என் மலர்
இலங்கை
- ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது.
- தடை விதித்திருக்கும் முடிவு குறித்து கனடா தூதருக்கு இலங்கை சம்மன் அனுப்பியது.
கொழும்பு:
இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றாா்.
இதற்கிடையே, இலங்கை முன்னாள் அதிபர்களான கோத்தபய, மகிந்த ராஜபக்சே, ராணுவ அதிகாரிகள் 2 பேர் என 4 பேர் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கனடாவில் உள்ள 4 பேரின் சொத்துக்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்ட இலங்கை வெளியுறவு அமைச்சகம், கொழும்புவில் உள்ள இலங்கைக்கான கனடா நாட்டு தூதரை வரவழைத்து, இந்த நடவடிக்கைக்கு அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
- இலங்கை கருவூலம் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் உள்ளது.
- பொருளாதார நெருக்கடி, நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது.
கொழும்பு :
இலங்கையில் கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடி இன்னும் நீடித்து வருகிறது. இந்தநிலையில், மந்திரிசபை செய்தித்தொடர்பாளரும், போக்குவரத்து மந்திரியுமான பந்துல குணவர்த்தனே, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இலங்கை கருவூலம் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு மந்திரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி, நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் வரிகள் மூலம் ஈட்ட நினைத்திருந்த வருவாய், குறைவாகத்தான் கிடைக்கும் என்று கருதுகிறோம்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும் பிரச்சினை எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடல் வழியாக போதை பொருள் கடத்தப் படுவதாக இலங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- போதைப் பொருள் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கொழும்பு:
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்தப் படுவதாக இலங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இலங்கை கடற்கரை பகுதிகளில் போதை பொருள் தடுப்பு போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்ட ஒரு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். ஆட்டோவில் வைக்கப்பட்டி ருந்த பெட்டி, பைகளில் ஐஸ் பெட்டிகள் இருந்தன. அவைகளை சோதனை செய்த போது ஐஸ் போதை பொருள் என்பது தெரிய வந்தது.
போதைப் பொருள் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் பிரபல போதை பொருள் கடத்தல் காரர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
இந்த போதைப் பொருள், தமிழகத்தின் வேதாரண்யத்தில் இருந்து பைபர் படகில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடுக்கடலில் இலங்கையைச் சேர்ந்த படகுக்கு போதைப் பொருள் மாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து இலங்கையின் கல்பட்டி பகுதிக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர் படகில் இருந்து ஐஸ் போதை பொருளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.
போதைப் பொருள் கடத்தலில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும், வேதாரண்யத்தில் இருந்து கடத்தி யது யார்? ஆகியவை குறித்து விசாரணை நடக்கிறது.
- இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை வழங்கி வருகிறது.
- இலங்கை மந்திரி பந்துல குணவர்தனா இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
கொழும்பு :
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் அங்கு பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 252 கி.மீ. தூர ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகளுக்கு உதவ முன்வந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரெயில் பாதை 81 மில்லியன் டாலர் (சுமார் ரூ.650 கோடி) மதிப்பில் சீரமைக்கப்படுகிறது.
இலங்கையில் பல்வேறு ரெயில் பாதை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இர்கான் இன்டர்நேஷனல் என்ற இந்திய நிறுவனம், இந்த பணிகளை மேற்கொள்கிறது.
இதில் முதல்கட்டமாக மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான 43 கி.மீ. தூர பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இதில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கையின் போக்குவரத்து மந்திரி பந்துல குணவர்தனே உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோபால் பாக்லே பேசும்போது, 'இலங்கை ரெயில்வே துறையில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமான திட்டங்களை இந்தியா மேற்கொண்டு உள்ளது. மேலும் சுமார் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டிலும், பரிசீலனையிலும் உள்ளன' என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்த திட்டம் குறித்து இந்திய தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், 'மதவாச்சியில் ரெயில் பாதை சீரமைப்பு பணியின் அதிகாரபூர்வ திறப்பு விழாவுடன் இந்தியா-இலங்கை ரெயில்வே ஒத்துழைப்பின் புகழ்பெற்ற புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது' என குறிப்பிட்டு இருந்தது.
