என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- லட்சுமி பூஜை செய்வது இந்த நாளின் சிறப்பு அம்சம்.
- அயோத்தியில் பல லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு
உடையார்கள் விளக்கில் விளங்கும்
விளக்கு அவர் தாமே
தீப ரகசியம் பற்றி திருமூலர் ஏழாம்
தந்திரம் - 10
உலகின் பல நாடுகளிலும் இப்போது தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. அறத்திற்கும் மறத்திற்குமான போரில் அறம் வென்ற நாள் இது.
மலர்ச்சி, மகிழ்ச்சி, நம்பிக்கை, ஒளி, செல்வம், ஆரோக்கியம், ஆயுள், மேன்மை உள்ளிட்ட ஏராளமான நலன்களை தீப ஒளி போல வரிசையாகத் தருவதால் இது தீபாவளி ஆகிறது. தீபம் + ஆவளி = தீப வரிசை)
லட்சுமி தேவி பாற்கடலில் அவதரித்த நாள் இதுவே.
இந்த நன்னாளில் லட்சுமி தேவி சர்வ அலங்கார பூஷிதையாக பூமியில் வருகிறாள். அவளை இல்லந்தோறும் வரவேற்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் அழுக்குகளையும் குப்பைகளையும் போக்கி, வீட்டை, தீப ஒளி ஏற்றி, பிரகாசமாக வைத்து புத்தாடை புனைந்து தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் வெடி வெடித்து இனிப்பு வழங்கி லட்சுமியை வரவேற்கத் தயாராக இருக்கின்றனர். லட்சுமி பூஜை செய்வது இந்த நாளின் சிறப்பு அம்சம்.
ஐந்து தினக் கொண்டாட்டம்:
தீபாவளியை ஐந்து தினங்களாக வடக்கே கொண்டாடுகின்றனர். முதல் நாள் 'தன் தேரஸ்' என்று அழைக்கப்படுகிறது. தன் என்றால் பணம் அல்லது செல்வம் தேரஸ் என்றால் திரயோதசி திதியைக் குறிக்கிறது. செல்வத்தை வரவேற்கத் தயாராகும் நாள் இது. தன்வந்திரி பாற்கடலிலிருந்து வெளிவந்து அவதரித்த தினம். துளசி செடியின் அருகில் இருந்து யமனை வழிபடும் தினமாக இது அமைகிறது.
அடுத்த நாள் நரக சதுர்தசி. இது கண்ணபிரான் நரகாசுரனை வதம் செய்த நாள்.
அடுத்த நாள் அமாவாசை - தீபாவளித் திருநாள். லட்சுமி பூஜை தினம்.
அதற்கடுத்த நாள் கோவர்தன் பூஜை தினம்.
கடைசியாக பாய் துஜ் என அழைக்கப்படுகிறது. இந்த நாள் யமன் தனது சகோதரியான யமுனையை சென்று பார்த்த நாள். இந்த நாளில் எந்த சகோதரன் தனது சகோதரியைச் சென்று பார்க்கிறானோ அவனுக்கு அனைத்துப் பாவங்களும் போய்விடும் என்று யமன் அனுக்ரகிரகித்தான்.
ஐப்பசி அமாவாசை தீபாவளியாக அமைய, இதையொட்டி இந்துக்களின் விக்ரம ஆண்டுத் தொடரில் (விக்ரம சம்வத்) புத்தாண்டு மலர்கிறது.
குபேர பூஜையை அனைத்து இல்லங்களிலும் சிறப்பாகச் செய்து செல்வ வளத்தைப் பெற வழி வகுப்பது தீபாவளி பண்டிகை தினங்களே!
நரகாசுரனின் வதமும் ராமன் அயோத்தி திரும்புதலும்:
நரகாசுரன் தனது தாயான பூமிதேவி மட்டுமே தனக்கு மரணத்தைத் தர முடியும் என்ற வரத்தை வாங்கிக் கொண்டான். அகங்காரம் தலைக்கு ஏற அட்டகாசம் செய்து அனைவரையும் அவன் கொடுமைப்படுத்த தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் இறைவனை வேண்ட சத்யபாமை பூமிதேவியின் அம்சமாகத் தோன்றி கண்ணபிரானுடன் சென்று அவனுடன் போரிடுகிறாள். நரகன் எய்த அம்பு கண்ணபிரானை மார்பில் தாக்க, சத்யபாமை கண்ணனைக் காப்பாற்றித் தானே நரகாசுரனை வதம் செய்ய உதவுகிறாள். நரகாசுரன் தனது பிழையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு தான் இறந்த இந்த நாளை புவியில் உள்ளோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய நாளாக அமைய வரம் வேண்ட கண்ணன் அப்படியே அருள்கிறான். அதிலிருந்து தீபங்களை ஏற்றி ஒளிமயமாக இந்த நாளை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
ராமபிரான் ராவணனை வதம் செய்து அயோத்தி மீண்டு அரியணை ஏறிய நாள் தீபாவளி நன்னாளே. ஆகவே நாடு முழுவதும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் பல லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாள் தீபாவளி என்பதால் மக்கள் தீபங்களை ஏற்றி நகரத்தை ஒளிரச் செய்து அவர்களை வரவேற்றதும் தீபாவளி நன்னாளிலேயே!
விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த நாள் தீபாவளியே.
ஜைன, புத்தம், சீக்கியம் கொண்டாடும் தீபாவளி
ஜைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி தினமே. ஆகவே ஜைனர்கள் இந்த தினத்தை புனித நாளாக அனுஷ்டிப்பதோடு தமது முன்னோர்களையும் இந்த நாளில் நினைவு கூர்கின்றனர்.
முகலாய மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த சிங் இந்த நாளில் தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆகவே சீக்கியர்கள் இதை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இதே நாளில் அவருடன் 52 மன்னர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆகவே அந்தந்த மன்னர் ஆண்ட பிரதேசங்களிலும் இது வழிவழியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கலிங்கத்துப் போரினால் மனம் மாறி அகிம்சையை வலியுறுத்தும் புத்தமதத்தை அசோகன் தழுவியது இந்த நாளில் தான். ஆகவே புத்தமதத்தினர் இதைக் கொண்டாடுகின்றனர்.
கந்தபுராணத்தின் படி சக்தி தேவியானவள் 21 நாள் விரதம் அனுஷ்டித்து தனது கேதார கவுரி விரதத்தை முடித்த நாள் இதுவே. அன்றே சிவபிரான் தேவியை தனது தேகத்தில் பாதியாக ஏற்று அர்த்தநாரீசுவரர் ஆனார். ஆகவே பெண்கள் அனைவரும் இந்த நாளைப் போற்றித் துதிக்கின்றனர்.
ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சிறப்பு அம்சம்
நாட்டில் உள்ள பல பகுதிகளும் இதைப் பலவிதமாகக் கொண்டாடுவது ஒரு வியப்பான சிறப்பான செய்தியாகும்.
தமிழகத்தில் தலையில் எண்ணெய் வைத்து நீராடி வெடிகளை வெடித்து அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைக் கூறி மகிழ்வது தமிழர் மரபு. அன்று இல்லத்தில் கங்கை வருவதாக ஐதீகம். ஆகவே 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா?' என்று ஒருவரை ஒருவர் விசாரித்து மகிழ்வர்.
கர்நாடகத்தில் நரகாசுரனை கண்ணபிரான் வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக நரக சதுர்த்தசி அல்லது சோடி தீபாவளி என்று இது அழைக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.
மகாராஷ்ட்ராத்தில் வசு பரஸ் என்று அழைக்கப்பட்டு மணமான மங்கையர் பசுக்களையும் கன்றுகளையும் சிறப்பாக இந்த தினத்தில் வழிபடுகின்றனர்.
குஜராத்திலோ 'சோப்டா பூஜன்' என்ற பெயரில் எல்லா வணிகர்களும் தங்களது வணிகம் வளமுற இந்த நாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்துகின்றனர். புதுக்கணக்கு தொடங்க உகந்த நாள் இது. ஸ்டாக் மார்க்கெட் கூட சிறப்பு வணிகத்தை இந்த நாளில் அறிமுகப்படுத்துகிறது.
வாரணாசியிலோ (காசி) கங்கா ஆரத்தி என்ற பெயரில் கங்கை நீரில் தீப வழிபாடு நடக்கிறது. ஆயிரக்கணக்கில் தீபங்கள் கங்கா நதியில் ஜொலிக்க தூய்மையான கங்கை நீர் அனைவருக்கும் வளத்தையும் நலத்தையும் தூய்மையையும் அளிக்கிறது.
சிந்தி சமூகத்தினரோ சோடீ தீபாவளி என்ற பெயரில் தீபாவளிக்கு முதல் நாளே அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்கின்றனர்.
ஒடிசாவில் கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் சிவ-பார்வதி வழிபாடு நடைபெறுகிறது.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் 'மோக்ரா மாதா சேவா' என்ற பெயரில் மல்லிகை மலர்மாலைகள் தேவிக்குச் சூட்டப்படுகின்றன.
கோவாவில் நரகாசுர ராத்ரி என்ற பெயரில் நரகாசுரனின் பெரிய அளவு உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு மறம் அழிந்து அறம் ஓங்க மகிழ்ச்சி பொங்குவதைச் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவா உள்ளிட்ட பல பகுதிகளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்குத் திலகமிட்டு ஆரத்தி எடுத்து தங்கள் நலத்தையும் பாதுகாப்பையும் கோரும் விழாவாக இது அமைகிறது.
வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு காளி வழிபாடு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
பல நாடுகளிலும் தீபாவளி:
இந்திய நாகரிகத்தின் உச்ச கட்ட பண்டிகையாக அமையும் இது, பல நாடுகளிலும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுவது, தீபாவளியின் இன்னொரு சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது. நேபாளத்தில் திகார் என்ற பெயரில் இது கொண்டாடப்படுவதோடு, பசுக்கள் உள்ளிட்ட அனைத்து விலங்கு மற்றும் பறவைகளை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் நேபாள மக்கள். இந்தியாவில் இது தேசிய விடுமுறை தினம் என்பது போல டிரினிடாட் & டுபாகோ, மியான்மர், மரிஷியஸ், கயானா, சுரிநாம், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி உள்ளிட்ட 12 நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அமைகிறது. மக்கள் உற்சாகமாக தீபாவளியை இங்கு கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானிலோ இது விருப்பத் தேர்வு விடுமுறை தினம்!
இங்கிலாந்து பிரதமர் இங்கிலாந்திலும் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்காவிலும் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடியதும் மேற்கத்திய லீசெஸ்டர் நகரம் வண்ண விளக்குமயமாக தீபாவளி அலங்காரம் செய்யப்படுவதும் உலகளாவிய பண்டிகை இது என்பதற்கான சான்றுகளாகும்.
ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம், மன திருப்தி, குடும்ப ஒற்றுமை, தைரியம், வீரம், மறத்தை ஒழித்து அறத்தை வெல்லச் செய்யும் வலிமை, உற்சாகம், சமுதாய மேன்மை ஆகியவற்றைப் பெறச் செய்யும் தீபாவளி நன்னாளில் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற மாலைமலருடன் இணைந்து அனைவரையும் வாழ்த்துகிறேன்.
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com
- பூமாதேவி இங்குள்ள துளசி வனத்தில் அவதரித்ததால் இந்த பகுதிக்கு துளசிவனம் என்ற பெயர் ஏற்பட்டது.
- உப்பு கலந்த எந்த உணவு பொருளையும் ஆலயத்துக்கு எடுத்து வரக்கூடாது என்பது மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.
கும்பகோணத்தில் சுமார் 2000 ஆண்டுகளை கடந்த மிக மிக பழமையான ஆலயங்கள் பல உள்ளன. அதில் தனித்துவமான வைணவ தலமாக திகழ்வது ஒப்பிலியப்பன் ஆலயம் ஆகும். கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பகுதியில் ஒப்பிலியப்பன் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்துக்கு தென் திருப்பதி என்ற சிறப்பும் உண்டு.
ஆதிகாலத்தில் இந்த ஊருக்கு திருவிண்ண நகரம் என்ற பெயர் இருந்தது. 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் மார்க்கண்டேய முனிவரின் தவத்தினால் பெருமாளும், பூமாதேவியும் இங்கு அவதரித்து தினமும் நித்யவாசம் செய்வதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூமாதேவி இங்குள்ள துளசி வனத்தில் அவதரித்ததால் இந்த பகுதிக்கு துளசிவனம் என்ற பெயர் ஏற்பட்டது. இதன் பின்னணில் ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் பாக்கியத்தை லட்சுமிதேவி பெற்றிருக்கிறாள். இதை கண்ட பூமாதேவிக்கு தனக்கும் மகாவிஷ்ணுவின் நெஞ்சில் இடம் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் அவள் தனது ஆசையை கூறினாள்.
இதை கேட்ட மகாவிஷ்ணு, "பூலோகத்தில் மார்க்கண்டேய மகரிஷி துளசிவனத்தில் தவம் இருந்து வருகிறார். நீ அங்கு சென்றால் என் மார்பில் இடம் பெறும் பாக்கியத்தை பெற வாய்ப்பு ஏற்படும்" என்று வரம் அளித்தார். அதை ஏற்று பூமாதேவி அந்த துளசி வனத்தில் வந்து பிறந்தாள்.
துளசி செடிகளுக்கு மத்தியில் பெண் குழந்தை கிடப்பதை கண்ட மார்க்கண்டேய முனிவர் மனம் மகிழ்ந்து அதை எடுத்து வளர்த்து வந்தார். அந்த பெண் குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்காக மணமகன் தேடி வந்தார்.
அப்போது மகா விஷ்ணு ஒரு விளையாடலை நடத்தினார். வயதான வேடத்துக்கு மாறிய அவர் கந்தலான உடைகளுடன் மார்க்கண்டேய முனிவரின் துளசி வனத்துக்கு வந்தார். அவரை வரவேற்ற முனிவர், "உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார். அதற்கு முதியவர் வேடத்தில் இருந்து மகாவிஷ்ணு, "நான் மிகவும் சிறப்பான குடும்பத்தில் பிறந்தவன். ஆனால் இல்வாழ்க்கையில் துணை இல்லாமல் தவித்து வருகிறேன். நீங்கள் உங்கள் மகளுக்கு மணமகன் தேடுவதாக அறிந்தேன். உங்கள் மகளை எனக்கே திருமணம் செய்து தர வேண்டும்" என்றார்.
இதை கேட்டதும் மார்க்கண்டேய முனிவருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. முதியவரை திட்டி வெளியே போகும்படி எச்சரித்தார். ஆனால் முதியவர் அதை கண்டு கொள்ளவில்லை. உங்கள் மகளை திருமணம் செய்து தந்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை கேட்ட மார்க்கண்டேய முனிவருக்கு ஆத்திரம் அதிகரித்தது.
என்றாலும் முதியவர் தனது நிலையில் இருந்து மாறவில்லை. "உங்கள் மகளை திருமணம் செய்து தரவிட்டால் உங்கள் கண் எதிரிலேயே இதே இடத்தில் உயிரை விட்டு விடுவேன்" என்று மிரட்டினார். இதை கேட்டதும் மார்க்கண்டேய முனிவர் பயந்து போனார். பொறுமையாக இருங்கள் எனது மகளிடம் கேட்டு விட்டு வருகிறேன் என்று வீட்டுக்குள் சென்றார்.

மகளிடம் அவர் நடந்த விவரங்களை எல்லாம் தெரிவித்தார். இதை கேட்டதும் பூமாதேவிக்கு கோபம் வந்தது. வயதான ஒருவரை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணத்திற்காக வற்புறுத்தினால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றாள்.
இதை கேட்டதும் மார்க்கண்டேய முனிவர் கலக்கம் அடைந்தார். வீட்டுக்கு வெளியே வந்து முதியவர் வேடத்தில் இருந்த விஷ்ணுவை சமரசம் செய்தார். ஆனால் அவர் சமரசம் ஆகவில்லை. உடனே மார்க்கண்டேய முனிவர், "எனது மகள் துளசிக்கு சரியாக சமைக்கக் கூட தெரியாது. உணவில் எந்த அளவுக்கு உப்பு சேர்க்க வேண்டும் என்பதெல்லாம் அவள் அறியாதவள். பக்குவம் இல்லாத அவளை உங்களுக்கு திருமணம் செய்து தருவது நன்றாக இருக்காது" என்றார்.
ஆனாலும் முதியவர் விடவில்லை. உங்கள் மகள் சமைத்து தரும் உப்பில்லாத உணவை சாப்பிட நான் தயாராக இருக்கிறேன் என்றார். இதை கேட்டதும் மார்க்கண்டேய முனிவர் ஆச்சரிப்பட்டார். அப்போது அவரது தவ ஆற்றலால் அவருக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. முதியவர் வேடத்தில் வந்திருப்பது பகவான் மகா விஷ்ணு என்பதை உணர்ந்தார்.
அடுத்த நிமிடம் முதியவர் வேடத்தில் இருந்த விஷ்ணுவை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். இதையடுத்து முதியவர் கோலத்தை மாற்றி மார்க்கண்டேய முனிவருக்கு மகாவிஷ்ணு காட்சி அளித்தார்.அதன் பிறகு துளசியை மகாவிஷ்ணுவுக்கு மார்க்கண்டேய முனிவர் திருமணம் செய்து கொடுத்தார்.
