என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசியாவுக்கு வெளியே அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் விரேந்தர் சேவாக்கை, லோகேஷ் ராகுல் சமன் செய்தார்.

    லார்ட்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்சில் தொடங்கியது. டாஸ் ஜெயித்து இங்கிலாந்து, பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஒரு மணி நேரம் மெதுவாக ஆடினர்.

    பின்னர் ரோகித் சர்மா வேகமாக ரன் சேர்க்க லோகேஷ் ராகுல் மிகவும் நிதானமாக விளையாடினார். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பந்து வீச்சா ளர்கள் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

    ரோகித் சர்மா-லோகேஷ் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 198 பந்தில் 100 ரன்னை தொட்டனர். தொடக்க ஜோடி 44-வது ஓவரில்தான் பிரிந்தது. ரோகித்சர்மா 83 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடக்க ஜோடி 126 ரன் சேர்த்தது. இதன் மூலம் ஆசியாவுக்கு வெளியே இந்திய தொடக்க ஜோடி 10 ஆண்டுகளுக்கு பிறகு 100 ரன்னுக்கு மேல் சேர்த்துள்ளது.

    இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் செஞ்சூரியனில் நடந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 2-வது இன்னிங்சில் தொடக்க ஜோடி சேவாக்-கவுதம் காம்பீர் 137 ரன் சேர்த்து இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசியாவுக்கு வெளியே இந்திய தொடக்க ஜோடி 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது.

    சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் தனது 6-வது சதத்தை அடித்தார்.

    ஆசியாவுக்கு வெளியே அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் சேவாக்கை, லோகேஷ் ராகுல் சமன் செய்தார். இருவரும் 4 சதங்கள் அடித்துள்ளனர். முதல் இடத்தில் சுனில் கவாஸ்கர் 15 சதங்களுடன் உள்ளார்.

    லார்ட்ஸ் டெஸ்டில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 276 ரன் எடுத்திருந்தது. புஜாரா 9 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    லோகேஷ் ராகுல் 127 ரன்னிலும், ரகானே ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்க ரவிசாஸ்திரி விரும்பவில்லை என்றும் அவர் பதவி விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வருபவர் ரவிசாஸ்திரி. அவர் 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் வருகிற 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடர் வரை இருக்கிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்க ரவிசாஸ்திரி விரும்பவில்லை என்றும் அவர் பதவி விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அதுபற்றி அவர் கிரிக்கெட் வாரியத்திடம் தகவல் தெரிவித்து விட்டதாகவும் ஊடங்கங்களில் செய்தி வெளியானது.

    இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். அவர்கள் தற்போது இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி முடியும் வரை அங்கு தங்கியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைவதை அடுத்து ரவிசாஸ்திரியுடன் கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, “கிரிக்கெட் வாரிய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் துணைத் தலைவர் லண்டனுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணியினருடன் பல்வேறு வி‌ஷயங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றி விவாதிப்பார்கள்.

    பயிற்சியாளர் பதவியில் ரவிசாஸ்திரி தொடர விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி இருப்பதால் அதுபற்றி விவாதிக்கப்படும். ஆனால் அதுபற்றி மிகவும் முன் கூட்டியே வெளியே பேசி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை முடிவு செய்யும் தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் முதல்அணியாக, திருச்சி வாரியர்ஸ் இறுதிப்போட்டியை எட்டிவிட்டது. மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கவுசிக் காந்தி தலைமையிலான நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹரிநிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை இன்றிரவு (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது.

    லீக் சுற்று முடிவில் 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலாவது தகுதி சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியிடம் போராடி தோல்வியை தழுவியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் கவுசிக் காந்தி, விக்கெட் கீப்பர் ஜெகதீசன் இருவரும் 4-வது ஓவருக்குள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இளம் வீரர் ராதாகிருஷ்ணன் 82 ரன்கள் சேர்த்து 150 ரன்களை கடக்க வைத்தார். இருப்பினும் இந்த ஸ்கோர் திருச்சியை மடக்குவதற்கு போதுமானதாக இல்லை.

