என் மலர்
விளையாட்டு
- டி20 பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது.
- இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.
ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி20 பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் நீடித்த ரஷித்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதல் இடத்தை பிடித்தார்.
பிஷ்னோய் 699 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தார். ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டர்கள் தரவரிசையில் 56 இடங்கள் முன்னேறி 7ம் இடத்தை பிடித்தார் இந்திய இளம் வீரர் ருதுராஜ். முதலிடத்தில் சூர்யகுமாரும், இரண்டாம் இடத்தில் முகமது ரிஸ்வானும் உள்ளனர்.
- வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.
டாக்கா:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய்- ஜாகிர் ஹசன் களமிறங்கினர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 8 ரன்கள் எடுத்த ஜாகிர் ஹசன் 8 ரன்னில் அவுட் ஆனார். உடனே மஹ்முதுல் ஹசன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
Santner and Patel turn it in favour of New Zealand on the morning of Day 1 ?
— FanCode (@FanCode) December 6, 2023
.
.#BANvNZ pic.twitter.com/2MTC7UKyBz
இறுதியில் வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ், சாண்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளில் சிலரும், சில தேர்வு குழுவினரும் ரோகித்சர்மா 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர்.
- இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சமீபத்தில் ரோகித்சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை செய்தனர்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பையில் (50 ஓவர்) இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இருவரும் 20 ஓவரில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு இருவரும் ஆடவில்லை.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30 வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
அதே நேரத்தில் இளம் வீரர்களான சுப்மன் கில் ஜெய்ஷ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க் வாட், ரிங்குசிங் ஆகியோர் 20 ஓவர் போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இதனால் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளில் சிலரும், சில தேர்வு குழுவினரும் ரோகித்சர்மா 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் என்னை தேர்வு செய்ய விரும்பினால் இப்போதே சொல்லி விடுங்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகிகள் மற்றும் தேர்வு குழுவினரிடம் ரோகித்சர்மா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சமீபத்தில் ரோகித்சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை செய்தனர். அப்போது ரோகித் சர்மா லண்டனில் இருந்தார். இதனால் காணொலி மூலம் பங்கேற்றார். அப்போது ரோகித்சர்மா இதை தெரிவித்ததாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
- 20 ஓவர் அணி மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செல்வார்கள்.
- டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் காலதாமதமாக அணியுடன் இணைந்து கொள்வார்கள்.
பெங்களூரு:
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் ஆட்டம், 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
20 ஓவர் தொடர் வருகிற 10-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் 17 முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ந் தேதி செஞ்சுரியனிலும் 2-வது டெஸ்ட் ஜனவரி 3-ந் தேதி கேப்டவுனிலும் நடக்கிறது.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பெங்களூரில் இருந்து இன்று புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 ஓவர் அணி மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செல்வார்கள். டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் காலதாமதமாக அணியுடன் இணைந்து கொள்வார்கள்.
தென் ஆப்பிரிக்க தொடருக்கு 3 விதமான கேப்டன் நியமனமாகி உள்ளார். 20 ஓவர் போட்டிக்கு சூர்ய குமார் யாதவும், ஒருநாள் போட்டிக்கு லோகேஷ் ராகுலும், டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ரோகித்சர்மா பணியாற்றுவார்கள்.
சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
- இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவுடன் மோதியது.
- முடிவில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்து இந்த போட்டியை வெற்றியோடு ஆரம்பித்து அமர்க்களப்படுத்தியுள்ளது.
கோலாலம்பூர்:
13-வது ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 2 முறை சாம்பியனான இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, 6 முறை சாம்பியனான ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
கடந்த ஆண்டு 4-வது இடத்தை பெற்ற இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஸ்பெயின், கனடா தென்கொரியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில் 11-வது மற்றும் 16-வது நிமிடத்தில் அராய்ஜீத் சிங் ஹூன்டல் கோல் அடித்து அசத்தினார். 30-வது நிமிடத்தில் அமன்தீப்சிங் கோல் போட்டார். இதனால் முதல் பாதியில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து 38-வது நிமிடத்தில் தென்கொரியாவின் டோயுன் லிம், 45-வது நிமிடத்தில் மிங்வான் கிம் ஆகியோர் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினர். இதற்கு மத்தியில் 41-வது நிமிடத்தில் ஹூன்டல் மேலும் ஒரு கோல் போட்டு 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.
