என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- இப்படியான தவறுதலான உச்சரிப்பால் அர்த்தம் திரிக்கப்பட்ட அறிவுரைகளை மக்கள் பின்பற்ற துவங்கினால் விளைவுகள் என்னவாகும்?.
- பேச்சு வழக்கு திரிபில் இடையில் மருவிய பழமொழி அதனின் நிஜ அர்த்தத்தையும் பொருளையும் மாற்றிவிட்டது என்பதே உண்மை.
நண்பனின் தங்கை கல்யாணம். ஒரே நிறுவனத்தில் நண்பனும் நானும் பணி புரிகின்றோம்.
நண்பன் ஒரு வகையில் உறவு முறையில் சொந்தமும் கூட என்பதால் முகூர்த்தம் நடைபெறும் இடத்தில் நிறைய நேரம் நண்பனோடு நின்று கொண்டிருக்க வேண்டியதாயிற்று.
முகூர்த்தம் முடிந்து தற்போதைய டிரெண்ட் படி சினிமா பாடலுக்கு மணப்பெண், மணமகன் குண்டக்க மண்டக்க குத்தாட்டம் போடுவது, டூயட் சீன் போல போட்டோ ஷூட், கேக் வெட்டுவது என களேபரங்கள் நடந்து கொண்டிருந்தது.
உடன் வந்த மற்றொரு நண்பன் என்னிடம் மெதுவாக சாப்பிட போகலாம் என்றான்.
சற்று பொறு.! அவனும் வரட்டும் சேர்ந்து போவோம் என்றேன்.. கடுப்போடு என்னை முறைத்தவாறே காத்திருந்தான் மற்ற நண்பன்.
ஒரு வழியாக அரை மணி நேரம் கழித்து சென்றோம். அவர்கள் ஊரில் "பெட்டிச்சோறு" என சாப்பாட்டு வழக்கம் உண்டாம்.
திருமணத்திற்கு வந்த உறவுக்காரர்கள் திருமணத்திற்கு வர இயலாத தங்கள் வீட்டு பெரியவர்கள், இளம் பெண்களுக்கு வீட்டிற்கு சாப்பாடு எடுத்து செல்லும் வழக்கத்திற்கு 'பெட்டிச்சோறு" என்ற பெயராம்.
சிக்கன் பிரியாணி + சிக்கன் பொரிப்பு என்பதால் அனைவரும் தாராளமாக எடுத்து சென்றதில் நாங்கள் சென்ற நேரத்தில் பிரியாணி கிட்டத்தட்ட காலியாகி விட்டது.
சிக்கன் பீஸ் இல்லாத வெறும் குஸ்கா மற்றும் தயிர்சாதம் பரிமாறபட்டது எங்களுக்கு.
நேரத்தில் சாப்பிட அழைத்த நண்பன் என்னிடம் சற்று முறைப்போடு சொன்னான்.
அப்போதே கூப்பிட்டேன். .வா சாப்பிட போகலாம் என்று. கேட்டயா!..நல்லா தயிர் சாதத்தை தின்னு இப்போ..
"பந்திக்கு முந்து படைக்கு பிந்து" என்று சும்மாவா பெரியவங்க சொன்னாங்க என்றான்.
என்னை மாதிரியே இந்த பழமொழியை பெரும்பாலும் கல்யாண வீட்டு முகூர்த்தம் முடிந்து சாப்பாட்டு பந்தி ஆரம்பிக்கும் தருவாயில் யாரேனும் சொல்ல கேள்வி பட்ட அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்.
இந்த பழமொழியில் கூறப்பட்டுள்ள கருத்து ஒருவனை சாப்பாட்டு ராமனாகவும், தொடை நடுங்கியாகவும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாக தெரிகிறதே.
கணவன் போரில் இறந்ததும் பாலகனான தன் மகன் கையில் வேலை கொடுத்து போருக்கு அனுப்பினாள் சங்க காலத்தில் தமிழ் தாய் ஒருத்தி.
அந்த தாயின் மகன் போரில் முதுகில் விழுப்புண் பட்டு மாண்டதாக ஊரார் சொன்னதை கேள்வி பட்டு போர்க்களம் நோக்கி கோபாவேசத்தோடு புறப்படுகிறாள்.
என் மகன் முதுகில் காயம் பட்டு இறந்திருந்தால் போரில் புறமுதுகு காட்டி ஓடிய கோழைக்கு பால் கொடுத்ததற்காக அவனுக்கு பாலூட்டிய மார்பை போர்க்களத்தில் அறுத்து எறிவேன் என சூளுரைத்து போர்க்களம் நோக்கி செல்கிறாள்.
போர்க்களம் சென்று தன் மகன் மார்பில் விழுப்புண் பட்டு மாண்டதை பார்த்ததும் மகன் இறந்ததை நினைத்து துயர் கொள்ளாமல் மகன் மார்பில் விழுப்புண் பட்டு மாண்டதை நினைத்து சந்தோசம் கொண்ட வீர தமிழ் பெண்கள் வாழ்ந்த தமிழ் சமூகம் இது.
மறம் செறிந்த வீரத்தையும், அறம் செறிந்த மானத்தையும் இரு கண்களாக கொண்டு போருக்கு புயலென புறப்படும் தமிழ் சமூகமா பந்திக்கு முந்து படைக்கு பிந்து என சொல்லி வைக்கும்.
நிச்சயம் அப்படி சொல்லி இருக்காது. இந்த பழமொழியும் தவறுதலான உச்சரிப்பால் அர்த்தம் திரிக்கப்பட்டு இருக்கும் என உள்ளுணர்வு சொல்லியது.
இப்படியான தவறுதலான உச்சரிப்பால் அர்த்தம் திரிக்கப்பட்ட அறிவுரைகளை மக்கள் பின்பற்ற துவங்கினால் விளைவுகள் என்னவாகும்?.
நாட்டுப்பற்று பின் தள்ளப்பட்டு சோற்றுப்பற்று முன் வந்து விடும்.
அறிவுரையை சொல்லி தருவதே பழமொழியின் நிஜமான நோக்கமாக இருக்கும்.
அதை விட்டு சோத்துக்கு முந்து!! போருக்கு பிந்து என்பதாக இந்த பழமொழியின் அர்த்தம் அமைவதால் பழமொழியின் கருத்து தள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
"பந்தி" அதாவது நமது வீட்டு விசேஷங்களில் உறவினர்கள் வருகை தந்து பின் உணவு பரிமாறபடும் போது விருந்துகளில் கலந்து கொள்ள எத்தனை உறவினர்கள் வருவார்கள் என்பதை நம்மால் கணிக்க முடியாது.
வருகை தெரியும் உறவினர்களின் எண்ணிக்கை தெரியாது என்பதால், குறைவாக சமைத்தால் உணவானது விரைவில் தீர்ந்துவிடும்.
அதனாலேயே பந்திக்கு முந்திவிட வேண்டும் என்றும் படை போன்ற போர் நிகழ்வுகளில் பிந்தி கொள்ள வேண்டும் என கூறியுள்ளதாக நம்மில் அனேகர் பலர் இந்த பழமொழியை இப்படித்தான் புரிந்து வைத்திருப்போம்.
உண்மையில் "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்ற பழமொழிக்கு பொருள் இது தானா?
வம்பு சண்டைக்கு போகாதே!! வந்த சண்டையை விடாதே! என சொல்லி வளர்க்கும் நமது முந்தைய தலைமுறை இப்படியா கோழையை போல் சோத்தாமுட்டி போல் நம்மை நடந்து கொள்ளும் படி சொல்லி இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் பழமொழி குறித்து ஆராய்ந்த போது "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" பழமொழிக்காக கிடைக்க பெற்ற நிஜ விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
"பந்திக்கு முன் தீ", "படைக்கு பின் தீ" என்பது தான் நாளடைவில் 'பந்திக்கு முந்து, படைக்கு பிந்து' என மருவியுள்ளது.
அதாவது பந்தி போன்ற விருந்து நிகழ்வுகளில் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகமாக வரக்கூடும்.
அதனால் பந்திக்கு முன்னரே சமையல் செய்ய தீ மூட்ட வேண்டும். அதையே 'பந்திக்கு முன் தீ' என்கிறோம்.
போர்காலங்களில் போருக்கு சென்ற வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்து இருப்பார்கள். உண்ணும் உணவை வீணாக்க கூடாது.
எம்புள்ளைக்கு, என் கணவனுக்கு ஆக்கி வைச்ச சோத்தை சாப்பிட கூட அவர் வராம போயிட்டாரே! என பெண்கள் உணர்வு மிகுதியால் நினைத்து ஏங்கி அழுவார்கள்.
இதனை தவிர்க்க போர் முடிந்த பின் சரியாக விசாரித்து எத்தனை பேர் உயிரோடு உள்ளார்களோ அவர்களுக்கு மட்டும் சமைக்க வேண்டும். இதனையே 'படைக்கு பின் தீ' என்றார்கள்.

கண்டிப்பாக நமது முன்னோர்கள் படைக்கு பிந்து என வீரத்தில் குறைந்தவர்களாக கோழைகளாக இருக்கும் படி நம்மை வழி நடத்தமாட்டார்கள்.
பேச்சு வழக்கு திரிபில் இடையில் மருவிய பழமொழி அதனின் நிஜ அர்த்தத்தையும் பொருளையும் மாற்றிவிட்டது என்பதே உண்மை.
தொடர்புக்கு-isuresh669@gmail.com
- குழந்தைக் கண்ணனைப் பற்றிய சூர்தாசின் கவிதைகள் நெஞ்சை அள்ளுபவை.
- சூர்தாசின் சம காலத்தில் வல்லபாச்சாரியார் என்ற மகான் வாழ்ந்து வந்தார். சம்ஸ்கிருத பக்திக் கவிஞர்.
சூர்தாஸ் கண்ணில்லாத ஒரு பக்திக் கவிஞர். அவருக்குப் புறக்கண்கள் தான் இருக்கவில்லை. ஆனால் அகக்கண்கள் பல மடங்கு ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தன.
கிருஷ்ண பக்தரான சூர்தாஸ் 104 வயது வாழ்ந்தார். (1479 முதல் 1583 வரை.). அவரின் இயற்பெயர் தெரியவில்லை. `சுவரங்களின் அடிமை` என்ற வகையில் மக்கள் அவருக்கு இட்டு வழங்கிய செல்லப்பெயரே ஸ்வர தாசர் எனப்பொருள் தரும் `சூர்தாஸ்`.
15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சூர்தாஸ், ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் இயற்றினார் என்று சொல்லப்படுகிறது. இப்போது கிடைப்பவை எட்டாயிரம் பாடல்கள் மட்டுமே. `சூர் சாராவளி, சாகித்ய லகரி, சூர் சாகர்` எனப் பற்பல தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
`ஹே தீன்தயாள் கோபால் ஹரி` என்ற சூர்தாஸ் பாடல் எம்.எஸ்.சின் தேனினும் இனிய குரலில் இன்றும் பக்தி மனங்களை உருக்குகிறது. `பிரபுஜி தும் பி கவுன் சகாய்..`, ஹே கோவிந்தா ஹே கோபாலா...`, மையா மோரி மைநகீ மக்கான் காயோ...`, போன்ற சூர்தாசின் பாடல்கள் மக்களிடையே இன்றளவும் செல்வாக்கோடு விளங்குகின்றன.
குழந்தைக் கண்ணனைப் பற்றிய சூர்தாசின் கவிதைகள் நெஞ்சை அள்ளுபவை. கண்ணனுக்கு முதல் பல் விழுவது, கண்ணன் தவழ்ந்தே வாயில்படி தாண்டியது என்றிப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் அவரது கவிதைகள் பக்தி மணம் கமழப் பேசுகின்றன.
ஆழ்வார்கள் பெரும்பாலும் கண்ணனின் புராண லீலைகளைப் பாடினார்கள். ஆனால் சூர்தாஸோ எல்லாக் குழந்தைகளின் வாழ்வில் உள்ளதைப் போல் கண்ணன் வாழ்விலும் நேர்ந்த சாதாரண நிகழ்வுகளைத் தம் கவிதைகளில் கொண்டாடுகிறார்.
பாரதியார், அரசனாக, தோழனாக, காதலியாக என்றெல்லாம் பல வடிவங்களில் கண்ணனைக் கண்டு பாடினார். சூர்தாஸ் பெரும்பாலும் யசோதை, நந்தகோபர் மனநிலையில் இருந்து கண்ணனைக் குழந்தையாகவே கண்டார்....
சூர்தாஸ் சிறுவயதில் துன்பங்களையும் அவமானங்களையும் அனுபவித்தார். மூன்று சகோதரர்களும் சக சிறுவர்களும் கிண்டலும் கேலியும் செய்வார்கள்.
பெற்ற தாய், தந்தையே அவரைப் புறக்கணித்தார்கள். அற்புதமான குரல் அவருக்கு. திண்ணையில் அமர்ந்து சன்னமாகப் பாடிக் கொண்டே இருப்பார்.
வீட்டின் வெளியே தெருவில், அதிகாலையில் பக்தர்கள் கிருஷ்ண பஜனை செய்தவாறே போவதுண்டு. அந்தப் பாடல்களைக் கூர்ந்து கேட்பார். மெல்ல மெல்லத் தானே பாடல் இயற்றிப் பாடவும் தொடங்கினார்.
ஒருநாள் அதிகாலை எழுந்த சிறுவன் சூர்தாஸ் மிகுந்த மனச்சோர்வோடு இல்லத்தின் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தார். வீட்டின் உள்ளே தாயும் தந்தையும் சகோதரர்களும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
தாயிடம் அவருக்கு ஆதரவில்லை. தந்தை அவரைக் கவனிப்பதில்லை. சகோதரர்கள் வெறுக்கிறார்கள். என்ன செய்வது?
சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவர் செவிகளில் கிருஷ்ண பஜனை ஒலி கேட்டது. வெளியூர் பக்தர்கள் அந்த அதிகாலை வேளையில் கிருஷ்ண பக்தி கானங்களைப் பாடிக் கொண்டு மதுரா ஆலயத்திற்கு அவர் வீடிருந்த வீதி வழியே சென்று கொண்டிருந்தார்கள்.

திருப்பூர் கிருஷ்ணன்
திடீரென ஒரு முடிவெடுத்த சூர்தாஸ், பாட்டுப் பாடிக் கொண்டு சென்ற குழுவினருடன் இணைந்து வெளியே நடந்தார். அவர்களிடம் பாடல் கற்றுக்கொள்ள விரும்பினார் அவர்.
மதுரா சென்றுகொண்டிருந்த அவர்கள் ஒரு நாள் முழுவதும் நடந்துசென்று அன்றிரவு ஓர் ஆல மரத்தடியில் தங்கினார்கள். தங்களுடன் தானாய் வந்திணைந்து கொண்ட கண்ணில்லாத சிறுவனைப் பார்த்தார்கள்.
செல்லும் வழியில் அவன் ஒரு பெரிய சுமை அல்லவா? அவனைக் கவனித்துக் கொள்வது யார்? அந்த மரத்தடியிலேயே அன்று அனைவரும் உறங்கினார்கள்.
மறுநாள் அதிகாலை. சிறுவன் சூர்தாஸ் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பாமலே அந்த பக்தர் கூட்டம் சத்தமில்லாமல் விலகிச் சென்றது. சிறுவன் துயில் கலைந்தபோது அருகே யாருமில்லை.
இப்போது என்ன செய்வது? உலகமே என்னைப் புறக்கணிக்கிறதா? அவர் கல்லும் கனிந்துருகும் குரலில் கண்ணனைக் குறித்துத் தாமே இயற்றிய பக்திப் பாடல்களைப் பாடலானார். அவரது மதுரக் குரல் காற்று வெளியில் கலந்தது.
அருகேயிருந்த கிராமத்திலிருந்து சில பெண்மணிகள் அந்த மரத்தடியில் பல் தேய்க்க வந்தார்கள். சூர்தாஸின் பாடல்களைக் கேட்டு அவர்கள் மனம் கரைந்தது. அவர்கள் அனைவரும் அவனின் பார்வையற்ற கண்ணில் பெருகிய கண்ணீரைத் தங்கள் விரல்களால் துடைத்தார்கள்.
ஒருத்தி அவரைக் குளத்திற்கு அழைத்துச் சென்று பல் தேய்த்து விட்டாள். இன்னொருத்தி பரிவோடு அவரை நீராட்டினாள். ஒரு பெண்மணி ஓடோடிப் போய் சப்பாத்தி கொண்டுவந்து ஊட்டினாள்.
