என் மலர்
செய்திகள்

ஆசியாவுக்கு வெளியே 10 ஆண்டுகளுக்கு பிறகு 100 ரன்கள் சேர்த்த இந்திய தொடக்க ஜோடி
லார்ட்ஸ்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்சில் தொடங்கியது. டாஸ் ஜெயித்து இங்கிலாந்து, பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஒரு மணி நேரம் மெதுவாக ஆடினர்.
பின்னர் ரோகித் சர்மா வேகமாக ரன் சேர்க்க லோகேஷ் ராகுல் மிகவும் நிதானமாக விளையாடினார். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பந்து வீச்சா ளர்கள் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
ரோகித் சர்மா-லோகேஷ் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 198 பந்தில் 100 ரன்னை தொட்டனர். தொடக்க ஜோடி 44-வது ஓவரில்தான் பிரிந்தது. ரோகித்சர்மா 83 ரன்னில் அவுட் ஆனார்.
தொடக்க ஜோடி 126 ரன் சேர்த்தது. இதன் மூலம் ஆசியாவுக்கு வெளியே இந்திய தொடக்க ஜோடி 10 ஆண்டுகளுக்கு பிறகு 100 ரன்னுக்கு மேல் சேர்த்துள்ளது.
இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் செஞ்சூரியனில் நடந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 2-வது இன்னிங்சில் தொடக்க ஜோடி சேவாக்-கவுதம் காம்பீர் 137 ரன் சேர்த்து இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசியாவுக்கு வெளியே இந்திய தொடக்க ஜோடி 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது.
சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் தனது 6-வது சதத்தை அடித்தார்.
ஆசியாவுக்கு வெளியே அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் சேவாக்கை, லோகேஷ் ராகுல் சமன் செய்தார். இருவரும் 4 சதங்கள் அடித்துள்ளனர். முதல் இடத்தில் சுனில் கவாஸ்கர் 15 சதங்களுடன் உள்ளார்.
லார்ட்ஸ் டெஸ்டில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 276 ரன் எடுத்திருந்தது. புஜாரா 9 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
லோகேஷ் ராகுல் 127 ரன்னிலும், ரகானே ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.






