என் மலர்
இலங்கை
- இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மக்கள் இன்று நல்ல அரசியல் விழிப்புணர்வுடன் உள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார்.
அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த மே மாதம் பிரதமர் பதவி விலகிய பிறகு மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அதிபர் ரணிலுடன் இணைந்து செயலப்ட வேண்டும். முன்பு நாங்கள் ரணில் தவறானவர் என கூறினோம். ஆனால் இன்று அவர் எங்களுடன் உள்ளார். நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் ரணிலுக்கு ஆதரவு வழங்கி செயல்பட வேண்டும்.
மக்களின் நன்மைக்காக அவருடன் நாங்கள் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். இன்று நாம் பல்வேறு சவால்களை எதிர் கொண்டுள்ளோம். அந்த சவால்களை வெற்றி கொள்வதற்கான சக்தி எங்களுக்கு உள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தேவைகளை அறிந்து கொண்டு அதற்காக செயல்பட வேண்டும். மக்கள் இன்று நல்ல அரசியல் விழிப்புணர்வுடன் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
- இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.
கொழும்பு:
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தப் போரின் முடிவில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை முன் வைத்துள்ளது.
சிறைகளில் நீண்ட காலமாக அடைப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது.
- கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது.
கொழும்பு :
கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த நாடு 88.01 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது.
சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாக கொண்ட இலங்கை, பொருளாதாரத்தில் மீளும் முயற்சியாக மீண்டும் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட முயன்றுவருவது குறிப்பிட்டத்தக்கது.
இந்த ஆண்டுக்கான, சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 3 இடங்களை போர்ச்சுக்கல், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன.
- இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
- பழங்காலத்தில் இருந்தே சீனா நமக்கு ஆதரவாக இருக்கிறது.
கொழும்பு :
இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனையும் நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையே, பொருளாதார சிக்கலில் இருந்து மீள சர்வதேச நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கைக்கு ரூ.23 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்க சம்மதம் தெரிவித்து சர்வதேச நிதியம் பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆனால், இந்த கடனை இறுதி செய்வதற்கு முன்பு, ஏற்கனவே கடன் வாங்கிய நாடுகளுடன் கடனை மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும் என்றும், அந்த நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் சர்வதேச நிதியம் நிபந்தனை விதித்தது.
இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் இலங்கை கடன் பெற்றுள்ளது. இதில் இந்த ஆண்டில் அதிக அளவாக இந்தியா 4 பில்லியன் டாலர் அளவுக்கு இலங்கைக்கு உதவி உள்ளது.
ஒட்டுமொத்த அளவில் சீனா (52 சதவீதம்), ஜப்பான் (19 சதவீதம்) நாடுகளுக்கு அடுத்ததாக (12 சதவீதம்) 3-வது இடத்தில் உள்ளது. இந்த கடனை மறுசீரமைப்பு செய்வது குறித்த பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி வர திட்டமிட்டு உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைமையை விவரிப்பதற்கு டெல்லி வர விரும்புவதாக ஜப்பானில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது நான் தெரிவித்தேன்.
பிரதமர் மோடி எப்போதும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நமது நெருக்கடியில் இந்தியாவின் உதவியை நான் எப்போதும் பாராட்டுகிறேன். நமது மறுகட்டமைப்பு முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.
சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது. 16-ந் தேதி தொடங்க உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும்.
பழங்காலத்தில் இருந்தே சீனா நமக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த சிக்கலான நேரத்திலும் ஆதரிக்கும் என்று நம்புகிறேன்.
சமீபத்தில், ஜப்பான் சென்று திரும்பினேன். ஜப்பானும் இதில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிப்பதற்காக அரசியல் சட்டத்தில் 22-வது திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தம் குறித்து நேற்றும், இன்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த விவாதம் நேற்று நடக்கவில்லை. ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவில் ஒருதரப்பினர், அந்த திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனே நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும்போது, '22-வது அரசியல் சட்ட திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகளின் கருத்துகளை அறிய இன்னும் ஆலோசனை நடத்த வேண்டி இருக்கிறது. அப்போதுதான், இது அர்த்தமுள்ள நடவடிக்கையாக அமையும். எனவே, இப்போது விவாதம் நடக்காது' என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவும் இதே கருத்தை கூறினார்.
- இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமலாகியுள்ளது.
- பிற எரிபொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி, 92 ரக பெட்ரோலின் விலையில் 40 ரூபாய் குறைக்கப்பட்டு 410 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைக்கபப்ட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எரிபொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக வெளியான தகவல் அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
- கொழும்புவில் ராஜபக்சே சகோதரர்களை சுப்ரமணிய சாமி நேரில் சந்தித்து பேசினார்.
- அதிபர் பதவியில் இருந்து விலகி வெளிநாடு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் தாய்நாடு திரும்பினர்.
கொழும்பு:
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்ரமணிய சாமி. இலங்கை முன்னாள் அதிபர்களான மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் குடும்ப நண்பர் ஆவார். அவர்களை கொழும்புவில் அடிக்கடி சந்தித்தும் வருகிறார்.
இந்நிலையில், கொழும்புவில் நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் சுப்ரமணிய சாமி பங்கேற்றார். அப்போது அவரைச் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நேற்று கோத்தபய ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினார். இந்த தகவல்களை ராஜபக்சே குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாடு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே சமீபத்தில்தான் தாய்நாடு திரும்பினார். அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் சுப்ரமணிய சாமி என்பது குறிப்பிடத்தக்கது
- அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
- ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்களை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தினர் அரசு உயர்பதவிகளில் இருந்து விலகினர்.
