என் மலர்
கனடா
- டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு பயணித்தது
- 4 நாட்கள் உலகமே பயணிகளை குறித்து தகவல் எதிர்நோக்கி இருந்தது
2023 ஜூன் மாதம், ஒஷன்கேட் (OceanGate) நிறுவனத்தை சேர்ந்த டைட்டன் (Titan) எனும் சிறு நீர்மூழ்கி வாகனத்தில் நியூஃபவுண்ட் லேண்ட் (Newfoundland) கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் தரை தட்டி நிற்கும் டைட்டானிக் (Titanic) கப்பலை காண 5 பேர் கொண்ட ஒரு குழு புறப்பட்டது.
இதில் ஓஷன்கேட் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், இங்கிலாந்தை சேர்ந்த கோடீசுவரர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் பால்-ஹென்றி நார்கியோலெட், பாகிஸ்தான் கோடீசுவரர் ஷஹ்சாதா தாவுத் மற்றும் அவர் மகன் சுலெமான் தாவுத் ஆகிய 5 பேர் பயணித்தனர்.

ஜூன் 18 அன்று ஆழ்கடலில் இறங்கிய சில மணி நேரங்களில் டைடன் தகவல் தொடர்பை இழந்தது.
இதையடுத்து பெரிய அளவில் அவர்களை தேடும் பணி தொடங்கியது.
5 பேர் கதி என்ன என உலகமே அதிர்ச்சியுடன் எதிர்பார்த்த நிலையில் ஜூன் 22 அன்று அந்த நீர்மூழ்கி வாகனத்தில் உள்ளிருந்து ஏற்பட்ட வெடிவிபத்தில் அதன் பாகங்கள் சிதறியிருப்பதாகவும், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
முன்னேற்பாடுகளுடன் இது போன்ற பயணங்கள் செய்யப்பட வேண்டும் என ஒரு சாரார் ஆதரித்தும், இவை ஆபத்தானவை மட்டுமின்றி தேவையற்றவை என எதிர்த்தும் ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர்.
- கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது
- கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விசா வழங்கலை இந்தியா நிறுத்தியது
கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார், கனடா நாட்டின் வேன்கூவர் (Vancouver) நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.
இதையடுத்து, செப்டம்பர் 18 அன்று கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவு அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்ததுடன், அதற்கான ஆதாரங்களை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.
இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே உறவு நலிவடைய ஆரம்பித்தது.
இந்தியாவிற்கான கனடா தூதரை இந்திய அரசு வெளியேற்றியது. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு விசா வழங்கலை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இரு தரப்பிலும் சுமூகமான உறவு ஏற்பட உயர் அதிகாரிகள் தரப்பில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் 2024ல் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு அமையும் என அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
- தொடரந்து சண்டை நடைபெற்று வருவதால் காசா மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி.
- போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்திய போதிலும், அதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து வருகின்றன.
ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவைத் தொடர்ந்து தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா ஏறக்குறைய முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் பலத்த சண்டை நடைபெற்று வருகிறது.
இதனால் பாலஸ்தீன மக்கள் கடும் சோதனையை சந்தித்து வருகின்றனர். தங்குவதற்கு இடமில்லாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில் இருந்து, எங்கள் நாட்டில் குடியேற தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காசாவில் இருந்து வெளியேற நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் ஜனவரி 9-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் குடிவரவு மந்திரி மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை 660 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், நிரந்தமாக வசித்து வருபவர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளை காசாவில் இருந்து அழைத்து வர அரசு கவனம் செலுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பெற்றோர்கள், குழந்தைகள், பேரக்குழந்கைள் போன்றோரின் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்புடையதாக இருந்தால் மூன்று வருடங்கள் விசா வழங்கப்படும்.
இதனால் எத்தனை பேர் கனடாவிற்கு வருவார்கள் எனத் தெரியாது. ஆனால் நூற்றுக்கணக்கில் இருக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களை காசாவில் இருந்து வெளியேற்றுவது மிகவும் கடினமானது என்றார்.
அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை சுமார் 240 பேர் பிணைக்கைதிகளை விடித்துச் சென்றுள்ளனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 127 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.
