதில் இருந்தே இந்த பாடல் உலகமெங்கும் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் பல நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள் உள்பட பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. குறிப்பாக டெல்லியில் உள்ள தென்கொரிய தூதரகத்தில் தூதுவர் மற்றும் ஊழியர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்த நிலையில் நேற்று 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருதை வென்றது.

    இந்நிலையில் நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் ஒரு வாலிபருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் போலீஸ்காரர்களுடன் இணைந்து ஆடும் நபர் ஹோலி கொண்டாடியது போல தெரிகிறது.

    பின்னணியில் இசை ஒலிக்க அந்த நபரின் தோள்களில் கையை வைத்து கொண்டு 2 போலீஸ்காரர்களும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடுகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி 'லைக்'குகளை குவித்து கொண்டிருக்கிறது.

    • மூன்று கூட்டணியின் ஒரு பகுதியாக தங்கள் நீர்மூழ்கிக் கப்பல்-தொழில்நுட்ப-பகிர்வு திட்டங்களை வெளியிட்டனர்.
    • இங்கிலாந்து மற்றும் அமெரிக்காக இடையே வலுவான நீடித்த பொருளாதார உறவைத் தொடர்ந்து ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அதிபரும் பிரதமரும் விவாதித்தனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் ஆஸ்திரேலியாவுடனான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை வெளியிடுவது தொடர்பாக பங்கேற்றனர்.

    அங்கு, அவர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸுடன் சேர்ந்து மூன்று நாடுகளின் (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா) கூட்டணியின் ஒரு பகுதியாக தங்கள் நீர்மூழ்கிக் கப்பல்-தொழில்நுட்ப-பகிர்வு திட்டங்களை வெளியிட்டனர்.

    இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே வலுவான நீடித்த பொருளாதார உறவைத் தொடர்ந்து ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அதிபரும் பிரதமரும் விவாதித்தனர்.

    அப்போது, இந்த உரையாடலைத் தொடர்ந்து ஜூன் மாதம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரதமர் சுனக்கிற்கு அதிபர் பைடன் அழைப்பு விடுத்தார்.

    • சில ஆசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பதாக கூறி உள்ளன.
    • வங்கி நெருக்கடி தற்போது கட்டுக்குள் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

    அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. சில ஆசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பதாக கூறி உள்ளன. இந்திய நிறுவனங்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    சிலிகான் வேலி வங்கியானது ஸ்டார்ட்அப் மற்றும் மூலதன நிறுவனங்களிடம்  டெபாசிட் பெறுவது மற்றும் நிதியுதவி அளிக்கும் பணிகளை செய்து வருகிறது. தற்போது அதன் பங்குகள் அதல பாதாளத்திற்கு சரிந்து, வங்கி திவால் ஆனதால், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில், வங்கி நெருக்கடி தற்போது கட்டுக்குள் இருப்பதாக நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை அளித்துள்ளார்.

    சிலிகான் வேலி வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும், வரிசெலுத்துவோருக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்றும், வங்கிகள் வைப்புத்தொகை காப்பீட்டிற்கு செலுத்தும் கட்டணத்தில் இருந்து பணம் வரும் என்றும் பைடன் கூறியிருக்கிறார்.

    • தெலுங்கு பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடல் 4.35 நிமிடங்கள் ஓடக்கூடியது.
    • 4 நிமிடமும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சிறப்பாக ஆடியது உலகையே கவர்ந்துள்ளது.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    சினிமா கலைஞர்களுக்கு எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆஸ்கர் விருது பெறுவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள்.

    ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று பங்கேற்பதையும் சினிமா கலைஞர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். இதனால் ஆஸ்கர் விருது பெறுவது சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டு சினிமா கலைஞர்களுக்கும் மிகப்பெரிய கனவாக உள்ளது.

    இந்த ஆண்டு 95-வது ஆண்டாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் நடந்த இந்த கோலாகல விழாவில் உலகின் பல்வேறு நாட்டு சினிமா கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

    இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர், ஆல்தட், பிரீத்ஸ், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆகிய 3 படங்கள் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் மூலப்பாடல் வகையில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

    ஆல்தட் பிரீத்ஸ், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆகிய 2 படங்களும் ஆவண குறும்படங்கள் வரிசையில் இடம்பெற்று இருந்தன. ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் இத்தனை படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

    இந்த தடவை 'நாட்டு நாட்டு' பாடலுக்கு எப்படியும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது. இந்த பாடல் உலக அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருந்ததாலும், ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றதாலும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

    'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி (மரகதமணி) பாடகர்கள் ராகுல், கால பைரவா இயக்குனர் ராஜமவுலி ஆகியோர் விழாவில் பார்வையாளர்களாக பங்கேற்றனர். பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவும் வித்தியாசமான உடை அலங்காரத்தில் பங்கேற்றார்.

