என் மலர்tooltip icon

    சீனா

    • டீஃப்லேஷன் ஒரு அபாயகரமான பொருளாதார நிலை என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர்
    • சீனாவில் 2 ஆண்டுகளாக தென்பட்ட வளர்ச்சி மாறி டீஃப்லேஷன் தொடங்கி விட்டது

    பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்து மக்களின் வாங்கும் திறன் குறையும் போது பணவீக்கம் (inflation) எனும் நிலை தோன்றும்.

    ஆனால் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தேவை குறையும் போது அவற்றின் விலையும் குறைய தொடங்கும். குறைந்த அளவிலான பணத்தில் அதிக அளவிலான பொருட்களை வாங்க முடியும். இந்நிலையை டீஃப்லேஷன் (deflation) எனப்படும் பணவாட்டமாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    சீனாவில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஜூலை மாதம் பொருளாதாரம் டீஃப்லேஷன் நிலையை அடைந்தது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு அங்கு பொருளாதாரம் மீண்டு, வளர்ந்தும் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் முதல் முறையாக இந்நிலை தற்போது தோன்றியுள்ளது.

    சீனாவில் மக்கள் செலவினங்களை மிகவும் குறைத்து வருவதால் பொருளாதாரம் வாட்டத்தை அடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதாரத்தில் 25 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகித்த ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் சரிவும் இதற்கு மற்றொரு காரணம்.

    பணவீக்கத்தின் முக்கிய அளவீடான நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) கடந்த ஜூலை மாதம் 0.3 ஆக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.

    நுகர்வோரின் மனநிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தவிர பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக செலவு செய்யும் எண்ணம் மறைவதுதான் பணவாட்டம் ஏற்பட முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

    இது ஒரு அபாயகரமான பொருளாதார நிலை என நிபுணர்களால் வர்ணிக்கப்படுகிறது.

    நுகர்வோர் குறைவதால் உற்பத்தியை குறைக்கவும், புதிய தொழிலாளர்களை பணியமர்த்துவதை நிறுத்தி வைக்கவும், தேவைப்பட்டால் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும் நிறுவனங்கள் திட்டமிடும். இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.

    சீனாவின் பொருளாதார வாட்டம் குறித்த அறிவிப்பின் தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தையில் பங்குகள் சரிவை சந்தித்தன.

    சீனாவின் பொருளாதார மாற்றம் உலகளவில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை பொருளாதார நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    • சிலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
    • 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சீனாவின் யுனான் மாகாணம் லூபிங் கவுண்டி பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியால் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை சரமாரியாக குத்தினார்.

    இதனால் அவர்கள் அலறியடித்தபடி ஓடினர். சிலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட 20 வயது நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் அவர் தனது வீட்டில் தாயை கத்தியால் குத்திவிட்டு பின்னர் பொதுமக்களை தாக்கி தப்பி ஓடிவிட்டார் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போனில் எந்தவிதமான சேவையும் வழங்கப்பட கூடாது.
    • குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பும் ஸ்மார்ட்போனில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகி விட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதனால் குழந்தைகளிடம் செல்போன்களை கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் செல்போன்களை குழந்தைகள் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    இது தொடர்பாக சீனாவின் செல்போன் கட்டுப்பாட்டாளர் அமைப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

    18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு மணி நேரமும் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் 2 மணி நேரம் செல்போனை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

    18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போனில் எந்தவிதமான சேவையும் வழங்கப்பட கூடாது.

    18 வயதுக்குட்பட்டவர்கள் மொபைல் சாதனங்களில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் பேஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது. குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பும் ஸ்மார்ட்போனில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் இணைய சேவை வழங்குபவர்கள், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேர வரம்புகளில் இருந்து விலக்கு பெற பெற்றோர் கேட்டுக்கொண்டால் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே போல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாடல்கள் மற்றும் ஆடியோ உள்ளடக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் செய்தி சார்ந்த உள்ளடக்கம் மட்டுமே காட்டப்பட வேண்டும்.

    தவறான பழக்கத்தை தரும் உள்ளடக்கத்தை வழங்காமல் இப்போதே உறுதி செய்யுமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சீனா அரசு அறிவுறுத்தி உள்ளது.

    • பீஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவானது.
    • கனமழையில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பீஜிங்:

    சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்தப் புயலால் 100க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சுமார் 6,000 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதனால் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது.

