என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் தயாராகி வருகின்றன.
    லண்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.

    நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இப்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும். முதல் டெஸ்டில் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. வேகப்பந்து வீச்சில் பும்ரா, முகமது‌ஷமி ஆகியோர் அசத்தினர்.

    இதில் பும்ரா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டும் வீழ்த்தி மிரட்டினார். அதே போல் முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் உள்ளனர்.

    இதில் ‌ஷர்துல் தாகூர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஒருவேளை அவர் நாளைய டெஸ்டில் இடம்பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா இடம் பெறலாம்.

    பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    விராட்கோலி

    முதல் டெஸ்டில் கேப்டன் விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும், ரகானே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அவர்கள் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் ரன்களை குவித்தால் இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும்.

    அதே போல் விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பண்ட்டும் ரன்களை சேர்க்க வேண்டும். முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட உத்வேகத்துடன் இந்தியா களம் இறங்கும்.

    இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் ஜோரூட் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் முதல் டெஸ்டில் சதம் அடித்தார். முதல் இன்னிங்னிசில் 64 ரன்னும் 2-வது இன்னிங்சில் 109 ரன்னும் எடுத்தார்.

    மற்ற வீரர்களில் பேர்ஸ்டோவ், சாம்கர்ரன் சிறிது தாக்கு பிடித்து விளையாடினார்கள். இதனால் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் முன்னேற்றம் காண கவனம் செலுத்த முயற்சிக்கும்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சன், ராபின்சன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், பயிற்சியின் போது காயம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் நாளைய டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்.

    இதற்கிடையே 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் மொய்ன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று முன்னிலை பெற இரு அணிகளும் முயற்சிக்கும்.
    திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய சேப்பாக் அணியின் ராதாகிருஷ்ணன் 54 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று தகுதிச்சுற்று-1 போட்டி நடைபெற்றது. இதில் ரூபி திருச்சி வாரியர்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களம் இறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சேப்பாக்கம் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. ராதாகிருஷ்ணன் 82 ரன்னும், சதீஷ் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. 44 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    நிதிஷ் ராஜகோபாலுடன் ஜோடி சேர்ந்த ஆதித்ய கணேஷ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய ராஜகோபாலும், ஆதித்ய கணேஷும் அரை சதமடித்து அசத்தினர். நிதிஷ் ராஜகோபால் 55 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.

    கடைசி 2 ஓவரில் திருச்சி அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது.கடைசி ஓவரின் 5வது பந்தில் வெற்றியை ருசித்தது திருச்சி அணி.

    இறுதியில், திருச்சி அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆதித்ய கணேஷ் 66 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் திருச்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் வெளியேறுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 13-ம் தேதி மோதுகிறது.
    ராதாகிருஷண்ன் அரைசதம் அடிக்க திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று தகுதிச்சுற்று-1 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி வாரியர்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கவுசிக் காந்தி, என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை சுனில் சாம் வீசினார். ஜெகதீசன் முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார்.

    2-வது ஓவரை சரவணன் குமார் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் கவுசிக் காந்தி க்ளீன் போல்டானார். அவர் 3 பந்தில் 1 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து எஸ். ராதாகிருஷ்ணன் களம் இறங்கினார். இந்த ஓவரில் சேப்பாக் அணிக்கு 2 ரன்களே கிடைத்தது.

    3-வது ஓவரை சுனில் சாம் வீசினார். இந்த ஓவரில் ராதாகிருஷண்ன் ஒரு பவுண்டரி அடித்தார். 4-வது ஓவரை சரவணன் குமார் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் என். ஜெகதீசன் க்ளீன் போல்டானார். ஜெகதீசன் 13 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.  3-வது விக்கெட்டுக்கு ராதாகிருஷ்ணன் உடன் சசிதேவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சேப்பாக் அணியை சரிவில் இருந்து மீட்டது.

    பவர் பிளேயின் கடைசி ஓவரான 6-வது ஓவரை சரவணன் குமார் வீசினார். இந்த ஓவரில் ராதாகிருஷ்ணன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 18 ரன்கள் கிடைக்க  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பவர் பிளேயில் 2 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ரன் விகிதத்தில் வேகம் குறைந்தது. 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்தது. ராதாகிருஷ்ணன் அரைசதம் நோக்கிச் சென்றார். அவருக்கு சசிதேவ் துணையாக இருந்தார். 12.5 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. மதிவாணன் பந்தில் சசிதேவ் 29 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    2 விக்கெட் வீழ்த்திய சரவணன் குமார்

    4-வது விக்கெட்டுக்கு ராதாகிருஷ்ணன் உடன் ஆர். சதீஷ் ஜோடி சேர்ந்தார். 14-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 35 பந்தில் அரைசதம் அடித்தார் ராதாகிருஷ்ணன். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.

