என் மலர்
செய்திகள்

விவேக்
நிஷாந்த், விவேக் அதிரடியால் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்
10 ஓவரில் 53 ரன்கள் என்ற நிலையில், நிஷாந்த் மற்றும் விவேக் அதிரடியாக விளையாடி திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்தது. சுதர்சன் 40 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் குர்ஜப்னீத் சிங் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்தது. சுரேஷ் லோகேஷ்வர், ஹரி நிஷாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுரேஷ் லோகேஷ்வர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணி பாரதி 1 ரன்னிலும், ஸ்ரீனிவாசனம் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஹரி நிஷாந்த் உடன் ஆர். விவேக் ஜோடி சேர்ந்தார். நிஷாந்த் நிதானமாக விளையாட, ஆர். விவேக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் சிக்சராக பறக்கவிட்டார்.
இதனால் இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் வீறுநடை போட்டது. சிறப்பாக விளையாடிய நிஷாந்த் 44 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16.4 ஓவரில் 138 ரன்கள் எடுத்திருந்தது. நிஷாந்த்- விவேக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மோகித் ஹரிஹரன் களம் இறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். ஆர். விவேக் 25 பந்தில் அரைசதம் அடித்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் 17.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. விவேக் 52 ரன்களுடனும், சுவாமிநாதன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியுள்ளது. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் தகுதிச்சுற்று 2-ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது.
Next Story






