என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கண்ணன் அடியவர் சூர்தாஸ்
    X

    கண்ணன் அடியவர் சூர்தாஸ்

    • குழந்தைக் கண்ணனைப் பற்றிய சூர்தாசின் கவிதைகள் நெஞ்சை அள்ளுபவை.
    • சூர்தாசின் சம காலத்தில் வல்லபாச்சாரியார் என்ற மகான் வாழ்ந்து வந்தார். சம்ஸ்கிருத பக்திக் கவிஞர்.

    சூர்தாஸ் கண்ணில்லாத ஒரு பக்திக் கவிஞர். அவருக்குப் புறக்கண்கள் தான் இருக்கவில்லை. ஆனால் அகக்கண்கள் பல மடங்கு ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தன.

    கிருஷ்ண பக்தரான சூர்தாஸ் 104 வயது வாழ்ந்தார். (1479 முதல் 1583 வரை.). அவரின் இயற்பெயர் தெரியவில்லை. `சுவரங்களின் அடிமை` என்ற வகையில் மக்கள் அவருக்கு இட்டு வழங்கிய செல்லப்பெயரே ஸ்வர தாசர் எனப்பொருள் தரும் `சூர்தாஸ்`.

    15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சூர்தாஸ், ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் இயற்றினார் என்று சொல்லப்படுகிறது. இப்போது கிடைப்பவை எட்டாயிரம் பாடல்கள் மட்டுமே. `சூர் சாராவளி, சாகித்ய லகரி, சூர் சாகர்` எனப் பற்பல தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

    `ஹே தீன்தயாள் கோபால் ஹரி` என்ற சூர்தாஸ் பாடல் எம்.எஸ்.சின் தேனினும் இனிய குரலில் இன்றும் பக்தி மனங்களை உருக்குகிறது. `பிரபுஜி தும் பி கவுன் சகாய்..`, ஹே கோவிந்தா ஹே கோபாலா...`, மையா மோரி மைநகீ மக்கான் காயோ...`, போன்ற சூர்தாசின் பாடல்கள் மக்களிடையே இன்றளவும் செல்வாக்கோடு விளங்குகின்றன.

    குழந்தைக் கண்ணனைப் பற்றிய சூர்தாசின் கவிதைகள் நெஞ்சை அள்ளுபவை. கண்ணனுக்கு முதல் பல் விழுவது, கண்ணன் தவழ்ந்தே வாயில்படி தாண்டியது என்றிப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் அவரது கவிதைகள் பக்தி மணம் கமழப் பேசுகின்றன.

    ஆழ்வார்கள் பெரும்பாலும் கண்ணனின் புராண லீலைகளைப் பாடினார்கள். ஆனால் சூர்தாஸோ எல்லாக் குழந்தைகளின் வாழ்வில் உள்ளதைப் போல் கண்ணன் வாழ்விலும் நேர்ந்த சாதாரண நிகழ்வுகளைத் தம் கவிதைகளில் கொண்டாடுகிறார்.

    பாரதியார், அரசனாக, தோழனாக, காதலியாக என்றெல்லாம் பல வடிவங்களில் கண்ணனைக் கண்டு பாடினார். சூர்தாஸ் பெரும்பாலும் யசோதை, நந்தகோபர் மனநிலையில் இருந்து கண்ணனைக் குழந்தையாகவே கண்டார்....

    சூர்தாஸ் சிறுவயதில் துன்பங்களையும் அவமானங்களையும் அனுபவித்தார். மூன்று சகோதரர்களும் சக சிறுவர்களும் கிண்டலும் கேலியும் செய்வார்கள்.

    பெற்ற தாய், தந்தையே அவரைப் புறக்கணித்தார்கள். அற்புதமான குரல் அவருக்கு. திண்ணையில் அமர்ந்து சன்னமாகப் பாடிக் கொண்டே இருப்பார்.