    விழாவில் ஒவ்வொரு பிரிவாக விருதுகள் அறிவிக்கப்பட்டபோது பலத்த கரகோஷம் நிலவியது. முதலில் குறும்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த படம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த 2 குட்டி யானைகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையேயான பாச பிணைப்பை சித்தரித்து எடுக்கப்பட்டு இருந்தது. கார்திகி இயக்கிய இந்த படம் 39 நிமிடங்கள் ஓடும் வகையில் இருந்தது.

    தமிழில் தயாரிக்கப்பட்ட இந்த படம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் குட்டி யானைகள், ரகு, பொம்மி மற்றும் இந்த யானைகளை பராமரிக்கும் பாகன் பொம்மன், அவர் மனைவி பெல்லி ஆகியோரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. நெட்பிளிக்சில் கடந்த ஆண்டு இந்த படம் வெளியாகி கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

    இந்த படம் ஆஸ்கர் விருதை பெற்றது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. தமிழ் ஆவண குறும்படம் ஒன்றுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் தமிழ் திரை உலகினர், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையடுத்து பாடல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சேர்ந்து ஆடியிருப்பது போன்று கலைஞர்கள் ஆடி ஆஸ்கர் விருது விழா பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தது. அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.

    அதன்பிறகு 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி அதை பெற்றுக்கொண்ட னர். அவர்கள் இருவரும் விழா மேடையில் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்து பேசினார்கள்.

    'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்றிருந்த 'ஜெய்ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அந்த பாடலுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.

    தெலுங்கு பாடலான அந்த பாடல் 4.35 நிமிடங்கள் ஓடக்கூடியது. இந்த 4 நிமிடமும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சிறப்பாக ஆடியது உலகையே கவர்ந்துள்ளது.

    ஆஸ்கர் விழாவில் மற்ற விருதுகள் பெற்ற படங்கள் மற்றும் திரை உலக பிரமுகர்கள் விவரம் வருமாறு:-

    சிறந்த படமாக எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகர் பிரண்டன் பிரேசர், சிறந்த நடிகை மிஷல் இயோ.

    சிறந்த அனிமேஷன் திரைப்படம்-பினோச்சியோ, சிறந்த துணை நடிகர்-கீ ஹ்யூ குவான், சிறந்த துணை நடிகை ஜேமி லீ கர்டிஸ், சிறந்த ஆவணப்படம் நாவல்னி, சிறந்த குறும்படம் ஐரிஷ் குட்பை, சிறந்த ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் பிரண்ட், சிறந்த ஒப்பனை தி வேல், சிறந்த ஆடை வடிவமைப்பு பிளாக் பாந்தர், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டன் பிரண்ட், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் அவதார்-2.

    • கடலோர மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • படகு கவிழ்ந்த பகுதியில் கடும் பனி நிலவியதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

    சான்டீகோ:

    அமெரிக்காவில் உள்ள சான்டீகோ கறுப்பு கடற்கரை பகுதிகளில் படகுகளில் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

    இந்நிலையில் 2 கடத்தல் படகுகளில் சுமார் 15 பேர் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடும் பனிமூட்டம் இருந்ததால் அந்த படகுகள் கடலின் ஆழம் குறைந்த பகுதிக்கு சென்றுவிட்டது. திடீரென அந்த 2 படகுகளும் கவிழ்ந்துவிட்டது. இதனால் அதில் பயணம் செய்த 15 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.

    இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது பற்றி அறிந்ததும் கடலோர மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகு கவிழ்ந்த பகுதியில் கடும்பனி நிலவியதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

    நீண்ட நேரத்திற்கு பிறகு இறந்த 8 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. அந்த பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருந்ததால் அவர்கள் நீந்தி உயிர் தப்பி இருக்கலாம் என தெரிகிறது. இதில் சில பெண்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.
    • எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    நியூயார்க்:

    மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது.மொத்தம் 79 எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 16 எலிகளுக்கு ஆல்பா,டெல்டா, ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.இந்த ஆய்வினால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது.
    • எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்தில் நடித்ததற்காக துணை நடிகர், துணை நடிகை விருது கிடைத்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சிறந்த அனிமேஷன் படம் - பினோச்சியோ

    சிறந்த துணை நடிகருக்கான விருது - கி ஹூ குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)

    சிறந்த துணை நடிகை விருது - ஜேமி லீ கர்டிஸ்

    சிறந்த ஆவணப் படம் - நாவல்னி

    • சாந்தா குரூஸ் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • கனமழை காரணமாக 34 மாவட்டங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சில நாட்களாக அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக கனமழை கொட்டியது.

    ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஏராளமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இந்த நிலையில் சாந்தா குரூஸ் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் மீட்பு பணிகளும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கனமழை காரணமாக 34 மாவட்டங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பலத்த காற்று வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் மக்கள் இருளில் தவிக்கிறார்கள்.

    மத்திய பகுதியில் அமைந்துள்ள துலே நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கரை பகுதியில் வசித்த 1000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கலிபோர்னியா மாகாணத்துக்கு பேரிடர் கால உதவி வழங்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.

    ×