அவனின் குரலினிமையில் மனம் பறிகொடுத்த அவர்கள், `குழந்தாய் பாடு பாடு!` என்று பாடச் சொல்லி அந்தக் குரலிலும் பக்தியிலும் மெய்மறந்தார்கள். ஒரு தாயால் புறக்கணிக்கப்பட்ட சூர்தாசுக்கு எண்ணற்ற தாய்கள் கிடைத்தார்கள். அவர்களின் தாயன்பை அனுபவித்தவாறு அந்த மரத்தடியிலேயே சூர்தாஸ் வாழலானார். அவ்வழியே வந்த வழிப்போக்கர்கள் அவர் பாடலில் சொக்கினார்கள். அவருக்குக் காசு தந்தார்கள்.....
அவருக்கு வயது கூடியது. கூடவே புகழும் கூடியது. அவரது தெய்வீக கானத்தைக் கேட்க மக்கள் பல்வேறிடங்களில் இருந்து திரண்டார்கள்.
சிலர் அவருடனேயே இருந்து அவரது பாடல்களை அவர் பாடப்பாட எழுதிக்கொண்டு போனார்கள். தங்கள் இடங்களில் அந்தப் பாடல்களைத் தாங்கள் பாடிப் பிரபலப்படுத்தினார்கள்.
வருபவர்களெல்லாம் அந்த தெய்வீகக் கவிஞருக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினார்கள். பணத்தாசை அற்ற சூர்தாஸ் தமக்குக் கிடைத்த செல்வத்தையெல்லாம் தம்மை ஆதரித்த அந்த கிராமத்துத் தாய்மார்களுக்கே வழங்கிவிட்டார்.
அந்தப் பிரதேசமெங்கும் பரவிய அவரது பெரும்புகழ் அவர் பிறந்த கிராமத்தை எட்டாதிருக்குமா? அவரது சகோதரர்கள் நேரில் வந்து பார்த்து அவரை இனங்கண்டு கொண்டார்கள். பின் தாயோடும் தந்தையோடும் இணைந்து வந்தார்கள். குடும்பம் அவரைப் புறக்கணித்ததற்காக மன்னிப்பு வேண்டினார்கள்.
`எல்லாம் நன்மைக்கே, தனக்கு யாரிடமும் எந்த வெறுப்பும் இல்லை` என்று சிரித்தவாறே சொன்னார் சூர்தாஸ். மீண்டும் குடும்பத்தோடு அவர் வந்து இணைய வேண்டும் என வேண்டினார்கள் குடும்பத்தினர். `இப்போது உலகம் முழுவதுமே என் குடும்பம்` என்று சொல்லி அவர்கள் வேண்டுகோளை மறுத்துவிட்டார் சூர்தாஸ்.....
சூர்தாசின் சம காலத்தில் வல்லபாச்சாரியார் என்ற மகான் வாழ்ந்து வந்தார். சம்ஸ்கிருத பக்திக் கவிஞர். `அதரம் மதுரம் வதனம் மதுரம்....` என்று தொடங்கும், மதுராஷ்டகத்தை எழுதியவர்.
மகான் வல்லபாச்சாரியாருக்குச் சிஷ்யராக வேண்டும் என்ற தாளாத வேட்கை சூர்தாசுக்கு இருந்தது. யமுனை நதிக்கரைக்கு அதிகாலையில் அவர் நீராட வருவார் என்றறிந்து படித்துறைக்குச் சென்றார். தாம் எழுதிய பாடல்களை உருக்கமாகப் பாடியவாறே அவரது வருகைக்காகக் காத்திருந்தார்.
வல்லபாசார்யர் அந்த மதுரக்குரலைக் கேட்டு அவரைத் தேடி வந்தார். அவர் பாதங்களில் விழுந்து பணிந்தார் சூர்தாஸ். அவரை அள்ளி அணைத்துக்கொண்ட வல்லபாச்சாரியார் அவரைச் சீடராக ஏற்றார். `உன் தன்னிரக்கத்தோடு கூடிய புலம்பல் பாடல்கள் எதற்கு? கருணை மயமான இறைவனின் லீலைகளைப் பாடு!` என்றார்.
`கண்ணனின் லீலைகளைப் பற்றிப் பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாதே, கண்ணனின் திருச்சரிதம் தெரிந்தால் தானே நான் பாட முடியும்?` என வினவினார் சூர்தாஸ். `அவன் லீலைகள் குறித்து நான் உனக்குத் தெரிவிக்கிறேன்` என்ற வல்லபாச்சாரியார், சூர்தாசுக்கு பாகவதம் முழுவதும் கற்றுத்தந்தார்.
குருவின் அருள்பெற்ற பின்னர்தான், கிருஷ்ண லீலைகளாக அமைந்த பாகவதக் கதைகளைப் பாடத் தொடங்கினார் சூர்தாஸ்.
வல்லபாச்சாரியாரின் முக்கியமான எட்டுச் சீடர்களில் ஒருவராகப் பிறகு அறியப்பட்டார் அவர்......
தம் குரு வல்லபாச்சாரியாரின் உதவியால் மதுரா கோவிலில் ஆஸ்தான பாடகராகச் சேர்ந்தார் சூர்தாஸ். ஒவ்வொரு நாளும் கண்ணனுக்கு விதவித அலங்காரங்கள் செய்வார்கள் அர்ச்சகர்கள். கண்ணில்லாத சூர்தாஸ் அன்றன்று என்ன நிறப் பட்டுப் பீதாம்பரத்தைக் கண்ணன் அணிந்திருக்கிறான் என்பதைத் தம் பாடலில் சொல்லிப் பாடுவார்.
கண்ணில்லாத சூர்தாஸ் எப்படி ஒவ்வொரு நாளும் கண்ணன் அணிந்த உடையின் நிறத்தைச் சரியாகத் தன் பாடலில் இணைத்துச் சொல்கிறார்? அர்ச்சகர்களுக்கு ஆச்சரியம்.
ஒருநாள் திரைச்சீலையால் கிருஷ்ண விக்கிரகத்தை மறைத்து கண்ணனுக்கு உடையே அணிவிக்காமல் முத்து மாலைகளையே உடைபோல அணிவித்து அலங்கரித்தார்கள். திரையைத் திறக்காமலேயே சூர்தாஸைப் பாடச் சொன்னார்கள்.
`கண்ணா! உன் முத்துப்பல் வரிசைக்குப் பொருத்தமாக இருக்கட்டும் என்று ஆடையில்லாமல் இன்று முத்தாலேயே உடை அணிந்தாயா நீ?` என அன்று சூர்தாஸ் பாடியதும் அர்ச்சகர்கள் ஓடோடி வந்து சூர்தாசைன் பாதங்களில் விழுந்து பணிந்தார்கள்.
நூற்று நான்கு வயதான தருணத்தில் கண்ணன் சூர்தாசை வைகுந்தத்திற்கு அழைத்துக்கொள்ள விரும்பினான். அப்போது ஓர் அடியவர் சூர்தாசிடம் `நீங்கள் கண்ணனைப் பற்றி எண்ணற்ற பாடல்களைப் பாடினீர்கள், உங்கள் குரு வல்லபாச்சாரியாரைப் பற்றி ஒரு பாடல் கூடப் பாடவில்லையே?` எனக் கேட்டார்.
சூர்தாஸ் அந்த அடியவரின் வேண்டுகோளை ஏற்றார். தம் குரு வல்லபாச்சாரியார் பற்றி உள்ளம் உருக ஒரு பாடலைப் பாடியவாறே மண்ணில் சரிந்தார். அவர் ஆன்மா விண்ணில் பறந்து கண்ணனுடன் கலந்தது.
சூர்தாசின் சில பாடல்கள் இந்தித் திரைப்படங்களிலும் இடம் பெற்றுள்ளன. சூர்தாசருக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com
- ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படுகிறது.
- பல்வேறு நோய்நிலைகளிலும் மலச்சிக்கல் உண்டாகக்கூடும்.
முதுமையில் பலரும் அவதிப்படும் நோய்நிலைகளுள் மலச்சிக்கலும் ஒன்று. அடுக்கடுக்காய் நோய்களை சுமந்து நாட்களை கடத்தும் முதுமைக்கு, மலச்சிக்கல் கூடுதல் சுமை தான். இயல்பாக மலம் கழிந்தால் உடல் சுத்தமடையும், வியாதிகள் அண்டாது. ஆனால் மலச்சிக்கல் வந்தால், மனமும் சிக்கலாகும். உடல் நலமும் குன்றும்.
"மும்மலம் அறுநீர்" என்பது வழக்கு மொழி. அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழிக்க வேண்டும் என்பது பொருள். அதுவே நம் ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஆனால், முதுமையில் ஒரு முறை மலம் கழிப்பது என்பதே பலருக்கு கடினமாக மாறிவிடுகிறது. இதனால் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படுகிறது.
உலகில் கிட்டத்தட்ட 12 முதல் 19 % பேர் வரை மலச்சிக்கலால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் வாரத்திற்கு மூன்று முறை மலம் கழிப்பது என்பதே இயல்பானதாக கருதப்படுகிறது. நமது உணவு முறையும், பழக்கவழக்கங்களும் தினசரி மலம் கழிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது. ஆனால் தற்போதைய நவீன வாழ்வியலில் தினசரி மலம் கழிக்கும் நிலை என்பது முற்றிலும் மாறிவிட்டது.
முதுமையில் மலச்சிக்கல் என்பது முறையற்ற, கடினமான சில சமயம் வலியுடன் கூடிய மலம் கழிப்பதைக் குறிப்பதாக உள்ளது. அதிகம் பேருக்கு மலச்சிக்கல் உண்டாகக் காரணம் முதுமையில் குடல் இயக்கங்கள் வெகுவாக குறைவதால் தான். இயல்பாக நடப்பது என்பதே கடினமாக இருக்கும் முதுமையில், உடல் இயக்கங்கள் அதிகம் இல்லாமையாலும், வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளின் வன்மை குன்றுவதாலும், முக்கியமாக உணவில் நார்ச்சத்துக்கள் குறைபாடு காரணமாகவும் மலச்சிக்கல் உண்டாகின்றது.
இத்தகைய காரணங்கள் மட்டுமின்றி, பல்வேறு நோய்நிலைகளிலும் மலச்சிக்கல் உண்டாகக்கூடும். ஹைப்போதைராய்டு எனும் குறைவீதன நோய்நிலை, டைவெர்டிகுலோசிஸ், இரத்தத்தில் அதிகமான கால்சியம் அளவு (hypercalcemia), இரத்தத்தில் பொட்டாசியம் சத்துக் குறைதல் (hypokalemia), மன அழுத்த நோய்கள், மற்றும் உடல் நலத்திற்கு எடுக்கும் பல்வேறு மருந்துகளும் கூட முதுமையில் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாகின்றன.
பொதுவாகவே சைவ உணவில் உள்ள தாவர உணவுப்பொருட்களில் சக்கைத் (நார்ச்சத்து) தன்மையுடைய பொருட்கள் அதிகம் இருப்பதால் அத்தகைய உணவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் குறைவு. மேலும் மலத்தின் தன்மையும் இயல்பாக இருக்கும். அசைவ உணவு உண்பவர்களின் மலம், போதுமான நார்ச்சத்துக்கள் இன்மையால், குறைவான அளவுக்கு மலம் கழியும். மலச்சிக்கலும் அதிகம் உண்டாகும்.
மலச்சிக்கலைப் போக்க நார்ச்சத்து எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே அளவிற்கு நீர்ச்சத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. முதுமையில் சிறுநீர் அடிக்கடி கழியும் தொந்தரவு பலருக்கு ஏற்படுவதால், பெரும்பாலான முதியவர்கள் தண்ணீர் குடிக்க கூட தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மலம் கெட்டிப்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது.
நமது உடலின் அன்றாட வளர்ச்சிதை மாற்றத்திற்கு தினசரி 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் என்பதே உடலுக்கு ஊட்டமளிக்கும் பானம். ஆகவே தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்துவது நல்லது. இது மலச்சிக்கல் தீர வழிவகை செய்யும்.
சித்த மருத்துவம் மலச்சிக்கலுக்கு முதன்மைக் காரணமாக குறிப்பிடுவது வாதத்தை தான். அதாவது குடலில் சேரும் வாயுவும், அத்துடன் நட்பாக கைக்கோர்க்கும் பித்தமும், கபமும் பல்வேறு நோய்களில் மலச்சிக்கலை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.
அதன்படி வாதக் குற்றத்தை தன்னிலைப்படுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், முதுமையில் இயல்பாகவே உடல் பலவீனம் இருப்பதாலும், அதிக முறை மலம் கழிந்தால் உடலில் நீர்ச்சத்தும், உப்புசத்தும் இழக்கப்படுவதால் கூடுதல் பலவீனம் ஏற்படக்கூடும். ஆகையால் இலகுவான மலத்தை இளக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது சாலச்சிறந்தது.
எனவே சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மலச்சிக்கலை போக்கும் எளிய மூலிகைகளான நிலாவாரை, சிவதை, திரிபலை, தனி கடுக்காய் போன்ற மூலிகை மருந்துகளை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். மேலும் வாத, பித்த, கபத்தில் பாதிக்கப்பட்ட குற்றங்களுக்கு ஏற்றாற் போல் மருந்துகளை எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும்.
நிலாவாரை என்னும் மூலிகை, மலச்சிக்க லுக்காக நம் நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகை மருந்தாக உள்ளது. இதில் உள்ள 'சென்னாசைடு' வகையான வேதிப்பொருட்கள் மலம்போக்கி செய்கை உடையன. நிலாவாரை சூரணம் எனும் சித்த மருந்தினை தினசரி இரவில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ள மலச்சிக்கல் நீங்கும். அத்துடன் வாதமும் நீங்கும்.
நார்ச்சத்தினை அதிகம் கொண்ட, மலத்தை இலகுவாக்கி கழிக்கும் தன்மை உடைய மற்றொரு மூலிகை இசப்புக்கோல். இன்று இசப்புக்கோல் எனும் மூலிகை நவீன மருத்துவத்திலும் மலச்சிக்கல் போக்கும் மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இது நாட்பட்ட மலச்சிக்கலால் ஏற்படும் ஆசன வாய் வெடிப்பினை (பிளவு) போக்கும் தன்மையும் உடையது. மலத்தை எளிதில் வெளிப்படுத்தவும் செய்யும்.
ஆமணக்கு எண்ணெய் என்ற மலச்சிக்கலைப் போக்கும் மாமருந்து பற்றி பலரும் மறந்துவிட்டனர். இதனை ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவுக்கு இரவில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது மலச்சிக்கலை போக்கும். வாதத்தைக் குறைக்கும். வாதத்துடன் பித்தம் சேர்ந்த குறிகுணம் உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெய்யுடன், சூடான பால் சேர்த்து எடுத்துக்கொள்ள நற்பலன் தரும்.
முதுமையில் ஒவ்வொருவர் கையிலும் வைத்திருக்க வேண்டிய அற்புத மருந்து 'திரிபலை சூரணம்'. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலை சூரணம் எனும் சித்த மருந்து மலச்சிக்கலை போக்க பேருதவி புரிவதோடு கூடுதலாக பலப்பல நன்மைகளையும் தரவல்லது. தினசரி இரவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து எடுக்கலாம். இதனால் வயிறு கடுப்பின்றி மலம் கழியும்.
அதே போல் கடுக்காய் சூரணம் எனும் மருந்தும் நற்பலன் தரும். இது குடலில் பெரிஸ்டால்சிஸ் அசைவுகளை தூண்டுவதன் மூலம் மலச்சிக்கலை தீர்க்க ஏதுவாகின்றது. கடுக்காய் தோலில் மலச்சிக்கலை தீர்க்கும் தன்மையுள்ள 'ஆந்த்ரோகுயினோன்' வகையான வேதிப்பொருள் உள்ளது. கடுக்காய் பிஞ்சுடன் விளக்கெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் 'மூலக்குடோரி தைலம்' எனும் சித்த மருந்தும் முதுமையில் உண்டாகும் மலச்சிக்கலுக்கு நல்ல நிவாரணம் தரும்.
