என் மலர்
விளையாட்டு
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகிறது.
கரூர்:
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரை கவுரவிக்கும் வகையில் நீரஜ் பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிகுமார் வெள்ளிப்பதக்கமும், குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஆக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றியது.
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகிறது.

அந்தவகையில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் விதமாக கரூர் சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நீரஜ் என்ற பெயர் உள்ளவர்களுக்கு தலா 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் நீரஜ் என்ற பெயர் உள்ளவர்கள் எங்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும், ஆதார் அட்டை கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இச்சலுகை நேற்று முதல் தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 ஓவரில் 53 ரன்கள் என்ற நிலையில், நிஷாந்த் மற்றும் விவேக் அதிரடியாக விளையாடி திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்தது. சுதர்சன் 40 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் குர்ஜப்னீத் சிங் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்தது. சுரேஷ் லோகேஷ்வர், ஹரி நிஷாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுரேஷ் லோகேஷ்வர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணி பாரதி 1 ரன்னிலும், ஸ்ரீனிவாசனம் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஹரி நிஷாந்த் உடன் ஆர். விவேக் ஜோடி சேர்ந்தார். நிஷாந்த் நிதானமாக விளையாட, ஆர். விவேக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் சிக்சராக பறக்கவிட்டார்.
இதனால் இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் வீறுநடை போட்டது. சிறப்பாக விளையாடிய நிஷாந்த் 44 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16.4 ஓவரில் 138 ரன்கள் எடுத்திருந்தது. நிஷாந்த்- விவேக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மோகித் ஹரிஹரன் களம் இறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். ஆர். விவேக் 25 பந்தில் அரைசதம் அடித்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் 17.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. விவேக் 52 ரன்களுடனும், சுவாமிநாதன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியுள்ளது. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் தகுதிச்சுற்று 2-ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது.
சாய் சுதர்சன் அரைசதம் அடித்த போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கோவை கிங்ஸ் அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவராலும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க இயலவில்லை. கங்கா ஸ்ரீதர் ராஜூ 17 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 15 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
3-வது வீரராக களம் இறங்கிய சாய் சுதர்சன் சிறப்பான விளையாடினார். ஆனால் அவருக்கு முகிலேஷ் (13 பந்தில் 17 ரன்), வெங்கடராமன் (7 பந்தில் 1 ரன்), ஷாருக் கான் (22 பந்தில் 28 ரன்) ஆகியோரால் சிறந்த முறையில் ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை. இதனால் கோவை கிங்ஸ் அணியின் ஸ்கோர் 150 ரன்னைத் தாண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.
சாய் சுதர்சன் 19-வது ஓவரின் 4-வது பந்தை இரண்டு ரன்னிற்கு விரட்டி 36 பந்தில் அரைசதம் அடித்தார். 19-வது ஓவரில் கோவை கிங்ஸ் அணிக்கு இரண்டு சிக்சர்கள் கிடைக்க, 17 ரன்கள் அடித்தது. இதனால் ஸ்கோர் 138 ரன்களானது.
கடைசி ஓவரை குர்ஜப்நீத் சிங் வீசினார். மிகவும் சிறப்பாக வீசி, கோவை அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை. முதல் நான்கு பந்தில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஐந்தாவது பந்தில் அபிஷேக் தன்வரை (7 பந்தில் 13 ரன்) வீழ்த்தினார். கடைசி பந்தில் சுதர்சன் பவுண்டரி அடிக்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்தது. சுதர்சன் 40 பந்தில் 3 பவுணடரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் குர்ஜப்னீத் சிங் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாமல் களம் இறங்க வாய்ப்புள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டரசன், ஸ்டூவர்ட் பிராட் இடம் பிடித்திருந்தார்கள். இருவரும்தான் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் முக்கிய தூண்கள்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் இந்தியா 1 விக்கெட்டை இழந்தது. அந்த விக்கெட்டை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார். இருவரும் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள்.
நாளை லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டபோது இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நாளைய போட்டியில் இருவரும் களம் இறங்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருவரும் களம் இறங்காவிட்டால், ஒல்லி ராபின்சன்தான் பந்து வீச்சுக்கு தலைமை தாங்குவார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாமல் இங்கிலாந்து அணி களம் இறங்கினால், அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற மீராபாய் சானு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுடெல்லி:
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்கிற பெருமையையும் மீராபாய் சானு பெற்றுள்ளார்.
மீராபாய் சானு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பு குறித்து மீராபாய் சானு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

இன்று காலையில் சச்சின் சாரை நான் சந்தித்தேன். ஊக்கமும், ஞானமும் நிறைந்த அவரின் வார்த்தைகள் என்றும் என்னுடன் நிறைந்திருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து வெற்றி பெற்றதால், திண்டுக்கல் அணியும் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 7 மணிக்கு போடப்பட்டது.
இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள் விவரம்:
1. ஹரி நிஷாந்த் (கேப்டன்), 2. மணி பாரதி, 3. லோகேஷ்வர் (கீ), 4. சுவாமிநாதன், 5. சுதீஷ், 6. சிலம்பரசன், 7. விவேக், 8. குர்ஜப்னீத் சிங், 9. மோகித் ஹரிகரன், 10. விக்னேஷ், 11. ஸ்ரீனிவாசன்
கோவை கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்:
1. அஜித் ராம், 2. ஷாருக் கான் (கேப்டன்), 3. ஆர். திவாகர், 4. அபிஷேக் தன்வர், 5. சுரேஷ் குமார் (கீ), 6. கங்கா ஸ்ரீதர் ராஜூ, 7. முகிலேஷ், 8. செல்வகுமரன், 9. சாய் சுதர்சன், 10. யுதீஸ்வரன், 11. அஷ்வின் வெங்கட்ராமன்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டு இன்னிங்சிலும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி முத்திரை படைத்தார் ஷர்துல் தாகூர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் கடைசி நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்த போட்டியில் இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் சிறப்பாக பந்து வீசினார். இரண்டு இன்னிங்சிலும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
நாளை லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஷர்துல் தாகூருக்கு கால்பகுதியில் காயம் ஏற்பட்டது. ஆகவே, நாளைய போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஷர்துல் தாகூருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளருடன் இந்தியா களம் இறங்குமா? அல்லது அஷ்வினை ஆடும் லெவனில் சேர்த்து இரண்டு சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இன்ஸ்டாகிராமில் நீரஜ் சோப்ராவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். தகுதிச்சுற்றில் முதல் வாய்ப்பிலேயே அதிக தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
தடகளத்தில் இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. இதனால் நீரஜ் சோப்ரா மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் தன்னம்பிக்கையுடன் இருந்த நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே அசுரத்தனமாக 87.03 மீட்டர் தூரம் வீசி அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார். 2-வது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரத்திற்கு எறிந்தார்.
மற்ற வீரர்களால் 87 மீட்டர் தூரத்தை தொடமுடியவில்லை. இதனால் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே, யார் இந்த நீரஜ் சோப்ரா என இணைய தளத்தில் அனைவரும் தேட ஆரம்பித்தினர்.
ஒலிம்பிக்கில் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் நீரஜ் சோப்ராவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரமாக இருந்தது. தங்கப்பதக்கம் வென்றபின் அதன் எண்ணிக்கை 32 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஐ.பி.எல். தொடரின் இரண்டாவது பாதி தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கி மே 2-ந்தேதி வரை நடைபெற்றது. அதன்பின் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட, ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட மீதமுள்ள போட்டிகள் அடுத்த மாதம் 19-ந்தேதியில் இருந்து அக்டோபர் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் இங்கிலாந்து தொடர் முடிந்த உடன் அப்படியே ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிடுவார்கள்.
8 அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல வேண்டும். முன்னதாகவே சென்றால்தான் அங்குள்ள சீதோஷ்ணநிலைக்கு ஏற்றபடி அவர்களை மாற்றிக்கொண்டு சிறப்பாக விளையாட முடியும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் டோனி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை மறுதினம் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கான்பெர்ரா:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியில், 1989 முதல் 2006 ஆம் ஆண்டு வரை முக்கிய ஆல் ரவுண்டர்களில் ஒருவராக விளங்கியவர் கிறிஸ் கெய்ன்ஸ். 62 டெஸ்ட் போட்டி, 215 ஒருநாள் போட்டிகள், இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்றுள்ள கெயின்ஸ் பல்வேறு போட்டிகளில் நியூசிலாந்து வெல்ல காரணமாக விளங்கியவர்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், லாரி பணிமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த கிறிஸ் கெயின்ஸ், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் கான்பெர்ரா மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு ஏற்கனவே சில அறுவை சிகிச்சைக்கள் செய்யப்பட்டு உள்ளதால், இப்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவர் உடல் நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது பந்து வீச்சில் பல்வேறு மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறார் என இங்கிலாந்து வீரர் பாராட்டி உள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் கூறியதாவது:-
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிடம் அற்புதமான திறமைகள் உள்ளன. அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாக உள்ளார்.
ஐ.பி.எல்., இந்தியாவுக்கான ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரை பார்த்து வருகிறோம். அனைத்திலும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் தனது பந்து வீச்சில் பல்வேறு மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறார் என்றார்.
நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்றது.
கடைசி நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நழுவிப் போனதுடன் போட்டி டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இரண்டு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட ஓவர்களை வீசி முடிக்காமல் இருந்தது தெரியவந்தது. இதனால் இரண்டு அணி வீரர்களுக்கும் தலா 40 சதவீதம் (சம்பளத்தில் இருந்து) அபராதம் விதித்த ஐசிசி, சாம்பியன்ஸ்டிராபி தொடருக்கான புள்ளிகளில் இரண்டை குறைத்துள்ளது.






