என் மலர்tooltip icon

    பாலஸ்தீனம்

    • உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.
    • பட்டினியால் இறந்தவர்களில் 154 குழந்தைகள் அடங்குவர்.

    டிரம்ப் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் அறிவித்தார்.

    ஆனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.

    இதனால் பட்டினி இறப்பு எண்ணிக்கை 460 ஆக உயர்ந்தது. பட்டினியால் இறந்தவர்களில் 154 குழந்தைகள் அடங்குவர். ஆகஸ்ட் மாதம் பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 182 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    இன்றைய தாக்குதல் தொடர்பாக பேசிய இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும், இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.

    இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு ஒன்று, கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸுடன் திங்கட்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. 

    • டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.

    கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    இதன் பின் ஹமாஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு விதித்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது.

    மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் திட்டத்தின் பிற விவரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தைநடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.

    டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

    ஆயுதத்தை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்களை ஹமாஸ் ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது.

    • அங்கிருந்து வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என்று இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
    • 20 அம்ச திட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, 48 பணயக்கைதிகளை விடுவித்து, அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்.

     காசாவில் நேற்று இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.

    பாதுகாப்பான மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு அல்-மசாவி உட்பட காசா முழுவதும் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியது.

    அல்-மசாவியில் ஒரு உணவகத்தில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஒரு முதியவர், அவரது நான்கு மகன்கள் மற்றும் பேரன் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

    மத்திய காசாவின் அல்-புரேஜ் அகதிகள் முகாமில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டனர்.

    மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலாக்கில் ஒரு வீட்டின் மீது நடந்த மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

    முன்னதாக புதன்கிழமை அன்று மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேற்ற இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் தெற்கில் இருந்து வடக்கு காசாவுக்குச் செல்லும் வழியை அடைத்தது.

    இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தங்கள் படைகள் காசா நகரை சுற்றிவளைக்கும் நிலைக்கு நெருங்கிவிட்டதாகவும், அங்கிருந்து வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என்று கூறினார்.

    இதற்கிடையே கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு டிரம்ப் உடைய 20 அம்ச போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதில் ஹமாஸ் முடிவெடுக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

    திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளிக்கும் என்று வெள்ளை மாளிகை எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபரின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வியாழக்கிழமை தெரிவித்தார்.

    20 அம்ச திட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, 48 பணயக்கைதிகளை விடுவித்து, அரசியலில் இருந்து வெளியேற  வேண்டும்.

    பதிலுக்கு, இஸ்ரேல் கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்து, காசாவில் ஒரு அமைதி காக்கும் படை அவர்களை மாற்றிய பிறகு படிப்படியாக தனது படைகளை வாபஸ் பெறும்.

    இந்த திட்டத்தை ஏற்பது குறித்து ஹமாஸ் கலந்தாலோசித்து வரும் நிலையில் நேற்றைய தாக்குதல் பின்னடைவாக அமைந்துள்ளது. 

    • காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
    • இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது.

    பாலஸ்தீன நகரமான காசா மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்கள் கிடைப்பதையும் கட்டுப்படுத்தி வருகிறது.

    இதனால் ஒரு புறம் இஸ்ரேலின் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கிகளுக்கு இரையாகும் மக்கள் மறுபுறம் பட்டினியாலும் உயிரிழந்து வருகின்றனர்.

    இந்நிலையில் காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது.

    மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து குளோபல் சீ ஃப்ளோட்டிலா புறப்பட்டது. இந்த ஃப்ளோட்டிலா 44 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய கப்பல்களைக் கொண்ட குழுவாகும்.

    இவை இன்று (வியாழக்கிழமை) காலை உதவிகளுடன் காசாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் வருகை தந்த ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிறரை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தி சிறைபிடித்துள்ளது.

    குளோபல் சுமுட் கப்பல்கள் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த மக்கள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மோதல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று இஸ்ரேலிய கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்களின் பாதையை மாற்றுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சுமுட் புளோட்டிலா தனது அறிக்கையில், இஸ்ரேலிய கடற்படை, அல்மா, சிரியஸ் மற்றும் அதாரா ஆகிய கப்பல்களை இடைமறித்து, கப்பல்களில் ஏறி நேரடி தகவல்தொடர்புகளைத் துண்டித்ததாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது. 

