என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை மந்திரி"

    • கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு.
    • அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக 2-வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக, மத்திய அரசு கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்" என்று பேசியிருந்தார்.

    இந்த நிலையில் இலங்கை வெளியுறவு துறை மந்திரி விஜித ஹேரத் கொழும்புவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜித ஹேரத் கூறியதாவது:-

    முதலாவதாக கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு ஆகும். அது ஒருபோதும் மாறப்போவதில்லை. தென்னிந்தியாவில் இப்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அளிப்பதற்கு ஒவ்வொரு விஷயங்களையும் கூறுவார்கள். அப்படித்தான் கச்சத்தீவு பற்றி கூறுகிறார்கள். கச்சத்தீவு குறித்து அவர்கள் பேசுவது இது முதல்முறை அல்ல.

    இதேபோல பலமுறை தேர்தல் மேடைகளில் கச்சத்தீவு விவகாரத்தை பேசியுள்ளனர். தேர்தல் மேடைகளில் கூறுவதால் இங்கு எதுவும் மாறப்போவதில்லை. கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதை பார்த்தேன். அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

    இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர ரீதியாக எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை. அதனால் இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான். எந்த ஒரு ராஜதந்திர செயல்பாடுகளுக்காகவும் கச்சத்தீவை இந்தியாவுக்கு நாங்கள் வழங்க மாட்டோம் என்று தெளிவாக கூறுகின்றேன். இந்திய அரசு மட்டத்தில் இருந்து யாராவது கருத்து தெரிவித்தால், அவர்கள் பேச்சு குறித்து கவனம் செலுத்தலாம்.

    எனவே அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா, இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை ஜனவரியில் தொடங்கப்படும் என்றார்.

    கொழும்பு:

    இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி.சில்வா கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    இந்தியா, இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    புத்த கயா செல்லும் யாத்ரீகர்களுக்கும், வர்த்தக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.

    மேலும், இத்திட்டத்தின் முதல்கட்டமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை வரும் ஜனவரி மாத மத்தியில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    • இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்றார் இலங்கை மந்திரி.

    கொழும்பு:

    இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய மீனவர்கள் இழுவை மீன்பிடி படகுகளை வைத்து இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது.

    இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

    இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது.

    கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும் என தெரிவித்தார்.

    • இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்தது.
    • ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை இலங்கை அரசால் பின்பற்ற முடியாது.

    கொழும்பு:

    சர்வதேச வர்த்தக வழித்தடத்தில், தென்கிழக்கு ஆசியாவுக்கும், மேற்கு ஆசியாவுக்கும் இடையிலான முக்கியமான கடல்வழிப்பாதையில் இலங்கை அமைந்துள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்கள், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்காக இலங்கை துறைமுகங்களில் நின்று செல்கின்றன.

    ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சீன ஆய்வுக் கப்பலான 'யுவான் வாங்-5' இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கேட்டபோது, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அது, இந்தியாவை உளவு பார்க்க பயன்படுத்தப்படும் என்று இந்தியா கருதியதே அதற்கு காரணம்.

    ஆனால், இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்தது.

    அதுபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலான 'ஷி யான்-6' கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

    இருப்பினும், இந்தியாவின் கவலைகளை தீர்க்கும்வகையில், வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களை இலங்கை துறைமுகங்களில் நிறுத்த ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் இலங்கை அரசு அறிவித்தது. இந்த தடை அமலில் உள்ளது.

    இந்நிலையில், இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி, ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் விஷயத்தில், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை இலங்கை அரசால் பின்பற்ற முடியாது. சீன கப்பலுக்கு மட்டும் தடை விதிக்க முடியாது.

    இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையில் இலங்கை ஒருதரப்புக்கு மட்டும் ஆதரவாக செயல்படாது.

    வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட தடை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. அதன்பிறகு அத்தடை விலக்கிக் கொள்ளப்படும். இலங்கை துறைமுகங்களில் வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களை நிறுத்த அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×