என் மலர்tooltip icon

    இலங்கை

    • இலங்கை அரசு, சர்வதேச நிதியத்திடம் 2.9 பில்லியன் டாலர் கடன் கோரியுள்ளது.
    • மத்திய அரசு இந்த கடன் உத்தரவாதத்தை வழங்கி இருக்கிறது.

    கொழும்பு :

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, சர்வதேச நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.20 ஆயிரம் கோடி) அளவுக்கு கடன் கோரியுள்ளது. ஆனால் இதற்கு, இலங்கைக்கு கடன் கொடுத்து வரும் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்து கடன் உத்தரவாதத்தை சர்வதேச நிதியம் கோரியுள்ளது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு இந்த கடன் உத்தரவாதத்தை வழங்கி இருக்கிறது. இந்த கடிதத்தை மத்திய நிதியமைச்சகம் சமீபத்தில் வழங்கி விட்டது. இதைப்போல இலங்கைக்கு கடந்த வாரம் சென்றிருந்த வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரிலும் தெரிவித்தார். தகுந்த நேரத்தில் இந்தியா வழங்கியிருக்கும் இந்த உதவிக்கு இலங்கை நன்றி தெரிவித்து உள்ளது.

    சர்வதேச நிதியம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இந்தியா தனது உத்தரவாதத்தை வழங்கி இருப்பதாக இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறி உள்ளார்.

    • தேர்தல் நடைமுறைகளுக்கு ரூ.10 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது.
    • எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியும் என்று நம்புகிறது

    கொழும்பு:

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பொருளாதார நெருக்கடியை அரசு கையாளும் விதம் குறித்து மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த அதிருப்தியை காட்ட இந்த தேர்தல் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. எனினும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னமும் மீளாததால் தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கவே வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளுக்கு ரூ.10 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருப்பதால் தேர்தல் செலவு அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.

    2018ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. தற்போது பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளது. மக்களின் எழுச்சி காரணமாக கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி நீக்கம் செய்யப்பட்டார். தேர்தல் கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடுகளால் கட்சியில் குழப்பம் நிலவுகிறது. எனவே, இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டுமா என்பது சந்தேகம்தான்.

    அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

    • நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும்.
    • அரசியலமைப்பு சட்டம் 13ஏ, தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரே ஆகியோரை சந்தித்து பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மை தமிழ் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கையில் அரசியலமைப்பு சட்டம் 13A முழுவதுமாக அமல்படுத்தப்படுவது முக்கியம் என இந்தியா கருதுகிறது, என்றார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுவதற்கு இந்தியா எப்போதும் ஆதரிக்கும். கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதும், மாகாணசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும் முக்கியம் என்ற எங்களது பார்வையை, இலங்கை அதிபர் விக்கிரமசிங்கவுடன் பகிர்ந்துகொண்டேன்.

    நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் தேவைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் நான் பேசினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில், 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி, இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் 13ஏ, தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.

    அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்கள் ஒன்றாக வாழ முடியும்.

    இந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையில் உள்ள பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச நாணய நிதியிடத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.
    • இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.

    கொழும்பு:

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்கின்றன. இலங்கைக்கு கடன்களையும் இந்தியா வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் இலங்கை, சர்வதேச நாணய நிதியிடத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.23 ஆயிரம் கோடி) கடன் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கடன் தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக் கொண்டது. ஆனால் கடன் வழங்கப்பட வேண்டும் என்றால் இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது. இந்தியா சார்பில் எழுதப்பட்ட நிதி உத்தரவாதங்கள் சர்வதசே நாணய நிதியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள அவர் இன்று     இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரேவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு மற்றும் பிராந்திய நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவையும் சந்தித்து பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனா காலத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளை காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும்.
    • இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

    இலங்கையில் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன்பின்பு இலங்கையில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. விலைவாசி உயர்வு, வேலையின்மை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    இலங்கையின் முக்கிய தொழிலான சுற்றுலா தொழிலும் முடங்கி போனது. இதனால் அங்கு பொருளாதார வளர்ச்சிக்கு வழி இல்லாமல் போனது.

    இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. கொரோனா பிரச்சினையும் குறைந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளும் செல்ல தொடங்கி உள்ளனர்.

    2022-ம் ஆண்டு இலங்கைக்கு 7.2 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இது கொரோனா காலத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளை காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும்.