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
    • இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.

    காசா சிட்டி:

    பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.

    கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

    இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

    இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில், தங்களை தனி நாடாக அங்கீகரித்ததற்காக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு

    வரவேற்பு தெரிவித்துள்ளது.

    • கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
    • பின்னர் லாரியில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தினார்.

    காசாவில் இஸ்ரேல் தரைவழியாக பீரங்கிகள் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீன பொதுமக்களின் எண்ணிக்கை 65,100 ஐ தாண்டியுள்ளது. மக்கள் நகரை விட்டு அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

    நேற்று, காசாவில் உள்ள மருத்துவமனைகள் அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. காசா நகரில் தரைவழித் தாக்குதல் தொடங்கிய பின்னர், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

    காசாவில் உள்ள அல்-ஷிஃபா மற்றும் அல்-அஹ்லி மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி 15 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று தெற்கு காசாவின் ரஃபாவில் ஹமாஸ் நடத்திய எதிர் தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    மேஜர் ஓம்ரி சாய் பென் மோஷே (26), லெப்டினன்ட் எரான் ஷெலெம் (23), லெப்டினன்ட் ஈதன் அவ்னர் பென் இட்ஷாக் (22), மற்றும் லெப்டினன்ட் ரான் அரிலி (20) ஆகியோர் கொல்லப்பட்டனர். நேற்று காலை 9:30 மணிக்கு ஹமாஸ் போராளிகள் அவர்கள் பயணித்த இராணுவ வாகனத்தைத் தாக்கினர்.

    இதற்கிடையே இஸ்ரேலிய துறைமுக நகரமான ஈலாட் மீது ஹவுத்திகள் நேற்று ட்ரோன் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ஹோட்டல் தீப்பிடித்தது.

    மேலும், மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான ஆலன்பி கிராசிங்கில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஜோர்டானிய லாரி ஓட்டுநர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேலிய அதிகாரிகள் லாரியை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தியவர் இஸ்ரேலியர்கள் மீது கைத்துப்பாக்கியால் சுட்டார். பின்னர் லாரியில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தினார். சம்பவ இடத்திலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

    • இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை 150-க்கும் மேற்பட்ட முறை காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
    • இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் காசா நகரத்தின் பெரும் பகுதிகளை அழித்தன. சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

    காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கிய தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்துகிறது.

    இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மட்டும் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, அக்டோபர் 7, 2023 முதல் இதுவரை 65,062 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 165,697 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களில் இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை 150-க்கும் மேற்பட்ட முறை காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சம் அடைந்துள்ள கூடார முகாம்களுக்கு அருகில் உள்ள உயரமான கட்டிடங்களை தரைமட்டமாக்கியுள்ளன.

     இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் காசா நகரத்தின் பெரும் பகுதிகளை அழித்தன. சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்தத் தாக்குதல்களால், பல மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன.

    காசா நகரில் இருந்து தென் பகுதிக்கு மக்கள் வெளியேறுவதற்காக இரண்டு நாட்களுக்கு புதிய வழித்தடம் ஒன்றை இஸ்ரேல் திறந்துள்ளது. வாகனங்களிலும், கால்நடையாகவும் பாலஸ்தீன மக்கள் காசா நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    வான், கடல் மற்றும் நிலத்திலிருந்து நகரம் மீது கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதாகவும், மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாகவும் தப்பிச் செல்லும் மக்கள் தெரிவித்தனர்.

    உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தன. இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவை என்று மக்கள் விவரிக்கின்றனர்.

    இதற்கிடையே காசா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்தியுள்ளது. கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளன

    ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு, இஸ்ரேல் இனப்படுகொலையை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. 

    • "காசா எரிகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

    நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் காசா முழுவதும் தீவிர வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    "காசா பற்றி எரிகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    "பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு தாக்குகிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஹமாஸை தோற்கடிப்பதற்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்" என்று காட்ஸ் பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக காசா நகரை முழுமையாக கைப்பற்றுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
    • மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும்.

    இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று நேதன்யாகு கையெழுத்திட்டார். மேலும் மேற்கு கரையில் மாலே அடுமிம் குடியேற்றத்தை நேரில் பார்வையிட்டார்.