முடிவில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்து இந்த போட்டியை வெற்றியோடு ஆரம்பித்து அமர்க்களப்படுத்தியுள்ளது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 7-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இந்திய அணி தனது அடுத்த லீக்கில் ஸ்பெயினை நாளை எதிர்கொள்கிறது.
மற்ற ஆட்டங்களில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும் (ஏ பிரிவு), பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தையும், ஜெர்மனி 5-3 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும் (பி பிரிவு) தோற்கடித்தது.
- ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அர்மேனியாவின் யேரிவானில் 10 நாட்கள் நடந்தது.
- மொத்தத்தில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என்று 17 பதக்கத்துடன் 5-வது இடத்தை பிடித்தது.
புதுடெல்லி:
ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அர்மேனியாவின் யேரிவானில் 10 நாட்கள் நடந்தது. இதில் கடைசி நாளில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பாயல் உள்நாட்டு வீராங்கனை பெட்ரோஸ்யன் ஹிஜினை 5-0 என்ற புள்ளி கணக்கில் துவம்சம் செய்து தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்.
ஆசிய இளையோர் சாம்பியன்களான நிஷா (52 கிலோ), அகன்ஷா (70 கிலோ) ஆகிய இந்திய வீராங்கனைகளும் எதிர்பார்த்தபடியே தங்கப் பதக்கத்துக்கு முத்தமிட்டனர். நிஷா தஜிகிஸ்தானின் பரினோசையும், அகன்ஷா ரஷியாவின் எலிஜவிட்டாவையும் 5-0 என்ற கணக்கில் சாய்த்தனர். மற்ற இந்தியர்களான வினி (57 கிலோ), சிருஷ்டி (63 கிலோ), மேஹா (80 கிலோ), சஹில் (75 கிலோ), ஹேமந்த் (80 கிலோவுக்கு மேல்), ஜதின் (54 கிலோ) ஆகியோர் தங்களது இறுதி சுற்றில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர்.
மொத்தத்தில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என்று 17 பதக்கத்துடன் 5-வது இடத்தை பிடித்தது. ரஷியா 7 தங்கம், 2 வெள்ளி 7 வெண்கலத்துடன் முதலிடத்தை பெற்றது.
- லக்ஷயா சென் 17-வது இடத்திலும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 24-வது இடத்திலும் உள்ளனர்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 8-வது இடத்தில் நீடிக்கிறார்.
புதுடெல்லி:
உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 4 இடங்கள் ஏற்றம் கண்டு 28-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் நடந்த சையத் மோடி சர்வதேச போட்டியில் 2-வது இடம் பெற்றதன் மூலம் அவர்கள் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளனர். திரிஷா ஜாலி-காயத்தி இணை 19-வது இடத்தில் இருக்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 8-வது இடத்தில் நீடிக்கிறார். லக்ஷயா சென் 17-வது இடத்திலும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 24-வது இடத்திலும் உள்ளனர். கடந்த வாரம் நடந்த சையத் மோடி சர்வதேச போட்டியில் அரைஇறுதி வரை முன்னேறிய இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் ஒரு இடம் உயர்ந்து 30-வது இடம் பிடித்துள்ளார். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 12-வது இடத்தில் தொடருகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி 2-வது இடம் வகிக்கின்றனர்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.
- இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.
மும்பை:
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கடந்த செப்டம்பரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.
இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மாவும், பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், புதுமுக வீராங்கனைகள் ஸ்ரேயங்கா பட்டீல், சைகா இஷாக்கும் வலு சேர்க்கிறார்கள். இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் நாட் சிவெர் புருன்ட், டேனி வியாட், கேப்டன் ஹீதர் நைட்டும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டன், சாரா கிளெனும் மிரட்டுவார்கள்.
இங்கிலாந்துக்கு எதிராக 27 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி இதுவரை 7 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு எதிராக உள்ளூரில் 9 ஆட்டங்களில் ஆடியதில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. எனவே இங்கிலாந்துக்கு எதிரான தங்களது முந்தைய மோசமான நிலையை மாற்ற இந்தியா எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தங்களது ஆதிக்கத்தை தொடர இங்கிலாந்து தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் கூறுகையில், '20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு கடைசியில் வங்காளதேசத்தில் நடக்க இருக்கிறது. அதுபோன்ற சீதோஷ்ண நிலை இங்கு நிலவுவதால் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக இந்த தொடர் முக்கியமானதாகும். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்வோம்' என்றார்.