    சேப்பாக் அணி 16-வது ஓவரில் 8 ரன்களும், 17-வது ஓவரில் 10 ரன்களும், 18-வது ஓவரில் 9 ரன்களும் சேர்த்தது. 19-வது ஓவரில் 9 ரன்களும் சேர்த்தது.  இதனால் 19 ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 142 ரன்கள் சேர்த்தது.

    கடைசி ஓவரில் 11 ரன்கள் கிடைக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. ராதாகிருஷ்ணன் 54 பந்தில் 82 ரன்களும், சதீஷ் 22 பந்தில் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் முதலாவது தகுதிச்சுற்றில் திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் திருச்சி வாரியர்ஸ் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 9 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், கோவை கிங்ஸ் 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் 2 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருச்சி வாரியர்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இரு அணி வீரர்கள் விவரம்:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கேப்டன்), என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ்,  ராதாகிருஷ்ணன், சசிதேவ்,  ஆர்.சதீஷ்,  சாய் கிஷோர், ஹரிஷ் குமார், சோனு யாதவ், எம்.சித்தார்த், தேவ் ராகுல்

    திருச்சி வாரியர்ஸ்: சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், முகமது அத்னன்கான், ஆதித்யா கணேஷ், அந்தோணி தாஸ், ரஹில் ஷா (கேப்டன்), சரவணகுமார், எம்.மதிவாணன், பொய்யாமொழி, சுனில் சாம்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் விராட் கோலி, சமீப காலமாக ரன்கள் குவிக்க திணறி வருகிறார்.
    கிரிக்கெட்டில் தற்போதைய நிலையில் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார் என்றால் சற்றென்று நினைவுக்கு வருபவர்கள் விராட் கோலி , கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர்தான். இதில் இந்திய அணியின் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

    மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். களம் இறங்கி 20 ரன்களை தாண்டிவிட்டால் சதம் காணாமல் திரும்பமாட்டார். பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய சாதனைகளில் பெரும்பாலான சாதனைகளை முறியடிக்கக் கூடியவர் என்று கருதப்படுபவர். குறிப்பாக சச்சின் தெண்டுல்கர் அடித்துள்ள 100 சதங்களை கடக்க விராட் கோலியால் மட்டுமே முடியும் என்ற விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    விராட் கோலி 93 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களுடன் 7547 ரன்களும், 254 ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களுடன் 12,169 ரன்களும், 90 டி20 போட்டிகளில் 3150 ரன்களும் அடித்துள்ளார்.

    ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி சமீப காலமாக ரன்கள் குவிக்க திணறி வருகிறார். அவர் சதம் கண்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது.

    விராட் கோலி

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலி டக்அவுட் ஆவது அபூர்வம். ஆனால் தற்போது டக்அவுட் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 156 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். முதல் 129 இன்னிங்ஸ்களில் 7 முறை டக்அவுட் ஆகியுள்ளார். ஆனால் அடுத்த 27 இன்னிங்ஸ்களில் 6 முறை டக்அவுட் ஆகியுள்ளார். இதில் இருந்தே விராட் கோலியின் சமீப பேட்டிங் திறனை அறிந்து கொள்ள முடியும்.
    பார்சிலோனா அணிக்காக 21 ஆண்டுகள் விளையாடிய லயோனல் மெஸ்சி, அந்த கிளப்பில் இருந்து வெளியேறி தற்போது பிஎஸ்ஜி கிளப்பில் இணைய உள்ளார்.
    கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி கருதப்படுகிறார். இவர் ஆரம்ப காலத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். ஒரே கிளப்பிற்கான அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சனை தொடர்பாக மெஸ்சியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியவில்லை என பார்சிலோனா அணி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.

    இந்த நிலையில் 34 வயதான மெஸ்சி, இரண்டு வருடத்திற்கான ஒப்பந்தம் தொடர்பான தகவலை பிஎஸ்ஜி-யிடம் இன்று பெற்றுள்ளார். இதனால் பிரான்சின் தலைசிறந்த கிளப் அணியான பிஎஸ்ஜி (பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன்) அணியுடன் இரண்டு வருடம் விளையாட ஒப்பந்தம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே மேலும் இரண்டு கிளப் அணிகள் மெஸ்சியை ஒப்பந்தும் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மலிங்காவிற்கு அடுத்தப்படியாக 100 விக்கெட்டுகள் சாய்த்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷாகிப் அல் ஹசன்.
    வங்காளதேசம்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் சேர்த்தது. பின்னர் 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆஸ்திரேலியா 62 ரன்கள் எடுப்பதற்குள் ஆல்-அவுட் ஆனது. 13.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது.

    ஆஸ்திரேலியாவை 62 ரன்னில் சுருட்டுவதற்கு ஷாகிப் அல் ஹசனின் சுழற்பந்து வீச்சும் முக்கிய காரணம். அவர் 3.4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஷாகிப் அல் ஹசன் 102 விக்கெட்டுகள் சாய்த்தார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 107 விக்கெட்டுகள் கைப்பற்றி, 100 விக்கெட்டுகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையுடன் முதலிடத்தில் உள்ளார்.