இந்த தொடக்க விழாவில் பேசிய இலங்கை மந்திரி பந்துல குணவர்தனா இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்தார். கடந்த 1905-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரெயில்பாதை ஒரு நூற்றாண்டுக்கு மேல் மேம்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான இந்த ரெயில்பாதை மேம்பாட்டு பணிகள் 5 மாதங்களில் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.
- இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது.
- இலங்கை போலீசுக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது
கொழும்பு :
அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. இந்தியா கடந்த ஆண்டில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.32 ஆயிரத்து 800 கோடி) நிதியை வாழ்வாதார நிதி போல அந்த நாட்டுக்கு வழங்கியது.
கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,380 கோடி) கடன் உதவியை இந்தியா அறிவித்தது. அன்னியச்செலாவணி கையிருப்புக்காக இந்த உதவியை அறிவித்தது.
பின்னர் எரிபொருள் வாங்குவதற்காக 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,100 கோடி) நிதி உதவியை அறிவித்தது. இந்தக் கடன் பின்னர் 700 மில்லியன் டாலராக (சுமார் ரூ.5,740 கோடி) ஆக அதிகரிக்கப்பட்டது.
இப்படி இலங்கைக்கு இந்தியா, 'முதலில் அண்டை நாடு' என்ற கொள்கையின் பெயரால் தாராள உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், அங்கு பொது போக்குவரத்து சாதன வசதியை மேம்படுத்தும் வகையில், இந்தியா 75 பஸ்களை வழங்கியது.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதர் விடுத்துள்ள அறிக்கையில், " இலங்கையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து வாரியத்திடம் இந்திய தூதர் 75 பஸ்களை வழங்கினார். இந்த வகையில் 500 பஸ்களை இந்தியா வழங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போலீசுக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
- கோத்தபய ராஜபக்சே கடந்த ஆண்டு ஜூலை மாதம் குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பி ஓடினார்.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு திரும்பினார்.
கொழும்பு :
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வலுத்து வன்முறையாக உருவெடுத்ததால் அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த ஆண்டு ஜூலை மாதம் குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பி ஓடினார். பின்னர் அதிபர் பதவியை ராஜினாமா செய்த அவர், மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்தார். மக்களின் போராட்டம் ஓய்ந்த பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு திரும்பினார்.
இந்த நிலையில் நாடு திரும்பிய பிறகு முதல் முறையாக கடந்த மாத இறுதியில் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றார். அங்கிருந்து அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று, அங்கேயே குடியேற இருப்பதாகவும், இதற்காக அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்க கோத்தபய ராஜபக்சே விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் துபாயில் இருந்து இலங்கைக்கு திரும்பினார்.
- புதுவைக்கு தினத்தோறும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
- காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்க்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஆன்மீக பூமியாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஏராளமான ஆன்மீக தலங்கள் உள்ளது.
மேலும் புதுவையில் 4 பிராந்தியங்களும் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.
புதுவைக்கு தினத்தோறும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். புதுவை மாநிலம் காரைக்காலில் அழகிய கடற்கரை உள்ளது.
காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்க்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு மத்திய துறைமுக துறை மந்திரியாக இருந்த மன்சுக் மாண்டவியா புதுவைக்கு வந்தார். அவர் காரைக்கால்-காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து காரைக்கால் துறைமுகத்தில் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. காரைக்கால் துறைமுகம் 600 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. இங்கு படகு போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக துறைமுகங்களின் கூடுதல் செயலர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துறைமுக கட்டுமானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அவர் ஒருசில வாரத்தில் இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர் படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைமுகம் 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது. இங்கிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு 3 அல்லது 4 மணி நேரத்தில் சென்று விடலாம். காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு படகில் செல்ல ஒரு முறைக்கு ரூ.4200 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஜூலை மாதம் கோத்தபய ராஜபக்சே பதவி விலக நேரிட்டது.
- வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய அவர் 2 மாதங்களுக்குப்பின் நாடு திரும்பினார்.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். ஆனால் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டதால் கடந்த 2019-ம் ஆண்டு இந்த குடியுரிமையை அவர் துறந்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியால் கடந்த ஜூலை மாதம் கோத்தபய ராஜபக்சே பதவி விலக நேரிட்டது. அத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய அவர் 2 மாதங்களுக்குப்பின் நாடு திரும்பினார். இந்த நிலையில் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது வக்கீல்கள் இந்த மனுவை அளித்து உள்ளனர். எனினும் கோத்தபய ராஜபக்சேவின் இந்த மனுவை அமெரிக்க அரசு இன்னும் பரிசீலனைக்கு எடுக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் நாடு திரும்பினார்.
