என் மலர்
செய்திகள்

ரோகித் சர்மா
ரோகித் சர்மா அபாரம், கே.எல். ராகுல் நிதானம்: முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து அசத்தல்
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 83 ரன்னில் வெளியேறினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ததால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணித்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்டூவர்ட் பிராட் இல்லாததால் ஆலி ராபின்சன் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து புதுப்பந்தில் பந்து வீசினார்.
ஆண்டர்சனின ஸ்விங், ராபின்சனின் வேகம் ஆகியவற்றை சமாளித்து ரோகித் சர்மா- கே.எல். ராகுல் ஜோடி விளையாடியது. ரன்கள் மளமளவென உயரவில்லை என்றாலும் விக்கெட் இழக்காமல் தாக்குப்பிடித்து விளையாடினர். இதனால் ஜோ ரூட்டின் கணிப்பு தவறானது.
இந்தியா 18.4 ஓவரில் 46 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரோகித் சர்மா ஆட்டத்தில் வேகம் காட்டினார்.

முதல் 66 பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா 83 பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால் கே.எல். ராகுல் நிதானமாக விளையாடினார். 123 பந்தில் அரைசதம் கடந்த இந்தியா, 198 பந்தில் சதத்தை கடந்தது.
அணியின் ஸ்கோர் 126 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் க்ளீன் போல்டானார். ரோகித் சர்மா ஆட்டமிழக்கும்போது கே.எல். ராகுல் 118 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்தார். ரோகித் சர்மா- கே.எல்.ராகுல் ஜோடி 43.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது பாராட்டுக்குரியது.
Next Story