    வீட்டின் வெளியே தெருவில், அதிகாலையில் பக்தர்கள் கிருஷ்ண பஜனை செய்தவாறே போவதுண்டு. அந்தப் பாடல்களைக் கூர்ந்து கேட்பார். மெல்ல மெல்லத் தானே பாடல் இயற்றிப் பாடவும் தொடங்கினார்.

    ஒருநாள் அதிகாலை எழுந்த சிறுவன் சூர்தாஸ் மிகுந்த மனச்சோர்வோடு இல்லத்தின் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தார். வீட்டின் உள்ளே தாயும் தந்தையும் சகோதரர்களும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

    தாயிடம் அவருக்கு ஆதரவில்லை. தந்தை அவரைக் கவனிப்பதில்லை. சகோதரர்கள் வெறுக்கிறார்கள். என்ன செய்வது?

    சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவர் செவிகளில் கிருஷ்ண பஜனை ஒலி கேட்டது. வெளியூர் பக்தர்கள் அந்த அதிகாலை வேளையில் கிருஷ்ண பக்தி கானங்களைப் பாடிக் கொண்டு மதுரா ஆலயத்திற்கு அவர் வீடிருந்த வீதி வழியே சென்று கொண்டிருந்தார்கள்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திடீரென ஒரு முடிவெடுத்த சூர்தாஸ், பாட்டுப் பாடிக் கொண்டு சென்ற குழுவினருடன் இணைந்து வெளியே நடந்தார். அவர்களிடம் பாடல் கற்றுக்கொள்ள விரும்பினார் அவர்.

    மதுரா சென்றுகொண்டிருந்த அவர்கள் ஒரு நாள் முழுவதும் நடந்துசென்று அன்றிரவு ஓர் ஆல மரத்தடியில் தங்கினார்கள். தங்களுடன் தானாய் வந்திணைந்து கொண்ட கண்ணில்லாத சிறுவனைப் பார்த்தார்கள்.

    செல்லும் வழியில் அவன் ஒரு பெரிய சுமை அல்லவா? அவனைக் கவனித்துக் கொள்வது யார்? அந்த மரத்தடியிலேயே அன்று அனைவரும் உறங்கினார்கள்.

    மறுநாள் அதிகாலை. சிறுவன் சூர்தாஸ் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பாமலே அந்த பக்தர் கூட்டம் சத்தமில்லாமல் விலகிச் சென்றது. சிறுவன் துயில் கலைந்தபோது அருகே யாருமில்லை.

    இப்போது என்ன செய்வது? உலகமே என்னைப் புறக்கணிக்கிறதா? அவர் கல்லும் கனிந்துருகும் குரலில் கண்ணனைக் குறித்துத் தாமே இயற்றிய பக்திப் பாடல்களைப் பாடலானார். அவரது மதுரக் குரல் காற்று வெளியில் கலந்தது.

    அருகேயிருந்த கிராமத்திலிருந்து சில பெண்மணிகள் அந்த மரத்தடியில் பல் தேய்க்க வந்தார்கள். சூர்தாஸின் பாடல்களைக் கேட்டு அவர்கள் மனம் கரைந்தது. அவர்கள் அனைவரும் அவனின் பார்வையற்ற கண்ணில் பெருகிய கண்ணீரைத் தங்கள் விரல்களால் துடைத்தார்கள்.

    ஒருத்தி அவரைக் குளத்திற்கு அழைத்துச் சென்று பல் தேய்த்து விட்டாள். இன்னொருத்தி பரிவோடு அவரை நீராட்டினாள். ஒரு பெண்மணி ஓடோடிப் போய் சப்பாத்தி கொண்டுவந்து ஊட்டினாள்.