மலச்சிக்கலால் அவதியுறும் முதியவர்கள் முதலில் வாதம் அதிகரிக்காத உணவை நாடுவது நல்லது. மலச்சிக்கல் நிலையில் வாதம் அதிகரிக்கும் உணவுகளான, அதிக கலோரி சத்தினைக் கொண்ட கிழங்கு வகைகள், சுண்டல் வகைகள் இவற்றை தவிர்ப்பது நல்லது. "மண் பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசிவோம்" என்று தேரையரின் சித்த மருத்துவ வரிகள் கூறுகின்றன. அதன்படி, நார்ச்சத்தினை அதிகம் கொண்ட கருணைக்கிழங்கினை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
தினசரி உண்ணும் உணவில் 300 கிராம் வரை நார்ச்சத்து இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. எனவே, அதிக நார்சத்துக்களைக் கொண்ட பிஞ்சுக் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்ப்பது நல்லது. பப்பாளி, உலர்ந்த திராட்சை, அத்திப்பழம் இவற்றிற்கு இயல்பாக மலம் இளக்கும் தன்மை உடையதால், அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. பொதுவாகவே கீரைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.
அதிக கொழுப்புள்ள, மாவுச்சத்துள்ள உணவுகள், எண்ணெய் தோய்ந்த பதார்த்தங்கள், வறுத்த, பொரித்த உணவுகள், ஈரட்டிகள் (பிஸ்கேட்ஸ்), அடுமனை (பேக்கரி) உணவுகள் ஆகிய உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது குடலுக்கு நன்மை செய்யும். சீரணமாக நெடுநேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் எளிதில் மலச்சிக்கலை உண்டாக்கும். எனவே முதுமையில் 'இழிவறிந்து உண்பான் கண்' என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, அளவான, ஆரோக்கியமான உணவு வகைகளை நாடுவது நல்லது.
முதுமையில் ஏற்படும் நாட்பட்ட மலச்சிக்கலால் இன்னும் பல்வேறு உடல் உபாதைகள் உண்டாகக்கூடும். காரணம் குடலில் சேர்ந்த அபான வாயு வெளியேறாமல் தடைபடுவதால் நெஞ்சுவலி, வயிற்றுப் பொருமல், மயக்கம், சில சமயங்களில் மார்பு படபடப்பு போன்ற குறிகுணங்கள் உண்டாகும்.
மேலும் நாட்பட்டு கட்டிப்போன மலத்தினால் மலக்குடல் மற்றும் ஆசன வாய்ப்பகுதியில் எரிச்சல், வலி, விரிசல் ஏற்பட்டு இரத்தக் கசிவும் ஏற்படக்கூடும். ஆகவே அபானன் வாயுவை முற்றிலும் நீக்கும்படியாக மலச்சிக்கலை போக்கிக்கொள்வது நலத்திற்கு நல்லது என்கிறது சித்த மருத்துவம்.
கட்டிப்போன மலத்தை முக்கி வெளியேற்ற முடியாமல், விரல்களால் வெளியே தள்ளி திருப்தி அடையும் முதுமைக்கு மலச்சிக்கல் ஒரு கொடிய நோய்நிலை தான். அவ்வாறு விரல்களால் வெளியே தள்ள முற்படும்போது, மலக்குடல் சவ்வில் ஏற்படும் புண்கள் இன்னும் கூடுதல் சிரமத்தைக் கொடுக்கும்.
இவ்வாறாக, இயற்கை உபாதையைக் கூட இயற்கையாய் கழிக்க முடியாமல் தடுமாறும் முதுமைக்கு ஒவ்வொரு நாளும் போராட்டம் தான். அத்தகைய ஆரோக்கியத்திற்கான போராட்டத்தை உணவால், மருந்தால், மனதால் முடிவுக்கு கொண்டு வருவதே நலத்திற்கான பாதையை செப்பனிடும்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
- சிலருக்கு தன் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பணம் இருக்கும்.
- செல்வம் வேண்டாம் என்று பணத்தை விரும்பாத மனிதர்கள் இவ்வுலகில் யாருமே கிடையாது.
மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் நிறைந்த செல்வம், பூரண ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு தொடாதது கூட பொன்னாகும். சிலருக்கு நினைத்தது அப்படியே நடக்கும்.
நிரந்தரமற்ற காரணியான பணம் சிலரிடம் தேவைக்கு அதிகமாக குவிகிறது. சிலருக்கு தன் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பணம் இருக்கும். அதன் மூலம் பொன், பொருள், அசையும், அசையா சொத்துகள் அமைகிறது. ஒரு பகுதியினருக்கு பற்றாக்குறை என்பது எப்பொழுதும் உள்ளது. கடன் வாங்கி செலவு செய்வது என்பது சிலருக்கு மாதாமாதம் ஏற்படும் அனுபவமாகும். சிலர் அன்றாடம் வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. பலர் பண விஷயங்களுக்காக ஏதாவது உருட்டல், மிரட்டல் செய்தே காலத்தை தள்ள வேண்டியுள்ளது.
சிலருக்கு அடிப்படைத் தேவையைக் கூட சமாளிப்பதில் சிரமம் இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். கையில் காசு பணம் தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, கடன், நகைக் கடன், வங்கிக் கடன் வாகனக் கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன் என்று பணம் பல்வேறு வகைகளில் கையில் இருப்பு இல்லாத அமைப்பு பலருக்கு உள்ளது. நினைத்து அனைத்தும் எதிர்மறையாக நடந்து நிம்மதியில்லாத நிலையை ஏற்படுத்தும். பணமே பிரதான காரணியாக இருக்கும் இந்த காலத்தில் பணம் படைத்தவர்கள் ஏதேனும் ஒரு வகையில் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள்.
இது போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் பணமே காரணம். தனம் எனும் பணமே மனித வாழ்வை மகழ்ச்சிகரமாக மாற்றும் கருவியாக திகழ்கிறது. இன்றைய நவநாகரீக உலகில் பணம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் அல்ல, செலவு செய்பவர்களே பணக்காரர்கள்' என்கிறார்கள். பணம் மனிதனை படைத்ததா? அல்லது மனிதன் பணத்தை படைத்தானா என்று வியக்கும் வகையில் நுகர்வுக் கலாசாரம் பெருகியிருக்கிறது. குடும்ப நபர்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறைவு செய்ய பணம் மிக மிக அவசியமான காரணியாக திகழ்கிறது. பணம் படைத்தவர்கள் எந்த தவறு செய்தாலும் மன்னிப்பு கிடைக்கிறது. பணம் இல்லாதவன் செய்யும் குற்றம் மன்னிக்க முடியாத குற்றமாக காலப் பதிவேட்டில் பதிவாகுகிறது. உதாரணமாக சட்டைப் பையில் பணம் வைத்து இருப்பவனுக்கு மட்டுமே கடவுள் கூட காட்சி தருகிறார். அதனால் தான் திருவள்ளுவர்
'பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்'
என்று கூறியுள்ளார். இதன் பொருள் தகுதி அற்றவரையும் கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை என்பதாகும். அதாவது மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதாகும்.
செல்வம் வேண்டாம் என்று பணத்தை விரும்பாத மனிதர்கள் இவ்வுலகில் யாருமே கிடையாது. வளமான வாழ்விற்கு அடிப்படையான தேவை செல்வம் என்பதால் செல்வத்தின் மதிப்பை உணர்ந்தே மனிதர்களாய் பிறந்த அனைவரும் பொருளாதாரத்தில் தங்கள் வாழ்வினை வளப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர்.
ராசிகளின் தன்மை, வேகம் மற்றும் செயல்படும் விதத்தின் அடிப்படையில் நிரந்தர பொருளாதாரத்தை சமன் செய்யும் சில எளிய பரிகாரங்களைப் பார்க்கலாம். காலபுருஷ தத்துவத்தின்படி மேஷத்தில் தொடங்கி மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் பல்வேறு தத்துவங்கள் ரகசியங்கள் அடங்கியுள்ளன. கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்து இருக்கிறார்கள்.
சரம்
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும். சரம் என்றால் வெகு சலனமுடையது. தடையற்ற இயக்கம் கொண்ட அமைப்பாகும். சர லக்னத்திற்கு சுபமோ அசுபமோ எளிதில் வந்தடையும்.
ஒருவருடைய வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழி நடத்தும். வந்த தடமும் இருக்காது. போன சுவடும் தெரியாது. சர லக்னம் படைத்தல் தத்துவத்தை தன்னுள் அடக்கியது. சர ராசிகள் வலிமை பெற்று அதில் நின்று ஒரு கிரகம் தசா புத்திகள் நடத்தினால் ஜாதகருக்கு நன்மைகள் வேகமாக நடக்கும். இவர்கள் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள். கிடைத்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்து பவர்கள். எதிலும் வேகம், விவேகம் என எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள். ஆதாயம் இல்லாத விசயத்தை செய்ய மாட்டார்கள்.
குறுகிய காலத்தித்தில் பல நன்மைகளை அனுபவிப்பார்கள். அடிப்படை வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்ட சிலர் மிக குறுகிய காலத்தில் தேவைக்கு அதிகமாக சம்பாதித்து வீடு, வாசல் என செட்டிலாகி விடுவார்கள்.மேலும் இந்த சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளில் ஒரு கிரகம் அசுப வலிமையுடன் தசை நடத்தினால் கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் கூட தெருக்கோடிக்கு வந்து விடுவார்கள். சர ராசியில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தி கடுமையான பொருளாதார பிரச்சினைகளில் இருப்பவர்கள் ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளைகளில் ஸ்ரீ மகாலட்சுமி முன்பு நெய் தீபம் ஏற்றி தொடர்ச்சியாக வணங்கி வருவது நல்லதாகும்.

ஸ்திரம்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பது சலனமற்றது. அசைவற்ற நிலையைக் கொண்ட தன்மையாகும். சுபமோ, அசுபமோ எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும் கூட வழி நடத்தும். ஸ்திர லக்னம் காத்தால் தத்துவத்தை அடக்கியது. கொள்கை மற்றும் லட்சிய பிடிப்பு உள்ளவர்கள். இவர்கள் ஒரு தடவை எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது.
அதாவது இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள். அது சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அதிலிருந்து மாற மாட்டார்கள். எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள். தாம் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். நிலையான வெற்றியை பெறுவார்கள். வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓய மாட்டார்கள்.
ஸ்திர ராசியில் நின்று ஒரு கிரகம் சுபவலிமை பெற்று தசை புக்திகள் நடந்தால் நிலையான பல யோகங்கள் ஜாதகரின் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
பொருளாதார வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்கும். அதே நேரத்தில் அசுபத் தன்மையுடன் தசை புக்திகள் நடத்தினால் ஜாதகருக்கு நிலையான பல இன்னல்களை, தீராத தீர்க்க முடியாத மன பாரம் இருக்கும்.
பொருளாதார குறைபாடு அதிகரிக்கும்.
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்தில் இருந்து ஒரு கிரகம் தசை நடத்தும் பொழுது எதிர் விளைவுகள் மிகைப்படுத்தலாக இருந்தால் மகாலட்சுமிக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவிற்கு உரிய காயத்திரி மந்திரங்கள் மற்றும் லலிதா சகஸ்ஹர நாமம் படித்து வர நன்மைகள் அதிகரிக்கும்.
உபயம்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத்தில் அடங்கும். உபய லக்னம் சர, ஸ்திர லக்னங்களின் தன்மையையும் உள்ளடக்கியது. அதாவது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு நகரும் போது கிரக தன்மை சரம். மாறிய பிறகு ஸ்திரம். அதிசார கதியில் அல்லது வக்கிர நிலையில் சஞ்சாரம் செய்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்புவது உபயம்.
இந்த லக்னம் அழித்தல் தத்துவத்தையும் தனக்குள் கொண்டுள்ளது. ஒருவருடைய சுய ஜாதகத்தில் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகள் வலிமை பெற்ற கிரகத்தின் தசை புத்திகள்
நடைபெற்றால் ஜாதகருக்கு தொடர்ந்து பல நன்மைகள் நடைபெறும். கடல் அலை போல் மீண்டும் மீண்டும் அவருக்கு தொடர்ந்து பல நன்மைகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். செல்வாக்கில் மிதப்பார்கள்.
இந்த ராசியில் அசுப தன்மை பெற்ற கிரகம் தசை புத்திகள் நடத்தினால் ஜாதகர் ஒரு பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் ஒரு பிரச்சனை அவர் வீட்டின் கதவை தட்டும். ஒரு இழப்பை சமாளித்து மீளும் முன்பு மீண்டும் அடுத்த இழப்பு தயாராகி விடும்.
மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவரான இவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைக்கு அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி தமக்கு தாமே சொந்த செலவில் சூன்யம் வைக்கும் புத்திசாலிகள். எதிலும் இரட்டை நிலைதான். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட மாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். மனசு மாறிக்கிட்டே இருக்கும். ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும். உபய ராசியில் நின்று அசுபத் தன்மையுடன் ஒரு கிரகம் தசை நடத்தினால் கோ பூஜை, கோதானம் செய்தால் எளிதில் நிலைமை சீராகும். மிகக் கடுமையான நிதி நெருக்கடி நிலையில் இருக்கக்கூடியவர்கள் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் பசுவிற்கு பச்சைப்புல் வழங்கினால் நெருக்கடி நிலை நீங்கும்.
எனவே ராசிக்கட்டத்தில் உள்ள நவகிரகங்களை வைத்து பரிகாரம் செய்யாமல் தசாபுத்திக்குரிய கிரகங்களுக்கு தகுந்த வழிபாட்டு முறையை கடைபிடிக்க நிம்மதியாக சகல ஐஸ்வர்யத்துடன் வாழ முடியும். பணம் இருந்தால் அந்த நபருக்கு வீடு, புகழ், கவுரவம், அதிகாரம் எல்லாம் தேடி வரும். யாருடைய வங்கி இருப்பு அதிகமாக உள்ளதோ அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். பணம் இல்லாதவனிடம் எதுவும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் பணத்தை விட முக்கியமானது எதுவுமில்லை ஏனெனில் பொருள் உள்ளவனையே சக்தி வாய்ந்தவன் என்று உலகம் நம்புகிறது. பணம் உள்ளவர்களுக்கு சமூகம் அதிக மரியாதை கொடுப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஒருவன் தன் வாழ்நாளில் எண்ணற்ற துறைகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அவனிடம் பணம் இல்லை என்றால் சமூகம் அவருக்கு சிறப்பு மரியாதை கொடுப்பதில்லை. வெற்றியுடன் பணம் இருந்தால், சமூகத்தில் அவருக்கு மரியாதை பல மடங்கு அதிகரிக்கிறது. பல வீடுகளில் பணப் பற்றாக்குறையால்தான் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. போதுமான பணம் இல்லாததால், உறவுகள் மதிப்பதில்லை. பணம் சம்பாதிக்கும் பிள்ளையிடம் பாசம் பொழியும் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்காத பிள்ளையை கண்டு கொள்வதில்லை. பணம் இல்லாதவர் கடன் கேட்டு விடுவானோ என பயந்து உறவுகள் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி உதாசீனம் செய்கிறார்கள். பிரபஞ்ச சக்திக்கு அடுத்தபடியாக உலகை இயக்கும் சக்தியாக பணம் விளங்குகிறது. அந்த பணத்தை விடாமுயற்சியும், சலியாத உழைப்பும் உள்ளவர்கள் எப்படியும் அடைந்து முன்னேறி விடுவார்கள்.
எந்த ஒருசெயலிலும் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்க வேண்டும் அடுத்தவர்களை விட மேலே இருக்க வேண்டும் என்ற ஆவலில் தங்களுடைய இயல்புக்கும், தகுதிக்கும் அப்பாற்பட்ட பணியில் ஈடுபட்டால் பணம் அவர்களை வீழ்த்தும்.
- பெற்றோர் இறந்த திதியை கண்டுபிடித்து அவர்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
- குல தெய்வம், இஷ்ட தெய்வம் போன்றவற்றை வழிபடுபவர்கள் பித்ருக்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் முழுமை இருக்காது.
கண்கண்ட தெய்வம் என்றால் அது பெற்றோர்கள்தான். அவர்களை வாழும் காலத்தில் உரிய மரியாதை கொடுத்து சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். இதை கருத்தில் கொண்டுதான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர். ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் பெற்றோர்களை யாரும் கண்டுகொள்ளாத நிலைதான் உள்ளது.
வயதான நிலையில் வாடி வதங்கி, ஒருவேளை உணவுக்காக வாரிசுகளின் காலடியில் பரிதாபமாக கிடக்க வேண்டிய நிலையில்தான் பெரும்பாலான முதியோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அந்த முதியவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. அந்த வேதனைகள்தான் தோஷங்களாக மாறுகின்றன.
பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்கள் மனம் குளிரும்படி நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ளாதவர்கள் அவர்கள் மறைந்த பிறகாவது உரிய கடமைகளை செய்ய வேண்டும். அதாவது மூதாதையர்களுக்கு செய்யப்படும் பித்ரு கடன்களை ஆண்டு தோறும் செய்ய வேண்டும்.
பெற்றோர் இறந்த திதியை கண்டுபிடித்து அவர்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்படி செய்யாத போது பித்ருக்கள் வருத்தப்படுவார்கள். அந்த வருத்தம்தான் வாரிசுகளுக்கு பித்ரு தோஷமாக மாறிவிடும். குழந்தைகளின் ஜாதகத்தை கணிக்கும்போது இந்த பித்ரு தோஷம் இருப்பதை ஜோதிடர்கள் மிக எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.
பித்ரு தோஷம் இருப்பதை பல கிரக அமைப்புகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒருவர் ராகுகாலத்தில் பிறந்திருந்தால் அவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பார்கள். அதே போல சுபகிரகங்கள் மறைவு இடங்களில் அமைந்திருந்தால் அதையும் பித்ரு தோஷம் என்பார்கள். சூரியன் பகை அல்லது நீச்சம் பெற்றிருந்தால் அதுவும் பித்ரு தோஷத்துக்குரிய அறிகுறி என்பார்கள்.
ராகு, கேது நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெறும்போது அது பித்ரு தோஷமாக கருதப்படும். இதுபோல சூரியன், சந்திரன், செவ்வாய் அமைவதைப் பொருத்து பித்ரு தோஷம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். பித்ரு தோஷம் இருந்தால் குடும்பத்தில் முன்னேற்றம் என்பது இருக்கவே இருக்காது.
ஒருவர் பித்ரு தோஷம் பாதிப்பு இருந்தால் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய கட்டமும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். பொருளாதார ரீதியில் திருப்தியான நிலைக்கு வர முடியாமல் திண்டாடுவார்கள். இதை வைத்தே ஒருவருக்கு பித்ரு தோஷம் இருக்கி றதா? இல்லையா? என்பதை கண்டுபிடித்து விடலாம்.

பித்ரு தோஷம் இருந்தால் வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். சுப காரியங்கள் நடை பெறுவதில் இடையூறு கள் ஏற்படும். பெரும்பாலான பித்ரு தோஷ ஜாதகக்காரர்க ளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்ப தில் தாமதம் உண்டாகும். எனவே பித்ரு தோஷம் இருந்தால் அலட்சியாக இருக்கவே கூடாது.
உரிய பரிகாரங்கள் அவசியம் செய்யப்பட வேண்டும். மறைந்த முன்னோர்களான பித்ருக் கள் மனம் குளிர்ந்த நிலையில் இருந்தால்தான் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். ஒருவர் எந்த அளவுக்கு பித்ருக்களுக்கு சரியான முறையில் எள்ளும், தண்ணீரும் கலந்த தர்ப்பணத்தை முறைப்படி கொடுக்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு வாழ்க்கையில் முன் னேற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.
பித்ருக்களை வழிபடாமல் எந்த கோவிலுக்கு போனாலும் நிச்சயம் பலன் கிடைக்காது. குல தெய்வம், இஷ்ட தெய்வம் போன்றவற்றை வழிபடுபவர்கள் பித்ருக்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் முழுமை இருக்காது. எனவே பித்ருக்களை அமாவாசை தோறும் தர்ப்பணம் செய்து வழிபட்டால் நல்லது.
பித்ரு தோஷம் இருப்பவர்கள் அதற்குரிய பரிகாரத்தை பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு உரிய வகையில் முறைப்படி செய்ய வேண்டும். அனுஷம், பூசம், பூனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் நட்சத்திர நாட்களில் அமாவாசை வருமானால் அன்று செய்யப்படும் தர்ப்பண பூஜைகள் உடனடியாக பித்ரு தோஷத்தை நீக்கும் வகையில் இருக்கும். எனவே மாத அமாவாசைகளில் இந்த நட்சத்திர நாட்கள் வருகிறதா? என்பதை பார்த்து பித்ரு பூஜை செய்யுங்கள்.
புரட்டாசி மாதம் மகாளய பட்சம் உள்ள 15 நாட்களில் பரணி நட்சத்திரம் வரும் நாள் மிகவும் விசேஷமானது. அன்றைய தினத்தை மகாபரணி என்று சொல்வார்கள். அன்றைய தினம் பித்ருக்களுக்கு படையலிட்டு வழிபாடுகள் செய்தால் எவ்வளவு பெரிய பித்ரு தோஷமாக இருந்தாலும் அகன்று விடும்.
அதுபோல அட்சய திருதியை தினமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் புரோகிதர்களை வீட்டுக்கு அழைத்து பித்ரு பூஜை செய்தால் தோஷங்கள் விலகும். பித்ருக்களின் கருணை பார்வை குடும்பத்தி னர் மீது கிடைக்கும். இது தவிர தினமும் நாம் உணவு சாப்பிடுவதற்கு முன்பு அதில் கொஞ்சம் எடுத்து காகத்திற்கு வைப்பது மிகப்பெரிய பரிகாரம் ஆகும்.
காகத்திற்கு தினமும் அன்னம் வைப்பதன் மூலம் எவ்வளவு பெரிய பித்ரு தோஷத்தின் பாதிப்பையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
வீட்டில் இத்தகைய பித்ரு பூஜைகள் செய்ய இயலாதவர்கள் குறிப்பிட்ட ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்யலாம். காசி, கயா, பிரயாகை தலங்களுக்கு சென்று பிண்டம் வைத்து பித்ரு பூஜைகள் செய்தால் பித்ரு தோஷங்கள் விலகி ஓடி விடும். அவ்வளவு தூரம் போக முடியாது என்று நினைப்பவர்களுக்கு ஏற்ப தமிழகத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்காக சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு பல்வேறு ஆலயங்கள் உள்ளன. பித்ரு தோஷம் ஜாத கத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதையும் அதை நிவர்த்தி செய்ய தமிழகத்தில் எந்த ஆலயத்துக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். பித்ரு தோஷ நிவர்த்தி தலங்களில் அதில் முதன்மை யானதாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
ராமேசுவரம் கடலில் அக்னி தீர்த்தம் உள்ளது. முதலில் அங்கு நீராட வேண்டும். பிறகு ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராட வேண்டும். அதன் பிறகு ராமநாத சுவாமியை வழிபட வேண்டும். இந்த வழிபாடு மூலம் உடனடியாக பித்ரு தோஷம் விலகும் என்கிறார்கள்.
இதே போல கூத்தனூர் அருகே உள்ள திலதர்ப்பணபுரி, திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகே உள்ள பூவாளூர், மதுரை அருகே உள்ள திருபுவனம், திருவெண்காடு மற்றும் புள்ளம் பூதங்குடி, வேதாரண்யம, கன்னியாகுமரி, ஆகிய தலங்களும் பித்ரு தோஷம் நிவர்த்திக்குரிய தலங்களாக கருதப்படுகிறது. கோவில்களில் மரக்கன்றுகள் நடுவது மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். இதுவும் பித்ரு தோஷத்தை தணிக்க கை கொடுக்கும்.
ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அதற்கு ஏற்பதான் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியத்தை கணக்கிட முடியும். சூரியன் சரியானபடி அமையாவிட்டால் பித்ரு தோஷம் அதிகம் இருப்பதை உணர முடியும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் சூரியனை வழிபட வேண்டும்.

தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் பரிதியப்பர் ஆலயம் உள்ளது. ஜாதகத்தில் சூரியன் உச்சம் அல்லது நீச்சம் பெற்றவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். இந்த தலத்தில் உள்ள சூரிய தீர்த்த கரையில் நீத்தார் கடன் செய்யலாம். இந்த பித்ரு பூஜை காசியில் செய்யப படும் பித்ரு பூஜைக்கு இணையானதாக கருதப் படுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் ஆலயமும் பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகும். அங்கு நதியில் நீராடி சங்க மேஸ்வரரை வழிபட்டால் பித்ருக்களின் ஆசியை பெற முடியும். அதுபோல கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயமும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிக சிறந்த பரிகார தலமாகும். அங்கும் நதியில் நீராடி மகுடேஸ்வரரை வழிபட வேண்டும்.
திருவாரூர் மாவட்டம் குருவி ராமேசுவரத்தில் உள்ள திருப்பள்ளி முக்கூடல் ஆலயமும் சிறப்பானதாக கருதப்படுகிறது. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயமும் பித்ரு தோஷ நிவர்த்தி பூஜைகளுக்கு புகழ் பெற்றது. அமாவாசை நாட்களில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஆலயத்தில் திரளும் பல்லாயிரக்கணக்கான மக்களே இதற்கு சாட்சியாகும்.
சென்னை கவரப்பேட்டை அரண்வாயலில் உள்ள வரமூர்த்தீஸ்வரர் கோவிலும் பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகும். சென்னை மக்கள் இந்த தலத்துக்கும் சென்று வழிபட்டு பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட முடியும். இது போல தமிழகம் முழுவதும் பல ஆலயங்கள் பித்ரு தோஷத்தில் இருந்து மக்களை மீட்கும் சிறப்பான தலங்களாக உள்ளன.
உங்களுக்கு எந்த ஆலயம் அருகில் இருக்கிறதோ அங்கு சென்று உரிய முறையில் வழிபாடு செய்தாலே போதுமானது.
- திருமந்திரம் திருமூலரால் எழுதப்பட்ட முதல் சைவ சித்தாந்தப் படைப்பு என்று கருதப்படுகின்றது.
- உடலை விட மனம் தியானத்திற்கு மிக முக்கியமாகிறது.
விஞ்ஞானிகளும், பகுத்தறிவாளர்களும் உலகத்திற்கு செய்துள்ள, செய்து வரும் தொண்டுகள் ஏராளம்.
திருமூலர், திரு மந்திரம் என அடிக்கடி குறிப்பிடுகின்றோம் அல்லவா! அந்த திருமூலர் சொல்லிய கருத்து புதையல்கள் ஏராளம்.
திருமந்திரம் திருமூலரால் எழுதப்பட்ட முதல் சைவ சித்தாந்தப் படைப்பு என்று கருதப்படுகின்றது. 'அன்பே சிவம்' என்பதனை அன்றே வலியுறுத்தியவர். இதன் காலத்தினை உத்தேசமாக நிர்ணயித்து 5000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என கூறப்படுகின்றது. திருமூலர் பதினென் கீழ் சித்தர்களில் ஒருவர் ஆவார். நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுபவர். பன்னிரெண்டு திருமுறைகளில் 'திருமந்திரம்' பத்தாம் திருமுறையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. பொதுவில் இத்தகு சித்தர்கள் கடும் தவத்தின் மூலம் அஷ்டமா சித்திகளை பெற்றிருந்தனர். இத்தகு நூல்களை நான் அறிய காரணம் என் கணவர் ஸ்ரீபால் தான். இந்த புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்வார். படித்திருக்கேனா என கேள்விகள் கேட்டு 'சோதனை' செய்வார். பரீட்சை வைத்து மார்க் போடாத குறைதான். சரியான பதில் சொல்லாவிடில் பெஞ்சு மேல் ஏற்றி முட்டி போட வைக்காததுதான் பாக்கி. மருத்துவ வேலை, குடும்ப பொறுப்பு காரணமாக ஆழ்ந்த அறிவினை அடைய முடியவில்லை. மேம்புல் மேய்ந்தது போல படித்தே பல ஆச்சர்யமான விஷயங்களை அறிந்தேன். இன்றைய கால கட்டம் வேறு. டி.வி., வீடியோ, யூடியூப், பேட்டிகள் இவற்றின் மூலம் செய்திகள் நிறைய கொட்டுகின்றன. வீட்டு வேலைகள் செய்யும் போதும், பயணம் செய்யும் போதும் இவைகளை கேட்கலாமே. செல்போனில் அரட்டை அடித்து உபயோகமற்ற செய்திகளில் வாழ்க்கையினையும் நேரத்தினையும் வீணடிக்காமல் நல்ல முறையில் பயனுள்ள செய்திகளை அறியலாமே.பல வருடங்களுக்கு முன்னால் திருமூலரிடம் இருந்து எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அது சற்று வேறுபட்டு இருந்தது. அவரைப் பற்றி படிக்கும் போது பல காலம் தவம் இருந்து அஷ்டமா சித்திகளை அடைந்தவர். அவரால் தன் உடலினை அணுவினை விட சிறியதாக்கிக் கொள்ள முடியும். மலையினை விட பெரியதாக்கிக் கொள்ள முடியும் என்பதை அறிந்தேன். மிக சிறியதாக தன்னை மாற்றிக் கொள்வதினை அனிமா என்பர். மிகப்பெரிதாக தன்னை மாற்றிக் கொள்வதினை மகிமா என்பர். தன்னை மிக மிக சிறியதாக்கி ஒளியினை விட வேகமாக ஒரு குறிப்பிட்ட வழி முறைகளை பின்பற்றி 1008 அண்டங்களுக்கு சென்று வந்ததனை திருமூலரே பதிவு செய்துள்ளார். இதற்காக சொரூப குளிகை, கமலினி குளிகை இவற்றினைத் தயாரித்து ஒளி ரூபமாக பயணம் செய்துள்ளார். ஒரு அண்டத்திற்கு அவர் சென்று அங்குள்ள சித்தர்களை சந்தித்து உரையாடியுள்ளார். அவர்கள் திருமூலரைப் பார்த்து 'நீங்கள் எத்தனை யோகங்களை கற்றுள்ளீர்கள்?' என்று கேட்டனராம்.
திருமூலர் "60 கோடி யோகங்களில் சித்தி பெற்றுள்ளேன்? என்றதற்கு அவர்களின் பதில் 'இன்னமும் நீங்கள் இளம் சித்தராகத்தான் இருக்கின்றீர்கள்' என்றனராம்.
மற்றொரு அண்டத்தில் சித்தர்கள் சிலைகளாகவே இருந்துள்ளனர்.
இன்னொரு அண்டத்தில் சித்தர்கள் 7 லட்சம் பாடல்களை படித்தபடி இருந்தனர். அவை சிவபிரான் பார்வதிக்கு சொன்ன பாடல்கள் என்றனர்.
திருமூலரே இந்த 7 லட்சம் பாடல்களை 1000 பாடல்களாக ஏற்கனவே நந்தி தேவர் அமைத்து கொடுத்துள்ளதினை கூறியுள்ளார். நந்தி தேவர் திருமூலரின் குரு ஆயிற்றே.
இப்படி ஏராளமான செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒளி உடல் பயணம், ககன மார்க்கம் இவை எல்லாம் என்னை வெகுவாய் கவர்ந்தன. நாமும் இப்படியெல்லாம் பயணம் செய்தால் எப்படி இருக்கும்.
(நீயும் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய். பிறகு அண்டத்திற்கு செல்வதனைப் பற்றி யோசிக்கலாம்) திருமூலர் விஞ்ஞான சித்தர். இதனை முதலில் தெரிந்து கொள். இப்போதைக்கு ரோட்டில் ஒழுங்காக வண்டியை ஓட்டிச் செல். பிறகு ஒளி உடலாய் அண்டங்களுக்கு செல்லலாம் என்று கறாராய் சொன்னார் என் கணவர். இருந்தாலும் எனக்கும், திருமூலருக்கும் ஒளி பயணம் பற்றிய பேச்சுவார்த்தை இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இப்படித்தான் கோரக்க சித்தரும். அவர் எழுதியுள்ள சந்திர ரேகை 200 என்ற புத்தகத்தினை அனைவரும் படிக்க வேண்டும் என்பதே அதை படித்தவர்கள் அனைவரது ஆசையாகவும் இருக்கும். நடந்தவை, நடப்பவை, இனி நடக்க இருப்பவை இவற்றினை எப்படி இவரால் துல்லியமாக இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கூற முடிந்தது.
இதுவே மெய் ஞானம்.
இந்த இடத்தில் அகத்திய மாமுனிவரைப் பற்றி சில வரிகளாவது கூறாமல் இருக்கலாமா? சப்த ரிஷிகளில் ஒருவர். சித்த மருத்துவத்தின் தந்தை. தமிழின் தந்தை, தமிழ் இலக்கணம் 'அகத்தியம்' உருவாக்கியவர். தமிழ் சித்தர்களில் முதன்மையானவர். சித்தர் என்றாலே அட்டமா சித்திகளும், அண்டங்களுக்கு செல்பவரும், ஒளி உடல் பயணம் என அண்டங்களுக்கு பயணிப்பவர்கள்தானே. அகத்திய மாமுனிவர் மற்றும் மேற்கூறியவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அவர்களின் சாதனைகளை ஒவ்வொரு வரும் படித்து அறிய வேண்டும்.