அப்போது அவர் விஷ்ணுவிடம் சில வரங்களை கேட்டு பெற்றார். "இறைவா நீயும் உனது மனைவியும் எப்போதும் இந்த தலத்திலேயே இருக்க வேண்டும். இந்த தலம் உனது பெயரால் அழைக்கப்பட வேண்டும். உப்பு இல்லாமல் சமைக்கப்படும் உணவை ஏற்க வேண்டும்" என்று கேட்டார். இந்த வரங்களை அவருக்கு மகாவிஷ்ணு வழங்கி அருளினார்.
இந்த தலத்தில் பூமாதேவியை, மகாவிஷ்ணு ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொண்டதாக குறிப்புகள் உள்ளன. எனவே திருமணம் ஆகாதவர்கள் இந்த தலத்தில் அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயத்தில் உப்பு இல்லாமலேயே பெருமாளுக்கு அனைத்து உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. உப்பு கலந்த எந்த உணவு பொருளையும் ஆலயத்துக்கு எடுத்து வரக்கூடாது என்பது மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. உப்பை விலக்கியதால் இந்த தலத்து பெருமாளுக்கு உப்பில்லாத அப்பன் என்ற பெயர் ஏற்பட்டது.
இதனால் இந்த தலத்து மூலவருக்கு உப்பிலியப்பன் பெயர் சூட்டப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் ஒப்பிலியப்பன் என்று மாறி போனது.
இந்த தலத்தில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. பெருமாளுக்கு அருகில் பூமாதேவி மட்டுமே இருக்கிறாள். பூமாதேவியை ஒரு நிமிடம் கூட இந்த தலத்தில் பெருமாள் பிரிவதே இல்லை. எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்துதான் செல்வார்கள். இதனால் கணவன்-மனைவி ஒற்றுமைக்கு இந்த தலம் மிக சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு வேண்டிக்கொண்டால் தம்பதியர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை தானாக வரும் என்று சொல்கிறார்கள்.
துளசியை திருமணம் செய்து கொள்வதற்காக மகாவிஷ்ணு பங்குனி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்றுதான் முதியவர் வேடம் எடுத்து வந்தார். அடுத்தடுத்த மாதங்களில் திருவோண நட்சத்திர நாட்களில் மார்க்கண்டேய முனிவரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பயனாக ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திர தினத்தன்று விஷ்ணுவுக்கும்-பூமாதேவிக்கு திருமணம் நடந்தது. எனவே இந்த தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திர தினத்தன்று பெருமாள் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படு கின்றது.
திருவோண நட்சத்திர நாளில் பகல் 11 மணிக்கு திருவோண தீபம் தரிசனம் செய்யலாம். இதற்காக சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்படும். அகண்ட தீபம் ஏற்றி வைக்கப்படும். அதோடு வால் தீபம் ஒன்றும் ஏற்றப்படும். இந்த தீப ஒளியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். எனவே ஒப்பிலியப்பன் ஆலயத்தில் திருவோண நட்சத்திர தினத்தன்று இந்த தீபத்தை தரிசனம் செய்வது மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த தீபத்தில் லட்சுமி இருப்பதால் அதை காண்பவர்களுக்கு வாழ்க்கையில் மிக சிறப்பான செல்வ செழிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திர நாளில் பகல் 11 மணிக்கு திருவோண தீபம் தரிசனம் செய்யலாம். இத்திருநாளில் விரதம் இருந்து நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே திருவோண விரதமாகும். பக்தர்கள் இந்த விரதத்தை தங்களது வீடுகளிலும் கடைப்பிடிக்கலாம். குரு வாயூரைப் போன்று இங்கும் துலாபாரம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உப்பு தவிர தங்கள் வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்தலாம்.
எம்பெருமான் ஒரு பங்குனி மாதத்தில் ஏகாதசி கூடிய திருவோண தினத்தன்று பகல் 12 மணிக்கு இத்தலத்தில் அவதரித்தார். இதனை 9 நாள் பிரம்மோற்சவமாக கொண்டாடுகிறார்கள். தவிர ராம நவமி உற்சவம் 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பெருமாள் பூமாதேவியை ஐப்பசி மாதம் திருவோண தினத்தன்று மணந்து கொண்டதால் ஆண்டு தோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது.
இந்த தலத்தில் உள்ள தீர்த்தத்தில் இரவு-பகல் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம். மார்க்கண்டேயர் வசித்த தலம் என்பதால் இங்கு வழிபடுபவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தில் தங்க குடம் கொண்டு தான் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுத்து வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் 7 கால பூஜை நடத்தப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து தெற்கில் 7 கிலோ மீட்டர் தூரத்திம், காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலும், ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலும் ஒப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது.
எனவே கும்பகோணத்துக்கு யாத்திரை செல்பவர்கள் இதை மனதில் கொண்டு திருவோண நட்சத்திரம் வரும் நாட்களுக்கு ஏற்ப தங்களது பயணத்தை அமைத்து கொண்டால் ஆலயத்துக்கு சென்ற மாதிரியும் இருக்கும். உண்மையான பலன்களை பெற்று வந்த மாதிரியும் இருக்கும்.
அது போல கடன் இல்லாமல் வாழ வேண்டியது மிக, மிக முக்கியமானதாகும். எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அதில் இருந்து மீள வேண்டுமானால், கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சரபரமேஸ்வரரை வழிபட வேண்டும். இதுபற்றி அடுத்த வாரம் வியாழக்கிழமை காணலாம்.
- ஆணானாலும் பெண்ணானாலும் ஆன்மிகத்தில் உயர்ந்தோங்கியவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்டு போற்றியுள்ளனர்.
- ஆன்மிகம் பால் பேதமற்றது. அது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது.
மரகதம்மா சென்னையில் வாழ்ந்த பெண்மணி. பிரபல எழுத்தாளரான அமரர் த.நா. குமாரசுவாமியின் சகோதரி. காஞ்சிப் பரமாச்சாரியார் உள்பட பல உயர்நிலை ஆன்மிகவாதிகளால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
முருக பக்தராக வாழ்ந்த அவர் எண்ணற்ற முருகன் துதிப்பாடல்களை சொக்க வைக்கும் சுந்தரத் தமிழில் எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலும் பக்தி இலக்கியக் கடலில் விளைந்த முத்து.
ஒருநாள் சென்னை காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்றார் மரகதம்மா. அங்குள்ள முருகன் சன்னிதி முன் அமர்ந்து கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.
அவருக்குப் பரவச நிலை ஏற்பட்டது. அப்போது அவர் ஆழ்மனத்தில் ஒரு பக்திக் கவிதை உதித்தது. அதை அவர் பாடியபோது அங்கே அவர் அருகிருந்து கேட்டவர் உள்ளங்கள் உருகின. அவர்கள் அந்தப் பாடலை எழுதி வைத்துக் கொண்டார்கள்.
பின்னாளில் அந்தப் பாடலின் பக்திப் பெருக்கில் பெரிதும் ஈடுபட்டார் ஒரு புகழ்பெற்ற திரைப்பாடகர். தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தப் பாடலை அவர் மனமுருகிப் பாடினார். எந்தத் திரைப்படத்திலும் இடம்பெறாத அந்த பக்திப் பாடல் ஓர் இசைத்தட்டில் இடம் பெற்றது.

டி.எம். சவுந்தரராஜன்
அந்த முருக பக்திப் பாடல், திரைப்பாடலை விடவும் கூடுதலாகப் புகழ்பெற்றதுதான் ஆச்சரியம். பாடலைப் பாடியவர் திருத்தமான உச்சரிப்பிற்குப் புகழ்பெற்ற பாடகரான டி.எம். சவுந்தரராஜன்.
பாடல் `உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே, அள்ளி அணைத்திடவே என்னுள்ளே ஆசை பெருகுதப்பா..`
அந்த அற்புதமான பாடலை எழுதிய மரகதம்மாதான் பின்னாளில் `ஆண்டவன் பிச்சை` என்ற பெயரில் அழைக்கப்படலானார். புகழ்பெற்ற துறவினியாக வாழ்ந்தவர் அவர்.
அவரை மதித்தவர்கள், போற்றியவர்கள், அவர் பாடலில் ஈடுபட்டவர்கள், அவர் பாடலைப் பாடியவர்கள் எனப் பலர் ஆண்கள்தான். அவரை மனமார குருவாக ஏற்றுப் போற்றுவதற்கு அவர் பெண் என்ற விஷயத்தை எந்த ஆணும் ஒரு தடையாகக் கருதியதில்லை.
ஒரு பெண் துறவி ஆகாயத்தில் பறந்ததைப் பார்த்து வியந்து திரு.வி.க. அவரைப் பற்றித் தன் `உள்ளொளி` என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி கட்டிடத்தின் மாடியில் தான் நின்று கொண்டிருந்ததாகவும் அப்போது ஒரு பெண் துறவி வானத்தில் பறந்ததைத் தான் பார்த்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்ல. பறந்துவந்த அந்தப் பெண் துறவி அந்தக் கட்டிடத்தின் மாடியில் சற்றுநேரம் இறங்கித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதாகவும் பின் மறுபடி ஆகாயத்தில் பறந்து சென்று விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணி யார் எனத் தான் விசாரித்து அறிந்ததையும் திரு.வி.க. எழுதியுள்ளார்.
அந்தப் பெண்மணியின் பெயர் சக்கரையம்மா. அந்தச் சக்கரையம்மாவின் குருவும் ஒரு பெண்தான். அந்தப் பெண்மணியின் பெயர் நட்சத்திர குணாம்பா.
ஸ்ரீசக்ர உபாசனை செய்ததால் சக்ர அம்மா எனப் பெயர் பெற்ற அவர், காலப்போக்கில் பொதுமக்களால் சக்கரையம்மா என அன்புடன் அழைக்கப்பட்டார். சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை அருகே கோமளீஸ்வரன் பேட்டை என்ற இடத்தில் வாழ்ந்தவர் அவர். இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். எண்ணற்ற இன்னல்களை அனுபவித்து ஆன்மிகத் தெளிவு பெற்றவர்.
மகாகவி பாரதியாரைச் சென்னையில் இருந்து பத்திரமாகப் புதுச்சேரிக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு அனுப்பிவைத்த மருத்துவர் நஞ்சுண்டராவ், சக்கரையம்மாவையே தன் குருவாகக் கண்டு போற்றினார்.
ஸ்ரீரமணரை தரிசிக்க வேண்டும் எனச் சக்கரையம்மா சொன்னதால் நஞ்சுண்டராவ் அவரைத் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே சக்கரையம்மா மகரிஷி ரமணரை தரிசித்து மகிழ்ந்திருக்கிறார்.
சக்கரையம்மாவைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்த ரமணர், ஆன்மிகரீதியாக அடையவேண்டிய உயரங்கள் அனைத்தையும் சக்கரையம்மா அடைந்துவிட்டார் எனக்கூறி அவரைப் பாராட்டியிருக்கிறார்.
தன் குரு சக்கரையம்மா சித்தி அடைந்தபோது சீடர் நஞ்சுண்டராவ், குரு சொன்ன இடத்திலேயே அவருக்கு ஒரு கோயில் எழுப்பினார். சமாதிக் கோயில் அது. சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் சமாதி இருக்கும் இடத்திற்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது.
அந்தக் கோவிலில் சக்கரையம்மாவுக்கு ஒரு கருங்கல் சிலை அமைக்கப்பட்டு அது ஆராதிக்கப்பட்டு வருகிறது. தவிர சக்கரையம்மாவின் மெழுகுச் சிலை ஒன்றும் அங்குள்ளது. அந்த மெழுகுச் சிலை சக்கரையம்மாவையே நேரில் பார்த்ததுபோன்ற அனுபவத்தைத் தரும் வகையில் உயிரோட்டத்துடன் அமைந்துள்ளது.
சீடர் நஞ்சுண்டராவ் காலமானபோது, அவர் விருப்பப்படி அவரது சமாதியும் அந்தக் கோயில் வளாகத்திலேயே அமைக்கப்பட்டது.
சக்கரையம்மா ஆலயத்தைத் தற்போது பராமரிப்பவர்கள் டாக்டர் நஞ்சுண்டராவின் வழித்தோன்றல்களான டாக்டர் சுமனா குடும்பத்தினர்.
மகாகவி பாரதியாரும் மருத்துவர் நஞ்சுண்டராவ் மூலம் சக்கரையம்மா பற்றி அறிந்து ஆச்சரியப்பட்டிருக்கிறார். நஞ்சுண்டராவுக்கும் மகாகவி பாரதியாருக்கும் சக்கரையம்மாவை ஆராதிப்பதற்கு அவர் ஒரு பெண் என்பது தடையாகத் தோன்றியதே இல்லை என்பதுதான் இங்கே நாம் அறிய வேண்டிய செய்தி.
ஆணானாலும் பெண்ணானாலும் ஆன்மிகத்தில் உயர்ந்தோங்கியவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்டு போற்றியுள்ளனர்.

விவேகானந்தர்
விவேகானந்தர் என்ற ஆணை நிவேதிதா என்ற வெளிதேசப் பெண் தன்னுடைய ஞான குருவாக ஏற்றுக்கொண்டார். அந்த நிவேதிதா என்ற பெண்ணை மகாகவி பாரதியார் என்ற ஆண் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். இதையெல்லாம் கடந்த கால வரலாறு நமக்குச் சொல்கிறது.
ஆன்மிகத்தில் ஆண் பெண் என்பதால் விளையும் பேதங்கள் ஒரு பொருட்டாக என்றும் இருந்ததில்லை. ஆன்மிகம் பால் பேதமற்றது. அது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. நம் இந்திய ஆன்மிகச் சிந்தனை மரபு இந்த உண்மையையே வலியுறுத்துகிறது.
வட இந்தியாவில் நிர்மலாதேவி என்ற ஒரு பெண்மணி வாழ்ந்தார். அவரது கணவர் பெயர் போலோநாத். திருமணமானதிலிருந்தே தன் மனைவியின் செயல்பாடுகளைக் கண்டு வியந்தார் கணவர்.
பல்வேறு யோக நிலைகளில் தன் மனைவி திகழ்வதையும் நெடுநேரம் அவர் தியானத்தில் ஆழ்வதையும் கண்டு ஆச்சரியப்பட்டார்.
மனைவியின் ஆன்மிக நாட்டத்தைப் பெரிதும் மதித்த அவர், தன் மனைவியின் ஆன்மிக வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் வாழலானார்.
பின்னாளில் இந்த நிர்மலாதேவி ஆன்மிகத்தின் பேரெல்லைகளைத் தொட்டார். `ஆனந்தமயி` என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இவர்மேல் பெரும் மதிப்பிருந்தது. இவரிடம் ஒரு ருத்ராட்ச மாலையைக் கேட்டுப் பெற்று அதைக் கழுத்தில் அணிந்துகொண்டார் இந்திரா காந்தி.
`ஒரு யோகியின் சுயசரிதம்` என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் பரமஹம்ச யோகானந்தர். அவர் ஆனந்தமயி தேவி பற்றி அறிந்து அவரைச் சந்திக்கச் சென்றார். ஆனந்தமயி தேவியின் தவப்பொலிவு நிறைந்த தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தார். `ஆனந்தமயி பூர்வாசிரமத்தில் திருமணமானவர் ஆயிற்றே, அவரது கணவர் எங்கே?` எனப் பிரியத்தோடு விசாரித்தார் பரமஹம்ச யோகானந்தர்.
`அதோ என் அடியவர் கூட்டத்திடையே முன்வரிசையில் வீற்றிருக்கிறாரே போலோநாத், அவர்தான் நீங்கள் விசாரிக்கும் நபர். இப்போது அவர் என் முதன்மைச் சீடர்!` என ஆனந்தமாக நகைத்தவாறே சொன்னார் அன்னை ஆனந்தமயி.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் குரு, பைரவி பிராம்மணி என்ற பெண்மணிதான். அந்தப் பெண்மணியிடம் தான் பல்வேறு தாந்திரிக சாதனைகளைக் கற்றுத்தேர்ந்தார் குருதேவர்.
பரமஹம்சர் தன் மனைவி சாரதையை தெய்வமாகக் கருதி பூஜை செய்து வழிபட்டிருக்கிறார் என்பதை அவரது புனித வரலாறு தெரிவிக்கிறது. குருதேவரால் வழிபடப்பட்ட தூய அன்னை சாரதாதேவிக்கு இன்று எண்ணற்ற ஆண் அடியவர்கள் இருக்கிறார்கள்.
ராமகிருஷ்ண மடங்களில் பரமஹம்சர், சாரதாதேவி, விவேகானந்தர் ஆகிய மூவர் திருவுருவங்களும் ஒன்றாக வைத்து வழிபடப்படுகின்றன. பெண் என்பதால் அன்னை சாரதாதேவியின் மதிப்பு எள்ளளவும் குறைக்கப்படுவதில்லை.
சிறிதுகாலம் முன் சித்தி அடைந்த பூஜ்யஸ்ரீ மதிஒளி என்ற துறவினி, பெண்களை மட்டுமல்ல, எண்ணற்ற ஆண்களையும் அடியவர்களாகக் கொண்டவர். அவர் ஆன்மிகத் துறவினியாக மட்டுமல்லாமல் சிறந்த தமிழ் எழுத்தாளராகவும் இயங்கியவர்.
