என் மலர்
ஜெர்மனி
- முதல் செட்டை 3-6 என ஸ்வெரேவ் இழந்தார்
- 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 5-7 என இழந்து தோல்வி
ஜெர்மனியின் ஹாலே நகரில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் 9-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- தரநிலை பெறாத கஜகஜஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்-ஐ எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஸ்வெரேவ் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
முதல் செட்டை கஜகஜஸ்தானின் 26 வயதான பப்லிக் 6-3 என எளிதில் வென்றார். 220 கி.மீட்டர் வேகத்தில் பப்லிக் சர்வீஸ் செய்ய ஸ்வெரேவ் மிரண்டு போனார். இதனால் தொடக்கத்தில் 4-1 என பின்தங்கினார். இது முதல் செட்டை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது.
2-வது செட்டில் இருவரும் 5-5 என சமநிலையில் இருக்கும்போது, அடுத்த இரண்டு கேம்களையும் கைப்பற்றி 7-5 என வெற்றி பெற்றார்.
அலெக்சாண்டர் பப்லிக் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 3-ம் நிலை வீரரான ருப்லேவ்-ஐ எதிர்கொள்கிறார்.
- குடியேற்ற சீர்திருத்த சட்டத்திற்கு ஆதரவாக 388 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
- 53 சதவீத நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
ஜெர்மனி நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு திறமையான தொழிலாளர்களை உலகெங்கிலும் இருந்து கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட குடியேற்ற சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆளும் மைய-இடது கூட்டணியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக, நேற்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 388 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 234 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்; 31 பேர் வாக்களிக்கவில்லை.
கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் மற்றும் அதன் பவேரிய சகோதரக் கட்சியான கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் இணைந்த பழமைவாத பாராளுமன்ற குழு இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது. இந்த சட்டத்தால், திறமையற்ற தொழிலாளர்கள் ஜெர்மனியில் நுழைவது எளிதாகி விடும் என அவர்கள் குறிப்பிட்டனர். தீவிர வலதுசாரி கட்சியும் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது.
வேலைக்கான விசா விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தொழில்முறை தகுதிகள், வயது மற்றும் மொழித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் நுழைவதில் இருந்த தடைகளை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையிலான (points-basis) அமைப்பு இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு திறமையான தொழிலாளர்கள் இல்லாததால் காலியிடங்களை நிரப்புவதில் உள்ள சிக்கல்களால் ஜெர்மனியில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அல்லாடி வருவதாக ஜெர்மன் தொழில் வர்த்தக சபை கூறியிருக்கிறது.
ஜெர்மன் தொழில் வர்த்தக சபையானது நாடு முழுவதிலும் 22000 நிறுவனங்களை ஆய்வு செய்ததில், பணியமர்த்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களின் விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. 53 சதவீத நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த வருட இறுதியிலிருந்தே ஆட்குறைப்பு செய்து வருகின்ற நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு, ஜெர்மனியிலிருந்து வரும் இச்செய்தி மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- நேர்மறை அணுகுமுறையை பாராட்டி இப்பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அக்டோபர் 22-ந் தேதி அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
பெர்லின் :
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் நாட்டின் கவுரவம் மிக்க அமைதி பரிசு வழங்கப்படுகிறது. அவரது இலக்கிய பணிக்காகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து எழுதி வரும் அவரது உறுதிப்பாடு மற்றும் நேர்மறை அணுகுமுறையை பாராட்டியும் இப்பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சல்மான் ருஷ்டி, இலக்கிய புதுமை, நகைச்சுவை, அறிவுக்கூர்மை ஆகியவற்றுடன் எழுதி வருவதாக விருது நடுவர் குழு கூறியுள்ளது.
அக்டோபர் 22-ந் தேதி, பிராங்க்பர்ட் நகரில் நடக்கும் விழாவில் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. 1950-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இப்பரிசு, 25 ஆயிரம் யூரோ (ரூ.22 லட்சத்து 25 ஆயிரம்) பரிசுத்தொகை கொண்டது.
