என் மலர்
இலங்கை
- இலங்கையில் கால வரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
- போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
கொழும்பு:
இலங்கையில் கால வரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.அவர்கள் ஒன்று திரண்டு கொழும்பில் உள்ள கல்வி அமைச்சக அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி மாணவர்கள் உள்ளே நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மூடிக்கிடக்கும் பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
- இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது.
- உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
கொழும்பு:
இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.
இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்திருந்தேன். ஆனால் தேவையான நிதியை அரசாங்கம் விடுவிக்காததால் தேர்தலை எங்களால் நடத்த முடியாது என்று தற்போது கோர்ட்டில் தெரிவித்து உள்ளேன் என்றார்.
இதனால் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்த தேர்தலுக்கு சுமார் ரூ.228 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. சம்பளம் ஓய்வூதியம் மற்றும் அத்தியாசிய சேவைகளை வழங்குவதற்கு அரசு வருமானம் போதுமானதாக இல்லாததால் தேர்தல் சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டார்.
- பிரபாகரன் மரபணு பரிசோதனை ஆதாரங்களை நாங்கள் வைத்துள்ளோம்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
இந்நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் விவகாரம் தொடர்பாக இலங்கையை நோக்கி, குறிப்பாக அந்த நாட்டு ராணுவத்திடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இந்த தகவலை இலங்கை ராணுவம் மறுத்து உள்ளது. இது தொடர்பாக இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் நளின் ஹேரத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்ததாவது:-
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
அவரது மரபணு பரிசோதனை ஆதாரங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். 2009-ம் ஆண்டு மே மாதம் அவர் கொல்லப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.
எனவே அவர் உயிருடன் இருப்பதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை.
இந்த தகவல் எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். அதில் சந்தேகமே இல்லை.
இவ்வாறு ராணுவ செய்தி தொடர்பாளர் ரவி ஹேரத் கூறினார்.
- மந்திரி எல்.முருகன் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைத்தார்.
கொழும்பு :
மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இதில் முக்கியமாக, மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மையத்தை நேற்று அவர் திறந்து வைத்தார்.
இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இலங்கையின் வளமான மற்றும் பலதரப்பட்ட கலாசாரத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பேசிய ரணில் விக்ரமசிங்கே, கலாசார மையத்தை கட்டுவதற்கு உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கை சென்றபோது இந்த மையத்துக்கு அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை, எல்.முருகன் சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-இலங்கை நல்லுறவு குறித்து அவர்கள் ஆலோசித்தனர். இந்த சந்திப்பின்போது இலங்கை அதிபருக்கு திருக்குறள் புத்தகத்தை எல்.முருகன் பரிசாக வழங்கினார்.
- இலங்கைக்கு இந்தியா மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது.
- இந்திய முதலீடுகளின் பயனால் இலங்கையில் விளைந்துள்ள வளர்ச்சியையும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு :
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியா மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது. மேலும் சர்வதேச நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெறுவதற்காக, கடன் உத்தரவாத கடிதமும் வழங்கி இருக்கிறது. இந்தியாவின் உதவியால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கை, இந்த உதவிக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து உள்ளது.
கொழும்புவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தினேஷ் குணவர்தனேவும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நெருக்கடி காலத்தில் இலங்கையின் மிகப்பெரிய நண்பனாக இந்தியா இருக்கிறது' என்று தெரிவித்தார்.
மேலும், தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வருமாறு இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அவர், இந்திய முதலீடுகளின் பயனால் இலங்கையில் விளைந்துள்ள வளர்ச்சியையும் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய தூதர் கோபால் பாக்லே, 'பிரதமர் மோடியின் அண்டை நாடுகளை நோக்கிய கொள்கையின் கீழ், இந்தியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் குறிப்பாக அண்டை நாடுகளுக்கு நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்க இந்திய அரசும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன' என தெரிவித்தார்.
- இலங்கையில் போராட்டங்கள் கட்டுக்குள் வந்ததையடுத்து கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்.
- ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
இதையடுத்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என்று பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே, மற்ற பதவிகளில் ராஜபக்சே குடும்பத்தினரும் விலகினர். ஆனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்ததால் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு அதனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி மாளிகைக்குள் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த ஏராளமான பணங்களை எடுத்தனர். அதை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இலங்கையில் போராட்டங்கள் கட்டுக்குள் வந்ததையடுத்து கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கோர்ட்டு உத்தரவின்படி குற்றபுலனாய்வு பிரிவு அதிகாரிகள், கோத்தபய ராஜபக்சே வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஜனாதிபதி மாளிகையில் பணம் இருந்தது தொடர்பாக சுமார் 3 மணி நேரம் கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரணை நடந்தது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே, அவரது குடும்பத்தினர்தான் காரணம் என்று கூறி அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
- இந்த விழாவில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் பங்கேற்றார்.
கொழும்பு:
ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன் 75-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் பிரதான விழா கொண்டாட்டங்கள் நடந்தன. அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார். இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றதுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி ஆகியோரை வி.முரளீதரன் தனித்தனியாக சந்தித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக வி.முரளீதரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அண்டை நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான பங்காளியாகவும், நம்பகமான நண்பராகவும் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
இந்த 75-வது சுதந்திர தின விழாவை இலங்கையின் எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபரை சந்தித்த மத்திய மந்திரி முரளீதரன்
- இலங்கை சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார்.
- தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளில் கறுப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
கொழும்பு:
இலங்கையில் 75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுக திடலில் பிரதான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
அதிபர் ரணில் விக்ரம சிங்கே, பிரதமர் தினேஸ் குணவர்தன, மந்திரிகள், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுதந்திர தின விழாவில் ராணுவ வீரர்கள், ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு நடந்தது.
இலங்கை சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார். அதே போல் வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த முறை சுதந்திர தின விழாவில் அதிபர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றவில்லை. மாலை 6.45 மணிக்கு அதிபரின் உரை ஊடகங்களின் மூலம் ஒளி, ஒலிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்காததை கண்டித்து தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டங்கள் நடந்தது. வீடுகளில் கறுப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. இன்றைய தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் எதிர்ப்பு பேரணி நடத்தினர். பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பேரணிக்கு ஆதரவாக வர்த்தகர்கள் தங்களது கடைகளை அடைத்தனர். யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன.
- அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்திக்கிறார்.
- விழாவையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கொழும்பு :
ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன் 75-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் பிரதான விழா கொண்டாட்டங்கள் இன்று நடக்கின்றன. அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொள்கிறார்.
இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று இலங்கை சென்றார். சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதுடன், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும், இந்திய வம்சாவளியினரையும் முரளீதரன் சந்திக்கிறார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கைக்கு சென்று வந்த 2 வாரத்தில் முரளீதரன் அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்தில் முரளீதரன் மட்டுமின்றி, பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். அவர்களில், காமன்வெல்த் தலைவர் பேட்ரிசியா ஸ்காட்லாந்தும் ஒருவர்.
விழாவையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கொழும்பு நகரிலும், புறநகர்களிலும் ராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பல கோடி ரூபாய் செலவிடப்படும் என்று தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீளாத நிலையில், இவ்வளவு செலவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
அதுபோல், 2019-ம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை தண்டிக்காததை கண்டித்து, விழாவை புறக்கணிப்பதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்காததை கண்டித்து, தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கருப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. ஒரு மாணவர் சங்கம், 24 மணி நேர தர்ணா போராட்டத்தை அறிவித்துள்ளது.
- ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, சிறிசேனா இலங்கை மதிப்பில் ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
கொழும்பு :
கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் 11 இந்தியர்களும் அடங்குவர்.
அந்த தாக்குதலை தடுக்க தவறிவிட்டதாக அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா மீதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் கடந்த 12-ந்தேதி இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக சிறிசேனா இலங்கை மதிப்பில் ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இல்லாவிட்டால் அவர் சிறை செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தது.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவந்த சிறிசேனா, பாதுகாப்பு துறையின் கவனக்குறைவுதான் குண்டு தாக்குதலுக்கு காரணம் என்று கூறிவந்தார்.
இந்நிலையில் கொழும்பில் நேற்று தனது சுதந்திரா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிறிசேனா, 'மற்றவர்கள் செய்த ஒன்றுக்காக (குண்டு தாக்குதல்) நான் நாட்டின் கிறிஸ்தவ சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இலங்கை அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனா, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
- 3 விசைப்படகுகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும் என்று தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.
- கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 4 படகுகள் தொடர்பாக வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது.
கொழும்பு:
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அப்போது மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்களின் 3 விசைப்படகுகளை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இந்த படகுகள் யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த வழக்கு ஊர்காவல்த்துறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு படகுகளின் உரிமையாளர்கள் ஆஜராகாததால் தமிழகத்தின் 3 விசைப் படகுகளையும் அரசுடைமையாக்க நீதிபதி கஜநீதிபாலன் உத்தரவிட்டார்.
இதையடுத்து ராமேசுவரம் மீனவர்களின் 3 விசைப் படகுகளையும் இலங்கை அரசுடைமையாக்கி உள்ளது. இந்த 3 விசைப்படகுகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும் என்று தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 4 படகுகள் தொடர்பாக வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது ஆஜரான படகுகளின் உரிமையாளர்கள், தங்களது படகுகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கில் வருகிற மார்ச் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
- கடந்த மாதம் அவர் தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- அதிபர் மாளிகையில் இக்கூட்டம் நடக்கிறது.
கொழும்பு :
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி தீர்வுகாண இலங்கை சுதந்திர தினமான பிப்ரவரி 4-ந் தேதிக்குள் கருத்தொற்றுமை ஏற்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உறுதி பூண்டுள்ளார். கடந்த மாதம் அவர் தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில், இன்று (வியாழக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார். அதிபர் மாளிகையில் இக்கூட்டம் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்சே, சிறிசேனா, தமிழ் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தன் உள்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் கோரிக்கையான அரசியல் சுயாட்சி குறித்து விவாதித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த இக்கூட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.சமீபத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்று வந்த நிலையில், இந்த கூட்டம் நடக்கிறது.