பூஜ்யஸ்ரீ மதிஒளி அவர்களின் அருள் தங்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவரது ஆண் அடியவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் கிருஷ்ணன்
இன்றும் மாதா அமிர்தானந்தமயி என்ற கேரளத்தைச் சார்ந்த பெண் துறவியின் திருப்பாதங்களில் ஏராளமான ஆண் அடியவர்கள் விழுந்து வணங்கி அவரது அருளுரையால் ஆன்மிக மலர்ச்சி பெறுவதைப் பார்க்கிறோம். மிகச் சிறந்த பாடகியான மாதா அமிர்தானந்தமயி தன் பக்தி கலந்த இனிய குரலால் பற்பல ஆண் அடியவர்களின் மனத்தைத் தூய்மைப்படுத்தி வருவதையும் காண்கிறோம்.
இந்தியாவில் ஆன்மிக உயர்நிலையை அடைந்து குருவாக இயங்கும் பெண் துறவிகள் இன்னும் பற்பலர் உண்டு. தமிழகத்தில் பழங்காலத்தில் அவ்வையார், காரைக்காலம்மையார், ஆண்டாள் போன்ற பெண்கள் மிக உயர்ந்த ஆன்மிக நிலையை அடைந்திருந்ததைப் பழைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
ஆன்மிகத்தில் ஆண் பெண் பேதமில்லை. ஏனெனில் ஆன்மிகம் என்பது அழியும் உடல் சார்ந்ததல்ல. அது என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய ஆன்மாவைச் சார்ந்தது.
ஆன்மா அழிவற்றது மட்டுமல்ல. பால்பேதமற்றதும் கூட. இந்தப் பேருண்மையை இந்திய ஆன்மிகம் அன்றுதொட்டு இன்றுவரை உணர்த்தி வருகிறது. வடக்கிலும் தெற்கிலும் பற்பல பெண்கள் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல, ஆணுக்கே குருவாக இருக்குமளவு ஆன்மிகப் பேரெல்லைகளைத் தொட்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com
- சிந்தாமணி மருத்துவம், அகத்தியர் நயன விதி போன்ற நூல்கள் மூலம் அறியமுடிகிறது.
- வர்மம் எனப்படுவது உயிர் நிலைகளின் ஓட்டம் அடங்கியுள்ள புள்ளிகள் ஆகும்.
பொடி:- மருந்து சரக்குகளை பொடி செய்து வெளிபிரயோகமாக பலவித நோய்களுக்கு பயன்படுத்தும் முறையாகும். புண்கள், பல்நோய்கள், கண் நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றிற்கு பொடி பயன்படுகிறது. மேலும் குளியலுக்கு நலங்குமா போன்ற பொடிகள் பயன்படுத்தப்படுகிறது.
படிகாரம், கடுக்காய் தோல் இவ்விரண்டையும் தனித்தனியே பொடி செய்து, சம அளவில் சேர்த்து காயமுள்ள பகுதியில் வைக்க குருதி வெளியேறுவது நிற்கும்.
காயச்சுக்கட்டி, கடுக்காய், இந்துப்பு, மாசிக்காய், படிகாரம் இவைகளை சம அளவு கலந்து பொடி செய்து பல்துலக்கி வர ஈறுகளில் உள்ள கெட்ட நீர் வெளியேறி பல் வலி, பல்லாட்டம் குறையும்.
கொள்ளு பொடியுடன் சிறிது மஞ்சள் தூள், கற்பூரம் சேர்த்து நாட்பட்ட வாதநோய்களுக்கும், கப நோய்களுக்கும், பொடிதிமிர்தல் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முறிச்சல்:- சித்த மருத்துவ முறையில் சித்த கை, கால் போன்ற ஏதேனும் உறுப்புகளில் உள்ள பொருத்துகள் (Joints) இடத்தை விட்டு பிறழ்ந்து மாறி பொருந்தினால், அதை சீர் செய்வதற்கு செய்யப்படும் ஒரு மருத்துவ முறையாகும். முறித்த பகுதியை சீராக்க முறிவெண்ணெய் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. எலும்பு முறிவு மருத்துவத்தை கற்று தேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே செய்ய முடியும்.
கீறல்:- கட்டி, பரு, கொப்புளம் போன்றவற்றில் தங்கியுள்ள சீழ், இரத்தம், நீர் முதலியவற்றை நீக்கி அதனால் ஏற்படும் வலி, காய்ச்சல், உடல் நடுக்கம் போன்றவற்றை குறைக்க பயன்படும் முறை கீறல் எனப்படும். ஆங்கில மருத்துவத்தில் செய்யப்படும் D & C முறையை சேர்ந்தது இந்த கீறல் முறை.
காரம்:- இது வீக்கத்துடன் கூடிய புண்கள், அதில் உண்டாகும் தசை வளர்ச்சி ஆகியவற்றை கட்டுபடுத்த, காரத்தன்மை உடைய மூலிகை அல்லது மருந்து சரக்குகளை அரைத்து துணியில் தடவி பாதிப்படைந்த பகுதியில் வைத்து பிணியை அகற்றும் முறை.
மூலம், பவுத்திரம், சீழ் சேர்ந்த கட்டிகள் போன்ற நிலைகளில் காரம் பயன்படுத்தப்படுகிறது. பயந்தவர்கள், மெலிந்தவர்கள், இருதய நோய், நீரிழிவு, காய்ச்சல், பேதி உள்ளவர்கள், மாதவிடாயில் உள்ளவர்கள், கர்பிணிகள் போன்றோர்க்கு இம்முறை செய்யப்படுவதில்லை.
நரம்புகள், ரத்த குழாய்கள், குருத்தெலும்புகள் மேல் காரம் வைக்கப்படமாட்டாது. காரம் பரிகாரம் செய்த இடத்தில் தேன், நெய் போன்றவை தடவ எரிச்சல் தணியும்.

மூலா மூளைக்கு எருக்கம்பால், சதுரக்கள்ளி பாலில் மஞ்சள் தூள் கலந்து தக்க முறையில் மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அட்டைவிடல்:- நோயுற்ற வீங்கின இடத்தில் குருதியை வாங்கிவிட வேண்டியிருந்தால், அந்தநேரத்தில் அட்டையை அவ்விடத்தில் பற்றும்படிவிடின் அது கடித்து உள்ளிருக்கும் தீய இரத்ததையெல்லாம் குடித்து விழுந்துவிடும் வீக்கமும் குறையும். இதுவே அட்டைவிடல் எனப்படும்.
கட்டிகள், வீக்கம் மட்டுமின்றி வாந்தி, தீராத்தலைநோய், ரத்தமூலம், கல்லீரல் வீக்கம், கக்குவான் போன்ற நோய் நிலைகளிலும் அட்டைவிடல் பயன்படுகிறது. அட்டைகள் ரத்த குழாய், கண்ணிமை, ஆண்குறி போன்ற இடங்களில் விடப்படுவதில்லை.
பயந்தவர்கள், பலவீனமானவர்கள், மென்மையான உடல் கொண்டவர்களுக்கும் சிறுவர்கள், முதியவர்கள் போன்றோர்க்கும் இம்முறை பயன்படுகிறது.
அறுவை:- உள், வெளி மருந்துகள் வழங்கியும் குணப்படுத்த முடியாத நோய் நிலைகளில், அறுவை மருத்துவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை சிந்தாமணி மருத்துவம், அகத்தியர் நயன விதி போன்ற நூல்கள் மூலம் அறியமுடிகிறது.
கண்களில் உண்டாகும் தசைவளர்ச்சியை கருவிகள் பயன்படுத்தி அகற்றியதாகவும், பேறுகாலத்தின்போது விடபகிழிசலை (Perineal Tear) சரிசெய்ய தையல்போடப்பட்டுள்ளதாகவும் மருத்துவ நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
கொம்புகட்டல்:- எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியை உடற்கூறு விதிகளுக்கு ஏற்ப துல்லியமாக சேர்த்து வைத்து கட்டி எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதி சேர்ந்து மேற்கொள்ளப்படும் மருத்துவ முறையாகும்.
உரிஞ்சல்:- விரணங்களில் உள்ள சீழ், குருதி முதலியன வெளியாகவிடின் அவைகளை வெளிப்படுத்த கருவிகளை வாயில் வைத்து உரிஞ்சி எடுக்கும் முறையாகும். உறிஞ்சும் முன் வாயில் புண்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து, வாயில் வேப்பெண்ணெய் தடவி கொண்டு இம்முறையை செய்ய வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன. மேலும் இம்முறையை செய்த பின்னர் படிகார நீரை கொண்டு வாயை கழுவ வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இம்முறை பெரிதாக வழக்கத்தில் இல்லை.
குருதிவாங்கல்:- கொடிய நோய்கிருமிகளால் அல்லது உள்ளுறுப்புகள் பாதிப்பினால் குருதி பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை காப்பாற்ற ரத்த குழாயை கீறி இரத்தத்தை வெளிப்படுத்தும் முறையாகும். இம்முறைக்கான நூல் ஆதாரங்கள் பெரிதும் நூல்களில் காணப்படவில்லை, தற்போது வழக்கத்திலும் இல்லை.
பீச்சு:- சிறு குழல் மூலம் நீர், வழுவழுப்பான திரவம், எண்ணெய் போன்றவற்றை ஆசனவாய் வழியாக செலுத்தும் முறையாகும்.
மலச்சிக்கல், குடல் கிருமி, கருப்பை கிருமிகள் போன்றவைகளை நீக்க இம்முறை பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள வாதத்தை குறைக்கவும் இம்முறை பயன்படுகிறது. சில நேரங்களில் மலம் தடைப்படும்போது சிறுநீரும் சேர்ந்து தடைபட்டு உடல் வீக்க மடையும். இந்நிலையில் பீச்சு செய்ய மலம், நீர் வெளியாகி உடல் வீக்கம் குறையும்.
வாத நோய்கள் மற்றும் தோல் நோய்களில் வேப்பிலை கஷாயத்தை ஆசனவாய் வழியே உடல் வன்மைக்கு ஏற்ப பீச்சு செய்து பின்னர் உள்மருந்துகள் வழங்க நல்ல பலன் கிடைக்கும்.
இதுவரை 32 வகையான புறமருந்துவ முறைகள் குறித்து அறிந்தோம். இதில் சேராத வர்மம், தப்பளம், தாரை, மூலிகை குளியல் போன்ற முறைகளை குறித்து இனி காணலாம்.
வர்மம்:- வர்மம் எனப்படுவது உயிர் நிலைகளின் ஓட்டம் அடங்கியுள்ள புள்ளிகள் ஆகும். இவ்வர்ம புள்ளிகள் உடலில் மொத்தம் 108 இடங்களில் உள்ளது. நோயாளியின் உடல் தன்மை மற்றும் நோயின் தன்மைக்கு ஏற்ப இந்த புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும் போது ஆற்றல் உற்பத்தியாகி உடலில் உள்ள காற்றோட்டம், வெப்பவோட்டம், ரத்த ஓட்டம் ஆகிய மூன்று ஓட்டங்களையும் சீர் செய்து நோய்களை நீக்குகிறது.
ஒற்றைத்தலைவலி, முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்துவலி, மூட்டுவலி, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற தொந்தரவுகளுக்கு வர்ம சிகிச்சை நல்ல பலனளிக்கும். மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்ள விரும்பாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகுந்த பயனளிக்கும்.
துவாலை:- மூலிகையின் இலைகள், பழங்கள், காடிநீர், மருந்து சரக்குகள், எண்ணெய் போன்றவைகளை காய்ச்சி ஆறியவுடன் உடலில் பூசி மெழுகி விடுவது துவாலை எனப்படும்.
திராட்சையை முதன்மையாக கொண்டு செய்யப்படும் திராட்சாதி துவாலையினால் நரம்பில் ஊறி வறுத்துகின்ற சூடு நீங்கும்.
தாரை:- தாரை எனப்படுவது நடுவில் குழிந்த மண்கலத்தில் குழியின் மைய பகுதியில் ஒரு அரிசி அளவு துளை போட்டு அதை சிறு கயிறில் கட்டி அதில் எண்ணெய் ஊற்றி நோயாளியின் பாதிக்கப்பட்ட உடல்பாகத்தின் மைய பகுதியில் எண்ணெய் விடுமாறு செய்யும் முறையாகும். ஒழுகு தாரை, துளி தாரை என தாரை இரண்டு வகைப்படும். தலையில் இடும் தாரை சிரசு தாரையென்றும், நெற்றியில் இடும் தாரை நெற்றி தாரை என்றும், இடுப்பில் இடும் தாரை இடைதாரையென்றும் அழைக்கப்படும்.

இடுப்பு மற்றும் கழுத்து எலும்பு தேய்வு, தீக்காயபுண், தூக்கமின்மை, நடுக்குவாதம், மனநிலை பாதிக்கப்பட்ட நிலை போன்றவற்றில் தாரை பயன்படுகிறது. நோய் நிலை மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப தைலம் தேர்வு செய்யப்பட்டு தாரை இடப்படுகிறது.
குளியல்- தமிழ் மருத்துவ முறைகளில் ஒன்றான இது சூரிய குளியல், மண் குளியல், மர குளியல், அருவி குளியல், தென்றல் குளியல், மர நிழல் குளியல், ஞாயிறு புனல் குளியல், மூலிகை குளியல் என பல வகைப்படும்.
சூரிய குளியல்: கெட்ட நீர் வியர்வை துளி வழியே வெளியேறி, சருமத்திற்கு குருதி ஓட்டத்தை சீர் செய்கிறது.
மரகுளியல்: தோல் நோய்கள் குறையும்.
மூலிகை அருவி குளியல்: பிரமை, கிரிகை தீரும். மூளை புத்துணர்வு பெறும்.
தென்றல் குளியல்: மன அழுத்தம் குறையும்.
மரநிழல் குளியல்: புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
தப்பளம்:- தப்பளம் என்பதற்கு மத்திப்பு என்று வேறு பெயர் உண்டு. கிரிகை நோய், பக்கவாதம், மஞ்சள் காமாலை, சீதம், தாங்கமுடியாத வலி, கடுமையான சுரம், மயக்கம் மூர்ச்சை போன்ற நிலைகளில் பயன்படும் ஒரு அவசரகால சிகிச்சை முறையாகும்.
மூளை பாதிக்கப்பட்ட நிலையில் வரும் நோய்களுக்கு தலையிலும், மற்றைய பிணிகளுக்கு உள்ளங்கால், நெஞ்சுபகுதி போன்ற பகுதிகளில் நோய்களுக்கு ஏற்ப தப்பளம் போடப்படும். மிளகு அல்லது கிராம்பை கோழிமுட்டை வெண்கருவிட்டு அரைத்து உச்சியில்தப்பளமிட தலைவலி குறையும். மேலும் மஞ்சள் காமாலைக்கு சீமை அமுக்கரா, ஏலக்காய் சேர்ந்த மருந்து கலவையை வெண்ணெயில் குழப்பி உச்சியில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தப்பளமிட பயன்தரும்.
யோகாசனம்:- யோகாசனம் உடல் உள்ளுறுப்புகளை பலமடைய செய்யும் ஓரு பயிற்சி முறை. இதனை சரநிலையுடன் ஒருங்கிணைத்து செய்து வீணாக வெளியேறும் உயிர் நிலை காற்றை உடலில் நிலைநிறுத்த, ஆயுள் கூடுவதுடன் உடல் ஆற்றலும் பெறும்.
முறையாக பயின்ற மருத்துவர்கள் மூலம் இம்முறையை கற்று தினம் செய்து வர உடலின் எல்லா பகுதிகட்கும் குருதி சுற்றோட்டம் அதிகமாகி சுறுசுறுப்பு, புத்தி தெளிவு, நினைவாற்றல் முதலானவை உண்டாகும். மேலும் இதனால் இடுப்பு, கழுத்துவலி, தலைவலி, அடுக்கு தும்மல், மூச்சு திணறல் போன்ற நோய்கள் குணமாகும்.
சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ள புறசிகிச்சை முறைகள் மருந்தில்லாமல் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சித்தர்களால் கடைபிடிக்கப்பட்ட இந்த சிகிச்சை முறைகளை அலட்சியபடுத்தாமல் அதனை பயன்படுத்தி நோயற்ற வாழ்வை வாழ்வதுடன் அடுத்து வரும் தலைமுறையினரையும் பாரம்பரிய வைத்தியமான சித்த மருத்துவத்தை நோக்கி அழைத்து செல்வோம்.
- உணவு முறை மாற்றங்களும், வாழ்வியல் நெறிமுறைகளும் குடல் புண் உண்டாக முக்கிய காரணமாக உள்ளன.
- மதுப்பழக்கமும், புகையும் குடல் உறுப்புகளின் சளி சவ்வினை சிதைத்து குடல் புண்ணை உண்டாக்குவதாக உள்ளன.
முதுமையில் மிகப்பெரும் சவாலாக இருக்கும் நோய்நிலைகளுள் ஒன்று 'குடற்புண்`. ஏனெனில் முதுமையில் 3 முதல் 10 சதவீத்ம வரை இறப்புகள் குடல் புண்ணால் உண்டாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குடல்புண் நோய்நிலையானது மீண்டும் மீண்டும் வந்து பல்வேறு தொந்தரவுகளை தரக்கூடியதாக இருப்பது கூடுதல் வருத்தம் தான்.