    முக்கிய ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை விட தாண்டி ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக சீனாவில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 27 பேர் மாயமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

    சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவானது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பீஜிங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 744.8 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது.
    • சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது.

    பீஜிங்:

    சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்தன. சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது. இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    • பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • டொக்சூரி புயலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.

    பீஜிங்:

    பசிபிக் பெருங்கடலில் டொக்சூரி என்று பெயரிடப்பட்ட புயல் உருவானது. சூப்பர் சூறாவளி புயலாக வலுவடைந்து பிலிப்பைன்சை நெருங்கிய போது அதன் தீவிரத்தை சற்று இழந்தது. பின்னர் பிலிப்பைன்சை கடுமையாக தாக்கியது.

    ஆனால் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். அதன் பின் தைவானை தாக்கிய டொக்சூரி புயல், தென் கிழக்கு சீனாவை நோக்கி நகர்ந்தது. இதில் புஜியான் மற்றும் குவாங்ஷோ மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது.

    சுமார் 175 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதனால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    புஜியான், குவாங்ஷோ மாகாணத்தை சேர்ந்த சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 10 லட்சம் பேர் அவதியடைந்துள்ளனர்.

    புயல் வலுவிழந்ததை அடுத்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டொக்சூரி புயல் காரணமாக தலைநகர் பீஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணங்களில் சிவப்பு எச்சரிக்கையை அந்நாட்டின் வானிலை மையம் விடுத்துள்ளது.

    புஜியான் மாகாணத்தில் கரையை கடந்து புயல், நாட்டின் வடக்கு பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது பீஜிங்கில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை 1-ந் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பீஜிங்கில் பூங்காற்று ஏரிகள் மற்றும் ஆற்றங்கரை சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    தியான்ஜின், ஹெபே, ஷான்டாங் உள்ளிட்ட மாகாணங்களில் மழை பெய்து வருகிறது.

    சீனா, பிலிப்பைன்ஸ் தைவான் ஆகிய நாடுகளை புரட்டி போட்டுள்ளது டொக்சூரி. புயலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.

    • நுகர்வோரின் வாங்கும் திறன் எதிர்பார்த்ததை விட குறைந்திருக்கிறது
    • வியப்பூட்டும் விதமாக ஆணுறைகளின் விற்பனை குறையவில்லை

    உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான சீன பொருளாதாரம் குறித்து ஒரு வியப்பான தகவல் வெளியாகியிருக்கிறது.

    சீனாவில் நுகர்வோரின் வாங்கும் திறன் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வந்தனர்.

    அதேபோல் சீனாவில் இருந்து கிடைக்கும் பொருளாதார தகவல்கள், கோவிட் தொற்று நோய்க்கு பிந்தைய வர்த்தக எழுச்சி, எதிர்பார்த்ததை போல் நீடிக்கவோ, அதிகரிக்கவோ இல்லை என்றும் மாறாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றன. இதனால் நுகர்வோர்களின் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கோரி வருகின்றனர்.

    இந்நிலையில் நுகர்வோர் பொருட்களுக்கான வியாபாரங்களில் ஜாம்பவானான திகழும் யூனிலீவர் (Unilever), சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்து வருவதால், நுகர்வோரின் வாங்கும் சக்தி, வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது என தெரிவித்தது.

    ஆனால் வியப்பூட்டும் விதமாக, ஆணுறைகளின் விற்பனை குறையவில்லை என்று டியூரெக்ஸ் (Durex) ஆணுறைகளை தயாரிக்கும் பிரிட்டன் நாட்டை தளமாக கொண்ட பன்னாட்டு நிறுவனமான ரெக்கிட் (Reckitt) தெரிவித்துள்ளது.

    ரெக்கிட் நிறுவனம் அதன் வருவாய் முடிவுகளை அறிவித்தபோது, அதன் சுகாதார பொருட்கள் விற்பனை பிரிவின் வர்த்தகத்தில் நிகர வருவாய் வளர்ச்சி 8.8% என அறிவித்தது.

    இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அதன் தலைமை நிர்வாக அதிகாரி, நிகான்ட்ரோ டுரான்டே (Nicandro Durante) தெரிவித்திருப்பதாவது:-

    எங்கள் தயாரிப்புகளில், நெருக்கமான உறவுகளுக்கான ஆரோக்கிய (intimate wellness) பொருட்களின் விற்பனை சீராக உள்ளது. ஆணுறைகள், K-Y லூப்ரிகண்ட் உள்ளிட்ட பொருட்களால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. ஆணுறை தயாரிப்புகளில் புது பொருட்களை உபயோகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். பாலியூரிதேன் கொண்டு தயாரிக்கப்படும் மிக மெல்லிய ஆணுறைகளை சீன சந்தைக்காக டைகாங்க் பகுதியில் உற்பத்தி செய்ய போகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பொருளாதாரம் ஆட்டம் கண்டாலும், சீனர்களின் ஆட்டம் குறையவில்லை என இதுகுறித்து கிண்டலாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • டெங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்
    • அந்த குழந்தைக்கு நீண்டகால உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை

    சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது.

    குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியிருக்கிறார். இவர்களுக்கு குழந்தை பிறந்த சிறிது காலத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் பிரிந்து சென்றுள்ளார். குழந்தையை டெங் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில், டெங் தனது கைக்குழந்தையின் முகத்தில் சுமார் 30 வினாடிகள், 30 முறை அறைந்து, அந்த செயலை படம்பிடித்து தனது காதலிக்கு அனுப்பியுள்ளார்.

    இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வலியால் குழந்தை அழுதபோதும், முகம் சிவந்து வீங்கும் வரை டெங் அறைந்து கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த பலர், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    "ஒரு தாயாக, இந்த வீடியோவைப் பார்த்து நான் அழுதேன். இந்த மனிதன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இது ஒரு மனிதன் செய்யும் காரியமே அல்ல" என்று சமூக ஊடக பயனர் ஒருவர் கூறினார்.

    "தந்தைக்கான உரிமையை அவரிடமிருந்து ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் குழந்தை எதிர்காலத்தில் அதிகமாக இது போன்ற துன்புறுத்தல்களை சந்திக்க நேரிடும்" என்று மற்றொரு பயனர் கூறினார்.

    குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜான்ஜியாங் நகராட்சி, திகிலூட்டும் இந்த வீடியோ குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

    அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    டெங்கை விட்டு அக்குழந்தையின் தாயார் சென் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனியாக குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த டெங், இந்த வீடியோவை கண்டதும் சென் திரும்பி வருவார் என நம்பி இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார். இந்த துன்புறுத்தலின் விளைவாக தாக்கப்பட்ட அந்த குழந்தைக்கு நீண்டகால உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை. உள்ளாட்சி அமைப்பு அந்த குழந்தையை தற்போது கவனித்து வருகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தந்தை டெங்கை கைது செய்தனர்.

    • புதிய வெளியுறவு மந்திரியாக வாங் யி நியமனம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    • கின் கேங் பீஜிங்கில் ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரியை சந்தித்தபிறகு பொதுவெளியில் வரவில்லை.

    பீஜிங்:

    சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி கின் கேங் சுமார் ஒரு மாதகாலமாக பொதுவெளியில் தோன்றவில்லை. ஜூன் 25ம் தேதி பீஜிங்கில் ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஆண்ட்ரே ருடெங்கோவை சந்தித்தபிறகு அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் தெரியாமல் இருந்தது. அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், துறை ரீதியான விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது. அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், கின் கேங் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவு மந்திரியாக வாங் யி நியமனம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

    கின் கேங் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அவரது பதவிநீக்கம் தொடர்பான உத்தரவில் அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கிற்கு பதிலாக கின் கேங் வெளியுறவு மந்திரியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
    • உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது.

    பெய்ஜிங்:

    வட கிழக்கு சீனா குயிக்குகார் என்ற பகுதியில் பள்ளி உள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்தனர். இது பற்றி அறிந்ததும் 160-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 10 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 6 பேர் உயிர் இழந்தனர்.

    இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் வடக்கு பகுதிகள் தான் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
    • காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    பெய்ஜிங்:

    இத்தாலி, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பஅலை தாக்கி வருகிறது.

    இதன் காரணமாக இத்தாலியில் 114.8 டிகிரி வெயிலும், ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெயிலும் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    இதில் உச்சகட்டமாக சீனாவில் வரலாறு காரணாத வகையில் 125.6 டிகிரி வெயில் போட்டு தாக்குகிறது. 100 டிகிரி அடித்தாலே பொதுமக்கள் வாடி வதங்கி விடுவார்கள். ஆனால் இதை விஞ்சும் வகையில் வெப்ப அலை அதிகமாக வீசுவதால் சீன மக்கள் தவித்து வருகின்றனர்.

    தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் வடக்கு பகுதிகள் தான் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு மேலாக இந்த பகுதிகளில் வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டனர். இன்னும் 5 நாட்களுக்கு கடுமையான வெப்பஅலை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    சீனாவில் கடந்த 1961-ம் ஆண்டு கடும் வெப்ப அலை ஏற்பட்டது. அதன்பிறகு இப்போது அங்கு வெப்ப அலை பொதுமக்களை பாடாய் படுத்துகிறது. வெப்பத்தால் இரவு நேரம் கடும் புழுக்கமாக இருக்கிறது.இதனால் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வெப்ப அலைக்கு ஏராளமானோர் அம்மை, சிறுநீர் கடுப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.நோயாளிகள், முதியவர்கள் வெப்ப அலையால் தாக்குபிடிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்,

    இத்தாலியில் ரோம், சிசிலி உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் 46 நகரங்களில் 120 டிகிரி வெயில் அடிக்கிறது.

    வெப்பஅலையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 112 டிகிரி வெயில் வாட்டி வதைக்கிறது. கடும் அனலால் காடுகளில்வேகமாக தீ பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • 41.5 கோடி பேர் கட்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர்
    • போதிய கவனம் செலுத்தவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் முடிவதை தடுக்க முடியாது- ஜி ஜின்பிங்

    சீனாவில் பல கட்சி அரசியல் அமைப்போ ஜனநாயகமோ இல்லை. அங்குள்ள பிரதான மற்றும் ஒரே கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி. இதற்கு உலகெங்கிலும் பல கோடி மக்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இம்மாத துவக்கம் முதல் சுமார் 41.5 கோடி பேர் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

    உடைந்த சோவியத் ஒன்றிய நாடுகளில், பல வருடங்களுக்கு முன் 'நிற புரட்சி' எனப்படும் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக ஜனநாயகம் கோரும் மக்கள் எழுச்சிகள் நடைபெற்றன.

    இதனை போன்று சீனாவில் நடத்த சில அயல்நாட்டு சக்திகள் முயற்சிப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டு ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் நுழைவதை சீனா விரும்பவில்லை என சமீபத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜின்பிங் தெரிவித்தார்.

    மேலும் அவர், போதிய கவனம் செலுத்தவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் முடிவதை தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.

    2022-ம் ஆண்டு இளம் தொண்டர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றும் தற்போது வெளிவந்திருக்கிறது.

    அதில் மார்க்ஸிஸ மற்றும் கம்யூனிஸ கொள்கைகள் நிலைநிறுத்தப்படாவிட்டால் 90-களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்டதை போன்று சீனாவிலும் கம்யூனிஸம் அழிந்து, சீனாவும் சுக்குநூறாகி விடும் அபாயம் உள்ளதாக கூறியிருக்கிறார்.

    திரள்திரளாக உறுப்பினர்கள் கம்யூனிஸ கொள்கையிலும் கட்சியிலும் இருந்து விலகியதால்தான் சோவியத் ஒன்றியம் உடைய தொடங்கியது குறிப்படத்தக்கது.

    அதேபோல் சீனாவிலும் நடக்கலாம் என கம்யூனிஸ்ட் கட்சி அச்சப்படுகிறது. நாடு முழுவதும் உள்நாட்டிலும், உலகெங்கிலும் பல நாடுகளுடனும் பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களை சீனா எதிர்கொண்டு வருகிறது.

    கட்சியின் கொள்கை முடிவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததே, கட்சியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் என அக்கட்சி கருதுகிறது.

    ஆனால் மக்களின் குரலுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரான கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கில் மக்கள் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்றும் சீனாவில் தற்போது அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கேற்பதற்காகவே கட்சியில் உறுப்பினர்கள் உள்ளனரே தவிர கொள்கைகளுக்காக கட்சியில் இருக்குமாறு அதிபர் விடுத்த அழைப்பிற்கு போதிய வரவேற்பில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    உலக வர்த்தகத்தின் போக்கை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியான சீனாவின் ஒரே கட்சியில் இத்தகைய ஆபத்து உருவாகியிருப்பதை அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    ×