இந்த மகான்களின் விஞ்ஞானம், மெய்ஞானம் இவற்றுக்கு முன்னே நாம் எம்மாத்திரம் என்பது புரியும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இன்னும் எண்ணில் அடங்கா ஏராளமான சித்தர்கள் நம் நாட்டுக்கே, நமக்கு மட்டுமே உரிமை கொண்டாடும் அருளினைக் கொடுத்த பிரபஞ்ச சக்திகள், இதனை எப்பொழுதுதான் நாம் உணரப் போகின்றோம்.
மிக பண்டைய கால நிகழ்வுகளை கூறு கின்றீர்களே எனலாம். 'பாபா' வழிபாடு இங்கு பிரபலம் இல்லையா? ஸ்ரீ ராமானுஜர் 'அனைவரும் சமம்' அனைவரும் முக்தி அடைய வேண்டும். ஓம் நமோ நாராயணா என்ற அவருக்கு அவர் குரு அளித்த ரகசிய மந்திரத்தினை மதில் சுவர் மேல் நின்று அனைவருக்கும் வழங்கவில்லையா? ஸ்ரீராமானுஜரை ஆதிசேஷனின் அவதாரம் எனவும், ராமாயணத்தில் லட்சுமணனாக அவதாரம் எடுத்ததாகவும், கிருஷ்ண அவதாரத்தில் பலராமர் அவதாரம் எனவும் குறிப்பிடுவர். இவருக்கு நாம் காட்டும் மரியாதையாக மக்களிடையே எந்த வேறுபாடும் இன்றி இருக்கின்றோமா?
ஒருமுறை ரமணா ஆசிரமத்தில் உணவு அருந்தும் வேளையில் ஒரு பெண்மணி உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காரணம் அவர் உள்ளே வரக்கூடிய நிலையில் இல்லை. ரமண பகவான் தானே அந்த பெண்மணிக்காக உணவு எடுத்துச் சென்றார். இவற்றினை எல்லாம் படிக்கும் போது ஒவ்வொருவரும் சிந்திப்பர்.
சிலுவையில் அறைந்த போதும், 'அறியாமல் இவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து விடுங்கள்' என்ற இயேசு பிரானின் வார்த்தைகள் யார் மனதினையும் கலங்கச் செய்யும் தானே.
இந்த மனப்பக்குவம் பல மகான்கள், பல பகுத்தறி வாளர்களைப் பற்றி படிக்கும் போது அவரவர் மனம் பக்குவம் பெறும். எல்லா கருத்துக்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமோ, கட்டாயமோ கிடையாது. படியுங்கள், கேளுங்கள், சிந்தியுங்கள், தெளிவு பிறக்கும்.
சூழ்நிலை சரியாக இல்லாவிடின் மனிதன் தவறு செய்கின்றான். இதன் காரணமே குழந்தைகளிடம் புராண கதைகளைக் கூறி தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள் என்ற ஒரு சின்ன அச்சுறுத்தலை ஏற்படுத்தி வைத்திருந்தனர். அச்சப்பட வேண்டியவற்றிற்க்கு அச்சப்படத்தான் வேண்டும்.
தானே தன்னை ஒழுக்க முள்ளவராக மாற்றிக் கொள்ள ஆன்ம பலம் வேண்டும். இதற்கு முதலில் உடல் ஆரோக்கியம் வேண்டும். இதன் காரணமே உணவு முறை, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, யோகா இவை அடிப்படை தளமாக வலியுறுத்தப்படுகின்றன. இவை ஒருவரை தன் ஆழ் மனதோடு நம்முள் உள்ள ஆத்ம ஒளியோடு ஒரு தொடர்பினை ஏற்படுத்தும். பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு ஏற்படும். இது அவரவர் உணரும் அனுபவமாக இருக்கும். ஆனால் இதற்கெல்லாம் ஒரு குரு, அசையா நம்பிக்கை, கடின உழைப்பு தேவைப்படும்.
எண்ணங்களின் தொகுப்பாக திகழும் மனம் எண்ணங்களின் தொகுப்பினை மூளையில் பதிய வைக்கின்றது. எண்ண ஓட்டத்தினை நிறுத்தாதவரை அது ஓடிக் கொண்டே இருக்கும். அந்த எண்ண ஓட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுக்கினால் மட்டுமே கொஞ்சமாவது ஒழுங்காய் இருக்கும். இல்லையென்றால் ஆளையே புரட்டி எடுத்து விடும்.
ஆசையை துறக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம். ஒரு இனிப்பு கண் எதிரே இருந்தாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் முடிந்த வரை சிறிது நேரம் தள்ளிப் போடுங்கள். இது ஒரு உதாரணம். ஒரு பொருள் வாங்க தேவையின்றி அதிக ஆசை இருக்கின்றதா? மனதை கட்டிப் போட்டு வாங்காதீர்கள். இப்படி சிறு சிறு முயற்சிகளின் மூலம் பேராசை, ஆசை இவற்றினை கட்டுப்படுத்த முயல வேண்டும்.
இதில் எண்ண ஓட்டம் நிற்கும். மனம் என்ற தகவல் மையல் சக்தி குறைய ஆரம்பிக்கும். இதற்காக காடு, குகை என செல்ல வேண்டாமே, பிறகு இந்த மனமே ஆன்மீக பாதையில் ஆன்மாவாக வந்து விடும்.
அநேகர் ஆரம்ப காலத்தில் தியானத்தினை பற்றி குறிப்பிடும் போது சில குறைபாடுகளை கூறுவார்கள். உடற்பயிற்சி செய்து விடுகின்றோம். மூச்சு பயிற்சி, யோகா இவைகளை கூட தகுந்த ஆசிரியர் மூலம் கற்றுக் கொள்கிறோம். ஆனால் தியானம் மட்டும் கடினமாய் இருக்கின்றது. ஒரு நிமிடம் கூட அமைதியாய் அமர முடியவில்லை என்கின்றனர். உண்மையில் ஒரு மனிதனின் தோற்றம், பேச்சு, முகம், அவன் நடக்கும், அமரும் விதம் இவை அவனது மனநிலையினை நன்கு வெளிப்படுத்தும். ஆக மனநிலையினை சீராக வைத்துக் கொண்டால் ஒரு மனிதன் உடல்நிலை, மனநிலையில் நன்கு இருப்பார்.
அடுத்து தியானத்திற்கான சில அடிப்படை முறைகளை பார்ப்போம். உடலை விட மனம் தியானத்திற்கு மிக முக்கியமாகிறது. ஆனால் தியானம் செய்ய உடலை சரியான ஆசன முறை கொண்டு ஆடாது இருக்கும்படியான நிலையில் அமர வேண்டும். பொதுவில் பத்மாசனம் நிலை உடலை அசங்காது வைக்கும். முதுகு நிமிர்ந்து மென்மையாக கண்களை மூடி அமரலாம். பொதுவில் சின் முத்திரையினை பரிந்துரைப்பர். உடலினை இலகாக தளர்த்தி உடலுக்கு ஆற்றல் சக்தி கூட்டப்படுகின்றது. இதனை யோகா வகுப்புகளில் நன்கு சொல்லி கொடுக்கின்றனர். ஐம்புலன்கள் மீதும் மனதின் ஆதிக்கம் தலை விரித்து ஆடக்கூடாது என்பதற்காகவே இம்மாதிரி முறைகளை முதல் படியாக கற்பிக்கின்றனர்.
அமைதியாய் சில நிமிடங்கள் எதனையும் நினைக்காது இருக்க கற்றோம். மூச்சை கவனித்து எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த கற்றோம். அதேபோல் அசையாது உடலை தளர்த்தி அவரவர் வயதுக்கு ஏற்ப உடல்நிலைக்கேற்ப சில நிமிடங்கள் இருக்கவும். இப்போது கற்போம்.
-தொடரும்
- மேடையில் எப்படி கவுரவிப்பார்கள்? நாம் மேடைக்கு செல்லும் போது என்ன மாதிரி காஸ்ட்யூமில் செல்ல வேண்டும் என்றெல்லாம் கூட யோசித்தேன்.
- பட்டு புடவையில் வெற்றி விழா மேடையில் அமர்ந்திருந்தேன். இதயம் மட்டும் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.
மக்கள் ஒன்று திரண்டு மாபெரும் சபையில் ஒருவரை அழைத்து நீதான் மகாராணி என்று மகுடம் சூட்டி கவுரவித்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட மனநிலையில்தான் நானும் அன்று இருந்தேன்.
நூறு நாட்களையும் கடந்து தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த 'சாண்டி'யின்(தெலுங்கில் 'சின்னதம்பி') வெற்றி விழா.
ஐதராபாத்தில் விழா நடைபெற்ற அரங்கம் நிரம்பி வழிந்தது. விழாவின் நாயகி நான் என்பதால் நான் அடைந்த பூரிப்புக்கு அளவே இல்லை.
ஏற்கனவே சீதாராமையா காரு மனவரலு வெற்றி விழாவில் விருது, மாநில விருது பெற்றிருந்தாலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தையும் எனக்கு தந்திருந்தது. அதனால் இந்த விருது பெற்றது மிகவும் பெருமையாக இருந்தது.
விழாவுக்கு ஏற்பாடு செய்து என்னை அழைத்ததுமே விழாவை பற்றிய எண்ணங்கள்தான் மனதில் ஓட தொடங்கியது.
மேடையில் எப்படி கவுரவிப்பார்கள்? நாம் மேடைக்கு செல்லும் போது என்ன மாதிரி காஸ்ட்யூமில் செல்ல வேண்டும் என்றெல்லாம் கூட யோசித்தேன்.
1993-களில் 'டிஸ்யூ பட்டு' என்ற புதிய ரக பட்டு சேலை அறிமுகமாகி இருந்தது. பட்டு என்றாலே காஞ்சிபுரம் என்று மட்டுமே இருந்த நிலையில் இந்த புதிய வரவு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
நானும் அந்த விழாவுக்கு அணிந்து செல்வதற்காக டிஸ்யூ பட்டை தேர்வு செய்தேன். சென்னையில் பிரபலமான ஜவுளி கடைக்கு சென்று எனக்கு பிடித்த 'பிங்க்' நிறத்தில் பட்டு வாங்கினேன்.
பட்டு புடவையில் வெற்றி விழா மேடையில் அமர்ந்திருந்தேன். இதயம் மட்டும் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.
'அரச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெற்றியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே....
-அந்த பாடலை நினைத்தேன். ரசித்தேன். மனதுக்குள் இனித்தது.

விழா பிரமாண்டமாக நடந்தது. சாதனை படைத்த சாண்டி பட வெற்றி விழா விருது வழங்கினார்கள். நான் பெற்ற அந்த விருதுதான் அடுத்தடுத்த எனது சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. ஏனெனில் மீனாவை மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.
என் மீது முழு நம்பிக்கை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சந்தோஷம். மனதார என்னை பாராட்டினார்.
அதை தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் வந்தன என்பதை விட வந்து குவிந்தன என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தெலுங்கில் பிசியாகி விட்டேன்.
உட்கார கூட நேரமில்லை என்பார்களே அதே போன்ற நிலைதான். எப்போதும் பிசி.... பிசி.... ஓடி ஓடி உழைத்தேன். நடித்தேன். அதற்கு ஏற்ப பேரும் புகழும் கிடைத்தது.
சில நேரங்களில் சின்ன சின்ன ஆசைகளை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் வரும். தீபாவளி என்றாலே எல்லோருக்கும் சந்தோசம் வந்து விடும். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என்று வீடே அமர்க்களப்படும். புத்தாடை, இனிப்புக்கு எந்த குறையும் இருந்ததில்லை. ஆனால் தீபாவளின்னா எனக்கு ரொம்ப பிடிச்சது பட்டாசுதான். அதுவும் சின்ன சின்ன வெடிகள் பிடிக்காது. அதிரடியான சரவெடிகள்தான் பிடிக்கும். 5000 வாலா, 10 ஆயிரம் வாலாக்கள்தான். எங்கள் தெருவில் ரோட்டில் விரித்து கொளுத்துவேன். டபார்... டபார்... என்று இடைவிடாமல் வெடிப்பதை பார்த்து துள்ளி குதிப்பேன். எனக்கு எந்த பயமும் கிடையாது.
ஆனால் வீட்டில் இருந்து அம்மாவும், அப்பாவும் தான் பயந்து மீனா கண்ணு... பார்த்து... பத்திரம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். என்னுடைய தோழிகளும் வருவார்கள். எனவே ஜாலிதான்.
இந்த நிலையில் ஒரு தீபாவளிக்கு ராஜமுந்திரி அருகே உள்ள ராஜோலு என்ற இடத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். வீட்டுக்கு செல்ல முடியவில்லை என்ற வருத்தத்தை விட வழக்கம் போல் பட்டாசு கொளுத்த முடியவில்லையே என்றுதான் கவலைப்பட்டேன்.
என்னோடு இருந்த படக்குழுவினரிடம் எப்படியாவது பட்டாசு வாங்கி வாருங்கள். முக்கியமாக சரவெடி வேண்டும் என்றேன்.
அது சிறிய ஊர்தான். அவர்களும் ரொம்ப தூரம் அலைந்து தேடியிருக்கிறார்கள். ஆனால் சரவெடி கிடைக்கவில்லை. தூக்கி எறியும் வெடிகளை வாங்கி வந்தார்கள். அப்போது மழை வேறு பெய்து கொண்டி ருந்ததால் குளிர்ந்து நமத்து விட்டது. சரியாக வெடிக்க வில்லை. இதனால் எனக்கு அந்த தீபாவளி புஸ்வானம் போல் ஆகிவிட்டது.
ஆனால் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பட்டாசு போட முடியாத சூழ்நிலையும் உருவாகி விட்டது. ஒலி மாசு, காற்று மாசு போன்ற விழிப்புணர்வால் பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தை குறைத்துக் கொண்டேன்.
அதுவும் இப்போது பள்ளியில் படிக்கும் என் மகளுக்கு என்னை விட கூடுதலான விழிப்புணர்வு. அவள் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
தீபாவளி அன்று வீட்டில் நிறைய அகல் விளக்கு ஏற்றுவோம். அதை விதவிதமான வடிவங்களில் வரிசையாக அடுக்கி வைத்து மகிழ்வோம்.
விரைவில் தீபாவளி கொண்டாடப் போகிறோம். அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அடுத்த வாரம் இன்னும் பல சுவாரஸ்ய சம்பவங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
- பக்கவாதம் ஒரு மனிதனை முழுமையாக முடங்கிப்போகச் செய்யும் மிகவும் ஆபத்தான ஒரு நோய்.
- வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் முக்கியமானது பக்கவாதம். ஒரு மனிதனை செயல்பட விடாமல் ஓரிடத்தில் முடக்கிப்போடும் அபாயகரமான நோயில் இதுவும் ஒன்று.
பக்கவாத அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவசர மருத்துவ சிகிச்சையை சரியான நேரத்தில் அணுகுவதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தவும் அக்டோபர் 29-ம் தேதி உலக பக்கவாதம் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் இந்த பக்கவாத நோய் ஏற்படுகிறது.
உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்காமல் இருப்பது, நீரிழிவு தொடர்ந்து அதிகரிப்பது, இதய நோய், இதய செயலிழப்பு, இதயத்துடிப்பு கோளாறு, அதிக கொழுப்பு, ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பது, அதிக புகை மற்றும் மது பழக்கம், மன அழுத்தம், அதிக உடல் எடை, உடல் உழைப்பின்மை போன்ற காரணிகளாலும், பக்கவாதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் மில்லியன் கணக்கான உயிர்களை அச்சுறுத்தும் நோயாக இது மாறியுள்ளது.
நாட்டில் இறப்புக்கான முதல் இதய நோய், டயரியா, பக்கவாதம், காசநோய் உள்ளிட்ட 10 காரணங்களில் இதுவும் இடம் பெற்றுள்ளது.
இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கினாலும், 50 வயது கடந்தவர்களையே அதிகமாக பாதிக்கிறது.
பக்கவாதம் ஒரு மனிதனை முழுமையாக முடங்கிப்போகச் செய்யும் மிகவும் ஆபத்தான ஒரு நோய். இப்போது பக்கவாதம் வந்தவர்கள் பல்வேறு பயிற்சிகளுக்கு பிறகு இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறது.
மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் கொடுத்து பக்கவாதத்துக்கு சிகிச்சை அளித்து நோயாளிக்கு ஏற்பட இருக்கும் அடுத்தகட்ட பாதிப்பை தடுத்து விடுகின்றனர். அந்த பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வர பிசியோதெரபிஸ்ட் பயிற்சி அளிக்கின்றார். அவர்களுக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி பயிற்சியே நல்ல முன்னேற்றம் அளிக்கும்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை பக்கவாத நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.
மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் உணவு ஆலோசகர் என அனைவரும் கைகோர்த்து சிகிச்சை அளித்தால் பக்கவாத நோயாளி அந்த பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டுவிடுவார்.
- நன்மை விளையும் என நினைத்து செய்யும் செயல் சில நேரத்தில் எதிர்பாராத ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
- கிணறு வெட்டும் போதோ, ஆழப்படுத்தும் போதோ இம்மாதிரியான விஷ வாயுக்கள் வெளியேறும்.
கெணறு வெட்ட பூதம் கெளம்புன கத மாதிரின்னு கிராமத்து பெரியவங்க அடிக்கடி பேச்சுவழக்கில் சொல்லுவதை கேட்டிருப்பீங்க.
நன்மை விளையும் என நினைத்து செய்யும் செயல் சில நேரத்தில் எதிர்பாராத ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
இம்மாதிரியான விளைவுகளை தான் கிணறு வெட்ட போய் பூதம் கிளம்புன கத மாதிரின்னு பழமொழியாய் சொல்வது உண்டு.
நிஜமாக கிணறு வெட்ட பூதம் கிளம்புமா... ஏன் அவ்வாறு சொல்றாங்க..
தேடுதலும், கேள்விகளும் தானே பதிலை தரும்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பியதை பற்றி பார்ப்போம்.
20 வருடங்களுக்கு முன் ஊருக்கு ஒதுக்கு புறமாய் மக்கள் பயன்படுத்தாமல் இருந்த கிணற்றில் அடையும் புறாவை பிடிக்க சென்ற சிறுவன் ஒருவனை பிணமாக மீட்டு வந்தார்கள்...
அந்த சிறுவனை மீட்கும் போது கிணற்றின் கரையில் தலைவிரி கோலமாக அவனின் தாயார் ஒப்பாரி வைத்து அழுத வார்த்தைகள் இன்னும் காதுகளில்..
ஏ மக்கா... எம்மொவனே... படிச்சு படிச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்லுத மாதி சொன்னேனே..
பாங்கெணத்து பக்கம் போவாதே... உள்ளே இறங்காதே... பாங்கெணத்து பூதம் புடிச்சிக்கிடும் தலமூத்த புள்ளையளன்னு சொன்னேனே....
வாடாமல்லி கொத்து மாதி, கருவேப்பில கண்ணு மாதி பொத்தி பொத்தி வளர்த்தேனே... பாதியிலே வுட்டுட்டு போயிட்டியே...
எஞ்சொல்லு கேட்டிருந்தியன்னா நான் கொள்ளியத்து போயிருக்க மாட்டேனே...
அந்த ஒப்பாரி வார்த்தைகளின் அர்த்தம் அன்று புரியவில்லை...
பாங்கெணத்து பூதமா... ஏதோ பேய், பூதம் என்ற அன்றைய நம்பிக்கையில் கடந்து விட்டோம் நான் உட்பட அனைவரும்..
பாங்கெணறு: பயன்படுத்த முடியாமல் பாழாய் போன கிணறு... கிராமங்களில் தண்ணீர் இன்றி அல்லது தண்ணீரை பயன் படுத்தாமல் இருக்கும் கிணறுகளில் கிராம மக்கள் குப்பை கூளங்கள் இறந்து போன ஆட்டுகுட்டி, நாய், பூனை, கோழி என அத்தனையும் தூக்கி எறிய கிட்டத்தட்ட பெரிய அளவு குப்பைதொட்டியாக பயன்படுத்தும் கிணறை பாழ் கிணறு என அழைப்பார்கள்.
இந்த மாதிரியான கிணறுகளில் குப்பைகள், இறந்து போன வளர்ப்புபிராணிகளின் உடல்கள் அழுகி மட்கி போய் அதில் இருந்து கார்பன் மோனாக்சைடு, மற்றும் கந்தக வாயு எனப்படும் ஹைட்ரஜன் டை சல்பைடு வெளிப்படும்.
கந்தக வாயு, நாம் சுவாசிக்கும் பிராண வாயுவான ஆக்சிஜனை விட அடர்த்தியானது, கனமானது என்பதால் கிணற்றின் அடிப்பகுதியிலே தேங்கி இருக்கும்.
சுரேஸ்வரன் அய்யாப்பழம்
100 பி.பி.எம். என்ற அளவில் காணப்பட்டால் சுவாசித்த வெறும் பத்தே விநாடிகளில் ஒரு மனிதனை மரணமடைய செய்யும் வல்லமை கொண்டது இந்த விஷ வாயு.
கந்தக வாயு எளிதில் தானாகவே தீப்பற்றும். மனிதனின் நுகரும் உணர்வை நீக்கும் வல்லமை வாய்ந்தது.
சிறிய அளவு வாயுக்கசிவு அழுகிய முட்டை நாற்றத்தை கொண்டது. அதிக அளவு வாயு கசிவு மனிதனின் நுகரும் உணர்வை அழித்து விடுவதால் அதிக அளவு வாயு கசிவை முகர்ந்து கண்டு பிடிக்க இயலாது.
காற்றில் ஆக்சிஜன் அளவு, சுவாசிக்கும் அளவான 20.6 சதவீதத்தை தாண்டும் போது இந்த வாயு சில சமயம் தானாக தீப்பற்றி எரியும்.
கிணறு வெட்டும் போதோ, ஆழப்படுத்தும் போதோ இம்மாதிரியான விஷ வாயுக்கள் வெளியேறும்.
கல்லில் கடப்பாரை கம்பி உராயும் போது ஏற்படும் தீப்பொறியால் இவ்விஷ வாயு வெளியேறும் போது தீப்பற்றி எரிவதை பேய் பூதம் என முற்காலத்தில் 'கெணறு வெட்ட போய் பூதம் கிளம்பியதாக' கூறியிருக்கின்றனர்.
கிணற்றுக்குள் இவ்வாறு தீப்பற்றி எரிவதை அந்த காலத்தில் கொள்ளி வாய்ப்பிசாசு என சொல்லி இருக்கலாம்.
புறாவை பிடிக்க சென்ற சிறுவன் இவ்வாறான விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம்.
அன்றைய காலங்களில் மக்களுக்கு புரிய வைக்க இத்தகைய விஷ வாயுக்களை பூதம் என பெரியவர்கள் சொல்லி இருப்பார்கள்.
இந்த விஷ வாயு நாம் பயன்படுத்தும் சுற்றுச்சூழல்களில் காணப்படும்.
வெளிக்காற்று செல்லாமல் அடைப்பட்டு இருக்கும் அனைத்து இடங்களிலும் காணப்படும்.
அடைப்பட்டு தண்ணீர் செல்லாமல் இருக்கும் தண்ணீர் குழாய், குளியலறை, கழிவறை தண்ணீர் சேரும் சம்ப், ஓட்டல் எச்சில் கழிவுகள் சேரும் சம்ப், டேங்க் ஆகியவற்றில் அதிகம் காணப்படும்.
இதனை சுத்தம் செய்ய செப்டிக் டேங்க் கிளீனர்ஸ் என்ற பெயரில் வண்டியில் வரும் நபர்களை பார்த்திருப்பீர்கள்.
செய்திதாள்களிலும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மூவர் பலி, நால்வர் பலி என செய்திகளை அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.
முன்பு முந்தைய தலைமுறை இம்மாதிரியான டேங்க் சுத்தம் செய்ய வரும் முன் பலி கொடுக்க கோழி தாங்க! என வீட்டுக்காரரிடம் வாங்கி செப்டிக் டேங்கினுள் கயிறு கட்டி இறக்கி கோழி உயிரோடு இருந்தால் செப்டிக் டேங்கை சுத்தம் செய்வார்கள்.
கிட்டத்தட்ட கோழியை இறக்கி பார்ப்பது காற்றில் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் கேஸ் டெஸ்ட் என சொல்லலாம்.
தற்போதைய தலைமுறை அதனை மூடநம்பிக்கை என ஒதுக்கி வைத்து டாஸ்மாக் சரக்கை உள்ளே தள்ளி விட்டு தள்ளாட்டத்தோடு அந்த செப்டிக் டேங்கை அள்ளுவதை பார்க்கும் போது மனது வலிக்கத்தான் செய்கிறது...
விஷவாயுவால் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த தொழிலாளி பலி! என்ற செய்தியும் மனதை நெருடத்தான் செய்கிறது...
உங்கள் வீட்டுக்கு இம்மாதிரியான தொழிலாளிகள் வந்தால் முதலில் ஒரு கோழியை இறக்கி விட்டு பரிசோதித்த பின்னர் வேலை செய்ய அனுமதியுங்கள்...
ஒரு கோழியின் உயிரை விட ஒரு சக மனிதனின் உயிர் விலை மதிப்பானது தானே...
தொடர்புக்கு-isuresh669@gmail.com
- இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்வு.
- மனித வாழ்விலும் பல சட்டங்கள் செயல்படுகின்றன. அவற்றை நிர்ணயிப்பதுதான் விதி.
மனித வாழ்வில் திடீரென எதிர்பாராத பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. லாட்டரியில் ஒரு சாதாரணத் தொழிலாளிக்குப் பல கோடி ரூபாய் அதிர்ஷ்டம் அடிக்கிறது. விபத்தில் ஒரு குடும்பத்தினர் அனைவரும் காலமாகி விடுகிறார்கள்.
ஏழையான ஒரு பெண்ணுக்கு எதிர்பாராத இடத்தில் திருமணம் நடந்து அவள் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவள் ஆகிறாள். மாப்பிள்ளையின் வஞ்சகத்தால் ஒரு பெண்ணின் வாழ்வே நலிவடைகிறது. இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
நாள்தோறும் நாளிதழ்களைத் திறந்தால் நாம் வாசிக்கும் ஏராளமான செய்திகள் எதிர்பாராதவைதான். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்வு. நம்மை மீறி நடைபெறும் இன்பமோ துன்பமோ இரண்டுமே விதியால் நேர்பவை எனத் தமிழர்கள் நம்புகிறார்கள்.
விதி வலிமை மிக்கது என்பதும் விதி வகுத்த வழியில்தான் மனித வாழ்க்கை செல்லும் என்பதும் தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் கோட்பாடு.
பாரசீகக் கவிஞர் உமர்கயாம் விதிக் கொள்கையை நம்பியிருக்கிறார். அவரது பாடலைத் தமிழில் கவிதையாகவே மொழி பெயர்த்திருக்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:
`எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்!
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னால் நீங்கி யொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?'
விதி வலிமையானது. அதை மாற்ற முடியாது. இந்த உண்மையை ஒப்புக்கொண்டால் மனித மனம் ஆறுதல் அடையும். நம்மை மீறி நடக்கும் செயல்களால் நாம் பாதிக்கப் படாமல் இருப்போம்.
ஊழ் எனத் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுவது விதியைத் தான்.
`யாதும் ஊரே யாவரும் கேளிர்` என்ற கணியன் பூங்குன்றனார் எழுதிய சங்கப் பாடலின் முதல்வரி, பிரபலப்படுத்தப் பட்டுவிட்டது. அது பிரபலப் படுத்தப்பட வேண்டிய உயர்வான வரிதான்.
ஆனால் அந்தப் பாடலின் கடைசி வரிகளையும் பாடல் தெரிவிக்கும் முழுமையான கருத்தையும் பலர் அறியவே இல்லை. விதி வலியது, அதை மீற முடியாது என்பதுதான் அந்தப் பாடல் சொல்லும் கருத்தின் சாரம்.
சமுத்திர அலைகளின் நடுவே சிக்கித் தத்தளிக்கும் சிறிய மூங்கல் குச்சியைப் போல், மனித வாழ்க்கை விதியின் கரங்களில் அலைக்கழிக்கப்படுகிறது என்பதையே அந்தப் பாடல் விளக்குகிறது.
சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோ விதியை நம்புகிறார். விதியின் தாக்கத்தை வலியுறுத்துவது தாம் காப்பியம் எழுதியதற்கான நோக்கங்களில் முக்கியமான ஒன்று என்கிறார். `ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்` என்ற கருத்தை விளக்கவே கண்ணகியின் வாழ்வைக் காப்பியமாக்குகிறார். வள்ளுவம் ஒரு குறளில் விதியை ஒப்புக்கொள்கிறது. இன்னொரு குறளில் விதியை வெல்லலாம் என்கிறது. `ஊழிற் பெருவலி யாவுள` எனக் கேட்கும் அதுவே `ஊழையும் உப்பக்கம் காண்பர்` என விடாமுயற்சியால் விதியை வெல்லலாம் எனவும் தெரிவிக்கிறது.
விதியை ஒருவன் வெல்வான் என்றால், விதியை வென்றபின் உள்ள நிலையே அவன் விதியாகிறது என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்!
ராமாயணத்தில் ராமன், `தான் வனவாசம் செல்ல நேர்ந்ததற்கு விதியே காரணம் தசரதரோ கைகேயியோ பரதனோ காரணமல்ல` எனத் தெளிவாகப் பேசுகிறான்.
சீற்றம் கொண்ட லட்சுமணனிடம் `நதியில் வெள்ளம் இல்லையென்றால் அது நதியின் குற்றமல்ல, (மலையில் மழை பெய்யாததன் குற்றம்.), அதுபோல் நாம் வனத்திற்குச் செல்லக் காரணம் தசரதரோ கைகேயியோ பரதனோ அல்ல. இந்நிலைமைக்குக் காரணம் நம் விதி. அப்படியிருக்க நீ ஏன் அவர்களிடம் கோபம் கொள்கிறாய்?` என்று லட்சுமணனைச் சாந்தப் படுத்துகிறான். விதிக் கொள்கையை ஒப்புக் கொண்டதால் ராமன் மனம் சலனமற்று அமைதியாக இருக்கிறது. இன்பத்தாலோ துன்பத்தாலோ எதனாலும் அவன் பாதிக்கப் படுவதில்லை. அவன் முகம் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல் இருந்தது என்கிறார் கம்பர். விதி, வனவாச காலத்திலும் ராமனை விடாமல் துரத்துகிறது. மாய மானைப் பார்த்து சீதை ஆசைப்பட்டாளே? அப்போது அது அரக்கர்களின் சூழ்ச்சியாக இருக்கலாம் என லட்சுமணன் தெரிவித்தானே?
தம்பிக்கு மானைப் பற்றி ஏற்பட்ட சந்தேகம் அண்ணனுக்கு ஏன் ஏற்படவில்லை? சீதை மேல் கொண்ட காதல், ராமன் கண்ணை மறைத்ததா? இல்லை, அது விதி.
மானைத் துரத்திக் கொண்டுபோய் ராமன் அம்பு எய்தானே? அப்போது `சீதா! லட்சுமணா!` என ராமன் குரலைப் போன்ற பொய்க்குரலில் மாரீச மான் கத்தியவாறே கீழே விழுந்து இறந்ததே? (முதல் `குரல்மாற்றுக் கலைஞன்`, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், மாரீசன் தானோ!)
அப்போது ராமன் ஏன் சும்மா இருந்தான்? `நான் உயிரோடுதான் இருக்கிறேன். மாரீசனின் பொய்க் குரலை நம்பவேண்டாம்` என ராமன் ஏன் உரத்துக் குரல் கொடுக்கவில்லை? காரணம் விதி. மாரீசனின் பொய்க்குரலைக் கேட்டு சீதை பதறுகிறாள். `லட்சுமணா, அண்ணன் இல்லாத நேரத்திற்காகக் காத்திருந்தாயா?` என, தன் மகன் போன்ற மைத்துனன் மேல் அடாத பழி சுமத்தி அவனைக் கானகத்திற்குள் விரட்டுகிறாள். ஆனால் லட்சுமணனோ `மாவீரன் ராமனுக்கு ஒன்றும் ஆகியிருக்காது` எனத் திரும்பத் திரும்ப உறுதியோடு சொல்கிறான். ராமனுக்கு எதுவும் நேர்ந்திராது என லட்சுமணனுக்குத் தெரியுமல்லவா? பிறகு வனத்திற்குள் போவதுபோல் போக்குக் காட்டிவிட்டு மறைந்திருந்து அண்ணியைக் காவல் காக்க வேண்டியதுதானே?
