என் மலர்tooltip icon

    உலகம்

    • ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது
    • தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது என்றார் டிரம்ப்

    நேற்று காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறது.

    சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாற்றி கொள்ளும் உடன்படிக்கையின்படி ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது.

    இந்நிலையில், இந்த இரு சம்பவங்களையும் இணைத்து குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீது குற்றம் சாட்டி கருத்து தெரிவித்திருக்கிறார்.

    டிரம்ப் கூறியிருப்பதாவது:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெட்கக்கேடானது. முழு பலத்துடன் தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய ஜோ பைடன் அரசாங்கத்தால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை ஹமாஸ் அமைப்பிற்கு சென்றிருக்கிறது.

    இவ்வாறு டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    ஆனால், இச்செய்தியை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ், "அமெரிக்காவின் 2 பெரிய கட்சிகளும், தன்னை காக்க போராடும் இஸ்ரேலுடன் கை கோர்க்க வேண்டிய வேளையில் இத்தகைய வெட்கக்கேடான பொய் செய்தியை டிரம்ப் வெளியிடுகிறார்" என பதிலளித்தார்.

    • இஸ்ரேலில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என தமிழக மாணவர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
    • அரசு முழு உதவிகளையும் செய்கிறது. தேவையில்லாமல் வெளியில் செல்லவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் அழிக்கப்படும். எனவே காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இஸ்ரேல்-காசா முனை எல்லையில் உள்ள ஸ்டெரோட் நகருக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் அங்குள்ள போலீஸ் நிலையத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து இஸ்ரேல் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, போலீஸ் நிலையத்தை மீட்டனர். இதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலின் தெற்கு நகரமான ஒபாகிமில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர். அங்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை மீட்டனர். அங்கு நடந்த சண்டையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    • நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து உள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக மீண்டும் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தில் நேற்று வரை 320-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஜிந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜிந்தா ஜன் மாவட்டத்தின் 3 கிராமங்களில் மட்டும் 15 பேர் இறந்துள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    பரா மற்றும் பத்கிஸ் பகுதிகளில் சில வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டன. ஹெராத் பகுதியில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சுவர்களிலும் விரிசல்கள் விழுந்துள்ளன. நிலநடுக்கம் காரணமாக உயரமான கட்டிடங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடந்தது. மீட்பு பணியின் போது பிணங்களாக வந்து கொண்டிருந்தன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்பட்டது.

    இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு இதுவரை 2000 பேர் பலியாகி உள்ளனர். இதை தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதுபற்றி ஹெராத் மாகாண பேரிடர் நிவாரண அதிகாரி மூசா ஆஷாரி கூறும்போது, 'நிலநடுக்கத்திற்கு இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜெண்டா ஜன் நகரில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 12 ஆம்புலன்சுகளை உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளது.

    இது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், 'ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்' என்று கூறப்பட்டு உள்ளது.

    ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளூர் அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என்று கூறியுள்ளனர்.

    • பாலஸ்தீன ஊடுருவல்காரர்கள் இங்கு வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
    • தெற்கு இஸ்ரேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிகின்றனர்.

    இஸ்ரேல் மீது, பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இஸ்ரேலில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களின் நிலையை அவர்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கிவிட்டன. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற நமது நாடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த சூழலில் இஸ்ரேலில் இருக்கும் கேரள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக பதுங்கு குழிகளை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்கு 8 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரியும் கேரளாவை சேர்ந்த ஷைனிபாபு என்பவர் கூறுகையில், பாலஸ்தீன ஊடுருவல்காரர்கள் இங்கு வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

    தற்போது தெற்கு இஸ்ரேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் மருத்து வமனையில் செவிலியர்க ளாகவும், தனியாக வசிக்கு முதியோர்களுக்கு பராமரிப்பாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் போரினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அவர்கள் இஸ்ரேலில் உள்ள பதுங்கு குழிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். நானும் தற்போது பதுங்கு குழியில் தான் உள்ளேன். கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகள் இருந்துள்ளன. ஆனால் தற்போது மிகவும் வலுவானதாக தெரிகிறது என்றார்.

    • ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது.
    • ராக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு புதிதல்ல.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே 1948-ம் ஆண்டில் இருந்தே போர் நடந்து வருகிறது. 1948-ல் பாலஸ்தீனத்திலிருந்து பிரித்தானியர் வெளியேறிய பிறகு, இஸ்ரேலும் அரபு நாடுகளும் போரைத் தொடங்கின. 1949-ல் ஜனவரி 20 அன்று இஸ்ரேல், அரபு நாடுகளுடன் போர் நிறுத்தத்தை அறிவித்தபோது போர் முடிவுக்கு வந்தது.

    1967-ல் இஸ்ரேலுக்கும் எகிப்திய-ஜோர்டானிய-சிரியாக் கூட்டணிக்கும் இடையிலான 6 நாள் போரின் விளைவாக மேற்குக் கரை, காசா பகுதி, சினாய் மற்றும் கோலன் குன்றுகளை இஸ்ரேல் கைப்பற்றியது.

    1973: எகிப்து மற்றும் சிரியாவினால் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடைபெற்றது. யோம் கிக்கர் போர் என்று அழைக்கப்படும் சண்டை, போருக்கு முந்தைய நிலையைத் தக்கவைக்க போர் நிறுத்தத்துடன் முடிவுக்கு வந்தது.

    2008-ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களை எதிர்கொள்ள காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை எடுத்தது காசா போர் என்று அழைக்கப்படுகிறது. 2009-ல் போர் நிறுத்தம்.

    2014: ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது.

    2021: ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய போலீசாரும் பாலஸ்தீனியர்களும் மோதிக்கொண்டனர். இந்த மோதல் காஸா பகுதிக்கும் பரவியதையடுத்து, ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் போர் வெடித்துள்ளது. இதற்கு மிக முக்கியமாக கருதப்படுவது அல்-அக்ஸா மசூதி தான். இந்தப் பகுதியில் இஸ்ரேல் காட்டிய அதீத ஆர்வம் தான் தற்போதைய தாக்குதலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பென் கெவிர் 3 முறை இங்கு வந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹமாஸ், இதனை சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்ல தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    2005 போர் நிறுத்தத்திற்குப் பிறகு 2014-ல் கடுமையான சண்டை நடந்தது. அதன் பிறகு, 3 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க ராக்கெட் தாக்குதல் எதுவும் இல்லை. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை மீண்டும் தீவிரமடைந்தது. மே 2021 இல், அல்-அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதல்கள் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ராணுவப் போருக்கு வழிவகுத்தது. கடந்த ஆண்டு இஸ்ரேல் ராணுவத்துடனான மோதலில் 151 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். தற்போது பிரச்சனை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

    ராக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு புதிதல்ல. வான் கவசங்கள் மற்றும் வெடிகுண்டு தங்குமிடங்கள் பொதுவாக ராக்கெட்டுகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இப்போது நேரடியாக எல்லையைத் தாண்டி நகரங்களின் தெருக்களில் துப்பாக்கிச் சூடு நடத்தும் தாக்குதல் உள்ளது.

    • இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது.
    • சீனக் கப்பலை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் தேதிகளை முதலில் அறிவிக்க வேண்டும் என இலங்கை உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    கொழும்பு:

    சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவில் இருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன.

    கடந்த ஆகஸ்டு மாதம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத் தில் 2 நாட்கள் நங்கூரமிட்டு நிறுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், சீனாவின் மற்றொரு கப்பலான ஷின் யான்-6 இலங்கைக்கு வர உள்ளதாகவும், இந்த கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இலங்கையில் உள்ள ருஹுனு பல்கலைகழக நீரியியல் துறை கடல் சார்ந்த ஆய்வினை சீன கப்பல் உதவியுடன் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்காகவே சீன உளவு கப்பல் இலங்கை வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

    சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிகஅருகில் உள்ள இந்தியாவின் ஸ்ரீ ஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது.

    இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவி உள்ளது

    இந்த சூழலில் சீன கப்பலின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீன உளவு கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 474 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    சீனக் கப்பலை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் தேதிகளை முதலில் அறிவிக்க வேண்டும் என இலங்கை உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    இந்நிலையில் சீன ஆராய்ச்சிக் கப்பலுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருந்த ருஹுனு பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் மற்றொரு பேராசிரியர் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் இருந்து ருஹுனு பல்கலைக்கழகம் விலகி உள்ளது.

    இதன் காரணமாக சீன உளவு கப்பல் இலங்கை வர வாய்ப்பு இல்லை எனவும், அரசு அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்றும் இலங்கை அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

    • இஸ்ரேல் படைகள் காசாவில் ஹமாஸ் அமைப்பினருடன் சண்டையிட்டு வருகின்றன.
    • ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இருதரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் கடந்த இரு தினங்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்தார்.

    அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று தெரிவித்தார்.

    • இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
    • காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இஸ்ரேலின் எல்லையோர நகரங்களில் சில பகுதிகளை ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் அந்த பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் தொடங்கியுள்ளனர். மேலும், இஸ்ரேல் போர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து, ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் இடையிலான மோதலில் இதுவரை 530க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் 2வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இதனால், இஸ்ரேல் - காசா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

    போரை தீவிரப்படுத்தப் போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவுறுத்தியுள்ளார்.

    • ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 250 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
    • போரை தீவிரப்படுத்த உள்ளதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் அறிவுறுத்தினார்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 250 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

    இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதேபோல், ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், போரை தீவிரப்படுத்தப் போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்த உள்ளோம் எனவும் அறிவித்துள்ளார். இதனால் காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

    • பயிற்சி தளத்துக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீப்பிடித்தது.
    • ராணுவ முகாம் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் போன்றவை கொழுந்துவிட்டு எரிந்தன.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கேப் மாகாணத்தில் ராணுவ பயிற்சி தளம் செயல்படுகிறது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பயிற்சி தளத்துக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென ராணுவ பயிற்சி தளத்துக்கும் பரவியது.

    இதில் ராணுவ முகாம் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் போன்றவை கொழுந்துவிட்டு எரிந்தன. தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் இந்த தீ அணைக்கப்பட்டது. எனினும் 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்த நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்தனர்.

    • இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 5 பேரை கடத்தியுள்ளோம் என பயங்கரவாத குழுவினர் கூறியுள்ளனர்.
    • பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும்.

    கீவ்:

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 250 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 779 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் எக்ஸ் சமூக பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பயங்கரவாத தாக்குதலில் உறவினர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

    பயங்கரவாதத்திற்கு இடமளிப்பவர்கள் மற்றும் அதற்கு நிதியளிப்பவர்கள், உலகத்திற்கு எதிரான ஒரு குற்றத்தில் ஈடுபடுபவர்கள் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தி கூறியுள்ளார்.

    உலகில் பயங்கரவாதத்திற்கு இடம் தர கூடாது என்றும் இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்கான உரிமை மறுக்க முடியாதது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

    இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 5 பேரை கடத்தியுள்ளோம் என பயங்கரவாத குழுவினர் கூறியுள்ளனர். எனினும், இதற்கு இஸ்ரேல் பதிலளிக்கவில்லை. இஸ்ரேல் போரில் ஈடுபட்டு உள்ளது என்றும் இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.

    • காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    ஜெனீவா:

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்களை குறித்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனிடையே இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என்றும், கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் போராளிகளின் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் வன்முறைகளைத் தவிர்த்து அமைதிக்கான வழியை தேடுமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்."

    இவ்வாறு டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

    ×