    அவனின் குரலினிமையில் மனம் பறிகொடுத்த அவர்கள், `குழந்தாய் பாடு பாடு!` என்று பாடச் சொல்லி அந்தக் குரலிலும் பக்தியிலும் மெய்மறந்தார்கள். ஒரு தாயால் புறக்கணிக்கப்பட்ட சூர்தாசுக்கு எண்ணற்ற தாய்கள் கிடைத்தார்கள். அவர்களின் தாயன்பை அனுபவித்தவாறு அந்த மரத்தடியிலேயே சூர்தாஸ் வாழலானார். அவ்வழியே வந்த வழிப்போக்கர்கள் அவர் பாடலில் சொக்கினார்கள். அவருக்குக் காசு தந்தார்கள்.....

    அவருக்கு வயது கூடியது. கூடவே புகழும் கூடியது. அவரது தெய்வீக கானத்தைக் கேட்க மக்கள் பல்வேறிடங்களில் இருந்து திரண்டார்கள்.

    சிலர் அவருடனேயே இருந்து அவரது பாடல்களை அவர் பாடப்பாட எழுதிக்கொண்டு போனார்கள். தங்கள் இடங்களில் அந்தப் பாடல்களைத் தாங்கள் பாடிப் பிரபலப்படுத்தினார்கள்.

    வருபவர்களெல்லாம் அந்த தெய்வீகக் கவிஞருக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினார்கள். பணத்தாசை அற்ற சூர்தாஸ் தமக்குக் கிடைத்த செல்வத்தையெல்லாம் தம்மை ஆதரித்த அந்த கிராமத்துத் தாய்மார்களுக்கே வழங்கிவிட்டார்.

    அந்தப் பிரதேசமெங்கும் பரவிய அவரது பெரும்புகழ் அவர் பிறந்த கிராமத்தை எட்டாதிருக்குமா? அவரது சகோதரர்கள் நேரில் வந்து பார்த்து அவரை இனங்கண்டு கொண்டார்கள். பின் தாயோடும் தந்தையோடும் இணைந்து வந்தார்கள். குடும்பம் அவரைப் புறக்கணித்ததற்காக மன்னிப்பு வேண்டினார்கள்.

    `எல்லாம் நன்மைக்கே, தனக்கு யாரிடமும் எந்த வெறுப்பும் இல்லை` என்று சிரித்தவாறே சொன்னார் சூர்தாஸ். மீண்டும் குடும்பத்தோடு அவர் வந்து இணைய வேண்டும் என வேண்டினார்கள் குடும்பத்தினர். `இப்போது உலகம் முழுவதுமே என் குடும்பம்` என்று சொல்லி அவர்கள் வேண்டுகோளை மறுத்துவிட்டார் சூர்தாஸ்.....

    சூர்தாசின் சம காலத்தில் வல்லபாச்சாரியார் என்ற மகான் வாழ்ந்து வந்தார். சம்ஸ்கிருத பக்திக் கவிஞர். `அதரம் மதுரம் வதனம் மதுரம்....` என்று தொடங்கும், மதுராஷ்டகத்தை எழுதியவர்.

    மகான் வல்லபாச்சாரியாருக்குச் சிஷ்யராக வேண்டும் என்ற தாளாத வேட்கை சூர்தாசுக்கு இருந்தது. யமுனை நதிக்கரைக்கு அதிகாலையில் அவர் நீராட வருவார் என்றறிந்து படித்துறைக்குச் சென்றார். தாம் எழுதிய பாடல்களை உருக்கமாகப் பாடியவாறே அவரது வருகைக்காகக் காத்திருந்தார்.

    வல்லபாசார்யர் அந்த மதுரக்குரலைக் கேட்டு அவரைத் தேடி வந்தார். அவர் பாதங்களில் விழுந்து பணிந்தார் சூர்தாஸ். அவரை அள்ளி அணைத்துக்கொண்ட வல்லபாச்சாரியார் அவரைச் சீடராக ஏற்றார். `உன் தன்னிரக்கத்தோடு கூடிய புலம்பல் பாடல்கள் எதற்கு? கருணை மயமான இறைவனின் லீலைகளைப் பாடு!` என்றார்.