    இதன் பின் பேசிய நேதன்யாகு, "எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்" என்று கூறினார்.

    இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.

    மேற்குக் கரையின் மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிழக்கு ஜெருசலேமிலிருந்து உள்ள பாலஸ்தீனியர்களிடமிருந்து மேற்குக் கரையை முற்றிலுமாகத் துண்டிக்கும்.

    சர்வதேச அழுத்தத்தால் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த E-1 திட்ட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. பாலஸ்தீனியர்களுக்காக பிரத்தியேகமாக வடக்கு மற்றும் தெற்கு மேற்குக் கரைகளை இணைக்கும் சாலையை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் இதன் மூலம் தொடங்கியது. இது பாலஸ்தீனியர்கள் பிரதான நெடுஞ்சாலையில் நுழைவதைத் தடுக்கும்.

    தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் உள்ளனர். 

    • இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
    • காசாவில் இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் 64,368 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    காசா நகரில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் கட்டாயப்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    இந்த சூழல் நேற்று, இடம்பெயர்ந்த பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து குண்டுகளை வீசி இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 41 பேர் உயிரிழந்தனர்.

    இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

    அக்டோபர் 2023-ல் போர் தொடங்கியதிலிருந்து, காசாவில் இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் 64,368 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 162,367 பேர் காயமடைந்துள்ளனர். காசா நகரை முழுமையாக கைப்பற்ற ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்க்கது.  

    • வடக்கு காசாவில் கடுமையான தாக்குதல்களும் தொடர்கின்றன.
    • ஐ.நா. அமைதி காக்கும் படையினர் இருந்த இடத்திற்கு அருகே இஸ்ரேல் ராணுவம் டிரோன்கள் மூலம் 4 கையெறி குண்டுகளை வீசியுள்ளது.

    இஸ்ரேல் நடத்திய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

    நேற்று, உணவுக்காக காத்திருந்தவர்கள் உட்பட 44 பேரை இஸ்ரேலியப் படைகள் கொன்றன. காசா நகரில் மட்டும் 33 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு காசாவில் கடுமையான தாக்குதல்களும் தொடர்கின்றன. ஷேக் ரத்வான் பகுதியில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

     மேலும் காசாவில் ஆறு பாலஸ்தீனியர்கள் நேற்று ஒரே நாளில் பட்டினியால் இறந்தனர்.

    இதற்கிடையே, தெற்கு லெபனானில் இஸ்ரேலிய எல்லைக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் இருந்த இடத்திற்கு அருகே இஸ்ரேல் ராணுவம் டிரோன்கள் மூலம் 4 கையெறி குண்டுகளை வீசியுள்ளது. சாலைத் தடையை அமைதிப்படையினர் அகற்றும் போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. 

    • மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
    • அதிபர் ட்ரம்ப், "இது எப்போது நடந்தது? எனக்கு அது தெரியாதே!. அதுகுறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை" என்று தெரிவித்தார்.

    தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திர்கையாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

    நான்காவது மாடியின் மீது இரண்டு முறை வான்குதாக்குதல் நடத்தியுள்ளது. முதன்முறையாக தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை பலத்த சேதம் ஏற்பட்டது.

    மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சம்பவத்தை படம்பிடித்து கொண்டிருந்த பத்திர்கையாளர்கள் பலியாகினர்.

    அசோசியேட்டட் பிரஸ், ராய்ட்டர்ஸ், அல் ஜஸீரா உள்ளிட்ட பத்திரிகைகளை சேர்நத 5 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்து வரும் சூழலில் இது தவுறுத்தலாக நடந்த ஒரு "துயரமான விபத்து" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.

    மருத்துவமனை மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து உள் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை காயப்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல என இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்த தாக்குதல் குறித்த கேள்விக்கு வெள்ளை மாளிகையில் ஊடகத்தினரிடம் பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இது எப்போது நடந்தது? எனக்கு அது தெரியாதே!. அதுகுறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை. அதை பார்க்க நான் விரும்பவில்லை. அதேநேரம் இந்த மொத்த கேட்ட கனவையும் நிறுத்த வேண்டும்" என்று பதில் சொன்னார். 

    ×