என் மலர்
இலங்கை
- பொதுமக்கள் போராட்டம் முடிந்து அமைதி நிலவி வருவதால் கோத்தபய ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சொந்த நாடு திரும்பினார்.
- ராஜபச்சே குடும்பத்தினர் சொந்த நாடுகளுக்கு வந்து உள்ளதால் அவர்கள் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
கொழும்பு:
இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இதே போல் நிதி மந்திரியாக இருந்த பசில் ராஜபக்சேவும் இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் முடிந்து அமைதி நிலவி வருவதால் கோத்தபய ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சொந்த நாடு திரும்பினார்.
இவரை தொடர்ந்து தற்போது பசில் ராஜபக்சேவும் நேற்று அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பினார். அவர் தங்கியுள்ள இடத்தில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து ராஜபச்சே குடும்பத்தினர் சொந்த நாடுகளுக்கு வந்து உள்ளதால் அவர்கள் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடிப்பது வாடிக்கையாகவே இருக்கிறது.
- எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு:
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டியடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைப்பிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது.
இந்நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே 14 இந்திய மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மலையக தமிழர்கள், வீடு கட்டிக்கொள்வதை இலங்கை அரசு ஊக்குவித்து வருகிறது.
- மலையக தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
கொழும்பு :
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் இந்திய வம்சாவளி தமிழர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கொழும்பு போய்ச் சேர்ந்த மருந்து பொருட்களை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பெற்றுக்கொண்டார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:-
இலங்கை மலையக தமிழர்கள் சிலர், இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக இணைந்து விட்டனர். வேறு சிலர் இணையவில்லை. அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களை எப்படி இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும். இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். அந்த சமயத்தில், மலையக தமிழர்களின் பிரச்சினைகளும் படிப்படியாக தீர்க்கப்படும்.
கடந்த 1964-ம் ஆண்டு, சிறிமா பண்டாரநாயகா-லால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, மலையக தமிழர்கள் பலர் இந்தியாவுக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு செல்லாமல் இலங்கையிலேயே தங்கிவிட்டனர்.
மலையக தமிழர்கள், வீடு கட்டிக்கொள்வதை இலங்கை அரசு ஊக்குவித்து வருகிறது. அவர்களுக்கு நிலம் வழங்குகிறது. மற்ற குழுக்களை போல் அவர்களும் சொந்த நிலத்தில் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறோம்.
மலையக தமிழர்களின் குழந்தைகள், படித்து முடிந்த பிறகு அந்த பகுதியை விட்டு வெளியேறுவதால், மலையக பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலையக தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கொழும்புக்கு கொண்டு வர நடவடிக்கைகளை அக்கட்சி எடுத்தது.
- ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அவதிக்குள்ளான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது.
இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினர். அதேபோல் ராஜபக்சே குடும்பத்தினர் வகித்த அரசு பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அதன்பின் அதிபராக ரனில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இலங்கையின் பிரபல இடதுசாரி கட்சியும், எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.ஜி.பி.) இன்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. பொருளாதார நெருக்கடியை தீர்க்காததால் அரசை கண்டித்து தலைநகர் கொழும்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது.
இப்போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி கொழும்புக்கு கொண்டு வர நடவடிக்கைகளை அக்கட்சி எடுத்தது.
இதையடுத்து கொழும்பு நகரை நோக்கி ஏராளமானோர் நள்ளிரவு முதலே புறப்பட்டனர். இன்று காலை கொழும்பு அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
போராட்டம் காரணமாக கொழும்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொழும்பு நகரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இலங்கை அதிபராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கைகளை எடுத்தார். கொழும்பில் முக்கிய பகுதிகளை உயர்மட்ட பாதுகாப்பு மண்டலங்களாக அறிவித்தார்.
சில நாட்களாக இலங்கையில் போராட்டம் ஓய்ந்து இருந்த நிலையில் மீண்டும் இன்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்த எதிர்க்கட்சி அழைப்பு விடுத்து இருப்பதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டன.
- சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.
