என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் மலச்சிக்கலும், அதற்கான தீர்வுகளும்
- ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படுகிறது.
- பல்வேறு நோய்நிலைகளிலும் மலச்சிக்கல் உண்டாகக்கூடும்.
முதுமையில் பலரும் அவதிப்படும் நோய்நிலைகளுள் மலச்சிக்கலும் ஒன்று. அடுக்கடுக்காய் நோய்களை சுமந்து நாட்களை கடத்தும் முதுமைக்கு, மலச்சிக்கல் கூடுதல் சுமை தான். இயல்பாக மலம் கழிந்தால் உடல் சுத்தமடையும், வியாதிகள் அண்டாது. ஆனால் மலச்சிக்கல் வந்தால், மனமும் சிக்கலாகும். உடல் நலமும் குன்றும்.
"மும்மலம் அறுநீர்" என்பது வழக்கு மொழி. அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழிக்க வேண்டும் என்பது பொருள். அதுவே நம் ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஆனால், முதுமையில் ஒரு முறை மலம் கழிப்பது என்பதே பலருக்கு கடினமாக மாறிவிடுகிறது. இதனால் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படுகிறது.
உலகில் கிட்டத்தட்ட 12 முதல் 19 % பேர் வரை மலச்சிக்கலால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் வாரத்திற்கு மூன்று முறை மலம் கழிப்பது என்பதே இயல்பானதாக கருதப்படுகிறது. நமது உணவு முறையும், பழக்கவழக்கங்களும் தினசரி மலம் கழிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது. ஆனால் தற்போதைய நவீன வாழ்வியலில் தினசரி மலம் கழிக்கும் நிலை என்பது முற்றிலும் மாறிவிட்டது.
முதுமையில் மலச்சிக்கல் என்பது முறையற்ற, கடினமான சில சமயம் வலியுடன் கூடிய மலம் கழிப்பதைக் குறிப்பதாக உள்ளது. அதிகம் பேருக்கு மலச்சிக்கல் உண்டாகக் காரணம் முதுமையில் குடல் இயக்கங்கள் வெகுவாக குறைவதால் தான். இயல்பாக நடப்பது என்பதே கடினமாக இருக்கும் முதுமையில், உடல் இயக்கங்கள் அதிகம் இல்லாமையாலும், வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளின் வன்மை குன்றுவதாலும், முக்கியமாக உணவில் நார்ச்சத்துக்கள் குறைபாடு காரணமாகவும் மலச்சிக்கல் உண்டாகின்றது.
இத்தகைய காரணங்கள் மட்டுமின்றி, பல்வேறு நோய்நிலைகளிலும் மலச்சிக்கல் உண்டாகக்கூடும். ஹைப்போதைராய்டு எனும் குறைவீதன நோய்நிலை, டைவெர்டிகுலோசிஸ், இரத்தத்தில் அதிகமான கால்சியம் அளவு (hypercalcemia), இரத்தத்தில் பொட்டாசியம் சத்துக் குறைதல் (hypokalemia), மன அழுத்த நோய்கள், மற்றும் உடல் நலத்திற்கு எடுக்கும் பல்வேறு மருந்துகளும் கூட முதுமையில் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாகின்றன.
பொதுவாகவே சைவ உணவில் உள்ள தாவர உணவுப்பொருட்களில் சக்கைத் (நார்ச்சத்து) தன்மையுடைய பொருட்கள் அதிகம் இருப்பதால் அத்தகைய உணவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் குறைவு. மேலும் மலத்தின் தன்மையும் இயல்பாக இருக்கும். அசைவ உணவு உண்பவர்களின் மலம், போதுமான நார்ச்சத்துக்கள் இன்மையால், குறைவான அளவுக்கு மலம் கழியும். மலச்சிக்கலும் அதிகம் உண்டாகும்.
மலச்சிக்கலைப் போக்க நார்ச்சத்து எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே அளவிற்கு நீர்ச்சத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. முதுமையில் சிறுநீர் அடிக்கடி கழியும் தொந்தரவு பலருக்கு ஏற்படுவதால், பெரும்பாலான முதியவர்கள் தண்ணீர் குடிக்க கூட தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மலம் கெட்டிப்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது.
