என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இந்த மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டிக்காக ஏற்கனவே உள்ள 8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்க வைத்தது. புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், சுப்மன்கில் உள்ளிட்ட வீரர்களை எடுக்க புதிய அணிகள் ஆர்வத்துடன் உள்ளன. கடந்த சீசனில் ராகுல் பஞ்சாப் அணியிலும், அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி அணியிலும், ரெய்னா சென்னை அணியிலும், சுப்மன்கில் கொல்கத்தா அணியிலும் விளையாடினார்கள்.

    ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இந்த மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    400 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் 16-வது இடத்தில் உள்ளார்.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் பிரிஸ்பேன் டெஸ்டில் 4 விக்கெட் வீழ்த்தினார். டேவிட் மலான் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அவர் 400-வது விக்கெட்டை தொட்டார்.

    34 வயதான அவர் 101 டெஸ்டில் விளையாடி 403 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 50 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

    வார்னே, மெக்ராத் ஆகியோருக்கு அடுத்தபடியாக 400 விக்கெட்டை எடுத்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை லயன் பெற்றார். சர்வதேச அளவில் 16-வது வீரர் ஆவார்.

    தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. இதில் பங்கேற்ற பந்தாவி சிங் 11 தங்கப் பதக்கங்களை பெற்றார்.

    போபால்:

    குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் பலியானார்கள்.

    இந்த நிலையில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பெற்ற 11 தங்கப் பதக்கங்களை பிபின் ராவத்துக்கு வீராங்கனை ஒருவர் அர்ப்பணித்துள்ளார். அவரது பெயர் பந்தாவி சிங். அவர் பிபின்ராவத்தின் உறவினர் ஆவார்.

    தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. இதில் பங்கேற்ற பந்தாவி சிங் 11 தங்கப் பதக்கங்களை பெற்றார். இந்த பதக்கங்களை அவர் பிபின் ராவத்துக்கு அர்ப்பணித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘பதக்கங்களை பெற்று உறவினரும், ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவருமான பிபின் ராவத்துக்கு அர்ப்பணிப்பதற்காகவே நான் இந்த போட்டியில் பங்கேற்றேன். அவர் எனது ஆலோசகர், வழிகாட்டி ஆவார்’ என்றார்.

    பிபின் ராவத் - மதுலிகா

    20 வயதான பந்தாவி சிங் விபத்தில் பலியான பிபின் ராவத்தின் மனைவி மதுலிகாவின் சகோதரர் யாஸ்வரதன் சிங்கின் மகள் ஆவார்.

    இதையும் படியுங்கள்...2 இலங்கை ராணுவ அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய தடை

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானதை சிலர் விரும்பவில்லை என ரவிசாஸ்திரி குற்றச்சாட்டி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்த முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி அடுத்து தலைமை பயிற்சியாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கும், கேப்டன் விராட்கோலிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 9 மாதங்களிலேயே கும்பிளே பயிற்சியாளர் பதவியில் இருந்து ஒதுங்கினார். இதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 4 ஆண்டுகளாக இந்த பதவியை வகித்த ரவிசாஸ்திரியின் பதவி காலம் முடிவுக்கு வந்ததால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.

    ரவிசாஸ்திரியின் பயிற்சி காலத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 2 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. உலக டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்தது. இருப்பினும் ஐ.சி.சி. உலக கோப்பை ஒன்றை கூட வெல்லாதது ஒரு குறையாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்ற 59 வயதான ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    பெரிய சர்ச்சைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பணியை நான் தொடங்கினேன். என்னை வேண்டாம் என்று ஒதுக்கியவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் எனது நியமனம் இருந்தது. அவர்கள் தேர்வு செய்த பயிற்சியாளர் (கும்பிளே) 9 மாதத்தில் விலகியதால் வேறுவழியின்றி என்னை நியமித்தனர். பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருணை கொண்டு வருவதையும் விரும்பவில்லை. நான் பொத்தாம் பொதுவாக இந்திய கிரிக்கெட் வாரியம் மீது குற்றம்சாட்டவில்லை. அதில் உள்ள குறிப்பிட்ட சிலர் நான் பயிற்சியாளர் பதவிக்கு வரக்கூடாது என்று விரும்பியதுடன், எனக்கு பதவி கிடைக்காமல் இருக்கவும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இது தான் வாழ்க்கை.