    `கண்ணனின் லீலைகளைப் பற்றிப் பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாதே, கண்ணனின் திருச்சரிதம் தெரிந்தால் தானே நான் பாட முடியும்?` என வினவினார் சூர்தாஸ். `அவன் லீலைகள் குறித்து நான் உனக்குத் தெரிவிக்கிறேன்` என்ற வல்லபாச்சாரியார், சூர்தாசுக்கு பாகவதம் முழுவதும் கற்றுத்தந்தார்.

    குருவின் அருள்பெற்ற பின்னர்தான், கிருஷ்ண லீலைகளாக அமைந்த பாகவதக் கதைகளைப் பாடத் தொடங்கினார் சூர்தாஸ்.

    வல்லபாச்சாரியாரின் முக்கியமான எட்டுச் சீடர்களில் ஒருவராகப் பிறகு அறியப்பட்டார் அவர்......

    தம் குரு வல்லபாச்சாரியாரின் உதவியால் மதுரா கோவிலில் ஆஸ்தான பாடகராகச் சேர்ந்தார் சூர்தாஸ். ஒவ்வொரு நாளும் கண்ணனுக்கு விதவித அலங்காரங்கள் செய்வார்கள் அர்ச்சகர்கள். கண்ணில்லாத சூர்தாஸ் அன்றன்று என்ன நிறப் பட்டுப் பீதாம்பரத்தைக் கண்ணன் அணிந்திருக்கிறான் என்பதைத் தம் பாடலில் சொல்லிப் பாடுவார்.

    கண்ணில்லாத சூர்தாஸ் எப்படி ஒவ்வொரு நாளும் கண்ணன் அணிந்த உடையின் நிறத்தைச் சரியாகத் தன் பாடலில் இணைத்துச் சொல்கிறார்? அர்ச்சகர்களுக்கு ஆச்சரியம்.

    ஒருநாள் திரைச்சீலையால் கிருஷ்ண விக்கிரகத்தை மறைத்து கண்ணனுக்கு உடையே அணிவிக்காமல் முத்து மாலைகளையே உடைபோல அணிவித்து அலங்கரித்தார்கள். திரையைத் திறக்காமலேயே சூர்தாஸைப் பாடச் சொன்னார்கள்.

    `கண்ணா! உன் முத்துப்பல் வரிசைக்குப் பொருத்தமாக இருக்கட்டும் என்று ஆடையில்லாமல் இன்று முத்தாலேயே உடை அணிந்தாயா நீ?` என அன்று சூர்தாஸ் பாடியதும் அர்ச்சகர்கள் ஓடோடி வந்து சூர்தாசைன் பாதங்களில் விழுந்து பணிந்தார்கள்.

    நூற்று நான்கு வயதான தருணத்தில் கண்ணன் சூர்தாசை வைகுந்தத்திற்கு அழைத்துக்கொள்ள விரும்பினான். அப்போது ஓர் அடியவர் சூர்தாசிடம் `நீங்கள் கண்ணனைப் பற்றி எண்ணற்ற பாடல்களைப் பாடினீர்கள், உங்கள் குரு வல்லபாச்சாரியாரைப் பற்றி ஒரு பாடல் கூடப் பாடவில்லையே?` எனக் கேட்டார்.

    சூர்தாஸ் அந்த அடியவரின் வேண்டுகோளை ஏற்றார். தம் குரு வல்லபாச்சாரியார் பற்றி உள்ளம் உருக ஒரு பாடலைப் பாடியவாறே மண்ணில் சரிந்தார். அவர் ஆன்மா விண்ணில் பறந்து கண்ணனுடன் கலந்தது.

    சூர்தாசின் சில பாடல்கள் இந்தித் திரைப்படங்களிலும் இடம் பெற்றுள்ளன. சூர்தாசருக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×