    ஷாகிப் அல் ஹசன்

    தற்போது ஷாகிப் அல் ஹசன் 102 விக்கெட்டுகளுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். டிம் சவுத்தி 99 விக்கெட்டுகள், ஷாகித் அப்ரிடி 98 விக்கெட்டுகள், ரஷித் கான் 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பதக்கத்திற்கான வாய்ப்பை இழந்தாலும், இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 120 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அதுபோக ஒரு தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா. பெரும்பாலான வீரர்- வீராங்கனைகள் பதக்கத்தை வெல்ல முடியவில்லை என்றாலும், தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

    அப்படி வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக். கோல்ஃப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் மூன்று சுற்றுகள் முடிவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் 2-வது இடத்தில் இருந்தார். இதனால் எப்படியும் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், 4-வது சுற்றில் சற்று பின்தங்கினார். இதனால் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பதக்கத்துக்கான வாய்ப்பை இழந்தார். கோல்ஃப் போட்டி காலை 4 மணிக்கு தொடங்கியது. என்றாலும் இந்திய மக்கள் டி.வி.யை ஆன் செய்து போட்டியை பார்த்து ரசித்தனர்.

    இதை அதிதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து அதிதி அசோக் கூறுகையில் ‘‘இந்தியாவின் பெரும்பாலான மக்கள் காலையிலேயே எழுந்து, கோல்ஃப் போட்டியை பார்ப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது சிறந்த உணர்வு. ஒலிம்பிக்ஸ் கோல்ஃப் போட்டிக்கு ஏராளமான ரசிகர்களை கொண்டு வந்துள்ளது’’ என்றார்.
    நாட்டிங்காம் டிரென்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடாத நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான அணியில் மொயீன் அலியை இணைத்துள்ளது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காம் டிரென்ட்பிரிட்ஜியில் கடந்த 4-ந்தேதி முதல் 8-ந்தேதி (நேற்றுமுன்தினம்) வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறும் நிலையில் இருந்தது. கடைசி நாள் ஆட்டம் முழுவதும் மழையால் நடைபெறாமல் போனதால், போட்டி டிராவில் முடிந்தது.

    2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடியது. லார்ட்ஸ் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. ஜடேஜா இடம் பிடித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரோஸ் டெய்லர், பின் ஆலென் மற்றும் ஆல்-ரவுண்டர் கோலின்டி கிராண்ட்ஹோம் ஆகியோர் இடம்பெறவில்லை. 34 வயதான சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்லே சேர்க்கப்பட்டுள்ளார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    7-வது 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்வர் 14-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.

    20 ஓவர் உலக கோப்பை மற்றும் இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார்.

    இதில் பேட்ஸ்மேன்கள் ரோஸ் டெய்லர், பின் ஆலென் மற்றும் ஆல்-ரவுண்டர் கோலின்டி கிராண்ட்ஹோம் ஆகியோர் இடம்பெறவில்லை. 34 வயதான சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்லே சேர்க்கப்பட்டுள்ளார்.

    மேலும் சுழற்பந்து வீச்சாளர்களான மிட்செல் சான்ட்னெர், சோதி ஆகியோரும் உள்ளனர். போட்டி நடக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள மைதான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கேன் வில்லியம்சன் (கேப்டன்) டெவன் கான்வே, மார்டின் குப்தில், கிளென் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜிம்மி நீ‌ஷம், மிட்செல் சான்ட்னெர், டாட் ஆஸ்லே, சோதி, ஜேமிசன், போல்ட் பெர்குசன், டிம் சவுத்தி, ஆடம் மில்னே.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.
    டாக்கா:

    ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முன்னதாக நடைபெற்ற நான்கு போட்டிகளில் வங்காளதேசம் மூன்றிலும், ஆஸ்திரேலியா ஒன்றிலும் வென்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நயீம் 23  ரன் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லிஸ், கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி விரைவில் ஆல் அவுட்டானது.

    விக்கெட் வீழ்த்திய  ஷகிப் ஹல் ஹசன்

    ஆஸ்திரேலிய அணி 13.4 ஓவரில் 62 ரன்னில் பரிதாபமாக சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் வேட் 22 ரன்கள் எடுத்தார். இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் சார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும், மொகமது சைபுதின் 3 விக்கெட்டும், நசும் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்காளதேசம் 4-1 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஷகிப் அல் ஹசன் கைப்பற்றினார்.
    விளையாட்டு வீரர்களை வரவேற்க அவர்களின் குடும்பத்தினர், ரசிகர்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றது. ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர்-வீராங்கனைகள் இன்று நாடு திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் பதக்கம் வென்ற அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    நாடு திரும்பிய வீரர்கள்

    பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களை வரவேற்க அவர்களின் குடும்பத்தினர், ரசிகர்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியிலும் திரண்டிருந்த ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 

    பதக்கம் வென்ற வீரர்கள், வரவேற்பைத் தொடர்ந்து பேருந்துகளில் ஏறி, விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். 
    ×