'பெப்டிக் அல்சர்' எனப்படும் 'குடல் புண்' நோய்நிலையானது, பெரும்பாலும் இரைப்பையில் அல்லது முன்சிறுகுடலில் அதிகம் ஏற்படுவதாக உள்ளது. உணவுக்குழாயின் அடிப்பகுதி இரைப்பை அமிலத்துடன் தொடர்புடையதால் சிலருக்கு அப்பகுதியில் ஏற்படக்கூடும். குடலின் சளிச்சவ்வு சிதைத்து அங்குள்ள திசுக்கள் சிதைவதால் இத்தகைய புண் உண்டாகின்றது. பலருக்கு குறிகுணம் இல்லாமலே குடற்புண் உண்டாகி திடீரென பல்வேறு பின்விளைவுகளை உண்டாக்ககூடும்.
உணவு முறை மாற்றங்களும், வாழ்வியல் நெறிமுறைகளும் குடல் புண் உண்டாக முக்கிய காரணமாக உள்ளன. எச்.பைலோரி எனும் கிருமியால் இரைப்பை புண் ஏற்படுவதாகவும் நவீன அறிவியல் கூறுகின்றது. தூக்கம் தடைபடுவதாலும், மனச்சிக்கலாலும், மலச்சிக்கலாலும் கூட குன்ம நோய் (குடல் புண்) உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். மதுப்பழக்கமும், புகையும் குடல் உறுப்புகளின் சளி சவ்வினை சிதைத்து குடல் புண்ணை உண்டாக்குவதாக உள்ளன.
குடல் புண்ணை உண்டாக்குவதில் அதிகப்படியான இரைப்பை அமில சுரப்பும், அதிகப்படியான பித்தநீர் சுரப்பும் காரணமாக உள்ளன. அத்துடன் முதுமையில் எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணி மாத்திரைகளும், இதய நோயாளிகள் அவசியமாக எடுத்துக்கொள்ளும் ஆஸ்பிரின் மாத்திரைகளின் தொடர் பயன்பாடும் சிறுகுடலில் புண்ணை உண்டாக்க கூடும். ஆகவே மருத்துவர் ஆலோசனைப்படி நோய்க்காரணத்தை நாடி, மருந்துகளை நாடுவது நல்லது.
சித்த மருத்துவத்தில் குடல் சார்ந்த புண் 'குன்மம்' என்று குறிப்பிடப்பட்டு எட்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. "தொடர் வாத பந்தமலாது குன்மம் வராது" என்கிறது சித்த மருத்துவப் பாடல் வரிகள். அதாவது குடலில் சேரும் அதிகப்படியான வாயுவின் மாறுபாட்டால், குடல்புண் உண்டாவதாக அறியப்படுகின்றது. ஆக வாதக் குற்றத்தை நல்லநிலையில் வைக்கும் உணவும், மருந்தும் குடல்புண்ணைத் தடுக்கவும், தீர்க்கவும் எளிய வழிமுறை. சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அதிமதுரம், திரிபலை, கடுக்காய், வல்லாரை, சோற்றுக்கற்றாழை, வில்வம், மாதுளை போன்ற மூலிகைகளும், ஏலக்காய், சீரகம், சோம்பு, வெந்தயம், பெருங்காயம், மஞ்சள், கசகசா ஆகிய அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளும் குடற்புண் நோய்நிலையில் நல்ல பலன் தருவதாக உள்ளன.
குடல் புண்ணிற்காக அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகை அதிமதுரம். அதிக இனிப்பு சுவை உடையது. இதில் உள்ள 'கார்பனாக்சலோன்' வேதிப்பொருட்கள் குடல் புண்ணை ஆற்றுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள 'அதிமதுர சூரணம்' எனும் மருந்தை பயன்படுத்துவதும் நற்பலன் தரும்.

சோற்றுக்கற்றாழையை மடல் நீக்கி பயன்படுத்த குடல்புண்ணை ஆற்றுவதில் நற்பலன் தரும். இதற்கு அதிகரித்த பித்தத்தைக் குறைக்கும் செய்கை உண்டு. சோற்றுக்கற்றாழை உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை நீரில் அலசி, பாலுடன் சேர்த்து சாறாக்கி குடித்து வர புண்ணை ஆற்றும்.
கடுக்காயில் உள்ள 'சிபுளினிக் அமிலம்' எனும் வேதிப்பொருள் குடல்புண்ணை ஆற்ற உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்பு. அதே போல் திரிபலை சூரணம் எனும் சித்த மருந்துடன் நெய் சேர்த்து எடுத்துக்கொள்ள குடல் புண் நோய்நிலையில் நல்ல பலன் கிடைக்கும். குடல்புண் என்றதுமே காலம் காலமாக வீட்டு வைத்தியமாக புழக்கத்தில் உள்ள சித்த மருத்துவ மூலிகை 'மணத்தக்காளி' தான். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய கீரை வகை இது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள மன அழுத்தம் போக்கி குடல் புண்ணையும் ஆற்றும். சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ஏலாதி சூரணம், வில்வ பழ மணப்பாகு, மாதுளை மணப்பாகு, வில்வ பழ லேகியம் ஆகிய எளிய மருந்துகள் குடல்புண் நோய்நிலையில் நல்ல பலன் தரக்கூடும். இவை பித்தத்தைக் குறைத்து குடலையும், உடலையும் நலப்படுத்தும்.
அதே போல் எளிய கடைசரக்குகளாகிய ஓமம், கசகசா இவற்றை சம எடை எடுத்து பொடித்து அதற்கு சமஎடை பனைவெல்லம் சேர்த்து லேகியம் போல அரைத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள குன்ம நோய்நிலையில் நல்ல பலன் தரும். அதனால் உண்டாகும் வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி இவையும் நீங்கும். சித்த மருத்துவத்தில் முட்டை வெண்கருவைக் கொண்டு செய்யப்படும் 'அண்ட லேகியம்' எனும் மருந்தும் குடல்புண்ணை ஆற்றுவதில் சாலச்சிறந்தது.
எளிய அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு களாகிய ஏலக்காய், சீரகம், கசகசா இவற்றை சம எடை எடுத்து பொடித்து சூரணமாக்கி அவ்வப்போது பாலில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வயிற்றுப்புண்ணுக்கு நல்ல பலனளிக்கும். சீரகத்தை பொடித்து வெண்ணெயில் கலந்து எடுத்துக்கொள்ள குன்மம் தீரும் என்கிறது சித்த மருத்துவம். பெருங்காய சூரணம் எனும் மருந்தும் வாதம் (வாயு) சார்ந்த குன்ம நோயில் நற்பலன் தரும்.
தமிழர்களின் பாரம்பரியத்துடனும், ஆன்மீகத்துடனும் பயணித்து வரும் 'மஞ்சள்' எனும் கடைச்சரக்கு குடல்புண்ணை ஆற்றுவதோடு, குடல் புற்று வரை வராமல் தடுக்கும் தன்மையும் உடையது. அவ்வப்போது மஞ்சளை பாலில் சேர்த்து எடுப்பது குடலுக்கு நல்லது.
அதில் உள்ள 'குர்குமின்' எனும் இயற்கை வேதி நிறமி பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. இது காக்ஸ் நொதிகளை தடுப்பதன் மூலமும், புண்களை உண்டாக்கும் காரணிகளான இன்டெர்லுகின், டி.என்.எப் இவற்றை தடுத்து அழற்சியை சரிசெய்யும் தன்மையையும் உடையது.
குடல்புண் நோய்நிலையில் உணவு முறை மாற்றங்கள் மிகப்பெரிய அளவில் குறிகுணத்தைக் குறைக்க உதவும். நேரம் தவறி எடுக்கும் உணவும், நேரத்திற்கு எடுக்கும் தவறான உணவு வகைகளும் குடல்புண்ணை அதிகரிப்பதாக உள்ளன.
காலையில் எழுந்ததும் தேநீர் அல்லது காபி குடிப்பது முதுமையில் பலர் வாடிக்கையாக உள்ளது. தினசரி 2 அல்லது 3 முறைக்கு மேலாக தேநீர் எடுப்பதையும் விரும்புகின்றனர். தேநீர் எடுத்துக்கொள்வது இரைப்பை சுரப்பை அதிகப்படுத்துவதால், இரைப்பை மற்றும் குடல்புண் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

காபியை பற்றி பல்வேறு ஆய்வுகள் பல்வேறு முடிவுகளை கூறுகின்றன. எனவே குடல்புண் உள்ளவர்கள் காபியை குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது. மாற்றாக பாலில் ஏலக்காய் சேர்த்து எடுத்துக்கொள்ள குடல் புண் ஆறக்கூடும். ஏலக்காயில் உள்ள இயற்கை வேதிப்பொருட்கள் 70 சதவீதம் வரை குடல்புண்ணை ஆற்றுவதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேநீர், காபியைப் போல் புளிப்பான உணவுகள் வயிற்றில் அமில சுரப்பினை தூண்டி புண்ணை அதிகரிக்கும் தன்மை உடையது என்பதால் புளிப்பு பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றையும், புளிப்பு ரசம், மாமிச சூப் வகைகளையும் வயிற்றுப்புண் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற கடுகாரமுள்ள அஞ்சறைப்பெட்டி சரக்குகளை தவிர்ப்பதும் நல்லது. உண்ணும் உணவில் முதல் பிடி சோற்றில் உருக்கிய நெய்யிட்டு பிசைந்து உண்பதற்கு 'அன்ன சுத்தி' என்று பெயர். குடல்புண் உள்ளவர்கள், இதே போல் நெய் உணவில் சேர்த்துக்கொள்வது வாதம் மற்றும் பித்தத்தைக் குறைத்து நோய்நிலையில் நல்ல பலன் தரும்.
பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில், இந்தியாவிற்குள் நுழைந்த மிளகாய் நமது பாரம்பரிய மருத்துவ மூலிகையான மிளகினை இடமாற்றம் செய்துவிட்டது. இன்று அதிகம் பயன்படுத்தும் மிளகாய் குன்மத்தையும், மூல வியாதியையும் உண்டாக்கும் என்கிறது சித்த மருத்துவம்.
மிளகாயில் உள்ள 'கேப்சைசின்' எனும் வேதிப்பொருள் இரைப்பை மற்றும் குடல் சளிச்சவ்வினை சிதைத்து குடல்புண்ணை உண்டாக்குவதாக நவீன அறிவியலும் கூறுகின்றது. ஆக முதுமையில் மட்டுமல்லாது எல்லா பருவத்திலும் குடல்புண்ணை தடுக்கவும், தீர்க்கவும் மிளகாயை ஓரங்கட்டுவது நல்லது.
முதுமையில் உடல் உறுப்புக்கள் செயல்பாடு குறைவதால் சீரணமும் இயல்பாகவே குறையும். ஆக, சீரணத்தை மேம்படுத்த 'வஜ்ராசனம்' எனும் யோகாசன இருக்கை நிலையை, உணவு உண்ட பின் மேற்கொள்வது சிறந்த பலன் தரும்.
இந்த அவசர உலகத்தில், உணவை நன்றாகமென்று விழுங்க கூட நேரமின்றி, அப்படியே விழுங்குவதால் சேதாரம் குடலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தான். குறிப்பாக வாழை இலையில் உண்ணும் பழக்கம் எப்போது மறந்து போனதோ, அப்போது குடல்புண் போன்ற நோய்கள் தலைவிரித்தாட துவங்கிவிட்டன. முக்கியமாக நெகிழி (பிளாஸ்டிக்) தட்டில் உணவு உண்பது பிற்காலத்தில் தீராத நோய்நிலைகளை உண்டாக்ககூடும். குடல்புண் நாட்பட்ட நிலையில் குடல் சவ்வில் துளை, அதில் ரத்தம் வடிதல், ரத்த வாந்தி, மலம் கறுப்பு நிறமாக வெளியேறுதல், பின்னாளில் கொடிய புற்றுநோய் போன்ற அடுக்கடுக்கான பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும். எனவே முதுமையில் குடல்புண்ணுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்வது, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். ஆயுட்காலத்தைக் கூட்டும்.
நோய்களை அவற்றின் துவக்க நிலையிலேயே வேருடன் பிடுங்கி எறிய வேண்டும். இல்லாவிடில் மரமாய் வளர்ந்து, ஆரோக்கியத்தின் ஆணி வேரை அடியுடன் சாய்த்து, இறப்புக்கு வழிகோலும். எனவே முதுமையை கொண்டாட விரும்பினால், உணவை மருந்தாக்கி, விருந்தை துறந்து, ஆரோக்கிய கண் திறந்து, நடைபோடுவது நல்லது.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
- 8-ம் இடத்தில் கிரக அமைப்புகள் சரியாக அமையவில்லை என்றால் அதைத்தான் மாங்கல்யதோஷம் என்று சொல்வார்கள்.
- சில ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் உடைய பெண்ணை திருமணம் செய்தால் கணவன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூட பூச்சாண்டி காட்டுவார்கள்.
பெண்களின் ஜாதகத்தில் கிரகண அமைப்புகள் சரியாக இல்லாவிட்டால் திருமணம் கைகூடுவது தாமதம் ஆகி கொண்டே இருக்கும். ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் கோச்சார நிலையில் தோஷங்கள் காணப்பட்டால் பெண்களுக்கு உரிய வயதில் திருமணமாவதை அவை தடுக்கும்.
பொதுவாக ஜோதிட ரீதியாக சொல்லும் போது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8-வது இடத்தை முக்கியமாக சொல்வார்கள். ஏனெனில் 8-ம் இடம் என்பதுதான் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமாகும். பெண்களில் தாம்பத்யம் மற்றும் ஆயுள் ஆகியவற்றையும் இந்த இடம்தான் தீர்மானிக்கும்.
8-ம் இடத்தில் கிரக அமைப்புகள் சரியாக அமையவில்லை என்றால் அதைத்தான் மாங்கல்யதோஷம் என்று சொல்வார்கள். ஜோதிடத்தில் 2-ம் இடத்து கிரகம் 8-ம் இடத்தையும், 8-ம் இடத்து கிரகம் 2-வது இட கிரகத்தையும் பார்க்கும். இந்த கிரக அமைப்பு சுத்தமாக இருக்க வேண்டும். இந்த இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு-கேது ஆகியவை இருந்தால் அது அவ்வளவு திருப்தியாக கருதப்படமாட்டாது.
8-ம் இடத்தில் இந்த கிரகங்கள் இருப்பதையே ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் என்று சொல்கிறார்கள். எனவேதான் மணமகன் குடும்பத்தார் ஒரு பெண்ணின் ஜாதகத்தை பொருத்தம் பார்க்கும் போது முதலில் அந்த பெண்ணின் ஜாதகத்தில் 8-வது இடத்தின் கிரக அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பார்கள்.
8-ம் இடத்தில் சரியில்லாதபடி கிரகங்கள் இருந்தால் அந்த அமைப்புக்குரிய பெண் அதிகமாக பேசுவாள். வாக்குவாதம் செய்வாள் என்றெல்லாம் ஜோதிடர்கள் கணிப்பதுண்டு. இந்த வாக்குவாதம் கணவன் அல்லது கணவன் குடும்பத்தாருடன் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்றும் கருதுவார்கள்.
சில ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் இருந்தாலே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வந்துவிடும் என்று சொல்லி விடுவதுண்டு. மாங்கல்யதோஷம் மிக கடுமையாக இருக்கும் ஜாதகத்துக்குரிய பெண் பிரிந்து வாழ நேரிடும் என்றும் ஜோதிடர்கள் பயம் காட்டுவார்கள். சில ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் உடைய பெண்ணை திருமணம் செய்தால் கணவன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூட பூச்சாண்டி காட்டுவார்கள்.
இதனால்தான் மாங்கல்ய தோஷம் என்றதும் பெரும்பாலான மணமகன் வீட்டார் அந்த பெண்ணின் ஜாதகத்தை ஓரங்கட்டி விடுவார்கள். ஆனால் 8-ம் இட கிரக அமைப்பில் குறை இருப்பதாக கருதப்படும் எல்லா பெண்ணின் ஜாதகத்தையும் கண்ணை மூடிக்கொண்டு மாங்கல்ய தோஷம் என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் மற்ற கிரக அமைப்புகள் பார்வைபடும் பட்சத்தில் மாங்கல்யதோஷத்தின் வீரியம் குறைந்து விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அதாவது 8-ம் இடத்தை சுப கிரகங்களான சுக்கிரன், குரு பார்த்தால் மாங்கல்யதோஷம் வலுவில்லாமல் இருக்கும். இத்தகைய ஜாதக அமைப்பை பெரும்பாலான ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் என்று சொல்வதில்லை.
எனவே மாங்கல்யதோஷம் பற்றிய தகவல்களை நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷத்துக்குரிய பெண் குடும்பத்தாரிடம் பல்வேறு பரிகாரங்களை சொல்வதுண்டு. மாங்கல்ய தோஷம் இருப்பது உறுதியாக தெரிய வந்தால் சில எளிய பரிகாரங்கள் மூலம் அதை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். மாங்கல்யதோஷத்தை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.
மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறப்படும் ஜாதகத்துக்குரிய பெண் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வழிபட்டு வந்தாலே 99 சதவீத ேதாஷத்தில் இருந்து விடுபட்டுவிட முடியும். வாய்ப்பு இருக்கும் பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபடலாம்.