    எனது பயிற்சியின் கீழ் விளையாடிய 3 ஐ.சி.சி. உலக கோப்பை போட்டிகளில் நாங்கள் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. குறிப்பாக முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் 60 ரன்னுக்கு விக்கெட் இழக்காமல் நல்ல தொடக்கம் கண்டு இருந்த நாங்கள், குறைந்தபட்சம் அந்த போட்டியை டிராவாவது செய்து இருக்க வேண்டும்.

    2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அம்பத்தி ராயுடு கடைசி நேரத்தில் ஓரங்கட்டப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். அணி தேர்வு விஷயத்தில் நான் ஒருபோதும் தலையிடுவது கிடையாது. என்னிடம் கருத்து கேட்டால் மட்டுமே சொல்வேன். ஆனால் அந்த உலக கோப்பை போட்டிக்கான அணியில் 3 விக்கெட் கீப்பர்கள் (டோனி, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட்) தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அம்பத்தி ராயுடு, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரில் ஒருவரை அணிக்கு கொண்டு வந்து இருக்கலாம்.

    ரிஷாப் பண்ட், சுப்மான் கில், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இளம் வீரர்களாக இருந்தாலும் அவர்கள் சர்வதேச போட்டியில் அச்சமின்றி அருமையாக விளையாடுகிறார்கள். முந்தைய தலைமுறை வீரர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் குறுகிய காலத்திலேயே அனுபவம் மிகுந்தவர்களாக விளங்குகிறார்கள். இவர்கள் வரும் உலக கோப்பை போட்டியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நான் எப்போதும் சொல்வது உண்டு. ஐ.பி.எல். போட்டியில் இந்த இளம் வீரர்கள் உலகின் தலைச்சிறந்த வீரர்களுக்கு எதிராகவும், அவர்களுடன் இனணந்தும் விளையாடுவதன் மூலம் அணிக்குள் நுழையும் போதே கூடுதல் அனுபவத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வருகிறார்கள்.

    இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ரோகித் சர்மா போட்டியில் எந்தவொரு சூழ்நிலையிலும் பயமின்றி செயல்படக்கூடியவர். அணிக்கு எது நல்லதோ? அதனை எப்போதும் செய்யக்கூடியவர்.

    விராட்கோலி, போட்டியின் தன்மையை அறிந்து தந்திரமாக செயல்படக்கூடிய கேப்டன். மக்கள் எப்போதும் போட்டியின் முடிவுகளை வைத்து தான் கேப்டனை மதிப்பிடுவார்கள். அந்த வகையில் விராட்கோலி சிறந்த கேப்டன் தான். இந்திய அணியின் கேப்டனாக இருப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அணிக்காக அவர் செய்த சாதனைகள், பங்களிப்பு குறித்து நிச்சயம் பெருமைப்பட்டு கொள்ளலாம்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
    உலக பேட்மிண்டன் போட்டியில் இருந்து முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும், 3 முறை உலக சாம்பியனுமான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகுவதாக அறிவித்தார்.
    வெல்வா:

    26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாளை முதல் 19-ந்தேதி வரை வரை ஸ்பெயினின் வெல்வா நகரில் நடக்கிறது. விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), ஸ்ரீகாந்த் (இந்தியா), சோவ் டைன் சென் (சீனதைபே), பி.வி.சிந்து (இந்தியா), அன்செயோங் ( தென்கொரியா), ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த போட்டியில் இருந்து முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும், 3 முறை உலக சாம்பியனுமான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகுவதாக நேற்று அறிவித்தார்.

