என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்.
    • இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    வாஷிங்டன்:

    சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது. 'நாசா' தலைவர் பில் நெல்சன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியாவுக்கும் வாழ்த்துகள். இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • லேண்டரில் இருந்து வெளியேறிய ரோவர் சில மணி நேரங்களில் நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது.
    • சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

    மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேற்றத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்களின் சீரிய முயற்சியால் லேண்டரின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது.

    இந்நிலையில், நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
    • இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    வாஷிங்டன்:

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

    மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்னவொரு அருமையான தருணம், இன்று காலை சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா இன்று முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • டி.கியூ. மிட்ஜெட் கார்களை வேகமாக ஓட்டுவதில் ஆஷ்லியா திறமையானவர்
    • கார் மோதி கொண்டதில் ஆஷ்லியா காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார்

    அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை சேர்ந்த மாநிலம் இண்டியானா. இதன் தலைநகரம் இண்டியானாபொலிஸ்.

    இந்நகரை சேர்ந்தவர் ஆஷ்லியா ஆல்பர்ட்ஸன் (24). ஆஷ்லியா கார் பந்தயத்தில் பிரபலமானவர்.

    தனது 10வது வயதிலிருந்தே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர் டி.கியூ. மிட்ஜெட் வகை கார்களை வேகமாக ஓட்டுவதில் திறமையானவர் என பெயர் பெற்றிருந்தார்.

    இவர் ஜி.எம்.சி. டெரைன் கார் ஒன்றில் சக பயணியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அக்காரை இவரது 31-வயது நண்பர் ஜேக்கப் கெல்லி சாலையின் இடதுபுறமாக ஓட்டி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அருகில் ஒரு கருப்பு நிற செவர்லே மலிபு காரை ஆஸ்டின் கூப்பர் (Austin Cooper) எனும் 22-வயது ஆண் வலதுபுறமாக வேகமாக ஓட்டி வந்தார்.

    ஒருவரையொருவர் முந்தி செல்லும் நோக்கில் இரண்டு கார்களும் அருகருகே மிக வேகமாக சென்றதால், ஒருவர் மற்றொருவருக்கு வழி விட மறுத்து முன்னேறி கொண்டிருந்தனர்.

    அப்போது மலிபு காரை ஓட்டியவர் திடீரென தனது பாதையிலிருந்து ஜி.எம்.சி. சென்ற பாதையின் குறுக்கே வந்தார். இதனை எதிர்பாராத கெல்லி, செயலிழந்தார். இதில் ஜி.எம்.சி. கார் சுழன்றது. இதன் விளைவாக இரண்டு கார்களும் மிக பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் ஆஷ்லியா காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

    உடனடியாக காவல்துறைக்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்து, அவர்கள் விரைந்து வந்து அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லூயிவில் பல்கலைகழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஷ்லியா மற்றும் கெல்லிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால், சிகிச்சை பலனின்றி ஆஷ்லியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். லேசான காயங்களுக்காக கெல்லிக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது. மலிபுவை ஓட்டிய ஆஸ்டினுக்கும் அவருடன் பயணித்த ஒரு 18 வயதுக்குட்பட்ட நபருக்கும் லேசான காயங்களுக்காக ஷ்னெக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். "ஆஷ்லியா உயிரிழந்தது குறித்து எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இச்சம்பவம், உயிர் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆஷ்லியா நினைவாக இனியாவது சாலைகளில் வாகனம் ஓட்டும் போது ஒருவரையொருவர் முந்தி செல்லும் வெறியை ஓட்டுனர்கள் குறைத்து கொள்ள வேண்டும்," என பிரபல கார் பந்தய வீரர் டோனி ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
    • ஜி20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வாஷிங்டன்:

    ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது.

    ஜி 20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ம் தேதி இந்தியா வரவுள்ளார் என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

    மேலும், அதிபர் பைடன் மற்றும் ஜி 20 தலைவர்கள் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிப்பார்கள். சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனைவி தரையில் பிணமாக கிடந்தார் என்று லேரி தெரிவித்தார்
    • ஜாம்பியா காவல்துறையின் முடிவை அமெரிக்க அதிகாரிகள் நம்பவில்லை

    அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பாரடைஸ் வேலி டிரைவ் பகுதியில் பல் மருத்துவராக தொழில் புரிந்து வந்தவர் லேரி ருடால்ஃப். இவரது மனைவி பியான்கா ருடால்ஃப்.

    34 வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், 2016ல் வைல்ட் லைஃப் சஃபாரி எனப்படும் வனவிலங்குகளை அவை வசிக்கும் வனங்களிலேயே வாகனத்தில் அமர்ந்தபடி காணும் சுற்றுலாவிற்காக ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவிற்கு சென்றிருந்தனர்.