வசதி உள்ள பெண்களாக இருந்தால் அதற்கேற்ப பரிகாரம் செய்யலாம். எத்தனையோ ஏழை பெண்கள் திருமணத்திற்கு ஒரு பவுன் மாங்கல்யம் வாங்ககூட வசதி இல்லாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான திருமாங்கல்யத்தை தங்கத்தில் தானமாக வாங்கி கொடுத்தால் எவ்வளவு பெரிய மாங்கல்ய தோஷமாக இருந்தாலும் விலகிவிடும்.
வயதான சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு மற்றும் தட்சணை வைத்து கொடுத்து ஆசீர் பெறலாம். பெண்களை வீட்டுக்கு அழைத்து சுமங்கலி பூஜை நடத்தலாம். இத்தகைய பூஜையை சற்று பெரிய அளவில் செய்ய வாய்ப்பிருக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலி பெண்களை அழைத்து மகாலட்சுமி பூஜை நடத்தலாம்.
இதைதவிர ஹோமம் வளர்த்து பூஜை செய்வதன் மூலமாகவும் மாங்கல்ய தோஷத்தில் இருந்து விடுபட முடியும். ஜோதிடரிடம் கேட்டு உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட நாளில் வீட்டிலேயே மிருத்தியுஞ்சய ஹோமம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஹோம வழிபாடு மாங்கல்யதோஷத்தை நிவர்த்தி செய்யும் மிக மிக வலுவான பூஜையாகும்.
வன்னி மரத்திற்கு அடியில் இருக்கும் விநாயகரை மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் வழிபட வேண்டும். அன்றைய தினம் 9 கன்னிப்பெண்களுக்கு ஆடை தானம் செய்தால் மாங்கல்யதோஷம் விலகும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிரன் ஓரை நேரத்தில் வயது முதிர்ந்த சுமங்கலி பெண்களிடம் மங்கலகரமான பொருட்களை கொடுத்து அவர்களது காலில் விழுந்து ஆசீ பெற வேண்டும். அடிக்கடி இப்படி செய்து வந்தால் மாங்கல்யதோஷம் விலகும் என்று ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
சில ஜோதிடர்கள் மாங்கல்யதோஷத்தை கழிப்பதற்கு சில நடைமுறைகளை சொல்லி இருப்பதும் தமிழகத்தில் பழக்கத்தில் இருக்கிறது. புதிதாக தங்கத்தில் தாலி வாங்கி அதை குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்துக்கு முன்பு வைத்து வணங்கி அதை மாங்கல்யதோஷத்தில் உள்ள பெண்கள் கழுத்தில் கட்டி விடுவார்கள். 2 மணி நேரம் கழித்து இந்த தாலியை அவிழ்த்துவிடுவார்கள். எந்த பெண் தாலியை கட்டினாரோ அதே பெண்தான் தாலியை அவிழ்க்க வேண்டும்.
பிறகு அந்த தாலியை குல தெய்வம் கோவிலில் காணிக்கையாக செலுத்தி விட வேண்டும். இப்படி செய்தால் மாங்கல்ய தோஷம் கழிந்து விடும் என்று கருதுகிறார்கள். இத்தகைய பரிகார பூஜையை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாது என்பது முக்கிய குறிப்பாகும்.
செவ்வாய்க்கிழமைகளில் எமகண்டம் இருக்கும் நேரத்தில் பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து விராலி மஞ்சள் மாலை சூடி மஞ்சள் கயிறு வைத்து சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், பானகம் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். அப்போது பைரவர் சன்னதிக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசி பெற்றால் தோஷம் விலகும் என்பது ஐதீகமாகும்.
இன்னும் இந்த தோஷத்தை சிறப்பாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு உள்ளது என்பதை ஜோதிடர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதனடிப்படையில் கிரகத்துக்கு ஏற்ப பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி உண்டாகும்.
ராகு மூலம் மாங்கல்யதோஷம் ஏற்பட்டிருப்பதாக ஜோதிடர் தெரிவித்தால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். துர்க்கைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து எலுமிச்சை சாதம் படைத்தும் வழிபடலாம்.

ஆலயத்துக்கு சென்று மாங்கல்யதோஷம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஜோதிடர் தெரிவித்தால் முதலில் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கல குடியில் இருக்கும் ஆலயத்துக்கு தான் செல்ல வேண்டும். அந்த ஆலயத்தில் உள்ள மங்கலநாதரான பிராணநாத சுவாமியையும், மங்கல நாயகியான மங்களாம்பிகையையும் வழிபட்டாலே போதும் மாங்கல்ய தோஷத்தின் கடுமை உடனடியாக குறைந்து விடும்.
இந்த தலம் நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கிய அபூர்வ தலமாகும். இங்கு மங்கள நாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. மங்களாம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் எவ்வளவு பெரிய மாங்கல்ய தோஷமும் விலகிவிடும் என்பது ஐதீகமாகும்.
மங்களநாயகியை எந்த அளவுக்கு பெண்கள் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு மாங்கல்ய தோஷம் விலகி விரைவில் திருமணம் கைகூடும். அதுமட்டுமின்றி மற்ற தோஷங்களையும் விலக வைத்து தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தை தரும் சிறப்பு திருமங்கலகுடி தலத்துக்கு உண்டு.
இந்த தலத்தில் பூர்வ ஜென்ம தோஷங்கள், பித்ரு தோஷங்கள் விலக வழிபாடுகள் உள்ளன. எனவே மாங்கல்யதோஷம் என்று ஜாதக அடிப்படையில் கூறப்பட்டால் அதற்குரிய பெண்கள் திருமங்கல குடியில் பூஜை செய்து எளிதில் மனதில் திருப்தி ஏற்படுத்திவிட முடியும்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பிரளயநாதர் கோவில், புதுக்கோட்டை கல்யாண ராமர் கோவில், தஞ்சை மாவட்டம் கீழவாசல் வல்லவ விநாயகர் கோவில், திண்டுக்கல் அபயவரதர் ஆஞ்சநேயர் கோவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள விஸ்வநாதர் கோவில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள நாகம்மாள் கோவில், மதுரையில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் ஆகியவையும் மாங்கல்யதோஷ பரிகாரத்துக்குரிய ஆலயங்களாகும்.
- 7 மடங்கு அதிகமான சத்தத்தை விலங்குகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
ஒளிரும் பட்டாககளும், அவை எழுப்பும் சத்தங்களும் பண்டிகையை உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் கொண்டாட வழிவகுக்கும். அதேநேரம் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பட்டாசுகளின் திடீர் வெளிச்சமும், அதிர வைக்கும் சத்தமும் அச்சுறுத்தலாகவே அமையும்.
பட்டாசுகள் வெடிக்கும்போது நாம் கேட்பதை விட, 7 மடங்கு அதிகமான சத்தத்தை செல்லப் பிராணிகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய திடீர் சத்தங்கள் அவற்றின் உயிருக்கே ஆபத்தாகவும் மாற வாய்ப்பு உள்ளது. தீபாவளியின் போது பட்டாசு சத்தத்தில் இருந்து உங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க சில குறிப்புகள்.
தீபாவளி பண்டிகை அன்று அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கும் நேரத்துக்கு முன்பாகவே, உங்கள் செல்லப்பிராணிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். இதனால் வெடிகளின் பயத்தில் இருந்து அவை தப்பிக்க முடியும். அதேபோல பட்டாசு சத்தத்துக்கு உங்கள் செல்லப்பிராணி அதிகமாக பயப்படும் என்று நீங்கள் எண்ணினால், முன்னதாகவே கால்நடை மருத்துவரை அணுகி அதன் பதற்றத்தை குறைப்பதற்கான மருத்துகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
தீபாவளி அன்று ஏற்றிவைக்கும் தீபங்கள் மற்றும் அலங்கார மெழுகுவர்த்திகளை, செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் வைப்பதை தவிர்க்கவும். பட்டாசு சத்தத்துக்கு பயந்து உங்கள் செல்லப்பிராணி சோபா, கட்டில் போன்றவற்றுக்கு அடியில் ஒளிந்துகொள்ள நேரிடலாம். அத்தகைய சமயங்களில் அவற்றை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே இழுத்து வருவதைத் தவிர்க்கவும். அவை அந்த சூழ்நிலையை இயல்பாக கையாள்வதற்கு உதவி செய்யவும்.
பலரும் மொட்டை மாடிகளில் கூண்டு அமைத்து முயல்களை வளர்க்கிறார்கள். தீபாவளி பண்டிகை சமயத்தில் மட்டும் வீட்டுக்குள்ளேயே அவற்றுக்கு பாதுகாப்பான முறையில் கூண்டுகள் அமைத்து பராமரிக்கலாம்.
பட்டாசு சத்தத்தால் விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படுவதை உங்களது குழந்தைகளுக்கு தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இது வருங்காலத்தில் விலங்குகளின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.
- நாடி ஜோதிடத்திலேயே ‘ஜீவ நாடி ஜோதிடம்’ என்று ஒரு பிரிவினைக் கூறுகின்றார்கள்.
- முதலில் எந்த சொல், சிந்தனை, செயல் என்றாலும் ஒருவருக்கு நம்பிக்கை வர வேண்டும்.
அகத்திய மாமுனிவரைப் பற்றியும், மற்ற சித்தர்களைப் பற்றியும் அவ்வப்போது பார்ப்போம் என்று கூறியிருந்தோம். பலரும் 5000 வருடங்களுக்கு முன்பு நடந்தவைகளைப் பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் இப்போது நம்மிடம் பேசுகின்றார்களா? நமக்கு இவர்கள் மூலம் வழி பிறக்கின்றதா? என்று கேட்கின்றனர்.
இன்றைக்கு கொடி கட்டி பறக்கும் சித்த வைத்தியம் அகத்திய மாமுனிவர் அறிந்தது தானே! இது போன்று ஜோதிடம், நாடி ஜோதிடம் இவைகளும். பழைய சித்தர்கள், முன்னோர்கள் கூறியது தானே. பல முனிவர்களின் நாடி ஜோதிடங்கள்தான் இப்போதும் உள்ளன. தற்போது கலியுகம். அதனால் கலப்படம் சில இடங்களில் செய்யலாம். அதனை விட்டு தூய்மையான ஒன்றினைப் பற்றி பேசுவோமே. நாடி ஜோதிடத்திலேயே 'ஜீவ நாடி ஜோதிடம்' என்று ஒரு பிரிவினைக் கூறுகின்றார்கள். என் கணவரின் தாயார் ஜோதிடத்தில் 'புலி' என்பதால் இவற்றினை நான் கேட்டறிந்துள்ளேன். ஜீவ நாடி ஜோதிடத்தில் அப்போதே பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கூறுவார்கள்.
பல முனிவர்களின் கூற்றாக இந்த ஜீவ நாடி ஜோதிடம் உள்ளது. பலருக்கு பொதுவாக ஜோதிடம், நாடி ஜோதிடம் இவற்றில் நல்ல அனுபவங்கள் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நன்கு தெரிந்தவர்களின் மூலம் அனுபவம் வாய்ந்தவர்களிடம் செல்வது நல்லது. தீர விசாரித்து செல்வதே எதற்காகவும் எப்போது நீங்கள் அணுகினாலும் நல்லது. சரி இப்போது 'அகத்தியவர் ஜீவ நாடி பாபு' என்பவரைப் பற்றியும் அகத்தியரின் அருளையும் அறிந்து கொள்வோம்.
சில முறை என் கணவர் ஸ்ரீபால் இவரைப் பற்றி என்னிடம் பேசியுள்ளார். இவர் அதிகம் வெளியில் தெரியாத காலத்திலேயே பல பிரமுகர்கள் இவரிடம் சென்றதைப் பற்றி என்னிடம் ஸ்ரீ பால் குறிப்பிட்டு இருந்தார். இருந்தாலும் இன்றைய யூடியூப் சேனல்களில் இவர் மிகப் பிரபலம். ஜெர்மன், ஜப்பான் நாட்டினர் கூட இவரிடம் 'ஆன்லைன்' மூலம் தொடர்பு கொள்வதாக கேள்விப்படுகின்றேன்.
ஒரு சிறிய அறையில் கையில் ஓலை இல்லாமல் கேட்போரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் இவரைக் காண காலை 6 மணி முதல் அங்கு ஒரு பேப்பரில் பெயர் எழுதி வைத்து காத்திருக்கின்றனர். நீண்ட கும்பல் காத்து இருக்கின்றது. சாதாரண பதிலாக இசை தொனியில் கையில் ஏடு எதுவும் இல்லாமல் நம்முடைய எதிர்காலத்தை படிக்கின்றார். இதையெல்லாம் நான் அமைதியாய் சென்று ரோடு ஓரத்தில் நீண்ட கியூவில் நின்று பார்க்கவில்லை. ஆனாலும் இவரிடம் ஜோதிடம் கேட்டு தெரிந்த ஒரு குடும்பம் மூலமாக பின்னர் நான் அறிந்த செய்திகள் இவை.
இதற்கு முன்பு நடந்த நிகழ்வினையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இது ஜீவ நாடி ஜோதிடர் பாபு பற்றியது என்பதனைக் காட்டிலும் அகத்தியர் ஜீவ நாடி மூலம் சொல்லும் தீர்வுகளைத்தான் நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
திடீரென ஒரு நாள் எதிர்பாராத விதமாக இவரை சந்திக்க நேர்ந்தது. யூடியூப்களில் நான் இவரைப் பார்த்துள்ளேன். என் பெயரைக் கூட அவர் அறிய வேண்டிய அவசியம் இல்லை. 'கமலி ஸ்ரீபால்' என நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். இசைத்தொனியில் வெற்றிடத்தில் இருந்து நாடி படித்தார். என்னைப் பார்த்து 'என்னம்மா- வள்ளலார் போல், முனிவர்கள் போல் உடலினை எப்படி பிரித்து செல்வது. ஓளி உடல் பயணம் பற்றி ரொம்ப யோசிக்கின்றீர்களா?' என கேட்டு மேலும் படித்தார்.
சூரியன், புதன், அணு, வெப்பம், மாசு, விண்வெளி என நாசா விஞ்ஞானி போல் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் பேசினார். சில செய்திகள் அதில் எனக்கு புரிந்தாலும் இங்கு எழுத முடியவில்லை. நான் எத்தனை காலமாக ஒளி உடல் பயணம் பற்றி நினைத்து நினைத்து ஆதங்கப்பட்டிருப்பேன். முன்பின் தெரியாத இவருக்கு எப்படி அறிய முடிந்தது. அவர் சொன்ன பதில் 'உங்களிடம் இதனை விளக்கச் சொல்லி அகத்தியர் என்னிடம் கூறினார்' என்றார்.
அகத்தியரிடம், கோரக்கரிடம், திருமூலரிடம் மற்றும் வள்ளலாரிடம் நான் கேட்டது, மனதுக்குள் பேசியது பிரபஞ்சத்தில் இருந்து இப்படி ஒரு பதிலாக வருகின்றதோ என்று தோன்றியது. இப்போதெல்லாம் இவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் போது சற்று ஜாக்கிரதையாய் இருக்கிறேன்.
ஆத்மா நம் எண்ணக் குவியல்கள், எண்ண மலைகள் மற்றும் பிரபஞ்சத்தை மிஞ்சும் எண்ண ஓட்டத்திற்க்குள் அணுவின் ஒரு சிறு புள்ளியாக அமைந்து இருக்கின்றது. இத்தனை சிறிய புள்ளி தானே என சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது. நம் எண்ண ஓட்டங்களை நீக்கி இந்த ஆன்மாவினை, நம்முள் இருக்கும் இந்த கடவுளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதனை வைத்துதான் பிரபஞ்ச சக்தியோடு நாம் பேச முடியும். இணைய முடியும் என்கின்றனர்.
முதலில் எந்த சொல், சிந்தனை, செயல் என்றாலும் ஒருவருக்கு நம்பிக்கை வர வேண்டும்.
இதன் பொருளாக நம் ஆத்மாவும் பிரபஞ்ச சக்தியும் பிரம்மா என்ற உணர்வினை யோகா முறையிலும், ஆன்மீக தியானப் பயிற்சியிலும் கற்ப்பிக்கின்றனர்.
நான் பரம்பொருளாக இருக்கின்றேன் என்ற உணர்வு ஏற்படும் போது கோபம், காமம், வேகம், கடும் சொல் இப்படி பல தீய குணங்கள் தானே விலகி விடுகின்றன. இங்கு கடவுளை வெளியில் சென்று தேடுவதில்லை. கடவுள்-உள்ளே சென்று- உன் உள்ளே சென்று அந்த ஒளியினைத் தேடு என்பதாகும்.
அந்த ஒளியினைத்தேட எண்ணங்கள், கர்மாக்கள் விலக நமக்கு ஆசைகள் விலக வேண்டும்.
ஒரு வித்தை கற்க ஒரு ஆசிரியர் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் யோகா, தியானம், உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, ஆன்மீக பயணம் இவற்றிற்கும் ஒரு ஆசிரியர், ஒரு குரு அவசியம். பலருக்கு தாய், தந்தை, தாத்தா, பாட்டி இவர்களே அடிப்படைகளை சொல்லித் தருபவர்களாக இருக்கலாம்.
