என் மலர்
இலங்கை
- இந்தியா, இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை ஜனவரியில் தொடங்கப்படும் என்றார்.
கொழும்பு:
இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி.சில்வா கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இந்தியா, இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புத்த கயா செல்லும் யாத்ரீகர்களுக்கும், வர்த்தக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.
மேலும், இத்திட்டத்தின் முதல்கட்டமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை வரும் ஜனவரி மாத மத்தியில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
- கடந்த மாதம் 28-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்தது.
- இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு:
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 5 விசைப் படகுகளை பறிமுதல் செய்து, 24 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து 24 பேரும் சிறையிலில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து ஊர் காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் 10 ஆண்டுகளுக்கு இலங்கைக்குள் வர தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட 24 மீனவர்களும் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுற்றுலா பயணிகள் இலங்கை வர அந்நாட்டு சுகாதாரத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
- இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாட்டினர் சுற்றுலா பயணிகள் இலங்கை வர அந்நாட்டின் சுகாதாரத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில், இலங்கை சுகாதார அமைச்சகம் கொரோனா கட்டுப்பாடுகளை நேற்று அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இலங்கை வந்த பின் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் தனியார் மருத்துவமனை, ஓட்டல் அல்லது அவர்களது வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது.
- தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்று அமைச்சர் கூறினார்.
கொழும்பு:
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.
இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. எனினும், 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவி, சுற்றுலாத் துறையை கடுமையாக முடக்கியது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.
தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும், அநேகமாக டிசம்பர் 12ம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்தார். ஓடுபாதையை விரிவாக்கம் செய்யும் பணிகள் செய்யவேண்டியிருப்பதாகவும், தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என 2019ல் பெயர் சூட்டப்பட்டது. முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது. 2019ல் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்தது. முன்னதாக, இந்தியாவின் அலையன்ஸ் நிறுவனம், சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கியது.
2019 நவம்பரில் இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்குப் பின்னர், விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை மக்களுடன் உண்மையிலேயே நிற்க விரும்பினால் கடன் மறு சீரமைப்பு செயல் முறைக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும்.
- சீனாவின் தலையீடு இலங்கையின் இறையாண்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
கொழும்பு:
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடன் கொடுத்து தனது வலையில் சிக்க வைத்து விட்டதாகவும், இதனால்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த 30-ந்தேதி பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.யான சாணக்கியன் ராசமாணிக்கம் பேசும் போது, சீனா இலங்கையின் நட்பு நாடு அல்ல. அது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் நண்பன்.
இக்கட்டான காலங்களில் இலங்கை மக்களுடன் உண்மையிலேயே நிற்க விரும்பினால் கடன் மறு சீரமைப்பு செயல் முறைக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும்.
இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளை சீனா முடக்கியது என்று தெரிவித்தார். இதற்கு இலங்கையில் சீன தூதரகம் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டது.
இந்த நிலையில் இலங்கையில் சீனாவுக்கு எதிரான போராட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று சாணக்கியன் ராசமாணிக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களுக்கும் சீன தூதரகத்துக்கும் என்ன சம்பந்தம்? எனது கருத்துக்கள் பற்றி டுவிட்டரில் பேசுவதற்கு சீன தூதரகத்துக்கு என்ன வேலை?
சீனாவின் தலையீடு இலங்கையின் இறையாண்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. டுவிட்டர் போரை தொடங்க நினைத்தால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். சீனர்களை எச்சரிக்க விரும்புகிறேன். சீன தூதரகமும் அதன் அரசாங்கமும் இலங்கை நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்காவிட்டால் மற்றும் கடன்களை மறுசீரமைக்க 'சீனா கோ ஹோம்' (சீனா வெளியேறு) போராட்டம் விரைவில் தொடங்கப்படும்.
அதற்கு நான் தலைமை தாங்குவேன். மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவால் இலங்கையின் கடனை ஏன் தள்ளுபடி செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ முடியவில்லை
இலங்கையின் பொருளாதார நிலைைமயை அறிந்திருந்தும் சீன அரசு இலங்கைக்கு கடன் வழங்கி வருகிறது. இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதை அறிந்துள்ள சீனா கடன் பொறிக்குள் சிக்க வைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகிந்த ராஜபக்சே மேற்கொண்ட பயணத்துக்கு ரூ.3.6 கோடி செலவாகி இருக்கிறது.