    இறுதிசுற்றுக்கு தகுதி பெற மற்றொரு வாய்ப்பு பெற்றுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முந்தைய தவறுகளை சரி செய்து முழு திறமையை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. மிடில் வரிசையில் ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆல்-ரவுண்டர்கள் சதீஷ், ஹரிஷ்குமார் ஆகியோர் நம்பிக்கை தந்தாலும், தொடக்க ஜோடி கவுசிக் காந்தி, ஜெகதீசன் இருவரும் அபாரமான தொடக்கம் அமைப்பது அவசியம். அப்போது தான் பெரிய ஸ்கோர் குவிக்க முடியும். இதே போல் சாய் கிஷோர், சித்தார்த் சுழலில் மிரட்ட வேண்டியது முக்கியம். ஏற்கனவே லீக் சுற்றில் திண்டுக்கல் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதால் கில்லீஸ் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணும்.

    புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த திண்டுக்கல் அணி வெளியேற்றுதல் சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை விரட்டியது. அதில் ஹரிநிஷாந்த், ஆர்.விவேக் இருவரும் அரைசதம் அடித்தனர். ஹரிநிஷாந்த் ( 8 ஆட்டத்தில் ஆடி 19 சிக்சருடன் 312 ரன்), விவேக் (3 அரைசதத்துடன் 233 ரன்), மணி பாரதி (187 ரன்) ஆகியோர் அந்த அணியில் நல்ல பார்மில் உள்ளனர். லீக்கில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆயத்தமாகிறார்கள்.

    இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோல்டர், செலஸ் தலா 3 விக்கெட், கீமர் ரோச் 2 விக்கெட் வீழ்த்தினர்.
    ஜமைக்கா:

    பாகிஸ்தான் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 4 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    விக்கெட் வீழ்த்திய செலசை பாராட்டும் சக வீரர்கள்

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் பஹாத் ஆலம் அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார்.  பஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடந்து ஆடியது. முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுக்கு 2 ரன்களை எடுத்துள்ளது.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் தரவரிசையில் பும்ரா 10 இடங்கள் ஏற்றம் கண்டு 9-வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
    துபாய்:

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று முன்தினம் வெளியிட்டது.

    இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (901 புள்ளிகள்) முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித் (891 புள்ளிகள்) 2-வது இடத்திலும், லபுஸ்சேன் (878 புள்ளிகள்) 3-வது இடத்திலும் தொடருகின்றனர்.

    நாட்டிங்காமில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் மற்றும் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் (846 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் டக்-அவுட் ஆன இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (791 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா (764 புள்ளிகள்) 6-வது இடத்திலும், ரிஷப் பண்ட் (746 புள்ளிகள்) 7-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஜஸ்பிரித் பும்ரா

    பவுலர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் (908 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (856 புள்ளிகள்) 2-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் அதிகரித்து 7-வது இடத்தையும், இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் ஏற்றம் கண்டு 9-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
    இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து அசத்தியது.
    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்தியா 18.4 ஓவரில் 46 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. 

    பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். ஆனால் கே.எல். ராகுல் நிதானமாக விளையாடினார். அணியின் ஸ்கோர் 126 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது.

    83 ரன்னில் அவுட்டான ரோகித் சர்மா

    அடுத்து இறங்கிய புஜாரா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடினார்.
    மறுமுனையில் நின்று ஆடிய கே.எல்.ராகுல்  சதமடித்து அசத்தினார். 3வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் - விராட் கோலி ஜோடி 117 ரன்களை சேர்த்தது.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 276 ரன்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 2 விக்கெட், ராபின்சன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 83 ரன்னில் வெளியேறினார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ததால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணித்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்டூவர்ட் பிராட் இல்லாததால் ஆலி ராபின்சன் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து புதுப்பந்தில் பந்து வீசினார்.