இந்திய பெண்கள் அணியின் புதிய பயிற்சியாளர் அமோல் முஜூம்தார் கூறுகையில், 'நாங்கள் உலகக் கோப்பையை நோக்கி பயணிக்கிறோம். அதனால் ஒவ்வொரு தொடரும் முக்கியமானது. வீராங்கனைகளும் சாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நாம் அச்சமின்றி விளையாட வேண்டியது அவசியமாகும். பீல்டிங் மற்றும் உடல்தகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவற்றில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தொடருக்கு பிறகு நிறைய பயிற்சி முகாம் நடத்த உள்ளோம்' என்றார்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.
- 2008-ம் ஆண்டுக்கு பிறகு வங்காளதேச மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும்.
டாக்கா:
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சிலெட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோதி நேற்று அளித்த பேட்டியில், முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் விளையாடிய விதம் எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டது. ஆனால் இங்குள்ள சீதோஷ்ண நிலையில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு எப்படி ஆட வேண்டும் என்பதை அவர்கள் கற்றுத்தந்துள்ளனர்.
அடுத்த போட்டியில் அதை நாங்கள் சரியாக செய்வோம் என்று நம்புகிறேன். தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள். வெற்றியுடன் தாயகம் திரும்புவோம் என்று நம்புகிறேன் என்றார். 2008-ம் ஆண்டுக்கு பிறகு வங்காளதேச மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னையின் பல பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது.
- இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரை பற்றிதான் எனது எண்ணங்கள் உள்ளன.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்கள் மீதும் பற்று கொண்டவர். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்று விளையாடிய வார்னர், சென்னை அணியில் இடம் பெற்று விளையாடிய ரவீந்திர ஜடேஜா போன்று வாள் சுற்றி காண்பித்தார்.
புஷ்பா பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நடனம் ஆடி காண்பித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இப்படி இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் வார்னர்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னையின் பல பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரை பற்றிதான் எனது எண்ணங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம், தேவைப்பட்டால் உயரமான இடத்தில் பாதுகாப்பாக இருங்கள்.
நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால், நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவதையோ பரிசீலிக்கவும். நம்மால் முடிந்தவரை ஆதரவளிக்க ஒன்றுபடுவோம்.
இவ்வாறு வார்னர் கூறினார்.
- இரு அணிகளும் நாளை மோதுவது 104-வது ஒருநாள் போட்டியாகும்.
- இதுவரை நடந்த 103 போட்டியில் இங்கிலாந்து 52-ல், வெஸ்ட்இண்டீஸ் 45-ல் வெற்றி பெற்றுள்ளன.
ஆன்டிகுவா:
பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆன்டிகுவாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. அந்த அணி 326 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது.
வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மேலும் 2-வது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஹாரி புரூக், கிராவ்லி, பில்சால்ட் ஆகியோரும் பந்து வீச்சில் அட்சின்சன், ரீகான் அகமது ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
Blistering 48 off 28 balls from Romario Shepherd!
— FanCode (@FanCode) December 4, 2023
.
.#WIvENGonFanCode #WIvENG pic.twitter.com/OHdZrg5nzh
ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் இந்த ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் கேப்டன் ஷாய் ஹோப் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இரு அணிகளும் நாளை மோதுவது 104-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 103 போட்டியில் இங்கிலாந்து 52-ல், வெஸ்ட்இண்டீஸ் 45-ல் வெற்றி பெற்றுள்ளன. 6 ஆட்டம் முடிவு இல்லை.
- இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன.
- இந்தியா 3-ல் தென்கொரியா 2-ல் வெற்றி பெற்றுள்ளன.
கோலாலம்பூர்:
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இன்று தொடங்குகிறது. வருகிற 16-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஸ்பெயின், கனடா, தென்கொரியா ஆகிய அணிகளும் இந்த பிரிவில் உள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, மலேசியா அணிகளும் 'பி' பிரிவில் எகிப்து, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளும், 'டி' பிரிவில் பெல்ஜியம், நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவை இன்று எதிர்கொள்கிறது. இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3-ல் தென்கொரியா 2-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஸ்பெயினை 7-ந்தேதி யும், 3-வது போட்டியில் கனடாவை 9-ந்தேதியும் எதிர் கொள்கிறது. 2001, 2016-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தொடக்க நாளான இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ்-எகிப்து, ஜெர்மனி-தென்ஆப்பிரிக்கா, ஸ்பெயின்-கனடா, அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா, மலேசியா-சிலி அணிகள் மோதுகின்றன.