- 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்தபோது, பாராளுமன்றத்தைவிட அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்க வகை செய்யும் 20-ஏ சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அந்நாட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.
அதன்பின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிபருக்கான அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தில் 21ஏ சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி 21-ஏ என்ற பெயரிலான அரசியல் சாசன 22-வது திருத்த வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து கடந்த ஆகஸ்டு மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்த சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.
இந்த மசோதா மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து அந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
- முதல் 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் சேர்த்து உள்ளது.
- இது இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.
கொழும்பு :
கொரோனாவை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியும் இலங்கையை பாதித்து உள்ளதால், நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக ஸ்தம்பித்து உள்ளது. இதனால் சர்வேதச பயணிகளை ஈர்த்து அந்த துறையை மீட்டெடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் உலக அளவில் சுற்றுலாவுக்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை 'வேர்ல்டுபேக்கர்ஸ்' இணையதளம் வெளியிட்டு உள்ளது. இதில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் முன்னணி இடத்தை பிடித்து உள்ளது.
குறிப்பாக முதல் 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் சேர்த்து உள்ளது. இலங்கையின் பெரும்பான்மையான கலாசாரம் பவுத்தமாக இருக்கும் நிலையில், அவர்களின் பழக்கவழக்கங்கள் அமைதியாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருப்பதால், பயணம் செய்வதற்கு இது மிகவும் பாதுகாப்பான இடமாக அமைகிறது என்று அந்த இணையதளம் குறிப்பிட்டு உள்ளது.
இது இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. அந்த இணையதளத்தின் வரிசைப்படுத்தலை சுட்டிக்காட்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
- மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது.
- இந்த வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கொழும்பு :
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தனிநபர் மற்றும் கார்பரேட்டுக்கான வருமான வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தவகையில் மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.12 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தாலே வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்த வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
ஆனால் இந்த வரி உயர்வு நடவடிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியாயப்படுத்தி உள்ளார். நாட்டின் உயர்ந்த நன்மைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
இலங்கையின் முதன்மை பட்ஜெட்டில் உபரி வருவாய் தேவை என சர்வதேச நிதியம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இலங்கையின் வருவாயையும் 8.5 சதவீதத்தில் இருந்து 14.5 சதவீத ஜி.டி.பி.யாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான வரி வருவாய் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் உள்பட பெரும்பாலான குடிமக்கள் மறைமுக வரி செலுத்துவதை தவிர வேறு வழியில்லை.
இலங்கையின் நேரடி வரி வருவாயை 20 சதவீதம் அதிகரிக்குமாறு சர்வதேச நிதியம் கூறியுள்ளது. இல்லையென்றால் சாதாரண மக்களும் வரி செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்து உள்ளது.
எனவே ரூ.1,00,000-க்கு மேல் சம்பாதிக்கும் நபர்களுக்கு வருமான வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது குடிமக்கள் மத்தியில் ஒரு முக்கிய கவலையாக மாறியுள்ளது.
ஆனால் இந்த வரி அமைப்பு இல்லாமல், 2026-ம் ஆண்டுக்குள் 14.5 முதல் 15 சதவீதம் ஜி.டி.பி. என்ற விரும்பிய இலக்கை அடைய முடியாது.
இந்த வரி முறையை அரசு திரும்ப பெற்றால், சர்வதேச நிதியத்தின் உதவி கிடைக்காது. சர்வதேச நிதியத்தின் ஒப்புதல் இல்லாமல், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் நிதி ரீதியாக உதவி வரும் நாடுகளிடம் இருந்தும் உதவி கிடைக்காது. எனவே இந்த வரி உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்ந்தாலோ அல்லது மேலும் மோசமடைந்தாலோ நாட்டின் வணிகத்துறை பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதிகரிக்கும் பணவீக்கம், உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றவற்றால் நாட்டின் வர்த்தகத்துறையினரின் வருவாய், இலாபம் மற்றும் பணப்புழக்கத்தை வெகுவாக பாதித்து இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில் நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருப்பதாக பிரபல புத்தமத துறவி வரககோடா குணவர்தனே தேரா குற்றம் சாட்டியுள்ளார். நாட்டுக்கான தங்கள் கடமையையும் அவர்கள் புறக்கணித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
தேசிய சொத்துகளை பாதுகாப்போம் என்ற வாக்குறுதியின் பேரில் வரும் அனைத்து அரசுகளும் அதற்கு மாறாக சொந்த நலன்களில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறை கூறினார்.
- இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கி இருக்கிறது.
- 2022-ம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி போட்டி டிசம்பர் மாதம் நடக்கிறது.
கொழும்பு :
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாட உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை கரம் கொடுத்து தாங்கி வருகின்றன. குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கி இருக்கிறது.
இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி பெரமுனா பாராட்டு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கட்சி தலைவர் அனுரா திசநாயகே, 6 மாதங்களில் இந்தியா வழங்கிய 3.8 பில்லியன் டாலர் உதவியையும், 4 ஆண்டுகளில் சர்வதேச நிதியம் வழங்கப்போகும் 2.9 பில்லியன் டாலர் உதவியையும் ஒப்பிட்டு பேசினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இலங்கை மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நேரத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் உதவி அளித்தது. இல்லையென்றால் இலங்கை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்' என்று தெரிவித்தார்.
நாட்டின் நிலைமை தொடர்ந்து மோசம் அடைந்து வருவதாக கூறிய திசநாயகே, அரசுக்கு எதிராக புதிய போராட்டங்கள் நடைபெறக்கூடும் எனவும் எச்சரித்தார்.
இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி போட்டி இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. டிசம்பர் 8 முதல் 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டியை நடத்துவதற்கு இலங்கையுடன் சுமார் 15 நாடுகள் போட்டி போட்டன. கடைசியில் அந்த வாய்ப்பை இலங்கை தட்டிப்பறித்து உள்ளது.
இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்படும் என நாட்டின் சுற்றுலா அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. கொரோனா மற்றும் பொருளாதார சிக்கல்களால் இலங்கை சுற்றுலாத்துறை தொடர்ந்து துவண்டு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இலங்கையில் சட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள பாகியான் சட்டக்குழுமம் என்ற சீன நிறுவனத்தை சுப்ரீம் கோர்ட்டு தடை செய்துள்ளது.
இதன் மூலம் அந்த குழுமம் இலங்கையில் எத்தகைய சட்டப் பணிகளை மேற்கொள்ள முடியாததுடன், சட்ட அதிகாரிகளை சந்திக்கவும் முடியாது என இலங்கை அட்டார்னி அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- மனித உரிமை ஆர்வலர்கள் மாயமானது தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது
- இந்த வழக்கில் கோத்தபய ராஜபக்சே ஆஜராக வேண்டும் என இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் கடந்த 2011-ம் ஆண்டு 2 மனித உரிமை ஆர்வலர்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனித உரிமை மீறல் வழக்கில் அவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு யாழ்ப்பாணம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி அப்போது கோர்ட்டில் ஆஜராகாமல் அவர் தப்பினார். அதன்பின், நாட்டின் அதிபர் ஆனதால் அரசியல் சாசன விலக்கு பெற்றவர் என்ற முறையில் இந்த சம்மன் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராக கோத்தபய ராஜபக்சேவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகியதால் அவருடைய அரசியல் சாசன விலக்கு ரத்தானது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
- கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பு :
இலங்கையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதில் மேற்கு மாகாணத்தில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன் கண்டி, காலே, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த ஆண்டை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அதிக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள பகுதிகளில் 36 சுகாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், எனினும் பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் நோய் கண்டறிவதற்கான கருவிகள் கூட இல்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.
இலங்கை சுகாதாரத்துறைக்கு மேற்படி கருவிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏராளமான தொகை பாக்கி வைத்திருப்பதால், அந்த நிறுவனங்கள் தற்போது கருவிகளை வழங்குவது இல்லை என தெரிய வந்துள்ளது.