அதன்பின் போராட்டங்கள் குறைந்து இருந்த நிலையில் சமீபத்தில் மாணவ அமைப்பினர் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். இலங்கையில் தற்போது வரை உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது. இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கம் அடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில், ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சர் ரம்புலெல்லா மறுத்தார்.
அரசியல் உந்துதல் காரணமாக பொது சுகாதார ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்தார்.
- இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
- கொழும்பு, மருதானை, பீம்ஸ் ஆகிய இடங்களிலிம் இளைஞர்கள் பேரணி நடத்த முயன்றனர்.
கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.
இதையடுத்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தினார்கள்.
இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள் ஓய்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஆனாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கையில் தற்போது மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கி உள்ளன. கொழும்பு நகரின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வளையமாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதையடுத்து இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன. சோசியலிச இளைஞர் சங்கத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் கொழும்பு சுகாதார அமைச்சக கட்டிடத்தின் அருகே பேரணியாக செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள்.
இதேபோல் கொழும்பு, மருதானை, பீம்ஸ் ஆகிய இடங்களிலிம் இளைஞர்கள் பேரணி நடத்த முயன்றனர். இதுதொடர்பாக 4 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இலங்கைக்கு அதிகமான நிதி உதவி அளித்த நாடு இந்தியாவே ஆகும்.
- இதர நட்பு நாடுகளிடமும் இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வற்புறுத்தி உள்ளது.
கொழும்பு :
இலங்கை வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்கிறது. இலங்கைக்கு இந்தியா கடன் மற்றும் நிதி உதவிகளை அளித்துள்ளது. இலங்கைக்கு அதிகமான நிதி உதவி அளித்த நாடு இந்தியாவே ஆகும்.
ஆனால், இலங்கைக்கு இந்தியா இனிமேல் நிதி உதவி அளிக்காது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கு கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மறுப்பு தெரிவித்தது. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கை மக்கள் சந்தித்து வரும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்காக, இலங்கைக்கு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 400 கோடி டாலர் இருதரப்பு உதவியை இந்தியா அளித்துள்ளது. இதர நட்பு நாடுகளிடமும் இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வற்புறுத்தி உள்ளது.
இலங்கைக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவாக இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் முக்கிய பொருளாதார திட்டங்களில் நீண்ட கால முதலீடுகளை செய்துள்ளது.
அத்துடன், இலங்கையில் 350 கோடி டாலர் மதிப்புள்ள இருதரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டங்கள் நடந்து வருகின்றன. இலங்கையை சேர்ந்தவர்கள், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி மற்றும் திறன் பயிற்சி மேற்கொள்ள கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.
இத்தகைய ஒத்துழைப்புகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவி வருகின்றன.
இவ்வாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது.
- 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது.
- ஆசிய கோப்பையில் விளையாடிய இலங்கை அணி வீரர்களில் பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ளனர்.
கொழும்பு:
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி 20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து, யுஏஇ ஆகிய அணிகளுடன் மோத வேண்டும்.
டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி விவரம்:
தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்க குணதிலகா, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சாமிக்க கருணரத்னா, தில்ஷான் மதுசாங்க, பிரமோத் மதுஷன், துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா.
காத்திருப்பு வீரர்கள்: அஷேன் பண்டாரா, பிரவீன் ஜெயவிக்ரமா, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ
- ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
- மைத்ரிபால சிறிசேனா அக்டோபர் 14-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டின் ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 270 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தேக நபராக இலங்கை கோர்ட்டு அறிவித்துள்ளது. இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறவுள்ளதாக தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை அறிக்கைகளை மைத்ரிபால சிறிசேனா புறக்கணித்ததாக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த வழக்கில் அக்டோபர் 14-ம் தேதி மைத்ரிபால சிறிசேனா கோர்ட்டில் நேரில் ஆஜராக கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
- நாங்கள் ராணுவக் கூட்டணியில் பங்கேற்கவில்லை.
- பசிபிக் பெருங்கடலின் பிரச்சினைகள் இந்தியப் பெருங்கடலுக்கு வருவதை விரும்பவில்லை.
கொழும்பு
சீன உளவு கப்பலான 'யுவான் வாங் 5' சமீபத்தில் இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இதற்கு இலங்கை அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் இலங்கையில் உள்ள இந்திய-சீன தூதரகங்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவிதமான போரிலும் இலங்கை அங்கம் வகிக்காது என அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
தேசிய ராணுவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நாங்கள் ராணுவக் கூட்டணியில் பங்கேற்கவில்லை. பசிபிக் பெருங்கடலின் பிரச்சினைகள் இந்தியப் பெருங்கடலுக்கு வருவதை நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை. இது ஒரு மோதலாகவும், போர் நடக்கும் பகுதியாகவும் இருக்க நாங்கள் விரும்பவில்லை.
எந்தவொரு வல்லரசு போட்டியிலும் இலங்கை பங்கேற்காது' என தெரிவித்தார். அம்பன்தோட்டா துறைமுகம் ஒரு ராணுவ துறைமுகம் அல்ல என்றும், ஒரு வணிக துறைமுகமாக இருந்தாலும், பலர் தேவையற்ற முடிவுகளுக்கு வருவது நமது முக்கியத்துவத்தைக் காட்டுவதாகவும் கூறிய விக்ரமசிங்கே, இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியல் துரதிஷ்டவசமாக இலங்கையை அம்பன்தோட்டாவுக்கான குத்தும் பையாக மாற்றியுள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.