- கோத்தபய ராஜபக்சே ரூ.70 லட்சம் செலவிட்டு உள்ளார்.
கொழும்பு :
இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர்.
இவர்கள் இருவரும் ஆட்சியில் இருந்தபோது முந்தைய ஓராண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்துக்கான செலவினங்களை அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள் தற்போது வெளியிட்டு உள்ளன. அதாவது இருவரின் வெளிநாட்டு பயண செலவு ரூ.4.30 கோடி என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் வங்காளதேசம், இத்தாலிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே மேற்கொண்ட பயணத்துக்கு ரூ.3.6 கோடி செலவாகி இருக்கிறது. இதைப்போல நியூயார்க், கிளாஸ்கோ, ஐக்கிய அரபு அமீரக பயணத்துக்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே ரூ.70 லட்சம் செலவிட்டு உள்ளார்.
நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது ராஜபக்சே சகோதரர்கள் வெளிநாட்டு பயணங்களுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டு இருப்பது இலங்கை மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஆசிய நாடுகளிடையே இந்திய ரூபாயை பிரபலப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
- அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கொழும்பு
ஆசிய நாடுகளிடையே இந்திய ரூபாயை பிரபலப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
டாலர் பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதில் இருந்து மீள இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. அதன்படி, இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சியாக அறிவிக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது என்ற போதிலும், இலங்கை மக்கள் 10 ஆயிரம் டாலர் (ரூ.8 லட்சத்து 10 ஆயிரம்) மதிப்புள்ள இந்திய ரூபாயை வைத்திருக்கலாம். இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு நாட்டு பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
இதற்காக வங்கிகளில் 'இந்திய ரூபாய் நாஸ்ட்ரோ கணக்குகள்' தொடங்க இந்திய வங்கியுடன் இலங்கை வங்கிகள் ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம் ஆகும்.
- எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது வாடிக்கையாகவே இருக்கிறது.
கொழும்பு:
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டியடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைபிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது.
இந்நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே 15 தமிழக மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
- இந்த சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.
கொழும்பு:
போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.
5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நேற்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 19-ம் தேதி நச்சுப்பொருள், அபின், அபாயகர மசோதா சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறித்த மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார்.
- தண்டனையுடன் அவருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- கருணாரத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கேள்வி
இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே (வயது 26) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை மீறியதற்காக, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர் எந்த விதிமுறைகளை மீறினார் என்பது குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. ஆனால் சமிகா கருணாரத்னே தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தண்டனையுடன் அவருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இது தற்காலிக தடை என்பதால், கருணாரத்னே சர்வதேச அளவில் விளையாட அனுமதிக்கப்படுகிறார். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடக்கவிருக்கும் உள்நாட்டு தொடருக்கான இலங்கையின் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார். கருணாரத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, அவரது ஒப்புதலுக்குப் பிறகு இலங்கை அணி அறிவிக்கப்படும்.
- டிசம்பர் 11 ஆம் தேதிக்கு பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
- பெரும்பான்மையான சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது முக்கியம்.
கொழும்பு:
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பணிகளை பாராளுமன்றம் நிறைவுசெய்த பின்னர், டிசம்பர் 11 ஆம் தேதிக்கு பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
"1984 ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் சுமந்திரன் (தமிழ் எம்.பி.) குறிப்பிட்டார். நாம் ஒரு தீர்வைக் காண வேண்டும், இல்லாவிட்டால் 2048-ல் கூட இலங்கை அப்படியே இருக்கும். நீண்டகாலமாக நிலவி வரும் சிக்கலை தீர்ப்பதற்கு பெரும்பான்மையான சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது முக்கியம். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும்" என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
- தமிழக விசை படகை, அரசுடமையாக்கி இலங்கை நீதிபதி உத்தரவு.
- விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள்.
கொழும்பு:
நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 15ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே கடந்த 17-ந் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, விசைப்படகுடன் அவர்களை கைது செய்தனர்.
பின்னர் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களது படகை அரசுடமையாக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