எனினும் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 2.1 கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
- 2019-ம் ஆண்டில் 30 லட்சம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தனர்.
கொழும்பு :
இலங்கையை புரட்டிப்போட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்து இருக்கிறது. வேலை இழப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் குறித்து பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்தவகையில் நாட்டில் சுமார் 1 கோடி பேர், அதாவது 96 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் வெறும் சுமார் 30 லட்சம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்து வந்த நிலையில், தற்போது அது சுமார் 1 கோடியை எட்டியிருப்பது ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதைப்போல நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர், அதாவது 2.1 கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் இந்த அவல நிலை ஏற்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தா அதுகோரலா கவலை தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே நாட்டில் நிலவும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கையை சேர்ந்த டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருவது தெரியவந்து இருக்கிறது.
அந்தவகையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 500 டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார்கள். இன்னும் 800 பேர் வரை இடம்பெயர காத்திருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்து இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த நிலை தொடரும் என சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரிதா அலுத்கே எச்சரித்து இருக்கிறார்.
60 வயதில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு அளிக்கும் அரசின் முடிவு நிலைமையை மோசமாக்கும் என்று கூறியுள்ள அவர், இந்த நடவடிக்கையை அரசு தொடர்ந்தால் பொது சுகாதார அமைப்பு சுமார் 300 நிபுணர்கள் உள்பட சுமார் 800 மருத்துவர்களை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
சில அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
- டீசல் தட்டுப்பாட்டால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
- இலங்கையில் இன்னும் 6 மாதங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம்.
கொழும்பு :
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியவில்லை.
இதற்கிடையே, 99 ஆயிரம் டன் கச்சா எண்ணையை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல், இலங்கையை நோக்கி வந்தது. கடந்த 20-ந் தேதி இலங்கை கடல் எல்லைக்குள் வந்தது. கொழும்பு துறைமுகம் அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அந்த கச்சா எண்ணெயை பெற வேண்டுமானால், 70 லட்சம் டாலர் (ரூ.57 கோடி) செலுத்த வேண்டும். ஆனால் அவ்வளவு டாலர் இல்லாததால், இலங்கையால் வாங்க முடியவில்லை. அதனால் 3 வாரங்களாக அக்கப்பல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது.
அந்த கப்பலுக்கு தாமத கட்டணமாக நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் டாலர் அளிககப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இலங்கை மிகப்பெரிய மனித பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒழுங்கிணைப்பு குழுவான 'ரிலீப்வெப்' தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்து விட்டதால், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க முடியவில்லை.
3 ஆயிரத்து 500 படுக்கைகள் கொண்ட இலங்கை தேசிய ஆஸ்பத்திரியில், 60 அத்தியாவசிய மருந்துகள் மட்டுமே உள்ளன. மயக்க மருந்து வினியோகம் குறைவாக உள்ளது. அதனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்பட முக்கியமான பொது அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புற்றுநோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கும் மருந்துகள் கிடைக்கவில்லை. பேண்டேஜுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராமப்புற ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு விட்டன. அவர்களை நகர ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்புவதால், அங்கு கூட்ட நெரிசல் நிலவுகிறது.
டீசல் தட்டுப்பாட்டால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மருத்துவர்கள், நல்ல வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டது. மனித பேரழிவை நோக்கி செல்லும் இலங்கையில், இன்னும் 6 மாதங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கை சுற்றுலா தொழிலை வளர்ச்சி அடைய செய்ய உதவுவதாக இந்திய பயண முகவர்கள் சங்கம் உறுதி அளித்துள்ளது. அதன் தலைவர் ஜோதி மாயாள் கூறியதாவது:-
இலங்கை, பார்க்க வேண்டிய நாடு. சில மாதங்களாக எண்ணற்ற சவால்களை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவுவது அவசியம் என்று கருதுகிறோம்.
செலவழிக்கும் பணத்துக்கு மதிப்பு உடையது. இந்தியாவின் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நாடு. எனவே, இலங்கையின் சுற்றுலா வளர்ச்சியை நோக்கி செல்ல உதவுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