- பொருளாதார நெருக்கடி காரணமாக அவருக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
கொழும்பு
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார்.
அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர் பின்னர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மீண்டும் இலங்கை திரும்பினார்.
இலங்கையில் அந்நாட்டு அரசு சார்பில் அவருக்கு சிறப்பு பாதுகாப்பும், அரசு பங்களாவும் வழங்கப்பட்டது. அங்கு தங்கியிருந்தாலும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அவருக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர இலங்கை அரசு சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளிடம் கடன் கேட்டு வந்தது.
இந்த நெருக்கடிகள் காரணமாக கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேற முடிவு செய்தார். அதன்படி அவர் இலங்கையில் இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டார்.
இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் வசிக்கும் கோத்தபய ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்கள் செய்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே நேற்று திடீரென இலங்கையில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டார். அவர் துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன.
குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவார் எனவும் கூறப்படுகிறது.
- பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.
- வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கொழும்பு :
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக கண்டி மாவட்டத்தில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது.
இதன் காரணமாக, கிறிஸ்துமஸ் தினமான நேற்று கண்டி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டன.
கண்டி ரெயில் நிலையம், அக்குரணை நகரம் உள்பட பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின.
கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்ததுடன், சில வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கண்டி மாவட்டத்தின் அலவாத்துகொடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது பாறை உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர். மூவர் காயமடைந்தனர்.
வெள்ளம் காரணமாக கண்டி-மாத்தளை சாலை முற்றிலும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது. எனவே மாற்று வழிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன.
மத்திய இலங்கையின் சில பகுதிகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.
4 மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர் கனமழையால் பல அணைக்கட்டுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆறுகளுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, இலங்கை வழியாக நகர்ந்து வருகிறது. இதனால் பலத்த காற்று வீசும்.
அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
- கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. அத்துடன், இன்றுடன் வங்காளதேச தொடர் முடிவடைந்தது.
இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் புனேயில் 5ம் தேதியும் 3வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 7ம் தேதியும் நடக்கிறது.
ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12 மற்றும் 15ம் தேதிகளில் கவுகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறவிக்கப்படுகிறது. கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது.
புதிய தேர்வு குழுவை தேர்வு செய்வதில் கால தாமதம் ஆவதால் சேட்டன் சர்மா தலைமையிலான குழு வீரர்களை அறிவிக்கிறது. புதிய தேர்வு குழுவை கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழு நாளை முதல் 28ம் தேதிக்குள் முடிவு செய்யும்.
இதனால் பழைய தேர்வு குழு நாளை அல்லது நாளை மறுநாள் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு குழு உறுப்பினர்கள் பதவிக்கு சேட்டன் சர்மா மற்றும் தற்போது மத்திய மண்டல குழு உறுப்பினரான ஹர்வீந்தர் சிங் ஆகியோர் மீண்டும் விண்ணப்பித்து உள்ளனர். முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, மனிந்தர் சிங், அதுல் ஹாசன், நிதில் சோப்ரா, அமய் குருசியா உள்ளிட் டோர் தேர்வு குழு உறுப்பினர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இலங்கை தொடருக்கான 20 ஓவர் அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்படுகிறார். இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் ரோகித் சர்மாவும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை.
இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம். முன்னாள் கேப்டன் வீராட் கோலிக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.
- முதலில் ஆடிய கொழும்பு அணி 163 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஜாஃப்னா அணி 164 ரன்கள் எடுத்து வென்றது.
கொழும்பு:
லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜாஃப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. சண்டிமால் 49 ரன் எடுத்தார். போபரா 47 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜாஃப்னா அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ அரை சதமடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். குர்பாஸ் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். சதீரா சமரவிக்ரமா 44 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஜாஃப்னா அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கும், தொடர் நாயகன் விருது சதீரா சமரவிக்ரமாவுக்கும் வழங்கப்பட்டது.