அவன் அப்படிச் செய்திருந்தால் ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றிருக்க முடியாதல்லவா? லட்சுமணன் ஏன் அப்படிச் செய்யவில்லை? காரணம் விதி.
உண்மையில் ராமன் மாரீசனை அரக்கன் என உணராததும், தான் நலமாக இருப்பது பற்றி உரத்துக் குரல் கொடுக்காததும், சீதை லட்சுமணனைப் பழித்துப் பேசியதும், லட்சுமணன் கானகத்திற்குள் ராமனைத் தேடிப் போனதும் விதிதான். ஆனால் யார் விதி தெரியுமா? ராவணனின் விதி!...
மகாபாரதத்திலும் விதியின் விளையாட்டைக் கதை நெடுகப் பார்க்கிறோம். பாண்டவர்கள் கட்டிய புத்தம்புது மாளிகைக்குள் நுழைந்த துரியோதனன் தரை எது தண்ணீர் எது எனத் தெரியாமல் தடுமாறுகிறான்.
அப்போது உப்பரிகையில் இருந்து அவன் தடுமாற்றத்தைக் கண்டு நகைக்கிறாள் திரவுபதி.
`உன் தந்தைக்குத் தான் கண்ணில்லை என்றால் உனக்கும் கண்ணில்லையா?` என்று கேட்கிறாள். பாஞ்சாலியின் ஏளனச் சிரிப்பும் கேள்வியும்தான் மகாபாரதப் போரை உருவாக்குகின்றன.
பாஞ்சாலி எத்தனை உத்தமமான குணங்கள் உடையவள்! அவள் அப்படிச் சிரிப்பானேன்? அப்படிக் கேட்பானேன்? காரணம் விதி.
`இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று` என்கிறதே வள்ளுவம்? இன்சொல் அல்லாத சொல்லை சீதை லட்சுமணனை நோக்கிப் பேசினாள். பாஞ்சாலி துரியோதனனை நோக்கிப் பேசினாள்.
உயர்ந்த குணவதிகளான சீதையும் பாஞ்சாலியும் அவ்வாறு பேசியதுதான் அவர்களை அத்தனை துயரங்களுக்கு ஆட்படுத்தியது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் நாவை அவ்விதம் செயல்பட வைத்தது விதி.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் உண்டு என்கிறது பவுதிகத்தில் நியூட்டனின் மூன்றாம் விதி. (பார் எவ்ரி ஆக்ஷன் தேர் ஈஸ் ஆன் ஈக்வல் அண்ட் ஆப்போசிட் ரியேக்ஷன்.)
இது வாழ்க்கையின் விதியும் கூட என்பதைப் பழந்தமிழர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் எல்லோருக்கும் நல்லது செய்து வாழுமாறு பழைய இலக்கியம் நமக்குக் கற்பிக்கிறது.
விதி என்பதை ஆங்கிலத்தில் ரூல் (RULE) என்றும் பேட் (FATE) என்றும் இரண்டு விதமாக மொழிபெயர்க்கலாம். பழந்தமிழர்கள் கண்டறிந்த விதி என்பது ரூல் என்ற மொழிபெயர்ப்போடு தொடர்புடையது. அதாவது சட்டம்.
புவி ஈர்ப்பு விசை மாதிரி, தண்ணீர் பள்ளத்தை நோக்கிப் பாயும் என்பது மாதிரி இயற்கையில் பல சட்டங்கள் உள்ளன. அவை நிரந்தரமானவை. மாற்ற இயலாதவை. அதுபோல் மனித வாழ்விலும் பல சட்டங்கள் செயல்படுகின்றன. அவற்றை நிர்ணயிப்பதுதான் விதி.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது வாழ்க்கையின் முக்கியமான சட்டம். ஐம்பது வயதுவரை யோக்கியமாக வாழ்ந்தால் ஐம்பதுக்குப் பின் ஆனந்தமாக இருக்கலாம். வாழ்க்கையின் முற்பகலான ஐம்பது வயது வரை செய்த செயல்களின் விளைவுகளை வாழ்க்கையின் பிற்பகலான பிற்பகுதியில் அனுபவிக்கலாம். ஆனால் சில கேள்விகள் எழுகின்றன. பிறக்கும்போதே சிலர் ஊனத்தோடு பிறப்பதேன்? யோக்கியமானவர்கள் கூட நோயின் பிடிக்கு ஆட்படுவதேன்?
இந்தச் சந்தர்ப்பங்களில் முற்பகல் என்பதை முற்பிறவி என்றும் பிற்பகல் என்பதை இந்தப் பிறவி என்றும் கொள்ள வேண்டும். முன்ஜன்மத்தில் செய்த வினைப்பயனை இந்த ஜன்மத்தில் அனுபவிப்பதாகக் கருத வேண்டும் என்கிறது தமிழ் இலக்கிய மரபு. கண்ணகிக்கு நேர்ந்த சங்கடங்களுக்கெல்லாம் காரணம் அவளது முற்பிறவிதான் என்பதைச் சிலப்பதிகாரம் விளக்குகிறது.
தமிழர்கள் சொல்லும் விதி சோம்பேறிகளின் சால்ஜாப்பு அல்ல. அது ஆறுதல் காண விரும்பும் மனிதர்களுக்கான நம்பிக்கை.
நம்மால் மாற்ற முடிந்தவற்றை முயன்று மாற்றவும், இயன்றவரை நல்லதையே நினைத்து நல்லதையே பேசி நல்லதையே செய்து வாழவும், நம்மால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளவும் தமிழர்களின் விதிக் கொள்கை மனத்தளவில் பெரிதும் உதவுகிறது.
தமிழர்களின் விதிக் கொள்கைதான் இன்றளவும் தமிழர்களை மன நிம்மதி உடையவர்களாக வாழ வைத்திருக்கிறது. உண்மையான தமிழர்கள் இன்பத்தில் துள்ளிக் குதிப்பதுமில்லை. துன்பத்தில் துவண்டு போவதுமில்லை.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- உயர்ந்த சிந்தனைகள் வழிச் செயல்நடை போடுபவர்களே நன்னடை போடுபவர்களாகப் போற்றப்படுகிறார்கள்.
- ஒரு குருநாதரைச் சந்திக்க ஓர் இளைஞர் சென்றிருந்தார்.
நடத்தையில் நலம் விரும்பும் நல்லவர்களே! வணக்கம்.
'மனிதர்' என்கிற சொல்லுக்கு அழகான ஆழமான அர்த்தங்கள் உண்டு. தலை, முகம், கை, கால்கள் கொண்டு மனித உருவத்தோடு உலவுகிற அனைவருமே மனிதர்கள்தாம் என்றாலும், மிக எளிதாக,"நீயெல்லாம் மனிதன் தானா?" என்று கேட்டுவிடுகிற ஒரு சொல்லில் மிகப்பெரிய சந்தேகம் புறப்பட்டு விடுகிறது.
மனிதனாகப் பிறந்து தெய்வமாக உயர்ந்தவனாகக் கருதப்படுகிற ராமபிரானைப் பார்த்து, 'நடையில் நின்று உயர் நாயகன்' என்று கம்பர் பாராட்டுகிறார். சாதாரணமாக, இரண்டு கால்களைக் கொண்டு நடப்பது 'நடை' என்று கருதப்பட்டாலும், வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்களையும், லட்சியங்களையும் வகுத்துக் கொண்டு உயர்ந்த சிந்தனைகள் வழிச் செயல்நடை போடுபவர்களே நன்னடை போடுபவர்களாகப் போற்றப்படுகிறார்கள்.
'நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே' எனும் சங்க இலக்கியச் சிந்தனை, வாழுகிற ஒவ்வொரு மனிதரையும் நடையிற் சிறந்தவராக உயர்த்தி நன்னடத்தை வழங்க வேண்டிய பெரும்பொறுப்பு அரசாங்கத்திற்கும் இருக்கிறது என்கிறது. ஆக, ஒரு தனி மனிதனின் குணநலச் சிறப்பு, அவன் வாழுகிற சமுதாயச் சூழல் கடந்து, அவனை ஆட்சி நெறிப்படுத்துகிற அரசுகளைப் பொறுத்து அமைவு பெறுகிறது.
'நெறி' என்றால் பாதை என்று பொருள்; ஒருவன் நல்ல பாதையில் செல்லப் போகிறானா? இல்லை தீய பாதையில் போகப் போகிறானா? என்பதை வெறுமனே அவனது கால்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை; அவனது எண்ணங்களே முதலில் தீர்மானிக்கின்றன. அவனது எண்ணங்களை அவன் கற்கின்ற கல்வியும், பெறுகின்ற அனுபவங்களும் செம்மைப்படுத்துகின்றன.
கொண்டிருக்கும் எண்ணங்களும் சிந்தனைகளும், லட்சியங்களும் செயல்களும் செல்கின்ற நெறிகளும் நல்லவையாக இருந்தால் நம்மை நன்னடத்தை உடையவராக உலகம் சான்றிதழ் வழங்கிப் பெருமைப்படுத்துகிறது. அல்லாத பட்சத்தில் பொய் மனிதராக்கிப் புறந்தள்ளி விடுகிறது.
ஒரு குருநாதரைச் சந்திக்க ஓர் இளைஞர் சென்றிருந்தார். அவர் திருமணமானவர்; வயது முப்பத்து ஐந்துக்குள் இருக்கும். அவரைப் பார்த்துக் குருநாதர் சில கேள்விகளைக் கேட்டார்.
"நீ உன் மனைவியோடு மெரினா கடற்கரைக்குச் சென்று, இருவரும் கடலைப் பார்த்துக் காற்று வாங்கிக் கொண்டு நின்றிருக்கிறீர்கள். அப்போது ஓர் அழகான இளம்பெண் உங்கள் இருவரையும் நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறாள்; நீ அந்தப் பெண்ணைப் பார்ப்பாயா?"
"கட்டாயம் பார்ப்பேன்!"
"சரி! உங்களை நோக்கி வந்த அந்த அழகான இளம்பெண், தற்போது உன்னைக் கடந்து உனக்குப் பின்புறமாகச் சென்றுகொண்டிருக்கிறாள்!. இப்போது அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்ப்பாயா?"
"என் மனைவி என்னைப் பார்க்கவில்லையென்றால் நான் திரும்பிப் பார்ப்பேன்!".
" நல்லது. அந்த அழகான இளம்பெண்ணின் நினைவு உன் மனத்தில் எவ்வளவு நாட்களுக்குத் தங்கியிருக்கும்?"
குருநாதரின் இந்தக் கேள்விக்குச் சற்றும் யோசிக்காமல் இளைஞன் பதில் சொன்னான், "அடுத்த அழகான பெண்ணைப் பார்க்கும் வரை!."
சிரித்த குருநாதர், அடுத்த ஒரு நிகழ்வுக்குத் தாவினார்.
"நமது அன்பர் ஒருவர் வசதியான பணக்காரர், விழுப்புரத்தில் இருக்கிறார். நான் சில புத்தகங்களைப் பையிலிட்டு, விழுப்புரத்தில் அவரது வீட்டில் பார்த்துக் கொடுத்துவிட்டுத் திரும்புமாறு கூறுகிறேன்.
நீயும் சென்னையில் இருந்து கிளம்பிச் சென்று, விழுப்புரத்தில் அவரது வீட்டை அடைகிறாய். மிகப்பெரிய பங்களா அவரது வீடு; நுழைவு வாயிலைத் திறந்தால் பத்துக் கார்கள் வரிசையிட்டு நிறுத்திவைக்கப் பட்டிருக்கின்றன்றன. நீ அழைப்புமணியை அழுத்தியதும், வாசல் கதவைத் திறந்து கொண்டு, அந்த அன்பரே வந்து வரவேற்கிறார்.
நான் அனுப்பியதாகச் சொல்லி, நான் தந்தனுப்பிய புத்தகப் பையை நீ கொடுத்ததும் பெரும் மகிழ்வோடும் மரியாதையோடும் பெற்றுக்கொள்கிறார். உன்னை வரவேற்பறையிலுள்ள சோபாவில் அமர வைத்து அவரே தண்ணீர், காபி முதலியவற்றைத் தருகிறார். குருநாதர் நலமா? என ஆழ்ந்த மன உணர்வுடன் விசாரிக்கிறார். உன்னைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்துகொள்கிறார். இரவு உணவு முடித்துவிட்டுத்தான் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என அன்புக் கட்டளை பிறப்பிக்கிறார். இரவு உணவு தயாரானதும் அவரே தமது சொந்தக் கரங்களால் அன்பொழுகப் பரிமாறுகிறார்.
சாப்பிட்டு முடித்ததும், சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு எப்படி வந்தாய்! என விசாரிக்கிறார். நீயும் பேருந்தில் வந்ததாய்ச் சொல்கிறாய். அடடே! இந்த வெய்யிலில் பேருந்திலா வந்தீர்கள்? திரும்பிப் போகும்போது நமது காரில் செல்லுங்கள்! என்று கூறி ஒரு ஓட்டுநரை அழைக்கிறார்,'நமது ஏசி காரை எடுத்துக்கொண்டு சென்னைக்குச் செல்! அங்கே இந்தத் தம்பியை அவரது வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, அங்கிருந்து உனது மொபைலில் என்னை அழைத்துத், தம்பியிடம் கொடுத்து என்னிடம் பேசச் சொல்!' என்கிறார்.அதே போல நீயும் இரவில் அவரது காரில் சென்னை வந்து வீட்டில் இறங்கியதும், அவரிடம் பேசி நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொள்கிறாய்!.
இப்போது சொல்! அந்த மனிதரை நீ எத்தனை நாட்களுக்கு உன் நினைவில் வைத்திருப்பாய்?".
இளைஞன் பதிலளித்தான், "என்னங்க குருநாதரே இப்படிக் கேட்டுவிட்டீர்கள்?. அவ்வளவு பெரிய நல்ல மனமும் குணமும் உள்ள அந்தப் பெரியமனிதரை எப்படி எளிதில் மறந்துவிட முடியும்?; என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்!".
ஆம்! வாழ்வியலில் அழகான அங்கங்களால் மனிதர்கள் நினைவில் வைத்துக்கொள்ளப் படுவதில்லை; அழகான நடத்தைகளாலேயே அவர்கள் சக மனிதர்களால் நினைவில் வைத்துப் போற்றப் பெறுகிறார்கள்.
நாம் நம்மை அழகாக்கிக் கொள்வதிலேயே பெரும்பான்மை நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். உடுத்துவது, உண்பது, பூசுவது, பூணுவது என எல்லாவற்றிற்கும் சம்பாதிக்கும் அத்தனையையும் நாம் செலவழிப்பது நம்மை அழகு படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே!. அழகு அழகானது தான். ஆனால் உண்மையழகு என்பது இயல்பாக வருவது; செயற்கையால் அது செழுமை பெறாது.
அங்கங்களை அழகுபடுத்தச் செலவழிக்கும் முயற்சியில் பத்தில் ஒருபங்காவது நாம் நமது நடத்தைகளை அழகாக்கச் செலவழித்தால் நம்மைவிட நிலைத்த அழகுடையவர்கள் உலகத்திலேயே இருக்க முடியாது.
ஒருவரை நல்லவர் என்றும் தீயவர் என்றும் கூறுவதற்கு அவரது நடத்தைகளே அளவுகோல்களாக அமைகின்றன. நல்ல விதமான சிந்தனைகள், நல்லவிதமான சொற் பயன்பாடுகள், எதையுமே நல்லவிதமாகப் பார்க்கும் நேர்முறைக் குணம், அதற்கேற்ற நம்பிக்கைச் செயற்பாடுகள், ஆசை, கோபம் களவு, பொறாமை முதலியவை இல்லாமை, அன்பு, கருணை, இரக்கம், நடுநிலைமை முதலியவை நிறைந்திருத்தல்… இவையே நன்னடத்தையின் அடையாளங்கள். இவற்றிற்கு மாறுபட்ட தன்மையுள்ளோர் தீய நடத்தைகள் கொண்ட எதிர்மறைக் குணம் உடையவர்கள்.