    இலங்கையின் காலே பகுதிக்கு தான் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வார்கள். அங்குள்ள கடை வீதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இப்போது அங்கு முன்பு போல மக்கள் கூட்டம் வருவதில்லை. இதுபற்றி அங்குள்ள வியாபாரிகள் கூறும்போது, "இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

    அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

    • இந்தியா, இலங்கையின் பல்வேறு கட்டமைப்பு திட்டங்களில் நிதி உதவி வழங்கியுள்ளது.
    • ஜெய்சங்கரின் வருகையை பாராளுமன்றத்தில் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே அறிவித்தார்.

    கொழும்பு :

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு செல்கிறார். அவர் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பெறுகிறார்.

    ஜெய்சங்கரின் வருகையை பாராளுமன்றத்தில் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே அறிவித்தார். 'இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது' என்று அவர் அறிவித்தார்.

    இலங்கையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தனா மற்றும் இலங்கையின் வெளியுறவு மந்திரி அலி சப்ரி ஆகியோரை சந்திக்கிறார்.

    சர்வதேச பண நிதியம், இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் தொகையை கடனாக வழங்க, இந்தியா, சீனா மற்றும் ஜப்பானின் உத்தரவாதத்தை கேட்கிறது. எனவே, இந்திய வெளியுறவு மந்திரியின் வருகையானது இந்த கடன் உத்தரவாதத்தில் வெற்றிகரமான முடிவெடுக்க உதவும் என்று இலங்கை எதிர்பார்க்கிறது.

    ஏற்கனவே இந்தியா, இலங்கையின் பல்வேறு கட்டமைப்பு திட்டங்களில் நிதி உதவி வழங்கியுள்ளது. தற்போது பொருளாதார மந்தநிலை நீடித்து வரும்நிலையில் சர்வதேச பண நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் தொகையை பெறுவதிலும் இந்தியா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்று அண்டை நாடான இலங்கை நம்புகிறது.

    • இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
    • இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

    கொழும்பு:

    இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி குறைந்ததால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை.

    இதையடுத்து இலங்கைக்கு இந்தியா உதவியது. பெட்ரோல், டீசல், அரிசி உள்ளிட்டவற்றை அனுப்பியது. மேலும் இலங்கைக்கு கடன்களையும் இந்தியா வழங்கியுள்ளது.

    இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் இலங்கை சர்வதேச நாணய நிதியிடத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.23 ஆயிரம் கோடி) கடன் வழங்குமாறு கேட்டு கொண்டுள்ளது.

    இந்த கடன் தொகையை சர்வதேச நாணயநிதியம் ஒப்புக் கொண்டது. ஆனால் கடன் வழங்கப்பட வேண்டும் என்றால் இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இதையடுத்து இந்தியாவும், சீனாவும் கடன் தொகையை மறுசீரமைக்க ஒப்புக் கொள்ளுமாறு இலங்கையின் மத்திய வங்கி கோரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில் இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.

    இந்தியா சார்பில் எழுதப்பட்ட நிதி உத்தரவாதங்கள் சர்வதசே நாணய நிதியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகள் குழு உறுதிப்படுத்தியது.

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில்தான் இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா உத்தரவாதம் அளித்துவிட்ட நிலையில் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதில் ஜப்பான் விரைவில் உத்தரவாதத்தை அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே வேளையில் சீனாவின் நிலைப்பாடு குறித்து உறுதியாக தெரியவில்லை. கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் பெற முயற்சித்தபோது அதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டதாக இலங்கையின் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவரது பயண தேதி இன்னும் முடிவாகவில்லை.
    • சீனாவிடம் இருந்து திபெத்தை பிரிக்க முயற்சிக்கிறார்.

    கொழும்பு :

    இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்தித்தனர். அவரை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அவரது பயண தேதி இன்னும் முடிவாகவில்லை.

    இந்தநிலையில், அவரது இலங்கை பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் உள்ள சீன தூதரகத்தின் உயர் அதிகாரி ஹு வெய், நேற்று கண்டியில் உள்ள செல்வாக்குமிக்க புத்தமத குருமார்களை சந்தித்தார்.

    அவர்களிடம் ஹு வெய் கூறியதாவது:-

    தலாய்லாமாவை எந்த நாடும் வரவேற்பதை சீன அரசும், சீன மக்களும், திபெத் மக்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏனென்றால், அவர் கூறிக்கொள்வது போல் அவர் எளிமையான துறவி அல்ல. அவர் நிலபிரபுத்துவ அடிமைத்தனத்தின் தலைவர்.