    இந்த ஆண்டில் விளையாடிய 5 தொடர்களில் 4-ல் மகுடம் சூடிய அவர் பயிற்சியின் போது இடது கால்முட்டியில் காயமடைந்தார். அதில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்ட 28 வயதான கரோலினா மரின் சொந்த மண்ணில் நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப்பில் களம் திரும்ப திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு முழு உடல்தகுதியை எட்டாததால் இந்த போட்டியில் இருந்து பின்வாங்கியிருக்கிறார். ‘காயத்தில் இருந்து 100 சதவீதம் குணமடையாத வரை களம் திரும்பமாட்டேன். அனேகமாக பிப்ரவரி அல்லது மார்ச்சில் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது’ என்றார்.
    நார்வே நாட்டை சேர்ந்தவரான கார்ல்சென் தொடர்ந்து 5-வது முறையாக உலக பட்டத்தை உச்சிமுகர்ந்துள்ளார்.
    துபாய்:

    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), கேன்டிடேட் போட்டியில் வெற்றி கண்ட இயான் நெபோம்னியாச்சி(ரஷியா) இடையே துபாயில் நடந்து வருகிறது. 

    இதில் நேற்று நடந்த 11-வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 49-வது நகர்த்தலில் எதிராளிக்கு செக் வைத்து 4-வது வெற்றியை பெற்றார். இதன் மூலம் 7½ புள்ளிகளை எட்டிய கார்ல்சென் மீண்டும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். 
    நெபோம்னியாச்சி 3½ புள்ளிகள் பெற்றுள்ளார். இந்த போட்டியில் இன்னும் 3 சுற்றுகள் இருந்தாலும் அதில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. 31 வயதான கார்ல்சென் தொடர்ந்து 5-வது முறையாக உலக பட்டத்தை உச்சிமுகர்ந்துள்ளார்.
    பிரிஸ்பேன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஷஸ் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று  முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 

    பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 425 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதன் பிறகு இரண்டாவது இன்னிங்க்சை ஆட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஹமீத் 27 ரன்களிலும் ரோரி பர்ன்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு டேவிட் மலன் மற்றும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 220 ரன்கள் குவித்திருந்தது. டேவிட் மலன் 80 ரன்களிலும் ஜோ ரூட் 86 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 

    இன்று நான்காம் நாள் தொடங்கியது. ஆஸ்திரேலியா அணிக்கு அதிக ரன்கள் இலக்காக வைக்கப்படும் என்று எதிர் பார்த்த நிலையில் ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்தில் மலன் (82), ஜோ ரூட்(89) அடுத்தடுத்து வெளியேறினர். 

    அந்த ஜோடி அணிக்கு நம்பிக்கை அளித்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். 

    இறுதியில் இங்கிலாந்து அணி 103 ஓவர்களில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அப்போது இங்கிலாந்து அணி 19 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    இதையடுத்து 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் ஹேரி, மார்க்கஸ் ஹரிஸ் களமிறங்கி ஆடினார்.

    அலெக்ஸ் ஹேரி 9 ரன்கள் எடுத்த நிலையில் ராபின்சன் ஓவரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக மார்னஸ் லாபஸ்சேன் களமிறங்கினார்.

    5.1 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 20 எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்னஸ் லாபஸ்சேன் (0), மார்க்கஸ் ஹரிஸ்(9) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிக்களுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 16-ந் தேதி அடிலெய்டில் நடக்கிறது.
    பிரிஸ்பேன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 20 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று  முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 

    பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 104.3 ஓவர்களில் 425 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதன் பிறகு இரண்டாவது இன்னிங்க்சை ஆட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹமீத் 27 ரன்களிலும் ரோரி பர்ன்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மலன் மற்றும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். டேவிட் மலன் 82 ரன்களும், கேப்டன் ரூட் 89 ரன்களும் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

    இறுதியில் இங்கிலாந்து அணி 103 ஓவர்களில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அப்போது இங்கிலாந்து அணி 19 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    இதையடுத்து 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.

    பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணியில் இரண்டு வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று  முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பிறகு மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், மார்கஸ் ஹாரிசும் களம் புகுந்தனர். ஹாரிஸ் (3 ரன்) ஆலி ராபின்சனின் பந்து வீச்சில் ‘ஸ்லிப்’பில் நின்ற டேவிட் மலானிடம் பிடிபட்டார். அடுத்து மார்னஸ் லபுஸ்சேன், வார்னருடன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.இறுதியில் 94 ரன்களிலும் , லபுஸ்சேன் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    மிடில் வரிசையில் களம் கண்டு நிலைத்து நின்று ஆடிய டிராவிஸ் ஹெட் இங்கிலாந்து பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினார். ஒருநாள் போட்டி போன்று அதிரடியாக விளையாடி ரன்களை சேகரித்த அவர் 85 பந்துகளில் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். ஆஷஸ் வரலாற்றில் இது 3-வது அதிவேக சதமாகும். அதே சமயம் இந்த மைதானத்தில் ஒரு வீரரின் மின்னல்வேக சதமாக அமைந்தது. 

