search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி சறுக்கல் - பும்ரா முன்னேற்றம்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் தரவரிசையில் பும்ரா 10 இடங்கள் ஏற்றம் கண்டு 9-வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
    துபாய்:

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று முன்தினம் வெளியிட்டது.

    இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (901 புள்ளிகள்) முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித் (891 புள்ளிகள்) 2-வது இடத்திலும், லபுஸ்சேன் (878 புள்ளிகள்) 3-வது இடத்திலும் தொடருகின்றனர்.

    நாட்டிங்காமில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் மற்றும் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் (846 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் டக்-அவுட் ஆன இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (791 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா (764 புள்ளிகள்) 6-வது இடத்திலும், ரிஷப் பண்ட் (746 புள்ளிகள்) 7-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஜஸ்பிரித் பும்ரா

    பவுலர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் (908 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (856 புள்ளிகள்) 2-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் அதிகரித்து 7-வது இடத்தையும், இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் ஏற்றம் கண்டு 9-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
    Next Story
    ×