    ஆன்மிக தலைவர் என்ற பெயரில் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்து, சீனாவுக்கு எதிரான பிரிவினை செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சீனாவிடம் இருந்து திபெத்தை பிரிக்க முயற்சிக்கிறார்.

    எனவே, இப்பிரச்சினையில் சீனா-இலங்கை இருதரப்பு உறவை பாதுகாக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டது.
    • தொழிலாள்ரளின் எண்ணிக்கையும் சரிந்து விட்டது.

    கொழும்பு:

    இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை வரலாறு காணத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டது. இதனால், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து அனைத்துக் கட்சிகளுடன் ஆதரவுடன் இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகித்து வருகிறார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை அவர் முன்னெடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இலங்கையில் தொழிற்சங்கங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசிய ரணில் விக்ரமசிங்கே அப்போது கூறியதாவது: - இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து இருப்பது நாங்கள் அனைவரும் அறிவோம். எனவே நாடு எதிர்கொண்டுள்ள சிரமங்களையும் நன்கு அறிவேன். தொழிலாள்ரளின் எண்ணிக்கையும் சரிந்து விட்டது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவு உயர்ந்துள்ளது. இதனால், அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது.

    பொருளாதார பிரச்சினைக்கான மூலக்காரணம் என்பது பற்றி பேசுவது பயனற்றது. தற்போது இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியை பெறுவது மட்டுமே. இல்லாவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மால் மீள முடியாது" என்றார்.

    • தன் மீதான குற்றச்சாட்டுகளை சிறிசேனா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
    • இந்த இழப்பீட்டை 6 மாதகாலத்துக்குள் செலுத்த வேண்டும்.

    கொழும்பு :

    இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் தினத்தில் 3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

    இலங்கை மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்த இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே உளவுத் தகவல் அளித்தும், அதை தடுக்க தவறியதாக இலங்கையின் அப்போதைய அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    அதுமட்டும் இன்றி ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு குறித்து விசாரிப்பதற்காக சிறிசேனாவால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக்குழுவும் பயங்கரவாத தாக்குதலை தடுக்க சிறிசேனா தவறிவிட்டதாக குற்றம் சாட்டியது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை சிறிசேனா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    எனினும் இந்த விவகாரத்தில் சிறிசேனா மற்றும் அவரது அரசில் பணியாற்றிய மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலர் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்று முன்தினம் தனது தீர்ப்பை வழங்கியது.

    அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்தியாவிடம் இருந்து நம்பகமான தகவல் கிடைத்தும், நாட்டின் மீதான தாக்குதலை தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அதிபர் சிறிசேனா இலங்கை பணத்தில் ரூ.10 கோடியை தனது சொந்த நிதியில் இருந்து இழப்பீடாக வழங்க வேண்டும்.

    அதேபோல் முன்னாள் தலைமை போலீஸ் அதிகாரி பூஜித் ஜெயசுந்தரா, உளவுத்துறை முன்னாள் தலைவர் நிலந்தா ஜெயவர்த்தனே ஆகியோர் தலா ரூ.7.5 கோடியும், பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹெமாசிறி பெர்ணாண்டோ ரூ.5 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    இந்த இழப்பீட்டை 6 மாதகாலத்துக்குள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 539 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
    • நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.

    கொழும்பு:

    கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், ராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி பிரேமிதா பண்டார தென்னகோன் கூறியதாவது:-

    இலங்கையின் ராணுவ பலம் தற்போது 200,783 ஆக உள்ளது. இதை மூன்றில் ஒரு பங்காக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் ராணுவ பலத்தை 1,35,000 ஆகவும், 2030க்குள் 1,00,000 ஆகவும் குறைக்கப்படும்.

    வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 2030ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 539 பில்லியன் ரூபாய்  ஒதுக்கீடு செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

    • யானைகள் மீது மோதிய வேகத்தில் ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டது.
    • ரெயிலுக்கு அடியில் யானைகளின் உடல்கள் சிக்கி இருந்தன.

    கொழும்பு:

    இலங்கையின் மட்டக் களப்பு அருகே ஹபரணை- கல்ஒயா ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை யானைகள் கடக்க முயன்றன. அப்போது பயணிகள் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த யானைகள் மீது ரெயில் மோதியது.

    ரெயில் மோதியதில் மூன்று யானைகள் உயிரிழந்தன. யானைகள் மீது மோதிய வேகத்தில் ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ரெயிலுக்கு அடியில் யானைகளின் உடல்கள் சிக்கி இருந்தன. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

    ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் யானைகளின் உடல்கள் மற்றும் தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணி நடந்தது.

    ×