     2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 84 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்த நிலையில் 3- வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் உட் பந்தில் போல்டானார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 104.3 ஓவர்களில் 425 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதன் பிறகு இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹமீத் 27 ரன்களிலும் ரோரி பர்ன்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மலன் மற்றும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்துள்ளது.

    மலன் 80 ரன்களிலும் , ஜோ ரூட் 86 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி , ஆஸ்திரேலிய அணியை விட 58 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளாவது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ருசிகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 3-வது நாளில் ஒரு ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகரான ராப், பிரிஸ்பேனில் நடந்து வரும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இன்றைய 3-வது நாளில் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த ரசிகர்களின் முன் தனது ஆஸ்திரேலிய காதலியான நாட் இடம் சர்பிரைசாக தனது காதலை வெளிப்படுத்தினார். ‘‘நான்கு வருடம் ஆகிறது. என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என அவர் கேட்டார்.

    இதனை சற்றும் எதிர்பாராத நாட் சிரித்தபடி அவரது காதலுக்கு ஓகே சொல்லி கட்டி அனைத்தப்படி முத்ததை இருவரும் பறிமாரி கொண்டனர். இந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 


    2017-2018 ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலியா ரசிகையான நாட்டை முதன் முதலில் ராப் சந்தித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி நாளை தனது 4-வது ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியுடன் மோதுகிறது.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித்தொடர் கோவாவில் நடந்து வருகிறது. 11 அணிகள் பங்கேற்று உள்ள இப்போட்டியில் சென்னையின் எப்.சி. அணி இதுவரை 3 ஆட்டத்தில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. அந்த அணி 7 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    சென்னையின் எப்.சி. அணி நாளை தனது 4-வது ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் சென்னையின் எப்.சி. அணி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. சென்னையின் எப்.சி. அணியில் கோமன், தாபா உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    ஏ.டி.கே. மோகன் பகான் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் 3-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    இரு அணிகளுமே பலம் வாய்ந்தது என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 24-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா-நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை வீழ்த்தியது. இதன்மூலம் மும்பை அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
    ஒரு பேட்ஸ்மேனாக கோலியின் திறமை அணிக்கு மிக முக்கியம். அவர் இன்னும் அணியின் தலைவர்தான் எனவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து புதிய கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டு ரோகித்சர்மா நியமிக்கப்பட்டார்.

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறும் போது, “20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனி கேப்டன் ஒத்து வராது என்பதால் ஒருநாள் போட்டிக்கும் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.

    இந்தநிலையில் புதிய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    அணியில் நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்த நான் விரும்புகிறேன். 10 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழக்கும் சூழ்நிலையில் எப்படி விளையாடவேண்டும் என்பதற்கு தயார்படுத்த விரும்புகிறேன்.

    அணி தொடக்கத்தில் தடுமாறும்போது 3, 4, 5, 6 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் வீரர்கள் அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    அடுத்து நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு சில ஆட்டங்கள் உள்ளன. அதை சோதித்து பார்க்க வேண்டும். 10 ரன்னுக்கு 2 விக்கெட் விழுந்த பிறகு வீரர் ஒருவர் என்ன ஷாட் விளையாடுகிறார் என்று மக்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை.

    வர்ணணையாளர்கள், இந்திய மக்கள், இது அணியின் திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கேப்டன் விளையாடும் போது முன்னணியில் நிற்க வேண்டும். மற்ற எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்க வேண்டும். கேப்டன் பின்னால் நிற்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஏனென்றால் அவர் அனைவரையும் சுற்றி இருப்பதை உறுதி செய்ய முடியும்.

    ஒரு பேட்ஸ்மேனாக கோலியின் திறமை அணிக்கு மிக முக்கியம். அவர் இன்னும் அணியின் தலைவர்தான். எனவே அவர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×