    ஆண்டர்சனின ஸ்விங், ராபின்சனின் வேகம் ஆகியவற்றை சமாளித்து ரோகித் சர்மா- கே.எல். ராகுல் ஜோடி விளையாடியது. ரன்கள் மளமளவென உயரவில்லை என்றாலும் விக்கெட் இழக்காமல் தாக்குப்பிடித்து விளையாடினர். இதனால் ஜோ ரூட்டின் கணிப்பு தவறானது.

    இந்தியா 18.4 ஓவரில் 46 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரோகித் சர்மா ஆட்டத்தில் வேகம் காட்டினார்.

    ரோகித் சர்மா- கே.எல். ராகுல்

    முதல் 66 பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா 83 பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால் கே.எல். ராகுல் நிதானமாக விளையாடினார். 123 பந்தில் அரைசதம் கடந்த இந்தியா, 198 பந்தில் சதத்தை கடந்தது.

    அணியின் ஸ்கோர் 126 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் க்ளீன் போல்டானார். ரோகித் சர்மா ஆட்டமிழக்கும்போது கே.எல். ராகுல் 118 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்தார். ரோகித் சர்மா- கே.எல்.ராகுல் ஜோடி 43.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது பாராட்டுக்குரியது.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா சமீபகாலமாக தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார்.
    இந்திய டெஸ்ட் அணி வெளிநாடுகளுக்கு குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சென்றால் தொடக்க வீரர்கள் நிலைத்து நின்று விளையாடுவது மிகவும் சிரமம். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஸ்விங் ஆகும் புதுப்பந்தை திறமையாக எதிர்த்து விளையாட முடியாமல் விரைவாக ஆட்டமிழந்து விடுவார்கள்.

    அதன்பின் 10 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து நின்றாலே, அது மிகப்பெரிய விசயமாக பார்க்கப்படும். ஆனால் ரோகித் சர்மாக வந்த உடன் தொடக்க ஜோடி நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    2018-ம் ஆண்டு இந்திய தொடக்க ஜோடியின் சராசரியாக 7.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்துள்ளனர். 2019-ல் அது  குறைந்து 6.1 ஆக இருந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020-ல் கிரிக்கெட் மிகப்பெரிய அளவில் விளையாடப்படவில்லை. அப்போது 3.3 ஆக இருந்துள்ளது.

    ரோகித் சர்மா, ஷுப்மான் கில்

    ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கியதில் இருந்து 2021-ல் சராசரி 19.1 ஓவராக உயர்ந்துள்ளது. ரோகித் சர்மா ஸ்கோர் அதிக அளவில் அடிக்கவில்லை என்றாலும், நீண்ட நேரம் களத்தில் நின்று தாக்குப்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இஷாந்த் சர்மா ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.
    லார்ட்ஸ்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர்க்கு பதிலாக இஷாந்த் சர்மாவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. கேஎல் ராகுல், 3. புஜாரா 4. விராட் கோலி 5. ரகானே 6. ரிஷப் பண்ட் 7. ஜடேஜா 8. சிராஜ் 9. பும்ரா 10. இஷாந்த் சர்மா 11. முகமது சமி

    இங்கிலாந்து அணியின் வீரர்கள் விவரம்:-

    1. ரோரி பர்ன்ஸ் 2. டாம் சிப்லி 3. ஹசீப் ஹமீது 4. ஜோ ரூட் 5. பேர்ஸ்டோ 6. ஜோஸ் பட்லர் 7. மொயீன் அலி 8. சாம் கரன் 9. ஆலி ராபின்சன் 10. மார்க் வுட் 11. ஆண்டர்சன்
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நாளை நடக்கவுள்ள குவிலிபையர் 2 ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல். ) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் கடந்த 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் திருச்சி வாரியர்ஸ் முதல் இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3-வது இடத்தையும், கோவை கிங்ஸ் 4-வது இடத்தையும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் , திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் முறையே முறையே 5 முதல் 8-வது இடங்களைப் பிடித்து வெளியேறின.

    பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் 10-ந் தேதி தொடங்கியது. அன்று நடந்த ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் திருச்சி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    எலிமினேட்டர் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. தோல்வி அடைந்த கோவை அணி வெளியேறியது.

    ‘குவாலிபையர் 2’ ஆட்டம் நாளை (13-ந் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. திருச்சி வாரியர்சுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    2 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. திண்டுக்கல் அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்து விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. 

    நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற தருணத்தை டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் நிகழ்ந்த 10 ஆச்சரியமான தருணங்களில் ஒன்றாக உலக தடகள சம்மேளனம் அங்கீகரித்து உள்ளது.

    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்தார். 121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

    இதையொட்டி அவருக்கு நாடுமுழுவதும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பரிசுகளும் குவிந்து உள்ளன. நாடு திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அவர் தங்க பதக்கம் வென்ற தினத்தை (ஆகஸ்டு 7) தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது.

    இந்தநிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் நீரஜ் சோப்ரா உலக தர வரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவர் 14 இடங்கள் ஏற்றம் கண்டு உள்ளார்.

    இதற்கு முன்பு 16-வது இடத்தில் இருந்தார். ஒலிம்பிக்கில் அவர் 87.58 மீட்டர் தூரம் எறிந்ததன் மூலம் அவர் 2-வது இடத்தை பிடித்து உள்ளார். அவர் 1,315 ரேங்கிங் புள்ளிகளை பெற்று உள்ளார்.

    ஜெர்மனியை சேர்ந்த ஜோகனஸ் வெக்டர் 1,391 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

    இதற்கிடையே நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற தருணத்தை டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் நிகழ்ந்த 10 ஆச்சரியமான தருணங்களில் ஒன்றாக உலக தடகள சம்மேளனம் அங்கீகரித்து உள்ளது

    இரண்டாவது டெஸ்டில் ஷர்துல் தாகூர்க்கு பதிலாக அஸ்வின் இடம் பெறுவாரா? அல்லது 4-வது வேகப்பந்து வீரர் என்ற முறையில் இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

    லார்ட்ஸ்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணி இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் மழையால் அது பறிபோனது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இந்த டெஸ்டில் காயம் காரணமாக வேகப்பந்து வீரர் ‌ஷர்துல் தாகூர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சுழற்பந்து ஆல் ரவுண்டரான அஸ்வின் இடம் பெறுவாரா? அல்லது 4-வது வேகப்பந்து வீரர் என்ற முறையில் இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

    இதுதொடர்பாக அணியின் கேப்டன் விராட் கோலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    ‌ஷர்துல தாகூர் இடத்தில் யார் இடம் பெறுவார் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. சில ரன்களை எடுப்பதை விட 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் அணிக்கு முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

    அணியின் பேட்டிங் வரிசை நன்றாக இருக்கிறது. ராகுல், ரோகித்சர்மா, ஜடேஜா நன்றாக விளையாடுகிறார்கள். நான், புஜாரா, ரகானே ஆகியோர் சரியாக ஆடவில்லை. கடைசி நேர ஆட்டக்காரர்களும் நன்றாக ஆடினார்கள்.

    அணி தேர்வு சமநிலையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும். முதல் டெஸ்டில் சிறப்பான நிலையில் இருந்தது போல் இந்த டெஸ்டிலும் அதே மாதிரியான நிலைமை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

    புஜாரா, ரகானேவின் பேட்டிங் குறித்து நான் எந்த விதமான கவலையும் படவில்லை. அவர்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார்கள்.

    முதல் டெஸ்டில் மெதுவாக பந்து வீசியதற்காக 2 புள்ளிகள் குறைக்கப்பட்டு இருப்பது சரியான முடிவு அல்ல. இது அதிருப்தி அளிக்கிறது. புள்ளிகள் என்பது மிக மிக முக்கியமானதாகும்.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார். 

    ×