எல்லா மனிதருக்குள்ளும் நன்மைக் குணங்களும் உண்டு; தீமைக் குணங்களும் உண்டு. நாளில் இருட்டும் ஒளியும் கலந்திருப்பதுபோல..பூமியில் மேடுகளும் பள்ளங்களும் நிறைந்திருப்பது போல.ஒவ்வொரு மனிதனும் தன்னை நல்லவனாக்கிக் கொள்ள எளிய வழி எப்போதும் நல்லவை விளையக் கூடி இனிய சொற்களைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால் போதும் என்கிறார் திருவள்ளுவர்.
"அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்" எனவே நமக்குள்ளிருக்கும் அனைத்துத் தீமைகளும் நம்மைவிட்டு வெளியேறி அறமாகிய நன்மை நமக்குள் நிறைய வேண்டுமென்றால் நல்லதையே சிந்திக்க வேண்டும்; நல்லதையே பேச வேண்டும்; நல்லதையே செய்யவேண்டும்.
ஓர் ஊரில் ஒரு கஞ்சன் இருந்தார். நல்ல வசதியான செல்வந்தர்; ஆனால் மனமுவந்து யாருக்கும் எந்த உதவியும் செய்து விடக்கூடாது என்பதில் வெகு கவனமாக இருப்பவர். அவரது இந்த எதிர்மறை நடத்தை நேர்முறையான நன்னடத்தையாக மாறிய கதை சுவையானது.
அந்த ஊரில் திருவிழா வந்தது. ஊர்ப் பெரியவர்கள் சேர்ந்து வசதியானவர்களிடம் நன்கொடைகள் வசூல்பண்ணித் திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்த முறை, நன்கொடை வசூலுக்குப் புதுமையான உத்தியைக் கையாண்டனர். நன்கொடைப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஊர்ப் பெரியவர்கள் நேராக அந்தக் கஞ்ச மகாப்பிரபு வீட்டுக்கு முதல் வசூலாகச் சென்றனர். வரவேற்ற கஞ்சன், "என்னைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டே என்னிடத்தில் வசூலுக்கு வந்திருக்கிறீர்களே!.நான்தான் எதுவுமே கொடுக்க மாட்டேனே!" என்று இழுத்தார்.
"ஐயா நீங்கள் தரமாட்டீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும் ஒரு புதிய வசூல்முறையை ஆலோசித்து இங்கே வந்திருக்கிறோம். நீங்கள் உங்கள் நன்கொடைப் பங்காக ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை ஒன்றைத் தந்து விடுங்கள்.அதனை வங்கியில் செலுத்திக் காசாக்காமல் வைத்திருந்து ஒருமாதம் கழித்து உங்களுக்கே திரும்பித் தந்துவிடுகிறோம். இதில் உங்களுக்கு எந்தவிதமான பண நட்டமும் வராது.
ஊரில் மற்றவர்களிடம், நீங்கள் நன்கொடை தந்ததாக இந்தக் காசோலையைக் காட்டினால் அவர்கள் கூடுதலாக நன்கொடைகள் வழங்க வாய்ப்பாக அமையும்; அதற்காகத் தான் இந்த ஏற்பாடு" என்ற ஊர்ப் பெரியவர்கள், "இதை வேறு யாரிடமும் கூறிவிடாதீர்கள்! நாங்களும் கூற மாட்டோம்!" என்றனர்.
சரி! சரி! என்று கூறிக்கொண்டே வீட்டுக்குள் போய் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எழுதிக் கையொப்பமிட்டுக் கொண்டுவந்து கொடுத்தார் கஞ்சன். 'எதற்கும் எதுவும் தராத கஞ்சனே ஒரு லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்!' என்று ஊர்முழுவதும் பேச்சாகிப் போனது.
ஊரிலுள்ள மற்ற பணக்காரர்களெல்லாம் கஞ்சனை விட அதிகமாகவே நன்கொடையை எழுதித் தள்ளினர். எந்த ஆண்டும் இல்லாத வருமானமாக இந்த ஆண்டு குவிந்து போனது.
மாத முடிவில் காசோலையைத் திருப்பித்தர கஞ்சன் வீட்டுக்கு ஊர்ப் பெரியவர்கள் சென்றனர். "அந்தப் பணத்தைக் கோயிலுக்கான எனது நன்கொடையாகவே வைத்துக்கொள்ளுங்கள்!" என்று கஞ்சன் சொன்னதும் எல்லாரும் அதிர்ந்து போயினர். "நான் காசோலை கொடுத்த பிறகு இந்த ஒருமாதமும் தினசரி என்னை வாழ்த்தியும் பாராட்டியும் நூற்றுக்கணக்கான ஊர்மக்கள் பேசினர். தருவதால் ஏற்படும் மகிழ்ச்சியை முழுமையாக உணர்ந்து கொண்டேன். அடுத்தாண்டுத் திருவிழாவுக்கு ஒன்னரை லட்சம் தருவேன்" என்றார் திருந்திய கஞ்சன்.
நல்ல எண்ணங்கள்! இனிய சொற்கள்! நல்ல நோக்கக்கங்கள்! நல்ல செயல்பாடுகள்! இவையே நம்மை நல்வழிப்படுத்தும் நடத்தைகள்!!
நடத்தை நலமானால் வாழ்க்கை சுகமாகும்!
தொடர்புக்கு 9443190098
- அன்னாபிஷேகத்தில் சிவனுக்கு இடப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கமே.
- ஆழாக்கு அரிசி அன்னதானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம் என்பது தமிழ்ப் பழமொழி.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானமே என புராணங்களும் மகாபாரத இதிகாசமும் கூறுவதோடு அந்த தானத்தின் எல்லையற்ற மகிமையையும் எடுத்துக் கூறுகின்றன.
ஐப்பசி பவுர்ணமியின் சிறப்பு
ஐப்பசி பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் மெய் சிலிர்க்க வைக்கும் விதத்தில் நடத்தப்படுகிறது.
முதலில் சம்பிரதாயமுறைப்படி நடத்தப்படும் புனித தீர்த்தம், பசும் பால், நெய், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் ஆகியவற்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும். இதில் அன்னாபிஷேகம் சிறப்பாகக் கருதப்படுகிறது.
சிவலிங்கம் முழுவதும் அன்னாபிஷேகத்தால் மூடப்பட்டு உச்சியில் காய்கறிகளால் அலங்கரிக்கப்படுகிறது.
பவுர்ணமியன்று இது நடத்தப்படுவதன் காரணம் என்ன?
அதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.
முன்பொரு காலத்தில் பிரம்மன் தன்னை சிவனுக்கு நிகராக நினைத்து கர்வம் கொண்டான். அந்தக் கர்வத்தைப் போக்க சிவபிரான் பிரம்மனின் ஒரு தலையைக்கிள்ள, அந்தக் கபாலம் அவர் கையில் ஓடாக ஒட்டிக் கொண்டது.
பிரம்மனின் சிரத்தைக்கொய்ததால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் சிவனைப் பற்றிக் கொண்டது.
எப்போது அவர் கையில் உள்ள கபால ஓடு அன்னத்தால் நிரம்புகிறதோ அப்போது தோஷம் நீங்கும் என்று தோஷ நிவர்த்தி ஏற்பட ஈசன் காசிக்குச் சென்று அன்னபூரணி கையால் அன்னத்தைப் பெற்று தோஷம் நீங்கப் பெற்றான்.
சிவபிரான் அன்னபூரணியிடமிருந்து அன்னம் பெற்ற நாள் ஐப்பசி பவுர்ணமி ஆகும். ஆகவே அந்த நாளில் யார் ஒருவர் ஈசனின் அன்னாபிஷேகத்தைத் தரிசிக்கிறாரோ, யார் ஒருவர் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்கிறாரோ அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னம் கிடைக்கும்; கர்மவினைகளும் அகலும் என்பது உள்ளிட்ட பல நற்பயன்களும் சித்திக்கும் என்று ஆனது.
அன்னாபிஷேக பலன்கள்
அன்னாபிஷேகத்தில் சிவனுக்கு இடப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கமே.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்தத் திருநாள் அபிஷேகம் பக்தர்களைப் பரவசப்படுத்தும். திருநாள் பிரசாதத்தை உட்கொள்வதால் அனைத்து நற்பலன்களும்கிட்டும்.
நற்பலன்களில் சில:
1) ஆயுள் முழுவதும் இல்லத்தில் அன்னம் இருக்கும்.
2) கர்மவினைகள் கழியும்.
3) சிறுவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.
4) வணிக சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
5) மகப்பேறு இல்லாதோர்க்கு மகப்பேறு கிடைக்கும்.
6) உழவு செழிப்பதோடு அனைத்து தானியங்களும் கிடைக்கும்.
உழவர்கள் தங்கள் இல்லத்தில் அன்னாபிஷேகம் செய்யும் பிள்ளைகள் இருந்தால் பல தலைமுறைகளுக்கு அன்னத்திற்குபஞ்சமே இருக்காது என்று நம்புவது நமது மரபாகும். நல்ல மழையை எதிர்பார்ப்பது போல அப்படிப்பட்ட பிள்ளைகள் தமக்குப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகின்றனர்.
அன்னம் என்பது உயிர் வாழும் மனிதருக்கு அடிப்படைத்தேவையாகும்.
இதன் அதிபதி சிவபிரானே. இயற்கையின் பஞ்ச பூதங்களுக்கும் அதிபதி அவரே. இந்த இயற்கையின் பஞ்ச பூதங்களினால் தான் நெல்மணி நமக்குக் கிடைக்கிறது. நிலத்தில் விதை விதையிடப்பட, வானம் நீர் பொழிய, அங்கு நீர் பாய்ச்ச, சூரிய ஒளி (வெப்பம்) பயிர்களின் மேல்பட, வாயுவின் சேர்க்கையால் நெல்மணி நமக்குப்பூரணமாகக் கிடைக்கிறது. இந்த அன்னமே உலகில் வாழ் உயிர்களுக்கு உணவாக ஆகி ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தருகிறது.
ஆகவே தான் அன்னாபிஷேகத்தின் மகிமையை அனைத்து அறநூல்களும் போற்றிப்புகழ்கின்றன.
அன்னதானத்தின் சிறப்பு பற்றி நாரதர் கூறியது
பீஷ்மரிடம் தர்மபுத்திரர்தானங்களுள் சிறந்த தானம் எது என்ற தன் சந்தேகத்தைக் கேட்க அதற்கு பீஷ்மர் தான் நாரதரிடம் இது பற்றிக் கேட்டு தக்க பதிலைப்பெற்றதாகக் கூறி அந்தப் பதிலை விரிவாகக் கூறுகிறார் (அநுசாசனபர்வம் 98வது அத்தியாயம்).
அதில் உள்ள சில முக்கிய கருத்துக்களை இங்கு பார்க்கலாம்:
"உலக வாழ்க்கை என்பது அன்னத்தைப் பொறுத்ததே. அன்னதானத்திற்கு ஒப்பான தானம் முன்னுமில்லை; பின்னுமில்லை.
அன்னத்திலே தான் உயிர் இருக்கிறது. ஆகவே யார் ஒருவன் அன்னத்தை தருகிறானோ அவன் மறுமைக்கான புதையலைப் புதைத்து வைத்தவனாகிறான்.
தானம் பெற வந்த அனைவருக்கும் பேதம் பார்க்காது அன்னதானம் செய்தல் வேண்டும். அன்னமிடும்போது அதை ஏற்பவரின் ஊர், குலம், ஓதல், ஆசாரம், பெயர் உள்ளிட்ட எதையும் கேட்கக்கூடாது.
அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்தும் அன்னத்தினாலேயே வருகின்றன. பூலோகமும் தேவலோகமும் அன்னத்தினாலேயே தான். அன்னம் ஒழிந்தால் தேகத்திலுள்ள ஐம்பூதங்களும் பிரிந்து போகின்றன. பலசாலியும் கூட அன்னமில்லாவிட்டால் பலத்தை இழக்கிறான்." - என்று இப்படி மிக விரிவாக அன்னதானப் பெருமையை நாரதர் விவரிக்கிறார்.
அப்பரின் அருள்வாக்கு
தலம் தலமாக சிவபிரானை தரிசித்து வந்த அப்பர் பெருமான் தில்லைக்கு வந்தார். அங்கு அவர் பெற்ற தரிசனம் அவருக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.
அன்னம் பாலிக்கும்தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம்பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம்பாலிக்கும் ஆறு கண்டு இன்புர
இன்னம் பாலிக்குமோஇப்பிறவியே
என்று அவர் பாடி அருள்கிறார்.
இங்குள்ள ஸ்படிகலிங்கத்திற்கு தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆக தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யும் பெருமையைப்பெறுகிறது தில்லைத் திருத்தலம்!
கண்ணனின் அருள்வாக்கு
கண்ணபிரான் கீதையில் (அத் 3 - 14) அன்னாத்பவந்திபூதானி என்று கூறுகிறார். அன்னத்தினாலேயே பவுதிக உடல்கள் வளர்கின்றன என்பது இதன் பொருள்.
அறநெறிகளை அறிந்து உணர்ந்த நமது பழம் பெரும் மன்னர்கள் ஆங்காங்கே அன்ன சத்திரங்களை அமைத்து பசிப்பிணி போக்கியதை நமது ஏடுகள் எடுத்துரைக்கின்றன.
நமது ஆலயங்களிலும் பண்டு தொட்டு இன்று வரை அன்னதானம் சிறப்பாக நடை பெற்று வருவது கண்கூடு.
ஆழாக்கு அரிசி அன்னதானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம் என்பது தமிழ்ப் பழமொழி.
இரு கதைகள்
அன்னதானத்தின் சிறப்பை விளக்கும் பல கதைகள் நமது இதிகாச புராணங்களில் உண்டு. கர்ணபரம்பரைக் கதைகளும் பல உள்ளன. இரு சம்பவங்களை இங்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
இளம் வயது குருகுலத் தோழர்களாக விளங்கியவர்கள் ஏழை குசேலரும் மன்னர் பரம்பரையைச் சார்ந்த கண்ணபிரானும்.
குருகுல வாசம் முடிந்த பின்னர் ஏழை குசேலர் வறுமையால் வாடலானார். ஆனால் கண்ணனோ மன்னனாக ஆகி அரசாட்சி செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் ஒரு சிறு மூட்டையில் அவலை எடுத்துக்கொண்டு சென்று தன் பால்ய கால நண்பனைப்பார்க்கச் சென்றார் குசேலர்.
குசேலர் அன்புடன் கொடுத்த ஒரு பிடி அவலை ஆசையுடன் ஏற்றுக்கொண்டு உண்டான் கண்ணன். பலன்? குசேலரின் ஏழைக் குடில் மாட மாளிகை கூட கோபுரம் கொண்ட பெரும் வீடாக ஆகியது.
இதுவே அன்னதான பலன்.
அடுத்தது கர்ணனைப் பற்றிய சம்பவம்.
பெரும் தானவீரனாக விளங்கிய கர்ணன் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றான். அங்கு அவனுக்கு பசி தீரவில்லை.
அதன் காரணத்தைக் கேட்டபோது கண்ணபிரான் பதிலாகக் கூறியது : "நீ அனைத்து தானங்களையும் செய்தாலும் அன்னதானம் செய்யவில்லை. உனது விரலை வாயில் வைத்துக் கொள்"
உடனே கர்ணன் விரலை வாயில் வைக்க அவனது பசி தீர்ந்தது.
வியப்புடன் காரணத்தைக் கேட்க கண்ணன் கூறினான்: "ஒரு நாள் ஏழை ஒருவன் பசியினால் வாடி உன்னிடம் வந்து அன்ன சத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்க நீ உன் விரலால் அதோ அங்கே இருக்கிறது என்று அன்ன சத்திரம் இருக்கும் திசையை நோக்கி உன் விரலைக்காட்டினாய். அந்த நற்பயனால் உனக்கு அந்த விரலை வாயிலே இட்டவுடன் உன் பசி போயிற்று. அன்னதானத்தின் மகிமை அப்படிப்பட்டது!" என்று பதில் கூறினான்.
இன்று அன்னதானம் உலகின் இன்றியமையாத தேவையாகி விட்டது.
ஏனெனில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாடி வதங்குவோரின் எண்ணிக்கை 53 நாடுகளில் மட்டும் 35 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது.
ஆகவே இந்த ஐப்பசி பவுர்ணமி நன்னாளில் உலகில் உள்ள அனைவருக்கும் அன்னம் கிடைக்க நமது சிவாலயங்களில் வேண்டிக் கொள்வோம்..
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன்;
அனைவருக்கும் அன்னம் தந்து அவன் அருள் பாலிப்பானாக!