    சுற்றுலா முடிந்து ஊருக்கு திரும்பும் நாளான அக்டோபர் 11 அன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தனர்.

    அப்போது பியான்கா அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டார் என ஜாம்பிய காவல்துறையிடம் லேரி கூறினார்.

    இது குறித்து அவர் கூறும் போது, "நான் குளியலறையில் இருந்தேன். ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. நான் உடனே பதற்றத்துடன் வெளியில் வந்து பார்த்தேன். அப்போது என் மனைவி தரையில் பிணமாக கிடந்தார். அவர் உடலை சுற்றி எங்கும் ரத்தமாக இருந்தது," என்று அவர் தெரிவித்தார்.

    ஜாம்பியா நாட்டு புலனாய்வு அதிகாரிகள், தங்கள் விசாரணையில் பியான்காவின் மரணத்தை தற்கொலை என முடிவு செய்தனர். இதனையடுத்து காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு தொகையை முழுமையாக லேரியிடம் வழங்கியது.

    ஆனால் பியான்காவின் மரணம் தற்கொலையாக இருக்க முடியாது என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் வல்லுனர்கள் ஆகியோரின் ஆய்வில் பியான்காவின் இருதயத்தை துளைத்த துப்பாக்கி குண்டு, 2 அல்லது 3.5 அடி தூரத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அவர் தன்னைத்தானே சுட்டு கொண்டு இறந்திருந்தால் இது போன்ற இடைவெளி வர வாய்ப்பே இல்லை எனவும் முடிவுக்கு வந்தது.

    லேரியின் வாக்குமூலத்தை நம்பாத அமெரிக்க மத்திய புலனாய்வு துறை, பல நாடுகளுக்கு சென்று பல சாட்சிகளை விசாரித்து, ஒரு நீண்ட விசாரணையை நடத்தியது. இறுதியாக குற்றம் நடந்த ஐந்த வருட காலம் கழித்து தக்க ஆதாரங்களுடன் லேரியை கைது செய்தது. அவரை விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    லேரிக்கு பியான்காவின் பெயரில், பெருமளவில் எடுக்கப்பட்டிருந்த ஆயுள் காப்பீட்டுத்தொகையை தனதாக்கி கொள்ளும் ஆசை வந்தது. மேலும் அவருக்கு லோரி மில்லிரான் எனும் காதலியும் இருந்தார். பியான்காவை சந்தேகம் வராமல் கொன்று காப்பீட்டுத்தொகையை உரிமை கொண்டாடினால், லோரியை திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ எந்த தடையும் இருக்காது என்ற முடிவுக்கு லேரி வந்தார்.

    இதனை தொடர்ந்து சுற்றுலா செல்லும் இடத்தில் மனைவியை லேரி சுட்டு கொலை செய்தார். டென்வர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வந்திருக்கிறது. இதன்படி, லேரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக சுமார் ரூ.125 கோடியும் ($15 மில்லியன்) விதிக்கப்பட்டிருக்கிறது.

    குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது காதலி லோரி மில்ரியானுக்கு கடந்த ஜூன் மாதம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க புலனாய்வு துறையின் திறமையையும், உண்மையையை வெளியில் கொண்டு வர அவர்கள் எடுத்த முயற்சிகளையும் அனைவரும் பாராட்டுகின்றனர்.

    • வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது.
    • டிரம்ப் கோர்ட்டில் ஆஜராகுவதையடுத்து ஜார்ஜியாவில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியதாக டிரம்ப் மற்றும் 18 பேர் மீது ஜார்ஜியா கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. அவருக்கு 25-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் மோசடி வழக்கு தொடர்பாக ஜார்ஜியா கோர்ட்டில் வருகிற 24-ந்தேதி டிரம்ப் சரண் அடைகிறார். இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் கூறும்போது, உங்களால் நம்ப முடிகிறதா? கைது செய்யப்படுவதற்காக நான் வியாழன் அன்று ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்கு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் கோர்ட்டில் ஆஜராகுவதையடுத்து ஜார்ஜியாவில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிரம்ப் மீது ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது, அரசின் ரகசிய ஆவணங்களை வீட்டில் பதுக்கியது உள்ளிட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு நிமிடத்தில் 9 முறை ஸ்கிப்பிங் செய்து கிட்கேட் பூனை இந்த சாதனையை படைத்துள்ளது.
    • பூனையின் வயது காரணமாக நாங்கள் குதிப்பதை குறைந்த எண்ணிக்கையில் வைத்திருந்தோம் என்றார்.