அந்த வகையில் எனக்கு அந்த வாய்ப்பு தாய் வழிபாட்டி டாக்டரின் (தாத்தா) மனைவி, தந்தை வழி பாட்டி வக்கீலின் (தாத்தா) மனைவி ஆகியோரால் கிடைத்தது. இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே பல சுலோக புத்தகங்களை விளக்கி மனப்பாடம் செய்ய வைத்தனர். யோகா பழக்கி கொடுத்தனர். பல்லாங்குழி முதல் கேரம், செஸ் என்னுடன் விளையாடினர். சிறு சிறு தையல், சமையல் கற்று தந்து இரவில் புராண கதைகள் சொல்லி அன்று இவர்கள் எனக்கு உபயோகமான, பயனுள்ள செல்போனாக இருந்தனர்.
சரித்திர உண்மைகள், நேருஜி அவர்களின் பல செய்தியினை எனது மூளையில் பதிய வைத்தனர். இன்றும் அநேக தாய்மார்களும், தாத்தா பாட்டிகளும் இவைகளை வருங்கால சந்ததியினருக்கு செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
பலருக்கு சித்தர்களின் ஜீவ சமாதி அருகே குடியிருப்பு இருக்கும். இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வாய்ப்பினை தவற விடாமல் வியாழக்கிழமை, பவுர்ணமி, முடிந்தால் அன்றாடம் கூட இவர்கள் அங்கு செல்லலாம். அங்கே சுமார் 20 நிமிடம் அமைதியாய் உட்கார்ந்திருங்கள். எண்ண ஓட்டத்தின் பின்னால் செல்லாதீர்கள். முடிந்தால் மூச்சினை கவனியுங்கள். இப்படி தொடர்ந்து செய்யும் போது கோபம் கட்டுப்படும். மனம் தெளிவுப்படும். இப்படி பல நன்மைகளைக் கூறலாம். உங்களை வழிகாட்ட மனித உருவில் தானே ஒரு குரு வருவார்.
குரு பூஜையில் அதிலும் நான் பார்த்த வரையில் நிறைய, அகத்திய மாமுனிக்கு குரு பூஜை நடப்பதனை அறிந்துள்ளேன். இவரைப் பற்றி படித்து பார்ப்பது தமிழர்களாகிய நமக்கு அவசியம் என்றே கூறுவேன். சப்த ரிஷிகள் என்பவர்கள் சிவப்பெருமானின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்டவர்கள் அல்லது சிவப்பெருமானோடு இருக்கும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் என்பர். இந்த சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர் என்பர். நான்கு வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளதாகக் கூறுகின்றனர். வேதத்திற்கும் முந்தைய இதிகாசம், புராணங்களில் இவரின் நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தசாவதாரங்களில் ஒன்பது அவதாரங்களிலும் இவரது பங்கு உள்ளது. பத்தாவது அவதாரம் இன்னும் நிகழவில்லை. வட இந்தியாவில் இருந்து தென்னகம் வந்தவர். சிவனிடம் இருந்தே நேராக வந்தவர் என்பர்.
திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பமுனி என்ற பெயரில் இவரது ஜீவ சமாதி உள்ளது. முருகப்பெருமானின் நேரடி சீடர் என்றும் இவரை குறிப்பிடுவர். இந்த காலம் என்று குறிப்பிட்ட காலத்தை வரையிட முடியாது. காலத்தினை கடந்து இருப்பவர் அகத்திய மாமுனி.
இதன் பின்னர் இவரைப் பற்றி நான் சேகரித்த செய்திகள் அதுவும் அவரே கூறியதாக கிடைத்த செய்திகள்.
இவரது தாத்தா ஓலை வைத்திருந்த முறையில் 'ஜீவ-நாடி ஜோதிடம்' படித்தவர். அவர் காலத்திற்குப் பிறகு பாபு அவர்களின் தந்தை நாடி ஜோதிடம் கற்றவர். தந்தையின் முதுமை காலத்தில் இது இவருக்கு தானாகவே வந்த சக்தி என்றனர். எனது கணவர் இவரது தந்தையினை சந்தித்து உரையாடியதன் காரணமாகவே பாபு அவர்களை பற்றியும் ஜீவ நாடியினைப் பற்றியும் வலியுறுத்தி கூறியுள்ளார் என்பதனை உணர முடிந்தது. ஸ்ரீபால், 'ஆன்மீகம்' என்ற பிரிவில் எல்லா மதங்களைப் பற்றியும், காசு, பணம் கடந்த மெய்ஞானம் பற்றியும் எழுத வேண்டும் என்பதனை அடிக்கடி வலியுறுத்துவார். ஏன்? எப்படி? எதற்கு? எதனால் என்ற விஞ்ஞான ஆய்வுகளை செய்யும் நீ இதே கேள்விகளோடு மெய் ஞானத்திற்கு வா என்பார்.
சரி, மீண்டும் ஜீவ நாடிக்கு வருவோம். நாடு, உலகம் இவற்றினைப் பற்றி இவர் கணித்துக் கூறுபவைகள் தப்பாமல் நடக்கின்றது என்பதனை இதில் நாட்டம் கொண்டு பார்ப்பவர்கள் கூறுகின்றனர். பெரிய விசிறி கூட்டமே உள்ளது. ரூ.500 இவரது மிக அதிகப் படியான ஊதிய தொகை என்றனர். தனக்கு இறைவன் கொடுத்த இந்த திறமைக்காக தன்னை பணத்தில் இருந்து தள்ளி வைத்துள்ளார் என்றனர். அவரை எளிதில் அணுகுவது கடினம் என்றனர்.
சித்தர்கள் தங்கள் வேலைகளை தகுந்த, தகுதியான மனிதர்களை தேர்ந்தெடுத்து செய்கின்றனர். சாயம் போல் தவறுகள் தானே வெளுத்து விடுகின்றன. ஜோதிடர் பாபு போன்று வெளியுகத்திற்குத் தெரியாமல் மக்களோடு மக்களாக பலர் இருக்கலாம். ரூ.5-க்கு சிறந்த வைத்தியம் செய்யும் சிறந்த மருத்துவர்களும் உண்டு. ரூ.5-க்கு சாப்பாடு கொடுப்போரும் உண்டு. ஆக இறை சக்தி, பிரபஞ்ச சக்தியில் சித்தர்கள் இவை அனைத்திலும் சில தேர்ந்தெடுத்த மனித உடல்கள் மூலமாக செயலாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர் போலும். அதில் அகத்தியர் ஜீவ நாடி ஜோதிடர் பாபுவும் ஒன்று என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
- யாராவது தப்பு பண்ணிவிட்டாலோ, தாமதமாக வந்தாலோ... அவ்வளவுதான்... கோபத்தில் என்ன செய்வார் என்றே தெரியாது.
- ‘சின்ன பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு’ என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறினார்.
ஹீரோயின்னா ஆப்பிள் மாதிரி இருக்கணும்... பார்க்குறவங்க கண்களுக்கு அப்படி தெரியணும்!
-இப்படி நினைப்பவர் டைரக்டர் ராகவேந்தர் ராவ். அவர் படம் என்றாலே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதனால் தெலுங்கில் அவர் படத்தில் நடிக்க எல்லா நடிகைகளும் ஆசைப்படுவார்கள்.
ஷூட்டிங்கும் சாயங்காலம் ஆறுமணிக்கு மேல் இருக்காது. 6 மணி ஆனதும் ஷூட்டிங் ஓவர். கிளம்புங்க... போய் ரெஸ்ட் எடுங்க என்று எல்லோரையும் அனுப்பி விடுவார்.
அவரது டைரக்ஷனில் அல்லாரி மொகுடு (குறும்புக்கார கணவன்) என்ற படத்தில் எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ராகவேந்தர் ராவ் டைரக்ஷன் என்றதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
ஆனால் ஹீரோ மோகன்பாபு. அவரைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே கேள்விப்பட்டு இருந்தேன். ரொம்ப கோபக்காரர். சில நேரங்களில் அடிக்கவும் செய்வார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்ததால் அவருடன் எப்படித்தான் நடிக்க போகிறோமோ என்ற பயமும் மனதில் இருந்தது.
இருந்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடிக்க தொடங்கினேன். அவரை பொறுத்தவரை நேரம் தவறாமையை கடைப்பிடிப்பவர். அதில் ரொம்ப கவனமாக இருப்பார். 10 மணிக்கு ஷூட்டிங் என்றால் ஐந்து நிமிடம் முன்னதாகவே தயாராக இருப்பார்.
யாரிடமும் அதிகமாக பேசவும் மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். யாராவது தப்பு பண்ணிவிட்டாலோ, தாமதமாக வந்தாலோ... அவ்வளவுதான்... கோபத்தில் என்ன செய்வார் என்றே தெரியாது.
நான் அவரிடமும் நல்ல பெயர் வாங்கியே தீர வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
முதல் நாள் ஷூட்டிங்... அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்தது. முதல் காட்சியே கனவு காட்சி. பாடல்தான். அதை தான் படமாக்கினார்கள்.
பக்கத்து ஷெட்டில் வேறொரு படத்தில் வெங்கடேஷ் நடித்து கொண்டிருந்தார். எங்கள் ஷெட்டுக்கு வந்தவர் என்னை பார்த்தார். எனது மேக் அப்பையும், காட்சியையும் பார்த்து 'ஏம்மா... இப்பதான் சாண்டி படம் பண்ணியிருக்கிறாய். அந்த கேரக்டர் மிகப்பெரிய பெயர் வாங்கி தந்தது. எனவே பார்த்துக்க...' என்றார்.
ஆனால் எனக்கோ படத்துக்கு படம் வித்தியாசமாக நடிக்கணும் என்ற ஆசை. இப்படிப்பட்ட கேரக்டர். இப்படித்தான் நடிக்கணும் என்றெல்லாம் நினைப்பது கிடையாது.
நல்ல கதை. அதற்கேற்ற கதாபாத்திரம்... அதைத்தான் நினைப்பேன். அல்லாரி மொகுடு படத்தில் என்னோடு ரம்யா கிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடித்தார்.
படம் வளர்ந்து கொண்டிருந்தது. நான் நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருவது, டயலாக்குகளை மனப்பாடம் செய்து தப்பில்லாமல் பேசுவது எல்லாவற்றையும் மோகன்பாபு தினமும் கவனித்து இருக்கிறார்.
அவர் அவ்வளவு சீக்கிரமாக யாரையும் பாராட்டமாட்டார். அவரே என்னை பாராட்டினார். 'சின்ன பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு' என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறினார்.

அவரை போலவே நேரம் தவறாமை, தொழில் மீதான ஈடுபாடு ஆகியவற்றை பார்த்ததும் இந்த பொண்ணு நம்மை மிஞ்சி விட்டாள் என்று என்னை பார்த்து பயப்பட்டார். அவருக்கு 2 பையன், ஒரு மகள். என்னைவிட அவரது மகளுக்கு ஒரு வயது தான் அதிகம். அதனால் நாங்கள் தோழிகளாகிவிட்டோம். நேரம் கிடைக்கும் போது ஒன்றாக விளையாடுவோம்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓய்வு நேரத்தில் நாங்கள் 'மியூசிக்கல் சேர்' சுற்றி விளையாடுவோம்.
அதை பார்த்து மோகன்பாபு 'ஏம்மா... நீ எனக்கு ஹீரோயின்தானே...?' என்பார். அதற்குள் அவரது மகள் உள்ளே புகுந்து விடுவாள். 'டாடி... எங்களை விளையாட விடுங்கள்' என்பாள்.
அதை கேட்டு எல்லாம் உங்கள் ராஜ்யம்தான். விளையாடுங்க... விளை யாடுங்க.. என்பார்.
இப்படி அந்த குடும்பத்துடன் ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடருகிறது. அவரை பார்த்து கோபக்காரர் என்று பயந்த நான் இப்போது அவரது குணத்தை பார்த்து பெருமைப்படுகிறேன்.
கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை நானே அனுபவத்தில் பார்த்துவிட்டேன்.
சுந்தரகாண்டா!
தமிழில் பானுப்பிரியா நடித்து வெளிவந்த 'சுந்தரகாண்டம்' படத்தின் ரீமேக் தான் 'சுந்தரகாண்டா'.
தமிழில் பானுப்பிரியா நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் தெலுங்கில் நான் நடித்தேன். ஹீரோ வெங்கடேஷ்.
கதைப்படி நான் ஆசிரமத்தில் வாழ்ந்த அனாதை பெண். அங்கு சொல்லித்தரும் தேவனே... தேவனே... என்று வெகுளித்தனமாக சொல்வதையே பாடலாக பாடி வாங்கி கட்டுவேன். படம் நகைச்சுவையான படம்.
அதே நேரம் கதாபாத்திரம் மிகவும் கனமானது. படத்தின் கிளைமேக்சில் ஏனுங்க.. ஏனுங்க... நானும் தப்பு பண்ணிட்டேன். நாளைக்கு நான் முதுகு தேய்த்து விடுறேன் என்ற படியே எனது கணவரை தேடி வர வேண்டும். அவர் வெளியே தான் படுத்திருப்பார்.
அவரை காணாமல் நான் தேடுவேன். அப்போது ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இதை ஒரே காட்சியாக படமாக்க டைரக்டர் முடிவு செய்து இருந்தார். அதை ஒரு சவாலாகவே நினைத்து நடித்தேன்.
முழு சீனையும் ஒரே டேக்கில் எடுத்துவிட்டனர். அது மறக்க முடியாத அனுபவம். படத்தில் நான் தெலுங்கில் திட்ட வேண்டும். அதற்காக தெலுங்கில் கெட்ட வார்த்தைகளை சொல்லித் தந்து அதனால் நான் பட்ட அவஸ்தையும் உண்டு.
சாண்டி படத்தை போலவே சுந்தரகாண்டா படமும் பாடல் கேசட் விற்பனையிலும் சாதனை படைத்து பிளாட்டினம் விழா எடுத்தார்கள்.
இந்த பட ஷூட்டிங் நடந்த போது தான் ஆலங்கட்டி மழையையும் முதல் முதலாக பார்த்தேன்.
நான் தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வந்த போது வானத்தில் இருந்து பனிக்கட்டி துண்டுகள் சிதறியது போல் பொல பொல வென்று விழுந்தது. அதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அது தான் ஆலங்கட்டி மழை என்றார்கள்.
மீண்டும் அடுத்த வாரம் புதிய அனுபவங்களுடன் வருகிறேன்.
(தொடரும்)
- நாற்பது வயதை எட்டியவர்களுக்கு உலக அறிவு அதிகம் கிடைக்கும், அவர்களின் பேச்சில் நாவண்மை நிரம்பியிருக்கும்.
- முல்தாணி மெட்டி பேய்கள்மாறி... வெறும் பேக்ரவுண்ட் மீயூசிக் பயத்தை உண்டு பண்றதுதான் இப்போ 2k பேய்களின் ஸ்டைல்.
'நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம்'இந்த பழமொழிதான்னு யோசிக்கும் போதே ஏன்பா உங்க போதைக்கு நான்தான் ஊறுகாயான்னு திருவாளர் பைரவர் பேமிலி சைடு இருந்து கொஞ்சம் அதிகமாகவே குறைக்கும் சப்தம் கேட்டது.
நாற்பது வயதில் நாய் குணம் அதை நாம் தான் தெரிஞ்சி நடக்கணும்னு சிவாஜியைப் பார்த்து கே.ஆர்.விஜயா பாடினதை இப்படி கொஞ்சம் யோசியுங்கள், அடுத்த லைனில் சிவாஜி, அட பாட்டாவே பாடிட்டியா என்று குணா கமல் ஸ்டைலில் பதில் தந்திருந்தால் எப்படியிருக்கும் என்று....!
நாற்பது வயசாயிடுச்சில்லே அதான் எதையும் புரிஞ்சிக்காம வாலு வாலுன்னு கத்தினா வேற என்னன்னு சொல்லுவாங்களாம்...அதனாலதான் நாற்பது வயசில நாய்குணம்னு சொல்றது?!
மனுஷங்களைக் காட்டிலும் எங்களுக்குப் புரிந்து கொள்ளும் சக்தி அதிகம்தான். நம்பலைன்னா எங்க முன்னோர்கள் நடிச்ச தேவர் பிலிம்ஸ், ராமநாராயணன் படங்களைப் பாருங்கன்னு மைண்ட் வாய்ஸ்ல அவங்க பேசறது உங்களுக்கும் கேட்குதுதானே. சரி இவ்வளவு சொன்னபிறகும் அவங்களைப் பற்றி இரண்டொரு வார்த்தையாவது நம்ம ஜிம்மி, பப்பி பத்தி பேசலைன்னா எப்படி ? உடனே டாபர்மென்ஸ் குறைக்ககூடாது.
அவங்களே சொல்றாங்க கேளுங்க, 6 அவுன்ஸ் எடையுள்ள மூளையிருக்கிற எங்களுக்கு 100 சதவிகித மோப்ப சக்தி அதிகம். இல்லைன்னா எங்களை போலீஸ்ல குற்றங்களைக் கண்டுபிடிக்க கூப்பிடுவாங்களா ? நாய் கடிப்பதைப் போல கனவு வந்தால் கனவு கண்டவருக்கு முன்கூட்டியே வரும் ஆபத்தை அந்த கனவு உணர்த்தும். மனித இறப்புகள், தீயசக்திகளைக் கூட இனம் காணும் சக்தி எங்களுக்கு உண்டுன்னு ஆன்மீகம் சொல்லுது. எகிப்தியர்கள் நாய்களை வேட்டையாட பயன்படுத்தினார்கள். அவர்கள் நாய்களை நண்பனாக, வேலையாளாக பாராட்டினார்கள். சில சமயங்களில் தன் எஜமானர்களுடன் மம்மி செய்யப்பட்டு நாய்களும் புதைக்கபட்டன என்றால் ஆச்சரியம்தானே.