நமது உடலின் அன்றாட வளர்ச்சிதை மாற்றத்திற்கு தினசரி 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் என்பதே உடலுக்கு ஊட்டமளிக்கும் பானம். ஆகவே தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்துவது நல்லது. இது மலச்சிக்கல் தீர வழிவகை செய்யும்.
சித்த மருத்துவம் மலச்சிக்கலுக்கு முதன்மைக் காரணமாக குறிப்பிடுவது வாதத்தை தான். அதாவது குடலில் சேரும் வாயுவும், அத்துடன் நட்பாக கைக்கோர்க்கும் பித்தமும், கபமும் பல்வேறு நோய்களில் மலச்சிக்கலை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.
அதன்படி வாதக் குற்றத்தை தன்னிலைப்படுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், முதுமையில் இயல்பாகவே உடல் பலவீனம் இருப்பதாலும், அதிக முறை மலம் கழிந்தால் உடலில் நீர்ச்சத்தும், உப்புசத்தும் இழக்கப்படுவதால் கூடுதல் பலவீனம் ஏற்படக்கூடும். ஆகையால் இலகுவான மலத்தை இளக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது சாலச்சிறந்தது.
எனவே சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மலச்சிக்கலை போக்கும் எளிய மூலிகைகளான நிலாவாரை, சிவதை, திரிபலை, தனி கடுக்காய் போன்ற மூலிகை மருந்துகளை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். மேலும் வாத, பித்த, கபத்தில் பாதிக்கப்பட்ட குற்றங்களுக்கு ஏற்றாற் போல் மருந்துகளை எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும்.
நிலாவாரை என்னும் மூலிகை, மலச்சிக்க லுக்காக நம் நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகை மருந்தாக உள்ளது. இதில் உள்ள 'சென்னாசைடு' வகையான வேதிப்பொருட்கள் மலம்போக்கி செய்கை உடையன. நிலாவாரை சூரணம் எனும் சித்த மருந்தினை தினசரி இரவில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ள மலச்சிக்கல் நீங்கும். அத்துடன் வாதமும் நீங்கும்.
நார்ச்சத்தினை அதிகம் கொண்ட, மலத்தை இலகுவாக்கி கழிக்கும் தன்மை உடைய மற்றொரு மூலிகை இசப்புக்கோல். இன்று இசப்புக்கோல் எனும் மூலிகை நவீன மருத்துவத்திலும் மலச்சிக்கல் போக்கும் மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இது நாட்பட்ட மலச்சிக்கலால் ஏற்படும் ஆசன வாய் வெடிப்பினை (பிளவு) போக்கும் தன்மையும் உடையது. மலத்தை எளிதில் வெளிப்படுத்தவும் செய்யும்.
ஆமணக்கு எண்ணெய் என்ற மலச்சிக்கலைப் போக்கும் மாமருந்து பற்றி பலரும் மறந்துவிட்டனர். இதனை ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவுக்கு இரவில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது மலச்சிக்கலை போக்கும். வாதத்தைக் குறைக்கும். வாதத்துடன் பித்தம் சேர்ந்த குறிகுணம் உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெய்யுடன், சூடான பால் சேர்த்து எடுத்துக்கொள்ள நற்பலன் தரும்.
முதுமையில் ஒவ்வொருவர் கையிலும் வைத்திருக்க வேண்டிய அற்புத மருந்து 'திரிபலை சூரணம்'. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலை சூரணம் எனும் சித்த மருந்து மலச்சிக்கலை போக்க பேருதவி புரிவதோடு கூடுதலாக பலப்பல நன்மைகளையும் தரவல்லது. தினசரி இரவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து எடுக்கலாம். இதனால் வயிறு கடுப்பின்றி மலம் கழியும்.
அதே போல் கடுக்காய் சூரணம் எனும் மருந்தும் நற்பலன் தரும். இது குடலில் பெரிஸ்டால்சிஸ் அசைவுகளை தூண்டுவதன் மூலம் மலச்சிக்கலை தீர்க்க ஏதுவாகின்றது. கடுக்காய் தோலில் மலச்சிக்கலை தீர்க்கும் தன்மையுள்ள 'ஆந்த்ரோகுயினோன்' வகையான வேதிப்பொருள் உள்ளது. கடுக்காய் பிஞ்சுடன் விளக்கெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் 'மூலக்குடோரி தைலம்' எனும் சித்த மருந்தும் முதுமையில் உண்டாகும் மலச்சிக்கலுக்கு நல்ல நிவாரணம் தரும்.