    மனிதர்கள் மட்டுமல்ல விலங்கினங்களும் கூட கின்னஸ் சாதனை படைத்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள மிசூரி பகுதியை சேர்ந்த கிட்கேட் என்ற 13 வயது பூனை அதன் உரிமையாளர் திரிஷா சீப்ரிட் உதவியுடன் ஒரு நிமிடத்தில் அதிக முறை ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    பூனை அதன் உரிமையாளருடன் சேர்ந்து ஜம்ப் ரோப்பிங் திறமையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு நிமிடத்தில் 9 முறை ஸ்கிப்பிங் செய்து கிட்கேட் பூனை இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனை குறித்து பூனையின் உரிமையாளரான திரிஷா சீப்ரிட் கூறுகையில், ஜம்ப் ரோப்பிங் செய்வது எனக்கும், எனது பூனைக்கும் பிடித்து வருகிறது. மேலும் பூனையின் வயது காரணமாக நாங்கள் குதிப்பதை குறைந்த எண்ணிக்கையில் வைத்திருந்தோம் என்றார்.

    • விமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் செய்ய உள்ளேன் என மூதாட்டி கூறியிருந்தார்.
    • சிற்றுண்டி பெட்டியில் தானியங்கள் மற்றும் வேர்க்கடலை, வெண்ணை, ஜாம் சாண்ட்விச் போன்ற திண்பண்டங்கள் இடம்பெற்றிருந்தன.

    அமெரிக்கன் ஏர்லைன்சில் பயணித்த தாரா என்ற பயணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிற்றுண்டி பெட்டியின் புகைப்படத்துடன் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவில், இன்று நான் எனது 3 வயது மருமகனுடன் விமானத்தில் பயணித்தேன். நானும், எனது மருமகனும் ஐபாடில் கேம் விளையாடி கொண்டிருந்தோம்.

    அப்போது விமான பணிப்பெண் எனது மருமகனின் சிற்றுண்டி பெட்டியை எங்களை கேட்காமலேயே எடுத்து சென்று விட்டார். இதனால் நான் கோபமாக இருக்கிறேன். இதுகுறித்து அந்த விமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் செய்ய உள்ளேன் என கூறியிருந்தார்.

    மேலும் அவர் பதிவிட்ட புகைப்படத்தில் இருந்த சிற்றுண்டி பெட்டியில் தானியங்கள் மற்றும் வேர்க்கடலை, வெண்ணை, ஜாம் சாண்ட்விச் போன்ற திண்பண்டங்கள் இடம்பெற்றிருந்தன. அவரது இந்த பதிவை தொடர்ந்து விமான பணிப்பெண் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

    • கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
    • பொது மக்கள் அவதிக்குள்ளானர்கள்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.1 புள்ளிகளாக பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தால் வீடுகள்-கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.இதில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

    மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று பயங்கர சூறாவளி காற்றுடன் மழையும் பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளானர்கள்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று போட்டி நடந்தது.
    • இதில் அமெரிக்கா வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார்.

    ஆரம்பம் முதலே கோகோ காப் சிறப்பாக ஆடினார். இறுதியில், கோகோ காப் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • இவர்கள் குடும்பம் பால்டிமோரில் கடந்த 9 வருடங்களாக வாழ்ந்து வருகிறது
    • அவர்கள் மூவர் உடலிலும் குண்டு பாய்ந்த அடையாளங்கள் இருந்தது

    அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மாநிலம் மேரிலேண்ட் (Maryland).

    இங்குள்ள பால்டிமோர் (Baltimore) நகரத்தில் வசித்து வந்த இந்தியர், கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் (37). இவரது மனைவி பிரதீபா (35). இவர்களது ஒரே மகன் யாஷ் (6).

    கணவன், மனைவி இருவரும் பொறியாளர்கள். இவர்கள் பால்டிமோரில் கடந்த 9 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

    யோகேஷின் தந்தை பல வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டதால், அவரின் தாய் மட்டும் தனியாக தாவண்கரேயில் வசித்து வருகிறார்.

    அமெரிக்காவில் நடைபெறும் வழக்கமான ஒரு ரோந்து ஆய்வில் நேற்று முன்தினம் இவர்கள் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது அவர்கள் மூவரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

    அவர்கள் மூவர் உடலிலும் துப்பாக்குச் குண்டு பாய்ந்ததற்கான அடையாளங்கள் இருந்தது.

    முதல் கட்ட விசாரணையில் யோகேஷ், தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள அவரது தாயாருக்கும், உறவினர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறியுள்ள பால்டிமோர் காவல்துறை, இந்த சம்பவத்தை இரட்டை கொலை மற்றும் தற்கொலை வழக்காக தீவிரமாக விசாரித்து வருகிறது.

    யோகேஷ் இப்படிப்பட்ட முடிவை ஏன் எடுத்தார் என்பதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    ×