பிஸ்கட்டுக்கு மட்டும் நாங்க வாலை ஆட்றதில்லைங்க. நட்புக்கு வலதுபுறமும், வெறுப்புக்கு இடதுபுறமும் வாலை ஆட்டி எங்க விருப்பத்தை தெரிவிப்போம். அப்புறம்....எங்க லவ்வுக்கும் இந்த வாலாட்டல் பொருந்துன்னு வெட்கத்தோடயே சொன்னாங்க.

நாய்கள் என்றாலே எஜமான விசுவாசமும் நட்புணர்வும்தான் நம்ம கவனத்துக்கு முதல்ல வரும். ஆனா வாலாட்டுவதில் கூட இத்தனை நுணுக்கம் இருக்குனு தெரிஞ் சிக்கோங்க. இல்லைன்னா கடிதான். இப்போ பழமொழிக்கு வருவோம். நாற்பது வயதிற்கு நாய் குணம் என்பதே பழமொ ழியின் உண்மையான விளக்கம்.
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று- என்கிறார் வள்ளுவர்.
எத்தனை பெரிய சிக்கலாக இருந்தாலும் அதை தன் பேச்சினால் அழகாக முடித்துவைக்கும் குணம் உடையவர் நாற்பது வயதுக்காரர் என்பதே ஆகும். அதாவது நாற்பது வயதை எட்டியவர்களுக்கு உலக அறிவு அதிகம் கிடைக்கும், அவர்களின் பேச்சில் நாவண்மை நிரம்பியிருக்கும். இதைத்தான் திரித்து சம்பந்தமில்லாமல் எங்களை கூட்டிவந்துட்டாங்கன்னு முனுமுனுக்கி பைரவர்.
நாய் பரவாயில்லைங்க எங்க நிலைமைதான் ரொம்ப மோசம்னு வரிஞ்சி கட்டிட்டு வருது பேய்கள் சங்கம். Part - 1, part 2, part 3 ன்னு பேய்பட சீரிஸ் ஒரு பக்கம். சரி நம்மை டெரர் ஆகவாவது காட்டுறாங்களா.. வயசான கிழவி உடம்புலே பூந்துகிட்டு பர்ஸ்ட் நைட்டுக்கு வந்தே ஆகணுன்னு செத்துப்போனவனை கூப்பிடுது, காரேத்தி கொன்னவனை காதலிச்சி அவனுக்காக வாழற காதல் பேய், தண்ணியிலே பேய், கரண்ட்டுல பேய், ஸ்வீட் செய்துதரும் பேய், பேய் சீசன் ஆரம்பிச்ச காலத்திலே இருந்து கொன்னவங்களைப் பழிவாங்குற பேய், ஏப்பா...கொன்னவங்களை பேய் பழிவாங்கிறா மாதிரி பேய் கொன்ன ஆளுங்களும் பேயாத்தானே சுத்திட்டு இருப்பாங்கன்னு சந்தானம் கேட்ட கேள்விக்கு இப்போ வரைக்கும் பேய்களால் கூட பதில் சொல்ல முடியலை. டிவி சீரியல் தொடங்கி, ஆன்லைன் பேய் கூட வந்திட்டது.
படம் எடுத்துட்டுப் போறாங்க.. பேய்னு எவனுக்காவது ஒரு பயம் இருக்கா. விவேக் சொல்வதை போல தமிழ்நாட்டுலே நான் பைக்லே ஸ்டாண்டிங்கல வந்தவன்டா என்ற புலம்பல்தான் இப்போதைய பேய்களுக்கு அதிகம். ஒரு கொசு மேல இருக்கிற பயம் கூட எங்க மேல இல்லைன்னு ரொம்பத்தான் பொங்கறாங்க.
நள்ளிரவு இரண்டு மணிக்கு, வீட்டில் ஒரு அறையில் மட்டும் லைட் எரியுது. வெளிச்சத்தை பார்த்ததும் பேய் அங்கே போகிறது. ஒரு பையன் படிச்சிட்டு இருக்கான். புக்கை எடுக்கறான், மானிட்டரைப்பார்க்கிறான். ஏதோ குறிப்பு எழுதறான். மறுபடியும் எழுதறான் படிக்கிறான். இப்படியே ஒரு அரைமணிநேரம் அந்த பேய் அவனையே பார்க்கிறது. தன் பக்கத்தில் ஏதோ உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் பையனுக்கு ஒரு ஷாக். மெல்ல தலையைத் திருப்பிப் பார்க்க... வந்த பேய் என்ன நினைச்சதோ தெரியலை. அவன் தலையை பாசமா வருடி, கூட சேர்ந்து விடிய விடிய நோட்ஸ் எடுக்க உதவி செய்ததுன்னா பார்த்துக்கோங்களேன்.
இதேபோல ஒரு கார் பார்க்கிங். காரை பார்க் பண்ணிட்டு சோகமா நடந்து வர்றான் ஒரு பையன். அவன் மனசில ஆயிரம் கவலை. அப்போ அவனை பயங்கரமா பயமுறுத்துகிறது ஒரு உருவம். நிதானமாக பார்த்து சட்டுன்னு கட்டிப்பிடிச்சி அழ ஆரம்பிச்சிடறான். பேயும் அவனை சமாதனாப்படுத்துது. சமீபத்தில் ரசித்த இரண்டு வீடியோக்கள் இவை.
வித்தியாசமா காதலை காட்டின அதே சினிமா, ஆக்ரோஷமான பேய்களைக் காமெடியா காட்டியதில் இந்த பேய்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். முல்தாணி மெட்டி பேய்கள்மாறி... வெறும் பேக்ரவுண்ட் மீயூசிக் பயத்தை உண்டு பண்றதுதான் இப்போ 2k பேய்களின் ஸ்டைல்.
"அறுபது வயதில் பேய் குணம் இல்லைங்க சேய் குணம்".
வயது ஆக ஆக... குழந்தைத்தனம் மிகுதியாகும் என்பது பழமொழியின் சாரம். இதுவரையில் நம்மைத் தாங்கிய அன்புள்ளங்களை நாம் எப்படி கவனிக்க வேண்டும் என்பதை சொல்கிறது. அறுபது வயதில் வாழ்வின் முழுமையும் புரட்டிப்பார்க்கும் தருணம். எதை விடுத்தோம், எதை பெற்றோம், எங்கே ஏமாற்றப்பட்டோம். எங்கே சந்தோஷித்தோம் என்று எல்லாவற்றையும் இதயத்திற்கு கொண்டு வந்து அசை போட்டு பார்க்கும் தருணம். இத்தகைய குழந்தைகளை பொக்கிஷமென பாதுகாத்து வைத்திருங்கள். அவர்களின் அனுபவங்களை பாடமாக கொள்ளவேண்டும். குறைந்த பட்சம் காது கொடுத்து கேளுங்கள். சேயாய் அவர்களை பராமரியுங்கள்.
இன்னும் ஒரு பழமொழியுடன் அடுத்த கட்டுரையில் சந்திக்கலாம்.
- பழமொழிகள் நம்மைப் பலவீனப்படுத்துவதாகச் சிலர் கருதலாம்
- மனித நினைப்புகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால்தான் மனிதகுலம் சரிசெய்யப்படுகிறது.
நல்லதையே நினைக்கும் நலமிகு நண்பர்களே! வணக்கம்.
எதிர்பாராததையும் எதிர்பார்த்து வாழ்வதுதான் வெற்றிகரமான வாழ்வியல் திட்டமிடலுக்கான அடிப்படை அம்சமாகும்.
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொடியும் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறோம்; ஆனால் அவற்றில் எத்தனை செயல்முறைக்கு வருகின்றன?; செயல்முறைக்கு வருகின்ற சிலவற்றிலும் எத்தனை எதிர்பார்த்த பலன்களைத் தருகின்றன?. சாதாரண ரசம் வைப்பதில் தொடங்கிக், கோடிக்கணக்கான முதலீட்டில் தொழில் நடத்துவது வரை எத்தனை சறுக்கல்கள்?;எத்தனை சாதனைகள்?.
சாதனைகளாக இருந்தால் சந்தோஷத்தில் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கிறோம். சறுக்கலாகிப் போய் விட்டால் பாதாளத்தில் புதைந்து போனதாய் அதிர்ந்து போகிறோம். பழியை யார் மீது போடலாம் எனத் தேடியலைந்து யாரும் அகப்படாத பட்சத்தில் விதியைச் சாக்குச் சொல்லி விலகி நிற்கிறோம்.
நம்முடைய நினைவுகள் நல்லவையாக இருந்தால் செயல்களும் பயனுடையதாக அமையும் என்பது பொதுவான விதி. ஆனால் பலவேளைகளில் பொதுவைத் தாண்டிய புறனடைகளே வென்று காட்டி நம்மைத் தோல்வியில் தள்ளிவிடுகின்றன; அவை நிரந்தரத் தோல்விகள் அல்ல என்பதை மனத்தில் ஏற்றி, மீண்டும் திட்டமிடலைக் கூர்மைப் படுத்தவேண்டும்.
"நாம் ஒன்றை நினைக்கத் தெய்வம் ஒன்றை நினைக்கிறது!"
"நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!"
போன்ற பழமொழிகள் நம்மைப் பலவீனப்படுத்துவதாகச் சிலர் கருதலாம். ஆனால் உண்மையில் அவையெல்லாம் ஊக்கமூட்டும் வார்த்தைகள். நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மீறிய சில செயல்கள் அவ்வப்போது நிகழ்வதால்தான் நமது ஆணவமும் அகம்பாவமும் அவ்வப்போது முறியடிக்கப் படுகின்றன; சுயத்தை நோக்கிய உண்மையான மதிப்பீடு வெளிப்படுத்தப் படுகின்றது. மனித நினைப்புகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால்தான் மனிதகுலம் சரிசெய்யப்படுகிறது.
ஒரு சின்னஞ் சிறிய கிராமம்.அந்த ஊரில் மொத்தமே நூறு வீடுகள்தாம்; அத்தனையும் குடிசை வீடுகள்.நூறு வீட்டிலும் மொத்தம் 250 பேர் வசிக்கிறார்கள். அந்த ஊரில் திடீரென இடியுடன் கூடிய அடைமழை பெய்யத் தொடங்கியது.'இன்று நின்றுவிடும்! நாளை நின்றுவிடும்!' என்று எதிர்பார்த்த மழை தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக நிற்காமல் பெய்து கொண்டிருந்தது.
ஊரை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. ஒவ்வொரு குடிசைக்குள்ளும் வெள்ளம் புகுந்துவிட்டது; குடிசை வீட்டில் மக்கள் வாழ முடியாத சூழல். அந்த ஊரில் ஒரு கோவில் உண்டு; ஊர் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கக் கோவில் கல் மண்டபத்திற்கு வந்து விட்டனர். 250 பேர்களும் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். மழை நிற்கவில்லை; பலமாக இடியும் இடித்துக் கொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர்,"இடிச் சத்தம் பலமாகக் கேட்கிறதே! அந்த இடி இப்போது நாம் தங்கியிருக்கும் இந்தக் கல்மண்டபத்தின்மீது விழுந்தால், நாம் ஒருத்தர்கூட மிச்சமில்லாமல்,எல்லோருமல்லவா இறந்து விடுவோம்?" என்று சந்தேகம் கிளப்பினார். மற்றொரு பெரியவர்," அது அப்படி எல்லாம் நடக்காது; நம்மில் பாவம் செய்த கெட்டவர் யாராவது இருந்தால் அவர்கள் தலையில்தான் இடி விழும்" என்றார்.
"அப்படிப்பட்ட பாவ ஆத்மா நமக்குள் இருந்தால், அவர்மீது விழும் இடியால் ஒட்டுமொத்த மண்டபமும் இடிந்து நாம் எல்லோருமல்லவா இறந்துபோக நேரிடும்?; இதை எப்படித் தடுப்பது?"என ஆலோசனைக் கேள்வி எழுப்பினார் மற்றொருவர்.
ஒரு முதியவர் ஆலோசனை சொன்னார்," என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்; இந்த மாதிரி மழைக்காலத்தில், இடி, பெரும்பாலும் பச்சை மரம் அல்லது பனை மரத்தின் மீதுதான் விழும்; கெட்டவர்கள் மீதும் விழும். நம்மில் யார் புண்ணியவான்கள்? யார் பாவம் செய்தவர்கள்? என்பதை நாம் யாரும் ஒத்துக்கொள்ளப் போவதுமில்லை.
நாம் ஒரு வேலை செய்வோம். இதோ இந்த மண்டபத்திற்கு எதிரே நூறடி தூரத்தில் ஒரு ஒற்றைப் பனைமரம் நிற்கிறது. இங்கே இருக்கிற ஒவ்வொருவரும் தனித்தனியாக அந்த மரத்தை நோக்கிச் சென்று ஒரு ஐந்து நிமிடம் கொட்டும் மழையில் அங்கே பனை மரத்திற்குக் கீழே நிற்போம். பாவம் செய்தவர்களாக இருந்தால் அவர்கள் மீது இடி விழும். மற்றவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அவர்கள் திரும்பி மண்டபத்திற்கு வந்து விடலாம். ஒருவர் இருவருக்காக ஊரே சாக வேண்டாமே என்பதற்காக இந்த ஏற்பாடு!" என்றார்.
முதியவரின் யோசனை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கல்மண்டபதில் இருந்த 250 பேர்களில் ஒவ்வொருவராகப் பனை மரம் நோக்கிப் பயத்துடன் சென்று ஐந்து நிமிடம் மழையில் நின்று, மண்டபம் திரும்பி வந்தனர்.எல்லாருக்கும் ஆச்சரியம். எண்ணிக்கை இருநூறைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது; பனை மரத்துப் பக்கம் இடி விழவே இல்லை. 'நமது ஊரில் இவ்வளவு நல்லவர்களா?' மகிழ்ச்சி தாளவில்லை.
கல் மண்டபத்தில் இருந்த 250 பேர்களில் இதுவரை 249 பேர் சென்று திரும்பி விட்டனர். கடைசியாக ஒரே ஒரு நபர் மட்டும் மீதமிருந்தார். 'அச்சப் படாமல் போ! இடிவிழாது!' என்று எல்லாரும் ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தார்கள். அவரும் மெதுவாகச் சென்று பனை மரத்தை அடைந்து அதன் கீழே, கொட்டும் மழையில் நின்றார். அப்போது அண்டமே கிடுகிடுங்கும் வண்ணம் பலத்த மின்னலோடு ஒரு இடி விழுந்தது.
அந்த இடி பனைமரத்தில் விழவில்லை; அங்கே இருந்த கோவில் கல்மண்டபத்தின் மீது விழுந்தது; மண்டபத்தில் இருந்த 249 பேர்களும் போய்ச் சேர்ந்தார்கள்.
எல்லாரும் எதிர்பார்த்தது ஒன்று;ஆனால் நடந்தது வேறொன்று. 250 பேர்களில் கடைசியாக வந்தவன் மட்டுமே புண்ணியாத்மா!. அவன் தனியாக வருவதற்காகவே இடி காத்துக்கொண்டு இருந்திருக்கிறது.

சுந்தர ஆவுடையப்பன்
இங்கே 'எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றாலும் நடந்தது நல்லதாகவே நடந்திருக்கிறது' என்று எடுத்துக்கொள்வதே நேர்மறையான சிந்தனை அதிர்வுகளைத் தரும்.
எல்லாச் செயல்களுக்கும் பயன் விளைவுகள் இருப்பதுபோல எதிர்விளைவுகளும் உண்டு. நாம் செயல்குறித்த திட்டத்தைச் சிந்திக்கத் தொடங்கும்போதே அதன் முடிவுகள் குறித்த சாதக பாதகங்களையும் பக்கவாட்டில் யோசித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்டுச் செயல் தொடங்கும் போது, உண்டாகிற நம்மைக் குறித்த அதீத நம்பிக்கை நம்மைக் கவிழ்த்துவிடவும் செய்யக் கூடும். இதனை மனத்தில் வைத்துக் கொண்டால், சறுக்கல்கள் ஏற்படும்போது தளர்ந்து போக மாட்டோம்.
எல்லாச் சிந்தனைத் திட்டமிடல்களும் வெற்றியை நோக்கியே இருக்கின்றன. வெற்றிதான் முடிவான இலக்காகவும் இருக்க வேண்டும். ஆனால் முடிவு என்பது எப்போதும் வெற்றி, தோல்வி என்னும் இருபக்கங்களைக் கொண்டதாகவே இருக்கிறது; வெற்றி என்றால் 'எதிர்பார்த்தது ஈடேறி விட்டது' என்று ஆர்ப்பரிப்பதும், தோல்வி என்றால் 'நினைத்தது நிறைவேறவில்லை' என்று தளர்ந்து போவதும் உலகியல் நடைமுறை.
வாழ்வியலில் நினைத்தது நிறைவேறுகிற சில வெற்றிகள் தோல்விகளாகவும், நினைத்தது நிறைவேறாத சில தோல்விகள் வெற்றிகளாகவும் நிலைமாறும் அதிசயங்கள் காலப்போக்கில் நடக்கவும் செய்கின்றன.