மலச்சிக்கலால் அவதியுறும் முதியவர்கள் முதலில் வாதம் அதிகரிக்காத உணவை நாடுவது நல்லது. மலச்சிக்கல் நிலையில் வாதம் அதிகரிக்கும் உணவுகளான, அதிக கலோரி சத்தினைக் கொண்ட கிழங்கு வகைகள், சுண்டல் வகைகள் இவற்றை தவிர்ப்பது நல்லது. "மண் பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசிவோம்" என்று தேரையரின் சித்த மருத்துவ வரிகள் கூறுகின்றன. அதன்படி, நார்ச்சத்தினை அதிகம் கொண்ட கருணைக்கிழங்கினை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
தினசரி உண்ணும் உணவில் 300 கிராம் வரை நார்ச்சத்து இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. எனவே, அதிக நார்சத்துக்களைக் கொண்ட பிஞ்சுக் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்ப்பது நல்லது. பப்பாளி, உலர்ந்த திராட்சை, அத்திப்பழம் இவற்றிற்கு இயல்பாக மலம் இளக்கும் தன்மை உடையதால், அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. பொதுவாகவே கீரைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.
அதிக கொழுப்புள்ள, மாவுச்சத்துள்ள உணவுகள், எண்ணெய் தோய்ந்த பதார்த்தங்கள், வறுத்த, பொரித்த உணவுகள், ஈரட்டிகள் (பிஸ்கேட்ஸ்), அடுமனை (பேக்கரி) உணவுகள் ஆகிய உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது குடலுக்கு நன்மை செய்யும். சீரணமாக நெடுநேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் எளிதில் மலச்சிக்கலை உண்டாக்கும். எனவே முதுமையில் 'இழிவறிந்து உண்பான் கண்' என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, அளவான, ஆரோக்கியமான உணவு வகைகளை நாடுவது நல்லது.
முதுமையில் ஏற்படும் நாட்பட்ட மலச்சிக்கலால் இன்னும் பல்வேறு உடல் உபாதைகள் உண்டாகக்கூடும். காரணம் குடலில் சேர்ந்த அபான வாயு வெளியேறாமல் தடைபடுவதால் நெஞ்சுவலி, வயிற்றுப் பொருமல், மயக்கம், சில சமயங்களில் மார்பு படபடப்பு போன்ற குறிகுணங்கள் உண்டாகும்.
மேலும் நாட்பட்டு கட்டிப்போன மலத்தினால் மலக்குடல் மற்றும் ஆசன வாய்ப்பகுதியில் எரிச்சல், வலி, விரிசல் ஏற்பட்டு இரத்தக் கசிவும் ஏற்படக்கூடும். ஆகவே அபானன் வாயுவை முற்றிலும் நீக்கும்படியாக மலச்சிக்கலை போக்கிக்கொள்வது நலத்திற்கு நல்லது என்கிறது சித்த மருத்துவம்.
கட்டிப்போன மலத்தை முக்கி வெளியேற்ற முடியாமல், விரல்களால் வெளியே தள்ளி திருப்தி அடையும் முதுமைக்கு மலச்சிக்கல் ஒரு கொடிய நோய்நிலை தான். அவ்வாறு விரல்களால் வெளியே தள்ள முற்படும்போது, மலக்குடல் சவ்வில் ஏற்படும் புண்கள் இன்னும் கூடுதல் சிரமத்தைக் கொடுக்கும்.
இவ்வாறாக, இயற்கை உபாதையைக் கூட இயற்கையாய் கழிக்க முடியாமல் தடுமாறும் முதுமைக்கு ஒவ்வொரு நாளும் போராட்டம் தான். அத்தகைய ஆரோக்கியத்திற்கான போராட்டத்தை உணவால், மருந்தால், மனதால் முடிவுக்கு கொண்டு வருவதே நலத்திற்கான பாதையை செப்பனிடும்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com