- பாலத்தை தகர்ப்பதற்கு சுமார் 150 கிலோ வெடிபொருட்கள் தேவைப்பட்டன.
- பாழடைந்த பாலம் சில நொடிகளில் துளி படுக்கையில் இடிந்து விழும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
ஜெர்மனியில் மோட்டார் பாதை பாலம் ஒன்று வெடி மருந்து கொண்டு வெடித்து வெற்றிகரமாக தகர்க்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த 7ம் தேதி அன்று ஜெர்மனியின் லுடென்ஷெய்டில் உள்ள 450 மீட்டர் நீளமுள்ள ரஹ்மேட் பள்ளத்தாக்கு பாலம் சில நொடிகளில் இடிந்து விழுந்தது.
1965 மற்றும் 1968 க்கு இடையில் கட்டப்பட்ட பாலத்தை தகர்ப்பதற்கு சுமார் 150 கிலோ வெடிபொருட்கள் தேவைப்பட்டன. இதைதவிர, அண்டை கட்டிடங்களை பாதுகாக்க ஒரு தடையை உருவாக்க 50 அடுக்கப்பட்ட கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கிடையில், தாக்கத்திலிருந்து சேதத்தைத் தடுக்க ஜன்னல்களில் கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்டன.
பாழடைந்த பாலம் சில நொடிகளில் இடிந்து விழும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
- விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ரெயிலில், 38 பயணிகளும், 4 ரெயில்வே ஊழியர்களும் பயணித்தனர்.
வடக்கு ஜெர்மனியில் உள்ள நியூஸ்டாட் நகரின் வெளிப்புறத்தில் ஆம் ருபென்பெர்க் அருகே நேற்று அதிகாலை ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது அந்த வழியாக வந்த ரெயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 22 வயது கார் ஓட்டி வந்தவரும், 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் அந்த ரெயிலில், 38 பயணிகளும், 4 ரெயில்வே ஊழியர்களும் பயணித்தனர். இந்த கோர விபத்தில் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
- ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
- பெர்லின் அதிகாரிகள் பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து அனுமதி.
ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் செனட்டின் புகார் அலுவலகத்தில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க கூடாது. விருப்பப்பட்டால் ஆண்கள் போன்று பெண்களும் மேலாடையின்றி குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட ரீதியாக அனுமதி கிடைத்துள்ளது. அவருக்கு மட்டுமல்ல பெர்லின் நகரில் பெண்கள் மேலாடையின்றி பொது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெர்லின் அதிகாரிகள் பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து, பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் இனி மேலாடையின்றி குளிக்க உரிமை பெற்றுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த அனுமதி எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் இல்லை.
இருப்பினும், இந்த அனுமதி வியப்பை தந்தாலும், இந்த முடிவிற்கு பலர் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
- தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியா துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
- ஜெஹோவாவின் சாட்சி மையம் என்பது அகிம்சையைப் பிரசங்கிக்கும் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ இயக்கம்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஜெஹோவாவின் சாட்சி மையத்தின் வாராந்திர பைபிள் படிப்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால், ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் மிக ஆபத்துக்கான எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தேவாலயத்தில் ஒரு மதக் கூட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், குடியிருப்பு வாசிகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.
ஜெஹோவாவின் சாட்சி மையம் என்பது அகிம்சையைப் பிரசங்கிக்கும் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ இயக்கம் ஆகும். உயிரிழந்தவர்களில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
- ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
- ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பெர்லின்:
ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சமீப ஆண்டுகளாக ஜெர்மனியுடன் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் சீனா இருந்து வருகிறது.
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.
ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டார். இந்தப் பயணத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன். இந்த முக்கிய விஷயத்தில் தனிப்பட்ட முறையில் நானே செயல்படுவேன் என அதிபர் ஸ்கால்ஸ் கூறினார். இதன்பின், நாடு திரும்பிய அவர் இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். இதில், வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் பைடனை நேரில் சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், சீனா அப்படி செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்கும் என்றே நான் நேர்மறையாக எண்ணுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை ரஷியாவுக்கு ஆயுதங்களை சீனா வழங்கினால் அந்நாடு மீது தடை விதிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதுபோன்று நடக்கக்கூடாது என நாங்கள் தெளிவுப்பட கூறி வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கை வெற்றி பெறும் என்று நல்ல முறையிலேயே எண்ணுகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி, மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
- ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.
- குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது என தூதர் தகவல்
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதையடுத்து, ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷியா, தன் நாட்டு கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது.
ரஷியாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், எந்த நாட்டிடம் இருந்து நல்ல ஒப்பந்தம் கிடைக்கிறதோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் கூறியதாவது:-
ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது, எங்கள் வர்த்தகம் அல்ல என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளேன். அது இந்திய அரசு முடிவு செய்யும் விஷயம். மிகக் குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய் ஜனவரி மாதம் ஒரு நாளுக்கு 1.4 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது. இது டிசம்பர் மாத இறக்குமதியைவிட 9.2 சதவீதம் அதிகமாகும். ரஷியாவின் மாதாந்திர எண்ணெய் விற்பனையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஈராக் மற்றும் சவுதி அரேபியா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். ஜெர்மனி வழியாக செல்லும் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டனர். விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நிலநடுக்கத்தால் இதுவரை 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.
- முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
பெர்லின்:
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 100-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவிட ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி நிலநடுக்கம் பாதித்த துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்து உள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டு உள்துறை மந்திரி நான்சி பீசர் கூறுகையில், பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மனிக்கு அழைத்து வரும் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களை ஜெர்மனிக்குள் வர அனுமதிக்க விரும்புகிறோம். அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வரலாம். இதற்காக விசா கெடுபிடிகள், அரசு விதிகள் ஆகியவை இருக்காது. இது அவசரகால உதவி என தெரிவித்துள்ளார்.
- கதீஜாவும் தன்னை போலவே தோற்றம் அளிப்பதை உறுதி செய்த ஷராபன், அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு பேசினார்.
- தன்னிடம் அழகு கிரீம்கள் இருப்பதாகவும், அதனை உங்களுக்கு தருகிறேன் எனவும் ஆசைகாட்டி கதீஜாவை நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.
தெற்கு ஜெர்மனியில் உள்ள முனிச் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஷராபன். இவரது காதலன் ஷேகிர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷராபன் தலைமறைவாக இருக்க விரும்பி உள்ளார்.
இதற்காக அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் உதித்துள்ளது. அதாவது தன்னை போல தோற்றம் அளிக்கும் ஒரு பெண்ணை சமூக வலைதளங்களில் தேடி உள்ளார். அப்போது முனிச் பகுதியில் வசிக்கும் அல்ஜீரியாவை சேர்ந்த கதீஜா (23) என்ற இளம்பெண்ணை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்துள்ளார்.
கதீஜாவும் தன்னை போலவே தோற்றம் அளிப்பதை உறுதி செய்த ஷராபன், அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னிடம் அழகு கிரீம்கள் இருப்பதாகவும், அதனை உங்களுக்கு தருகிறேன் எனவும் ஆசைகாட்டி கதீஜாவை நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.
அதை நம்பி கதீஜா சென்ற போது ஷராபனும் அவரது காதலரான ஷேகிரும் சேர்ந்து கதீஜாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் கதீஜாவை கத்தியால் சரமாரியாக 50 முறைக்கு மேல் குத்தி கொலை செய்துள்ளனர்.
பின்னர் கதீஜா உடலை சாக்கு பையில் கட்டி காரில் மறைத்து வைத்துவிட்டு ஷராபன் காதலனுடன் தலைமறைவாகி விட்டார்.
இதற்கிடையே ஷராபனை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தேடிய போது அங்குள்ள காட்டு பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காருக்குள் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பினர். முதலில், காரில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஷராபன் என அவரது பெற்றோர் கருதினர். ஆனால் டி.என்.ஏ. பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது அல்ஜீரியாவை சேர்ந்த கதீஜா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஷராபன் தலைமறைவாக இருப்பதற்காக காதலனுடன் சேர்ந்து கதீஜாவை கொலை செய்ததும், பின்னர் காதலனுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.