திட்டங்களை எவ்வளவு செம்மையாகப் போட்டாலும், நேர்மறை முடிவுகளை எதிர்பார்ப்பது போல எதிர்மறை முடிவுகளையும் எதிர்பார்த்தே இருக்கவேண்டும். அப்படிப்பட்டவருக்கே வீண் பதட்டமும் திடீர் நெஞ்சடைப்பும் வராது என்கிறார் திருவள்ளுவர்.
"எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்"
ஒரு 'செயல் திட்டம்' வகுக்கப்படும் போதே, அதன் சாதகங்களை மட்டும் பார்க்காமல், அதன் பக்க விளைவுகளையும் எதிர் விளைவுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத் திருவள்ளுவர், 'எதிரதாக் காக்கும் அறிவு" என்று குறிப்பிடுகிறார். இந்த முன் ஜாக்கிரதை அறிவு இருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய நோய்களும் துன்பங்களும் வருவதில்லையாம். கடமையைச் செய்துவிட்டு வரும் பலன் நல்லதோ எதிரானதோ எதுவாயினும் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம்மை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
ஒரு மலைக்கிராமத்தில் ஒருவர் ஒரு கழுதையை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். கழுதையை மேய்ச்சலுக்காக அவரே வனப்பகுதிக்கு அழைத்துச் செல்வார்; மலையில் ஓடும் நதியில் அவரே குளிப்பாட்டுவார்; ஒட்டு மொத்தத்தில் அந்தக் கழுதையைத் தனது குடும்பத்தில் ஒருத்தராக வளர்த்து வந்தார்.அந்தக் கழுதையும் தனது பங்குக்கு அவருக்குச் சுமைதூக்குதல் முதலான வேலைகளைச் செய்து ஒத்தாசையாக இருந்து வந்தது.
ஒருநாள் காட்டின் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காகச் சென்ற கழுதை மாலை நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தது. கழுதையை முன்னால் விட்டுப் பின்னால் வந்து கொண்டிருந்தார் உரிமையாளர். முந்திச் சென்ற கழுதை, பாதையில் யானையைப் பிடிப்பதற்காகத் தோண்டிச், சருகுகளால் மூடப்பட்டிருந்த பெரும்பள்ளத்திற்குள் விழுந்து விட்டது. பள்ளத்திற்குள் இறங்கித் தூக்க மனிதர்களால் முடியாது. உரிமையாளர் எவ்வளவோ முயன்றார்; இருட்டி விட்டது; அந்தக் காட்டிற்குள் தனியே இருக்க முடியாது; கழுதையைப் பள்ளத்திற்குள்ளேயே விட்டு விட்டு வீட்டிற்குத் திரும்பி விட்டார்.
மறுநாள் கயிறுகள் முதலியன எடுத்துச் சென்று கழுதைமீது வீசி மேலே எழும்பி வர முயற்சி செய்தார். அவராலும் முடியவில்லை; கழுதையாலும் இயலவில்லை.இப்படியே நாலைந்து நாள்கள் கழிந்தன. அவ்வப்போது தீவனங்களைப் பள்ளத்திற்குள் போட்டாலும், நம்பிக்கையை இழந்து விட்டதால் கழுதையும் தளர்ந்து படுத்து விட்டது.
கடைசியில் கழுதைக்காரர் ஒரு முடிவுக்கு வந்தார். இனி கழுதை பிழைப்பதற்கு வாய்ப்பில்லை. பள்ளத்திற்குள் மண்ணை வாரிப்போட்டு மூடி, அப்படியே அதற்கு இறுதி மரியாதை செலுத்தி விட வேண்டியதுதான் என்று நினைத்து, முதல் தட்டு மண்ணை அள்ளிப் பள்ளத்தில் கழுதை மீது போட்டார்.
கழுதையின் உடம்பு லேசாகச் சிலிர்த்தது.அடுத்த தட்டு மண்ணை வீசினார்; கை கால்கள் அசையத் தொடங்கின; தொடர்ந்து தன் மீது மண் விழ,விழ கழுதை சிலிர்த்தெழுந்தது. உரிமையாளர் கொட்டிய மண் ஒருபுறமாக மேடாக மேடாக அதில் துள்ளியெழுந்து ஏறத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் முழு உத்வேகத்தோடு பள்ளத்தில் இருந்து வெளியேறி மேலே வந்து விட்டது.
இதுதான் நினைத்தது ஒன்று!; நடந்தது ஒன்று!. சாதிப்பதற்கான எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனதாய் எண்ணிச் சோர்ந்து விழும்போது மற்றொரு வாய்ப்பு நாம் நினைத்துப் பார்க்காத திசையில் இருந்து, நினைத்துப் பார்க்காத வகையில் வந்து கைகொடுக்கும்.
நினைப்பதெல்லாம் நடக்கவில்லை என வருந்த வேண்டாம்!
நடப்பதையெல்லாம் நன்மையாக்கும் முயற்சிகள் நிறைவேறட்டும்!
தொடர்புக்கு 9443190098
- கும்பகோணத்திலும் பிரம்மாவுக்கு ஒரு ஆலயம் இருக்கிறது.
- பிரம்மாவுக்கு ஆலயங்கள் இல்லாத காரணத்தால் அவரைப் பற்றி பேசப்படுவது மிக குறைவாகவே உள்ளது.
நாடு முழுவதும் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன், துர்க்கை என்று பல்வேறு கடவுள்களுக்கு அதிகளவில் ஆலயங்கள் உள்ளன. ஆனால் படைப்பு தொழிலை மேற்கொள்ளு ம் பிரம்மாவுக்கு விரல் விட்டு எண்ணும் வகையில் தான் ஆலயங்கள் அமைந்து உள்ளன.
நமது தலை விதியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் பிரம்மாவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பழமையான ஆலயம் எங்கும் இல்லை. திருப்பட்டூரில் உள்ள சிவாலயத்தில் பிரம்மாவுக்கு அமைந்துள்ள சன்னதி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
அதே போன்று கும்பகோணத்திலும் பிரம்மாவுக்கு ஒரு ஆலயம் இருக்கிறது. சில யுகங்களுக்கு முன்பு பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்தபோது பூலோகத்தை மீண்டும் உருவாக்க சிவபெருமான் முடிவு செய்தார். எனவே கும்பகோணத்தில் இருந்த அமிர்தகலசத்தை அவர் உடைத்து உயிரினங்களை கொண்டு வந்தார்.
பின்னர் அங்கிருந்து படைப்பு தொழிலை தொடங்குவதற்கு பிரம்மாவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பிரம்மா கும்பகோணத்துக்கு வந்து படைப்பு தொழிலை ஆரம்பித்தார். இதனால் அவருக்கு கும்பகோணத்தில் ஆலயம் உருவாகி இருக்கிறது. கும்பகோணத்துக்கு யாத்திரை செல்பவர்கள் தவறாமல் இந்த ஆலயத்துக்கும் செல்ல வேண்டும்.
பிரம்மாவுக்கு ஆலயங்கள் இல்லாத காரணத்தால் அவரைப் பற்றி பேசப்படுவது மிக குறைவாகவே உள்ளது. பிரம்மா 5 தலைகளுடன் இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பிரம்மா ஒரு தடவை செய்த தவறுக்காக அவரது 5-வது தலையை சிவபெருமான் கிள்ளி எறிந்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இந்த கதையில் மாறுபட்ட தகவல்கள் இருப்பதால் இதை யாரும் பெரிதுப்படுத்துவது இல்லை.
பொதுவாக பிரம்மாவுக்கு ஆலயம் அமையாமல் போனதற்கு ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. ஒரு தடவை பிரம்மாவுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் ஒரு போட்டி ஏற்பட்டது. இருவரில் யார் பெரியவர் என்று மோதிக் கொண்டனர். அதை முடிவு செய்வதற்காக இருவரும் சிவபெருமானிடம் சென்றனர்.
அப்போது சிவபெருமான் அடிமுடி காணமுடி யாதபடி விஸ்வரூபம் எடுத்தார். தனது அடிமுடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவரை பெரியவராக ஏற்றுக் கொள்வதாக சிவன் தெரிவித்தார். இதையடுத்து பிரம்மா அன்னபறவையாக உருவெடுத்து லிங்கத்தை ஆரம்ப பகுதியான முடியை காண்பதற்காக மேலே பறந்து சென்றார்.
இதைக் கண்டதும் மகாவிஷ்ணு வராகமாக மாறி பூமியை துளைத்துக்கொண்டு லிங்கத்தின் அடிப்பகுதியை காண சென்றார். ஆண்டுகள் பல கழிந்தும் அவர்களால் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. இதனால் மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பி வந்து விட்டார்.
ஆனால் பிரம்மா அப்படி சொல்லாமல் லிங்கத்தின் முடியை கண்டுவிட்டதாக பொய் சொன்னார். தனக்கு ஆதரவாக தாழம்பூவையும் பொய் சொல்ல வைத்தார். இதனால் சிவபெருமான் கடும் கோபம் அடைந்தார். பூலோகத்தில் பிரம்மாவுக்கு ஆலயங்கள் இல்லாமல் போகட்டும் என்று சபித்தார். அதுபோல வழிபாட்டுக்கு தாழம்பூவை பயன்படுத்த மாட்டார்கள் என்றும் சாபமிட்டார். இதனால் தான் பூலோகத்தில் பிரம்மாவுக்கு ஆலயங்கள் இல்லாமல் போனது.
என்றாலும் பிரம்மா மேற்கொண்ட பணிகள் காரணமாக அது தொடர்பான இடங்களில் ஆலயங்கள் உள்ளன. அப்படி உருவானதுதான் கும்பகோணம் பிரம்மன் கோவில். இந்த ஆலயம் உருவானதன் பின்னணியிலும் ஒரு கதை உள்ளது.
படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது என்று பிரம்மாவுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவன், விஷ்ணுவிடம் கூட அந்த சக்தி இல்லை என்று பிரம்மா ஏளனமாக பேசினார். இதை அறிந்த விஷ்ணு பூதம் ஒன்றை உருவாக்கி பிரம்மனிடம் அனுப்பினார். அது பிரம்மாவை விரட்டியது. பயந்துபோன பிரம்மா மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்தார்.
அப்போது விஷ்ணு, பிரம்மாவிடம் உனது கர்வத்தை அடக்கவே இந்த பூதத்தை அனுப்பினேன். உனக்கு கர்வம் ஏற்பட்டு இருப்பதால் உன்னிடம் இருக்கும் படைக்கும் தொழில் மறந்து போகும் என்று சாபமிட்டார். இதை கேட்டு பிரம்மா மனம் வருந்தினார். தனக்கு விமோசனம் தருமாறு கேட்டுக் கொண்டார்.
உடனே மகாவிஷ்ணு பிரம்மாவிடம், "கும்பகோணம் சென்று தவம் செய். உரிய நேரத்தில் உனக்கு பலன் கிடைக்கும்" என்றார். அதன்படி பிரம்மா கும்பகோணத்துக்கு வந்து தவம் செய்தார். விஷ்ணு மனம் குளிர வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தினார். அந்த யாகத்தில் விஷ்ணு தோன்றி பிரம்மாவுக்கு சாப விமோசனம் அளித்தார்.
அதோடு வேதங்களையும் கொடுத்து மீண்டும் படைக்கும் தொழிலை தொடங்க அறிவுறுத்தினார். இதனால் விஷ்ணுவுக்கு வேதநாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த பெயருடன் கும்பகோணத்தில் அவருக்கு ஆலயம் அமைந்தது. அங்குதான் பிரம்மாவுக்கும் சன்னதி உள்ளது.
பிரம்மா தனது தேவியர்களான சரஸ்வதி, காயத்ரியுடன் நின்ற கோலத்தில் வேதநாராயண பெருமாளிடம் ஆசி பெறும் வகையில் இந்த தலத்தில் காட்சி அளிக்கிறார். இதனால் அந்த ஆலயம் பிரம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மன் கோவிலுக்கு அருகிலேயே படிக்காசு நாதர் கோவில், கஜேந்திரவரதன் கோவில், அப்பக்குடத்தான் கோவில் போன்றவை அமைந்துள்ளன. இந்த கோவில்களில் வழிபடும்போது மறக்காமல் பிரம்மாவையும் வழிபட வேண்டும். இந்த ஆலயத்தில் "பிரம்மா சங்கல்ப பூஜை" மிக சிறப்பாக செய்யப்படுகிறது.
இந்த பூஜையை செய்பவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சிறு-குறு தொழில் நடத்துபவர்கள் இந்த பூஜையை மேற்கொண்டால் தொழிலில் மேம்பாட்டை எட்ட முடியும் என்பது ஐதீகமாகும். அதுபோல குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு இந்த பிரம்மாவை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.
வியாழக்கிழமைகளில் பிரம்மாவை வழிபாடு செய்தால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். பிரம்மா அருகிலேயே கருவறையில் வேதநாராயணர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்து உள்ளார். எதிரில் யோக நரசிம்மர் 2 தாயார்களுடன் உள்ளார்.
இப்படி அடுத்தடுத்த சன்னதிகளில் மூவரும் இருப்பதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. செல்வம் கிடைக்க மகாலட்சுமியை இங்கு மனதார வழிபடலாம். வேதங்களில் மேன்மை பெற பிரம்மாவை வழிபடலாம். ஆயுள் விருத்திக்கு யோக நரசிம்மரை வழிபடலாம்.
வைகுண்ட ஏகாதசி மற்றும் சரஸ்வதி பூஜை இந்த தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தலத்தில் காலை 8.15 மணிக்கு விஸ்வ ரூப வழிபாடு, 9.30 மணிக்கு காலசாந்தி, 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு நித்யானு சந்தானம், இரவு 7.30 மணிக்கு ஆராதனை, இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.
இந்த கோவிலில் உள்ள பிரம்மா விக்ரகம் ஒரு வகையானது. மற்ற கோவில்களில் உள்ளதைப் போலவே இவரும் 4 முகங்களைக் கொண்டவர். இருப்பினும் ஒரு துணி பொதுவாக 4-வதாக முகத்தில் மூடப்பட்டிருக்கும். இது பின்புறத்தில் உள்ளது. பூசாரியிடம் கேட்டுக் கொண்டால் உறையை அகற்றி சிலைக்கு பின்னால் உள்ள கண்ணாடியில் அன்னை காயத்ரியின் 4-வது முகம் தெரிவதை காண்பிக்க வைப்பார்.
இந்த ஆலயத்துக்கு கும்பகோணத்தில் உள்ள மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தவறாமல் வருகின்றனர். தங்கள் குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி வந்து செல்வார்கள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் அன்னை சரஸ்வதி மற்றும் காயத்ரிக்கு சிறப்பு பூஜை செய்து கொள்கின்றனர்.
பிரம்மா அறிவைக் காப்பவராக இருப்பதால் வியாழக்கிழமைகளில் ஏராளமானோர் இங்கு வந்து வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரையும், சனிக்கிழமைகளில் பெருமாளையும் தரிசிக்க பக்தர்கள் திரள்கிறார்கள். அதிக கடன் உள்ளவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டு பலன் பெறுகிறார்கள். அதுபோல கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
மேலும் 60, 70, 80-வது பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது பிரம்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே கோவிலாகும். மற்றொன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புஷ்கர் என்ற பிரம்மா கோவில் ஆகும்.
கும்பகோணத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று இந்த பிரம்மா ஆலயம் ஆகும். உங்கள் குடும்பத்தினர் மற்றும், நண்பர்களுடன் பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய திட்டமிடுங்கள். ஆலயத்துக்கு ஒரு முறை சென்று வந்தால் அற்புதமான அனுபவத்தை உணர முடியும்.
அது மட்டுமின்றி பிரம்மா ஆலய வழிபாட்டால் நினைத்து பார்க்க முடியாத பலன்களையும் பெற முடியும். உங்கள் தலைவிதியை மாற்றும் ஆற்றல் இந்த பிரம்மனுக்கு உண்டு. எனவே இந்த பிரம்மன் முன்பு நிற்கும்போது அதற்கான வழிபாட்டை செய்யுங்கள். நிச்சயம் பிரம்மா மனம் இரங்குவார்.
பொதுவாக எந்த ஒரு தொழிலில் இருந்தாலும் முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பார்கள். அதற்கான வழிபாட்டை செய்ய கும்பகோணம் பிரம்மா ஆலயம் முக்கியமான இடமாகும்.
நீங்கள் அலுவலகத்தில் பணியாற்றுபவராக இருந்தால் பதவி உயர்வுக்கு இந்த பிரம்மா கைக்கொடுப்பார். அதுபோல தொழில் செய்தால் அதில் பிரம்மாவால் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே கும்பகோணம் ஆன்மீக யாத்திரையில் பிரம்மா ஆலயம் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் மட்டும் இருந்தால் போதுமா? அதற்கு ஏற்ப செல்வ செழிப்பு இருக்க வேண்டும் அல்லவா? வாழ்க்கையில் மிக எளிதாக செல்வ செழிப்பு பெறவும் கும்பகோணம் யாத்திரையில் ஆலயம் உள்ளது. அதற்கு நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம் ஒப்பிலியப்பன் ஆலயம்.
இந்த ஒப்பிலியப்பன் உங்களுக்கு எப்படி செல்வம் தருவார் என்பதை அடுத்த வாரம் காணலாம்.