- கனடா குடிமக்களுக்கு இந்தியா சில மாதங்கள் விசாவை நிறுத்தி வைத்தது
- தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் என கனடா மக்கள் அஞ்சியதாக ட்ரூடோ கூறினார்
இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி துவக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினை அமைப்பு. இதன் முக்கிய தலைவராக இருந்தவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார் (45).
கடந்த ஜூன் மாதம், கனடாவின் வேன்கூவர் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலத்திற்கு வெளியே ஹர்திப் துப்பாக்கி ஏந்திய இருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.
இப்பின்னணியில் கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக அறிவித்தார்.
பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவை பின்னுக்கு தள்ளியது. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் குடிமக்களுக்கு சில மாதங்களுக்கு இந்தியா விசா வழங்குதலை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது:
இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மட்டத்திலும் அமைதியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது போதாது என நாங்கள் கருதினோம். எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெற கூடாதென வலியுறுத்தும் விதமாக ஒரு அழுத்தமான நடவடிக்கை எடுக்க விரும்பினோம். இங்கு கனடாவில் பலர் தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் எனும் அச்சத்தில் வாழ்ந்து வந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நாங்கள் செயல்பட வேண்டி இருந்தது. அதன் காரணமாகவே எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு இது போன்ற சம்பவங்களில் பங்குள்ளது என உரக்க கூறினோம். இதன் மூலம், இது போன்ற சம்பவங்களில் இந்தியா ஈடுபட்டாலோ அல்லது ஈடுபட நினைத்தாலோ அது தடுக்கப்படும் என உறுதி செய்து கொள்ள விரும்பினோம்.
இவ்வாறு ட்ரூடோ தெரிவித்தார்.
- அங்கு பட்டம் முடித்தவர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் கிடைத்து வந்தது
- 14 மணி நேரம் வேலை செய்தாலும் போதிய வருவாய் ஈட்ட வழியின்றி தவிக்கின்றனர்
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்லூரிகளில் பட்டம் படித்தவர்களுக்கு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்ததனால் அதிக பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் கல்வி பயில பல இந்திய மாணவ மாணவியர்கள் ஆண்டுதோறும் அங்கு செல்வது வழக்கம்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் மாணவ மாணவியர்கள் கனடாவில் படித்து பட்டம் பெற்று, அங்கேயே வேலை வாய்ப்புகளை பெற செல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் "ஸ்டெம்" (STEM) எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளிலும், வணிக நிர்வாக மேலாண்மை (MBA) துறையிலும் பட்டம் பெற அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்பவர்கள்.
இந்நிலையில், கனடாவின் தேசிய புள்ளிவிவர மையம் (National Statistical Agency) மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே கனடாவில் வேலை வாய்ப்பு 61.8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இதன் காரணமாக அங்கு படிக்க சென்ற மாணவர்கள், "ஆட் ஜாப்ஸ்" (odd-jobs) எனப்படும் அதிக திறன் தேவைப்படாத, அதிக ஊதியம் வழங்காத சாதாரண வேலைகளை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது பட்டம் முடித்த பல இந்திய மாணவர்களுக்கு கனடாவில் உணவகங்கள், மின்னணு சாதன விற்பனை நிலையங்கள், மொபைல் விற்பனை கடைகள், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தாலும் வாடகை, உணவு மற்றும் இதர செலவுகளுக்கு போதுமான வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
கடும் குளிர் பிரதேச நாடான கனடாவில் வேலைவாய்ப்புகள் குறைவதாலும், பட்டம் பெற பெரும் பணம் செலவழித்து வந்து விட்டதாலும், நாடு முழுவதுமே வேலைவாய்ப்புகள் குறைவதாலும் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- வாடகை கட்டணமாக 900 கனடா டாலர்கள் நிர்ணயித்துள்ளார்.
- இளம்பெண்ணின் விளம்பரம் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீடு, கார், மோட்டார் சைக்கிள் போன்றவை வாடகைக்கு விடப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் படுக்கையை வாடகைக்கு விட்ட இளம்பெண்ணின் செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
கனடாவின் டொராண்டோ பகுதியில் வீட்டு வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அங்கு வீட்டு வாடகை மிகவும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அன்யா எட்டிங்கர் என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் செய்தார். அதில் அவர் தனது படுக்கையை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு பெட் மேட் தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நபர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் எனவும் அவர் ஒரு வருடம் தன்னுடன் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார். மேலும் வாடகை கட்டணமாக 900 கனடா டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.55 ஆயிரம்) நிர்ணயித்துள்ளார். அவரது இந்த விளம்பரம் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார்.
- கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்கியவர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் பன்னூன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, ஏர்-இந்தியாவை புறக்கணிப்பதை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புப் படுத்தி கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே அவரை கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
- தீபாவளி சிறப்பு மெனுவாக ஜிலேபி சீஸ்கேக் டோனட், கேரமல் பிஸ்தா டோனட், சோகோ சிக்கி டோனட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
- இனிப்பு வகைகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியா முழுவதும் ஸ்வீட் கடைகளில் பல்வேறு புதிய ரகங்களில் இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை களை கட்டி உள்ளது.
இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், கனடாவில் உள்ள பிரபல காபி ஹவுசான டிம் ஹார்டன்சில் தீபாவளியையொட்டி புதிய வகை டோனட்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இதில் தீபாவளி சிறப்பு மெனுவாக ஜிலேபி சீஸ்கேக் டோனட், கேரமல் பிஸ்தா டோனட், சோகோ சிக்கி டோனட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா ரூ.185 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இந்த புதிய மெனுவின் ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட நிலையில், பயனர்கள் பலரும் அதன் சுவை குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் இந்த இனிப்பு வகைகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
- கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார்.
- ‘மெனு கார்டு’ 60 ஆயிரம் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.61 லட்சம்) ஏலம் விடப்படுகிறது.
உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் பயணித்த 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆய்வுகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக அந்த கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் ஏலத்திற்கு வர உள்ளது. இதுதொடர்பாக ஏலதாரரான ஆன்ட்ரூ ஆல்ட்ரிச் கூறுகையில், கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார்.
இது அவரது குடும்பத்தினர் உள்பட யாருக்கும் தெரியாது. 2017-ம் ஆண்டு அவர் இறந்த பிறகு அவரது உடமைகளை அவரின் மகளும், மருமகளும் பார்த்தனர். அப்போது தான் இந்த டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட மெனுவை பழைய புகைப்பட ஆல்பத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர் என்றார்.
விரைவில் ஏலத்திற்கு வர உள்ள அந்த மெனு கார்டில் மாட்டிறைச்சி உள்ளிட்ட பல உயர்தர உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த 'மெனு கார்டு' 60 ஆயிரம் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.61 லட்சம்) ஏலம் விடப்படுகிறது.
- இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது.
- புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஒட்டாவா:
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் பலர் விண்ணப்பிக்கிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் ஏஜென்சிகள் மூலம் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இந்திய மாணவர்களிடம் போலி ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது. இந்த மோசடியில் பாதிகப்பட்ட மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் மாணவர் விசாவில் வருபவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும். இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.
இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு தெரிவித்தது.
- 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கனடாவின் வடக்கே உள்ள ஒன்டாரியோ நகரில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது சாலையில் ஒருவர் இறந்து கிடந்தார். அதே போல் வீடுகளில் 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர். மேலும் 44 வயது நபர் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். 5 பேர் இறந்த இந்த உயிரிழப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்பப்பெற்ற நிலையில் இந்த முடிவு
- டெல்லி, பெங்களூருவில் எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தல்
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் கனடா, இந்திய புலனாய்வு அமைப்பு மீது குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் இருந்து இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.
தங்கள் நாட்டினருக்காக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், "இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வ கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம். ஒருவேளை கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்.
டெல்லியில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்கவும். தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மும்பை, சண்டிகர், பெங்களூரு ஆகிய நகரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் கனடா நாட்டினர் டெல்லியில் உள்ள தூதர அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
பிக்பாக்கெட், சிறிய காயம் போன்ற சம்பவங்கள் பொதுவானது. குற்றவாளிகள் வெளிநாட்டினரை இலக்காக வைத்து தாக்கலாம். குறிப்பாக முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் இதுபோன்று நடக்கலாம் என எச்சரித்துள்ளது.






