search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம்
    X

    இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம்

    • இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
    • இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

    கொழும்பு:

    இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி குறைந்ததால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை.

    இதையடுத்து இலங்கைக்கு இந்தியா உதவியது. பெட்ரோல், டீசல், அரிசி உள்ளிட்டவற்றை அனுப்பியது. மேலும் இலங்கைக்கு கடன்களையும் இந்தியா வழங்கியுள்ளது.

    இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் இலங்கை சர்வதேச நாணய நிதியிடத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.23 ஆயிரம் கோடி) கடன் வழங்குமாறு கேட்டு கொண்டுள்ளது.

    இந்த கடன் தொகையை சர்வதேச நாணயநிதியம் ஒப்புக் கொண்டது. ஆனால் கடன் வழங்கப்பட வேண்டும் என்றால் இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இதையடுத்து இந்தியாவும், சீனாவும் கடன் தொகையை மறுசீரமைக்க ஒப்புக் கொள்ளுமாறு இலங்கையின் மத்திய வங்கி கோரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில் இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.

    இந்தியா சார்பில் எழுதப்பட்ட நிதி உத்தரவாதங்கள் சர்வதசே நாணய நிதியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகள் குழு உறுதிப்படுத்தியது.

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில்தான் இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா உத்தரவாதம் அளித்துவிட்ட நிலையில் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதில் ஜப்பான் விரைவில் உத்தரவாதத்தை அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே வேளையில் சீனாவின் நிலைப்பாடு குறித்து உறுதியாக தெரியவில்லை. கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் பெற முயற்சித்தபோது அதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டதாக இலங்கையின் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×